மாறுபட்ட அனுமத் ஜயந்தி!





தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை அன்று மூல நட்சத்திரத் தில், அனுமத் ஜயந்தி கொண்டாடப் படுகிறது. ஆனால், சில மாநிலங்களில் அனுமத் ஜயந்தி வேறு மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அனுமனின் பெற்றோரான கேசரியும், அஞ்சனையும் மலை சிகரம் ஒன்றில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
அந்த வேளையில், பிரம்மதேவனின் கட்டளைப்படி அஞ்சனையின் கர்ப்பத்தில் வாயு பகவான் பிரவேசித்தார் என்றும், வாயுவின் அவதாரமாக அனுமன் தோன்றினார் என்றும் புராணம் சொல்கிறது.
இந்தக் கூற்றின்படி அனுமன் தோன்றிய நாள் சித்திரை பௌர்ணமி! ஆந்திர மாநிலத்தில் இந்த தினத்திலேயே அனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.
வடநாட்டில் வைசாக (வைகாசி) பௌர்ணமிக்கு அடுத்த செவ்வாய்க் கிழமையன்று அனுமத் ஜயந்தி கொண்டாடப் படுகிறது.
லக்னோவுக்கு அருகில் ஆலிகஞ்ச் என்ற இடத்தில் அருள் புரியும் அனுமனை வைகாசி பௌர்ணமி அன்று விசேஷமாக வழிபடுவர்.
அன்று, லக்னோ நகரிலிருந்து ‘ஆலிகஞ்ச்’ தலத்தில் உள்ள அனுமன் கோயில் வரை… ஆண்கள், கோவணம் மட்டும் அணிந்து, சாஷ்டாங்கமாக வணங்கியபடி சென்று வழிபடுவார்கள்.
முதலில் சாஷ்டாங்கமாக கைகளை நீட்டி நமஸ்காரம் செய்யும்போது கைவிரல்கள் மூடிய இடத்தில் ஒரு கல்லை அடையாளமாக வைத்து, பிறகு எழுந்து நின்று அந்தக் கல் வைத்த இடத்திலிருந்து அடுத்த நமஸ்காரம் செய்வார்கள்.
இப்படியே தொடர் நமஸ்காரம் செய்து கோயிலை அடைவார்கள்.
இதற்கு ‘சயன தபஸ்’ என்று பெயர்.