முழுநிலவில் முதலிரவு!
கதையாசிரியர்: பி.டி.சாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 128
(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21
16. காதலில் ஒரு நாடகம்!

மறுநாள் காலையில் ராஜாமணியும் மாலினியும் ஜோடியாக மீனாவின் வீட்டிற்கு வந்தார்கள்.
மீனா வேலைக்குப் புறப்படுவதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவரையும் பக்கத்துப் பக்கமாகப் பார்த்தது அவளுக்கு என்னவோபோல் இருந்தது.
வீடு தேடி வந்திருப்பவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்க வேண்டும் என்ற நல்லெண்ணம் படைத்த மீனா, “வாருங்கள்.” என்று கூறி இண்டு நாற்காலிகளை இழுத்துப் போட்டாள்.
“வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக முன்னேற்றம் வந்திருக்கிறது போலிருக்கிறதே, பரவாயில்லை.” என்று சிரித்த ராஜாமணி, வீட்டை நாலா பக்கமும் பார்த்துவிட்டு, “மீனா சீக்கிரமாக பணக்காரியாகி விட்டாலும் ஆச்சரியப்படமுடியாது.” என்று சொன்னான்.
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் மீனாவின் நெஞ்சைக் குத்தின. ஆயினும் சமாளித்துக் கொண்டாள்.
“நான் பணக்காரியாகிவிட்டால்…?” என்று கூறிவிட்டுச் சிரித்த மீனா, “நேற்று நான் உங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது முதலாளி மகள் என்றுகூட பார்க்காமல் ஏதேதோ பேசிவிட்டேன். எதையும் மனதில் போட்டுக் கொள்ளாதீர்கள்.” என்று சொன்னவள் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
மாலினி முகத்தைத் தாழ்த்தியபடி ராஜாமணியை ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்தாள். “என் இருதயம் தாமரை இலையைப் போன்றது. தண்ணீர் அந்த இலையில் தங்குமா? அதைப்போல்தான் நீ சொன்ன வார்த்தைகளையும், பார்த்த வெறுப்பு கலந்த பார்வையையும் அப்பொழுதே மறந்துவிட்டேன். பொதுவாக தான் மனதாரக் காதலிக்கும் ஒருவனை இன்னொருத்தி கவர்ந்து கொண்டாள் என்றால் ஒருவிதமான ஆவேசம் வரத்தான் செய்யும். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் உன் ராஜாவுக்கு நான் தங்கை உடன் பிறக்காத அண்ணன் தங்கை என்று சொன்னால்கூட அது எங்களைப் பொறுத்த வரையில் பொருந்தும்.”
அவள் மனம் திறந்து உண்மையைத்தான் சொல்லுகிறாளா? அல்லது சென்னையில் சில ஆண்களும் பெண்களும் அண்ணன் – தங்கை என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டு திரைமறைவில் காதல் நாடகம் நடத்துகிறார்களே, அதைப் போன்றதாக இருக்குமா? மற்றப் பெண்கள் எப்படிப் பட்டவர்களாக இருந்தாலும், மாலினியைப் பொறுத்த வரையில் ஓரளவு நல்லவளாக இருப்பாள் என்றே மீனா நம்பினாள். ஆனாலும் பெண்களின் உள்ளத்தில் என்னென்ன இருக்கின்றது என்பது யாருக்குத் தெரியும்?
“மீனா, இப்பொழுது என் மீதுள்ள சந்தேகங்களெல்லாம் போயிருக்கும் என நினைக்கிறேன். என்னை ஓரளவு நம்பவும் செய்திருப்பாய்,” என்றாள் மாலினி.
“ஓரளவு அல்ல, முழுக்க முழுக்கவே நம்புகிறேன். என் முதலாளியின் மகளாகிய உங்களை நம்பாமல் வேறு யாரை நான் நம்புவேன்? திக்கற்ற எனக்கு வேலை கொடுத்து ஆதரிக்கிறீர்கள். தேவையான பண உதவிகளையும் அவ்வப்போது செய்கிறீர்கள்.”
“நான் கம்பெனி சார்பாக உன்னிடம் பேசவரவில்லை. ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்ற முறையிலேயே பேச வந்திருக்கிறேன். நம்முடைய பேச்சு நட்பு சூழ்நிலையிலேயே அமைய வேண்டும்.”
மாலினியின் பேச்சு பிடிகையுடன் அமைந்திருக்கவே மீனா, அவர்கள் இரண்டு பேர்களும் தன்னிடமிருந்து எதைத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்திருக்கிறார்களோ என்று தோன்றாமல் குழம்பினாள்.
“நட்பு சூழ்நிலை என்று நீங்கள் பேசுவதின் பொருள் எனக்கு விளங்கவில்லை. இதுவரையிலும் என்னை நீங்கள் எதிர்தரப்பு ஆளாகத் தான் மதித்து வந்தீர்களா?”
உடனே ராஜாமணி மாலினிக்காகப் பரிந்துகொண்டு பேசினான். “நட்பு சூழ்நிலை என்றால் சுற்றி வளைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்.”
மீனா தலையைத் தாழ்த்திக்கொண்டு, “எதை எதையோ பேசி என்னை மேன்மேலும் குழப்பத்திற்குள்ளாக்காதீர்கள்.” என்று சொன்னாள்.
“இனிமேல் மாலினியின் இருக்கமுடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. உன்னுடைய எச்சரிக்கையின் காரணமாக பயங்கர கண்டத்திலிருந்து தப்பினேன். உனக்கு நன்றி தெரிவிக்க நினைத்த போதிலும் என்னுடையவளாகிய உனக்கேன் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.”
“நீங்கள் நன்றி தெரிவிக்கவும் வேண்டாம். அந்த நன்றியை நான் ஏற்றுக் கொள்ளவும் வேண்டாம். நீங்கள் ‘என்னுடையவள்’ என்று சொன்னீர்களே, அது ஒன்றே எனக்குப் போதும். நான் இதுவரையிலும் அனுபவித்து வந்த துன்பங்களையெல்லாம் நொடிப் பொழுதில் மறந்து விட்டேன்.” என்று சொன்ன போது மீனாவின் உதடுகள் ஆசைப் பெருக்கினால் துடித்தன.
“மீனா, உன் ராஜாமணியை உன்னிடமே ஒப்படைத்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.” என்றாள் மாலினி நமட்டுச் சிரிப்புடன்.
என்ன பேசுவது என்று மீனாவுக்குப் புரியாததால் மெளனமாக நின்று கொண்டிருந்தாள்.
“ஏன் மீனா, நான் உன் வீட்டிலேயே தங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இதில் உனக்கு எந்தவிதமான ஆட்சேபனைகளும் இல்லையே?”
“ஆட்சேபனையா…? என் ராஜா என்னுடனேயே இருக்கப் போகிறேன் என்று சொல்லும்போது எனக்கென்ன ஆட்சேபனை இருக்கப் போகிறது? அதை என் பெருமையாகவே கருதுகிறேன். ஆனால்…”
“ஆனால் என்று பேச்சை இழுப்பது என்னை நேற்று மனிதனாகப் பாவிக்கிறாய் என்று தான் பொருள். உண்மையான அன்பு இருந்தால் மறுவார்த்தையே பேசமாட்டாயே.”
“நான் இப்பொழுதும் மறுவார்த்தை பேசவில்லை. ஆனால் நான் கல்யாணமாகாத பெண். நாம் இரண்டு பேர்களும் ஒரே வீட்டில் தங்கினால் பார்ப்பவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்?”
ராஜாமணி அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு, “பார்ப்பவர்களைக் கண்டு நீ பயப்படுவதாக இருந்தால் நாளைக்கே முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம். எனக்காகவே தான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக பலமுறை சொல்லியிருக்கிறாயே! மாலினி முன் நின்று நம் கல்யாணத்தை ‘ஜாம் ஜாம்’ என்று நடத்தி வைப்பார்கள். எப்படியும் நானும் நீயும் இனிமேல் தனித்தனியாகப் பிரிந்திருக்கக்கூடாது. ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்த வேண்டும்.” என்று சொன்னவன், அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை அறியும் பொருட்டு ஆவலுடன் அவளைப் பார்த்தான்.
மாலினியும் கண்களை இமைக்காமல் அவளையே கவனித்துக் கொண்டிருந்தாள். இரண்டு பேர்களுமாகச் சேர்ந்து மீனாவிடம் ஒரு நாடகமாட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டம் போட்டிருந்தார்கள்.
மீனாவின் முகம் முழுவதும் வியர்வை அரும்பியிருந்தது. என்ன பேசுவது என்று தோன்றாதவளைப்போல் தத்தளித்தாள். உதட்டைப் பிதுக்கிக் கொண்டு தடுமாற்றம் அடைந்தாள்.
“ஏன் மீனா யோசிக்கிறாய்? இதுவரையிலும் என்னிடம் காட்டியது எல்லாமே போலி நடிப்புத்தானா? காதல் என்று சொன்னதும், போலி நடிப்புத்தானா? என்ன யோசிக்கிறாய்? முடியாது என்று சொன்னால் உன்னைக் கட்டாயப்படுத்தப் போவதில்லை. எதைப் பேசுவதாக இருந்தாலும் வெளிப்படையாகவே கூறலாம்.” என்று அவசரப் படுத்தினான் ராஜாமணி.
மீனா தவித்துத் தத்தளித்து பிட்டு, “நான் உங்களைப் போல் எந்த ஒரு விஷயத்திலும் படபடப்படைய மாட்டேன். நாம் இரண்டு பேரும் நிச்சயமாகக் கல்யாணம் செய்து கொள்ளத்தான் போகிறோம். அதற்காக அவசரப்பட்டுவிடக்கூடாது. நல்ல நாள் பார்க்க வேண்டாமா? நிச்சயதாம்பூலம் செய்ய வேண்டாமா? வேண்டியவர்களை யெல்லாம் வரவழைத்து விருந்து கொடுக்க வேண்டாமா? மேலும் இது மாசி மாதம். இந்த மாதத்தில் யாராவது கல்யாணம் செய்வார்களா? சித்திரை பிறக்கட்டும். நாம் சிறப்பான முறையில் கல்யாணம் செய்து கொள்ளலாம்.” என்று ஒரே மூச்சில் பேசி முடித்தாள்.
“ஆல்ரைட்! நீ என்றைக்கு சரி என்று சொல்கிறாயோ, அன்றைக்கே திருமணம் செய்து கொள்கிறேன்” என்று வெறுப்புடன் சொன்ன ராஜாமணி, “வழக்கம் போல் உன்னைப் பார்ப்பதற்கு இங்கே வரலாம் அல்லவா? அதற்கொன்றும் தடையில்லையே” என்றான்.
“நீங்கள் பகலில் எப்பொழுது வேண்டுமானாலும் வாருங்கள்.”
“ஆமாம், ஆமாம். இரவில் நான் ஏன் வீட்டுப்பக்கம் வரக் கூடாது? வந்தால் உனக்கு இடைஞ்சலாக இருப்பதுடன், உன் நல்ல பெயருக்கும் களங்கம் வந்துவிடும். பக்கத்து வீட்டுக்காரர்கள் உன் நடத்தையைப் பற்றிச் சந்தேகிக்கவும் செய்துவிடுவார்கள்.” என்று கிண்டலாகச் சொன்ன ராஜாமணி, “காதலியைச் சந்திப்பதற்கு இரவு மட்டும்தான் நல்ல நேரமா என்ன? நான் பகலிலேயே வருகிறேன்.” என்று கூறியவுடன், மாலினியையும் அழைத்துக்கொண்டு புறப் பட்டான்.
மீனாவின் உள்ளம் எப்படிப்பட்டது என்பதையோ, அந்த உள்ளத்தில் என்னென்ன மறைந்து கிடக்கின்றன என்பதையோ ராஜாமணியால் தெரிந்து கொள்ள முடியவில்லை. சமீபத்தில் அவள் நடை உடை பாவனைகள் முற்றிலுமே மாறுபட்டிருப்பதை உணர்ந்தான். குறிப்பாக அவள் இரத்தக்கறையுடன் ஓடிவந்து சைக்கிளில் மோதியபிறகு அவள் பழைய மீனாவாக இருக்கவில்லை.
அந்த மீனா சிரிப்பாள். அந்தச் சிரிப்பில் பெண்மைக்குறிய அடக்கம் இருக்கும். ‘ராஜா ராஜா’ என்று ஆசை ஆசையாகக்கூப்பிடுவாள். அன்பையெல்லாம் அள்ளித்தந்து பேசுவாள்.
பழைய மீனாவையும், புதிய மீனாவையும் கற்பனை செய்து பார்ப்பதற்கே ராஜாமணிக்கு வருத்தமாக இருந்தது.
கண்ணபிரானின் கொலைதான் அவளை இந்த அளவுக்கு மாற்றிவிட்டதா? அவளுடைய வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து போகிறவர்கள் எல்லாம் அந்தக் கொலையுடன் தொடர்பு உடையவர்களாகத்தான் இருப்பார்களா?
“மாலினி, மீனாவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.” பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா?
இரண்டு பேர்களும் பக்கத்துப் பக்கமாக நடந்தவாறு பேசிக் கொண்டே சென்றார்கள். சைக்கிள் தான் நடுவே இருந்து இரண்டு பேர்களையும் தனித்தனியாகப் பிரித்தது
‘மீனா எங்கள் கம்பெனியில் வேலை பார்க்கிறாள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். அவள் பெண்களுடன்கூட அதிகப்படியான தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. தனியாகவே போவாள், தனியாகவே வருவாள்.”
“அவளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறேன்”
“ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண்ணாக இருப்பாள் என்றே நினைக்கிறேன். ஆனாலும் எந்த ஒரு முடிவுக்கும் வருவது மிகவும் கடினமாக இருக்கிறது.”
“லதா கம்பெனிக்கு வேலைக்குப் போவதை அடிக்கடி நான் பார்த்திருக்கிறேன். சில நாட்களில் அவள் நடந்து போவாள். வேறு சில நாட்களில் அவளை ஏற்றிச் செல்வதற்கு ஜீப் கார் வரும். ஜீப் காரில் அவள் ஏறிச் சென்றதை பல நாட்களில் பார்த்திருக்கிறேன். அந்த அளவுக்கு பெரிய வேலையாக லதா பார்க்கிறாளா? உங்கள் கம்பெனியைப் பற்றி என்னை விடவும் அதிகமாக தெரிந்து வைப்பீர்களே…!”
“எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது. இனிமேல் வேண்டுமானால் அவள் என்ன வேலை செய்கிறாள் என்பதையும் கவனிக்கிறேன்.” என்று சொன்ன மாலினி, “இப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நேராக வீட்டுக்கே போகிறீர்களா?” என்று கேட்டாள்.
“உங்கள் சித்தப்பாவை தனிமையில் சந்தித்து சில விஷயங்கள் பேசவேண்டியிருக்கிறது. அவருடைய எண்ணத்தைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இப்பொழுது இருக்கும் வீட்டிலேயே தங்குவதா? அல்லது வேறு எங்கேயாவது போய் தங்குவதா என்ற முடிவுக்கு வருவேன்” என்றான் ராஜாமணி.
“அப்படியானால் நான் முதலில் போகிறேன். நான் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த ஐந்து நிமிடங்கள் கழித்து நீங்கள் வாருங்கள். நாம் இரண்டு பேர்களும் ஜோடியாக நடந்து செல்லும் காட்சியை குமார் மாப்பிள்ளை பார்த்தால் அவ்வளவுதான்.” என்று மாலினி சிரித்ததும், அவள் சொன்னதின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு ராஜாமணியும் சிரித்தான்.
இரண்டு பேர்களும் நீண்ட நேரம் வரையில் மனம் விட்டு பேசிக்கொண்டே இருந்தார்கள். உள்ளத்தில் ஒளிந்து கிடந்தவை எல்லாம் வார்த்தைகளாகப் பீறிட்டுக்கொண்டு வந்தன.
சுருட்டு ஒன்று புகைத்தவாறு மாடிப்படிகள் வழியாக இறங்கி வந்த குபேரன் அமைதி இல்லாமல் தத்தளிக்கிறார் என்பதை அவருடைய முகமே படம் பிடித்துக் காட்டியது. எதிரில் வந்து கொண்டிருந்த சமையல்காரன் வாசுவின் மீது மோதிய பிறகு தான் இந்த உலகத்தில் நடமாடுவதைப் போன்ற காட்சி உணர்ச்சி ஏற்பட்டது. அவர் குற்றம் செய்துவிட்டதைப் போல் நிமிர்ந்து பார்த்தார்.
“எஜமான், மீனா என்று யாரோ ஒரு பெண் உங்களைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறாள். உங்களை அவசரமாகப் பார்க்கவேண்டுமாம்.” என்று சொன்னான் வாசு.
“மீனாவா…? அவள் இங்கேயே வந்துவிட்டாளா? மாலினி பார்த்துவிட்டால் என்னாவது? ஏற்கெனவே எனக்கு ஓராயிரம் கெட்ட கெட்ட பெயர்கள்.” என்று பதறிய குபேரன் புத்துணர்ச்சி பெற்றவன் போல் வேகமாக இறங்கி ஓடினார்.
ஹாலில், மீனா தாவணியின் நுனியை இழுத்து கழுத்தோடு சேர்த்து நெஞ்சகத்தை மறைத்து முடியவாறு அமைதியே உருவான சிலையைப்போல் நின்று கொண்டிருந்தாள். ‘களை’ என்பதே அந்த முகத்தில் இல்லை.
வேகமாக வந்த குபேரன், “மீனா நீயா? இங்கே ஏன் வந்தாய்? இந்த வீட்டின் பக்கமே வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்லி யிருக்கிறேன். நீ இங்கே வந்து நிற்பதை மாலினி பார்த்தால் என்னாவது? நம்முடைய உறவை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டினால்தான் உனக்கு நிம்மதி ஏற்படுமா?” என்று சீறினார். கால்கள் தரையில் பற்றவில்லை
மீனா பொங்கி வழிந்த கண்ணீரை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டு “இந்த வீட்டின் பக்கமே வரக்கூடாது, யாருக்கும் எந்த விதமான தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக என் மனப்பூர்வமாக வருந்துகிறேன். இனிமேல் இந்த வீட்டுப் பக்கமே வரமாட்டேன். நான் இங்கே வருவது இதுதான் கடைசி தடவையாக இருக்கும்” என்று சொன்னவள், துயரமாக எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை அவர் கையில் கொடுத்தாள்.
“லவ் லெட்டரா?” என்று கேட்டுவிட்டு அதை வாங்கி பிரித்து படித்த குபேரன் அமைதியில்லாமல் தத்தளித்துவிட்டு அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். எத்தனையோ விதமான மாற்றங்கள் அவள் முகத்தில் ஏற்பட்டன,
”மீனா, இவ்வளவு சீக்கிரத்தில் இப்படி எனக்குத் துரோகம் செய்ய முன்வருவாய் என்பதை நான் நினைத்துக்கூடப் பார்க்க வில்லை. உன்னை எவ்வளவோ நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையை வீணாக்கிவிட்டாய். இப்படியொரு முடிவுக்கு வருவதற்கு உனக்கு சரியாக இருக்கிறதா?” என்று கூறியவர் அந்தக் கடிதத்தைக் கிழித் தெறிந்தார்.
“என் மனதுக்குச் சரி என்று பட்டிருப்பதால்தான் உங்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்”
“ஒதுங்கிக்கொள்வதா? அது அவ்வளவு எளிதில் நடந்து விடும் என்று நினைக்கிறாயா? நான் உயிருடன் இருப்பது வரையில் அது நிச்சயமாக முடியாது. நீ எனக்குச் செய்த சத்தியங்களையெல்லாம் மறந்து விட்டாய்? நீ கேட்டபோதெல்லாம் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தேனே! உன்னை ஓரளவு வசதியாக வாழவும் வைத்திருக்கிறேனே! எல்லாவற்றையும் தேய்ந்து போன கனவுகளாக நினைத்து விட்டாயா?” என்று கெஞ்சுவதைப் போல் சொன்ன குபேரன், கடைசியில் குரலில் கனத்தைத் தேக்கிக்கொண்டு, “நீ என்னுடன் இருந்தேதான் ஆகவேண்டும். அதில் எந்தவிதமான மாற்றத்தையும் அனுமதிக்க முடியாது.” என்று சொன்னார்.
“நீங்களே இப்படிச் சொன்னால் என்னால் என்ன செய்ய முடியும்? ஏற்கெனவே நான் குழம்பிப்போயிருக்கிறேன். இந்த உலகத்தில் வாழுவது அவசியம்தானா என்று நிந்திக்கும் அளவுக்கு எனக்கு விரக்தி ஏற்பட்டிருக்கிறது. உயிரை மாய்த்துக்கொள்ளலாமா, என்றுகூட சில வேளைகளில் நினைக்கிறேன்” என்று சொன்ன மீனா குலுங்கிக் குலுங்கி அழுது கண்ணீர் வடித்தாள். அவளுடைய நெஞ்சுக்குள் இடி இடித்தது.
ஆனால் அவளுடைய கண்ணீரைக் கண்டு கல்நெஞ்சக்காரரான குபேரன் கலங்க வேண்டுமே!
“என்னை விட்டுப் போவேன் என்று நீ சொல்லுகிறாயே, அதைவிட ‘உயிரை மாய்த்துக்கொள்ளலாமா என்று நினைக்கிறேன்’ என்று சொல்லுகிறாயே, அது எள்வளவோ மேலானது. உன் பிணத்தைக்கூட என்னைவிட்டுப் பிரிக்க முடியாது என்றால் அதைவிட வேறு விளக்கம் வேண்டியதில்லை நானும் நீயும் இணைந்து வாழ்ந்தால் அப்பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியைப் போன்றது வேறு எதுவுமே இருக்கமுடியாது.”
குபேரன் உரத்த குரலில் சொன்ன அதே நேரத்தில், “அங்கே என்ன சித்தப்பா…? வீட்டையே சந்தைக்கடையாக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே!” என்று கேட்டுக்கொண்டே மாலினி வந்தாள்.
அவளைக் கண்டதும் மீனா தலையைத் தாழ்த்தியவாறு வேகமாக நடந்து சென்றாள். அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தெம்பும், துணிவும் மீனாவுக்கு இல்லை. மாலினி தன்னைப் பற்றி என்ன நினைத்துக்கொள்வாளோ என்ற பயம் இருக்கத்தானே செய்யும்.
“என்ன சித்தப்பா இது? ஏன் பேசாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்து விட்டீர்களா?” என்று அவள் எரிந்து விழுந்தாள்.
குபேரன் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டு, “மீனா, நம்முடைய கம்பெனியில் வேலை செய்யக்கூடியவள். லீவு வேண்டும் என்று கேட்டாள். இப்பொழுது முடியாது என்று சொல்லிவிட்டேன்.” என்று சொன்னார் நயவஞ்சகமாக.
“நீங்கள் என்னதான் சொன்னாலும் அதைக்கேட்டு நான் திருப்தி அடையும் நிலையில் இல்லை. நிர்வாகம் ஒழுங்காகவும், நல்ல முறையிலும் நடைபெறவேண்டும். கம்பெனியின் நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட இந்த மாலினி சம்மதிக்கவே மாட்டாள்” என்று சீறிய மாலினி வேகமாகச் சென்றாள்.
அவள் என்னமாய் முகத்தை வைத்துக்கொண்டு பேசிவிட்டாள்! குபேரன் அதிரச்சியடைந்த போதிலும் அவளை விரைவில் ஒழித்துக் கட்டிவிடலாம் என்ற எண்ணத்துடன் அமைதியடைந்தார். மாலினியால் தன்னை என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியமான போக்கு அவரிடம் இருந்தது. திமிர் தலைதூக்கியது
அவர் குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தபோது, “வரட்டுமா ஸார்?” என்று கேட்டுக்கொண்டே ராஜாமணி வந்து எதிரில் நின்றான்.
குபேரன் திடுக்கிட்டபோதிலும் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, “உன் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டு இப்படியெல்லாம் கலாட்டா செய்கிறாய் என்று தெரியவில்லை உத்தரவில்லாமல் வீட்டினுள் நுழைவதும், பாட்டுப்பாடி கூப்பாடு போடுவதும், என் மகளைக் கூட்டிக்கொண்டு அலைவதும் நன்றாக இல்லை. அதன் பிறகு நான் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்படும்.” என்று மிகவும் கடுமையாக எச்சரித்தார். கிடா மீசையைத் திருகிக்கொண்டு கண்களை உருட்டினார்.
“நான் வேடிக்கையாக நினைத்துதான் அப்படி நடந்து கொண்டேன், வேறு எவ்விதமான கெட்ட எண்ணமும் இல்லை.” என்று சொன்ன ராஜாமணி “நான் பேப்பர் போடும் வேலையை விட்டு விடலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறினான்.
“இப்பொழுதுதான் பிழைக்க வேண்டும் என்ற புத்தி உனக்கு வந்திருக்கிறது. நீ வேலை தேடும் நோக்கத்துடன் வெளியூர் போய் விட்டால் மிகவும் நன்றாக இருக்கும்” என்றார் குபேரன்,
“நான் வெளியூருக்குப் போவதாக இருந்தால் இந்தப் பிரச்சினையை உங்களிடம் கிளப்பியிருப்பேனா? உங்கள் கம்பெனியில் எனக்கு ஏதாவது ஒரு வேலை போட்டுக் கொடுங்கள்” என்றான் ராஜாமணி நயமாக.
அவன் சொன்னதைக் கேட்டதும் குபேரன் எழுந்து நின்று ‘கடகட’வென்று சிரித்து விட்டு, “நீ பேப்பர் போடக்கூடிய பெரிய ஆபீசர். உனக்கெல்லாம் எங்கள் கம்பெனி வேலை ஒத்து வருமா? மேலும் உன்னைப் போன்ற குறும்புத்தனம் கொண்டவர்களுக்கு வேலை கொடுப்பதும் இல்லை. வேலை கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கம்பெனியை இழுத்து மூடிவிட்டு காவி கட்டிக்கொண்டு காசிக்குப் போகவேண்டியதான்” என்று குத்தலாகச் சொன்னார்.
ராஜாமணி ஏதேதோ சொல்லிப் பார்த்தும் பயன் கிடைக்காமல் போகவே, “மாலினி சிபார்சு செய்தால் வேலை கொடுப்பீர்களா?” என்று மெதுவாகக் கேட்டான். அதிலும் குறும்புத்தனம் தலை தூக்கியது. அதைக் கேட்ட குபேரனுக்கு எல்லையற்ற கோபம் வந்து விட்டது தரையில் நிற்கமுடியாமல் துள்ளினார்.
“கடவுளே நேரில் வந்து சிபார்சு செய்தாலும் நீ எங்கள் கம்பெனி பின் பக்கம்கூட வரமுடியாது.” என்று அவர் ஆணவத்துடன் கொந்தளித்தார்.
அவரிடம் பேசிக்கொண்டிருப்பது பயனற்றது என்பதைப் புரிந்து கொண்ட ராஜாமணி தீர்மானமான எண்ணத்துடன் வெளியே போனான்.
மாலினி தன்னைப் பின்தொடர்ந்து வருவாள் என்று ஆவலோடு எதிர்பார்த்தான். அவள் ஏனோ வரவில்லை. அவளும் அந்தச் சாக்கடையில் கலந்து விட்டாளோ!
17. விளக்குகள் பலவிதம்!
குபேரன் அண்டுகோ ஊறுகாய் கம்பெனி கிண்டிக்குப் போகும் வழியில் சைதாப்பேட்டைக்கு அப்புறம் இருந்தது. இதன் நாற்புறமும் ஓர் ஆள் உயரத்திற்கு கருங்கல் சுவாகள் எழுப்பப்பட்டி ருந்தன. உள்ளே என்ன நடக்கின்றன என்பதை மற்றவர்கள் பார்க்கக் கூடாதோ!
மாலினியும் ராஜாமணியும் டாக்சியில் வந்து காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்தி இறங்கினார்கள்.
இதற்கு முன்னால் மாலினி இரண்டுடொரு தடவை அவளுக்குச் சொந்தமான பெரிய காரில் வந்திருக்கிறார்கள். அவளுடன் குபேரனும் வந்திருக்கிறார். இப்பொழுது வாடகைக் காரில் அவள் வந்திருப்பது இதுதான் முதல் தடவை. அதிலும் வாலிபன் ஒருவனுடன் வந்திருப்பதை பார்ப்பவர்களை எல்லாம் வியப்படையச் செய்தது.
வாசலில் காவலுக்காக நின்று கொண்டிருந்த கூர்க்கா மாலினி இன்னார் என்று அடையாளம் தெரிந்து கொண்டு ‘சல்யூட்’ அடித்த போதிலும், ராஜாமணியை உள்ளே அனுமதிக்க மறுத்தான்.
அவனுடைய செய்கையைக் கண்டு ஆத்திரமடைந்த மாலினி, “ஏய் கூர்க்கா, என்னிடமே உன் அதிகாரத்தை செலுத்துகிறாயா? டிஸ்மிஸ் செய்து விடுவேன் ஜாக்கிரதை” என்று மிரட்டினாள்.
அந்தக் கம்பெனியின் எஜமானி அவள்தானே! அவளுக்கில்லாத அதிகாரம் இந்த உலகத்தில் வேறு யாருக்கு இருக்க முடியும்?
ராஜாமணி ‘திருதிரு’ என்று விழித்துக்கொண்டிருந்தான்.
கூர்க்கா வாயைப் பொத்திக்கொண்டான். குபேரன் அண்டு கோவுக்கு மாலினிதான் உரிமையாளர் என்பது அவனுக்கு மட்டுமல்ல, எல்லா தொழிலாளர்களுக்குமே தெரியும்
“வாருங்கள் மிஸ்டர் ராஜா, நாம் போய் ஒவ்வொரு பிரிவுகளாகப் பார்த்துவிட்டு கடைசியாக மீனாவையும் சந்திக்கலாம். உங் கள் எதிர்கால மனைவியான அவள் என்ன வேலை செய்கிறாள் என்பதை நேருக்கு நேராகவே நீங்கள் தெரிந்து கொள்ள வோண்டாமா?” என்று அவள் சொன்ன போது கூடவே குறும்புத்தனமும் கொடிகட்டிப் பறந்தது.
மாலினி வினயமாகச் சிரித்ததும், ராஜாமணி சண்டை நடந்தாலும், நயவஞ்சமாக ஆபத்து நிகழுவதாக இருந்தாலும் சமாளிப்பதற்கு தன்னைத் தயார் செய்து கொண்டு அவள் பின்னால் போனான். நேர்மையான முறையில் தொழில் தோன்றவில்லை. ஏதோ ஒரு பயங்கரம் உறைந்து கிடப்பதைப் போன்ற எண்ணமே மேலிட்டது.
தொழிற்சாலை மானேஜர் சதாசிவம், மாலினியையும், ராஜாமணியையும் பார்த்ததும் திடுக்கிட்டு “மன்னிக்க வேண்டும் பாப்பா. வெளியாட்களை இங்கே அனுமதிப்பதில்லை.” என்று கூறி ராஜாமணியைத் தடுத்து நிறுத்தினார்.
“ஏன் வெளியாட்களை அனுமதிப்பதில்லை? நாம் நேர்மையான முறையில் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றுத்தானே தொழில் நடத்துகிறோம்.” என்று கண்டிப்பதைப் போல் சொன்னாள் மாலினி.
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. மானேஜிங் டைரக்டரான மிஸ்டர் குபேரன் யாரையும் எக்காரணத்தைக் கொண்டும் உ ள்ளே அனுமதிக்கக்கூடாது என்று மிகவும் கண்டிப்பான முறையில் உத்திரவு போட்டிருக்கிறார்; தனியாக நீங்கள் வந்திருப்பதால் உத்திரவு உங்களுக்குகூடப் பொருந்தும். தயவுசெய்து இவரைக் கூட்டிக் கொண்டு போய் விடுங்கள். உங்கள் சித்தப்பா வரக்கூடிய நேரம் ஆகி விட்டது. வந்து உங்களைப் பார்த்து விட்டால் என்னை உடனே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்.” என்றார் தொழிற்சாலை மானேஜர் சதாசிவம், மிகவும் கண்டிப்பாக.
“நான் யாரிடமும் அனுமதி வாங்கவேண்டிய அவசியம் இல்லை.’ என்று சொன்ன மாலினி, ராஜாமணியையும் அழைத்துக்கொண்டு உள்ளே போனாள்,
அவர் ‘திருதிரு’ என்று விழிக்கலானார்.
உள்ளே ஏராளமான விசாலமான அறைகள் இருந்தன. அந்த அறைகளில் வரிசை வரிசையாக உட்கார்ந்து பலவிதமான ஊறுகாய் தினுசுகளை அரிந்து கொண்டிருந்தார்கள்.
சில அறைகளில் ஊறுகாய்களை பாட்டில்களில் நிரப்பி ‘சீல்’ வைத்துக்கொண்டிருந்தார்கள்.
எல்லா அறைகளிலும் சென்று பார்வையிட்ட ராஜாமணி, “மீனாவை எங்குமே காணமுடியவில்லையே.” என்று சொன்னதும், மாங்காய் ஊறுகாய்க்கு உப்பு போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் மாலினி விசாரித்தாள்.
“அவள் பார்சல் செக்ஷனில் வேலை செய்கிறான்” என்று சொன்ன அந்தப் பெண்மணி அந்த அறையை நோக்கி சுட்டிக் காட்டினாள்.
உடனே மகத்தான வெற்றி கிடைத்து விட்டதைப்போல் உற்சாகமடைந்த ராஜாமணியும் மாலினியும், சாத்தப்பட்டுக் கிடந்த அந்த அறையை நோக்கி விரைவாக நடந்தார்கள். மீனாவின் மர்மம் துலங்கும் நேரம் சமீபத்தில் நெருங்கி வந்துவிட்டது.
அறைக் கதவுக்குமேல் சிவப்பு விளக்கு ஒன்று பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. அதன் அடியில் ‘தொடாதே அபாயம்’ என்ற எழுத்துக்கள் பளிச்சிட்டன.
ராஜாமணி அந்த எழுத்துக்களையும், சிவப்பு விளக்கையும் யார்த்தவுடன் என்ன செய்வது என்று தோன்றாமல் நின்றான். இதற்கு முன்னால் இந்த அறையின் பக்கத்திலேயே வந்திராததால் மாலினியும் விழித்தாள்.
அதே சமயத்தில் கூர்க்கா ஒருவன் ஓடிவந்து “ஜாவ்…ஜாவ்.நா சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும்போது இந்த அறையின் பக்கமே வரக்கூடாது. உயிருக்கே ‘டேஞ்சர்’ வந்துவிடும்” என்று இரைந்தான்.
அந்தக் கதவில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதையும், அந்த அறையினுள் சட்ட விரோதமான செயல்கள் நடக்கக்கூடும் என்பதையும் ராஜாமணி தெரிந்து கொண்டான். ஆனால் அது என்ன தொழில் என்றுதான் அவனுக்குப் புரியவில்லை.
“எதனால் உயிருக்கு டேஞ்சர் ஏற்படும்……! மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாத ஆட்சமத்தொழில் ஒன்றும் இங்கே நடை பெறவில்லையே” என்று ராஜாமணி சந்தேகத்துடன் கேட்டுக்கொண்டிருந்த போதே, “கூர்க்காவிடம் என்ன பேச்சு…? என்னைக் கேட்டால் நான் சொல்கிறேன்” என்ற அழுத்தமான குரல் கேட்டது.
ராஜாமணியும், மாலினியும் திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தார்கள்.
குபேரனும் கையாள் முக்கனும் வேகமாக வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய நடையில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. சாய்ப்பதற்கு அவர்கள் தயாராகி விட்டார்கள் போலும்.
மானேஜர் சதாசிவம் டெலிபோன் செய்து விஷயத்தைத் தெரியப்படுத்தி இருக்கவேண்டும் என்று எண்ணிய ராஜாமணி, “உங்கள் தொழிற்சாலையில் எப்படி ஊறுகாய் தினுசுகள் தயாரிக்கிறார்கள் என்பதை நேரிலேயே தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வம் ஏற்பட்டது. வந்துவிட்டோம்” என்று சொன்னான்.
குபேரன் தன்னுடைய கோப உணர்ச்சிகளைக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல் சிரித்தார். ஆனால் அந்தச் சிரிப்பின் பின்னணியில் ஒரு பயங்கரம் மின்னுவதை ராஜாமணியால் தெரிந்து கொள்ள முடிந்தது.
“என்னம்மா மாலினி, நீயா இப்படி பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்கிறாய் என்பதை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. எத்தனையோ கார்கள் இருக்கும் போது நீ சாதாரண வாடகைக் காரில் வரலாமா? நம்முடைய அந்தஸ்து என்னாவது? இங்கே இருக்கும் வேலைக்காரர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள்…?” என்று உரிமையுடன் மாலினியைக் கண்டித்த குபேரன், “நீங்கள் இரண்டு பேர்களும் இப்படி நடந்துகொள்வீர்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானே இங்கே அழைத்து வந்து எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பித்திருப்பேன்.” என்று அமைதியாகச் சொன்னார் எல்லாமே போலி நடிப்பு.
அவருடைய திடீர் மாற்றம் புரிந்துகொள்ள முடியாத புதிராக தோன்றியது. அவர் வந்த வேகத்தை கவனித்த போது ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று ராஜாமணி நினைத்திருந்தான். அவன் நினைத்ததற்கு மாறுதலாக இப்போது இருந்தது.
“ராஜாமணி, நான் உனக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை என்பதை இங்கே வந்ததும் தெரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சுறுசுறுப்புடன் கூடிய பெண்களுக்குத்தான் இங்கே வேலை கொடுத்திருப்பேன்.” என்று சொன்ன குபேரன் குறும்புத்தனமாகச் சிரித்துவிட்டு அருகில் நின்றுகொண்டிருந்த மூக்கனிடம் “இல்லையடா முக்கா!” என்றார்.
“ஆமாம், ஆமாம். இப்பொழுது பெண்ணாக மாறினால்கூட உடனடியாக வேலை கிடைக்கும்.” என்று கனத்த குரலில் சிரித்தான் முக்கன் கேலியாக.
உணர்ச்சிகளை அடக்கிக்கொண்ட ராஜாமணி, “பெண்ணாக. மாறும் பிரச்னை இருக்கட்டும். ஏனென்றால் சில ஆண்கள் பார்ப்பதற்கு ஆண்களைபோல் தோற்றமளித்தாலும் செய்கையால் அசல் பெண்ணாகவேதான் இருக்கிறார்கள்.” என்று சொல்லிவிட்டு “இந்தக் கதவில் ஏன் சிவப்பு விளக்கு எரிகிறது? அபாய அறிவிப்பும் எதனால் எழுதப்பட்டிருங்கிறது” என்று கேட்டான்.
“உங்களைப்போல் யாராவது பெண் வேடம் போட முயன்று ‘பேக்டரியினுள்’ நுழைந்தால் இதற்குமேல் போகக்கூடாது என்று மிகவும் கண்டிப்பாக எச்சரிக்கை செய்திருக்கிறோம்”. என்றார் குபேரன்.
“ஏன்…? இந்தக் கதவுக்குப் பின்னால் மற்றவர்கள் பார்க்கக் கூடாதா? பார்வையாளர்களுக்கு இப்படியாக சந்தேகம் ஏற்படுவது இயல்புதானே…?”
“பார்வையாளர்களைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ நாங்கள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. ஊறுகாய் தயாரிப்பதில் சில நுட்பமான வேலைகள் இருக்கின்றன. எங்கள் ஊறுகாய்களுக்கு மார்க்கட்டில் அதிகப்படியான கிராக்கி இருக்கிறது. ஏனென்றால் அதற்குக் காரணம், எங்கள் ஊறுகாயின் தனித்தன்மை தான். அந்தத் தன்மைகூட பகிரங்கமாக எல்லோருக்கும் காண்பித்து வியாபாரத்தைக் கெடுத்துக்கொள்ள நான் தயாராக இல்லை. மாலினி சிறுபிள்ளை. அவளுக்கு இந்தத் தொழிலைப் பற்றி எதுவுமே தெரியாது. அதனால் நான் அர்த்தமில்லாமல் அவளைக் கோபித்துக்கொள்ளப்போவதில்லை” என்று சொன்ன குபேரன், “உங்களுக்கு இங்கே வேலை முடிந்து விட்டது அல்லவா?” என்று வினவினார்.
“சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும் இந்த அறையையும் பார்த்துவிட்டால் ஓரளவு திருப்தி ஏற்படும்” என்று சொன்னான் ராஜா மணி, “வேலையும் முடிந்துவிடும்” என்றான்.
உடனே குபேரன் சுவர் ஓரமாக இருந்த ஒரு பொத்தானைப் பிடித்து சுமார் ஐந்து நிமிடங்கள் வரையில் அழுத்தினார். பிற சிவப்பு விளக்கு மறைந்து பளிச்சென்று பச்சை விளக்கு எரிந்தது.
கதவைப் பிடித்துத் தள்ளிய குபேரன், “வாருங்கள் உள்ளே போய்ப் பார்க்கலாம்.” என்று கூறி ராஜாமணியையும், மாலினியையும் அழைத்துச் சென்றார்.
அந்த அறையில் மீனாவைத் தவிர வேறு யாருமே இல்லை. அவள் தரையில் உட்கார்ந்தபடியே சில பாட்டில்களுக்கு ‘லேபிள்’ ஒட்டிக்கொண்டிருந்தாள். குபேரனையும், மற்றவர்களையும் பார்த்தவுடன் மரியாதைக்காக எழுந்து நின்றாள். மின்னல் அவள் கண்களைத் தாக்கியதா?
இவ்வளவு விசாலமான அறையில் ஒரே ஒருத்தி மட்டும் வேலை செய்துகொண்டிருந்தது ராஜாமணிக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும் பிறகு மீனாவிடம் விரிவாக விசாரித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், “இந்த லேபிலில்தான் வியாபார சூட்சுமமே அடங்கியிருக்கிறது” என்று குயுக்தியுடன் சொன்ன ராஜாமணி வெளியே வந்தான். மற்றவர்களும் வந்தவுடன் கதவு தானாகவே மூடிக்கொண்டது. திரும்பவும் அதே சிவப்பு விளக்குத்தான் எரிந்தது.
18. கன்னியின் கதறல்!
மாலை ஐந்து மணி வரையில் மீனாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து அவள் வீட்டுக்கு எதிரிலேயே ராஜாமணி நின்று கொண்டிருந்தான். மாலினியை குபேரன் அழைத்துச் சென்றுவிட்டதால் அவன் தனியாக வந்துவிட்டான். மாலினிக்கும் குபேரனுக்கும் வாய்ச் செண்டை ஏற்பட்டிருக்கும் என்று அவனுக்குத் தெரியும். ஆயினும் அவளுக்கு உதவியாக எதுவுமே முடியவில்லை.
சரியாக ஐந்தரை மணிக்கு ஒரு ஒரு ஜீப்கார் ‘சரேலென்று’ பாய்ந்து சென்றது.
அவள் பூட்டை ஆதவைத் திறப்பது வரையில் பேசாமல் நின்றுகொண்டிருந்த ராஜாமணி, கதவைத் தள்ளியதும், “ஹலோ மீனா, இப்போது தான் ஆபீஸ் வேலை முடிந்தது போல் இருக்கிறது.” என்று கேட்டுக்கொண்டே பின்னால் வந்து நின்றான்.
மீனாவின் முகத்தில் எத்தனை எத்தனையோ உணர்ச்சிகள் பொங்கி மறைந்தன. உதடுகளும் சலனமடைந்தன. என்ன பேசுவது என்றோ,எப்படி நடந்துகொள்வது என்றோ தோன்றாமல் தத்தளித்தாள்.
“நான் திடீரென்று வந்துவிட்டதால் வாயடைத்து போய் விட்டதா? நான்தான் உன் அன்பிற்குரிய ராஜா வந்திருக்கிறேன். பேப்பர்பாய்.”
“வாருங்கள்.” என்று சிரித்துக்கொண்டே சொன்ன மீனா இரண்டு கைகளையும் தூக்கிக் கும்பிட்டுவிட்டு தப்பு செய்துவிட்டவளைப் போல் விழித்தாள்.
“வரும்போது சீமைத்தண்ணீர் போட்டுவிட்டாய் போலிருக்கிறதே.” என்று சொல்லிவிட்டுச் சிரித்த ராஜாமணி வீட்டினுள் நுழைந்ததும் முதல் வேலையாகக் கதவைச் சாத்தித் தாளிட்டான். “இன்றிரவு நான் உன்னுடன்தான் இருக்கப் போகிறேன்.” என்று சொன்னான் பிடிவாதமாக.
“கல்யாணம் ஆவது வரையிலும் தயவுசெய்து அந்த ஒரு எண்ணத்தை மட்டும் மறந்துவிடுங்கள். அதுவரையிலும் நான் தனியாகத்தான் இருந்தாக வேண்டும். என் புனிதமான பெயரைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.”
“ஆமாம்… புனிதமான உன் பெயருக்கு எந்தவிதமான குற்றமும் ஏற்படாமல் இருக்க வேண்டியதுதான்.” என்று சொன்ன ராஜா மணி, “இன்றைக்கு நான் உன்னுடன் கண்டிப்பாக நடந்து கொள்ள வந்திருக்கிறேன். எதையாவது சொல்லி மழுப்ப நினைத்தால் நம்முடைய தொடர்பு அறுந்துவிடும் என்பதை இப்பொழுதே சொல்லி விடுறேன். என்னை நீ இழந்துவிடுவாய்.” என்று எச்சரித்தான்.
மீனா தூணில் சாய்ந்தவாறு “முருகா” என்று முணுமுணுத்தவாறு, “நான் உயிருடன் இருப்பது வரையில் நம்முடைய தொடர்பு நீடித்தேதான் ஆகவேண்டும். உங்களையே நான் இழக்க நேர்ந்தால் அதன்பிறகு நான் உயிர்வாழ்வேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? ஏற்கனவே நான் நொந்து நொறுங்கிப் போயிருக்கிறேன்.” என்று சொன்ன மீனா, குலுங்கிக் குலுங்கி அழுது கண்ணீர் வடித்தாள்.
அவள் அழுதபடியே நின்றுகொண்டிருந்த நிலைமைப் பார்ப்பதற்கு ராஜாமணிக்குச் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் கண்ணபிரானைக் கொலை செய்த கொலையாளியைக் கண்டுபிடித்துத் தருவதாக போலீஸாரிடம் வாக்களித்திருந்ததால் அவளைத் துன்புறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
முதலில் சிவப்பு விளக்கு மர்மத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினான். குபேரனின் குடும்பத்துக்கும், கண்ணபிரானின் கொலைக்கும் சம்பந்தம் இருக்கக்கூடுமோ என்ற ஐயம் அவனுக்கு இருந்தது.
“நீ குபேரன் அண்டு கோவில் ஊறுகாய் பார்சல் செய்யும் பிரிவில் தானே வேலை பார்த்து வருகிறாய்?”
“ஆமாம்!”
“இனிமேல் அந்த வேலைக்கு நீ போகவேண்டாம். அதை நான் விரும்பவில்லை.”
“அந்த வேலையைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு மட்டும் இருக்கிறதா என்ன? ஆனால் ஐந்து வருடங்களுக்கு நான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் அதை மீறமுடியாத நிலையில் இருக்கிறேன். எப்படியோ மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. இனிமேல் இருப்பது இரண்டே இரண்டு வருடங்கள் தான். அதன்பிறகு நானும் உங்களைப்போல் சுதந்திரப் பறவையாகிவிடுவேன்.”
மீனா சொல்லுவதில் பாதியளவாவது உண்மை இருக்கக் கூடும் என்று ராஜாமணி நினைத்தான். அவள் சொல்லும் எல்லாவற்றையுமே புறக்கணித்துவிட முடியுமா, என்ன?
“பரவாயில்லை, உன் ஒப்பந்தப்படி இன்னும் இரண்டு வருடங்கள் தொடர்ந்து வேலை செய்வது பற்றி எனக்கு எந்தவிதமான ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் நீ ஒளிக்காமல் என்னிடம் சொல்லியேதான் ஆகவேண்டும். சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்த அறையினுள் நீ மட்டும்தானே இருந்தாய்? அது ஏன்? உண்மையிலேயே நீதான் அபாயமான பெண்ணா? அந்த விளக்குக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”
“ஒருவிதத்தில் நான் மற்றவர்களுக்கு அபாயமான பெண்ணாகத்தான் இருக்கலாம். நான் அந்த அறையில் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். ஆனால் அது சம்பந்தமாக நான் எதுவும் சொல்ல தயாராக இல்லை. கம்பெனியின் ரகசியங்களை வெளியே சொன்னால் அதைப்போன்ற எஐமான துரோகம் வேறு எதுவுமே இல்லை.”
“அப்படியானால் உன்னையே முழுக்க முழுக்க நம்பிக்கொண்டிருக்கும் உன் காதலன் ராஜாமணிக்கு மனப்பூர்வமாகத் துரோகம் செய்யப்போகிறாயா?”
“இது துரோகம் அல்ல ராஜா. ஏனென்றால் அந்தக் கம்பெனியில் எப்படி ஊறுகாய் தயாரிக்கிறார்கள் என்பதையோ, எத்தனை பேர்கள் வேலை செய்கிறார்கள் என்பதையோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதனால் உங்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படப்போவதில்லை. திரும்பவும் அந்தக் கம்பெனியின் நினைவாகவே அலைந்து கொண்டிருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் ஆச்சரியப்படமுடியாது. நீங்கள் நினைப்பதைப்போல் குபேரன் சாதாரண ஆள் அல்ல. அதனால் தயவு செய்து நீங்கள் மற்றவர்களைப் பற்றிக் கொஞ்சமும் நினைக்காமல் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள்.”
மீனா சொன்ன வார்த்தைகள் இதயத்தைத் தொட்டுத்தான் வெளிவருகின்றன என்பதை ராஜாமணி தெரிந்து கொண்டான். ஆனாலும் அவள் விஷயத்தில் கருணை காட்ட முடியவில்லை.
“நீ என்ன சொன்னாலும் அதை நான் கேட்கப்போவதில்லை. சிவப்பு விளக்கு அறையினுள் உண்மையிலேயே என்ன நடக்கிறது. என்பதை நான் தெரிந்தேதான் ஆகவேண்டும்.”
“மன்னிக்கவும், என்னிடம் நீங்கள் இந்தக் கேள்வியை எப்படிக் கேட்டாலும் கிடைக்கும் பதில் மட்டும் ஒன்றாகவே இருக்கும். நான் எதுவும் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறேன். அதனால் எதை எதையோ கேட்டு மேன்மேலும் வேதனையை உண்டுபண்ணாதீர்கள்”.
மீனா சிவப்பு விளக்கு அறையைப் பற்றி எதுவுமே சொல்ல முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள். அவன் அந்த அறையைப் பற்றி ஏதேதோ கேட்டபோதிலும் எந்தவிதமான பயனும் கிட்டவில்லை.
“அப்படியானால் நீ என்னை இழந்து விடப்போகிறாயா? உனக்கு நான் வேண்டாமா?”
“உயிரை உடல் வேண்டாம் என்று எப்பொழுதாவது சொல்லுமா? நீங்கள் தான் என் உயிர். அந்த உயிரை இழக்க ஒரு போதுமே சம்மதிக்க மாட்டேன். ஆனால் உயிர் என்னை விட்டுப் போய் விட்டால் உடல் தானாகவே அழிந்துவிடும்.”
மீனா கண்ணீர் வடித்தபடியே நின்று கொண்டிருந்தாள். தன் வாழ்க்கையின் வேதனையான அனுபவங்களை நினைத்துக் கொண்டதும் கண்ணீர் மேன்மேலும் ‘குபுகுபு’வென்று பொங்கியது.
”உனக்காக நான் இரக்கம் காட்டுகிறேன் மீனா. கம்பெனியைப் பற்றி விசாரித்து எந்தவிதமான தொந்தரவும் கொடுக்கப்போவதில்லை. ஆனால் கண்ணபிரான் கொலையுண்ட வீட்டினுள்ளிலிருந்து நீ வெளியே ஓடிவந்தாய் என்பதையாவது ஒத்துக்கொள்கிறாயா?”
மீனா சிறிது நேரம் கழித்து, “நான் அந்த வீட்டின் பக்கமாகவே போகவில்லை.” என்று சொன்னாள்.
“பொய் சொல்லாதே! அன்று மத்தியானத்துக்குப் பிறகு சுமார் மூன்று மணியளவில் வீட்டுக்கு வருவதாக நீ சொல்லியிருந்தாய். அதனால் நீ நிச்சயமாக வந்திருப்பாய் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”
“நான் வருவதாகத்தான் உங்களிடம் சொல்லியிருந்தேன். ஆனால் முக்கியமான வேலை இருந்ததால் என்னால் வரமுடியவில்லை.”
“நீ வீட்டினுள்ளேயிருந்து வெளியே ஓடி வந்ததை முத்துக் கருப்பன் என்ற பால்காரர் பார்த்திருக்கிறார். இனிமேல் அவரை, அழைத்து வந்தால்தான் உண்மையைச் சொல்லுவாயா?”
ராஜாமணி அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
மீனாவுக்குக் குளிர்விட்டதைப்போல் இருந்திருக்கவேண்டும். அவள் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துவிட்டு, “எல்லாமே பொய்! என்னை அழிக்க வேண்டும் என்று பயங்கரமான சதி நடக்கிறது” என்று சொன்னாள்.
“உண்மையைச் சொன்னால் அது உனக்குச் சதியாகத்தான் தோன்றும் போலிருக்கிறது. அந்த வீட்டினுள் வளையல் ஒன்று உடைந்து கிடந்தது. மல்லிகைச் சரத்தையும் கண்டெடுத்தேன். உன் தாவணியில் இரத்தக்கறை படிந்திருந்ததையும் பார்த்தேன். இனியும் நீ உண்மையை மறைத்தால் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எனக்குத் தெரிந்ததை யெல்லாம் சொல்லி விடுவேன். போலீஸார் உடனே உன்னைக் கைது செய்து கொண்டு போய் விடுவார்கள்” என்று அவளை மிரட்டுவதைப்போல் சொன்னான் ராஜாமணி.
உடனே மீனா நடுங்கியவளாய், “நான் எனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் சொல்லி விடுகிறேன் ராஜா. ஆனால் தயவு செய்து போலீஸில் தெரியப்படுத்தி விடாதீர்கள். என்னை போலீஸார் கைது செய்து கொண்டு போய் விட்டால் அந்த வினாடியிலேயே அதிர்ச்சி ஏற்பட்டு என் உயிர் பிரிந்து விடும் ” என்று சொன்னாள்.
அவள் இப்பொழுதுதான் ஒழுங்கான முறையில் வழிக்கு வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ராஜாமணி, “உயிர் மேல் உனக்கு ஆசையிருந்தால் அன்றைக்கு என்ன நடந்தது என்பதை மறைக்காமல் சொல்” என்று வற்புறுத்தினான்.
மீனா தாவணி நுனியை இழுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு, “அன்றைக்கு உங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வந்தேன். நான் அங்கே வந்து பார்த்தபோது கண்ணபிரான் இறந்து கிடந்தார்.” என்று சொன்னாள்.
“பொய் சொல்லுவதற்குக்கூட தனித் திறமை வேண்டும்” என்று சிரித்த ராஜாமணி, “அவர் இறந்து கிடந்தார் என்றே வைத்துக்கொள்வோம். உன் வளையல் எப்படி உடைந்தது. கூந்தலில் சூட்டியிருந்த மல்லிகைச் சரம் எப்படி தரையில் வந்து விழுந்தது?” என்று கேட்டான்.
மீனா பதில் பேசத் தோன்றாமல் தத்தளித்தாள்.
“நான் சொல்லட்டுமா, அன்றைக்கு என்ன நடந்தது என்று? இது வெறும் அனுமானந்தான்! ஆனாலும் இது உண்மையைப்போல் பொருந்து” என்று சொன்ன ராஜாமணி, “அன்றைக்கு நான் தான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணத்துடன் ஓடிவந்து என்னை எழுப்புவதற்காக என்மேல் விழுந்திருப்பாய். என்னோடு நீ வழக்கமாக நடந்து கொள்ளும் முறையே இதுதானே! ஆனால் அது கண்ணபிரானாக இருக்கவே நீ குற்றம் செய்தவளைப் போல் விழித்திருப்பாய். கண்ணபிரான் ஏற்கெனவே உன்மீது ஒரு கண் வைத்திருந்தார். நீ வந்து வகையாக சிக்கிக் கொள்ளவே உடனே அவர் உன்னைக் கெடுக்க முயற்சி செய்திருப்பார். நீ அவரை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தபோது ஒரு வளையல் நொறுங்கி விழுந்திருக்கலாம். ஆவேசத்தின் காரணமாக கூந்தலில் சூட்டப்பட்டிருந்த மல்லிகைச் சரமும் கீழே விழுந்திருக்கலாம். அதே சமயத்தில் உன்னை அவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக யாரோ ஒரு ஆசாமி வந்து கத்தியால் குத்திக் கொலை செய்திருக்க வேண்டும். இப்படித்தான் கண்ணபிரானின் கொலை நடந்திருக்க வேண்டும். நான் நான் சொல்லுவது முற்றிலும் உண்மைதானே…?”
அவன் சொன்னதைக் கேட்டு மீனா ஸ்தம்பித்துப் போய்விட்டாள். சிறிது நேரம் வரையில் என்ன பேசுவது என்றே அவளுக்குத் தெரியவில்லை. கடைசியில் அவள் உண்மையைச் சொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை, என்பதை உணர்ந்து, “நீங்கள் சொன்னவை எல்லாம் உண்மை. ஆனால் கண்ணபிரானைக் கொலை செய்தது யார் என்பதை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் சொல்ல மாட்டேன்.” என்றாள்.
“ஏன் சொல்லமாட்டாய்? கொலையாளியின் பெயரைச் சொல்லுவதால் நீ அடையப்போகும் நஷ்டமென்ன?”
“தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். இனியும் நீங்கள் எதையாவது கேட்டு துன்புறுத்தினால் இந்த இடத்திலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்வேன். நான் சாகவேண்டும் என்று விரும்பினால் இனிமேல் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.”
மீனா முகத்தை மூடிக்கொண்டு விசும்பி விசும்பி அழுது அப்படியே தரையில் உட்கார்ந்தாள்.
அவளுடைய புஜந்தங்களைப் பற்றித் தூக்கி பொங்கி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்த ராஜா கட்டிலில் உட்கார வைத்து தன் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு, “உன் நிலையை நான் உணறுகிறேன். நன்றாக உணறுகிறேன் உனக்கேற் பட்டிருக்கும் கஷ்டத்தைப்போல் வேறு எந்தப் பெண்ணுக்குமே வரக் கூடாது. ஒருபுறம் குபேரனின் அட்டகாசம், – இன்னொருபுறம் கண்ணபிரானின் மரணம். இரண்டுக்கு மிடையே சிக்கி ஒவ்வொரு வினாடியும் நீ செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் இவை எல்லாவற்றிற்குமே விரைவில் விடிவுகாலம் உண்டு.” என்று சொன்னான்
“எனக்கு விடிவுகாலம் இருக்கிறதோ, இல்லையோ, அதைப் பற்றியெல்லாம் நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. என்றைக்காவது நான் இறந்துவிட்டால் என் பிணத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்வீர்கள் அல்லவா? என்னை அனாதைப் பிணமாக்கி குப்பை லாரியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டீர்களே!”
மீனா அழுதுகொண்டே இப்படிச் சொன்னதும் அவள் அதற்கு மேல் பேசாமல் இருக்க ராஜாமணி வாயைப் பொத்திக்கொண்டான்.
“என்னையும் மற்றவர்களின் பட்டியலில் தான் சேர்த்து விட்டாய் போலிருக்கிறது! நீ பயங்கரவாதிகளின் மத்தியில்தான் சிக்கியிருக்கிறாய் என்பதும், அவர்களால் ஒவ்வொரு வினாடியும் உன் உயிருக்கு ஆபத்திருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அவர்களால் ஒரு சிறு துரும்பைக்கூட உன்மீது தூக்கிப் போட முடியாது. என் உயிரைக் கொடுத்தாவது உன்னைக் காப்பாற்றுவேன் அப்பொழுதுதான் இந்த ராஜாமணி எப்படிப்பட்டவன் என்பதைத் தெரிந்துகொள்வாய்” என்று சொன்ன ராஜாமணி, தைரியமாக இருக்கும்படிக் கூறிவிட்டு வெளியே கிளம்பினான்.
தெரு விளக்குகள் வரிசையாக எரியத் தொடங்கின.
இரவு ஆட்சி செய்து கொண்டிருந்தது.
மீனா கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே தாளிட்டாள். தன்னை உயிருக்கு உயிராய் நேசிக்கும் ராஜாமணி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் உணர்ச்சிமயமாகத் தோன்றி ஆறுதல் உண்டு பண்ணின.
ஆனாலும் ராஜாமணியிடம் உண்மையைச் சொல்லவே முடியவில்லையே! குபேரன் மிரட்டியதின் காரணமாக ஊமையாக அல்லவா மாறவேண்டிய அவசியம் வந்துவிட்டது.
அவள் கட்டிலில் படுத்துக்கொண்டு கொல்லப்பட்ட தன் தாயாரை நினைத்தாள். அகோரமாய் மாய்க்கப்பட்ட பரிதாபத்திற்குரிய பெண்ணைப் பற்றிச் சிந்தித்தாள். கண்ணபிரான் கொலையை நினைவு கூர்ந்தாள். இத்தனைக்கும் மூலகாரணமான குபேரனையும் எண்ணிப் பார்த்தாள்.
உடனே பயம் பிடித்துக் கொண்டது. அறையின் நான்கு பக்கமும் இருந்து உருவமில்லாத வஸ்துக்கள் அப்படி அப்படியே பறந்து வந்து தாக்குவதைப் போன்ற பிரமை உண்டாயிற்று.
அவள் நெஞ்சு அடிக்கொரு தரம் கனத்தது. பீதி பெரும் குடைச்சலை உண்டு பண்ணியது.
பெண்ணாகப் பிறந்து விட்டதால் அவளுக்கு எத்தனை எத்தனை தொல்லைகள்?
அவள் பலவிதமாகச் சிந்தித்து இனியும் உயிருடன் வாழ வேண்டுமா என்று ஆராய்ந்து கொண்டிருந்தபோது சதவு தட்டப் படும் சப்தம் கேட்டது.
‘ஒரு விநாடி நேரம்கூட அமைதியாக இருக்கவிடமாட்டார்கள் போலிருக்கிறதே.’ என்று தனக்குள் தானே உடுத்தப்பட்ட மீனா வெறுப்புடன் எழுந்து சென்று கதவைத் திறந்ததும் வெளியே மூக்கன் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். வழக்கம் போலவே அவனுடைய கையாட்கள் இருபுறமும் நின்று கொண்டிருந்தார்கள்.
“சொல்லுங்கடா சின்ன பெரியசாமிகளா”. என்று அவர்களைத் தட்டிக் கொடுத்தான் மூக்கன்.
“பெரிய அய்யா உங்களைக் கூட்டிக்கொண்டு கையோடு வரச்சொன்னாங்க. வர்ரீகளா?” என்று சொன்னான் சின்னசாமி.
“ம்.. ம்.. புறப்படு… புறப்படு… இன்றிரவு உனக்கு ரெம்பவும் அவசரமான ஜோலி இருக்கிறதாம். நீ வர முடியாது என்று சொன்னால் குண்டுக் கட்டாய் தூக்கிக்கொண்டு வரச்சொன்னார்கள்.” என்றான் பெரியசரமி.
இரவு! பகல் எந்நேரமும் இப்படி குபேரன் ஆள் வீட்டுக் கூப்பிடுவது சகஜம்தான். ஆனால் இன்றைக்கு அவர்கள் கூப்பிட்ட தோரணை நன்றாக இல்லாமல் இருந்ததால் என்னவோ போலிருந்தது. “எனக்கு ஒரே அசதியாக இருக்கிறது. விடிந்தவுடன் எப்படியும் வந்து பார்ப்பதாகச் சொல்லுங்கள்.” என்று மிகவும் பணிவாகக் கெஞ்சினாள் மீனா.
“எஜமான் கூப்பிட்டால் அதற்கு சால்ஜாப்பா? மறுவார்த்தையே கூடாது. உடனே புறப்பட்டு வா.. இல்லாவிட்டால் நாங்களும் மனிதர்களாக இருக்கமாட்டோம். முதலாளியும் மனிதராக இருக்கமாட்டார்.” என்று இரு கோட்டுப் பைகளுக்குள்ளும் கைகளை துழைத்தவாறு மிரட்டினன்.
மீனா அவர்களை எதிர்த்து வாழும் ஆற்றல் இல்லாதவர்கள் என்பதால் பேச்சை வளர்த்துக் கொள்ளாமல் உடனே புறப்பட்டாள்.
குபேரனின் உல்லாச பங்களா அது? கன்னிப்பெண்களுடன் இரவைக் கழிக்க நேரிடும்போது அவர் இங்குதான் தங்குவார். இன்றைக்கும் அவருக்கு ஒரு கன்னிப்பெண் தேவைப்பட்டாள். அதனால் நேராகவே இங்கே வந்துவிட்டார்.
அவரை இப்பொழுது மது ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது. அந்த மதுவுக்கு நிரந்தரமான அடிமையாகி, அந்த மது தோற்றுவித்த பூதத்துக்கு இரைகொடுக்க முடியாமல் தவியாய்த் தவித்துத் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
காரை விட்டுக் கீழே இறங்கிய மீனா, தன்னந்தனியாக இருக்கும் அந்தப் பங்களாவைப் பார்த்ததும் மருண்டுபோய், “இங்கேயா முதலாளி இருக்கிறார்?” என்று கேட்டாள்.
“சந்தேகம் இருந்தால் நீ உள்ளே போனதும் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். உன்னிடம் ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொன்னார்.” என்றான் மூக்கன்.
அப்பொழுது கதவைத் திறந்து விரித்துக்கொண்டு, “மீனா. நான்தான் இங்கே இருக்கிறேன். தொழில் சம்பந்தமாக உன்னிடம் தனித்துப் பேசவேண்டும்.” என்று சொன்னபோது மதுநெடி எங்கும் பரவியது.
அவர் மிகமிகக் கெரடூரமான மனிதர் என்பதாலும், எதிர்த்து ஏதாவது பேசினால் அதனால் ராஜாமணியின் உயிருக்கு ஆபத்து நேரிடக்கூடும் என்று அஞ்சியதாலும் மறுவார்த்தையே பேசாமல் புலிக்கூண்டு என்பது தெரிந்தும் உள்ளே போனாள்.
இதற்கென்றே தயாராக நின்றுகொண்டிருந்த அடியாட்கள் கதவை இழுத்து மூடி வெளிப்புறமாகத் தாளிட்டுக்கொண்டார்கள்.
“என்ன எஜமான் இது?”
அவள் இப்படிக் கதறியதும், குபேரனின் அட்டகாசமான சிரிப்பு அவளுடைய குரலை அப்படியே விழுங்கி ஏப்பம் போட்டது.
குபேரன் பாட்டில் மதுவை ‘கொட கொட’வென்று வயிற்றினுள் ஊற்றிவிட்டு, “மீனா…நீ அப்சரஸ்… அபாரமான பெண் பிறவி.” என்று புகழ்ந்தார்.
நெஞ்சுக்குள் நெருப்பாய் மூண்டது மீனாவுக்கு. அந்தக் கொடியவன் மூர்க்கனாகிவிட்டான் என்பதை அவள் நன்றாகவே தெரிந்து கொண்டாள்.
இனி தப்ப என்ன வழி!
அது ஒன்று தான் அவளுக்குப் புரியவில்லை.
– தொடரும்…
– முழுநிலவில் முதலிரவு! (திடுக்கிடும் மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1970, கலைப்பொன்னி, மதுரை