மோதிர மோசக்காரன் கதை
கதையாசிரியர்: நெ.சி.தெய்வசிகாமணி, மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்: 19
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரங்கனும் சோமனும் நண்பர்கள். ஒரு நாள் ரங்கன் சோமனிடம் வந்தான்.
“சோமா, நான் ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. உன்னுடைய தங்க மோதிரத்தை ஒரு நாள் இரவல் கொடுத்தால் கல்யாணத்திற்குப் போய் வந்ததும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றான் ரங்கன்.
சோமனும் தன் கையிலிருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி ரங்கனிடம் கொடுத்தான்.
மோதிரம் வாங்கிச் சென்ற ரங்கன் வெகுநாளாகியும் திரும்பி வரவில்லை. சோமன் அவன் வீட்டுக்குச் சென்றான்.
”என்ன ரங்கா! என்னிடமிருந்து தங்க மோதிரம் இரவலாக வாங்கிப் போனாயே! அதை இன்னும் திருப்பித் தரவில்லையே!” என்றான் சோமன்.
“தங்க மோதிரமா? என்னிடம் ஒரு தங்கமோதிரம் சொந்தமாக இருக்கும்போது நான் ஏன் உன்னிடம் இரவல் வாங்குகிறேன். இதோபார் என் மோதிரத்தை!” என்று சோமனுடைய மோதிரத்தையே சோமனுக்குக் காண்பித்தான் ரங்கன்.
“அது என் மோதிரமாயிற்றே!” என்றான் சோமன். ”போ, போ, வீண் பேச்சுப் பேசாதே!” என்று சோமனை விரட்டி விட்டான் ரங்கன்.
சோமன் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து மனம் வருந்தியவனாய் மரியாதைராமனிடம் சென்றான்.
“அய்யா, என்னுடைய தங்க மோதிரத்தை இரவல் வாங்கிக் கொண்டு தன்னுடையதுதான் என்று ரங்கன் சாதிக்கிறான்” என்றான் சோமன்.
மரியாதைராமன் ரங்கனை வரவழைத்து விசாரித்தபோது, “அய்யா இவன் பொய் சொல்கிறான். மோதிரம் என்னுடையதுதான்” என்றான்.
“நீங்கள் இருவரும் சொல்வதிலிருந்து உண்மையாகவே மோதிரம் யாருக்குச் சொந்தம் என்பது தெரியவில்லை. நாளைய தினம் நீங்கள் இரண்டு பேரும் சபைக்கு வாருங்கள். ஒரு மத்தியஸ்தரை வைத்து இந்த மோதிரத்தை உரைத்துப் பார்த்து இதன் மதிப்பைத் தெரிந்து கொள்ளலாம். மத்தியஸ்தர் மோதிரத்தின் மதிப்பு எவ்வளவு சொல்கிறாரோ அந்தத் தொகைக்கு மோதிரத்தை விற்று ஆளுக்குப் பாதியாக பகிர்ந்து கொள்ளுங்கள் என்றான் மரியாதைராமன்.
மறுநாள் ஒரு பொற்கொல்லர் சபைக்கு வர வழைக்கப்பட்டார். அவரிடம் மோதிரம் கொடுக்கப் பட்டது. அவர் அதை உரைகல்லில் வைத்துத் தேய்த்தார். இவ்வாறு தேய்க்கும்போது அவர் அதிகமாகத் தேய்ப் ஃபதைப் பார்த்துக் கொண்டிருந்த சோமன், “அய்யா என் மோதிரத்தை அதிகமாக உரைத்துத் தேய்க்கிறீர்களே!” என்று கதறினான்.
ரங்கனோ பேசாமல் இருந்தான். இதற்கு அடுத்தபடியாகப் பொற்கொல்லர் அந்த மோதிரத்தின் மதிப்பை மிகக் குறைவாகச் சொல்லிவிட்டார்.
பொற்கொல்லர் சொன்ன விலையைக் கேட்டதும் சோமன் துள்ளிப் பதைத்தான்.
“என்ன அநியாயம் இது! நான் வாங்கிய விலையில் கால்பங்கு கூட இல்லையே! இதுதானா நீங்கள் போடும் மதிப்பு?” என்று கூச்சலிட்டான்.
இதைக் கேட்ட மரியாதைராமன், ரங்கனைப் பார்த்து, ‘உண்மையாகவே இது உன்னுடைய மோதிரமாக இருந்தால் இந்நேரம் நீ பேசாமல் இருந்து கொண்டிருக்க மாட்டாய், உண்மையை வரவழைப்பதற்காக நான் தான் அதிகமாக உரைக்கச் சொல்லியும், மதிப்பைக் குறைத்தும் சொல்லச் சொன்னேன். இதில் இருந்து மோதிரத்திற்கு உரியவர் யாரென்று தெரிந்து விட்டது. சோமனை ஏமாற்றிய குற்றத்திற்காக ஒரு மாதம் சிறைத் தண்டனை உனக்கு அளிக்கிறேன். இந்த மோதிரத்தை சோமனுக்குத் திருப்பிக் கொடுக்கிறேன்” என்று தீர்ப்பளித்தான் மரியாதைராமன்.
– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |