யதார்த்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 6, 2025
பார்வையிட்டோர்: 150 
 
 

சென்னை அண்ணா நகரில் அண்ணா நகர் டவர் பிளாக் பூங்காவுக்கு அருகில் உள்ள தெருவில் இருந்த கே.ஆர்.இண்டஸ்ட்ரீஸ் அலுவலகத்தின் வரவேற்பு அறையில் கட்டிளங்காளை இளைஞன் தினா என்கிற தினகரன் தன்னுடைய நண்பர்கள் குணசேகரன் மற்றும் தனசேகரனுடன் சோபாவில் அமர்ந்திருந்தான். இந்த அலுவலகத்தில் பொது மேலாளராக இருக்கும் அவனுடைய பள்ளிக்கால தோழி ஷோபாவுக்காக அவர்கள் காத்திருந்தார்கள். அவள் வருவதற்கு தாமதம் ஆகவே அங்கு மும்முரமாக பதிவேடுகளில் எழுதிக் கொண்டிருந்த வரவேற்பாளர் சூரிதார் இளம்பெண்ணின் அருகில் சென்று நின்றான் தினா. அவள் தன்னுடைய பணியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றாள். அவள் திரும்பி வரும் போது , கோட் சூட் அணிந்த , கனமான உடல்வாகு கொண்ட கம்பீரமான அவனுடைய தோழி ஷோபா வந்தாள்.

சோபாவில் அமர்ந்த ஷோபாவிடம் தன்னுடைய நண்பர்களை அறிமுகம் செய்தான்.

அவனிடம் பேசக்கூட நேரம் செலவழிக்க முடியாத நிலையில் இருந்த ஷோபா கூறினாள்

“சாரிப்பா … அதிகம் பேச டைம் இல்ல ஜூம் மீட்டிங் பாதியில விட்டுட்டு வந்திருக்கேன்… மெசேஜ்லயே என்ன ன்னு சொல்லி இருக்கலாமே.. சரி சொல்லு “

தினா பேசினான் – “இல்லப்பா … உங்க தாத்தா சுந்தரத்தோட அப்பாயின்ட்மென்ட் வாங்கி குடு சினிமா உலகம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து ஒங்க தாத்தா இன்டர்வீன் பண்ணா ஏதாவது முடிவு கிடைக்கும்ன்னு கேள்விப்பட்டேன். “

ஷோபா எழுந்து நின்றாள் – “ இவ்வளவுதானா ? நாளைக்கே அவரை மீட் பண்ணலாம் … நான் அவர் கிட்ட பேசிட்டு எங்கே எப்ப ன்னு உனக்கு டெக்ஸ்ட் பண்றேன் .. நானும் அங்க வந்து அப்ப கேட்டுக்கறேன் …சரி நான் வரேன் … ” கூறியபடியே அவள் உள்ளே சென்றாள். தினா , தன்னுடைய நண்பர்களுடன் படிகளில் இறங்கி கீழே வந்தான். மூவரும் அருகில் உள்ள தேநீர் கடைக்குச் சென்றனர். அவர்கள் , தேநீர் அருந்துவதற்குள் அவர்கள் ஷோபாவின் தாத்தாவின் உதவியை நாட வேண்டிய சூழல் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். வெவ்வேறு வயதைச் சேர்ந்த தினா, தனா, குணா மூவருக்கும் உத்யோகம் இருக்கிறது. கை நிறைய , பை நிறைய , வங்கி இருப்பு நிறைய சம்பளமும் இருக்கிறது. அவர்கள் மூவரும் நண்பர்களான பின்னர் , கதை சொல்லிகளாக ஆக முயற்சி செய்து முதல் வெற்றியாக அவர்கள் பின்னிய கதை ஒன்று வெப் தொடருக்குப் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டிருக்கிறது. அவர்கள் , பீச்சர் பில்முக்காக எழுதி பதிவு செய்து வைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்த அறிவியல் கதை ஒன்றை வேறொரு நிறுவனம் படமாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்காகத் தான் தமிழ்த் திரையலகில் பலருடன் நல்ல தொடர்பு உள்ள சுந்தரம் சாரின் உதவியை நாட உள்ளார்கள் இவர்கள்.


மறுநாள் . மாலை நேரம். மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் இருந்த ஆனந்தா திருமண மண்டபத்தின் வாசல் முகப்பில் தினா நின்று கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அங்கு வந்த நின்ற காரிலிருந்து நீல நிற சேலை அணிந்த ஷோபா இறங்கினாள். தினா ,

சில நொடிகள் அவள் அழகில் மயங்கி நின்றான். பின்னர் சுதாரித்துக் கொண்டான். ஷோபா , “ தாத்தா மாடில இருக்காரு . முதல் மாடி தான் நடந்த போகலாம் வா ” என்றாள். நால்வரும் மாடிப்படிகளில் ஏறி முதல் மாடிக்குச் சென்றனர்.

ஏதோ பேச வேண்டும் என்று தினா , “ இது ஒங்க கல்யாண மண்டபமா ?“

“நீ வேற எங்க அப்பாவுக்கும் தாத்தாவும் சொத்து சேர்க்க தெரியாது … இது தாத்தாவோட ப்ரெண்டோட கல்யாண மண்டபம். ப்ரெண்டு , பேரப் பசங்கள பார்க்க அமெரிக்கா போயிட்டாரு … இவரு இப்ப ஓனருக்கு பதிலா வந்து போய்கிட்டு இருக்காரு..“ பதில் சொன்னாள் ஷோபா .

முதல் மாடியில் மிகப்பெரிய ஆசனத்தில் அமர்ந்து இருந்த வாட்டசாட்டமான உருவம் கொண்ட , வெள்ளை கேசம் ,வேட்டி சட்டை அணிந்த சுந்தரம் , சின்ன நாற்காலியில் அமர்ந்திருந்த ஒல்லியான தேகம் கொண்ட மற்றொரு வயதானவருடன் சீட்டாடிக் கொண்டிருந்தார். சுந்தரத்தின் பேத்தியின் தலையைப் பார்த்ததும் ஒல்லியான நபர் அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றார். ஷோபா , தாத்தாவின் அருகில் நின்றாள். அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் தினாவும் நண்பர்களும் அமர்ந்தனர்.

சுந்தரம் பேசினார் – “என்ன ஷோபா யார் இந்த பையன் ? உன்னோட ஆளா ? ஒங்க அப்பா அம்மா கிட்ட பேசணுமா? “

“உனக்கு எப்பவும் அதே நெனப்பு . அவங்க ஒன்ன பார்க்கத்தான் வந்து இருக்காங்க . இவுரு தினா , இவங்க ரெண்டு பேரும் தனசேகரன் , குணசேகரன் .. “

அந்த இடத்திற்குத் திரும்பி வந்த ஒல்லியான நபர் , பழரசங்கள் அடங்கிய தட்டை அங்கிருந்த தாழ்வு மேசையில் வைத்தார்.

“எடுத்துக்கங்க ” என்றார் .

தினா அவரைச் சந்திக்க வந்துள்ள நோக்கத்தை சுருக்கமாக விவரித்தான்.

சுந்தரம் , பேத்தியின் முகத்தைப் பார்த்தார்.

“என்னை என்ன பார்க்கறே … நீ பஞ்சாயத்து பண்ணி அவங்க கதைக்கு காம்பன்சேஷன் வாங்கி கொடுக்க முடியுமா ன்னு சொல்லு”

“மூணு பேர் சேர்ந்து கதை எழுதறாங்கறது இப்ப தான் கேள்விப்படறேன். முழு நேர வேலையா இதை வெச்சுக்கல புத்திசாலி நீங்க.. மூணு பேரும்.. அந்த காலத்துல பெரிய பெரிய தயாரிப்பு கம்பெனிகள்ல கதை இலாகான்னு வெச்சு இருந்தாங்க அந்த இலாகாவுல நிறைய எழுத்தாளர்கள் இருப்பார்கள்..“

ஷோபா இடைமறித்தாள் – “அவங்களுக்கு என்ன ரெமெடி அதை சொல்லு மொக்கை போடாதே … தாத்தா”

தினா, என்ன இவள் பெரிய மனிதரிடம் இப்படி பேசுகிறாள் மற்றவர் முன்னிலையில் என்று நினைத்தான்.

சுந்தரம் பேசினார் –

“வரலாற்றுத் தகவல் சொன்னா மொக்கையா? சரிப்பா.. தினகரன் , நீங்க பதிவு பண்ணி வெச்சிருந்த புதியதோர் உலகம் சயன்ஸ் பிக்சன் கதையை அவங்க நாளைய உலகம்ன்னு படமா எடுத்து படம் வளர்ந்திடுச்சுன்னு சொல்றீங்க.. அவங்க கிட்ட போய் யார் பஞ்சாயத்து பண்ணாலும் வேலைக்கு ஆகாது … கோர்ட்ல போனாலும் நடக்காது … நீங்க சொன்ன டைரக்டர் , ப்ரொட்யூசர் ரெண்டு பேரும் எனக்குத் தெரிஞ்சவங்க தான்.. ஆனா அவங்க இது எங்க மூளைல உதிச்ச கதைன்னு சொல்வாங்க … இது பின்னால ஓடி ஜெயிக்க முடியாது… ஔவையார் , தோற்பன தொடரேல்ன்னு சொல்றா . யதார்தத்தைப் புரிஞ்சுக்கங்க…”

அப்பொழுது அங்கு வாட்டசாட்டமான உருவம் கொண்ட, டிசர்ட் பேண்ட் அணிந்த தாடி நடுத்தர வயது நபர் உள்ளே வந்தார். அவர் , புன்னகை பூத்தபடியே குனிந்து சுந்தரத்தின் பாதங்களைத் தொட்டு வணங்கி நின்றார்.

சுந்தரம் , அவருடைய தோள்களை வருடினார்.

“சதீஷ் … நல்ல சமயத்துல வந்த நீ … இது என் பேத்தி ஷோபா , கார்ப்பேட் கம்பெனில ஜி எம் ஆ இருக்கு… இவங்க தீனா, தனா குணா …. எழுத்து ஆர்வம் உள்ளவங்க கதைசொல்லிகள் “

சதீஷ் , அவர்களுடன் கை குலுக்கினார். சுந்தரம் பேசினார் –

“தினா, சதீஷ் , தெலுங்குல ஒரு ஹிட் படம் கொடுத்த டைரக்டர் . என்னோட சிஷ்யரு.. ஒங்களாலே சில்வர் ஸ்க்ரீனுக்காக புதுசு புதுசா வித்தியாசமான கதை சொல்ல முடியும்னா, நம்ம சதீஷோட ஐக்கியம் ஆயிடுங்க… ஒங்களுக்கு தெலுங்கு தெரியாட்டா பரவாயில்ல.. நீங்க ஆந்திரா போகணும்னு அவசியம் இல்லை சதீஷ் மாசத்துல பாதி நாள் நம்ம ஊர்ல தான் இருப்பாரு…. நீங்க போராடற அந்த கதைக்கு காம்பென்சேசன் கிடைக்காது… ஆனா, சதீஷ், நீங்க அவங்களோட ஸ்பெண்ட் பண்ற டைமுக்கு கண்டிப்பா காம்பென்சேசன் கொடுப்பாரு … என்ன சொல்றீங்க “

நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நல்ல வாய்ப்புப்பா… இதை பயன்படுத்திக்கங்க.. நழுவ விடாதீங்க … தமிழ் சினாமால , வெப் சீரீஸ்ல, டிவி சீரியல்ல ன்னு வர்றதுக்கு இந்த அனுபவம் கை கொடுக்கும்… சதீஷ் சார் நீங்க இவங்கள ஒங்க டீம்ல சேர்த்துப்பீங்க இல்ல…” என்று ஷோபா, தினாவின் அருகில் வந்து பேசினாள்.

சதீஷ் “தாத்தா சொல்லிட்டாரே கண்டிப்பா” என்றார். சதீஷ் , தன்னுடைய விசிட்டிங் கார்டை தினாவிடம் கொடுத்தார்.

தினா, “தேங்க்ஸ்… சாரோட டீம்ல சேர்ந்துக்கறோம்”

சுந்தரம் “அதை ஏன் சுரத்து இல்லாம சொல்றே சந்தோஷம் இல்லாம ஈனஸ்வரத்துல சொல்றே . … நல்லா கணீர்ன்னு சொல்லு ” என்றார்.

அனைவரும் புன்னகை பூத்தனர்.

(இந்தப் புனைகதையின் சூழலும் கதை மாந்தரும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல.)

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *