ராக்கெட் ராணி
1. படம்: ஒரு தெரு. நல்ல இருட்டு. அந்த இருட்டில் ஓர் இளம் பெண் நடந்து செல்கிறாள் என்பது ‘பளிச்’ என்று தெரியவேன்டும். அந்தப் பெண்ணின் மேலாடை விலகியிருந்தால் நல்லது.
வார்த்தை: அந்த இருட்டில் ராணி தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தாள்!
2. படம்: படத்திற்கான சதுரத்தின் வலது பக்கம் மேல் முனையிலிருந்து ஓர் அம்புக்குறி. அந்த அம்புக்குறியின் நுனியில் ஒரு ரவுண்ட். அந்த ரவுண்டிற்குள் ‘ஏய் நில்’ என்ற வார்த்தைகள்.
வார்த்தை: ”ஏய் நில்” என்ற இடி முழக்கக் குரல் கேட்டு ராணி ஸ்தம்பித்து நின்றாள்.
3. படம்: ஒரு முரட்டு உருவம். முகமூடி, கட்டம் போட்ட பனியன், லுங்கி, பட்டை பெல்ட், முறுக்கிய மீசை, கிருதா, கலைந்த முடி, வாயில் பீடி, கையில் துப்பாக்கி. அந்த உருவம் ராணியை மிரட்டுகிறது. ராணியின் பயத்தைக் காட்ட, அவள் இடக்கையின் பின்புறத்தை மோவாய்க்கட்டையின் கீழ் வைத்து சித்திரம் போட வேண்டும். அவள் முகத்திலிருந்து ஓர் அம்புக்குறி. அம்பு நுனியில் ரவுண்ட். ரவுண்டிற்குள் ‘ஹா!’
வார்த்தை: ”மரியாதையாக நகைகளைக் கழட்டு!” என்கிறான் முரடன். ராணி பயந்து ‘ஹா’ என் கிறாள்.
4. படம்: இப்போது அவர்கள் நடு குகையில் இருக்கிறார்கள். (ராணியின் மேலாடையை அதற்குள் அவசரப்பட்டு சீராகப் போட்டுவிடவேண்டாம். நிதானமாகச் சீர்படுத்திக்கொள்ளலாம்) ராணி முகத்திலிருந்து அம் புக்குறி நுனி ரவுண்டில் ‘களுக்.’
வார்த்தை: அவன் ”ஏன் சிரித்தாய்?” என்று மிரட்ட, ”நீ யார் என்று எனக்குத் தெரியும். நீ என் அண்ணன்!” என்கிறாள் ராணி.
5. படம்: முகமூடி திடுக்கிடுகிறான் என்பதைக் காட்ட, அவன் தலைக்கு மேல் அம்புக்குறி ரவுண்டில் கேள்விக்குறி. ராணி அதைக் கண்டு மகிழ்கி றாள் என்பதைக் காட்ட, அவள் தலைக்கு மேல் அம்புக்குறி ரவுண்டுக் குள் ஆச்சரியக்குறி.
வார்த்தை: ”டேய்” என்று சத்தம் போடுகிறான் முகமூடி!
6. படம்: அந்த இடத்தில் இப் போது ஒரு நாற்காலி வருகிறது. அதைச் சுற்றி மின்சாரக் கம்பிகள்.
வார்த்தை: ”இதோ இந்த எலெக்ட்ரிக் நாற்காலியில் உன்னை வைத்துத் தீர்த்துவிடுகிறேன், பார்” என்று கர்ஜனை செய்கிறான் முகமூடி.
7. படம்: அறையில் ஒரு ராக்கெட் இறங்கியுள்ளது. ஓர் அழகான வாலிபன் இறங்குகிறான். கையில் துப்பாக்கி. முகத்துக்கு எதிரில் அம்புக்குறி. ரவுண்டுக்குள் ”அன்பே!”. துப்பாக்கி நுனி ரவுண்டில் ‘டுமீல்’
வார்த்தை: ராக்கெட்டிலிருந்து இறங்கிய வாலிபன், ”அன்பே… கவலைப்படாதே! நான் இருக்கிறேன்” என்று கூறி, துப்பாக்கியால் ‘டூமீல்’ என்று மின்சார நாற்காலி ஸ்விட்சை சுடுகிறான்.
8 படம்: மின்சார நாற்காலியில் முரடன் விழுகிறான். அது தீப்பற்றி எரிகிறது. முரடனின் தலைக்கு மேல் ”ஹா! அய்யோ! ஹா!”
வார்த்தை: முகமூடி மின்சார நாற்காலியில் எரிக்கப்பட்டு இறக் கிறான்!
9 படம்: முகமூடி முழுதும் எரிந்து சாம்பலானவுடன், அவன் உடல் தரையில் விழுந்து கிடக்கிறது. ராணியும் அத்தானும் இருக்கும் ராக்கெட் ஜன்னல் வழியே வெளியே றிக்கொண்டிருக்கிறது. அதன் மேல் ரவுண்டில் ‘ஜொய்!’
வார்த்தை: ராணி இறந்த தன் அண்ணன் முகமூடியின் சாம்பலாய்ப்போன உடலைப் பார்த்து, ”ஐயோ, அண்ணே!” என்கிறாள். அவள் காதலன் ”அன்பே” என்கிறான். உடனே அவள், ”அத்தான்” என்கிறாள்! ராக்கெட் பறக்கிறது! பாவம் காதலன்!
திரு சோ அவர்களுக்கே உரிய செம கிண்டல். ரசிக்கும்படியாக இருந்தது.