கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 9,239 
 
 

விடாமல் அடித்த போனை கல்பனா தான் எடுத்தாள். திருப்பூரிலிருந்து சித்தி மகள் பேசினாள்

“அக்கா!….அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்….காலமாகி விட்டார்….”

“அப்படியா?…..அட அடா.!…எப்ப எடுப்பாங்க?”

“மாலை ஆறு மணி ஆயிடும்!……”

“சரி!…நான் வந்து விடுகிறேன்…நேரில் பேசிக்கலாம்!”

இரண்டு மாதம் கழித்து இரவு பத்து மணிக்கு மேல் போன்.

கல்பனாவின் கணவர் ராஜசேகரன் தான் போனை எடுத்தார். கோவையிலிருந்து அவருடைய பெரியப்பா மகன் சுந்தரம் பேசினார்.

“அண்ணா….அம்மா காலமாகிட்டாங்க.!…”

“அப்படியா?…”

அதற்குள் கல்பனா புருஷன் பக்கத்தில் வந்து என்ன ஏது என்று விசாரித்தாள்.

ரிசீவரை ஒரு கையால் மூடிக்கொண்டு சுந்தரத்தின் தாயார் காலமான செய்தியைச் சொன்னார்.

“அப்படியா?….சரி எப்ப எடுப்பாங்கனு கேளுங்க….” என்று ராஜ சேகரிடம் சொன்னாள் கல்பனா.

அடுத்த மாசம் பொள்ளாச்சியிலிருந்து வந்த போனை கல்பனா தான் எடுத்தாள். ராஜ சேகரின் மாமா பேசினார்.

“கல்பனா…அத்தை காலமாகிட்டாங்க…ராஜூவைக் கூட்டிட்டு நீ பொள்ளாச்சி வந்திடும்மா!…..”

“சரிங்கண்ணா!……எப்ப எடுக்கலாமென்று இருக்கிறீங்க?…..”

“ராத்திரி ஆயிடும்!…”

அதற்குள் ராஜ சேகரன் வந்து என்ன விஷயம் என்று கேட்டு விட்டு,.“அது சரி!…..நீ எப்ப இழவு செய்தி நமக்கு வந்தாலும் …..எதற்கு எப்ப எடுக்கிறீங்க…என்று கேட்கிறே…..அவங்க துக்கத்தில் இருப்பாங்க!.அந்த நேரத்தில் அப்படி கேட்பது நல்லாவா இருக்கு?..”.

“நீங்க எழவுக்குப் போனா …எடுக்கறவரை இருந்திட்டுப் போகலாமென்று சொல்வீங்க!…..சில சமயம் அவங்க வரவேண்டும். இவங்க வரவேண்டும் என்று அங்கே லேட் பண்ணுவாங்க…இல்லாட்டா.மின்மயானத்திலே நேரம் கெடைக்கலேனு சொல்லுவாங்க….நாம அங்கே போய் காத்துக் கெடக்கனும்…எடுக்கிற நேரம் சரியா தெரிஞ்சா அந்த நேரத்துக்குப் போயிட்டு சீக்கிரமா போன வேலையை முடிச்சிட்டு வந்திடலாம்..அதற்காகத் தான்!”

அடுத்த மாதம். மேட்டூருக்கு ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்த ராஜ சேகரின் கார் மேல் லாரி ஏறி அவர் ஸ்பாட் அவுட். உடலை ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு போயிருந்தார்கள். தகவல் தெரிந்து கல்பனாவுக்கு ஏகப் பட்ட போன் கால்கள்.அதில் சிலர் ‘எப்ப எடுப்பீங்க?..’என்று கல்பனாவிடம் மறக்காமல் கேட்டார்கள்.

பாவம்!…கல்பனாவுக்கே அது நிச்சயமாகத் தெரியவில்லை! அந்தக் கேள்வியின் வலி அப்பொழுது தான் கல்பனாவுக்கு புரிந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *