மீண்டும் அவன் சவூதிக்குப் போகிறான்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,221 
 
 

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டின் முன் ஹோலில் கிழக்கு நோக்கிப் போடப் பட்டிருந்த சாய்வு நாற்காலியிலே சரிந்து படுத்திருந்தான் நௌபல். எதிரே ஜன்னலில் தெரிந்த முற்றத்தின் ஒரு பகுதி அவன் விழிகளிலே விழுந்தது. அங்கே, செழித்து வளர்ந்து நின்ற தாள் ரோஜா மரங்களும் ரோஜாச் செடிகளும் வெயிலிலே குளித்து நின்றன. ஆனால் இலைகள் அடர்த்தியாக நெருங்கிக் கிடந்த சில இடங்களிலே வெயில் உட்புக இயலாது பின்வாங்கிக் கொண்டிருந்தது. 

வெயிலின் அகோரம் பெரும் பகுதி தணிந்துவிட்டி ருந்த போதும், தாள் ரோஜா மரங்கள், ரோஜாச் செடிகள் ஆகியவற்றைவிட்டு இன்னும் வாட்டம் ஓட்டம் பிடிக்க வில்லை. அம் மரங்களும் செடிகளும் காற்றிற்கு வளைந்து கொடுத்து மெல்ல அசைந்து கொண்டிருந்தன. அவற்றின் நிழல்களோ பக்கத்துச் சுவரிலே படம் வரைந்து கொண்டி ருந்தன. 

அம் மரங்களினதும், செடிகளினதும் தோற்றங்களும், கிளைகளினது அசைவுகளும், “நீங்கள் போகவேண்டாம். நீங்கள் போகவேண்டாம்” என்று கெஞ்சிக் கேட்டுக்கொள் வது போல அவனுக்குக் காட்சியளித்தன. அவன் அங்கிருந்து தன் பார்வையைப் படீரென்று ஹோலுக்குள் இழுத்துக் கொண்டான். பின்பு, அவன் பார்வை அவனுக்கு எதிரே ஹோல் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படத்திலே சென்று படிந்தது. தன் மனைவி, தனது புதல்வன் ஆகியவர்களோடு தானும் இணைந்து எடுத்துக் கொண்ட அப் புகைப்படத்தைப் பார்த்ததும் அவன் விழிகளில் நீர் சொரு சொருவென்று ஊறிவந்தது. 

தன் மனைவியையும், ஒரே ஒரு மகனையும் விட்டுப் பிரிவதென்றால் அவனுக்கு வேதனை ஏற்படாதா என்ன? உடனேயே அவன் தன் பார்வையைக் கீழே தாழ்த்திக் கொண்டான். 

தன் வதனத்தை முழுமையாய் ஒரு முறை அழுந்தத் துடைத்து தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு மீண்டும் தலையை மேலே கிளப்பினான். இம்முறை அவனின் பார்வை ஜன்னலின் ஊடாய்த் தொலைவில் தெரிந்த வான் வெளியிலே சென்று நிலைத்தது. சில வினாடிகளின் பின் அவன் நினைவிலே அவன் வாழ்வில் நிகழ்ந்த சில சம்ப வங்கள் நிழலாடின. 


அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை பத்து பத்தரை மணியிருக்கலாம். தனது வீட்டின் முன் ஹோலில் அவனும் அவன் மனைவி மசூராவும் எதிர் எதிராக நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர். 

அவனின் முகம் காலை வான் போல் மிகவும் தெளி வாய்த் திகழ்ந்தது. ஆனால், அவளின் வதளமோ மாதுளம் தளிர் போல் சற்றுச் சிவப்பேறிக் காணப்பட்டது. 

முதலில் அவளே கணவனை நோக்கி மெல்ல இதழ்களைப் பிரித்தாள். 

“நம்மிட வாழ்க்க ஒரேயே கடன்பர்ர வாழ்க்கை யாத்தானிருக்கு” என்றுவிட்டு, ‘ம்…ஹு… என நெடு மூச்சொன்றையும் உதிர்த்து விட்டுக் கொண்டாள். 

“அதுக்கு நாம என்ன செய்யிற, என்ட சம்பிளத் துக்க வாழ்றதாலதான் இந்த நில. இதோட நமக்கு வேற ஒரு வருமானமாவது வருமிண்டா நாம இப்படிக் கஷ்டப் படத் தேவையில்லத்தான். அப்படி வருமானம் வாறத் துக்கும் நமக்கு ஒரு வழியுமே இல்லாமல்தான் இருக்கு. என்ன செய்யிற, ஒரு மாதிரியாச் சமாளிச்சுக் கொண்டு போறதுதான்.” 

“ஒரு மாதம் ரெண்டு மாதம் இல்லாட்டி ஒரு வருசம் ரெண்டு வருசம் எண்டாலும் பறுவாயில்ல. இது நீட்டுக்கு இப்படித்தான் இருக்கணும் போலல்லவா தெரியிது.உங் களப் போல உத்தியோகம் பாக்கிற சீனிக்காக்காட மகன் றசாக்கும். அசன் நானாட மகன் சபீக்கும் சவூதிக்குப் போய் இண்டைக்கு அவங்கட குடும்பம் எவ்வளவோ நல்லா ரிக்கி. நீங்களும் சவூதிக்குப்போனா என்ன? உங்களுக்கும் லீவு எடுக்கலாந்தானே!’ 

மேலும் அவள் கன்னங்களில் செம்மை ஊறிக் கொண்டது. இமைகளும் படபடவென அடித்துக் கொண்டன. 

“லீவு எடுக்கலாந்தான். அதப்பத்தி ஒண்டுமில்ல. ஆனா…” என்று இழுத்தான். 

“ஆனா என்ன? போறத்துக்கு பதினைந்து இருபது வேண்டுமே அத எப்படி எடுக்கலாமெண்டு யோசிக்கிங்க போலரிக்கு நம்மிட ஊடு வளவு மெயின் றோட்டுக்குக் கிட்ட இருக்கிறதால் அத ஈடுவச்சி இருபதுனாயிர மென்ன நாப் பதுனாயிரம் வேணுமெண்டாலும் காசு எடுக்கலாம். நீங்க அதப்பத்தி யோசிக்கத் தேவல்ல.” 

“சேச்சே … நான் அதப்பத்தி யோசிக்கல்ல. அப்படிக் காசு எடுக்கலாமெண்டு எனக்கும் தெரியுந்தான். ஆனா உங்களையும் நம்மிட ஒரே மகன் இரசாத்தையும் விட்டுப் பிரிஞ்சிருக்கணுமே அதப்பத்தித்தான் யோசிக்கன்.. 

போன வரிசம் தொடக்கத்தில் வெளிநாட்டுக்குப் போறத்துக்கு நானும் நினச்சான். ஆனா … உங்களையும் மகனையும் பிரிஞ்சிருப்பதுதான் அப்பயும் எனக்கு மிச்சம் கஷ்டமாக இருந்திச்சி. அதனால நான் அவ்வெண்ணத்தையே கைவிட்டிட்டன். என்டாலும் நீங்க என்ன விட்டு விடுவதாகத் தெரியல்ல, சரிவின்ன நான் போறன்.” 

“உங்கள விட்டுப் பிரிஞ்சிருப்பது எனக்குமட்டும் சந்தோஷமா என்ன.. அத நினச்சாலே எனக்கும் நெஞ்சு பதறத்தான் செய்யிது. என்ன செய்யிற நம்மிட சந்தோஷ மான வாழ்க்கைக்காக ஆரம்பத்தில சில தியாகங்களச் செய்யத்தான் வேணும். ஆர எடுத்துக்கிட்டாலும் சரி ஆரம் பத்தில சில தியாகங்களச் செஞ்சவங்கதான் இன்டைக்கு மிச்சம் நல்லாரிக்காங்க.” 

அவளின் வதனத்தில் மகிழ்ச்சி வற்றிக் கிடந்தது. என்றாலும் அவளின் யெளவனம் அதனையும் மீறிக் கொண்டு பிரகாசிக்கத் தவறவில்லை. 

“வீணாக என்னத்துக்கு கதையை வளர்த்துக்கொண் டிருப்பான். நான் போறன்.” 

அவன் தன் நெற்றியில் கலிந்து கிடந்த தலைமயிரை ஒதுக்கி விட்டுக் கொண்டான் 

அன்று முதல் நௌபல் சவூதிக்குச் செல்வதற்கான பணிகளிலே ஈடுபட்டு வந்தான். 

ஏறக்குறைய மூன்று மாதங்கள்தான் கழிந்திருக்கும். அதற்குள் அவன் தனது பயணத்துக்கான சகல ஒழுங்குகளையும் பூர்த்தி செய்துகொண்டு சவூதியின் தலைநகரான ரியாத்தில் வீட்டுக் கார்ச்சாரதியாக வேலையும் பெற்றுச் சென்றான். 

இவ்வளவு குறுகிய காலத்துள் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு தொழில் கிடைத்தது. அதுவும் வீட்டுக் கார்ச்சாரதியாகத் தொழில் கிடைத்தது நௌபலுக்கு மிக்க திருப்தியையும், புளகாங்கிதத்தையும் ஏற்படுத்தியதுமட்டு மல்ல அதற்காகச் செலவு செய்த இருபதினாயிரம் ரூபாய்க் காசுகூட அவனுக்குத் தூசாகவே தோன்றியது. 


நௌபல், வீட்டின் கார்ச் சாரதியாகப் பணிபுரியத் தொடங்கி, இருபத்திரண்டு மாதங்கள் நிறைவு பெற இன்னும் சரியாக இரு வாரங்களே இருந்தன. 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்பவர்களில் சிலரது இடங்கள் ஏதோ ஒருவகையில் குறைபாடுள்ளதாகவும் வந்து அமைவதுண்டு. ஆனால், நௌபல் வேலைவாய்ப்புப் பெற்றுச்சென்ற இடமோ எல்லா வகையிலும் ஒரு நல்ல இடமாகவே வந்து வாய்த்தது. அதனால் அங்கு, அவனது வாழ்வு மிக்க நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்தது. அதுமட்டு மல்ல அவ்வளவு காலமும் மிக விரைவாகவே கழிந்துவிட்டது போலவும் அவனுக்குத் தோன்றியது. 

அன்று வெள்ளிக்கிழமை. பிற்பகல். நௌபலின் எஜமான் அவனைத் தன் அறைக்கு அழைத்திருந்தார். 

சகல வசதிகளோடும் கூடிய அந்த அறையிலே இதமான ஒரு சுகந்தமும் பரவியிருந்தது. 

நௌபல் அங்கு நுழைந்ததும் வழமைபோல அன்றும் தமான ஒரு சுகம் அவனைத் தழுவிக்கொள்ளத் தவற வில்லை. தன்னைச் சுதாரித்துக்கொண்ட அவன் மெல்ல நடந்து சென்று தன் எஜமானின் முன்னே அடக்க ஒடுக்கமாய் நின்று கொண்டான். அவன் இதழ்களில் ஒரு புன்னகை மட்டுமே நெளிந்தோடியது. 

நௌபலைப் பார்த்ததும் எஜமான் அவனைத் தனக்கு எதிரே ஒரு நாற்காலியில் உட்காரச்செய்தார். பின்பு அவனோடு ஆங்கிலத்தில் உரையாடினார். நௌபலும் தன் எஜமானோடு சரளமாய் ஆங்கிலத்தில் உரையாடினான்.  

அரசனொருவனுக்காக உருவாக்கப்பட்டது போல் தொற்றமளித்த ஓர் ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து கொண்ட எஜமான் மலர்ந்த முகத்தோடு நௌபலை நோக்கினார். 

“நீங்கள் இங்கே வந்து கார் ட்றைவர்த் தொழிலில் சேர்ந்து இன்னும் இரண்டு வாரங்களில் சரியாக இருபத்திரண்டு மாதங்கள் ஆகிவிடும் என்ன?” என்றார். 

“ஆம்.” இது நௌபல். 

“அப்படியென்றால் இன்னும் இரண்டு வாரங்களில் ஊருக்குப் போகவேண்டும் என்ன?” 

“ஆம்.” நௌபல் தலையையும் மெல்ல அசைத்துக் கொண்டான். 

“சரி… சந்தோஷமாய் ஊருக்குச் சென்று அங்கே உங்களுக்குரிய இரண்டு மாத லீவையும் இனிமையாகக் கழித்துவிட்டு மீண்டும் இங்கே வந்து இன்னும் இரண்டு வரு டங்கள் என்னிடம் இதே தொழிலைச் செய்யுங்களன் என்ன?” 

”நாங்கள் வெளிநாட்டுக்குச் சென்று தொழில் செய் வதற்கு மூன்று வருடங்கள்தான் லீவு எடுக்கலாம். அதில் ஏறக்குறைய இரண்டு வருடங்களை நான் இங்கே கழித்து விட்டேன். வேண்டுமானால் நான் இன்னும் ஒரு வருடம் லீவு எடுக்கலாம். ஆனால் எனது மனைவி இரண்டு வருடங் களுக்குமேல் ஒரு நிமிடம்தானும் என்னைப் பிரிந்திருப்ப தைத் தான் விரும்பவில்லை போல் தெரிகிறது. இரண்டு வருடங்கள் முடிந்ததும் உடனேயே ஊருக்குத் திரும்பி விடுங்கள் என்று கூட ஒரு முறை எனக்கு எழுதியிருந்தார். நானும் ஊருக்குத் திரும்பி குடும்பத்தைப் பிரியாது அங்கு மீண்டும் எனது பழைய தொழிலைச் செய்து கொண்டு வாழவே விரும்புகிறேன்.” நௌபலின் வதனத்தில் பூரிப்பு பூத்துக்கிடந்தது. 

அவர்களின் உரையாடல் தொடர்ந்தும் ஆங்கிலத்திலேயே நிகழ்ந்தது. 

“இலங்கையிலிருந்தோ அல்லது வேறு எந்த நாட்டி லிருந்தோ நான் வேறொருவரை எனது காருக்கு ட்றைவராக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் அவர் உங்களைப்போல் வந்து வாய்ப்பாரோ என்றுதான் எனக்கு யோசனையாய் இருக்கிறது. நீங்களோ சிறந்த பல பண்பு களுள்ள ஒரு நல்ல பிள்ளை, எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கக் கூடிய திறமையும், ஆற்றலும் தங்களிடம் உண்டு. நீங்களிருந்தால் எனது எந்த வேலையும் மிக இலகுவிலே நிறைவேறிவிடும். ஆகையினால், எதிர்வரும் ஆண்டு மட்டும் நீங்கள் மீண்டும் இங்கே வந்து இதே தொழிலைச் செய் யுங்கள். உங்களுக்கு இன்னும் ஒரு வருடமாவது லீவும் எடுக்கக் கூடியதாகத்தானே இருக்கிறது. எனக்காகக் கொஞ்சம் விட்டுத்தாருங்கள். நான் உண்மையைத் திறந்து கூறுகிறேன். எனக்கு எதிர்வரும் ஆண்டு நிறைய நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனாலேதான் நான் உங்களை ப்படி விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு நிற்கிறேன். இல்லை எனில் நான் உங்களை உங்கள் விருப்பப்படியே விட்டுவிடுவேன்” என்றுவிட்டு நௌபலை ஊன்றிக் கவனித்தார் எஜமான். 

தன்னை தம் குடும்பத்திலுள்ள ஒருவரைப்போல் நடத்தியது மல்லாமல் நிறைய நிறையச் சலுகைகளும் வழங்கி வந்த தனது எஜமான் இவ்வாறு விநயத்தோடு வேண்டிக்கொண்டதும் நௌபலால் அதனைத் தட்டிக் கழிக்க இயலவில்லை. 

“சரி… நான் எதிர்வரும் ஆண்டும் கார் ட்றைவராகத் தங்களிடம் பணி புரிவேன்.” 

“வீட்டுக்குப் போனதும் உங்களின் மனைவி தடுத்து விடுவாரோ என்னவோ” 

“சீச்சீ… இனி அதெல்லாம் நடக்காது.”

“அப்படியென்றால் எனது கையில் தொட்டுச் சொல்லுங்கள்.” 

எஜமான், நௌபலை நோக்கித் தனது வலது கரத்தை நீட்டிக்கொண்டார். 

நௌபலோ, சரேலென்று எழுந்து சென்று எஜமானின் கையில் தொட்டுச் சொன்னான். 

“நிச்சயமாக நான் இங்கு மீண்டும் வந்து, எதிர் வரும் ஆண்டும் தங்களிடம் பணி புரிவேன்.” 

“அப்படியென்றால் சரி. நீங்கள் ஊருக்குப் போய்த் திரும்புவதற்காக டிக்கெட் ஒழுங்குகளைச் செய்கிறேன்.” 

வெகு கம்பீரமாகக் காட்சி தந்தார் எஜமான். குறுந் தாடியும், மீசையும் அவரின் முகத்திற்கு அழகாகவே இருந்தன. 


நௌபல் ரியாத்திலிருந்து ஊர் திரும்பி ஆறு வாரங்கள் அகன்றன. 

ஒரு தினம். அந்தி சாயும் வேளை. வீட்டு முற்றத்திலே பரப்பப்பட்டிருந்த கடற்கரை மணலிலே தன் கணவன் நௌபலோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த மசூரா அங்கு திடீரென்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள். 

“நீங்க பழய தொழில்ல சேர்ரத்துக்கான ஒழுங்கு களச் செய்யாம சும்மா தெர்ரிங்க… அழிச்சும் வெளிநாட்டுக்குத்தான் போப்பிறிங்களா என்ன…?” 

தன் நிலையினை எப்படிக்கூறலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த அவனுக்கு அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக வந்து வாய்த்தது. அதனை அவன் நழுவ விடுவானா? 

”ஓம்” என்றான் நௌபல் எவ்விதச் சலனமுமின்றி.

“சே… பொய் சொல்றீங்க.” 

“இல்ல, உண்மதான்.” 

”நீங்க,இந்த ரெண்டு வருசமும் உழச்சதில சாமானு களத் தவிர காசி மாத்திரம் ஒரு லெச்சத்தி எண்பதினா யிரம் மட்டில இப்ப நமக்கிட்ட இரிக்கி. அதக் கொண்டு ஒரு தொழில ஒழுங்கு செஞ்சி ஒரு வருமானத்த நாம உண்டாக் கிக்கலாம். அதோட, உங்கட பழய தொழிலயும் பாத்துக் கொண்டா, நம்மிட குடும்ப வாழ்க்கைக்கு நல்லாக் காணும்.எவ்வளவுதான் கொட்டிக் குவிக்கலாம் என்டா லும், வெளிநாட்டுக்கு இனிப் போற வேல் வாணா உங்களை விட்டுப்பிரிஞ்சி இனிக் கொஞ்ச நேரமும் என்னால் வாழ ஏலா சும்மா போட்டுட்டு வேலயப்பாருங்க.” ஒதுங்கிக் கிடந்த நெஞ்சுச் சீலையை மேலே இழுத்துவிட்டுக் கொண்டாள். 

“நானும் ஊருக்குத் திரும்பி முக்கியமா என்ட பழய தொழிலச் செய்துகொண்டு உங்களயும், மகனையும் விட்டுப் பிரியாது வாழ வேணுமெண்டுதான் எண்ணியி ருந்தன்.ஆனா ..நான் ஊருக்குத் திரும்பிறத்துக்கு ரெண்டு கிழமைக்கு முன்ன என்ட எஜமான் என்னக் கூப்பிட்டு, வாற வருசம் அவருக்கு கொள்ளயா வேலைகள்ளாம் குவிஞ்சு கிடக்குதெண்டும் அப்ப நான் அவரிடமிருந்தால் அவ் வேலைகள்ளாம் மிச்சம் லேசா முடிஞ்சிரும் எண்டும், ஆனபடியால் வாற வருசமும் நான் அவரிடம் வந்து வேலை செய்ய வேண்டு மெண்டும். தயவாக என்ன வேண்டிக் கொண்டார். நான் வேல செய்யக்க எவ்வளவோ உதவிகள் ளாம் செய்த என்ட எஜமான் என்ன இவ்வாறு வேண்டிக் கொண்ட போது அவர்ர வேண்டுகோள் தட்டிக் கழிக்க முடியல்ல. நான் அவ்வாறே செய்வதாக வாக்கும் கொடுத் திட்டன். என்ன செய்யிற… ஒரு வருசந்தானே… அது கெதியா ஓடிரும்.” 

“ஒரு வருசமென்ன, னி ஒரு நிமிசங்கூட உங்களப் பிரிஞ்சிருக்க ஏலா. என்ன வாக்கும் தீக்கும் விட்டிட்டு வேலயப் பாருங்க.” 

“உலகத்தில வாக்குத்தான் பெரிசு. மனிசன்டா கொடுத்த வாக்க எப்படி எண்டாலும் காப்பாத்தித்தான் தீரணும். எனக்கு இப்படி வாக்குக் கொடுக்க வேண்டி வந்ததும் உங்களாலதான். நான் வெளிநாட்டுக்கே போகாம இருந்திருந்தா எனக்கு இந்த நில வந்திருக்காதே! ஆனபடி யால என்னத் தடுக்காதீங்க.” 

“அப்படிண்டா, நீங்க போகத்தான் போறிங்க?”

“ஓம், போகத்தான் போறன்.” 

“உங்களக் கெஞ்சிக் கேக்கன் நீங்க போக வேண்டாம்.” 

“இல்ல, நான் போகத்தான்போறன்.” நௌபலின் வதனத்தில் உறுதி ஒளிவிட்டது. 

”உங்களுக்கு போறதுதான் முக்கியமாத் தோணுது. எங்களப் பத்தி கொஞ்சங்கூடப் பொருட்படுத்திறதாத் தெரியல்ல. சரி… போங்க. ஆனா… தயவு செஞ்சி நீங்க போற அண்டைக்கு உங்கட சாமான் கீமான் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ஒரே போக்காப் போயிருங்க. அதுக்குப்பொறகு நம்மளுக்குள்ள எந்த விதமான தொடர்புகளுமில்ல என்கிறதையும் நெனவில வெச்சிக்கங்க.” மசூராவின் கன்னங்கள் அந்திவான் போல சிவப்பாகிக் கிடந்தன. 

“நீங்க என்னப்பத்தி வித்தியாசமா நெனைக்க வேணா. நான் உங்களயும், மகனையும் என்ட உயிரிலும் மேலாகவே மதிக்கன். என்டாலும், இந்த விஷயத்தில கொடுத்த வாக்க நான் காப்பாத்தியே தீருவேன். நீங்க எப்படித்தான் முடிவு செய்தாலும் எனக்குக் கவலயில்ல. ஆனா, எதயும் ஆற அமர யோசித்து முடிவு செய்வதுதான் நல்லது. நான் அவ்வளவுதான் சொல்லுவன்.” 

அத்தோடு அவர்களின் உரையாடல் முற்றுப் பெற்றது. பின்பு அவர்களிருவரும் அங்கிருந்து அகன்று வீட்டுக்குள் பிரவேசித்தனர். 


சுவர்க் கடிகாரம், ‘டிங் டிங்..’ என்று ஒலி எழுப் பியது. சுயநிலை எய்திய நௌபல் வான் வெளியிலே நிலைத் திருந்த தன் பார்வையை ஹோலுக்குள் இழுத்து சுவரிலே மாட்டப்பட்டிருந்த அக் கடிகாரத்தின் மேல் செலுத் தினான். மணிக்கம்பியும் நிமிடக்கம்பியும் மணி மூன்று என்பதை விளம்பிக் கொண்டிருந்தன. 

அவன் சாய்வு நாற்காலியைவிட்டு ‘விசுக்’ கென்று எழுந்து அறைக்குள் விரைந்து அவசர அவசரமாய் உடை மாற்றிக்கொண்டு மீண்டும் ஹோலுக்குள் வந்தான். 

ஹோலில், கிணற்றிற்கு எதிரே இடப்பட்டிருந்த கதவு நிலையிலே சாய்ந்தபடி நின்றிருந்தாள் மசூரா. அவள் அருகே பன்னிரண்டு வயதை எட்டிக்கொண்டிருந்த அவர்கள் புதல்வன் இர்சாத்தும் நின்றிருந்தான். 

நௌபல், அவர்களைப் பார்த்ததும் அருகே படர்ந்தான்.  

மசூராவின் இமைகள் உப்பியும், விழிகளும், வதன மும் சிவப்பாகியும் கிடந்தன. நெடு நேரம் அழுதிருக்க வேண்டும் போல் தோன்றியது. 

இர்சாத்தோ சோகமே உருவாக நின்றிருந்தான். அவன் கண்கள் இரண்டும் நீரில் மிதந்து கொண்டிருந்தன. 

அவர்களைப் பார்த்ததும் நௌபலுக்கும் விழிகள் குளமாகி விட்டன. உதட்டைக் கடித்து தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டான். மறுகணம், அவன் தன் மனைவியை நெருங்கினான். 

“புள்ள.. எனக்கு நாளப்பொறத்தைக்குக் கப்பல் இருக்கி. எல்லாத்துக்கும் இண்டைக்குப் போனாத்தான் வசதியாக இருக்கும். நான் போயிட்டு வாறன்.” அவனின் குரல் கரகரத்தது. 

“…” அவள் எதுவுமே பேசவில்லை.

“புள்ள…நான் போயிட்டுவாறன்……” மீண்டும்அவன். 

அப்போதும் அவள் எதுவுமே பேசவில்லை. 

சுவரில் வரைந்த சித்திரம்போல் அசையாமல் நின்றி ருந்தாள். ஆனால், அவள் நயனங்கள் இரண்டும் மாரிகால மழை மேகமென நீரைப் பொழிந்து கொண்டிருந்தன. 

அவனுக்குத் தன் நெஞ்சில் ஒரே முறையில் பல கணைகள் வந்து பாய்ந்ததுபோல் இருந்தது. 

நௌபல் அங்கிருந்து மெல்ல அகன்று தன் புதல்வன் இரசாத்தை நெருங்கினான். அவனின் தலையை வருடிவிட்டு முத்தமிட்டுக் கொண்டான். 

“நான் போயிட்டு வாறன் மகன்.”

‘போயிட்டு வாங்க வாப்பா.” இர்சாத்தின் விழி களிலிருந்து அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளமெனக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. 

தன் மனைவி, மகன் ஆகிய இருவரின் தோற்றங் களும் செயல்களும் இம் முறை நௌபலின் கண்களில் ‘பொலு பொலு’ வெனக் கண்ணீரைப் பொங்கி எழ வைத்தன. 

அவனுக்கு வாய்விட்டே அழ வேண்டும் போல் இருந்தது. ‘டக்’கென்று நீளக் கால்சட்டைப் பைக்குள் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்து தன்னை மீண்டும் கட்டுப்படுத்திக் கொண்டான். 

தான் நின்றால் துன்பம் மேலும் பெருகும் என்பது மட்டுமல்ல சில வேளை தன் பிரயாணமே தடைபட்டு விடவும் கூடும் என்பதனாலும் நௌபல் உடனேயே அங்கி ருந்து அகன்று சாய்வு நாற்காலியின் அருகே வைக்கப்பட் டிருந்த அலுமாரியின் பக்கமாய் அடியெடுத்து வைத்தான். 

சில வினாடிகளின் பின் அவன் அலுமாரியோடு ஒட்டியவாறு தரையிலே வைக்கப்பட்டிருந்த பெரிய ‘லெதர் சூட்கேஸை எடுத்துக் கொண்டு தன் மனைவியையும் மகனையும் ஒரே பார்வையில் நோக்கி, “நான் போயிட்டு வாறன்” என்றுவிட்டு அவர்களின் பதிலுக்குக்கூடக் காத்திருக்காது வீட்டை விட்டு வெளியேறி, பாதையிலே இறங்கினான். அவன் விழிகளிலிருந்து கண்ணீரும் கன்னங்களில் இறங்கியது. 

– தினகரன் வாரமஞ்சரி 1984 நவம்பர் 04.

– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.

யூ.எல்.ஆதம்பாவா உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *