ரசனைக் கூத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2025
பார்வையிட்டோர்: 62 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வனஜா தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அத்தனை நேரமும் அவளோடிருந்த சிநேகிதிகளை அண்ணி டிபன் சாப்பிட அழைத்துக் கொண்டு போயாயிற்று. பத்து நிமிடம் போல அப்படியே கண்ணை மூடி அமர்ந்திருந்தவள், சற்று கொள்ள நேரம் நிம்மதியாய்த் தன்னைப் பார்த்துக் கிடைத்திருந்தது. 

கண்ணாடியில் பளபளத்த பிம்பத்தைக் கூர்ந்து பார்த்தாள். படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள் வீட்டிலிருந்ததில் எடை கூடியிருந்தது. ‘தாடையில் சதை சேர்ந்து வயதும் இருபத்து மூன்றைவிடக் கூடுதலாகத் தெரிகிறதோ?’ யோசனையுடன் என்னங்களை அழுந்தத் தடவிக் கொண்டாள். 

போதாததற்கு ‘மாப்பிள்ளை வீட்டார் கொடுத்திருந்த சேலையைத் தான் கட்ட வேண்டும்’ என்று அம்மா சொல்லியிருந்தார்கள். கரும்பச்சையில் அரக்கு கரை. என்ன நிறப் பொருத்தம்? ஒரு முழ அகல ஜரிகைக்கரை அவள் உயரத்துக்குப் பாந்தமாயிருக்காதென்று அவர்களுக்குத் தெரிய வேண்டாம்? அவர்கள் அந்தஸ்தைக் காட்ட ஜம்பமாய் எடுத்து வந்தாயிற்று – புடவை உடலெங்கும் கொசகொசவென்று ஜரிகைப் பூக்கள் வேறு! 

வனஜாவின் கழுத்து மெல்லிசாய் நீளமாய் இருக்காது. அதனால் அவள் கழுத்தை ஒட்டினாற் போல நகை அணியாது, ஆரம் போல தழைவாகப் போட்டுக் கொள்வாள். அவள் கழுத்தை நெரிப்பது போல் ஒரு அட்டிகையை நிச்சயத்தன்று மாமியார் போட – அதை இன்று அண்ணி எடுத்து மாட்டி விட்டிருந்தாள்.

“எனக்கு இதெல்லாம் ஸூட் ஆகாதேண்ணி”

“ஷ்… அவங்களுக்கு சந்தோஷமாயிருக்குமில்லே?”

“என் கல்யாணத்தன்னிக்கு என் இஷ்டம் போல பண்ணிக்கிறேனே” 

“இத்தனை நாள் அப்படிப் பண்ணியாச்சே! இனி அவுங்க விருப்பப்படி தான்” 

அண்ணி கிண்டல் பண்ணுகிறாளோ? 

வனஜாவுக்கு எரிச்சலும் அழுகையும் பொங்கின. அவள் தன் சொந்தம், வீடு, ஊர் அத்தனையையும் விட்டு மாப்பிள்ளை வீடு போகணும் – சரி – ரசனையையும் கூடவா விட்டு விட வேணும்? 

தன் அண்ணனின் திருமணத்தின் போது தானும், தன் தாயுமாக செய்த ஆர்ப்பாட்டங்கள் வனஜாவின் நினைவுக்கு வந்தன. 

‘அண்ணி, நா பார்க்கறப்போல்லாம் டார்க் கலர் தான் போட்டிருக்கீங்க? எங்க வீட்ல எல்லாருக்கும் லைட் கலர்தான் பிடிக்கும். நிச்சய, கல்யாண சேலையெல்லாம் அப்படியே எடுத்துரலாம் என்ன?’ 

‘ஐயோ… எங்கம்மாவே இன்னும் கொண்டை போடறதில்ல. நீங்க தலையை தழையப் பின்னி பூ சுத்திருங்க அண்ணி’. 

‘லிப்ஸ்டிக்கெல்லாம் வேண்டாம்மா. பெரியவங்களுக்குப் பிடிக்காது.’ 

‘ஒட்டியாணம் எதுக்குன்னா கேக்குற? வைர ஸெட்டும். ஒட்டியாணமுமில்லாம எங்க வீட்டுக்கு மருமக வந்ததில்லையே. பன்னிரண்டு பவுனாவது போட்டு ஒண்ணு செஞ்சிடுங்க. லாக்கர்ல கிடக்கட்டும்’. 

‘ஸ்பிரிங் இல்லாத கட்டிலு வேண்டாம். தம்பிக்கு ஒத்துக்காது… மாத்திடுங்க.’ 

‘கலியாணத்துல புலவ், சாப்ஸ் கறி…? கேள்விப்பட்டதில்லை.. கோழி பிரியாணி, குருமா, கட்லெட் சரியாயிருக்கும்’. 

பூ அலங்காரம், மியூஸிக், வீடியோ. சமையல் என்று அனைத்திலும் மூக்கை நீட்டி, தங்கள் கட்டளைகளெல்லாம். நிறைவேற்றப்பட்டாயிற்று என்றும் அலுக்காமல் போய்ப் பார்த்து நிச்சயம் பண்ணிக் கொண்டது உறுத்தலாய் நினைவில் வந்து நின்றது. 

அண்ணியில் கல்யாணச் சேலை, நகை, செருப்பு வரை வனஜாதான் தேர்ந்தெடுத்தாள். ‘ஹீல்ஸ் வேண்டாம். அண்ணி ஒல்லி… ரொம்ப ஓடிசலா தெரிஞ்சிடும்’. 

தக்காளி நிற டிஷ்யூ பிரியம் என்று அண்ணி சுலோ கோடி காட்டியும் வனஜா மசியவில்லை. ‘டிஷ்யூ எந்த காலம்…! இந்த தாமரைப் பூ ப்ரொகேட் புதுசா இல்ல?’ 

‘ரவிக்கை கை இத்தனை குட்டையா உங்களுக்குப் பொருந்தலை. நீளமா தச்சுக்கோங்க’ – வனஜாவிள் ஆணைகள். 

‘சேலை முந்தானை இத்தனை நீளம் எதுக்கும்மா? கொசுவத்திலே மடிப்பே வராதே’ இது அம்மா, வனஜா சொல்லுக்கு அன்று ஏக மதிப்பு. அவள் சொற்படி பெண் வீட்டார் ஆடினார்கள். 

‘வனஜா பாப்பாக்கு எல்லாம் திருப்திதான?’ வாய் நிறைய கேட்டார்கள். அண்ணி தலை கவிழ்ந்திருந்ததில் அவளுக்கு சந்தோஷமா, இல்லையா என்பது தெரியவில்லை. வனஜாவின் மரமண்டையில் ஏதும் அன்று உரைக்கவில்லை. 

இன்று கழுத்தைக் கவ்வும் அட்டிகையும் பொருந்தாத கட்டி ஐரிகைச் சேலையுமாக நிற்கையில் உறைக்கின்றது. 

கதவு திறக்க அண்ணி கையில் டிரேயுடன் நுழைந்தாள். ”வஜீ மாப்பிள்ளை வந்தாச்சு, சூடா வடையும் ஜில்லுன்னு ஜூஸும் கொணாந்திருக்கேள். சாப்பிட்டுட்டுக் கிளம்பு” என்றாள். கருஞ்சிவப்புப் பட்டில் அண்ணி அமர்க்களமாயிருந்தாள். கெம்பு செட்டுடன் தழைய கொண்டையிட்டு சிவப்பு ரோஜாக்களைச் செருகியிருந்தாள். 

”அண்ணி, நீங்க ஸ்லிம்மா அழகாயிருக்கீங்க. உங்க சேலை, நகையெல்லாம் உங்களுக்கு ரொம்பப் பொருத்தம்.” 

சுசீலா நிமிர்ந்து முகம் மலர சிரித்தாள். 

‘நீயும் ஜோரா இருக்கே வஜீ. இன்னொரு வடை வைக்கட்டா?” 

“அண்ணி… ஐ யம் சாரி” வனஜாவின் உதடுகள் துடித்தன.

“என்ன வஜீ.- திடீரென..” அண்ணி உண்மையான பாசமும் பதட்டமுமாகக் கேட்டாள். 

“உங்க கல்யாணத்தப்ப எல்லாம் எங்க இஷ்டத்துக்கு நடந்துச்சு, அது உங்க மனசுக்கு எத்தனை வருத்தமா, குறையாயிருந்திருக்கும் என்பது எனக்கு இப்பப் புரியுது. மாப்பிள்ளை அக்கா அதிகாரம் தூள் பறக்குது. இந்த அட்டிகை, சேலை, பேச்சு எனக்கு எதுவும் பிடிக்கலை. இப்படிக் கோமாளி மாதிரி நா வெளியே போக முடியாது…” 

“ப்ச்…கோமாளியா? பிரமாதமா இருக்கே வஜி, இதெல்லாம் ஒரு நாள் கூத்து. அவுங்க அடிச்சிட்டுப் போகட்டும். அப்புறம் உன் இஷ்டம் தான்.” 

மூன்று வயதே கூடுதலான சுசிலா, மகா அனுபவத்தோடு பேசினாள். 

“எங்க என் இஷ்டம்? அங்கல்ல நா போய் இருக்கணும்?” 

“என் கல்யாணத்தப்ப நீயும் தான் உஷார்ல எத்தனையோ சொன்ன. இப்ப நான் அழுத்தமான கலர்லதான் சேலை எடுத்துக்கறேன். கட்டில்ல ஸ்பிரிங்கை எடுத்து சட்டைப் பாவியாச்சு. கொண்டை போடறேன், நா சமைக்கறத நீங்களும் ‘ஆஹா’ன்னு சாப்படறீங்க” சுசீலா அடுக்கினாள். 

நீண்ட மாங்காய் மாலையைத் தான் அண்ணி ஒட்டியாணமாக கல்யாணத்தின் போது போட்டிருந்தாள். பிறகொரு நாள் கருப்பு பட்டு கட்டி அதைக் கழுத்து நிறையப் போட்டுக் கொண்ட போது  அம்மாவே, 

”நல்ல ஐடியா சுசீலா எங்க ஒட்டியாணமெல்லாம் பாங்க்ல தூங்க, நீ இதை அடிக்கடி உபயோகிச்சிக்கலாம்” என சிலாகித்தார்கள். 

மாடிப்படியில் பேச்சும் சிரிப்புமாகக் கேட்டது. 

வனஜாவின் அம்மா, பதினெட்டு வயதுப் பெண் போல அவசரமாக குடுகுடுவென ஓடி வந்து, “மாப்பிள்ளையோட அக்கா வராங்க… எல்லாம் ரெடி தான?” – பதட்டமாக கேட்க, 

“அவங்க இப்ப எதுக்கு இங்க வரணும்” – சிடுசிடுத்தாள் வனஜா.

“நீ முதல்ல ஜூஸைக் குடி” அண்ணி வரவேற்க வெளியே பாய்ந்தாள். 

மாப்பிள்ளையின் தகப்பனார் சில வருடங்களுக்கு முன்பு தவறியிருந்ததால் மாமியாரை அதிகம் காண, கேட்க முடியவில்லை. எல்லாம் நாத்தனார் மயம்! 

 “வாங்கக்கா. வனஜாவைப் பார்த்தீங்கல்ல. நீங்க தந்த புடவை நகைதான் போட்டிருக்கா” 

அறையுள் நுழைந்த நாத்தனார் சிரித்தபடி வனஜாவை மேலும் கீழுமாகப் பார்த்து, 

”அழுத்தமான கலர்தான் உனக்கு எடுப்பாயிருக்கும்மா. அன்னிக்கு சுட்டியிருந்த தளிர் பச்சை பனாரஸ் உனக்குப் பொருத்தமேயில்லை” தோளில் கை போட்டு முதுகைத் தடவியவள்- 

”சட்டை கை என்ன தொளதொளப்பாயிருக்கு? டைட்டா தச்சிக்கோ, இன்னும் குண்டா காட்டுது” என்றாள். 

“திருச்சியில என்ன பூ கட்டுறாங்க – பச்சை நூல்ல? மதுரை மல்லிகைக் கட்டு மாலைதான்” என்றபடி பையிலிருந்த மதுரை மல்லியை எடுத்துக் கொண்டையைச்சுற்றி வழிய வழிய வைக்க – வனஜா அதிஜாக்கிரதையாகப் போட்டுக் கொண்ட கொண்டை பூக்கட்டில் அவிழ்ந்து போனது. 

வனஜா, தன் அண்ணியை நிமிர்ந்து பார்த்தான். ‘ஒரு நாள் கூத்து’ சுசீலா அபிநயிக்க வனஜா சிறி எழுந்த புன்னகையை மறைக்க தலை கவிழ்ந்து கொண்டாள். 

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *