வள்ளி கட்டிய குருவிக் கூடு!!!
அகில் கொஞ்சம் படபடப்பாக இருந்தான்…. அவனுக்கே வேடிக்கையாக இருந்தது…. எத்தனை நேர்காணல்..எத்தனை பிரசன்டேஷன்..????
இந்தியாவின் தொழிலதிபர்கள் பட்டியலில் முதலிடம்…..!!!!
‘Valli’s Nest ‘M.D. …CEO.. .. பின் இப்போது எதற்கு நடுக்கம்….????
ரியல் எஸ்டேட் பிஸினசில் அவனைத் தெரியாதவர்களே இந்தியாவில் இருக்க முடியாது……. 10000 சதுர அடிகள். விளைநிலத்துடன் கூடிய சிறிய பண்ணை வீடுகள்…
இயற்கையோடு இயைந்த கல்வி முறை…. பண்ணையில் உதவிக்கு ஆட்கள்… ஆர்கானிக் விவசாயம்….. திறந்த வெளி காய்கறி, பழ சந்தை…….!!!!!
ஆரம்பித்த ஒரு வருடத்துக்குள் இருபதாயிரம் வீடுகள் விற்று சாதனை படைத்து ‘மேன் வித் கோல்டன் டச்..’என்ற பெயரையும் வாங்கினவனுக்கு இன்றைக்கு என்ன வந்தது ….???
இன்று அவனுடைய பேட்டி உலகப்புகழ் பெற்ற தொலைகாட்சி ஒன்றில் ஒன்றில்…. நேரடி ஒலிபரப்பு.. …
“மிஸ்டர்.அகில்..விகாஸ்…!!!!
..உங்களை எல்லோரும் ‘A man with a golden touch’ என்கிறார்களே….
போன வருடத்து ‘சிறந்த எடிசன் அவார்ட் வின்னர்.. ….!!! இதற்கு வித்திட்ட சம்பவம் பற்றி….”
“மிகவும் பெருமையாகவும் கவுரவமாகவும் கருதுகிறேன்..
’A man with golden touch ‘என்று அழைக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை…
இது பொன்னைத் தொட்ட கையில்லை…. நான் தொடுவதால் எல்லாம் பொன்னாகும் என்பதை விட எல்லாம் விளைமண்ணாகும் என்று சொன்னால் அதிகம் மகிழ்ச்சி அடைவேன்….!!!!!!
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்நாள் முடிவதற்குள் மண்ணில் ஒருமுறையாவது கை வைக்கமலிருந்தால் அதற்காக வெட்கப்பட வேண்டும்…. வேதனைப் படவேண்டும்….
குழந்தைகள் கையில் மண் ஒட்டினாலே உயிரே போவது போல கவலைப்படும் நிறைய அப்பா அம்மாக்களை நான் பார்த்திருக்கிறேன்….
மண்ணில் விளையாடாத குழந்தைகள் எத்தனை விஷயங்களை வாழ்க்கையில் இழக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை…!!!!
நானும் என் சிறிய வயதில் அப்படிப்பட்ட ஒரு குழந்தையாகத்தான் இருந்தேன்….
வள்ளி எனும் என் உடன் பிறவா தங்கை என் வாழ்க்கையில் குறுக்கிடும் வரை……………….
***
“அம்மா…! திரும்பி படும்மா…!”
பூங்கொடியின் இடுப்பைப் பிடித்து தன் பக்கம் திருப்பினாள் வள்ளி..
“ம்ம்ம்… வள்ளி….தூங்கும்மா…
காலைல நேரத்தில எந்திரிக்கத்தாவல…இன்னா வேணும் கண்ணுக்கு….?”
பூங்கொடியின் முகவாய்கட்டையைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினாள்…
“தெனைக்கும் இதுவே உன்னோட பெரிய ரோதனயாப்போச்சு…..”
தூக்கம் கலைந்த எரிச்சல் பூங்கொடிக்கு….
திரும்பிப் படுத்து வள்ளியை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்…
“என் செல்லக் குட்டிக்கு என்ன வேணும் …???”
“ஏம்மா…அகிலுக்கு என்ன வயசாகுது…??”
“ஏங்கண்ணு…..இதுக்கா என்ன எழுப்பின ???…”
“சொல்லும்மா…..’
“பத்து வயசிருக்கும்…. அஞ்சாப்பு படிக்கிறானில்ல…”
‘”ஏம்மா….அவனால் ஷூ , பேக் எல்லாம் எடுத்து வச்சு பள்ளிக்கூடத்துக்கு கிளம்பத்தெரியாதா…???
நீதான் போயி அவன ரெடி பண்ணனுமா ..??”
“அப்படியே பழகிட்டான்…என்னமோ அவன பாத்துக்கப்போயிதானே தாயி நம்ப வீட்டுல உல பொங்குது….
எல்லாருமே உன்ன மாதிரி கெட்டிக்கார செல்லக் குட்டியா இருப்பாங்களா… என் சமத்து சக்கர கட்டி……
இப்ப தூங்குவியாம்….காலைல பேசிக்கலாம்…”
பூங்கொடி பெண்ணைக் கட்டிப் பிடித்து முத்தம் குடுத்தாள்….
நிஜமாலுமே வள்ளி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சமத்து சக்கர கட்டி தான்….
***
பூங்கொடி +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாள். அப்பாவும் அம்மாவும் அவளுக்கு பன்னிரண்டு வயசு இருக்கும் போதே போய் விட்டார்கள்.
அத்தைதான் அவளை வளர்த்தது படிக்க வைத்தது எல்லாம்…அத்தை பையன் ஏழுமலைக்கு அவள்தான் என்று ஏற்கெனவே நிச்சயம் பண்ணிவிட்டுத்தான் போயிருந்தான் பூங்கொடியின் அப்பா நாகப்பன்…
ஏழுமலைக்கு பூஞ்சை உடம்பு… கடினமான வேலை செய்தால் நெஞ்சு வலி வந்துவிடும்…அத்தை பிடிவாதமாய் பள்ளி முடித்ததும் இரண்டு பேர் கல்யாணத்தை முடித்து விட்டாள்.உடனே உண்டாகியும் விட்டாள் பூங்கொடி…
எண்ணி ஏழு மாசம் தான்…..ஏழுமலை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு போய்ச் சேர்ந்து விட்டான்.
வள்ளி அப்பா முகம் பார்க்காமலேயே வளர்ந்த பெண்… ஆனமட்டும் அத்தை பூங்கொடிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தாள்..
பூங்கொடி ஒரே பிடியாய் முடியாது என்று விட்டாள்….
மேலே படிக்க ஆசை… ஆனால் யார் குடும்பத்தைப் பார்ப்பது …??
அப்போது ஆரம்பித்தது தான்….!!!
எட்டு வருஷம்…. முதலில் வீட்டு வேலை… கொஞ்சம் கொஞ்சமாய் குழந்தையைப் பார்த்துக் கொள்வது என்று ஆரம்பித்து இப்போது பத்து வயது அகிலுக்கு எல்லாமும் அவள்தான்…
அகிலை எழுப்புவதிலிருந்து…குளிக்க வைத்து , பள்ளி சீருடை போட்டு, காலை சிற்றுண்டி தயார் பண்ணி கொடுத்து, வீட்டுப்பாடத்தை மேற்பார்வையிட்டு , புத்தகப் பையைத் தயார் பண்ணி பண்ணி , பள்ளிக்கூட பேருந்தில் ஏற்றிவிடும் வரை மூச்சு விட முடியாது…
சரியாக நாலு மணிக்கு பள்ளி பேருந்து வந்தவுடன் மறுபடி அகிலுடன் சரியாய் இருக்கும்…
ஏழு மணிக்கு நந்தினி கையில் ஒப்படைத்து விட்டப்புறம்தான் வள்ளி என்று தனக்கொரு பெண் இருப்பதையே நினைக்க முடியும்…..
அகிலின் அப்பா அம்மா இரண்டு பேருமே பிஸியான மருத்துவர்கள்….. நேரம் காலம் இல்லாத வேலை..
பூங்கொடி படித்திருப்பதால் நந்தினிக்கு அவளை ரொம்ப பிடித்து விட்டது…
தாராளமாகவே சம்பளம்…எல்லா சௌகரியத்துடன் அவுட் ஹவுஸ்… வள்ளியின் முழு படிப்பு செலவு….
பூங்கொடி நிம்மதியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்… வள்ளி மாதிரி ஒரு பெண் யாருக்குக் கிடைப்பாள்…..
அவளை பெரிய படிப்பு படிக்க வைக்கணும்… அது ஒன்றுதான் பூங்கொடியின் குறிக்கோள்..
***
சரியாக ஐந்து மணிக்கு வள்ளியும் அம்மாவுடன் எழுந்து விடுவாள்.. பூங்கொடி அத்தையைக் கூடவே தான் வைத்துக் கொண்டிருந்தாள்..
பூங்கொடி எழுந்திருந்து பல் தேய்த்து மூன்று பேருக்கும் காப்பி கலக்குவதற்குள்ளாகவே வள்ளி வாசல் தெளித்து , கோலம் போட்டு , வீடு முற்றம் பெருக்கி , ஆயாவுக்கு குளிக்க வென்னீர் எடுத்து வைத்து, தன்னுடைய பள்ளிப்பையை தயார் பண்ணி , அம்மாவுக்கு காய்கறி நறுக்கி வைத்து விட்டு , அரைமணி பாடம் படிப்பாள்..
அம்மா குளித்ததும் தானும் குளித்து சீருடை போட்டுக் கொண்டு பள்ளிக்குத் தயாராகிவிடுவாள்.
தலை மட்டும் அம்மாதான் பின்னி விட வேண்டும்.அப்போதுதான் சாயங்காலம் வரை கலையாமல் அப்படியே இருக்கும்…….!!!!
அம்மா சமைத்து வைத்ததும் கிளம்ப வேண்டும்….
“வள்ளிக் கண்ணு…. இட்லி எடுத்து வச்சு சாப்பிடுங்க…. ஸ்கூலுக்கு உனக்குப் பிடிச்ச வெங்காய புளிக் குழம்பு செஞ்சு வச்சிருக்கேன்…. டிபன் பாக்ஸில் எடுத்து வச்சிக்கிட்டு ஆயாக்கு தட்டில போட்டு மூடி வச்சிட்டு போ கண்ணு….பூச்சி பொட்டு விழுந்திடப் போகுது….பாத்து போ கண்ணு…
அத்த….. பாத்திரம் தேய்க்க முடியாட்டி கெடக்கட்டும்…நா வந்து தேச்சிக்கிறேன்…”
ஆனால் பூங்கொடி திரும்பி வரும்போது ஒரு பாத்திரம் இருக்காது… வீடு அவ்வளவு சுத்தமாய் இருக்கும்.வள்ளி படிப்பிலும் படு சுட்டி…. எப்பவும் முதல் ரேங்க்…..
இத்தனைக்கும் வள்ளிக்கு எட்டு வயசு தான் ஆகிறது…. எந்த அம்மாவுக்குத்தான் பெருமையாக இருக்காது ……?????
***
அகிலும் வள்ளியும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள்.வள்ளி வீட்டுப் பாட நோட்டு, புத்தகங்களை எடுத்துக் கொண்டு அகில் வீட்டுக்குப் போய் விடுவாள்…
இரண்டு பேரும் சேர்ந்துதான் வீட்டுப் பாடம் பண்ணுவார்கள்…
“அகிலண்ணா…..இத எப்படி வாசிக்கணும்….???”
“Knight….நைட் ….”
“ஆனா night ன்னு வேற எடத்தில வந்திருக்கே…. அதுக்கு ராத்திரி ன்னு தானே அர்த்தம்….”
“ஆமா… இந்த இடத்தில் k silent… போர் வீரன்னு அர்த்தம்..
இதே மாதிரி வேற வார்த்த சொல்லு பாக்கலாம் ….!!!”
“தெரியலையே அண்ணா….!!”
“Knee…Knot….Knock….”
“அண்ணா… உங்களுக்கு எவ்வளவு தெரிஞ்சிருக்கு…”
“வள்ளி…. உனக்கு கூட எத்தனையோ விஷயம் தெரியுது… சமைக்க தெரியுது….கடைக்கு தனியா போய் சாமான் வாங்கத் தெரியுது… பள்ளிக்கூடத்துக்கு தனியாவே போற…..”
குழந்தைகள் உலகம் தனி உலகம்..அங்கு கள்ளம் கபடம் இல்லை… பொய் புரட்டு இல்லை…
அகிலுக்கும் வள்ளிக்கும் இரண்டு டம்ளர்களில் பாலும் , தட்டில் பிஸ்கட்டும் கொண்டு வந்தாள் பூங்கொடி…
நந்தினியின் உத்தரவு….!!!!
வள்ளிக்கு சத்து போதாது என்று பூங்கொடியிடம் சொல்லிக் கொண்டே இருப்பாள்….
நந்தினியின் வீட்டைச் சுற்றி அழகான தோட்டம்…. குருவிகளின் சத்தம் இனிமையான சங்கீதம்.
“அம்மா…. இந்த குருவியப்பாரு…. ஒரு நிமிஷம் ஒரு இடத்தில உக்காருதா….?? “
“உன்ன மாதிரி சுறுசுறுப்பான குருவியாட்டம் இருக்குது….”
“அது கூடு கட்டுது போல..குச்சியா பொறக்கிட்டு வருதும்மா..அம்மா … அதுக்கு இதெல்லாம் யாரு சொல்லித் தராங்க…??
ஒரே அளவாக குச்சிகளை சீரா பொறக்கிட்டு வருது பாருங்க….!!
குப்பைங்களக் கூட பொறக்குது…
யாரும்மா கூடு கட்டுவாங்க….??? ஆம்பள குருவியா…?? பொம்பள குருவியா…???”
“இரண்டு பேரும் சேந்துதான்…”
***
ஒரு நாள் அகிலைக் கூப்பிட்டு காண்பித்தாள்.அவன் அலட்சியமாய் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் போய்விட்டான்.
கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் மும்மரத்தில் இருந்தான்.
அகில் படிக்காத நேரம் தவிர எப்பொழுதும் T.V. அல்லது வீடியோ கேம்ஸ் தான்.. ஸோஃபாவை விட்டு நகரமாட்டான்..
***
அனேகமாக கூடு கட்டி முடிந்துவிட்டது….
“அம்மா …எப்பம்மா முட்ட போடும்….???”
“தெரியலை கண்ணு… இன்னும் ஒரு வாரத்தில முட்ட போடும்னு தோணுது….”
அடுத்த நாள் காலையில் வள்ளிக்குஒரு அதிர்ச்சி காத்திருந்தது…..
குருவிக் கூட்டை காணவில்லை….
“அம்மா… சீக்கிரம் வாங்க…”
“என்னம்மா….???’
“குருவிக் கூட்ட காணம்மா….”
“ஐயையோ….அதப் போயி யாரு எடுப்பாங்க…? காக்கா கீக்கா கொத்திப் போட்டிருக்குமோ…. பாவம் குருவி..”
வள்ளி அழ ஆரம்பித்து விட்டாள்.
“அம்மா..பாவம்மா… எவ்வளவு கஷ்ட்டப்பட்டு கட்டிச்சு….காணமின்னு ஏமாந்து போகுமில்ல… எங்க போயி முட்ட போடும்…..?”
அன்றைக்கு சனிக்கிழமை.. பள்ளி விடுமுறை.. சாயங்காலம் அகிலிடம் போய் சொல்ல வேண்டும் போலிருந்தது…..
வாட்ச்மேன் மாரியிடம் கேட்டால் விவரம் தெரியும்.
“மாரியண்ணே….போனவாரமெல்லாம் ஒரு குருவி அந்த மரத்தில கூடு கட்டிச்சே….. பாத்தீங்களா…..”
“ஆமா…. வள்ளிக் கண்ணு…. தெரியுமே….”
“அதக் காணல மாரியண்ணே….”
“உம்ம்ம்…..அதுவா…..”
மாரி இழுத்தான்…
“சொல்லுங்க மாரியண்ணே….”
“நம்ப அகில் தம்பி இல்ல…..”
“ம்ம்ம்… சொல்லுங்க…..”
“அவருக்கு வேணுமின்னு கேட்டாரு….”
“என்ன சொல்றீங்க அண்ணே….குருவிக்கூட்ட யாராவது கேப்பாங்களா …???”
வள்ளி உடனே அகில் வீட்டுக்கு ஓடினாள்… அகில் ஏதோ கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தான்… பூங்கொடி சமயலறையில் ஏதோ வேலையாய் இருந்தாள்…
“அகிலண்ணா….குருவி கூட்ட எடுத்தீங்களா …??”
அகில் காதில் போட்டுக் கொள்ளாமல் கார்ட்டூனிலேயே கவனமாயிருந்தான்.”
“அண்ணா …. இங்க பாருங்க…. ப்ளீஸ் ….குருவிக் கூட்ட எடுத்து தரச் சொன்னீங்களா …. சொல்லுங்க…”
“ஆமா வள்ளி… எங்க வகுப்பில் குருவிகள் பத்தி ஒரு ப்ராஜெக்ட் பண்ண சொல்லியிருக்காங்க… அதுக்கு ஒரு கூடு வேண்டியிருந்தது…
அதான் எடுத்தேன்…அதனால என்ன இப்போ…??”
“என்ன அண்ணா இப்படி பண்ணிட்டீங்க…. பாவம் குருவி…. ஒரு வாரமா எவ்வளவு கஷ்ட்டப்பட்டு கட்டிச்சு தெரியுமா…. இன்னும் இரண்டு நாள்ல முட்ட போடும்…. எங்க போய் போடும்…??”
வள்ளி விக்கி விக்கி அழுதாள்.
“என்ன வள்ளி…. இதுக்குப் போய்….”
அதற்குள் பூங்கொடி உள்ளேயிருந்து வந்து விட்டாள்..
“என்ன தம்பி…. என்னாச்சு….???”
“அம்மா… அம்மா..
அகிலண்ணா ….அழுது கொண்டே சொல்லி முடித்தாள்…
“சாரி வள்ளி….நா அதெல்லாம் யோசிக்கவேயில்லை…குருவிக் கூடு எனக்கு எப்படி கட்றதுன்னு தெரியல..”
பூங்கொடி இரண்டு பேரையும் சமாதானப் படுத்த நினைத்தாள்….
“வள்ளி…..விடும்மா… அகில் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்லுதே….”
“அகிலண்ணா…நா ஒண்ண சொன்னா கோவிக்க மாட்டீங்க தானே…!”
“சொல்லு வள்ளி…..நீ என்ன சொன்னாலும் கேக்க தயார்…எனக்கே நான் பண்ணினது தப்புன்னு தோணுது….!!!!”
“அந்த கூட்ட அப்பிடியே அலுங்காம நலுங்காம இருந்த இடத்தில கொண்டு வச்சிடலாம்….
எனக்கு எப்படி கூடு கட்டணும்னு தெரியும்…நாந்தா தினைக்கும் பாத்திட்டே இருந்தேனே…. கவலப்படாதீங்கண்ணா…….”
மாரியைக் கூப்பிட்டு கூட்டை பத்திரமாய் கொண்டு போய் பழைய இடத்திலேயே வைக்கச் சொன்னாள் வள்ளி….
அப்புறம்தான் அவளுக்கு உயிர் வந்தது…..
வள்ளியும் அகிலும் தோட்டத்தில் போய் குச்சிகளைப் பொறுக்க ஆரம்பித்தார்கள்….
“அகிலண்ணா… கொஞ்சம் வளையற மாதிரி நீளப் புல்லுங்க கூட பொறுக்கலாம்…. அப்புறம் காஞ்ச வைக்கோல் மாதிரி எடுங்கண்ணா….”
நிறைய குப்பைகளையும் குச்சிகளையும் பொறுக்கிக் கொண்டார்கள்…..
அகிலுக்கு சந்தோஷம் தாங்கவில்லை..
அவனுக்கு இது புதுவிதமான அனுபவமாயிருந்து… எல்லாமே கடையிலிருந்தே வாங்கிப் பழக்கப்பட்டவனுக்கு தன் கையால் செய்யப் போகிற கூடு புதுவித உற்சாகத்தை அளித்தது…..
இரண்டு பேரும் சேர்ந்து கூடு கட்ட ஆரம்பித்தார்கள்….
“வள்ளி…. அச்சு அசல் நிஜக் கூடு மாதிரியே இருக்கே… உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும் வள்ளி…..!!!!
“இரு….பிரிஞ்சு போகாம நல்லா டேப் எடுத்து ஒட்டணும்”. மூன்று முட்டைகளை தயார் பண்ணி அதில் வைத்தார்கள்.
கூடு தயார் ……!!
பள்ளிக்கூடத்தில்
‘Know your Nature ‘…. Science Exibition….
நந்தினி பூங்கொடியையும் வள்ளியையும் கூட்டிக்கொண்டு போயிருந்தாள்..
சிலந்தி வலை…. பட்டுப் பூச்சியின் வளர்ச்சிப் பருவம்…. மண்புழு உரம்….குருவிக்கூடு..
வள்ளிக்கு பார்க்க பார்க்க ஆச்சரியமாய் இருந்தது…
முதல் பரிசைத் தட்டிச் சென்ற டீம் பேரைக் கேட்டதுமே வள்ளி எழுந்து நின்று கைதட்டினாள்….
அகிலின் டீமின் ‘குருவிக் கூடு..’
முழுக்க முழுக்க இயற்கை பொருட்களைக் கொண்டு நிஜமாகவே குருவிகள் கட்டுவது போல கூடும் , முட்டைகளும்..
நந்தினிக்கு பெருமை பிடிபடவில்லை….
***
“வள்ளி..எப்போ குருவி முட்ட போடும்…??”
“பாத்திட்டே இருக்கணும்…. இன்னிக்கு கூட போடும்…”
ஒரு வாரத்தில் நாலு முட்டை போட்டுவிட்டது… யாரையும் கிட்ட அண்ட விடவில்லை…. எப்படியோ ஒரு நிமிஷம் குருவி இல்லாத போது லேசாய் எட்டிப் பார்த்து விட்டார்கள்.
அகிலுக்கு பொறுமையே இல்லை..
தினமும் அந்த மரத்தையே சுற்றி வந்தான்.
“வள்ளி… இங்க ஒடி வா… இந்த சிலந்தியப் பாரு..என்ன அழகா வல பின்னியிருக்கு.. ஒரு பூச்சி கூட அதில மாட்டியிருக்கு..”
இரண்டு பேரும் தோட்டத்திலேயே பாதி பொழுதைக் கழித்தார்கள்..
இப்போது அகில் நிறைய மாறியிருந்தான்..
T.V. பக்கம் கூட போவதில்லை..
வள்ளியும் அவனும் சேர்ந்து மண்ணை கொத்திக் கொண்டும் விதைகளை நட்டுக்கொண்டும்…..
“வள்ளி…நா மண்ணுல கைவச்சதேயில்ல தெரியுமா..?? எனக்கு கை அழுக்கானாலே பிடிக்காது….”
“அகிலண்ணா ….!??நாம மண்ண கையில தொட்டாதான் அதோட பெரும தெரியும்… அப்புறமா கைய எடுக்கவே மனசு வராது…
நாம போடற வித மொளச்சு அதில் ஒரு பூவோ, காயோ வரும்போது அதப் பாக்கிற சந்தோஷம் வேற எதிலையும் கிடைக்காது…”
“நீ சொல்றது ரொம்ப சரி வள்ளி…..!!! எங்க தோட்டத்தில இவ்வளவு விஷயம் நடக்குதுன்னு முன்னயே தெரியாம போச்சேன்னு வருத்தமா இருக்கு….”
எண்ணி பத்து நாள் இருக்கும்…
மரத்திலிருந்து கீச் கீச்சென்ற சத்தம்….குருவிக் குஞ்சுகள்….. செக்கச் செவேலென்ற வாயைத் திறந்து …. பார்க்க பார்க்க கொள்ளை அழகு…..
குருவி ரொம்ப பிஸியாகிவிட்டது…. போவதும்… வருவதும்… குஞ்சுகள் வாயில் ஊட்டுவதும்…..!!!!
இரண்டு வாரத்தில் எல்லா குருவிகளுக்கும் இறக்கை முளைத்து வீட்டைவிட்டு பறந்துவிட்டது.
“வள்ளி….இத்தன நாள் இதெல்லாம் T.V.லதான் பாத்திருக்கேன்…நேர பாத்தா எவ்வளவு புல்லரிக்குது தெரியுமா ..???”
“நந்தினி….என்ன உம்பையன காணோம்….ரிமோட்டும் கையுமாதானே அலைவான்….??”
“விகாஸ்…. வாங்க என் பின்னாடி…”
அப்பா அம்மாவை தோட்டத்தில் சேர்ந்து பார்த்ததில் ஏகத்துக்கும் குஷியாகி விட்டான் அகில்..
வள்ளியும் கூட இருந்தாள்…
“அப்பா… அம்மா.. வாங்க… எங்க தோட்டத்த பாருங்க…அதோ… அந்த மரத்தில இருக்கிற கூட்டப் பாருங்க….!!!!!!
போன வாரம் வரைக்கும் குஞ்சுக இருந்தது தெரியுமா….? நீங்க மிஸ் பண்ணிட்டிங்க டாடி …!
இங்க பாருங்க வெட்டுக்கிளி…. பேசிக்கொண்டே போனான்…..
விகாஸால் நம்பவே முடயவில்லை… யாருடனும் அதிகம் பேசாத அகில் எவ்வளவு உற்சாகமாய் ..
“எல்லாமே வள்ளியால் தான்..”
விகாஸ் வள்ளியையும் அகிலையும் அப்படியே கட்டி அணைத்துக் கொண்டான்….
“டாடி .. நான் பெரியவனானதும் என்ன பண்ணப் போறேன் தெரியுமா …? அழகான ‘பண்ணை ‘கட்டிக் கொடுத்து இந்த மாதிரி இயற்கை சூழலில் பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போறேன்….
Nature is the best teacher …இல்லியா daddy…???
“I think Valli is the best teacher…..”
வள்ளிக்கு வெட்கம் வந்து விட்டது…..
***
“ஹலோ..’Vallli Nest’ தானே ….???”
“ஆமாம்.. மேடம் …”
“அதன் MD கிட்ட பேசமுடியுமா ….!!!!”
“உங்க கிட்ட அப்பாயின்ட்மென்ட் இருக்கா மேடம் …????
“இல்லை…வள்ளின்னு சொல்லுங்க!!!! “
“ஹலோ … அகிலண்ணா…..!!!”
“வள்ளி…நீயா….?? நிஜமா…? நம்ப முடியல….”
“அகிலண்ணா.. நேத்து உங்க இன்ட்டர்வியூ பாத்தேன்… எனக்கு உங்களை உடனே பாக்கணும்….”
“வள்ளி..நாங்கூட உன்னை எவ்வளவு நாளா தேடிட்டு இருக்கேன் தெரியுமா…..??”
“என்ன பண்ற….?? எங்க இருக்க…??”
“கொச்சியில்…. பயோடெக்னாலஜி லேப் வச்சிருக்கேன்…. உலகத் தரம் வாய்ந்த விதைகள் உற்பத்தி பண்றோம்..
நாளைக்கு மும்பயில ஒரு மீட்டிங் நாளைக்கு மீட் பண்ணலாமா….???”
“நிச்சியமா வள்ளி .. நாளைக்கு எல்லா அப்பாயின்ட்மென்ட்டும் கேன்சல் .. ஒண்ணைத் தவிர…..!!!! மீட்டிங் எங்க தெரியுமா …
‘The sparrows nest….’ Andheri….”
அம்மா….??? ”
“எங்கூடத்தான் இருக்காங்க…. உங்க ஆன்ட்டி பாத்துட்டு அழுதுட்டாங்க…. எல்லாம் நேரில பேசலாம்….”
“ஓ .. அகில்….. உன்னை நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு…”
“வள்ளி… உன் பையோடெக் கம்பெனி பேரென்ன…???”
“அகில் அக்ரோ ….!! !! !!! !!!!!! “