முதல் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2025
பார்வையிட்டோர்: 2,477 
 
 

அந்திமழையின் தூறல்களில் சின்னச் சின்னக் குமிழிகளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் சங்கமி. சின்ன வயதில் தனது தோழிகளோடு மழையில் ஆடிய பொழுதுகள் கண்முன்னே விரிந்தன. பள்ளி முடிந்து வரும்போது வந்த சின்ன சாரலில் நனைந்து வந்ததற்கே மறுநாள் காய்ச்சலில் பள்ளிக்கே போகாமல் இருந்த பொழுதுகள் இன்று நினைத்தாலும் மகிழ்ச்சியைத் தருகின்றன.

இன்று அந்த மாதிரி இளைப்பாற முடியாமல் வேலைப்பளு கழுத்தை இறுக்குகிறது. ஒரு நாள் சமைக்காமல் நிம்மதியாகத் தூங்கி எழுந்து எங்காவது போய்விடலாமா என்று எண்ணத் தோன்றும். காலையில் எழுந்து அரக்கப் பறக்க சமைத்து, வேலைக்கு ஓடி அங்கும் பரபரவென வேலை பார்த்து, மாலை வீடு வந்தால் வீட்டிலும் கணவர், மாமனார், மாமியார் என அனைவருக்கும் சமைத்துப் போட்டு ஆயாசமாய் அமருகையில் தனக்கென எதுவும் செய்ய இயலாமல் சோர்வு தட்டிப் போகிறது.

நேற்று தனது பள்ளித் தோழி ஆனந்தியைப் பார்க்கையில் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள். சங்கமி, ஆனந்தி, சாந்தி, விஜயலட்சுமி, பார்கவி என ஐந்து பேரும் நல்ல தோழிகள். எங்கு போனாலும் ஒன்றாகச் சென்று ஒண்ணாகத்தான் வருவார்கள். வகுப்பு டீச்சரைப் பார்க்கப் போனாலும் கட்டுரை நோட்டு சப்மிட் செய்தாலும் ஒரே நாளில் என, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில்லை. நெல்லிக்காய் வாங்கினாலும் ஐந்து பேரும் ஒன்றாகச் சாப்பிடுவர். ஐஸ் வாங்கினாலும் அப்படித்தான். ஒரு நாள் யாராவது விட்டுச் சாப்பிட்டாலோ, அன்று ரகளைதான். செய்தவளிடம் மற்றவர்கள் பேசுவதில்லை. விஜிதான் இந்தக் காரியத்தை அடிக்கடி செய்வாள். மற்றவர்கள் கிளாஸ் நோட்டு முடிப்பதற்குள் முடித்து சப்மிட் செய்வாள். அன்று பூராவும் மற்ற நாலுபேரும் பேசமாட்டார்கள். எவ்வளவு கெஞ்சினாலும் இறங்குவதில்லை. விஜி படிப்பில் கெட்டிக்காரி. மற்றவர்கள் சுமார் ரகம். சங்கமி சுமாராகப் படித்தாலும் துறுதுறு வென்றிருப்பாள்.

தேர்வு வந்தால் ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து படிப்பர். பள்ளி இறுதிப் படிப்பு முடிந்து அனைவரும் பிரிந்து செல்கையில் ஐந்து பேரும் அழுத அழுகை இன்றைக்கும் நினைத்தால் சிரிப்பு வரும். என்றாவது ஒரு நாள் தோழிகளைச் சந்திக்கையில் எப்படி இருக்கிறார்கள் என விசாரிப்பதுண்டு. ஒரு சிலர் மேல்படிப்பு படித்தாலும் திருமணம் போன்ற காரணங்களால் வேலைக்குப் போகவில்லை. சங்கமி மட்டும் மேல்படிப்பு படித்து நல்ல

வேலையில் இருக்கிறாள். இந்த குரூப்பில் நன்றாகப் படித்த விஜி கூட சரியான கணவர் அமையாத காரணத்தால் ரொம்ப கஷ்டப்படுகிறாள் எனக் கேட்டபோது சங்கமிக்கு வருத்தமாக இருந்தது. ஏன் பெண்கள் மட்டும் திருமணம் முடிந்தால் தங்களது தோழிகளோடு பழைய நட்பில் இருக்க முடிவதில்லை? ஆண்கள் மட்டும் திருமணம் ஆனாலும் அதே நட்போடும் மகிழ்வோடும் வாழமுடிகிறது? இந்தக் கேள்வி அவள் மனதைப் பல சமயங்களில் சிந்திக்க வைப்பதுண்டு. பெண்களுக்கு ஏற்படும் வேலைப்பளு, கணவனும் அவனது வீட்டினரும் அனுமதி மறுத்தல், இயலாமை எனப் பல காரணங்கள் அவளுக்குத் தோன்றுவதுண்டு.

வெவ்வேறு ஊர்களில் இருக்கும் தனது தோழிகளைத் தொடர்பு கொண்டு பேசவேண்டும் என நினைப்பாள். அவர்களது புதிய எண் அவளிடம் இல்லை. அவளுக்கு இருக்கும் வேலைப்பளுவில் இப்படிப்பட்ட தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு நேரம் ஒதுக்கும் அளவுக்கு நேரமும் இல்லை. அதைக் கூறினால் கண்டுகொள்வோரும் இல்லை. இப்படி தனது ஆசைகள் நிராசையானது போல் ஆண்களுக்கு நடந்தால் மட்டும் கொதித்துப் போவார்கள்.

“என்ன நெஞ்சழுத்தம் இருந்தா. என் பிரண்ட பார்க்கவிடாம பண்ணுவ” என்ற கணவனின் வார்த்தை சங்கமிக்கு அவள் மறுக்கையில் கூறியது நினைவிற்கு வந்தது. இதே வார்த்தையை அவள் அவனைப் பார்த்துக் கூறினால் வீடு அல்லோலப்படும். ‘அளவுக்கு மீறிப் பேசுறா’ என்ற புகார் அம்மா காதுவரை போய்விடும். இப்படித்தான் இவளது ஆசைகள் பலவற்றை அடக்கி அடக்கி ஒடுங்கிப் போனாள். ஒடுங்கிப் போனது அவளது ஆசைகள் மட்டுமல்ல, சிறகு முளைத்த கனவுகளும் தான்.

சங்கமிக்கு நிறைய எழுதவேண்டும் என்ற கனவு இருந்தது. பள்ளி முடிந்து கல்லூரி செல்லுகையில் கவிதைகள் எழுதுவாள். திருமணத்திற்குப் பின் அவள் எழுதிய கவிதையைப் படித்த அவளது கணவன் ‘இனிமேல் எழுதாதே’ என்று சொல்லிவிட்டான். ஏனென்று கேட்டால் அவள் எழுதிய காதல் கவிதைகளைப் படித்தால் மற்றவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்றான். இதெல்லாம் ஒரு காரணமா? மனைவிக்கு எழுதுகிற ஆற்றல் இருக்கிறதே என்று மகிழ்ந்து, அவளை ஊக்கப்படுத்தத் தெரியவில்லை. ஒரு வேளை தன்னளவு அவன் படிக்கவில்லை என்பதால்தான் இந்தப் புத்தியோ என்று அவள் நினைப்பதுண்டு. ஒரு வேளை அவள் எழுதிய கவிதைகள் மற்றவர்களிடம் பாராட்டுப் பெற்று அவள் பெரிய ஆளாவதை அவன் விரும்பில்லையா என்று கூட நினைக்கத்தோன்றும். ஆனாலும் கவிதை எழுதினால் மட்டும் பெரிய ஆளாகிவிட முடியாது? என்று எண்ணி

அவனுக்காக அவள் எழுதுகின்ற ஆசையையும் அன்றோடு ஒதுக்கிவிட்டாள். ஆனாலும் அவ்வப்போது தோன்றுகின்ற நினைவுகளைக் கவிதைகளாக எழுதி அலுவலகத்தில் ஒரு டைரியில் வைத்திருந்தாள்.

ஆறு மாதங்கள் கடந்த நிலையில் சங்கமியோடு வேலை பார்க்கும் சங்கமித்ரா தனது கையில் வைத்திருந்த ஏதோ ஒன்றை சங்கமியின் டேபிளில் வைத்துப்போனாள். காலையில் வந்தவுடன் டேபிளில் இருந்த பரிசினைக் கையில் எடுத்துப் பார்த்த சங்கமி அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் வியந்துபோனாள். கண்ணிலிருந்து துளிர்த்த கண்ணீரை மறைக்கவே வெகு பிரயத்தனப்பட்டாள். அவளருகில் வந்த சங்கமித்ராவும் அலுவலக நண்பர்களும் இணைந்து ‘ஹேப்பி பேர்த்டே டூ யூ’ என கோரசாகப் பாட மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள் சங்கமி.

“யாரோட ஏற்பாடு இது” என மித்ராவைப் பார்த்துக் கேட்க,

“நான் தான். உனக்கு என்ன கிப்ட் வாங்கலாம்னு ஆலோசனை பண்ணும்போது உனக்குக் கவிதை எழுதுற பழக்கம் இருக்கறதால அதைத் தொகுத்து நூலாக்கி ப்ரசண்ட் பண்ணலாம்னு ஐடியா சொன்னேன். இது வித்தியாசமா இருக்கும்னு மத்தவங்களும் ஒத்துக்கிட்டாங்க. உனக்குப் பிடிச்சிருக்கா” என்ற மித்ராவைக் கண்ணீர் மல்க கட்டிக்கொண்டாள் சங்கமி.

“எனக்குக் கவிதை எழுதுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். நூலாக ஆக்கிப் பார்க்கனும்னு ஆசை. என் வீட்டுக்காரருக்கு நான் கவிதை எழுதுறது பிடிக்காததுனால விட்டுட்டேன். எல்லோருக்கும் ரொம்ப நன்றி” என்று சொல்லி கைகூப்பினாள். அவள் கொண்டு வந்த கேக்கை எல்லோரும் உண்டு மகிழ, கைகுலுக்கி அனைவரும் வாழ்த்து தெரிவிக்கத் தன்னை மறந்து நூலை கையில் எடுத்துப் பார்த்தாள் சங்கமி. ‘பூ பூக்கும் தருணம்’ என்ற தலைப்பிலான தனது கவிதைப் புத்தகத்தை ஏந்தியபோது தனது குழந்தையின் உடலை முதன் முதலாகத் தீண்டியது போல் குதூகலமானாள்.

– முத்தமிழ்நேசன் இதழில் வந்தது.

சுந்தரிமணியன் அவர்கள் மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சோமசுந்தரி. தமிழில் முதுகலைப்பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர். கல்லூரியில் பேராசிரியராக மூன்றரை ஆண்டுகள் பணியனுபவம் பெற்றவர். தற்போது ஒரு நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றி வருகிறார். முதலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தவர் பிறகு சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார். உலகத் தமிழ் என்ற இணைய இதழின் துணைஆசிரியராகவும் பணியாற்றியவர். இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்த சிறுகதைகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *