மூன்று ரசிகர்கள் கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 2, 2026
பார்வையிட்டோர்: 886
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்
வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்
2. மந்தாரவதி கதை | 3. மூன்று ரசிகர்கள் கதை | 4. ஞானி சூஸ்திரவான் சூரன் கதை
மறுபடியும் விக்கிரமாதித்தன் முருங்க மரத்தை அடைந்து வேதாளத்தைக் கட்டிப் பிடித்துத் தன் தோள்மீது சுமந்து வரும்போது பின்வரும் கதையை வேதாளம் சொல்ல ஆரம்பித்தது:
அங்க தேசத்திலே, அந்தணர்களின் குடியிருப்பான விருக்ஷகடம் என்ற ஒரு பகுதி இருந்தது. அங்கே ஒரு சமயம் விஷ்ணுஸ்வாமி என்று ஒருவன் இருந்தான். அவனுக்கு நற்குல மங்கை ஒருத்தி மனைவியாக இருந்தாள். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். பிறக்கும் போதே அம்மூவரும் அபாரமான ரஸிகத்தன்மையை அடைந்திருந்தனர்.
ஒருநாள் பிதா ஒரு யாகம் செய்ய விரும்பினான். அதற்காகக் கடலிலிருந்து ஓர் ஆமையைப் பிடித்துவர மூன்று குமாரர் களையும் அவன் அனுப்பி வைத் தான். அவர்கள் அவ்விதமே சென்று ஒரு ஆமையைக் கண்டு பிடித்தார்கள். உடனே மூத்தவன் தன் தம்பியர் இருவரையும் பார்த்து, “இந்த ஆமையின் உடலெல்லாம் ஒரே வழுவழுப்பாக இருக்கிறது. என்னால் அதைத் தொட முடியாது. ஆகவே, உங்கள் இருவரில் யாராகிலும் இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான். உடனே தம்பிகள் இருவரும், ‘நீ அதைத் தொடுவதற்கு யோசித்தால் நாங்கள் மட்டும் தொடுவோமா?” என்று தமையனைப் பார்த்துக் கேட்டார்கள்.
இதைக் கேட்ட மூத்தவன், “நீங்கள்தான் இதை எடுத்துக் கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால், தந்தையார் செய்ய விருக்கும் யாகத்தை தடை செய்த பாபம் உங்களுக்குச் சம்பவிக்கும். தவிர, அந்தப் பாபம் அவரையும் பாதிக்கும்!” என்றான்.
இரண்டு தம்பிகளும் கலகலவென்று சிரித்தார்கள். “எங்களுடைய கடமை என்ன என்பதைப் பற்றி கூறும் நீ உன் கடமையை மறந்துவிட்டாயே? அதே கடமை உனக்கும் இல்லையா?” என்று தம்பிகள் கேட்டார்கள்.
“என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நான் எப்படிப்பட்ட ரஸிகன் என்பது உங்களுக்குத் தெரியாதா? சாப்பாட்டை ருசி பார்த்துச் சாப்பிடுவதிலே நான் சமர்த்தனாயிற்றே? அருவருப்பான ஒரு வஸ்துவை நான் எப்படித் தொடுவேன்?” என்று மூத்தவன் கேட்டான். நடுவில் பிறந்தவன், “பெண்களின் தராதரத்தை அறிந்து சொல்லக் கூடிய சாமர்த்தியம் வாய்ந்த நான் உன்னைக் காட்டிலும் உயர்ந்த ரஸிகன் ஆவேன்” என்றான். “அப்படியானால் கடைசித் தம்பி இந்த ஆமையை எடுத்துப் போகட்டும்” என்று மூத்தவன் சொன்னவுடனேயே “நான் படுக்கையின் சுகம் அறிந்தவன். ஆகவே, உங்கள் இருவரைக் காட்டிலும் நான் தான் உயர்ந்தவன்” என்று சொன்னான் கடைசிப் பையன்.
இவ்விதம் மூவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள். மமதை அதிகமாயிருந்ததால், யாரும் தாழ்ந்து போவதாக இல்லை. ஆகவே அவர்கள் ஆமையை அப்படியே போட்டுவிட்டு. விவாதத்தை அவ்வூர் அரசனிடம் தெரிவித்து முடிவைப் பெறக் கிளம்பினார்கள்.
அந்த நாட்டு ராஜாவான பிரசேனஜித் என்பவன் தன் விடங்கபுரியில் இருந்தான். அங்குள்ள தலைநகரான அரண்மனையை ரஸிகர்கள் மூவரும் அடைந்து, அரசனிடம் தங்கள் விவாதத்தை முறையிட்டுக் கொண்டார்கள். அதைக் கேட்ட ராஜனும். ”சரி. இவ்விடத்தில் தங்கியிருங்கள். ஒவ்வொருவரையும் பரீக்ஷித்துப் பார்க்கிறேன்” என்றான். அவர்களும் சம்மதித்து அங்கேயே தங்கினார்கள்.
சாப்பிடப் போகும் சமயத்தில் அன்றைக்கு ராஜா அம்மூவரையும் தன்னுடன் உட்கார வைத்து உபசரித்து அறுசுவையுடன் ராஜபோஜனம் அளித்தான். மற்ற எல்லோரும் சம்பிரமாகக் சாபபிட்டுக் கொண்டிருக்கும் போது சாப்பாட்டு ரஸிகன் மட்டும் எதையும் சாப்பிடாமல் அருவருப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். சமையல் நிரம்ப ருசியாக இருந்தும் அவன் ஏன் சாப்பிடவில்லையென்று அரசனே கேட்டபோது, “இந்த சாதத்தில் பிணத்தின் வாடை வீ சுகிறது. ஆகவே சாப்பாடு எவ்வளவுதான் ருசியாக இருந்தாலும் என்னால் அதைச் சாப்பிட முடியவில்லையே” என்று பதில் அளித்தான் போஜனசுகம் அறிவதில் நிபுணனானவன்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேர் எதிரிலும் அவன் அப்படிச் சொன்னவுடன், அரசன் உத்தரவுப்படி அவர்கள் ஒவ்வொருவரும் சாதத்தை எடுத்து முகர்ந்து பார்த்தார்கள். பிறகு, அரிசி கொண்டு அவர்கள் அனைவரும் “வெண்மையான தயாரிக்கப்பட்ட இந்த உணவு நல்ல மணம் உள்ளதாகவே இருக்கிறது” என்றனர். ஆனால் போஜன சுகம் அறிந்த அவனோ மூக்கைப் பிடித்துக் கொண்டு சாப்பிடவே மறுத்து விட்டான். நீண்ட நேரம் யோசனை செய்து விட்டு அரசன் விசாரித்த போது, அன்றைக்கு சமைத்திருந்த அரிசி ஏதோவொரு கிராமத்தின் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்த நிலத்தில் விளைந்தது என்ற உண்மை தெரிய வந்தது. இதையறிந்த மன்னன் ஆச்சரியத்தால் திகைத்துவிட்டான். உடனே மூத்தவனைப் பார்த்து, “உண்மையிலேயே நீ போஜன சுகத்தையறிந்த ரஸிகன் தான். அதிலே உன்னை வெல்லக்கூடிய நிபுணர்கள் இந்தப் பூலோகத்தில் இல்லை! ஆகவே, வேறு ஆகாரம் உட்கொள்ள வேண்டும்” என்று சொல்லி உபசரித்தான்.
சாப்பாடு முடிந்த பிறகு அரசன் அந்த ரஸிகர்களை அவர்கள் விடுதிக்கு அனுப்பிவிட்டான். அஸ்தமித்தவுடன் தன் பரிவாரத்திலே மிக்க அழகுள்ளவளாக இருந்த கணிகை ஒருத்தியைப் பொறுக்கி எடுத்து அதிலாவண்யமாக அவளைச் சிங்காரித்து, அவளை ஸ்திரீ சுகம் அறியும் ரஸிகனான இரண்டாவது சகோதரன் விடுதிக்கு அனுப்பினான். பூர்ண சந்திரன் போன்ற முகப்பொலிவுடன் அந்தப் பெண் அவன் அறையிலே நுழைந்தபோது, அவன் தன் மூக்கைப் பிடித்துக் கொண்டு இடது கையால் ஜாடை காட்டி அவளை வெளியே அழைத்துச் செல்லுமாறு உடன் வந்த ராஜசேவகர்களுக்குத் தெரிவித்தான்.
”அவளை அழைத்துச் செல்லுங்கள். உடனே செல்லாவிட்டால், நான் இறந்து விடுவேன். அவளிடமிருந்து வெள்ளாட்டு மொச்சு நாற்றம் வீசுகிறது” என்றான் ஸ்திரீ சுகம் அறிவதில் நிபுணன்.
அவர்கள் உடனே கணிகையை மன்னனிடம் சென்று நடந்ததை எடுத்துச் சொன்னார்கள். அரசன் தந்திரமான அழைத்துச் கேள்விகளால் அந்தக் கணிகையிடமிருந்தே அவளுடைய ஆதிப்பிறப்பு விருத்தாந்தத்தை விசாரித்த போது அவள் குழந்தையாக இருந்தபோது தாயும், செவிலியும் இல்லாமல் வெள்ளாட்டுப் பாலால் வளர்ந்தவள் என்பது தெரிய வந்தது.
மன்னனுக்கு மலைப்பு “இவனையும் விடச் சமர்த்தன் சப்தலோகங்களிலும் உண்டா?” இன்னும் அதிகமாயிற்று. என்று மன்னன் ஆச்சர்யத்துடன் ஸ்திரீ சுகம் அறிவதில் நிபுணனைப் புகழ்ந்தான்.
பிறகு நித்திரை சுகம் அறிவதில் வல்லவன் என்று கூறிய மூன்றாவது சகோதரனைக் கூப்பிட்டு, அவனுடைய ரஸிகத் தன்மையையும் பரீட்சிக்க முற்பட்டான். நன்றாக அலங்கரிக்கப்பட்ட பள்ளியறையிலே அவன் விருப்பப்படியே ஒரு கட்டிலில் மிக மிருதுவான ஏழு மெத்தைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு அவனைப் படுக்க வைத்தான் மன்னன். ஆயினும் பாதி ஜாமம் கழிவதற்குள்ளாகவே அந்த ரஸிகன் எழுந்து வலி பொறுக்க முடியாமல் அலறினான்.
பக்கத்தில் காவல் இருந்த அரசாங்க அதிகாரிகள் அவன் விலாவிலே ஒரு மயிர் பதிந்து அழுத்தியது போன்ற வளைந்த அடையாளம் ஒன்று இருக்கக் கண்டார்கள். உடனே அவர்கள் மகாராஜனிடம் ஓடிச் சென்று செய்தியை அறிவித்தார்கள். அரசனும் மெத்தைகளின் அடியில் ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதிக்க உத்திரவு அளித்தான். அவர்கள் அவ்விதமே ஒவ்வொரு மெத்தையாக எடுத்துச் சோதித்து வரும்போது மெத்தையொன்றில் ஒரு புஷ்பத்தோடு ஒட்டிக்கொண்டு ஒரு கேசம் டெப்பதைக் கண்டார்கள். அதை எடுத்துக் கொண்டு, அவர்கள் அந்த ரஸிகனையும் அழைத்துச் சென்று அரசனிடம் காட்டினார்கள். அவன் உடலிலே அடையாளத்தைக் கண்ட அரசன் திகைத்துப் போனான். ஏழு மெத்தைகளுக்கு அடியிலி ருந்த கேசம் ஏழு மெத்தைகளையும் தாண்டி எப்படி அழுந்தி பதித்திருக்க முடியும் என்பதை எண்ணி எண்ணி அரசன் அன்றிரவு முழுவதும் சரியாகத் தூங்கவில்லை.
மறுநாள் காலையில் அவன் அம்மூவருக்கும் அவர்களுடைய ரஸிகத்தன்மையை மெச்சி மூன்று லக்ஷம் பொன் சன்மானம் வழங்கினான். அவர்களும் ஆமையை மறந்து அரசன் சபையிலேயே தங்கி விட்டார்கள். தங்கள் தகப்பனார் செய்ய வேண்டிய யாகத்தைத் தடை செய்த தோஷம் தங்களுக்குக் கிட்டியதே என்றும் அவர்கள் கவலைப்படவில்லை.
இவ்விதம் வேதாளம் கதையை சொல்லிவிட்டு, விக்கிரமாதித்தனைப் பார்த்து, “ஓ! ராஜனே! போஜன சுகம். ஸ்திரீ சுகம். நித்திரை சுகம். ஆகிய இம்மூன்றிலும் முறையே சமத்தர்களான இம்மூவருள் எவனுடைய ரஸிகத்தன்மை அதிகமானது? எவன் அசகாய நிபுணன்?” என்று கேட்டது.
அதற்கு விக்கிரமாதித்த மகாராஜன் பின்வருமாறு பதில் சொன்னான்;
“போஜன சுகம் அறிந்தவனும். ஸ்திரீ சுகம் அறிந்தவனும் ஐம்புலன்களும் விழித்திருக்கும் நேரத்தில் புத்தியினாலே சான்னார்கள். சுயபுத்தி இல்லாமல் தூங்கும் போது அனுபவித்ததைச் சொன்ன நித்திரை சுக ரஸிகனே அசகாய நிபுணன்!”
இதைக் கேட்ட வேதாளம் முன் போலவே கட்டவிழ்த்துக் கொண்டு முருங்க மரத்தில் தொற்றிக் கொண்டது.
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.