மூணு பொண்டாட்டி
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு தவக்காயிக்கு மூணு பொண்டாட்டி. யாராருண்டா? மாடப்புறா, பச்சக்கிளி, காக்காயி. இந்த மூணுவேரும், தவக்காயிக்கு மூணு சம்சாரம். இவங்கள, இங்க விட்டுட்டு, கதவால் இறுக்கிப் பூட்டிப் போட்டுட்டு, மருதையில சோலி இருக்ண்ட்டுப் போயிறது. மருதக்கி எதுக்குப் போகுது? அங்க ஒரு கட இருக்கு. தெனமும் அங்க போயிறது.
இந்த மாடப்புறா, பச்சக்கிளி, காக்காயி இந்த மூணும் எத்தன நாளக்கிப் பட்னியா கெடக்கும். இந்தக் காக்காண்டாலும் வெழஞ்ச காட்டுக்குச் சேம போயி, ரெண்டப் பெறக்கித் திண்ட்டு வந்திரும். பாவம், இந்த மாடப்புறாவும் – பச்சக்கிளியும் பட்னியா கெடக்குக.
அப்ப, இங்கிருந்து ஒரு ஆளு மருதக்கிப் போறாக. போகயில, அவங்களப் பாத்த மாடப்புறா, ஐயா!! நீங்க எங்க போறவகண்டு கேட்டுச்சு. அதுக்கு அந்த ஆளு ‘ஏம்மா? நா மருதைக்குப் போறேண்டு சொன்னாக’. சொல்லவும், எங்க வீட்டுக்காரு, அங்க இருக்காரு. அவருகிட்டப் போயி,
மாடப்புறா மாடப்புறா
மகராசன் கூட்டமெல்லாம்
சோத்துத் தண்ணிக்கு தட்டுப்பட்டு – எங்க
சோழ ராசன வரச் சொல்லுங்க-ண்டு.
சொல்லுச்சு. சொல்லவும் சரிம்மாண்டு சொல்லிட்டு அங்கிட்டுப் போறாக. போகயில, பச்சக்கிளி அங்கிட்டிருந்துகிட்டு, ஐயா!! நீங்க எங்க போறவக?ண்டு கேட்டுச்சு. கேக்கவும், நா மருதக்கி போறேம்மா. மருதக்கிப் போனேங்கண்ணா, எங்க. வீட்டுக்காரு அங்க இருக்காரு. அவருகிட்டப் போயி,
பச்சக்கிளி பச்சக்கிளி
பச்ச நடக் கூட்டமெல்லாம் ப்டி
சோத்துத் தண்ணிக்குத் தட்டப்போயி – எங்க
சோழ ராசன வரச் சொல்லுங்க-ண்டு.
சொல்லுச்சு. சொல்லவும், சரிம்மாண்டு சொல்லிட்டு, அங்கிட்டுப் போனாக. போகயில, ஒரு கம்மாக்கரயில இந்தக் காக்காயி ஒக்காந்துகிட்டு, ஐயா!! நீங்க எங்கே போறவகண்டு கேட்டுச்சு, கேக்கவும், நா மருதக்கிப் போறேம்மாண்டு சொன்னாரு. மருதக்கிப் போனேங்கண்டா,
காக்காயி காக்காயி
கருத்த நடக் கூட்டமெல்லாம்
சோத்துத் தண்ணிக்குத் தட்டப்போயி – எங்க
சொரித் தவக்காய வரச் சொல்லுங்-ண்டு.
சொல்லுச்சு, சொல்லவும், இந்த ஆளு போயி, ஒண்ணுவிடாம, இந்த மாடப்புறா, பச்சக்கிளி, காக்காயி சொன்னத அப்டியே தவக்காயிகிட்டச் சொல்லி விட்டுட்டாக.
சொல்லவும், இந்தத் தவக்கா, தவ்விக்கிட்டு ஓடி வருது. வந்து ஏ… மாடப்புறா!! நிய்யி என்னா சொன்ன? நா என்னா சொன்னே, எங்க சோழராசன வரச் சொல்லுங்க-ண்டு
சொன்னே. ஏ… பச்சக்கிளி!! நிய்யி என்னா சொன்ன? நா என்னா சொன்னே, எங்க சோழ ராசன வரச் சொல்லுண்டு சொன்னே. ஏ…காக்காயி!! நிய்யி என்னா சொன்ன? நானா? நானு,
காக்காயி காக்காயி
கருத்த நடக் கூட்டமெல்லா ன்
சோத்துத் தண்ணிக்குத் தட்டப்போயி எங்க
சொரித் தவக்காய வரச்சொல்லுங்க-ண்டு.
சொன்னே-ண்டு. சொல்லுச்சு, தவக்காயிக்கு கோவம் வந்திருச்சு. ஏ…காக்காயி! இப்ப எம் மொந்தாணிக் காலால மொதக்ணு எத்தவாண்டு தவக்காயி சொல்லுது. சொல்லவும் நிய்யி போறயா! மொந்தாணி மூக்ல மொதக்ணு குத்தவாண்டு சொல்லி, காக்காயி எதுத்துக்கிருச்சு.
அப்ப, இந்தத் தவக்கா எத்த, காக்கா கொத்த, கடசில தவக்காயத் தூக்கிட்டுப் போயி, கூரயில வச்சு, காக்கா திண்டுபிட்டு போயிருச்சாம். சரியாப் போச்சு. இவங்க ரெண்டு வேரும் முண்டச்சியா இருந்தாங்களாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.