யாருக்காக அழுதது
கதையாசிரியர்: ஆலமர் செல்வன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 3,243
(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஓ… ஓ.. ஒள… அவ் வவ். ஊ…” உலகின் ஆதி சோகப் பாடல் ஒன்றை அந்த நாய் பாடிக் கொண்டிருந்தது. சில வினாடிகள் மௌனம். நாய் தனது பாடலை அத்தோடு நிறுத்திவிடும் என அவன் எதிர்பார்த்தான். ஆனால் மௌன வெளியின் சூட்சும அதிர்வு களை கிரகித்து தூல சையாக உருமாற்றம் செய்து மேலும் அதை சையாக ஒழுங்கமைத்தது போல அந்த நாய் தனது பாடலை பாடத் துவங்கியது. உறக்கத்திற்கும் விழிப் புக்கும் இடை யிலான மனத் தளத்தில் மிதந்து கொண்டு இருந்த அவனுக்கு அந்த நாயின் ஊளை பாடலிசைப் போல்தான் தோன்றியது. அவனது உடல்நிலை சரியில்லாத ஆச்சியின் நினைவு வரும்வரை.
அவன் மனக் கலக்கமுற்றுத் துரிதமாய் முழு விழிப்பு நிலையை அடைந்தான். அவனது ஆச்சி சில மாதங்களாக உடம்புக்கு முடியாமல் படுத்தப் படுக்கையாய் இருக்கிறாள். இந்த சனியன் பிடித்த நாய் இப்படி வீட்டு வாசலிலும், வீட்டைச் சுற்றிச் சுற்றி இத்தெருவிலும் இருந்து கொண்டு அழுது ஊளையிட்டு ஒப்பாரி வைக்கிறதே என அவனுக்கு எரிச்சலாக இருந்தது. நாய்களுக்கு மரணம் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழ்வதைப் பற்றிய சூசகமான முன்னறியும் நுண்ணறிவு இருப்பதாக பொது நம்பிக்கையை அவனும் அறிந்திருந்ததுதான் அவன் கலக்கத்திற்கு முக்கிய காரணம்.
படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டு உள்ளறையில் உறங்கிக் கொண்டு இருக்கும் ஆச்சியை உற்றுக் கவனித்தான். அத்தொலைவில் இருந்து அவளின் மூச்சோட்டத்தை அவனால் அறிந்துணர முடியவில்லை. அதனால் அவன் எழுந்து ஆச்சியின் அருகில் சென்று குனிந்து அவளை உற்று கவனித்தான். வாய் வழியாகவும் நாசி வழியாகவும் ஆச்சியின் சுவாச இயங்கிக் கொண்டிருந்தது. ஆச்சியின் பற்கள் இல்லாத பொக்கை வாயில் அவளது உதடுகள் சூறைக் காற்றில் ஆடும் தாழ்ப்பாள் இடாத கதவுகள் போல அவளின் சுவாசத்திற்கு ஏற்றவாறு அசைந்து கொண்டிருந்தன. அவ்விசைக்குப் பின்னணியாக அவளின் தொண்டை பகுதியிலும் மார்புப் பகுதியிலும் பழுதுபட்ட காற்றிசைக் கருவிகளின் கூட்டு ஒலிக்கோர்வை போல ஓசை வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஆச்சிக்கு உயிர் இருக்கிறது என்ற நிம்மதியில் அவன் தன் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டு உறங்கத் துவங்கினான்.
அவனின் நிம்மதியைக் குலைப்பதே தனது ஒரே இலட்சியம் என்பதுபோல் நாயின் குரைப்பொலியும், ஊளையிடலும் எழுந்தன. குரைப்பென்றால் அப்படி ஒரு வன்மையான குரைப்பு, தொடர்ந்து ஊளையிடல். இது வேறு ஒரு இராகத்தில் அமைந்த சோக கீதம் எனவும், முதலில் குரைத்தது அப் பாடலின் இராகம், தாளம் பற்றிய அறிவிப்பு போலும் என அவன் நினைத்துக் கொண்டான்.
அவனுக்கு இதற்கு மேலும் பொறுமையாயிருக்க முடியவில்லை. படுக்கையை விட்டு எழுந்து சப்தமிடாமல் விளக்கையும் போடாமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். அவன் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு ஊளையிட்டுக் கொண்டிருந்த அந்தநாய் அவனை கண்டவுடன் அவ்விடத்திலிருந்து ஓடி மறைந்தது. வீடு திரும்ப எத்தனித்த அவன் மீண்டும் நாயின் ஊளையிடல் ஒலி கேட்டு, தெருவில் கிடந்த கனமான கூரிய கற்களைச் சேகரித்துக் கொண்டு நாயின் ஓசையெழும் இடம் நோக்கி நடந்தான். நிலவொளியில் தெருமுனையில் நட்ட நடுப் பாதையில் அமர்ந்து கொண்டு அமானுஷ்யப் பாடலைப் பாடும் அப்பாடகரை அவன் கண்டான்.
அவன், தன் வருகையை அந்த நாய் உணர்ந்து கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் மிக மெதுவாகவும் தனது கல்வீசும் தொலைவு எல்லைக்குள் அந்த நாய் இருக்கும்படி அவதானித்துக் கொண்டு தான் சேகரித்துக் கொண்டு வந்த கற்களில் ஒன்றை அந்த நாய் மீது விசையோடு எறிந்தான்.
வானத்தை நோக்கி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தன்னை மறந்து சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்த அந்த நாயின் வயிற்றுப் பகுதியை அவன் எறிந்த கல் விசையுடன் தாக்கியது. எதிர்பாராத அத்தாக் குதலால் அந்த நாய் திடுக்கிட்டு, ‘ஃ., அவ்.. அவ்.. ‘ என வலியுடன் கூடிய ஒலி மற்றும் வலிக் குறிப்புகளை காற்றில் மிதக்கவிட்டபடி பின்னங்கால்களில் ஒன்றை தூக்கியவாறே நொண்டிக் கொண்டே விரைவாக, நிலவொளிப் பட்டு ஒளிரும் பச்சைநிறக் கண்களால் அவனைப் பார்த்தவாறே ஓடிச் சென்றது.
தன்னால் வீசி எறியப்பட்டக் கல்லினால் வயிற்றில் அடி வாங்கிய அந்த நாய் காலில் அடிபட்டது போல் நொண்டிக் கொண்டு ஓடிய ஓட்டம் அவனுக்கு அச்சூழலிலும் சிரிப்பை வரவழைத்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டே கைகளில் இருந்த கற்களை வீசி எறிந்துவிட்டு கைகளை தட்டி விட்டுக்கொண்டு தன் வீடு நோக்கி நடக்கத் துவங்கினான். ஆனால் ஏதோ ஒரு எண்ணத்தின் உந்துதலால் அருகில் இருந்த மரத்தின் பின் ஒளிந்து கொள்ள அந்த நாய் மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு ஊளையிடத் துவங்க, அவன் பதற்றத்துடன் கற்களைப் பொறுக்கி அதன்மேல் வீசத்துவங்கினான்.
மீண்டும் தன்மேல் நடைபெற்ற அந்த எதிர்பாராத தாக்குதலால் மருண்ட அந்த நாய் ஒரு காலைத் தூக்கிக்கொண்டு நொண்டியவாறே ஓடத் துவங்கியது. அவனும், அதன் பின்னாலேயே ஓடி விரட்டி விட்டு, அது மீண்டும் வரலாம் என சில நிமிடங்கள் அங்கேயே ஒளிந்திருந்து, காத்திருந்து, அந்த நாய் மீண்டும் அங்கு வராமையைக் கண்டபின் தன் வீடு திரும்பினான்.
வீட்டில், ஆச்சி வீடே அதிரும்படி இருமிக் கொண்டு அவன் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டு இருந்தாள். அவளுக்குத் தர வேண்டிய மருந்தைத் தந்துவிட்டு, தனது படுக்கையில் படுத்துக் கொண்டு காற்றின் இரகசிய மொழியை செவிமடுத்துக் கொண்டே தூக்கம் இமைகளை அழுத்த உறங்கத் துவங்குகையில்… “ஓ… ஓவ்… ஊ… வவ்.. வூ..”. நொடியில் உடலின் குருதியெல்லாம் தலைக்கு ஏற, முகம் சிவந்து, குடல்கள் முறுக்கிக் கொள்ள, இதயம் தடுமாறி துரித கதியில் துடிக்க, வியர்த்துக் கொட்டும் உடலோடு அவன் விழித்து எழுந்து கொண்டான்.
“தம்பீ, அந்த நாய வெரட்டுப்ப… வாசல்ல வந்து அழுவுது பாரு, என்னை பிடிக்கத்தான் எமன் வரான் போலிருக்கு” என ஆச்சி இருமலும் மூச்சிரைப்புமாக அவனிடம் கூற அவன் வெறி பிடித்தவன் போல் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓட, இம்முறை அவன் வருகையை முன்னதாகவே எதிர்பார்த்து அறிந்து கொண்ட நாய் ஒரே பாய்ச்சலாக ஓடி ஒளிந்தது.
வீடு திரும்பி, கனத்த தடி ஒன்றை தேடி எடுத்துக் கொண்ட அவன், நாய் ஓடிய திசையிலேயே ஓடி, சிறிது தொலைவிலேயே நாயைக் கண்டறிந்தான். கையில் தடியுடன் வெறி பிடித்தவன் போல ஓடி வரும் அவனைப் பார்த்த நாய் பயந்து பின்னங்கால்களுக்கு இடையே வாலைச் சுருட்டி ஒடுக்கிக் கொண்டு திசை அறியாமல் மருண்டு ஓடியது.
அவனும் விடாமல் அந்த நாயை துரத்திக் கொண்டு ஓட முடிவில் அந்த நாய் (விதி) வசமாக ஒரு குறுகிய முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்ட “வசமா மாட்டிக்கிட்டியா நாயே. ” தடியுடன் அவன் கைகள் மேலே உயர, நாய் ஈறு தெரியும்படி தனது பற்களை கோரமாகக் காட்டியவாறே உறுமத் துவங்கியது. அம்மிருக உறுமலால் அவன் அச்சமடைந்தாலும் தனது முழு பலத்தையும் கொணர்ந்து இரு கைகளாலும் தடியை இறுக பிடித்துக் கொண்டு நாயைத் தாக்கினான். நாய்க்கு நடு முதுகில் பலமான அடி, தோலும் சதையும் நெகிழ நெருப்பைப் போல் இறங்கிய தடி நாயின் எலும்பை தாக்கியதால் அது உச்சமான வலியினால் மரண ஓலமிட்டது.
அடுத்த அடிக்காக அவன் கைகள் மேலெழும்ப மரண பயத்திலும் உச்சமான உடல் வாதையிலும் இருந்த அந்த நாய் உறுமிக் கொண்டு அவன்மேல் பாய்ந்து ஏறி அவன் கழுத்தைக் கவ்வியது. தடுமாறிய அவன், மல்லாந்து தரையில் விழ கைகளில் இருந்த தடி நழுவி விழுந்தது. அனிச்சையாக அவன் இரு கைகளாலும் நாயின் கழுத்தைப் பிடித்து இறுக்கியும், நாயின் பற்கள் பதிந்த தனது தொண்டையில் இருந்து குரலெழாமல் முனகிக் கொண்டு, நாயின் வாயைத் தன் தொண்டையில் இருந்து பிரிக்க முயல நாயின் கடி இறுகியதே தவிர இளகவில்லை.
மறுநாள் விடியலில் நாயின் கடியால் அவனும், அவனின் பிடியால் நாயும் இறந்து கிடந்ததைப் பார்த்து யாரோ ஓலமிட்டு அலற ஊர் சனம் கூடத் துவங்கியது.
கூடிய கூட்டத்தில் யாரோ கூறினார்கள், “ரெண்டு மூணு நாளா நாய் ஊளையிட்டு அழும்போதே நெனச்சேன், ஊருல ஏதோ நடக்கப் போவுது, சாவு விழப்போவுதுனு, ஆனா இப்படி ஆவும்னு யாரு நெனச்சா?”
– ஏப்ரல் 2008, உயிர் எழுத்து.