வலி
சரண்யாவிற்கு சீமந்தம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிறது. அவள் சீமந்திற்காக வந்த அவளின் தங்கை அக்காவிற்கு ஒத்தாசையாக சரண்யா வீட்டில் தங்கியிருந்தாள். சரண்யாவிற்கு இது இரண்டாம் பிரசவம். ஆதலால் சீமந்தம் முடிந்து அம்மா வீட்டிற்கு செல்லும் சடங்கு எதுவும் கிடையாது. சொல்லபோனால் இரண்டாவது குழந்தைக்கு சீமந்த சடங்கே கிடையாது என்று தான் அவள் தாய் கூறினாள். ஆனாலும் தனது ஆசைக்காக சரண்யா அவள் கணவனிடம் தனக்கு சீமந்தம் நடத்த கேட்டதால் அவனும் அவளின் ஆசைக்காக அவன் செலவிலேயே மனைவிக்கு சீமந்தம் நடத்தினான். ஆனால் தலை பிள்ளைக்கு நடத்தியது போல் விமர்சையாய் நடத்தவில்லை.சரண்யாவின் தாய்,தந்தை,அண்ணன் அவளின் நெருங்கிய தோழிகள் இருவர்,சரண்யாவின் ஒன்று விட்ட தங்கை ராணி, இவர்களே அந்த சீமந்த வைபோவத்தின் விருந்தாளிகள்.
ராணியின் சொந்த ஊர் மதுரை. அவள் சென்னையில் இருக்கும் மென்பொறியியல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறாள். சொந்தம் என்று கூற அவளுக்கு சென்னையில் பலர் இருந்தாலும், அவள் சரண்யாவின் வீட்டை தவிர வேறு எங்கும் சென்று தங்கி இளைபாறுவதில்லை. சரண்யா வீட்டிற்கும் அவள் அடிக்கடி செல்ல மாட்டாள். மூன்று அல்ல நான்கு மாதங்களுக்கு ஒருமுறை சென்று ஓரிரண்டு நாட்கள் தங்குவாள். அதுபோக சரண்யா வீட்டில் ஏதேனும் விஷேசம் என்றால் போவாள்.
அன்று மதிய உணவு தயார் செய்யும் வேலையில் சரண்யாவும் ராணியும் ஈடுபட்டிருந்தனர். ராணிக்கு சரண்யா அளவிற்கு ருசிகரமாக சமைக்க வராது என்பதால் சமையலுக்கு தேவையான காய் நறுக்குவது, தேங்காய் துருவுவது போன்ற ஒத்தாசைகளை ராணி அடுக்கலையில் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்த படி செய்து கொண்டிருந்தாள்.
சோறு தயார் செய்ய அரிசி அளந்து போட்டு தேவையான தண்ணீர் அளந்து ஊற்றும் வேலையில் மும்முரமாக இருந்தாள் சரண்யா. மணி கிட்டதட்ட மதியம் ஒன்றை நெருங்கி கொண்டிருந்தது. ஒரு மணி ஆகிவிட்டால் சரண்யாவிற்கு பசிக்குமோ இல்லையோ அவள் வயிற்றில் இருக்கும் பிஞ்சுக்கு பசி எடுத்துவிடும். பசி வந்தவுடன் அது சரண்யாவின் வயிற்றை உதைத்தும் வயிற்றிக்குள் உருண்டும் தனக்கு உணவு கேட்க ஆரம்பித்துவிடும். ஆதலால் அவசர அவசரமாக இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
‘டீ ,காய் இன்னும் எவ்ளோ இருக்கு’ என்று குக்கரை மூடியபடியே அடுப்படியில் நின்றுக்கொண்டு தரையில் அமர்ந்திருக்கும் ராணியை திரும்பி பார்த்து கேட்டாள் சரண்யா.
‘இதோ முடிச்சிருவேன் க்கா’ என்று சொல்லிக்கொண்டே வேகமாய் அடுத்த வெட்டை வேகமாய் காய் மீது இறக்க, அது தவறி ராணியின் விரலின் ஒரு ஓரத்தில் சரிவாய் ஒரு இழுப்பு விட்டு விட்டது.
‘அம்மா…..’ என்று கத்திய ராணி வலியில் விரலை உதற ஒரு சிறு துளி ரத்தம் தரையில் சொட்டியது.
சரண்யா பதறி அடித்து ராணி அருகே ஓடிவந்து அவள் முன் மண்டியிட்டு அவள் கையை பிடித்து பார்த்தாள்.
‘ரொம்ப ஆழமா இறங்கல டீ. சரியா போயிடும். வா விரல தண்ணீல காட்டு .ரத்தம் வருது நின்றிரும்.’ என்று ராணியை பிடித்து எழுப்பினாள் சரண்யா.
பேசின் பைப்பை சரண்யா திறக்க தன் விரலை அதில் இருந்து விழும் தண்ணீரில் நீட்டினாள் ராணி. சிறிது நேரத்தில் ரத்தம் நின்றுவிட எரிச்சலை போக்கும் ஒரு மருந்து களிம்பை ராணியின் விரல்களில் தடவி ராணியை உட்கார வைத்துவிட்டு, மீதம் இருந்த காய்களை சரண்யா நறுக்க துவங்கினாள்.
‘அப்படி என்ன தாண்டீ அவசரம். பார்த்து நறுக்கிருக்கலாம்ல’ என்று ராணியை கடிந்தபடியே காய்களை நறுக்கினாள் சரண்யா.
‘இல்லக்கா பார்த்து தான் பண்ணிணேன்.எப்படியோ தெரியாம…..’ என்று இழுத்தாள் ராணி.
‘சரி விடு. சரியாகிடும். இதுலாம் ஒரு வலியே இல்ல.பிரசவ வலியெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா. உயிரே போகும்.இதுக்கே இப்படி கத்துற. அதுலாம் எப்படி தாங்குவியோ. நான்லாம் என் முதல் பிரசவத்தப்ப என்ன கஷ்டபட்டேன் தெரியுமா. பிள்ளை வரவும் இல்ல. விட்டுவிட்டு ஒரு நாள் பூரா வலி வந்து வந்து போச்சு. கடைசியா ராத்திரி 8 மணிக்கு தான் குழந்தை வரதுக்கான வலி தொடர்ந்தே வந்திச்சு. அவ்ளோ கஷ்டபட்டிருக்கேன் நான். அந்த வலியை தாங்கிட்டா எந்த வலியும் பெருசா தெரியாது.’ என்று பிரசவ வலியை தாங்குவதற்கான மன வலிமையை பற்றி பெருமையான தொணியில் பேசிக் கொண்டிருந்தாள் சரண்யா.
‘ம்ம்…..’ என்று சரண்யாவின் பேச்சை ஆமோதித்த படி தலையை ஆட்டிக் கொண்டாள் ராணி.
.ஆனால் ராணியின் நினைவலைகளோ அவளின் தோழி உமாவை சிந்திக்க ஆரம்பித்திருந்தது
உமாவிற்கு கல்யாணமாகி மூன்று வருடங்கள் ஆகிறுது. ஆனால் அவளுக்கு இதுவரை குழந்தை இல்லை. எத்தனையோ மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் எந்த பயனும் இதுவரை கிடைக்கவில்லை. தினமும் ஒருமுறையாவது உமாவிற்கு குழந்தை இல்லாத குறையை அவளின் மாமியார் குத்தி காண்பித்து நாலு வசைப்பாட்டு தவறாமல் பாடிவிடுவாள். சில நாட்கள் வசை எல்லை மீறி போய்விடும். அந்த நாட்களில் தாங்க முடியாமல் ராணியிடம் தன் மனதின் வேதனைகளை பகிர்ந்து கண்ணீர் சிந்துவாள் உமா.
அப்படி ஒருநாள் உமா இவளிடம் கண்ணீர் சிந்த சிந்த குரல் விம்மி விம்மி உரைத்த வார்த்தைகள் ராணி நினைவில் வந்தாடியது.
‘பிரசவ வலி உலகத்திலேயே பெரிய வலிதான். ஆனா அது கூட குழந்தை தெரிஞ்சு பத்து மாசத்துக்கு அப்புறம் முடிவுக்கு வந்திரும். ஆனா நான் ஊர் பூரா வாங்கி வச்சிருக்கேனே மலடி பட்டம், இதுவும்,பிள்ளை இல்லாத காரணத்தால நான் வாங்குற வசவும் எப்ப தீரும்னு என்ன படைச்ச ஆண்டவனுக்காச்சு தெரியுமா டீ’ என்று ஏங்கி ஏங்கி அழுதுகொண்டே உமா அன்று ராணியின் தோள்களில் சாய்ந்து சிறு குழந்தை போல் கதறினாள்.
உமாவின் அந்த வலியை நினைத்து தன்னை மறந்து அமர்ந்திருந்த ராணியை’என்னடி அமைதியாட்ட திடீர்னு’ என்று சரண்யாவின் குரல் கலைத்தது.
‘ம்ம்…ஒன்னுமில்ல’ என்று தன் நினைவலைகளில் இருந்து மீண்டு வந்து பதிலளித்தாள் ராணி.
‘என்ன பிரசவ வலியை பத்தி நான் சொன்னத கேட்டு பயந்திட்டியா’
சரண்யாவின் கேள்விக்கு பதில் கூறாமல் ஒரு அசட்டு புன்னகை உதிர்த்துவிட்டு எழுந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் ராணி.