முறிவு




(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சக ஊழியர்கள் அனைவரும் அவளைப் பாராட்டினார்கள். எல்லோருக்கும் அவள் பத்திரிகை வைத்தாள். மானேஜர் ஒரே இங்கிலீஷ் வார்த்தையில் அவளை வாழ்த்தினார். (கங்க்ராஜு லேஷன்ஸ்) பியூன் ‘கல்யாண சாப்பாடா’ என்றான். எல்லோருக்கும் சந்தோஷம்தான்.’

கல்யாணம் என்பதே ஒரு பெரிய விஷயம்தான். அதிலும் ஒரு பெண் நேசித்தவனையே கல்யாணம் செய்துகொள்ள முடிவது ஓர் அற்புதமான விஷயம் அல்லவா? அவள், அவளை நேசித்தவனையே, அவள் யாரை நேசிக்கிறாளோ அவனையே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள்.
ஒரு நோட்புக் அளவுக்கு இருக்கும் பெரிய அழைப்பிதழ்களை ஒவ்வொரு மேசையின் மேலும் வைத்து, வாழ்த்துகளைப் பாராட்டு களை, சினேகம் அழுந்திய வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டு அவள் இன்னொரு மேசைக்கு நகரும்போது அவள் நகரவில்லை பறப்பதாய் இருந்தாள். நெற்றியில் முத்துகள் கோத்து, கலகலவெனச் சிரித்து அவள் சந்தோஷிக்கையில் உலகம் வெளிச்சமாக, விசித்திரம் வர்ணமாய்ப் பூசிய மாய மாளிகையில், பெரிய, பெரிய, பலூன்கள் கட்டப்பட்ட பிறந்தநாள் விழாக் கேளிக்கைகளில், உச்சி நனைத்து உடலில் வழியும் ஷவர் பாத்தில், அவளாய் அவளுக்குத் தோன்றியது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவனை, அவள் சந்திக்க நேர்ந்தது அவள் நினைவில் புரளும் சிந்தனைகள். ஃபைல்களைச் சுமந்து கிளாரிபிகேஷன்களுக்காக அவள் துறையை அணுகும் அவன் திடுமென நூலகத்தில் ஒரு புத்தகத்தை உருகும்போது சந்தின் ஊடே தெரியும் அவன் முகம் அவன் கடற்கரைக் காபி ஹவுசில் காபியைக் குடித்துத் தலை நிமிர்கையில், கழுத்துக் குறுகுறுக்க, யாரோ தன்னைக் கவனிக்கிற உணர்வில் நோக்க அவன். அசடோ, எண்ணையோ என்றைக்கும் வழியவிடாத ஆண் பிள்ளையாய் அவன். தான் பாராத போதில் அங்கே இங்கே என்று பார்க்க முயலாத புருஷனாய் அவன்.
அப்பாவிடம் பயந்து பயந்து திக்கித் திணறினாள். அம்மா எதுக்கோ பயந்தபடி கதவின் புறம் நின்றாள். சின்னவள் மேசையின் மேல் கவிழ்ந்துகொண்டு இருக்கிறாள். படிக்கிறாளாம். நம்ப வேண்டுமாம். அப்பா அவனுடைய பெயர் கியர், உத்தியோகம் கித்யோகம், குலம் கோத்திரம் பேசிக் பே, வண்டி வாகனம், சகலமானவற்றையும் விசாரித்தார். தெரிந்தவரை சொன்னாள். தெரியாதவற்றுக்கு வாங்கிக் கட்டிக் கொண்டாள். நல்லவேளை, அப்பா எகிறவில்லை. அடிக்க வரவில்லை. இரண்டு நாள் அவனைப் பற்றி அப்பா சி.ஐ.டி. வேலை பார்த்து இருப்பார். ஒப்புக் கொண் டார். அப்பாடா ரிஜிஸ்டர் கல்யாணம் இல்லை. இருபது வருஷமாக அப்பா ஆலை மிஷின்களோடு சம்சாரம் நடத்தியவர். இன்னும் மனுஷராகவே இருந்தார். ஆச்சரியம் தான்.
சின்ன வயசின் அவள் கனவுகள் சேலைக் கட்டிக்கொண்டு வந்தன. கல்யாணத்துக்குப் பிறகு வாழப் போகிற வாழ்க்கை. அவள் கனவுகளின் வர்ண மத்தாப்புகள் பூக்களைச் சொரிந்தன.
‘அந்த நாள் தொட்டு நான் புதுசாய் இருக்கப் போகிறேன். புதுப் புடவைகள் அன்றிலிருந்து அணிய. புதிய பிளவ்சுகள். புதிய பிராக்களும் கூட. கண்ணுக்கு ஐடெக்ஸ்கூட புதுசாகத்தான் வாங்க வேண்டும். நெற்றிக்கு இடும் சாந்து. அதுவும் புதுசுதான். என்ன கலரில்? எல்லாக் கலரிலும். அப்போதுதான் டிரஸ்ஸுக்கு மாட்ச் செருப்பு? தூ. அன்றிலிருந்து புதுசு. அவசியம் இந்த பேஸ்டையும் பிரஷ்ஷையும்தான். புதிய பிரஷ். புதிய பேஸ்ட் என்ன வாங்கலாம்? பினாக்கா? கோல்கேட் வானாம். வேறு ஏதாவது விக்கோ வஜ்ரதந்தி. சபாஷ். ஆப்பிளைக் கடிக்கிற அவள். கரும்பு கடிக்கிற அந்தத் தாத்தா. சபாஷ். கடிக்கிற தந்தி. பவுடர் என்ன பவுடர். நூற்று எட்டுப் பவுடர். ஹாலோ வாங்கலாமே. அடடா மறந்தே போச்சு, சோப். இதுவல்லவா மிக முக்கியம். கல்யாணத்துக்குப் பிறகு என்ன சோப் உபயோகிக்கலாம். அப்பா உபயோகிக்கும் லைப்பாய் ஆரோக்கிய வாழ்வைக் காப்பது? ஊகும். கனகாம்பரம். புதிய எலு மிச்சை வாசனை லிரில். கேடில் கலந்த ரெக்ஸோனா? ஹேமமாலினியின் அழகு ரகசியம் லக்ஸ். எல்லாம் பழசு. மார்க்கெட்குக்குப் போக வேண்டியது. எது புதுசாக அன்று வருகிறதோ அது… எல்லா வற்றுக்கும் மேலே வீடு அல்லவா முக்கியம். நான் ஒரு முட்டாள். இது பற்றி அல்லவா சிந்திக்க வேண்டும். ஒரு சின்ன வீடு. முதலில் வாடகைக்கு. பிறகு ஒரு வீடு சொந்தமாக. எனக்கே எனக்கு. அவருக்குப் பேசிக் பே 650. எனக்கு 450. எங்கள் இரண்டு பேருக்கு ரூமை ஒழித்துக் கொடுக்கவும் கொடுப்பார். சின்னவள் பாத்ரூமி லேயே டிரஸ் மாற்றிக் கொள்வாளாக இருக்கும். ஆனாலும் வேண்டாம். அவரே ஆசைபட்டாலும் வேண்டாம். எல்லாமே புதுசாக இருக்க வேண்டும் என்னும்போது வீடு மட்டும் பழசாகவா.
அவனைச் சந்தித்து அவனோடு ஷாப்பிங் போகப் போகிற உற்சாகத்தோடு, நெஞ்சு முட்ட அவள் ஆபீசை விட்டு வெளியில் வந்தாள். அவள் ஆபீஸ் வாசலில், எப்பவும் கால் நீட்டி உட்கார்ந்தி ருக்கும் அந்த இளம்பிள்ளை வாதப் பிச்சைக்காரனுக்கு, அவன் திடுக்கிடும்படி ஒரு ரூபாய் போட்டாள். சலவை செய்த பேங்க்கில் இருந்து சம்பளமாய்க் கொடுத்த நோட்டு. வாயல் புடவை மாதிரி சொர சொர என்ற நோட்டு.
2
வருஷக் கணக்காக நின்ற இடத்திலேயே நின்று கொண்டி ருக்கும் அண்ணாதுரைக்குப் பக்கத்தில் அவன் நின்றான் மூன்றாவது சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். பேச்சுத் துணைக்கு அவரை விட்டால் ஆள் இல்லை. அவர் பேசமாட்டார். வாட்சைப் பார்த்தான். அவள் அங்கு வந்து சேர இன்னும் பல நிமிஷங்கள் இருந்தன. அவசரப்பட்டுக் கிளம்பிவிட்டான். சரியாக அஞ்சே கால் மணிக்குக் கிளம்பி அண்ணாதுரையிடம் வந்து சேர்ந்தால் அவள் வர சரியாக இருக்கும். அஞ்சடிக்கும் முன்பே கிளம்பி விட்டான். அவசரம்… அவசரம்…
வாயில்லா ஜீவன்களுக்கு என்று குடைகார கோவிந்தசாமி ஈவிரக்கம் கொண்டு கட்டிவிட்ட தண்ணீர்த் தொட்டியில் ஒரு காகம் தலையை நீரில் அமுக்கி, பின்பு உதறி, சிலிர்த்துக்கொண்டு இவனைப் பார்த்து ‘ஹலோ’ என்றது-
‘என்ன இது…’
‘என்னோட பிரசன்ட்’
‘எதுக்கு?’
‘உங்க பெர்த் டேக்கு.’
‘அட… எனக்கு இன்னைக்கு பெர்த் டே. நான் மறந்துட்டேன். நீ ஞாபகத்துல வச்சிருக்கே. தேங்க்ஸ்… என்ன… இது…’
அழகாக பேக் பண்ணப்பட்டு, ரிப்பன் கட்டியிருந்தது அது. ‘இங்கேயே பிரிக்க வேணாம். வீட்டுக்கு போனப்புறம், சாப்டுட்டு உங்க மாடி ரூமுக்குப் போவீங்க இல்லையா. அங்க பிரிச்சுப் பாருங்க.’
அவன் அதைப் பிரித்தான்.
‘பிளீஸ்…இங்க பிரிக்க வேணாம்.’
அவன் அதைப் பிரித்தான்.
‘பிளீஸ்… இங்க வேண்டான்னா.’
அவன் அதைப் பிரித்தான்.
‘பிளீஸ்… பிளீஸ்… பிளீஸ்…’
அவன் அதைப் பிரித்தே விட்டான். தங்கத்தில் இரண்டு பட்டாம் பூச்சிகளைப் போல, பிரகாசித்துக் கொண்டு இருந்தன, கைப் பொத்தான்கள். அத்துடன் ஒரு கடிதமும் இருந்தது. ‘பிரியத்துக்கு உரிய…’ எனத் தொடங்கி பெண்களுக்குரிய நூதன எழுத்துக்களில், அழகான ரசிக்கத்தக்க எழுத்துப் பிழைகளோடு ஒரு கடிதம்.
அவன் அட்டகாசமாக இருந்தான். சிரித்தான்.
‘கோபமா… ஏன் முகம் வாடிப் போச்சு…?’
‘நீங்க ரொம்ப அவசரக்காரர்…’
அவன் சிகரெட்டைக் கீழே போட்டு உருத்தெரியாமல் மிதித்து நசுக்கினான். பெண்களுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்திருக்கும் ஊசலாடும் தோள் பையோடு அவள் வந்து சேர்ந்தாள்.
அவனுக்கு அவளிடம் ஒன்று சொல்ல இருந்தது.
ஷாப்பிங்கெல்லாம் முடித்து, தூக்க முடியாத பாரங்களோடு கடற்கரை காபி ஹவுசின் மாடியில், கடலைப் பார்த்தவாறு அவர்கள் உட்கார்ந்தார்கள். உட்கார்ந்து பல நிமிஷங்களுக்குப் பிறகு பணியாள் வந்தார். பல நிமிஷங்களுக்குப் பிறகு கட்லட்கள் வந்தன. அதுவரை அவளே பேசிக்கொண்டிருந்தாள். அவன் கடலைப் பார்த்தவாறு இருந்தான். கடலில் ஒரு கப்பல் நின்றிருந்தது. அங்கிருந்து பளிச் பளிச்சென மின்னும் ஒலிச் சங்கேத பாஷை கரைக்கு வந்து கொண்டிருந்தது.
அவள் அவன் கவனத்தைத் திருப்ப முயன்று, தோற்று, அவன் அக்கறையின்மைக்கான காரணம் கேட்டாள்.
அவனுக்கு அவளிடம் ஒன்று சொல்ல இருந்தது. அவன் சொன்னான்-
‘இரவில் நடுச்சாமத்தில் மாடுகள் மூச்சுவிடுவதைக் கேட்டு இருக்கிறாய… கொல்லன் உலைத் துருத்தி. பயமாக இருக்கும். தூக்கி வாரிப் போடும். இருட்டில் அவற்றின் கண்கள் தீவட்டி ஊர்வலம். சினிமா விட்டுப் போகும் ஜனங்கள் அதிகமாகச் சத்தம் போட்டு உரக்க, கத்திப் பேசுகிறார்கள். ஜனங்கள் சப்தம் ஓய்ந்த பிறகு நிலா இரவை வைகறை என்று பிழைத்து எண்ணிய காகங்கள் பள்ளிக் கூடம் நடத்துவதைக் கேட்டு இருக்கிறாயா, திடீரென்று அவை ஒரே ஸ்தாயியில் கத்திக்கொண்டு பறக்கும். நெஞ்சுக்குலை ஆடும். வீட்டில் இருந்து அஞ்சு நிமிஷ நடைதானே பீச். வருவதுண்டு எங்கு பார்த்தாலும் ஒரே வானம். வானத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே மேகம். வயசாகிப் போன வான ராஜாவுக்கு முளைத்துத் தொங்கும் தாடி மாதிரி. இவ்வளவு பெரிய வானத்துக்கு ஒரே ஒரு நிலா’
‘ராத்திரியில் தூங்குவதில்லையா?’ அவள் கேட்டாள். இல்லை என்றான் அவன். ஏன் என்று கேட்டாள் அவள். தூக்கம் வருவதில்லை என்றான் அவன். என்ன பிரச்சினை என்றாள் அவள்.
‘விரகதாபம்’ என்றான் அவன்.
ஆழ்ந்த அமைதிக்குப்பிறகு அவள் சொன்னாள், ‘இன்னும் ஒரு வாரம்தானே.’
‘கல்யாணம்தானே.’
‘ஊம்.’
‘அது வர்றபோது வரட்டும்.’
‘….”
‘நான் செத்த பிறகுதான் நம்ப கல்யாணம் வரும் போல.’
‘ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க…’
அவள் நாற்காலியை இழுத்து அவனருகில் போட்டுக் கொண்டாள். அவனுக்கும் அவளுக்கும் கேட்பது போல அவள் சொன்னாள்.
‘பிளீஸ் டெல் மீ… வாட்ஸ் யுவர் டிரபிள்…’
அவன் கப்பலைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரே ஒரு பிரகாசமான விளக்கு மட்டும் கண்ணைச் சிமிட்டிக் கொண்டி ருக்கிறது. ஒவ்வொரு சிமிட்டலும் ஒவ்வொரு வார்த்தை போலும், அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
விளக்கைப் பார்த்தபடியே அவன் சொன்னான்.
‘ஐ லைக் டு சிலீப் வித் யூ..’ என்றான் அவன். அவள் உடம்பில் ஏற்பட்ட உதறலை அவனாலும் கூட உணர முடிந்தது. அவள் ஸ்பூனால் காபி கப்பைக் கலக்கி கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்.
‘நம்ப கல்யாணம் இன்னும் ஒரு வாரம்தானே…’
‘ப்ச்…’
அவள் ஸ்பூனால் இன்னும் காபி கப்பையே கலக்கிக் கொண்டி ருந்தாள். பிறகு அவள் சொன்னாள்.
“என்னை நீங்க புரிஞ்சுக்க மறுக்கிறதுதான் எனக்கு வருத்தமா யிருக்கு. வரும் போதுதான் ஷாப்பிங் போனோம். எதுக்கு இவ்வளவுன்னு கேட்டீங்க… என் கனவையெல்லாம், என் ஆசையை யெல்லாம் உங்ககிட்டே சொன்னேன். நம்ப கல்யாணம் ஆன அன்னிலேந்து நான் புது வாழ்க்கையைத் தொடங்கப் போறேன். என்னுடையது எல்லாமே புதுசா இருக்கணும்னு ஏகப்பட்டது செலவு செய்யறேன். என் சக்திக்கு மீறி செலவு பண்ணறேன். இதெல்லாம் தேவை தானான்னு நான் யோசிக்காமே இல்லே. ஆனாலும் எனக்கு இது சந்தோஷம். என் நோக்கம், என் ஆசை, என் புடவையெல்லாம், என் உடம்பிலே போட்டிருக்கிற நகைகள் எல்லாம் புதுசா இருக்கும்போது என் உடம்பு மட்டும் பழசாப் போயிடுமே. பழைய உடம்பைத்தானே எடுத்துக்குவீங்க… என்னோட இந்த ஸென்டிமென்ட்ஸ் உங்களுக்கு வேடிக்கையா இருக்கு. ஆனாலும் பிறத்தியார் ஸென்டிமென்ட்ஸை மதிக்கறதுதானே நாகரிகம். எப்பவுமே நீங்க என்னோட உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்கிறது கிடையாது. ரொம்ப அவசரப்படறீங்க… ரொம்பக் கோபப்படறீங்க… ஆனாலும் உங்களை நான் நேசிக்கிறேன். உங்க ஆசைப்படியே ஆவட்டும். ஆனா ஒரு கண்டிஷன். நாம் சேர்ந்து இருப்போம். ஆனா முழு உறவு வேண்டாம்……இது மட்டும் கல்யாணத்துக்குப் பிறகு வச்சிடுவோம். ப்ளீஸ். என்னை புரிஞ்சுக்கப் பாருங்க. அதுக்கு மேலே வேணாம்…’
அவன் அதற்கு ஒப்புக் கொண்டதாகத்தான் இருந்தது.
3
அண்ணாதுரை சிலையில் இருந்து ரிக்ஷாப் பிடித்து சாரதி வீதி திரும்பி, ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து ஊருக்குச் சற்று தூர இருக்கும் அந்த லாட்ஜை அடைகிற வரைக்கும் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. ஒருவர் மனம் ஒருவருக்குப் புரிகிறபோது பாஷை செத்துவிடுகிறது. அந்த லாட்ஜின் மானேஜரான தன் நண்பனுக்காக ஒரு கலியாண அழைப்பை அவன் கொடுத்தான். எதிர்கால மனைவி இவள்தான் என்று அவளை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். கல்யாண சம்பந்தமாக சில விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறது என்பதாகக் கூறி ஒரு ரூம் சாவியைக் கேட்டான். சந்தோஷத்தோடு ஒரு ரூமைத்தானே வந்து திறந்து கொடுத்து, காபி அனுப்பி வைப்பதாகக் கூறிச் சென்றான். உள்ளே நுழைந்ததுமே ரூமை அடைத்துப் போட்டிருந்த பெரிய இரட்டைக் கட்டிலும் அதன் மீது விரித்து இருக்கும் கரும் நீல பெட்ஷீட்டும் அவளை உறுத்துவ தாக இருந்தது. ஒரு சேரில் அவள் உட்கார்ந்து கொண்டாள். அவன் கட்டிலின் ஓரம் கால் மேல் கால் போட்ட படி அமர்ந்தான். ஷர்ட் பொத்தான்களைக் கழற்றிவிட்டுக் கொண்டான். அண்ணாந்து பார்த்து பேன் சுற்றுவதைக் கவனித்து உஸ்.. என்று வாயால் ஊதிக் கொண்டான். அவள் இவன் செய்வதையே பார்த்தபடி இருந்தாள். தவறிக்கூட அவன் அவளைக் காண்பதாக, நேருக்கு நேர் பார்ப்பதாகக் காண்பதாகக் காணோம். பையன் காபி கொண்டு வந்து இரண்டு கிளாஸ்களில் ஊற்றி டேபிளில் வைத்துவிட்டு வேறு ஏதாவது என்று கேட்டு நின்றான். இல்லை எனக் கூறி அவன் பையனை அனுப்பி வைத்தான். கதவைச் சாத்திக்கொண்டு வந்து அவன் மீண்டும் முன் இருந்த இடத்திலேயே அமர்ந்தான்.
நான்கு புறமும் வெள்ளை சுவர்கள் வெள்ளையாக. ஒரு கதவு பாத்ரூமுக்காக. ஒரு படுக்கை அறையாகத் தவிர வேறு எதுவாகவும் அது இல்லை. லாட்ஜுக்கு அந்தப் புறம் வீடு இருக்கும் போலும். பாலு செய்தி படித்துக் கொண்டு இருந்தார். இது பாண்டிச்சேரி. வானொலி தான். அவள் செய்தியில் மனசை லயிக்க விட முயன்றாள். முடியவில்லை. மணி ஆறுக்கு மேல் ஆகிறது. எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து போய்விட முடியுமோ அவ்வளவுக்கு அது நல்லது என்று மனம் சொல்லியது.
இப்போது அவன் பனியனோடு இருந்தான். சட்டை ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் அவளிடம் வந்து மெதுவாகக் கைகளைத் தொட்டு, பிடித்து எழுப்பி நிற்க வைத்தான். முகத்தை நிமிர்த்தி ஒரு முத்தம் வைத்தான். அந்த நிலையிலேயே அவர்கள் சில நிமிஷங்கள் நின்றார்கள். பிறகு கட்டிலில் உட்கார்ந் தார்கள். அவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இலயித்தாள். அவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இழந்தாள். அவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இறுகினாள். இப்போது தன் காம்பீர்யமான புருஷக் குரலில் ஜேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார் யாரோ ஒருவர் வாணியா சுசீலாவா அதனைப் பற்றிக் கொண்டு நடந்தார். அவர் பாட, இவர் பாட அவர் பாட, இவர் பாட பாடல்கள் தொடர்ந்த வண்ணமாய் இருந்தன.
வெளுக்கப் போகும் அழுக்குத் துணிகளைப்போல அவள் புடவை, அவள் ஆடைகள் அனைத்தும் அவள் இருந்த நாற்காலியில் குவிந்து கிடந்தன. தனக்கு மேல் வேகத்தில் சுழலும் ஃபேனையே அவள் வெறுத்துப் பார்த்தவாறு இருந்தாள். அவன் அவள் மேல் கவிழ்ந்து இருந்தான்.
ஒரு பெரிய காட்டில் அவள் சஞ்சாரம் செய்தாள். அது வனாந்தரம். அவள் ஒரு மானாய் ஆனாள். மானாய் ஓடினாள். மானாய்ப் புல் மேய்ந்தாள். மானாய்த் துள்ளினாள். கவலைகள் அற்ற, சுயேச்சையான, எதேச்சையான மான். புள்ளிகள் உள்ள மான். புதரின் மறைவில் இரண்டு தீவட்டிகளைப்போல இரண்டு கண்கள் அவளைக் கவனித்து எரிந்து கொண்டு இருந்ததை, அந்த மான் அறிந்ததாய் இல்லை. அந்தத் தீபத்தை ஏந்திய உயிர் புதரை விளக்கி வெளிவந்ததும்தான் மான் அதைக் கவனிக்கலாயிற்று.
புலி –
மான் ஒரு கணம் திடுக்குற்றது. மறுகணம் அது அதனை எதிர் கொண்டது.
‘வா. என்னிடம் வா. என்னைப் புசி. என் சதை உன் நாவுக்காகவே என்னைப் புசி. உன் பசி தீர என்னைப் புசி. என் இரத்தம் உனக்காகவே. – குடி. என் உயிர் உனக்காகவே அர்ப்பணம். ஸ்வீகரித்துக் கொள்.’
புலி பாயவில்லை. பட்சமாக நின்ற இடத்தில் நின்றது. இருந்த இடத்தில் இருந்தது. அதன் செவேலென்ற நாக்கு தொங்கிக் கொண்டு இருந்தது.
அவள் அவனிடம், அவன் காதுகளிடம் சொன்னாள்.
…கோ…அஹெட்…
அவன் மௌனமாயிருந்தான்.
‘பரவாயில்லை. யூ கேன் டூ…’
அவன் செயலற்று இருந்தான்.
‘பிளீஸ்… எனக்கு வேணும்… தவிர்க்க முடியாம உடனடியாக எனக்கு வேணும்…’
அவன் சொன்னான்.
‘வேண்டாம்னு சொன்னியே… அது மட்டும் வேண்டாம்னு…’
‘இப்ப வேணும்… பிளீஸ்… இப்ப வேணும்…’
அவன் வெறுமே அவள் மேல் கவிந்து இருந்தான்.
‘புலியே; பசிக்குதென்றாயே, என்னைப்புசியேன். பட்சியேன் ஏன் வெறுமே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாய்… பார்த்தால் பசி தீருமா? என்னை எடுத்துக் கொள். உன் கூர் நகங்களைவிரி. என் மேல் படர். என்னைக் கீறி எறி. உன் வளைந்த பற்களால் என்னைக் கடித்துக் குதறு.
‘மாட்டாயா. ஏன் மாட்டாய்? இரக்கமா. ஏன்? உன் பட்சணத்துக்கெனவே நான் படைக்கப்பட்டிருக்கையில் உன் இரக்கம் எனக்கு அவமானம். ஊம் என்னை அடித்து வீழ்த்து.’ புலி தன் பல் போன வாயால் சிரித்தது. நகங்கள் அற்ற நொண்டிக் கைகளால் தடவிக் கொடுத்தது.
அவள் அவனை உதறிவிட்டு எழுந்தாள். ‘வாட்ஸ் ராங் வித் யூ’ என்றாள் அவள். அவன் தலை கவிழ்ந்து மௌனித்து இருந்தான். இதே கேள்வியை மீண்டும் அவள் கேட்டாள்.
‘அப்செட் ஆயிட்டேன். சாரி…’
அவள் ஆடை அணிந்து கொண்டாள். கண்ணாடிக்கு முன் நின்று தன்னைச் சரி பண்ணிக்கொண்டாள். அவன் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான்.
சாவியை நண்பனிடம் ஒப்படைக்கும்போது அவன் இவளைப் பார்த்துக் குறும்பாகச் சிரிப்பது தெரிந்தது. அவனை அவள் வெறுத்தாள். லாட்ஜுக்கு வெளியே சில சிறுவர்கள் பிறந்த மேனியோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்க இவளுக்கு வெறுப்பாக இந்தது.
வண்டி வைத்துக் கொள்ளலாமா என்று அவன் கேட்டதற்கு இவள் வேண்டாம் என்றாள். அவர்கள் நடந்தே சென்றார்கள்.
பாதையின் இரு பக்கம் பூவரச மரங்கள் குட்டை குட்டையாய் நின்றன. வாகனங்கள் தூசியைக் கிளப்பிவிட அவற்றின் இலைகள் சிவந்து மண் கப்பி நூதனமாகக் காட்சியளித்தன. லாட்ஜ் வாசலில் அழுக்கு போர்த்த உடம்பினராகத் தான் பார்த்த சிறுவர்கள் அவள் நினைவில் வந்தார்கள். அவள் அம்மரங்களை வெறுத்தாள்.
டவுன் பஸ் வந்து நிற்கும் இடத்தை அவர்கள் அடையும் நேரமும், பஸ் வரவும் சரியாக இருந்தது. பஸ்ஸை ஜனங்கள் ஆக்ர மித்து இருந்தார்கள்.
‘அடுத்த பஸ் காலியாக வரும். அதில் போகலாம்’ என்றான் அவன். அவள் அப்படிப் பல சமயங்களில் போகிறவள்தான். ஆனாலும் அவள் அதில் ஏறிக்கொண்டாள்.
‘நாளைக்குப் பார்க்கலாம்’ என்றான் அவன். அவள் உதடுகள் பிரிந்தன. என்னவோ சொல்ல நினைத்தாள். பின் பேசாமல் இருந்து கொண்டாள்.
பஸ் அவன் மேல் புகை விசிறிச் சென்றது. அது கண்ணுக்கு மறையும் வரைக்கும், அதன் சிவப்புக் கண்களைப் பார்த்தவாறு அவன் இருந்தான். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.
எதிர்த் திசையில் மெல்ல நடக்க ஆரம்பித்தான்.
– 1976
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
![]() |
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க... |