கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்  
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 10,217 
 
 

இவ்ளோ பெரிய வீடாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பார்க்க மிடில் கிளாஸ் மாதிரிதானே தெரிந்தாள். யோசனையோடு உடன் சென்றவன்… உடலில் புது சிறகுகள் உணர்ந்தான்.

பார்கவியும் மலரவனும். யார் இவர்கள். காதல் படபடவென கூடிய ஜோடிப்புறாக்கள். பார்த்தார்கள். பழகினார்கள். பருகினார்கள்.

வீட்டுல சொல்லிட்டேன். உன்ன பாக்கணும்னு சொல்றாங்க என்றாள் பார்கவி. மலரவனுக்கு மனசில் படபடவென பாதிப் பூச்சிகள் அடித்துக் கொண்டன.

பயப்படாத… உடனே கல்யாணம் பண்ணல்லாம் சொல்ல மாட்டாங்க. உன் லட்சியம்.. கோல் எல்லாம் தெரியும். சொல்லிட்டேன். ஜஸ்ட் என் டேஸ்ட் எப்டினு தெரிஞ்சுக்கனுமாம் என்று சொல்லி நாக்கை பாம்பைப் போல படக்கென நீட்டி… உள்ளே இழுத்துக் கொண்டவளை கைகள் நீட்டி அவனுள்ளே இழுத்துக் கொண்டான். ஆதலால் காதல் ஒரு கனிவு கொடுக்கும் நல்ல தழுவல். சிவப்பு கொய்யா சிரிப்பில் அணில் பூரித்த ஓவியமானார்கள்.

இது எங்க தாத்தாவோட அரண்மனை. வீக் எண்ட் இங்க வருவோம். சரி இந்தவாட்டி எங்க வீட்டுக்கு இன்னொரு ஆள் புதுசா வர்றார்ல. அதான் இங்க மீட் பண்ணலானு… – சொல்லி புருவம் தூக்கி பருவம் காட்டினாள். அவனுக்கு கர்வமும் தூக்கியது போலதான் இருந்தது.

அப்போ நீ ஜமீன் பரம்பரையாடி… – காது விரிந்து கேட்டான்.

ம்ம்ம் என்று கண்கள் அழுந்த சொன்னவளை பார்க்க…. அப்படியே ராணி மகாராணி போலவே இருந்தது.

சொல்லிடு.. நான் நாந்திங்… இன்னும் லைஃப்ல முழுசா எதுமே பண்ணல… – அவன் வழக்கம் போல தன் கழிவிரக்கத்தை பாடுபொருளாக்க.. வாய் பொத்தி.. தாத்தா வரார்.. ஒழுங்கா பேசு என்று சொல்லி நகர்ந்து கொண்டாள்.

வாங்க… மலரவன். பார்கவி சொன்னா… எங்களுக்கு சாதி மதம்லலாம் நம்பிக்கை இல்ல. கடைசிவரை கூட இருக்கனும். கை விட்ரக்கூடாது. அவ்ளோதான். அப்புறம் உங்க லட்சியம் பத்தியெல்லாம் சொன்னா. பண்ணிடலாம். நீங்க சந்தோஷமா இருந்தாதான் பார்கவி ஹேப்பியா இருப்பா… அவ சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம்…

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே தேநீர் வந்து விட்டது. கம்பீரத் தோற்றத்தில் தாத்தா கெத்துதான். ராஜ மீசை வெண்மையில் ரீங்காரமிடுகிறது.

மலரவனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம்… காதல் கதை இத்தனை சீக்கிரத்தில் ஓகே ஆகி விட்டது. இன்னொரு ஆச்சரியம் இவள் ஜமீன் பரம்பரை என்பது. ஏன் கள்ளி மறைத்தாள். அவன் தேநீர் அருந்தியபடியே பக்கவாட்டில் திரும்பி பொய்யாய் முறைத்தான்.

சரிடா அழகா சாரி என்பதாக கண்களை சுருக்கி எப்போதும் செய்யும் சிக்கி முக்கி தனத்தை செய்து காட்டினாள். சிக்கு புக்கு ரயில் நெஞ்சத்தில்.

தாத்தா குரலை செருமி அவனை மீண்டும் சோபாவுக்கு கொண்டு வந்தார். அவன் ஆசை வழிந்தான். ஆசை அசடு காணாது என்று சொல்லி அவரும் சிரித்துக் கொண்டார்.

ஓகே மலரவன்… இருந்து லன்ச் சாப்ட்டு போங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று முன்வந்து கை குலுக்கினார். மலரவன் பவ்யமாக எழுந்தும் பாதி வளைந்த இடுப்போடு.. மரியாதை நிமித்தம் தலை குனிந்து கையைக் கொடுத்தான். அந்தக் கையில் காலத்தின் அழுத்தம்.

அதே நேரம் பக்கவாட்டில் குனிந்தபடியே திரும்பி பார்கவி மீது பார்வையை சரித்து… என்ன சரி தானே என்பதாக சமிக்ஞை செய்தான்.

சூப்பர்டா என்பதாக அவளும் எழுந்து அவனருகே வந்தாள். அப்போதுதான் அவன் கவனித்தான். தாத்தா அவளைத் தாண்டி நகர்ந்து விட்டிருக்க தன் கையை இன்னும் யாரோ பிடித்தபடியே இருப்பதை உணர…. சட்டென திரும்பி எதிரே பார்க்க… திக்கென்றது. நொடி திணறியது. எதிரே யாருமே இல்லை. ஆனால் அவன் கையை யாரோ கெட்டியாக பற்றி இருப்பதை உணர முடிந்தது. காற்றில் நீண்டிருக்கும் அவன் கை தனியாக தொங்கிக்கொண்டிருந்தது.

என்ன இது… ஐயயோ என பதறி… ஏய்.. பார்கவி.. என்னது என கத்த கத்தவே.. அவள் அவனருகே வந்து விட்டிருந்தாள்.

மலர்… பயப்படாத… அது அப்பா என்றாள் பூரித்த முகத்தில் வெகு இயல்பாக. இன்னும் அவன் கை காற்றில்தான் கவ்விக் கொண்டிருந்தது.

திக் திக் திக்கென இதய துடிப்பு எகிறிக் கொண்டிருக்க.. என்னது.. அப்பாவா என்றான். ஒன்றும் புரியாமல் அவளையும் காற்றையும் மாறி மாறி பார்க்க….

அயோ மலர்.. அது என் அப்பா. அவருக்கும் ஓகேயாம். அதான் கை குடுக்கறார்…. என்று சொல்லி அப்பாவின் புகைப்படத்தைக் காட்டினாள். மிரட்சி அவன் கண்களில் மையமிட அவனையும் மீறி அவன் உடல் நடுக்கத்துள் சுழன்றது.

புகைப்படத்தில் இருக்கும் அப்பாவின் கண்களில் வெள்ளை முழி ஒரு உருண்டு உருண்டதே. கையை உதறிவிட்டு பின்னால் நகர்ந்து அதிர்ந்து நின்றான். எங்க நின்றான். ஏய்.. என்னடி நடக்குது என்று கத்திக்கொண்டே தெறித்தான். விழுந்தான். பின்னோக்கி விழுந்த வேகத்தில் எழுந்து இங்கும் அங்கும் பார்த்து எங்கு போவதென தெரியாமல் தடுமாறி… ஐயோ பார்கவி… என்ன நடக்குது என்று நடுங்கினான். வியர்த்து சொட்டியது. இதயத்தின் ஆழத்தில் என்னவோ கொட்டியது.

மலரா… அப்படியெல்லாம் இங்கிருந்து அவ்ளோ சுலபமா வெளிய போக முடியாதுடா என்ற பார்கவியின் குரலில் இப்போது கருங்கல் உராயும் சத்தம் சேர்ந்திருந்தது. கீச் கீச் என அந்த அறைக்குள் இல்லாத பறவைகளின் குரல். கொத்து கொத்தாய் இருள் புகை அவனைச் சுற்றி சுழல..

வெளியே கேட் இழுத்தடைக்கும் சத்தம் அரண்மனையில் நாலாபக்கமும் எதிரொலித்தது.

என்ன இது சத்தம்…. சத்தம் மாதிரியும் இல்ல… என்னவோ முணங்குவது மாதிரி. என்னால் அதற்கு மேல் எழுத முடியவில்லை.

காதுக்குள் புரிபடாத இரைச்சல் சத்தம். நேரம் பார்த்தேன். இரவு 2.25. என் கவனம் என் ஜன்னலோரம் குவிந்தது. எழுதிக் கொண்டிருந்த கதை… சிஸ்டத்தில் பாதியாய் தொங்க… என் கண்கள் ஜன்னலுக்கு வெளியே கரகரவென எதிலோ மோதிக் கொண்டிருக்கும் அந்த சத்தத்தில் குவிந்தது. நினைவில் சற்று முன் எழுதிய கொத்து புகை புகைந்து கொண்டிருந்தது.

நேத்தும் கிட்டத்தட்ட இதே நேரத்துல இதே மாதிரிதான் சத்தம் வந்துச்சு. என்னவா இருக்கும். நான் ஜன்னலை மெல்லத் திறந்தேன். அலைமோதிக் கொண்டிருக்கும் காற்று திக்கென உள்ளே நுழைந்து ஊசி குத்தியது. ஸ்ஸ்ஸ் என்ற சிலிர்ப்போடு… அதே வேகத்தில் ஜன்னலை உள்பக்கம் இழுத்து விட்டு கொண்டியிட்டேன். ஆனாலும் அந்த கிசுகிசுத்தல் தீரவில்லை. நன்றாகவே கேட்கிறது. கூர்ந்து கேட்க கேட்க என்ன மொழி இது. தமிழும் அற்ற தெலுங்கும் அற்ற மலையாளம் கலந்த… இல்லை இல்லை… அதுவும் இல்லை. என்ன மொழியென்றே சொல்ல முடியாது.. அப்படி ஒரு முணுமுணுப்பு.

அமைதியாய் அமர்ந்து ஜன்னல் பக்கமே பார்த்தேன். இந்த நேரத்தில் இங்க யாரு. ம்ஹும் காற்றின் கைங்கரியம். சுவற்றில் மோதும் காற்றின் வேகத்தில் அப்படி ஒரு மொழி பிறக்கிறது போல. தண்ணீர் குடித்தேன். இப்போது சத்தம் குறைந்தது போலிருக்க.. எழுத்தைத் தொடர்ந்தேன்.

மூன்றடியில் ஓர் உருவத்தை வேகமாய் அவன் விரட்டுகிறான். அந்த உருவம் வேக வேகமாய் தலையில் இருந்து கொத்து கொத்தாய் முடியை பிய்த்து பிய்த்து எறிந்து கொண்டே ஓடிக்கொண்டிருக்க.. அவன் இன்னும் வேகமாய் அதை துரத்துகிறான். எதற்கு இதை நாம் துரத்துகிறோம் என்று யோசித்து…. நிற்க எத்தனிக்கிறான். அவனால் நிற்க முடியவில்லை. கால்கள் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த உருவமோ அரண்மனையைச் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டே இருக்கிறது. கரகரவென கம்பி அறுந்த துள்ளலாக அந்த ஓட்டம் இருக்கிறது. நிற்பது போலவே தெரிகிறது. ஆனால் நீள நீளமாக எட்டு வைத்து தாண்டுவது போல இருக்கிறது. என்ன கருமம் இது. எங்க வந்து சிக்கிருக்கோம் என யோசிக்க யோசிக்க அவன் கால்கள் பயங்கரமாக வலிக்கிறது. திடும்மென அவன் உடல் வளைந்து நெளிகிறது. முதுகை காணும் கழுத்தில் இரண்டு மூன்று சுற்று.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது… புரிவதற்கு முன்னமே அந்த உருவம் பறக்கத் தொடங்கி விட்டது. அந்த உருவத்தை ஏன் விரட்ட வேண்டும் என்று யோசிக்க அவனால் முடியவில்லை. அது திரும்பி பார்த்து திரும்பி பார்த்து வா வா வா என்று வௌவால் குரலில் கத்துவது படுபயங்கரமா இருக்கிறது. தரையில் படாத கால்களில் மூக்கு நீண்ட மண்டையோட்டு வடிவம்.. பார்க்கவே படபடப்பைத் தருகிறது.

அவர்கள் பறந்து கொண்டிருப்பதை பார்கவி அவளின் தாத்தாவோடு அரேனாவில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

பார்கவி.. என்ன இது… பயமா இருக்கு. இறக்கி விடு..- காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கும் மலர் கத்துகிறான்.

காதலில் பறப்பது இதுதான்… பற… என்று சொன்னவளின் பற்கள் சர்ரென கீழே இறங்கி ஆவ் என்று காற்றை கடித்தது.

அரண்மனை ஜன்னல் வழியே கிடைத்த இடைவெளியில் காற்றாய் மிதந்த மலர் சரேலென வெளியே இழுத்து செல்லப்பட்டு காற்றோடு கலந்….


டைப் அடிப்பதை நிறுத்தி விட்டது அனிச்சை. மீண்டும் இப்போது நன்றாக கேட்கும் அந்த முணுமுணுப்பில் வேகம் கூடியிருந்தது.

என்னால் பொறுக்கவே முடியவில்லை. என் அறை… வீதியை ஒட்டி இருக்கிறது. ஜன்னல் திறந்தால் வீதியின் சதுர வெளிச்சம் திக் திக்கென நெற்றியை நிமிர்த்திக் கொண்டு உள்ளே வரும். அத்தனை அருகே இருப்பதால் வீதியில் செல்லும் பைக் சத்தம்.. பால்காரன் சத்தம்.. பேப்பர்காரன் சத்தமெல்லாம் நன்றாகவே கேட்கும். அவையெல்லாம் இயல்பாகி விட அதனால் கவனம் சிதறுவதில்லை. ஆனால் இந்தச் சத்தம்… வித்தியாசமாக இருக்கிறது. அதுவும் பின்னிரவு 3 மணிக்கு என்பது வினோதமாகப் பட்டது. என்ன ஆனாலும் பரவாயில்லை. வெளியே சென்று பார்த்து விட முடிவெடுத்தேன்.

கதவைத் திறக்க… என்னவோ ஒருவித பயமோ பதற்றமோ. மனசுக்குள் ஒரு மயமயப்பு. காலைல பாத்துக்கலாமோ. இப்போ எதுக்கு… அட வீட்டு வாசல்ல என்ன இருந்திட போகுது. திருட்டுப் பயலுங்க யாரவது இருந்தா… கையில் கிரிக்கெட் பேட்டை எடுத்துக் கொண்டேன். மனதுக்குள் பலவித யோசனைகள் இருந்தாலும்… ஒருவித தைரியமும் இருக்கத்தான் செய்தது. கதவைத் திறந்தேன். ஏன் என் கைகள் இப்படி நடுங்குகின்றன. அதே ச்சில் காற்று முதலில் முகத்திலும் நொடிநேர பின் தொடர்தலில் உடலிலும் பட்டு மோதியது. சிலிர்ப்பு தானாகவே உடலை நடுக்க.. சத்தம் வந்த வலது பக்கம் திரும்பிப் பார்த்தேன்.

யாரோ இருவர் நின்று பேசிக் கொண்டிருப்பது நிழல் போல தெரிந்தது. வாசல் லைட் ஒரு வாரமாகவே பிரச்சனை. எரியவில்லை. வீதி லைட் என்னைக்கு எரிஞ்சிருக்கு.. இன்னைக்கு எரிய. மொபைல் வெளிச்சத்தை தூக்கிக் காட்டி தூது விட்டேன்.

ஆனாலும் பேச்சு கிசுகிசுப்பு நின்றபாடில்லை. நான் ஒருவன் நிற்கிறேன் என்றே கண்டுகொள்ளாத… என்ன மாதிரியான திமிர் இது.

ஹலோ யார் அது… இங்க என்ன பண்றீங்க என்றேன். காற்றுக்குள் என் குரல் நடுங்குவது போல நடிக்கிறதா. நாடித்துடிப்பு எகிறியது.

பதில் இல்லை. ஆனால் அவர்கள் கிசுகிசுத்துக் கொள்வது இப்போது நன்றாகவே கேட்கிறது. அப்படியே கேட்டுக் கொண்டே இன்னும் கொஞ்சம் பக்கம் நகர்ந்தேன். கையில் இருந்த பேட் நன்றாக இறுகி எதற்கும் தயாராகவே இருந்தது.

அத்தனை பக்கம் சென்ற பிறகும் அவர்கள் பேசிக் கொள்வது நிற்கவில்லை. என்ன இது.. முகம் மாதிரியே தெரியல. சதைப் பிண்டங்களில் ஓர் ஒழுங்கில்லாத வடிவத்தில் வாய் எங்கிருக்கிறது… சத்தம் எங்கிருந்து வருகிறது என்று புரிபடவில்லை. திகு திகுவென உள்ளே பயம் படர.. உள்ளே எகிறிக் கொண்டிருக்கும் படபடப்பை மீறி… ஹலோ யாருங்க என்று சத்தமாகவே கேட்டேன். பதில் இல்லை. நான் நிற்பதே அவர்களுக்கு தெரியவில்லை போல எந்த அசைவும் இல்லாமல் ஆனால் அதே முணுமுணுப்பு.

கூர்ந்து பார்த்தேன். பார்வையிலும் நடுக்கம். ஆனாலும் உள் வாங்க முடிந்தது.

நிக்கறது… லட்சுமி பாட்டி மாதிரி இருக்கே. பக்கத்துல உசரமா நிக்கறது… தேவிக்கா மாதிரி இருக்கே. அயோ என்ன கருமம் இது. இவுங்க ரெண்டு பேரும் செத்து போய்ட்டாங்களே… அப்டீனா… இதுங்க பேய்ங்களா – மனம் கதறுகிறது. பேச்சு வரவில்லை. சடாரென திரும்பி சுவற்றில் மோதி சரிந்து எழுந்து தாவி கதவு பக்கம் ஓடி வர… இந்தப் பக்கம் கண்ணபிரான் தாத்தா உடலில் ஒரு பிண்டம் திண்ணையில் அமர்ந்திருக்கிறது.

அய்யயோ செத்தவன்லாம் வெளியே வந்து உக்காந்திருக்கானுங்க போலயே… வந்த வேகம் எது என்று தெரியவில்லை. எந்த வேகம் கதவடைத்தது என்றும் தெரியவில்லை.


அட… நீ பேய்க்கதையா எழுதறல்ல. அதனால வந்த குளறுபடி இது. எல்லாமே உன் மனபிரமைதான். அப்பிடியெல்லாம் செத்தவங்க யாரும் திரும்ப வர மாட்டாங்க.

நண்பன் யுத்து… அறிவியல் பேச… நான் தெளிவாகத்தான் இருந்தேன்.

இல்ல கனவும் இல்ல. கற்பனையும் இல்ல. இது நிஜம். ராத்திரி வெளிய இந்த இடத்துல நின்னு பேசிட்டுருந்தாங்க. என்ன மொழி அதுனு தெரியல. இன்னொன்னு நான் நிக்கறது அதுங்களுக்கு தெரியவே இல்ல. என் பக்கம் திரும்பவே இல்லை. என் குரலுக்கும் பதில் இல்ல. அட என்ன மிரட்டவோ பயமுறுத்தவோ ஒன்னுமே பண்ணலயே.

சிந்தனை அந்த நாளை சிதறிக் கொண்டிருந்தது.

அன்றிரவு வழக்கம் போல எழுத அமர்ந்தேன். நேற்று விட்ட கதையைத் தொடர்ந்தேன்.

இது எந்த இடம்.. இது வரை இந்த மாதிரி ஒரு இடத்தை அவன் நிஜத்துல பாத்திருக்கிறானா. யோசிக்கிறான். அந்த குள்ள உருவத்திடம் இருந்து தப்பித்து விட்டாலும்.. அவன் இப்போது இன்னும் அதே அரண்மனைக்குள்தான் இருக்கிறான். நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

எழுத்துக்கும் சிந்தனைக்கும் இடையே தத்தளிக்கும் அதே குரல்கள். வாசல் பக்கம் நன்றாகவே கேட்கிறது. நான் அனிச்சையாக எழுந்து விட்டேன். விஷயம் விபரீதம் என்று உள்ளே புரியத் தொடங்கியது. நேற்று நடந்ததுகூட பிரமை என்றே வைத்துக் கொள்வோம். இன்றும் அதே போல எப்படி. நேற்று இருந்த தைரியம் இன்று இல்லை. நினைத்தாலே உடல் சில்லிடுகிறது. இன்று யாரெல்லாம் நிற்கிறார்களோ. இதே வீதில கடைசி வீட்டுக்கு ரெண்டு வீடு முன்ன இருக்கற வீட்டுல தூக்கு போட்டு செத்த ருக்குமணி நினைவுக்கு வந்தாள். போன மாதம் இறந்த கண்ணாடி பாட்டி … பாம்பு கொத்தி செத்த பால்கார கோபால்… அட ஒரு சின்னப் புள்ள ஆக்சிடெண்ட்ல செத்து போச்சே… பக்கத்து வீதில… அது… என ஒவ்வொருவராக டமார் டமார் என்று வந்து நினைவில் நின்றார்கள். முகமற்ற பிண்டத்தில்… அதே கிசுகிசுப்பு உணர்ந்தேன். மொழியற்ற படபடப்பில் உடல்மொழி மட்டுமே அவர்களை இன்னார் எனக் காட்டிக் கொடுக்கிறது. ஜன்னல் பக்கம் கண்களை உருட்டினேன்.

லட்சுமி பாட்டி இன்று கதவோரம் அமர்ந்து கொண்டிருக்கிறது.

உடலில் நடுக்கம் கூடி விட்டது. விடிந்தும் விடியாமலும் கருப்பசாமி கோயிலுக்கு ஓடி விட்டேன்.

பேயோட்டுவதில் நிபுணர் பூச்சிலிங்கம். இறந்தவர்களை குளிக்க வைப்பது…. காடு சேரும் வரை செய்ய வேண்டிய சாங்கிய சடங்குகள் என அத்தனை வேலைகளையும் பிசிறு தட்டாமல் அற்புதமாக செய்பவர். பெரிய பெரிய காட்டேரியெல்லாம் பூச்சிலிங்கத்திடம் சரணாகதி அடைந்து விடும். கேள்விப்பட்டிருக்கிறேன்.

விஷயத்தை கேட்டார். யோசனை கூடிக்கொண்டே போனது அவருக்குள். ஒரு முடிவுக்கு வந்தார். சரி வரேன் என்றார்.

அத்தனையும் கட்டுக்கதை என்றான் யுத்து.

அம்பிளி இல்லம்.. மீண்டும் யூதரா… யூதரா என் காதலி… அப்புறம் என்னடா… என் பேர் வெச்சு ஒரு கதை எழுதினியே… அடுத்தடுத்த ஜென்மத்துக்குள்ள ஒரே வீட்டுக்குள்ள போவாங்களே… அந்தக் கதை… அப்புறம் ஆனைகட்டிக்கு 13 கிலோ மீட்டர்… குதிரைக்காரன்… கருப்பு வெள்ளைக்காரன்… அப்புறம் விக்கிரமாதித்தனு ஒரு கதை… அப்புறம் ஒருத்தீனு ஒரு திருநங்கை கதை…. அப்புறம் இவனுக்கு பதிலா பே…யே…. வந்து கதை எழுதி குடுக்குமாமாம்.. இப்பிடி ஒரு கதை.. அய்யோ தலையே சுத்துது சாமி… இப்பிடி எழுதறது எல்லாம் பேய்க் கதைங்கண்ணா. அதான் முத்தி போயி இவன் எழுதறத இவனே நிஜம்னு நம்பத் தொடங்கிட்டான். இதுக்கு டாக்டர்கிட்டதான் போகணும். – யுத்து விளக்கிக் கொண்டிருந்தான் .

விவாதம் செய்யும் விஷயமும் இல்ல. அதற்கு நேரமும் இல்லை. நான் உறுதியாக இருந்தேன். கண்ணால பார்த்தது நான். அதை நிரூபிக்க முடியவில்லை என்பதால் அது இல்லை என்று ஆகிவிடுமா.

அன்றைய இரவை பூச்சிலிங்கம் துணையோடு எதிர்கொண்டேன். எதிர் வீட்டு மொட்டைமாடியில் பூச்சிலிங்கமும் யுத்தும் ஒளிந்து கொள்ள… அதே நேரம்.. அதே போல முணுமுணுப்பு சத்தம். அலைபேசியில் அவர் அங்கிருந்தே இயக்க… நான் மெல்ல கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றேன். அதே இடத்தில் லட்சுமி பாட்டியும் தேவிக்காவும். எதிர் வீட்டு தாத்தா.. அப்படி அப்படியே முன் சொன்னவர்கள் ஆங்காங்கே நிற்க… இன்று இன்னும் சிலர் சேர்ந்திருந்தார்கள். வீதியில் நடக்க சொன்னார் பூச்சிலிங்கம்.

பயமா இருக்கு என்று கிசுகிசுத்தேன்.

பயப்படாத. நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன். நீ சொன்ன மாதிரி அதுங்க உன்ன பாக்கல. நீ தைரியமா போ என்றார். நடந்தேன். நடக்கிறேனா மிதக்கிறேனா புரிபடவில்லை. அவைகள் இரண்டு மூன்று பிண்டங்களாக பேசிக்கொண்டு… தனியாக எங்கோ பார்த்து வெறித்தபடி… திசையற்று நிற்பது போல நின்றபடி… திண்ணையில் அமர்ந்தபடி…. அவர்கள் என்னவோ முனங்கி கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ஏதோ ஒலி அலை வெளிவந்து கொண்டே இருக்கிறது. ஒரு வித்தியாசமான ஒலி குறிப்பு போல… தொண்டைக்குள் இருந்து கொப்பளிக்கும் குரலில் வடிவம் இல்லை.

அந்தச் சத்தம் மூட்டைப்பூச்சி நசுக்கும் போது வருமே அந்த மாதிரி ஆரம்பித்து…. ரபரர ரபரர ரபரர ரபரர என றெக்கையை கொண்டு கரப்பான் காதுக்குள் சுழல்வது போல கேட்கிறது. வெறிகொண்ட நாயின் அடித்தொண்டை அலறல் போல…. சத்தம். எனக்கு பயம் உடல் முழுக்க ஏறி விட்டது. மூச்சு விடுவதில் பதற்றம் கூடி விட்டது. அட வீதி முழுக்க பேய்கள் நின்றால் பயப்படாமல் எப்படி நடக்க முடியும். ஒன்று என்னைத் திரும்பி பார்த்துவிட்டாலும் முடிந்தது கதை. இல்லையா.

பூச்சிலிங்கம் சத்தியம் செய்தார். அதுங்க உன்ன பாக்காது. அதுங்க கண்ணுக்கு நீ இன்னும் தெரிய ஆரம்பிக்கல.

அப்படினா இனி தெரிய போறேனா.. – கழுத்தில் என்னவோ கனம். வீதியில் நிலா வெளிச்சம் ஜெகஜோதியாக இருக்கிறது. ஆங்காங்கே பிண்ட பிணமாய் நிற்கும் ஒவ்வொரு பேய்க்கும் தலை இருக்கும் இடத்தில் சதை குழம்புகள் மட்டுமே. எங்கிருந்து சத்தம் எழுகிறது என்று புலப்படவில்லை.

பூச்சிலிங்கம் சொன்னது போல போட்டோ எடுத்தேன். நடந்தபடியே நோட்டம் விட்டேன். மனிதர்களை விட பிசாசுகள் அதிகமாக இருக்கும் போல. நானே செத்துதான் போய் விட்டேனோ என்னவோ. எல்லாமே கற்பனைக்குள் நடக்கும் கனவு போல. நினைப்பு எது நிஜம் எது புரிபடவில்லை. மாயத்தில் மவுனமும் கத்துமோ. நானே கத்திக்கொண்டு தான் இருக்கிறேனா. உள்ளிருந்து சுழலும் சத்தத்துக்கு திசை மோதும் பாறையின் சொரசொரப்பு. சாத்தான் சகலமாகவும் என்னை சூழ்ந்திருப்பது சுருக் சுருக்கென இதயத்தை மீட்டியது.

வீட்டுக்குள் வந்து விழுந்த போது உயிர் வந்தது. மூச்சிரைத்தேன். வேக வேகமாய் தண்ணீர் குடித்தேன். வேர்த்து கசங்கிய உடலை உதறி வெளியேறி தப்பித்துக் கொள்ள தோன்றியது. எனக்கு நானே பாரமாய் பரிதவித்தேன். பூச்சிலிங்கமும் யுத்தும் அமைதிப்படுத்தினார்கள்.

இருவருமே என்னை அப்படியே பார்த்தார்கள். என்ன விளையாட்டு இது என்பதாக அந்தப் பார்வை ஒரு சிறுவனை எதிர் கொண்டது.

நான் தான் சொன்னேன்ல. இது உன் கற்பனைனு. அங்க யாருமே இல்ல.. வேணும்னா போட்டோல பாரு. ஒண்ணுமே இருக்காது என்றான் யுத்து… திடமாக. அவன் உச்சரிப்பில் அவன்பக்க நியாய சாடல் சத்தமாக.

என்னது… நான் இன்னும் மிரண்டேன். என்ன உளறிட்டுருக்கான். பாத்தவன் நான். அதுங்க வாசம்கூட இன்னும் என் மேல ஒட்டிக்கிட்டுருக்கு. வேக வேகமாய் அலைபேசியை திறந்து பார்த்தேன். அவன் சொன்னது போல எந்தப் புகைப்படத்திலும் எந்த உருவமும் இல்லை. நான் அதிர்ந்தேன்.

என் கண்ணுக்கும் ஒன்றும் தெரியவில்லை என்றார் பூச்சிலிங்கம்.

நாங்கள் மௌனத்துள் மயானம் உணரத் தொடங்கினோம். யுத்து… இது கரை மீறிய கற்பனை என சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. ஆனா உணர முடிஞ்சது என்றார் பூச்சிலிங்கம்.

சட்டென இருவருமே அவரைப் பார்த்தோம். அவர் முகத்தில் உள் ஆழ்ந்த உணர்வு.

என் கண்களில் பிரகாசம். நான்தான் சொல்றேன்ல என்றேன். பிடி கிடைத்துவிட்ட திருப்தி என்னில். என் கண்களில் விழுந்த அவைகளை அவர் கண்களுக்கு மடை மாற்ற வழி தேடினேன். பரபரவென மீண்டும் மீண்டும் அவைகளின் முணுமுணுப்பு சத்தம் என் இதயத்திலிருந்து சிணுங்கியது.

அதுங்க அங்க நிக்குது சரி. ஆனா ஏன் நிக்குது.. அதான் கேள்வி. பூச்சிலிங்கம்… ஏதேதோ கணக்குப் போட்டார். யார் கண்ணும் தெரியல. உன்ன கண்ணுக்கு மட்டும் தெரியுது. அதுங்களுக்கு உன்ன தெரிய மாட்டேங்குது.. என்ன மாதிரி சுழல் இது. மாயத்திலும் பெரு மாயம். சூனியத்திலும் சூழ்ச்சி.

எனக்கு இதெல்லாம் நம்ப முடியல….- யுத்து மெல்லிசாக முனகினான்.

நம்பறதெல்லாம் இருக்கணும்னும் அவசியம் இல்ல. நம்பாததெல்லாம் இல்லங்கறதும் இல்ல. கை மீறிய செயல்கள் பூமியில் நிறைய உண்டு. பூமியே கை மீறிய சுழற்சி தான.

சொல்லிக்கொண்டே… ஏதேதோ கட்டம் கட்டி எழுதினார். கணக்கு போட்டார். நேரம் காலம் நாள் நட்சத்திரம் நிலா இருள் என எந்தக் கோட்டுக்குள்ளும் இதற்கான காரணம் விளங்கவில்லை. இத்தனை வருட அனுபவத்தில் இப்படி ஒரு சிக்கலை நான் கண்டதே இல்லை என்றார். அவரின் கண்கள் கதவை நோக்கியே இருந்தன. வெளியே அவைகள் நிற்பதை அந்த சிமிட்டா திறன் உள் வாங்கிக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். முணுமுணுப்பு கேட்கிறது. இன்னதென புரியாத மொழியில் அதன் கிசுகிசுப்பு நம் காதுக்குள் ரம்பம் விடுவது போல. கிறுகிறுப்பு எனக்குள் சுழல் வண்டாகிக் கொண்டே இருந்தது.

கேள்வி இருக்கும் இடத்தில்தான் பதிலும் இருக்கும். தொலைத்த இடம்தான் கிடைக்கும் இடமும். றோமா… என்கிட்ட எதையும் மறைக்காத. உன்ன சுத்தி ஏதோ மர்மம் நடக்குதுனா… அதுக்கு காரணமும் நீயா இருக்க வாய்ப்பு இருக்கு. சொல்லு. உன்கிட்ட ஏதாவது ரகசியங்கள் இருக்கா. பிசாசுங்க உன் பக்கம் சுத்துதுங்கனா… நீ ஏதாவது பண்ணி இருக்கணும். அதுங்கள ஈர்க்க நீ என்னமோ பண்ணிருக்க. சும்மா எப்படி உன்ன பின் தொடரும். சொல்லு.. நீ பேய் கதை எழுதறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா முழுமுதல் காரணம் கண்டிப்பா ஒன்னு இருக்கனும். முதல் படி இல்லாம மூன்றாம் படி இருக்காது. விஞ்ஞானமோ மெய்ஞானமோ.. எதிர் வினைக்கு வினை ஒன்னு இருந்திருக்கனும்தான. யோசிச்சு சொல்லு. எங்கயாவது சுடுகாட்டு பக்கம் போய்… உன் எழுத்து வேலைக்கு ஏதாவது நகாசு வேலை பாத்தியா. ஓஜோ போர்டு மாதிரி எதையாவது பண்ணி பிசாசுங்க கூட பேச முயற்சி பண்ணியா…

பில்லி சூனியம் ஏதும் யோசிச்சியா…- இடை வெளி விட்டு கேட்டார் பூச்சிலிங்கம். இடை புகுந்தான் யுத்து.

ஆமாண்ணா ப்ளாக் மேஜிக்ல இன்ட்ரெஸ்ட் இருக்கு. அதுல ஏதாவது பண்ணி தொலைச்சானானு கேளுங்க என்றான்.

எனக்கு வியர்த்து விட்டது. வீதியில் நின்று வானத்தில் தவழுவதாக ஓர் எண்ணம். மதிக்குள் மயங்கித் திரியும் கட்டுக்கடங்காத போதைக்குள் புதைவது போன்ற படபடப்பு. இதற்கு மேலும் மறைக்க வேண்டாம் என நினைத்தேன்.

இதெல்லாம் இல்லண்ணா.. ஆனா வேற ஒன்னு இருக்கு என்றேன்… தயக்கத்தோடும் தவிப்போடும்.

பூச்சிலிங்கம் கண்களில் அதிர்ச்சி. யுத்து கண்களில் ஆவல். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

என்னனு சொல்லித் தொலை என்பது போல பார்த்தார்கள்.

நான்… நான்….. உடம்ப விட்டு அப்பப்போ வெளிய போவேண்ணா…- தயங்கி தயங்கி திக்கினாலும் சொல்லி விட்டேன்.

இருவருக்கும் திக்கென்று தூக்கி வாரிப்போட்டது. முகத்தை பின்னிழுத்து என்னிடம் இருந்து சற்று விலகியது அவர்களின் அனிச்சை.

என்னடா சொல்ற… மறுபடியும் மறுபடியும் கதை விடாத. வாய்க்குள்ளாகவே கத்தினான் யுத்து. அவன் அங்கும் இங்கும் நடந்தான். மூச்சு பரபரவென வாங்கினான். அவன் கால்கள் நடுங்கின.

அவனைக் கையமர்த்தி விட்டு என்னைப் பார்த்து…. மேல சொல்லு என்று சொன்னார் பூச்சிலிங்கம். அவர் கண்களில் பச்சை நிறம் கூடியது போல தெரிந்தது. அவர் கண்கள் என்னவோ கணக்கில் துள்ளின..

ஆமாண்ணா… அப்பப்போ நான் உடம்ப விட்டு வெளியே போவேன். ஒரு ஹாபி மாதிரி. ஜாலியா இருக்கும். போர் அடிச்சா கிளம்பிடுவேன். மலை உச்சிலாம் சர்வ சாதாரணம். நினைச்ச நேரத்தில் மனதின் வேகத்தில் நிகழும் ஒரு காற்று நீச்சல் அது.

அவர்கள் அதிர்ந்து என்னையே பார்த்தார்கள்.

தண்ணி புடிக்க விட மாட்டியா… இருடி உனக்கு இருக்குன்னு அன்னைக்கு ராத்திரி… வீட்டு ஓனர் ரூமுக்குள்ள புகுந்து காது பக்கம் முசுமுசுவென மூச்சு விட்டு முழிக்க வெச்சிருக்கேன். என்னவோ உணரும். ஆனா என்னனு புரியாம படக்குனு முழிச்சு படபடன்னு பயந்து சுத்தி சுத்தி பார்ப்பார் பாருங்க…. வாய் விட்டே சிரிச்சிருக்கேன். காத்துல கிழிஞ்ச வெளியா வாய் திறந்து திறந்து மூடும். சத்தம் வராது. ஆனா கிட்டத்துல இருக்கறவங்கனால உணர முடியும். உணர்ந்து கொண்டது… உள்ள கொப்பளிக்கும். வெளிய வீரனா திரியறவன்லாம் இந்த மாதிரி சமயத்துல புள்ளபூச்சியாக மாறிடுவான். வியர்வையும் வாய் எழாத தவிப்புமா வேக வேகமா தண்ணி குடிப்பானுங்க பாருங்க.. செம காமெடியா இருக்கும். இந்த மாதிரி நிறைய. அப்புறம் ரெம்ப கிட்டத்துல உக்காந்து மூஞ்சியே பாத்துட்டுருப்பேன். என்னவோ பக்கத்துல இருக்கு. ஆனா என்னனு தெரியலனு உணர்ந்து அந்த ஆளு தடுமாறி பயப்படுவான் பாருங்க. சிரிப்பை அடக்கவே முடியாது. பேய் பயம் இல்லங்கறவன்… கடவுளே கதின்னு கிடக்கறவன்… வீர வசனம் பேசறவன்… வெங்காய பரம்பரைன்னு மீசை முறுக்குறவன்… எல்லாருமே பயந்தாகொள்ளி பசங்கதான். அதுவும் ஆணுக்கு பெண் நிகர்னு நம்மூருக்குள்ள புல்லட் ஓட்டிட்டு திரியுமே ஒரு பெருசு… அந்த லேடிலாம் உச்சாவே போயிருக்கு… மிரட்டி விட்டிருக்கேன். வீதியே என்னுதுங்கற ஒரு இது. கோயில் மணிய வேகமா வந்து ஊதி ஊதி அசைச்சு பூசாரிய எழுப்பி விடுறதுனு எல்லாமே ஒரு ஜாலி மொமெண்ட்….

இருவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பேசுவது நான்தானா என்ற சந்தேகம். நானே தான் பேசுகிறேன் என்று சொல்லி தொடர்ந்தேன்.

பகலில் நடக்கும் சாலையில் இரவில் பறப்பது ஆஹா ஆனந்த பரவசம்.

நம்ப முடியாமல் பார்த்த யுத்துவுக்கு வியர்த்து விட்டது. படபடப்பு அவன் நெற்றியில் நடுக்கமாய் ஊர்ந்தது. என்னை கிறுக்கனைப் பார்ப்பது போல பார்த்தான்.

உன்ன பாக்கவே பயமா இருக்குடா. நீயும் பேய்தானோனு சந்தேகம் வருது என்றான். பூச்சிலிங்கம் என்னையே பார்த்தார். அவர் தலைக்குள் பலகட்ட யோசனை.

சரி… றோமா… இந்த உடம்ப விட்டு வெளியே போற வித்தை உனக்கு எப்படி தெரிஞ்சது. எங்க கத்துகிட்ட. எப்பிடி.
அவர் குரலில் நீண்ட நெடுந்தூர யோசனை… ஊஞ்சல் ஆடியது. அதில் கொஞ்சம் பயமும் வந்து வந்து போனது.

அதை சொல்லலாமா வேண்டாமா யோசிக்க முடியவில்லை. மேலும் விடை கண்டு பிடிக்க வேண்டுமானால் கேள்வியைக் காட்டித்தானே ஆக வேண்டும். இது மேல்முடி போனப்போ ஒரு சித்தரை பார்த்தேன். அவர் கத்துக் குடுத்தது. பட்டென்று சொல்லி விட்டேன்.

யுத்து தன் தலையை பிடித்துக் கொண்டான். அவனுக்கு எது உண்மை எது பொய் எது கற்பனை எது புனைவு… ஒன்றும் விளங்கவில்லை. என்னை அச்சத்தோடு பார்த்தான்.

றோமா விளையாடாத.. உண்மைய சொல்லு.. பூச்சிலிங்கம் கிட்டத்தட்ட மிரட்டினார்.

நிஜம்தான்ணா. மேல்முடி போனப்போ ஒரு சித்தர் அறிமுகம் கிடைச்சது. அவர் என்னை ரெம்ப நாள் பழகின மாதிரி பார்த்தார். பேசினார்.

நான் சொல்ல சொல்ல என் சொற்களின் ஊடுருவல் அந்தக் காட்டுக்குள் தவழ்வதாக இருந்தது. மலை உச்சி காற்றும் அதன் ஈரமும் இன்னமும் என் இதயத்தில் இருந்து புகையாக எழும்பிக் கொண்டிருந்தது.

இருவரும் உன்னிப்பாக கவனித்தார்கள்.

அவருக்கு ஒரு கதை சொன்னேன். அவருக்கு பிடிச்சு போச்சு. ரெம்ப ரசிச்சு கேட்டார். என்னை கூர்ந்து பார்த்துட்டே இருந்தார்.

காற்றைக் குடித்தே கிடந்த காதில் தேன் மழை கொட்டுது உன் கதை என்றார்.

அதுவும் காணாமல் போன ஒரு நதியைப் பற்றி நான் சொன்ன கதையில் அவர் மூழ்கி எழுந்தார். காற்றில் நீர் உணர்ந்து தலை ஆட்டிக் கொண்டார். சடாமுடியில் விடா நெருப்பு கொண்ட அவர் கண்கள் இமைக்க மறந்து என்னை பார்த்துக் கொண்டே இருந்தன. கனிந்த நெற்றியில் பெரும் சாந்தம் சுழன்றது.

கதைகள் சுலபம் அல்ல. அது ஒரு காலத்தையும் இன்னொரு காலத்தையும் இணைக்கும் பாலம் என்றார். அது செய்திகளை காலம் கடந்தும் மனிதர்க்கு கடத்துகிறது. அதில் ஜீவன் உண்டு என்றார். பாறையில் இருக்கற கோட்டோவியம் எப்படி காலம் கடந்தும் கதை சொல்லுதோ அப்படி…. சொல்லப்பட்ட கதைகள்.. காலம் கடந்து கோட்டோவியம் தீட்டும் கேட்போர் மனதில் என்றார். நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு எனக்கு ஒரு திருப்தி கிடைத்திருக்கிறது. நீ கதை சொல்லும் போது உனைச் சுற்றி காற்றுக்கும் காது முளைக்கிறது. காலத்தைச் செதுக்கும் உன் சொற்களில் உன் மொழிக்கு சிறகு. உன் நடைக்கு ஒளி… என்றவர் தீர்க்கமாய் என்னை கூர்ந்து… உனக்கு பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும்…. என்ன வேண்டும் கேள் என்றார்.

நான் ஆச்சரிய அதிர்வில் பேச்சற்று கையெடுத்தேன்.

புன்முறுவலோடு கேள்.. என்ன வேண்டும் என்றார் மீண்டும்.

நான் அவரையே கூர்ந்து பார்த்தேன். அவர் கண்களும் என் கண்களும் நொடிகளில் இணைந்து காலத்தில் தவழ்ந்தன. சட்டென கேட்டு விட்டேன்.

எனக்கு நினைத்த நேரத்தில் இந்த மலை உச்சிக்கு வந்து விட வேண்டும். அதற்கு வழி இருக்கிறதா என்றேன்.

என் கண்களில் இருந்து பார்வையைத் திருப்பாமல்… நீ இதுதான் கேட்பாய் என்று எனக்கு தெரியும் என்றார். புன்முறுவலில் புதிர் பூக்கள் மலர காணும் மாயை ஒரு நொடி கோட்டோவியமாய். இது உன் மலைனு தோணுதா என்றார்…என் முகத்தை ஆராய்ந்து பார்த்தபடியே.

ஆமாம் என்றேன். நான் தான் பதில் சொல்கிறேனா… யாரோ சொல்லி உடனுக்குடன் சொல்கிறேனா தெரியவில்லை. ஆனால் நான் என் வசம் இல்லை. என்னையே கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார். அருகில் ஓடும் காடோடையின் சலசலப்பில் ஒரு பெரும் சிரிப்பு சிதறியது.

சரி வா என்று பிறகு தான் இந்த உடலை விட்டு வெளியே செல்லும் யுக்தியை பழக்கி விட்டார்.

கண்கள் விரிய பெருமூச்சு வாங்கிய பூச்சிலிங்கம்….. ஐயோ றோமா… உனக்கு கிடைச்சது எவ்ளோ பெரிய வரம். ஆனா நீ என்ன பண்ணிட்டுருக்க. அந்த சித்தர் உன்கிட்ட என்னவோ பாத்திருக்கார். அதனால தான் உனக்கு இத சொல்லி குடுத்துருக்கார்.. நீ இதை வெச்சு….

யுத்து வேகமாய் குறுக்கிட்டான்.

ஐயோ அண்ணா அவன் கதை சொல்லியே கதைய மாத்துவான். பாருங்க ஒரு கதைல ஆரம்பிச்சு இன்னொரு கதை இன்னொரு கதைனு எங்க கொண்டு வந்திருக்கான் பாருங்க. நம்பாதீங்க. அவனுக்கு கதை சொல்லணும். அத கேக்கற மனுஷங்கள அப்படியே மெய்ம்மறக்க வெச்சு அதுல ஒரு ஹைப்பு அவனுக்கு.
அவன் மனுஷங்கள எப்பிடி பாப்பான் தெரியுமா.. பிசாசு மாதிரிதான் பாப்பான். மனுஷங்கள வேட்டையாடி கொண்டு வந்து கதைல போட்டு ஆட்டி வைப்பாண்ணா. இது கூட அப்பிடி ஒரு ட்ரேப் போல தான்னு தோணுது. இந்தக் கதைல இப்ப நம்மையும் இழுத்து விட்டுட்டுருக்கான்.

பேசிக்கொண்டே யுத்து என்னை பார்த்தான். பாருங்க பாருங்க… சிரிக்கறான் என்றான்.

நான் எங்கடா சிரிச்சேன்.. சும்மா பார்த்தேன்…. உன் கற்பனைக்கு ஒரு அளவே இல்ல யுத்து. கொஞ்சம் அமைதியா இரு… என்றேன்.

எங்களை கண்டு கொள்ளாமல் பூச்சிலிங்கம் அவர் பாட்டுக்கு பேச தொடங்கினார்.

உண்மை பொய் பாக்கற நேரம் இது இல்ல. நிஜம் மாயை பிடிக்கிற களமும் இது இல்ல. ஆனா அதுங்க இங்க ஏன் இவன் பின்னால வருதுன்னு கண்டு பிடிக்கனும். அதுதான் முக்கியம்.

அவன் கண்கள் வேக வேகமாய் நாலாபக்கமும் சுழன்று கொண்டே இருந்தது. அவர் மூளை கணக்கு போட்டபடியே இருப்பதை உணர முடிந்தது.

எனக்கு ஓரளவுக்கு புரிஞ்சிடுச்சு… என்று கண்கள் பிரகாசிக்க எங்களைப் பொதுவாக பார்த்தார்.

என்ன சொல்ல போகிறார் என்ற ஆவலோடு கவனித்தோம்.

நள்ளிரவு தாண்டி பின்னிரவு முடியற வரை ஆவிங்க நடமாட்டம் இருக்கறது சகஜம் தான். அந்தச் சூழல்ல றோமாஞ்சனத்தோட ஆன்மா வெளிய சுத்தறத பாத்த மத்த ஆவிங்க… என்னடா நம்ம மாறியே இருக்கு… இது நம்மாளு போலன்னு நினைச்சு பின்னால வந்திருக்குதுங்க. ஆனா தேகத்தோட வெளிய போகும் போது அதுங்க கண்ணுக்கு தெரியாம போயிருக்கு. அதாவது உடம்ப விட்டு வெளியே போற இவன் ஆன்மாவைதான் அதுங்களுக்கு தெரியுது. உடம்போட இருக்கற இவனை ஏன் யாரையுமே அதுங்களுக்கு தெரியறது இல்ல.

இடையே அப்படியே நிறுத்தி விட்டு பூச்சிலிங்கம் நெற்றி தடவிக்கொண்டே யோசித்தார்.

சரி வந்துச்சுங்க… ஆனா வீட்டுக்குள்ள வர்ற முயற்சி பண்ணல. ஆனா அங்கிருந்து நகரவும் இல்ல. வாசல்லயே ஏன் நிக்கணும்.. அதான் புரிய மாட்டேங்குது… – அவராகவே சொல்லிக்கொண்டு தீவிரமாக யோசித்தார்.

சட்டென எதையோ பிடித்தது போல… றோமா இன்னொன்னு சொல்லு… பேய் கதைங்கள எழுதிட்டு வாய் விட்டு படிப்பியா… அவர் கிட்டத்தட்ட கதையைப் பிடித்து விட்டார் போல. அவர் முகத்தில் சட்டென கூடிய தெளிவைக் கண்டேன்.

அவரைப் பார்த்தபடியே… ஆமாண்ணா… சரியா கோர்வையா எழுதி இருக்கோமானு ஒரு முறை படிச்சு பார்ப்பேன் என்றேன்.

போடு அப்பிடி. எனக்கு விஷயம் புரிஞ்சிடுச்சு என்றார். அவர் கண்களில் ஆழமும் அகலமும் இன்னும் தெளிவாய் தெரிந்தது. உற்சாகத்தோடு தொடர்ந்தார்.

ஆவியா சுத்தற உன்ன பின் தொடர்ந்து வந்த பிசாசுங்க… நீ வாய் விட்டு படிக்கற கதைங்கள்ல மெய்மறந்து இங்கயே நிக்குதுங்க. தாங்கள் சம்மந்தப்பட்ட குறிப்புகளை ஒருத்தன் மனம் திறந்து ஓதும் போது…. அதக்கேட்டு அதிலருக்கிற சந்தோஷத்தை உணருதுங்க. இது….பூமியே ஒதுக்கின தங்களை அடையாளம் கண்டு கொள்ற மாதிரி ஓர் எண்ணம். தங்களுக்கும் இங்க மதிப்பு இருக்குங்கற உரிமை. அதனாலதான் நீ கதை எழுதற நேரமா பார்த்து சரியா உன் வீட்டை சுத்தி வந்து நின்றுதுங்க..

ஐயோ அண்ணா பாத்தீங்களா… இவன்கூட கொஞ்ச நேரம் பேசினீங்க. இப்ப நீங்களே கதை சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க… பாருங்க. இதான் இவனோட டேலண்ட். ப்ளேக் மேஜிக் பிடிக்குனா இவனுக்கு. ஆனா இவனே ஒரு ப்ரவுன் மேஜிக்தான். இவன்கிட்ட கவனமா இருக்கனும்…

யுத்துக்கு இன்னமும் நடுக்கம் குறையவில்லை. வெளியே கேட்கும் முணுமுணுப்பும் அதிகமானது.

அவனை முறைத்தபடியே…. சரி இதுக்கு என்னதான் வழி… பேய் கதை எழுதற விட்டரலாமா என்றேன்.

ம்ஹும்… விட்டுட்டா அதுங்க வராம போகவும் வாய்ப்பிருக்கு. ஆனா அதே நேரம் ருசி கண்ட பூனைங்க கிச்சன் ஜன்னலை தள்ளிக்கிட்டு உள்ள நுழையற மாதிரி வீட்டுக்குள்ள வரவும் வாய்ப்பிருக்கு.- பூச்சிலிங்கம் தன் அனுபவத்தில் இருந்து பேசினார்.

அப்போ என்னதான் வழி…

யோசித்தார். வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடந்தார். அவரின் பாதங்கள் ஓரடி தரைக்கு மேலே காற்றில் இருப்பதாக யுத்துவுக்கு தெரிந்தது. அவன் பூச்சிலிங்கத்தை பார்த்த பார்வை அப்படித்தான் இருந்தது. மாயத்தை நம்பத் தொடங்கிய நொடியில் இருந்து நம்முள் மாயம் நிகழத் தொடங்குகிறது என்று முனகினேன். எனக்கு புன்னகைக்க வேண்டும் போல இருந்தது. அவனுக்கு நான் புன்னகைத்தது போல தெரிந்திருக்கலாம்.

செய்ய வேண்டியதை சொன்னார். எனக்கு உள்ளே திகில் இருந்தாலும்… கதை கையை மீறாது என்று நம்பினேன். யுத்து பேய் அடித்தாற் போல பார்த்தான்.

பூச்சிண்ணா…. இவன் பேச்ச கேட்டுட்டு என்னென்னமோ பண்றீங்க. ரிவீட் அடிச்சிர போவுது. – முதுகில் வழியும் வியர்வை கோட்டை அழிக்கத் தோன்றவில்லை. வேர்த்து பூர்த்து இருப்பது ஒரு வித பாதுகாப்பாக தெரிந்தது யுத்துவுக்கு.

சுடுகாட்டில் பூச்சிலிங்கமும் யுத்துவும் பூசைக்கு ஏற்பாடு செய்து காத்திருக்க… நான் தேகத்தில் இருந்து வெளியேறி வாசலுக்கு வந்தேன். உடம்போடு வருகையில் ஓரக்கண்ணால் கூட பார்க்காத அதுங்க… இப்போது சட சடவென திரும்பி ஆரவாரத்தோடு என்னைப் பார்த்தன. நான் ஆவி வடிவத்தில் இருந்தாலும்… உள்ளே அள்ளு விட்டது. அதே நேரத்தில் என்னைப் பார்த்ததும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு ஒளிய முற்பட்டன. என்ன இது… ஓ அப்படிதான் ஒவ்வொரு முறையும் நான் தேகம் விட்டு ஊர் சுற்றி விட்டு வீடு திரும்புகையில் எனக்கு பின்னே மறைந்து மறைந்து பின் தொடர்ந்து வந்திருக்கின்றன. இது என்ன கணக்கு. ஆவிகள் உலகத்தில் நிச்சயம் என்று ஒன்றுமில்லை போல. ஒரே கணக்கு ஒவ்வொரு முறையும் உதவாதும் போல. சரி நானும் அவைகளைக் காணாத மாதிரியே பறக்கத் தொடங்கினேன். ஒவ்வொன்றும் ஆவ் ஆவ் என சந்து பொந்தில் நுழைந்து…. மரக்கிளையில் தாவி… சுவரோரம் சரசரவென ஏறி ஊர்ந்து பின் தொடர்ந்தன. வேற்றூரில் சொந்த ஊர்க்காரனை பார்த்த பதற்றம் அவைகளின் மினுமினுப்பில்.

பறந்து கொண்டிருந்தாலும்… பார்வையை அவ்வப்போது அவைகளின் மேல் வீசிக்கொண்டே இருந்தேன். ஒன்று நீண்டிருக்கிறது. ஒன்று குட்டையாக இருக்கிறது. சதை கூழ் கொண்ட தலையில் சதைப்பிண்டம் கொண்ட உடலாக… ஒரு பக்கம் ஓட்டையாக… மறு பக்கம் சிதிலமடைந்த சதை மூட்டையாக… உச்சந்தையில் ஒற்றைக்கண் கொண்ட தாக… முதுகில் கை முளைத்து… என ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதம். பிசாசுகள் என்றாலே ஏன் தோற்றம் இப்படி மாறி விடுகிறது. நீல வானத்தில் சிவப்பு கலந்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக் கொண்டிருக்கிறது. மாய உலகம் என்பது இது தானா. வானத்தில் ஒரு வலையைக் காண்கிறேன். வெளியில் நெளியும் நிலையில்.. இசையென நம்பலாம். ஏந்திக்கொண்டிருக்கும் காற்றில்… ஒரு பந்தாட்டம் நடக்கிறது. பயம் இல்லை இப்போது. என்ன நடக்கும் என்ற பேராவல். ஒரு கதைக்குள் இருப்பது போலவே இருக்கிறது. அதுவும் சுவாரஷ்யம் கூடிய பத்தியில் பற்றிக் கொண்டு எரியும் வார்த்தை நெருப்பில் குளிர் காய்கிறேன். வாக்கிய ஓடையில் நீராடுகிறேன். அடுத்தடுத்த பக்கங்களில் அத்திப் பூ பொழிய ஒரு பின்னிரவு ஊஞ்சல் நிகழ்கிறது.

சிலதுகள் பறக்கின்றன. சிலதுகள் சுழன்று கொண்டே வருகின்றன. பேய் உலகில் நம் கணக்கு செல்லுபடியாகாது போல. அதன் கணக்குக்கு விடை கொண்டிருக்க வேண்டும். சுடுகாடு நெருங்கி விட்டோம். பூசை நடந்து கொண்டிருக்கிறது. யுத்துவை பார்த்தால்… மிரண்டு நிற்பதாக தெரிகிறது. பூச்சிலிங்கம் பூஜையில் இருக்கிறார்.

அண்ணே… என்னையும் அதுங்க கூட சேர்த்து முடிச்சு விட்றாதீங்க…. கத்துகிறேன். அய்யயோ குரல் அவர்களை சேர்ந்ததா… உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஒன்னு தொட்டு ஒன்னு… வேற வேற கிளை கதையா போனா கதைய முடிக்கறது எப்டிடா… முனங்கினேன். திடும்மென முதுகில் இருந்து எக்கோ அடிக்கிறது. இல்லாத தலையில் இயலாத உடலும் நீண்டு நெளியும் வாலுமாக ஆவி நான் ஆதி யாரோவாக தெரிந்தேன்.

அத்தனை பேரையும் ஒரே குழிக்குள் கொண்டு சேர்க்க வேண்டும். எப்படி. ஏய் நீ வா.. ஹெலோ நீ வா… ஏம்மா நீ வா.. என்றழைத்தால் வருமா…-யோசனையோடு யோசனை கூடிக்கொண்டே போனது.

இப்போது நானும் அதுங்களோடு சேர்ந்து பூவிலிங்கம் கண்ணுக்கும் யுத்து கண்ணுக்கும் தெரியவில்லை என்று தெரிகிறது. தர்க்க ரீதியில் மறைந்து விட்டோம். அவர் பேசுவது கேட்கவில்லை. நான் கத்துகிறேன். ஆனால் என்னையோ என் சார்ந்தவையையோ அவரால் உணர முடிகிறது. இது பற்றி ஏற்கனவே பேசியிருந்தோம். ஆகவே முன்பே போட்ட திட்டத்தின்படி செயல்பட தொடங்கினேன்.

இதுங்கள அந்தப் பெருங்குழிக்குள் விழச் செய்ய வேண்டும். எப்படி…

காற்றே இல்லாத பின்னிரவு… நிலா வெளிச்சத்தில் துளித் துளியாய் இருள் குதிப்பது போல இனம் புரியாத குளுமை. காற்றில் அடர்த்தி கூடி இருக்கிறது. நான் அந்த இடத்தை சுற்றிக் கொண்டே இருக்கிறேன். என் பின்னால் அவைகளும் சுழன்று கொண்டே இருக்கின்றன. எப்படி எப்படி… எப்படி கீழே குழிக்குள் இறக்குவது… யோசிக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்கு யோசனை பிடிபட்டு விட்டது. திக்கென ஒரு வழி கிடைத்து விட்டது. நிலா வெளிச்சம் தாண்டிய கதிரவனின் கத்தி பாய்ச்சலாய் ஓர் ஒளி வீச்சு என்னில் கொப்பளித்தது.

அவைகளை இங்கே கொண்டு வந்து குழிக்குள் விழ வைக்க ஒரே வழி தான் உண்டு. அது கதை. ஆம்.. நான் சொல்லும் கதை. ஏற்கனவே சொல்லி பாதியில் நிற்கும் கதை.

புன்சிரிப்போடு விட்ட கதையைத் தொடர்ந்தேன்.

மலரவன் ஜன்னல் வழியே வெளியேறி வேக வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறான்.

சத்தம் போட்டு சொன்னேன். குனிந்திருந்த… எங்கெங்கோ திரும்பியிருந்த யாவும் சட்டென நிமிர்ந்தன. ஒன்றுமே இல்லாத முகத்தில் முகமே இல்லாத மூஞ்சி. ங்கொண ங்கொணவென மீண்டும் முனங்கல்.. கிசுகிசுப்பு. அதே புரியாத மொழி. ஓஹ் பிசாசுகள் வழக்கத்துக்கு வந்து விட்டன. எனக்குள் உற்சாகம். நம்பிக்கை கூடியது. நான் இன்னும் சத்தமாய் கதையைச் சொன்னேன்.

பார்கவி விடுவாளா… நெற்றியில் முளைத்த கொம்பும்.. வாயிறங்கிய பல்லுமாக அவள் ஒரு டிராகுலி…. அப்படியே பார்க்கிறேன். ஒரு பிசாசுக்கு சிரிப்பு… கதை சூடு பிடித்து விட்டதாம். சந்தோசம் தாங்கவில்லை. ஒன்று குட்டிக்கரணம் அடிப்பதாக நின்று இடத்திலேயே தாவி தாவி பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒன்று இல்லாத நெற்றியைச் சுருக்கி சீரியஸாக என்னையே பார்க்க… எனக்குப் புரிந்து விட்டது. காற்றில் மூச்சிழுத்து ஒரே இடத்தில் நிற்கும் கழுகைப் போல பறந்தபடியே நின்று ரத்தக்காட்டேரி… ரத்தக்காட்டேரி என்று தமிழாக்கம் செய்தேன். உடனே ஈயென சிரிப்பு. புரிந்து விட்டதாம். கருமம்… டிராகுலா ட்ராகுலினா என்னன்னு தெரியல. இதுக்குத்தான் படிக்கற காலத்துல படிங்கடானு சொல்றது.

தலையில் அடித்துக்கொண்டு.. வால் போல தொங்கிய கையைக் காற்றில் அசைத்தேன். நான் நீந்த வேண்டுமே.

பார்கவி வழக்கமாக ஒருவனைக் காதலிப்பாள். ஒரு நாள் அரண்மனைக்கு அறிமுகம் செய்வாள். குடும்பமே சேர்ந்து அவனை பிடித்து அடித்து ரத்தம் உறிஞ்சு தின்று விடும். பிசாசுங்களுக்கு சிரிப்போ சிரிப்பு. பூனையைப் போல முதுகை தூக்கிக் கொண்டு குதூகலம். குஷியாகி விட்டார்கள். செவ்வானத்தில் இப்போது ஊதா நிறமும் சேர்ந்து கொண்டது. பறவை பட்சிகள் ஒன்றும் மூச்சு காட்டவில்லை. வீதி நாய்கள் அங்கும் இங்கும் அலைமோதி கத்தின.

கூட்டத்தில் ரபரபவென எழுந்த சத்தத்தோடு…. நாங்க வர்றோம்னா நீங்க கதறனும்டா என்ற தனித்த குரலில் அப்படி ஒரு பேயாதிக்கம்.

பொதுவாக ரத்தக்காட்டேரி இரவில்தானே வெளியே வரும். பார்கவிக்கு பகலிலும் வெளியே நடமாடும் சக்தி எப்படியோ கிடைத்திருக்கிறது. அதான் எப்படி. இப்போது யோசிக்க முடியவில்லை. ஒரு பிசாசு இல்லல்ல எப்படினு சொல்லு என்பதாக பார்த்தது. அடியே கல்பனா கற்கண்டு… இப்ப இவ்ளோதான் யோசிக்க முடியும். அந்தரத்தில் தொங்கிட்டு இருக்கேன்டி.. ஆயா… உங்களுக்கு காத்துல மிதக்கறது அல்வா திங்கற மாதிரி. எனக்கு நாக்கு தள்ளுது.

லாஜிக் மீறினா உடனே தெரியுது பாரேன்… எல்லாம் என்னை சொல்லணும். கதை சொல்லி சொல்லி லாஜிக் பத்தின கிளேரிட்டில்லாம் சரியா பழக்கி விட்டுருக்கேன்…

யோசித்துக்கொண்டே சட்டென கதையின் போக்கில் ஒரு சுவாரஷ்யத்தைக் கூட்டினேன்.

பூச்சிலிங்கம்…. இன்னும் என்ன பண்ணிட்டுருக்க என்று கத்துவது கேட்கிறது. நான் என் இருத்தலைக் காட்ட காற்றில் கபடி ஆட வேண்டி இருந்தது.

அப்புறம் என்னாச்சுனா என்று அவைகளின் கவனத்தை கதைக்குள் இன்னும் பலமாக இழுத்தேன். ம்ம்ம் கொட்டுவது போல தான் தெரிகிறது அவைகளின் சுழற்சி. காற்றைக் கிழிக்கும் வேகம் ஒவ்வொன்றிலும் காண்கிறேன்.

மலரவன் இப்ப போயி நின்ன இடம்… கோயில். – சட்டுனு கதைய முடிக்க இது ஒன்னுதான் வழி. – இனி இவன விரட்ட முடியாது என்றுணர்ந்த குள்ள உருவங்களும்.. பார்கவி படைகளும்… அப்படியே பின்னுக்கு ஒதுங்கின. அய்யயோ அந்தப் பக்கம் சர்ச்… போச்சுடா இப்படி வந்து சிக்கிட்டமே என்று அடுத்த பக்கம் தாவ… அங்க மசூதி. சொல்லிக்கொண்டே நோட்டம் விட்டேன். கொஞ்சம் திக்கு முக்காடி விட்டன தான். சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டன. அததுங்களுக்கு அதது பயம்.

பிசாசங்களுக்கு புத்தி இருக்காது. பழக்கம் மட்டும் தான். சிந்திக்கும் திறனை இழந்து விடும் அவைகளை சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விட முடியும். சின்ன சின்ன அற்ப விஷயங்களில் அடங்கி விடும் ஆத்ம திருப்திதான் அவைகளுக்கு. பூச்சிலிங்கம் சொன்னது இல்லாத நெத்தியில் நினைவுள்ள புத்தியில் ஸ்க்ரோல் ஆனது.

சுற்றிலும் சாமிகளின் அட்டகாசம் இருப்பதாக தெரிகிறது. நான் கதை சொல்வதற்கு இது சரியான இடம் இல்லை அன்பர்களே… அதோ கீழே தெரிகிறது பாருங்கள்… அந்த குழிக்குள் நான் செல்ல போகிறேன். விருப்பம் உள்ளவர்கள் என்னோடு வரலாம். விடிய விடிய நடனம் போல விடிய விடிய கதை உண்டு. இன்னைக்கு இந்தக் கதைய முடிச்சே ஆகணும்… என்று பொதுவாக ஏகத்துக்கும் கத்தினேன். காத்து நிமிண்டிய சொற்களை அவைகளின் வால்களும் நிமிண்டின. கதை கேக்கற சுவாரஷ்யத்துல வீட்டு வாசல்லயே நின்னதுங்க… என் பேச்ச மறுக்கவா போகிறது. வீட்டுக்குள்ளயும் நான் ஆவியாதான் இருப்பேன்னு நம்பின முட்டாள் பிசாசுங்கதான.

ம்ம்ம் வாங்க வாங்க என்று கத்தினேன்.

நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு என்னை முந்தி அடித்து உள்ளே குழிக்குள் பாய்ந்தன. கரகர ரபரப சத்தம் மொத்தமாக அந்த இடத்தையே அசைத்தது. காற்றினில் கருகிய வாடை. சுற்றிலும் பிணக்குவியல் போல ஒரு மாய வானம். சாம்பல் பூத்த கற்பனைகளை ஓரிடத்தில் போட்டுக் குவிப்பது… மலை அசைப்பது போல இருக்கிறது.

லட்சுமி பாட்டி உள்ளே இறங்க.. என்ன தேவிக்கா நீ வல்லியா… என்றேன். இல்லாத வாயில் ஈ ஈ என சிரித்துக் கொண்டே குழிக்குள் தாவி விட்டது. பிசாசு கூட்டமா ஆட்டு மந்தை கூட்டமா. அடுத்தடுத்து ஒவ்வொன்றாக உள்ளே குதித்து விட இனி கடைசியா நான் தான் இருக்கிறேன். நானும் மெய்மறந்து கிட்டத்தட்ட குழிகிட்ட போயிட்டேன்.

கீழேருந்து அண்ணார்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்த பேய்கள் வா வா வா என்று நெற்றியில் பற்கள் துடிக்க ஒலி எழுப்பி பார்க்க பார்க்க… சட்டென நினைவு வந்தவனாய் வேகமாய் பின்வாங்கி சுழன்று பூச்சிலிங்கம் காதருகே சென்று வேகமாய் ஊதினேன். முதலில் தடுமாறி திகைத்தாலும்…. அவருக்கு புரிந்து விட்டது. சுற்றிச் சுற்றி காற்றில் என்னைத் தேடியபடியே வேக வேகமாய் குழியை மூடத் தொடங்கினார். எல்லாமே கணக்கு தான். காற்றினில் நிகழும் கணக்கு. யுத்து உதவினான். அவன் உடல் நடுக்கத்தில் ஊறிக் கொண்டிருந்தது. அவருக்கும் தான் வியர்வை மழை. வேகத்தில் கைகள் படபடக்க… மண்ணை இழுத்து இழுத்து குழிக்குள் போட்டார். ஏதேதோ பூஜையை முணுமுணுத்தார். எலுமிச்சை குங்குமம் என சகலவிதமான பேயோட்டும் சமாச்சாரங்கள் அங்கே சிதறிக் கிடந்தன.

குழிக்குள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் பிசாசுகளின் கூக்குரல் பயங்கரமாக இருந்தது. மாற்றி மாற்றி பிராண்டிக் கொள்ளும் பூனை மொழியில் பிகில் அடிக்கும் கழுகின் கத்தலும் கலந்திருந்தது. கழுத்தை கடித்து ரத்தம் உரியும் சத்தத்தில் கறக் கறக்க என்ற புது ஒலி மூடப்பட்ட மண்ணுக்குள் இருந்து தம் தாம் என மேலே வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. பூசை மொழிகளும் புணஸ்கார பலிகளும் அந்த இடத்தில் ஆந்தை விழியில் கொப்பளித்துக் கொண்டிருந்தது. ரத்தத் தெறிப்பில் ராத்திரி கூந்தல் அடங்கி கொண்டிருந்தது. எதுவோ அடங்கிய உணர்வு. கதையை முடித்து விட்டேன் என்ற அமைதி. பிசாசுகள் என்னை விட்டு நகர்ந்து விட்டன என்ற திருப்தி.

விடியலில் நன்றி சொல்லி கொண்டிருந்தேன்.

அப்பாடா தப்பித்தோம். பூச்சிலிங்கத்தின் கைகளைப் பற்றி நன்றி சொன்னேன். அவர் கண்களில் தீவிரம் அடங்கி இருந்தாலும்… என்னவோ தேடல் இருந்தது. அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அமைதி பெருமூச்சிலும் ஓர் ஆழ்ந்த யோசனை. பாத்துக்கோ… றோமா… வர்றேன் என்றபடியே திரும்பி திரும்பி என்னைப் பார்த்தபடியே நகர்ந்தார்.

கதை முடிஞ்சுதா… இன்னும் செகண்ட் பார்ட்டுக்கு லீட் எதுவும் வெச்சிருக்கியா என்றான் யுத்து.

அடேய் இன்னும் நீ நம்பலயா… சரி நேத்து நைட் அங்கிருந்து கிளம்பின பின்னாடி என்னாச்சு தெரியுமா என்றேன்.

அவன் ஆவலோடு என்னையே பார்த்தான். அவன் கண்களில் மீண்டும் பதற்றம்.

எல்லா பிசாசுகளையும் குழியில் போட்டு மூடிட்டு வீட்டுக்கு திரும்பினா… வீட்டுக்குள்ள போக எனக்கு வழி கிடைக்கல. என்ன ஏதுன்னு ஒன்னும் புரியல. நான் பயந்துட்டேன். என்னோட ஒரு பக்கம் காதுல இல்லங்கற மாதிரி இருக்குது. நீந்த முடியல. நிச்சயமற்ற வெளில நெளியவும் முடியாத கனம் என்னை சூழ்ந்திருக்கறதை உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் மறைஞ்சிட்டிருப்பது போல புரிஞ்சுது. நான் இல்லாமல் போவதை உணர உணர அந்த உணர்வும் காணாமல் போய்ட்டிருக்கு. எங்க இருக்கிறோம்ங்கிற தெளிவு குறையுது. மூச்சுத்திணறல் போல காற்றின் வளைவு என்னை நெருக்குது.

அப்புறம் என்று சிமிட்ட மறந்த முகத்தோடு என்னையே பார்த்தான் யுத்து. எச்சில் விழுங்கியது அவன் அனிச்சை தொண்டை.

அப்புறம் அப்படி இப்படின்னு தட்டுத் தடுமாறி…

ஜன்னல் வழியாக நுழைஞ்சு வீட்டுக்குள்ள போனா…. விஷயம் புலப்பட்டுருச்சு.

என் உடம்பு சரிஞ்சிருக்கு. அப்படி வெளியே சென்று விட்டு மீண்டும் கூட்டுக்குள் வருகையில் தேகம் எப்படி அமர வைக்கப்பட்டிருந்ததோ அப்படியே தான் இருக்க வேண்டும். சரிந்திருந்தாலோ கீழே விழுந்திருந்தாலோ… அதன் பிறகு அதனுள் செல்லவே முடியாது..- சித்தர் சொன்னது தூரத்துல எங்கோ எதிரொலிக்குது.

படபடப்பும் பயமும்… நிலை கொள்ளாமைக்குள் என்னை சுழற்ற… என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சேன். திகைச்சேன். அந்த நேரத்தில சட்டுனு ஒரு எரிஞ்சு போன கை என் தேகத்தை தூக்கி பழையபடி அமர வெச்சுது.

நான் நொடியில் எனக்குள் புகுந்து கொண்டேன். புகுந்த அந்த நேரம் சட்டென நாசியில் ஏறியது யூதராவின் நெடி.

டேய் இரு இரு… அது…. இந்த யூதரா என் காதலி கதைல வர்ற பேயா… எப்பவும் உன் கட்டிலுக்கடிய தான் இருக்கான்னு கதை விடுவியே… அந்த யூதராவா என்றான் யுத்து. அவன் குரல் நடுங்கியது.

ஹ்ம்ம்ம் என்றபடியே மெல்ல சிரித்தேன். என் குரலில் யூதரா குரல் கலந்திருப்பதை இந்நேரம் அவன் உணர்ந்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *