மூன்று மகன்கள்




வரதராஜன் அடுத்த மாதம் சென்னை சிவில் ஏவியேஷன் துறையிலிருந்து சீனியர் கம்யூனிகேஷன் ஆபீசராக ஓய்வு பெற்றுவிடுவார். முப்பத்தைந்து வருடங்களாக தொடர்ந்து வேலை பார்த்துவிட்டு ஐம்பத்திஎட்டு வயதில் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பும்போது, மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
அவர் அலுவலகத்திற்கு நடந்து செல்லும் தூரத்திலேயே மீனம்பாக்கத்தில் பெரிய வீடு ஒன்றை சிவில் ஏவியேஷன் குவார்ட்டர்ஸில் கொடுத்திருந்தனர். அந்த வசதியான வீட்டை பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், மூன்று மாதத்தில் வரதராஜன் காலிசெய்து கொடுக்கவேண்டும்.
ஓய்வுபெறும் வருத்தத்தைவிட, அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டுமே என்கிற வருத்தம்தான் அவருக்கு அதிகம். அவரும் அவர் மனைவியும் அடுத்த மூன்று மாதத்திற்குள் வேறு வீடு பார்த்துச் செல்ல வேண்டும்.
அவருக்கு மூன்று மகன்கள். மூவரும் சென்னையில்தான் இருக்கின்றனர்.
மூவருக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்ததும் தனிக்குடித்தனம் சென்றார்கள். ஆனால் வரதராஜன் அவ்வப்போது அலுவலக விஷயமாக டெல்லி போகும்போது, ஒரு மரியாதைக்குகூட அம்மாவைக் கூப்பிட்டு சிலநாட்கள் தங்களுடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
அது வரதராஜனுக்கு உள்ளூர பெரிய வருத்தம்தான். ஆனால் அதை யாரிடமும் வெளிக் காட்டிக்கொண்டதில்லை. முதல் இரண்டு மகன்களும் நன்றாக படித்துவிட்டு பெரிய பெரிய கம்பெனிகளில் நல்ல பதவியில் இருக்கிறார்கள்.
மூன்றாவது மகனை மட்டும் நிறைய செல்லம் கொடுத்து வளர்த்ததினால் சரியாகப் படிக்காமல், ஏதோவொரு பெயர் தெரியாத ஒரு சின்ன நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் மனைவியுடன் கஷ்டப் படுகிறான்.
இதில் கசப்பான உண்மை என்னவென்றால், திருமணத்திற்குமுன் அம்மா, அப்பாவிடம் பாசமாக இருந்த மகன்கள், திருமணம் ஆனதும் முற்றிலும் மாறிவிட்டார்கள் என்பதுதான். அதற்கு காரணம் அவரது மகன்களின் புது மனைவிகளே… இந்தக் காலத்துப் பெண்கள் கல்யாணம் ஆனதும் தனிக்குடித்தனம் போகத்தான் துடிக்கிறார்கள். சரி, சிறிசுகள் தனிமையை விரும்புவது இயல்புதானே என்று நினைத்து அவர்களுக்கு தனிக்குடித்தனம் வைத்துக் கொடுத்ததும், புருஷனுடைய உறவினர்கள் – அது அவனின் பெற்றோர்களானாலும் சரி – வீட்டிற்கு வந்தால் அந்த இளம் மனைவிகளுக்கு ஒத்துக் கொள்வதில்லை. உடனே மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு அவர்கள் முகம் சின்னதாகி விடுகிறது. முகம் வாடிவிடுகிறது.
ஆனால் அவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் மட்டும் முகம் மலர்ந்துவிடும். பீச், பார்க், சினிமா, ஐஸ்க்ரீம் என்று தடபுடலாக அவர்களை கவனித்து அனுப்புவார்கள். புருஷர்களும் பூம் பூம் மாடு மாதிரி மனைவி சொல்வதற்கு தலையாட்டி அவளின் உறவினர்களுக்கு சேவை செய்வார்கள்.
வரதராஜன் குடும்பமும் இந்த மருமகள்களின் மூஞ்சி தூக்கல்களுக்கு விலக்கல்ல. நல்லவேளையாக அவர் நல்ல சர்வீஸில் பெரிய வீட்டுடன் குவார்ட்டர்ஸில் இருந்ததால் இந்த மருமகள்களை சட்டை செய்யாமல் ஒதுங்கியே இருந்தார். அதுகள் சந்தோஷமாக இருந்தால் சரி என்று தனக்குள் நினைத்துக் கொள்வார். .
சில சமயங்களில் இந்த மூன்றையும் பெண்ணாகப் பெத்திருந்தால் அவர்கள் பெற்றோர்களை பாசம் காட்டி மாய்ந்து மாய்ந்து கவனித்துக் கொள்வார்களே என்று தோன்றும். தவிர பெண்கள்தான் ஒரு வீட்டின் ஐஸ்வர்யம். நன்றாக வளர்க்கப்பட்ட ஒரு பெண் தன் பிறந்த வீட்டிலிருந்து உயரிய பண்புகளையும், கலாசாரத்தையும் புகுந்த வீட்டுக்கு கொண்டு செல்கிறாள். அதே நல்ல பண்புகளை புகுந்த வீட்டில் கடைப்பிடித்து அந்தக் குடும்பத்துக்காக உழைக்கிறாள். அதே நேரம் தன் பெற்றோர்களிடமும் பாசத்தை பொழிவாள் என்று அடிக்கடி நினைத்து தனக்கு பெண் குழந்தைகள் இல்லையே என்று ஏங்குவார்.
ராகவன் வெள்ளிக்கிழமை டிசம்பர் முப்பதாம்தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு ரிடையர்ட்மென்ட் பணம் லட்சக் கணக்கில் வந்து வங்கியில் குவிந்தது.
அவர் ரிடையர்ட் ஆனதுதான் தாமதம்…. மூத்த இரண்டு மகன்களும் அம்மா அப்பாவை தங்களுடன் வந்து தங்குமாறு போட்டி போட்டுக் கொண்டு அழைத்தனர். வரதராஜனுக்கு ஒரே ஆச்சரியம். இது என்ன புது பாசம் ! என்று வியந்தார்.
ஆனால் மூன்றாவது மகனிடமிருந்து எந்தவிதமான அழைப்பும் இல்லை. அதனால் அவனை போனில் அழைத்தார். “நீ மட்டும் ஏம்பா எங்களை கூப்பிடலை?” என்று ஆதங்கத்துடன் கேட்டார்.
“அப்பா, அண்ணனுங்க மாதிரி நான் பெரிய சம்பளம் வாங்கல. ரொம்ப கம்மியாத்தான் சம்பளம் வாங்கறேன். நீங்க வேலையில் இருக்கும்போதே அம்மாவையும் உங்களையும் என் வீட்டுக்கு கூப்பிடவும் சோறு ஆக்கிப் போடவும் எனக்கு நிறைய ஆசை இருந்தாலும் வசதி இல்லை.
“இப்ப வீட்டுக்கு வரச்சொல்லி உங்களை நான் கூப்பிட்டா, உங்களோட ரிடையர்மென்ட் பணத்துக்கும் பென்ஷனுக்கும் ஆசைப்பட்டு நான் கூப்பிடறதா ஆகிடும்…அதுனாலதாம்பா..” குரல் உடையச் சொன்னான்.
வரதராஜன் ஏண்டா அவனிடம் இதைக் கேட்டோம் என்று வருத்தப் பட்டார். ஏதோ அவர் மனதிற்கு புரிந்தமாதிரி உணர்ந்தார்.
அடுத்த ஒரு வாரத்தில் தன் வீட்டைக் காலிசெய்து, பணத்தாசை இல்லாத அந்த மூன்றாவது மகன் வீட்டுக்கே தன் மனைவியுடன் சென்று நிரந்தரமாக தங்கிவிட்டார். .