மாறாட்டம்





காலை 4 மணிக்கே அழைப்பானை வைத்திருந்தாள் பார்கவி..
கை பேசியிலிருந்து நாராசமாக எழுந்த ஒலியை கேட்டு பேருந்திலிருந்த அனைவரும் துயில் கலைந்து லேசான கடுப்புடனும் ‘உஸ்’சுடனும், முன்னர் படுத்திருந்த நிலையிலிருந்து சற்று உடம்பை அசைத்து கொண்டு வேறு நிலைக்கு மாறினர்..
அருகிலிருந்த கிருஷ்ணன் பயணம் முழுக்க தூங்கவே இல்லையெனினும், தூக்கம் கலைந்த பாவனையுடன், கை கடிகார மணியை பார்த்து கொண்டு ‘யோவ்.. ஏன் யா இப்பவே அலார்ம் வெச்சுருக்க.. இன்னும் நிறைய நாழி இருக்கே.. இப்போ தான் ஓசூர் வந்திருக்கும்.. சில்க் போர்ட்னு கண்டக்டர் கத்துவான் அப்போ எழுந்திருச்சா போதும்’ என்று அடங்கிய குரலில் பார்கவியிடம் கூறினான்..
பார்கவி ஏனோ கூச்சத்துடன் ஒலியை அணைக்க எடுத்த கை பேசியை சிறிது பதற்றத்துடன் பைக்குள் வைத்து விட்டு, யாரேனும் தன்னை கவனித்தார்களா என்று ஒரு நிமிடம் நோட்டம் விட்டாள்..
‘நீங்க ஏன் முழிச்சுண்டு இருக்கேள்.. தூக்கம் வரலயா என்ன..?’
‘அது அப்படித் தான்.. மனசு எதையாவது பிடிச்சு பிராண்டிண்டே இருக்கும் ட்ராவல் பண்ரப்ப எல்லாம்..”
கிருஷ்ணன் இன்னும் மெல்லிய குரலில் கூறினான்..
சொல்லிவிட்டு பார்கவியும் கிருஷ்ணனும் சட்டென்று ஒரு முறை அவரவர் பக்கவாட்டில் திரும்பி ஒருவரையொருவர் பார்த்து கொண்டு லேசாக சிரித்து கொண்டனர்..
பேருந்திலிருந்து இறங்கியவுடன் பார்கவிக்கு திடீரென்று மிகையாக குளிர ஆரம்பித்து விட்டது..
‘ப்ப்பா.. என்ன இப்படி குளுர்றது…’ என்று பைக்குள் வைத்திருந்த சால்வையை அவசரமாக எடுக்க பார்த்தாள்..
கிருஷ்ணன் தான் கையில் வைத்திருந்த தடிமனான ஜெர்க்கினை அவளிடம் கொடுத்து விட்டு, ‘நீ இத போட்டுக்கோ.. நீ வெச்சுண்டிருக்க சால்வையெல்லாம் அடங்காது இந்த குளிருக்கு..’ என்று பையை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான்..
ஒரு பெரிய ட்ராலியும், ஒரு சூட்கேசும் அவன் இட, வலது கையை ஆக்கிரமித்து கொண்டன..
‘என் கிட்ட ஒண்ணு கொடுக்கலாமே.. எதுக்கு நீங்களே தூக்கிண்டு வரேள்..’
‘விடு விடு, பிரச்சன இல்ல..’
சென்னையில் இவன் வீட்டுக்கு வந்து தங்க ஆரம்பித்த இரண்டு மாதங்களில், எங்கு வெளியே போனாலும் எல்லா சுமையும் கிருஷ்ணனே தூக்கி கொண்டிருக்கிறான் என்ற மெல்லிய குற்ற உணர்ச்சி அவளுக்கு..
‘இன்னும் எவ்வளவு தூரம் நடக்கனும்..? அப்பாக்கு கால் பண்ணி சொல்ல வேண்டாமா வந்து சேந்துட்டோம்னு?..’
‘கொஞ்ச நாழி தான் யா.. Just ஒரு 100 மீட்டர்ஸ்.. நடக்கமுடியலேனா சொல்லு, ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுப்போம்.. ரொம்ப முடியலேனா OLA புக் பண்ணி போயிடலாம்..’
‘அய்யயோ கொள்ள அடிப்பான்.. பஸ்லயே போயிடலாம்..’ ‘இங்க ஏஸி பஸ் ல தான் போகணும்.. நாம தங்குற எடத்துக்கு.. அதுவே 200 ஆயிடும்..’
‘200 ஆ?, ஏன் இப்படி கொள்ள அடிக்கறா.. எல்லா எடத்துலயும்..’
கிருஷ்ணன் உள்ளுக்குள் சிரித்து கொண்டான்..
500C sயிலிருந்து இறங்கியவுடன், கிருஷ்ணன் தன் கைபேசியை எடுத்து நண்பனுக்கு அழைத்து, ‘டே ராமா வந்துட்டோம் டா.. குண்டலஹல்லி கேட்டுக்கு பக்கத்துல நின்னிண்டு இருக்கோம்..’
பார்கவி சற்று அச்சத்துடன் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தாள்..
சுற்றி ஒரே இருட்டு.. நாய்கள் வேறு அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருந்தன.. அவள் நாய்களையே பார்த்து கொண்டிருந்தாள்.. அவை குலைக்கும் சத்தம் இன்னும் அச்சத்தை கூட்டின..
கிருஷ்ணன் பார்கவியின் நொடி நேர உடல் திடுக்கிடலை பார்த்து விட்டு, ‘அது அப்படி தான் குலைச்சுண்டு இருக்கும்.. வேணும்னா ஸிக்னல் பக்கத்துல போயி நின்னுண்டு இருக்கலாம்.. கொஞ்சம் வெளிச்சமா இருக்கு அங்க..’
‘இல்ல விடுங்கோ, உங்க ஃப்ரெண்ட் எப்போ வருவார்?’
‘எழுந்துட்டான் யா.. 5 நிமிஷத்துல வந்துடுவான்..’ அந்த ‘யா..’ போட்டு உச்சரிக்கும் தருணங்கள் அவளுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் அவனுடன்.. அவனும் வேறு யாரையும் அப்படி கூப்பிடுவதில்லை.. அப்படி கூப்பிடும் போது குரலில் ஒரு குழைவும் தெரிந்தது அவளுக்கு, பிரத்தியேகமாக அவளிடம்..
நண்பன் முன்னரே அவனுக்கு தெரிந்த ஒருவரிடம் சொல்லி காலியாக இருந்த ஒரு அபார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு வீட்டை குறைந்த வாடகைக்கு இரண்டு நாட்களுக்கு பதிவு செய்து செய்திருந்தான்..
சாவியை அபார்ட்மெண்ட் காவல்காரர்களிடம் வாங்கி கொண்டு வீட்டை வந்து சேர்ந்தவுடன், ‘இது தான் பாஸ்.. கொஞ்சம் சுத்தி பாருங்க.. தண்ணி கேன் கொண்டு வர சொல்லிருக்கேன்.. பெட், பெட்ஷீட், போர்வை எல்லாம் நேத்தே கொண்டு வெச்சுட்டேன்.. வேற ஏதாவது வேணும்னா டக்குனு கால் பண்ணுங்க..’
‘தாராளம் டா ராமா.. ரெண்டு நாள் தான், மேக்ஸிமம் மூணு நாள்’ என்றான் கிருஷ்ணன்..
பார்கவி நேரடியாக பால்கனி இருக்கும் இடத்துக்கு போய் நின்று கொண்டு சுற்று வட்டாரத்தை பார்க்க துவங்கி விட்டாள்..
ராமா கிருஷ்ணனின் அருகில் வந்து பார்கவியின் காதுக்கு விழாது இருக்க வேண்டும் என்று, ‘பாஸ்.. நீங்க இப்போ இங்க வந்த ரீஸன் எனக்கு சரியா படல.. அதான் முந்தா நேத்து ஃபோன்லயும் சொன்னேன்..’ என்றான்..
கிருஷ்ணன் ஒன்றும் சொல்லாமல் சிரித்து கொண்டே நின்றான்..
‘எல்லாத்துக்கும் சிரிச்சுக்கிட்டே இருங்க நீங்க.. நான் வேணும் நா பார்கவி கிட்ட சொல்லவா.. எதுக்கு இதெல்லாம், ஜாலியா லால்பாக், விதான் சௌதா மட்டும் போதும்னு’ என்றான் சற்று கடுப்புடன்..’
‘Nothing to worry.. அவ கல்யாணத்துக்கே வரல.. She also just wanted to meet her..’ என்றான் பார்கவியை கை காட்டியவாறு..
பார்கவி எதிர்பாரத விதத்தில் சட்டென்று ஹாலுக்கு வந்தவுடன், ‘நீ வேணும்னா கொஞ்ச நாழி படுத்துக்கோ.. ஒரு வாக் போயிட்டு வரேன் இவனோட..’
‘ஹ்ம்ம்.. பழைய விஷயங்கள் எல்லாம் பேசனுமா..’ என்று கூறி ஒரு விஷம சிரிப்பு சிரித்து வைத்தாள்..
ராமாவும் கிருஷ்ணனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்து கொண்டனர்..
‘நீங்களும் படுங்க பாஸ்.. 8 மணி நேரம் ட்ராவல் வேற..’ என்று கூறி ராமா விடை பெற்றான்..
போகும் போது ராமா பார்கவியிடம் கிருஷ்ணனை பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமே என்று நினைத்து ‘இவர் தான் எங்க கேங்க் ல மோஹன்லால்.. தெரியுமா?’ என்று கூறி ஒரு கட்டாய சிரிப்புடன் விடைபெற்றான்..
பார்கவி ‘ஓ.. அப்படி வேற பேர் இருக்கா நமக்கு.. சரி சரி..’
ராமா விடைபெற்றவுடன், படுக்க போகும் போது ‘கார்த்தாலே சீக்கிரம் எழுப்பிடுங்கோ மோஹன்லால்..’ என்று கூறி நமுட்டு சிரிப்பு சிரித்தாள்..
கிருஷ்ணனிடம் இது போன்ற சம்பாஷனைகளை உருவாக்கியாவது அவனிடம் காணப்படும் கானல் சுவரை அகற்ற முயன்றாள்..
பிறகு அருகில் உறங்கி கொண்டிருந்த கிருஷ்ணனிடம், ‘உங்களூக்கு ஒன்னும் பிரச்சன இல்லையே.. நான் ஏதோ கேட்க போயி இங்க வந்துட்டோம் திடுதிப்புனு..’
கிருஷ்ணன் வழக்கம் போல் சிரிப்பையே பதிலாக அளித்தான்..
பார்கவி உள்ளுக்குள் பல நாடகங்கள் நடத்தி கொண்டிருந்தாள், அரிதாரம் பூசி கொண்டு நடித்துபார்த்து, பின் கலைந்து, முதலில் இருந்து வேறொரு கவசத்தை அணிந்து… இப்படியே பல திரைகள் மனதினுள் ஓடிக்கொண்டே இருக்க, பொழுது புலர்ந்து விடிந்து விட்டது..
கிருஷ்ணன் சற்று புரண்டு விட்டு, அருகில் இருந்த பேக்கரியில் டீ குடித்து, கொஞ்ச நேரம் நடந்து விட்டு வீட்டுக்கு வந்த போது பார்கவி நன்றாக உறங்கி கொண்டிருக்கிறாள் என்று நினைத்து அருகிலிருந்த மெல்லீசான போர்வையை அவள் மீது போர்த்தி, குளிக்க சென்றான்..
பார்கவி ஒற்றை கண்ணால் அவனை கவனித்தவாறே இருந்தாள்..
மதியம் இருவரும் உண்ண பக்கத்திலிருந்த ஒரு ஹோட்டலுக்கு செல்லும் போது பார்கவி மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.. ‘சாயந்தரம் நான் என்னெல்லாம் பேசணும்னு நிறைய கற்பனை பண்ணி வெச்சேன்..’
‘அவ்வளவு எல்லாம் நீ அலட்டிக்கணும்னு தேவை இல்ல.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. என்னுடைய பழைய விஷயங்கள பத்தி பேச கூடாது..’
‘ச்ச ச்ச.. அத பத்தி இல்ல.. சாதாரணாமா என்ன பேசறதுனே தெரில.. அவங்க மெண்டாலிடி இப்போ எப்டி இருக்குமோ..’
‘ஹ்ம்ம்.. It will be little awkward.. But its ok.. எவ்வளவோ நடந்து முடிஞ்சுடுச்சு.. உன்ன பாக்கனும்னு she will also be interested.’
சம்பாஷனை கடை வந்ததும் முடிந்தது..
பார்கவிக்கு ஒரு பிஸிபெல்லாபாத் சாப்பிடும் போது ‘இது என்ன,நம்ம ஊரு சாம்பார் சாதமா..’
‘ஆமாம் ஜஸ்ட் பேரு தான் வேற..’
சட்டென்று பார்கவிக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்து, கிருஷ்ணன் இருந்த இடத்தை விட்டு எழுந்து, அவள் தலையில் தட்டி தண்ணீர் கொடுத்தான்..
பார்கவிக்கு சற்று கண்கள் கலங்கினால் போல இருந்தது..
திரும்பும் வழியில், ‘நாலைக்கு வேற எங்கயாவது போலாமா?’
‘நீங்க இருந்த எடத்த வேணும்னா சுத்தி பாக்கலாம்.. உங்களுக்கும் ஒரு நாஸ்டால்ஜிக் ஃபீல் வரும்’ ‘நான் இங்க இருந்த இடமெல்லாம் பெருசா ஒன்னும் இல்ல.. எல்லாமே சேரி ஏரியா தான்.. லால்பாக் போலாம், அப்பறம், ஏதாவது கச்சேரி நடக்கும், தேடி கண்டுபிடிச்சு போகலாம்.. இல்லேனா மால் போகலாம்..’
‘அய்யயோ மால் லாம் போர்.. அவங்களும் வருவாங்களா?’
கிருஷ்ணன் சிறிது நேரம் யோசித்து விட்டு, ‘நீயே கேளேன்.. அதான் சாயந்தரம் பாக்க போறோமே..’ என்றான்..
கொஞ்ச தூரத்தில், பெண்கள் அரை ட்ரௌசருடன் கையில் ஸிகரெட் வைத்து கொண்டு நின்று கொண்டிருந்தனர்..
பார்கவி அவர்களையே பார்த்து கொண்டு நடந்தாள்..
‘என்ன.. இதெல்லாம் புதுசா இருக்கோ?’
‘இல்ல, கோயம்பத்தூர்லயும் இப்படியெல்லாம் உண்டு.. பட் இங்க ரொம்ப ஒபன்..’
‘மக்கள் இங்க கொஞ்சம் அட்வான்ஸ்ட் தான்..’ நம்ம ஊருல உர்ர்ர்ர்ருனு பாத்துண்டே இருப்பானுங்க ஆளுங்க, இங்க பொண்ணுங்க அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க..’ பார்கவி கேட்டுக் கொண்டே மனதினுள் அவளை பற்றிய பிம்பம் அவ்வபோது வந்து கொண்டே இருந்ததை உணர்ந்தாள்..
என்ன தான் சாஃப்ட்வேர் துறையில் அவள் இருந்தாலும், அவள் அந்த கூட்டத்தில் தனித்து நிற்பவளாகவே உணர்வாள்..
‘சுடிதார் போட்டுண்டு வந்திருக்கனும்.. புடைவைல ரொம்ப அன்னியமா தெரியறேனோ?’
‘அப்படி எல்லாம் இல்ல, நமக்கு எது கம்ஃபர்டபில், அத பாக்கனும் முதல்ல.. நீ எல்லாத்துக்கும் உன்ன கஷ்டபடுத்திக்குற.. You are always in some guilty consciousness..’
கிருஷ்ணன் சொல்லி கொண்டே இருக்கும் போது அவனையும் அறியாமல், ‘அவளும் அப்படி தான்..’ என்றான்..
பார்கவி அதை கேட்காதது போல் நடையை வேகமூட்டினாள்..
கிருஷ்ணனின் சாதுரியம், சிந்தனைக்கு அவள் எட்ட நினைப்பது முடியாத காரியம் என்று தெரிந்தது தான் பார்கவிக்கு..
அவள் மனதினுள் ஓடும் பிம்ப ஓட்டங்களை கூட துள்ளியமாக ஒன்றினைத்து கிருஷ்ணன் இது தான் விஷயம் என்று கூறி விடுவது தான் அவளுக்கு பிரமிப்பாக இருக்கும்..
ஆனால் இப்படிப்பட்ட ஒரு ஜீவனை தான்…..
எப்படி என்று தான் அவளுக்கு புரியவில்லை..
ஒரு வேளை இப்படி இல்லையோ கிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்?.. எல்லாம் அடிபட்டு அடிபட்டு வந்த முதிர்ச்சியோ.. நம் வாழ்க்கையில் அடிகள் அவ்வளவு இல்லையோ.. கிருஷ்ணனுக்கு அவ்வளவு கற்று கொடுத்திருக்கிறதா அனுபவங்கள்? சிலர் வாழ்க்கை எங்கேயோ ஆரம்பித்து எப்படி எப்படியோ திசை மாறி ஏதோ ஒரு ஜடத்துடன் தான் வாழ விதித்திருக்கிறதா.. பார்கவியின் மனம் எப்போதும் எதையோ பிடித்து தொங்கி கொண்டிருந்தது.. இன்று சற்று அதிகமாகவே..
வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து, மாலை நேர சந்திப்புக்கு தயாராக தொடங்கினார்கள்..
பார்கவிக்கு ஒரு புரியாத குழப்பம் ‘என்ன இது.. யாராவது வெளிய கேட்டா சிரிப்பா.. எனக்கு தான் புத்தி பேதளிச்சுடுச்சோ.. எனக்கு உண்மையிலேயே இது தேவையா.. இல்ல அவருக்கு தான் இது தேவையா.. ச்ச ச்ச.. அவருக்கு இது பெரிய விஷயமில்ல.. அவர் இன்னும் நன்னா தான் பேசிண்டு இருக்கார் எல்லார்கூடயும்.. அவராள எப்படி முடியர்து.. எனக்கு தான் பக்குவம் பத்தலையோ… என்ன மாதிரி பித்துகுளிக்கு தான் இப்படி ஒருத்தர் மாட்டனுமா.. பாவம் அவரும், நான் ஏதோ கேட்க போக….’ என்று அவள் ரொம்ப நேரமாக தலையை வாரிக்கொண்டே யோசிக்கையில், வாய் அசைவு கொள்ள தொடங்கிவிட்டது..
இதை கண்டும் காணாத மாதிரி கிருஷ்ணன் அதை கலைக்க முற்பட்டு ‘தலையில இருக்குறத விட சீப்புல முடி அதிகமா இருக்கும் போல..’ என்று சிரித்து சீக்கிரம் கிளம்ப சொன்னான்.. வெளியே சென்று கைபேசியில் யாரையோ அழைத்து ‘café coffee day.. நாங்க கெளம்பிட்டோம்.. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல அங்க இருப்போம்..’ என்று சுருக்கமாக முடித்தான்.. பார்கவி ‘அவள் தானா?’ என்பது போல் தலை ஆட்டி, புருவ சுளிவுடன் கேட்டாள்.. கிருஷ்ணனும் தலை ஆட்டலிலேயே பதிலை அளித்தான்..
அந்த கடைக்கு சென்று, சாப்பிட என்ன சொல்வதென்று தெரியவில்லை பார்கவிக்கு..
‘நானும் இங்கெல்லாம் வந்திருக்கேன்.. ஆனா ஃப்ரெண்ட்ஸ் ஏதாவது சொல்லுவா, அதையே நானும் சொல்லிடுவேன்..’
‘ஹ்ம்ம்.. So, you don’t choose anything.. அதுவா வர்றது தான்..’
‘ஆமாமாம்…’ என்று கூறினாள் அமுங்கிய குரலில்..
கிருஷ்ணன் அதை உணர்ந்த வாறு, ‘It is good to be an underdogனு என் ஃப்ரெண்ட் ஒருத்தன் சொல்வான்..’
‘இது எப்படி அண்டர்டாக்னு சொல்ல முடியும்’ என்று எதிர் கேள்வி கேட்டாள் சற்று நிதானம் இழந்த குரலுடன்..
‘அட.. நான் உன்ன சொல்லல, டக்குனு அந்த வாசகம் ரிமைண்ட் ஆச்சு.. அதான்..’
‘சரி சரி.. இருந்தாலும் நான் ஒன்னும் பெருசா யோசிக்கிறவ கிடையாது.. நடைமுறை புத்தியும் எனக்கு கொஞ்சம் கம்மி தான்..’
கிருஷ்ணன் சிரித்து கொண்டே, ‘நீ எல்லாத்தயும் வேறொன்னுத்தோட எனச்சு ஒரு centricity of thought பன்னிக்குற..’
பார்கவிக்கு கிருஷ்ணன் சொல்லும் பல விஷயங்கள் சற்று விளங்கியும், அதே சமயத்தில் ஆச்சரியமாகவும் இருக்கும்..
பார்கவீயின் முகம் தொங்கி போனதை கண்டு, ‘ஏன் யா. என்னாச்சு இப்போ.. சரி நான் தப்பா ஏதாவது பேசி இருந்தா, ஐயம் வெரி சாரி..’ கிருஷ்ணனின் இந்த உடனுக்குடன் தலை குனிதல் பார்கவிக்கு ஒரு போலியான சமாதனத்தை தந்து, மறு நிமிடமே அவனை குற்ற உணர்விலிருந்து மீட்க, சாதாரணமாக இருக்க போராடுவாள்..
அவன் முன் முகம் தொங்கி போகுமே தவிர என்றும் நேருக்கு நேர் நின்றதில்லை..
கொஞ்ச நேரம் ஆனதும் கை கடிகாரத்தை பார்த்து ‘இன்னும் ஆளக் காணுமே..’ என்று கேட்டாள்..
‘தெர்ல.. even am excited.. ரொம்ப நாள் ஆச்சு பாத்து..’ என்று கூறி கிருஷ்ணன் வாசலை நோக்கினான்..
அப்போது அவன் நிச்சயம் கடந்த காலத்துக்குள் சென்றிருப்பான் என்று தோன்றியது பார்கவிக்கு..
‘நீங்க எப்படி எடுத்து கிட்டீங்க அவங்க முடியாதுனு சொன்ன உடனே..’
‘நீ இத பல தடவ கேட்டுட்ட.. நானும் பல தடவ சொல்லிட்டேன்.. எனக்கு அப்படி ஒரு சஞ்சலம்.. ஆனா she was clear.. then she also got trapped by my close friend… யார் தப்பிக்க முடியும் சொல்லு.. பல வருஷம் ஆச்சு..’
சிறிது நேர இடைவேளைக்கு பிறகு ‘உனக்கும் இருந்திருக்கும், நீ தான் சொல்ல மாட்டேங்குற..’
‘அய்யயோ..எனக்கு இதுலலாம் அனுபவம் கம்மி.. ஏன் எல்லாத்துலயும் கூட.. அதான் சொன்னனே.. என் கிட்ட ஒருத்தன் வந்தான்.. ஓடி போயிடுனு சொல்லிட்டேன்னு.. என் டவுட் என்னன்னா உங்கள போய் வேண்டாம்னு சொன்னது தான் எனக்கு புரியல. அதுக்கப்புறம் கூட நீங்க அவளுக்கு அவ விஷயத்துல இன்னும் சப்போர்டீவா இருக்குறது…..’
‘ஒ….கே.. நீ மறுபடியும் குழிக்குள்ள போர.. ஆல்ஸோ என்ன விரட்டி விட்ற அளவுக்கு she is not immature.. but I was..’ கிருஷ்ணன் பேசி கொண்டிருக்கும் போதே வாசலில் ஒரு ஆக்டீவா கண்ணில் பட்டது.. ‘வந்துட்டானு நினைக்கிறேன்.’ பார்கவியின் மனம் பரிட்சை ஹாலில் மணி அடித்து கேள்வித்தாள் கொடுக்க ஆரம்பிக்கும் தருணத்திற்கு போய் விட்டது.. ‘கேள்வி’ ஆக்டீவாவை பார்க் செய்து உள்ளே வந்தது..
கிருஷ்ணன் எழுந்து நின்று கை குளுக்கி கொண்டு பார்கவியை அறிமுகம் செய்து வைத்தான்..
பார்கவியும் ஒரு பதட்ட நிலையிலேயே சிரித்து வைத்தாள்..
‘பார்கவி இது சுமித்ரா..’ என்றவுடன் சுமித்ரா பார்கவியுடனும் கை குலுக்கினாள்..
முதல் 10 நொடிகள் இறுகிய மௌனமான சங்கடம் நிலவியது.. சுமித்ராவே கலைத்தாள் ‘பேங்கலூர்ல café coffe dayக் குள்ள மல்லிப்பூ வெச்சுட்டு ஒரு பொண்ணு உட்கார்ந்துருக்கறத பாக்குறப்போ எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா..’
பார்கவி சிறிது வெட்கப் பட்டு தான் போனாள்…
‘அப்புறம் சொல்லுங்க கிருஷ்ணன், எங்க ஹனீ மூனெல்லாம் போனீங்க..?’
‘அதெல்லாம் ஒன்னுமில்ல யா.. கல்யாணமே ரொம்ப சிம்பில் தான்..’
பார்கவி முகம் சுருங்கி போய் கிருஷ்ணனை பார்த்தாள்..
‘ஹ்ம்ம்.. ஆக்ச்சுவலா ரொம்ப சாரி.. என்னால வர முடியாம போயிடுச்சு.. நானே கொஞ்ச நாள் முன்னாடி தான் இங்க வந்தேன்.. ரொம்ப அடம்பிடிச்சு அதுவும்..’
‘தெரியும் சுகுமார் சொன்னார்..’
‘நீங்க அவரோட continuous touch ல இருக்கீங்கல..’ என்று சொல்லி பார்கவியை ஒரு கன நேரம் பார்த்து திரும்பினாள் சுமித்ரா..
கிருஷ்ணன் அதை புரிந்து கொண்டு ‘ஹ்ம்ம்ம்.. கண்டிப்பா.. அவர அவ்வளவு லேசா விட்டுடுவோமா.. also, she knows everything… என்ன பத்தி, எனக்கு வேண்டியவங்க பத்தி..’
‘அஃப்கோர்ஸ்.. better half கிட்ட சொல்லி தான ஆகணும்..’ என்று தலை ஆட்டிக்கொண்டாள் சுமித்ரா..
‘இப்போ எப்படி இருக்கு சிச்சுவேஷன்.. அப்பா என்ன சொல்றார்..?’
‘எங்கங்க… அவன் வீட்டுலயும் சீக்கிரம் அவனுக்கு முடிக்கணும்னு ப்ரெஷர்.. எங்க அப்பா இன்னும் கல்ச்சுரல் டிஃப்ரன்ஸ்னு வியாக்கியானம் அடிச்சிட்டு இருக்கார்..’
‘இன்னும் அதே புராணம் தானா..’
சுமித்ரா சற்று குரலின் ஸ்ருதியை மாற்றி கொண்டு ‘ஒரு கட்டத்துல எனக்கே தோணும்.. எதுக்கு இதெல்லாம்னு.. பட் லைஃப் ஒரு தடவ தான் கிருஷ்ணன்..’ என்று சொல்லி ஒரு சோக கதாபாத்திரத்திற்கு சென்றடைந்தாள்..’
நடுவே அவர்கள் ஆர்டர் கொடுத்த விஷயங்கள் மேஜைக்கு வந்தவுடன், ‘எனக்கு ஒரு ஐரிஷ் டீ..’ என்று சுமித்ரா சொன்னாள்..
‘ச்ச.. நைட் 12 மணிக்கு ஒவ்வொரு ந்யூ இயரும்.. சான்ஸே இல்லல..’ என்று கூறி கிருஷ்ணனை பார்த்து மிகையான உணர்ச்சி ததும்ப கையை பிசைந்தாள்..
பார்கவி புரியாதவாறு புருவத்தை சுளித்தவுடன் சுமித்ரா
‘ஒவ்வொரு ந்யூ இயரும், நாங்க இங்க வந்து 12 மணிக்கு காஃபி குடிச்சுட்டு தான் வீட்டுக்கு போவோம்.. 4 வருஷம் இந்த மாதிரி தான்.. இந்த வருஷம் கிருஷ்ணன் இருக்க மாட்டார்..’ என்றாள்..
‘time heals everythingநு சொல்றது உண்மை தான் இல்லையா..’ என்று வினவினாள் சுமித்ரா கிருஷ்ணனை பார்த்து..
‘but it wont change affection with people’ என்று சேர்த்து கொண்டாள்..
கிருஷ்ணன் வழக்கம் போல் பதில் சொற்கள் எதுவும் பேசாமல் வெருமனே கேட்டு கொண்டு மட்டும் இருந்தான்..
சுமித்ரா ஆர்டர் செய்திருந்த ஐரிஷ் காஃபி வந்துவிட அனைவரும் கொஞ்ச நேரம் பேச்சுக்கு ஓய்வு கொடுத்தனர்..
ஆனால் சுமித்ராவால் எதிரில் யாரையேனும் வைத்து கொண்டு நீண்ட நேரம் பேசாது இருக்க முடியாது.. ‘லைஃப் ல நிறைய விஷயங்கள கடவுள் கண்ணுக்கு காமிச்சுட்டு டக்குனு எடுத்துட்றான்.. எதுக்கு கண்ணுல காமிக்கனும்.. அப்புறம் புடுங்கனும்.. நீங்க அடிக்கடி சொல்ற மாதிரி எல்லாம் டிசைன் தான்.. ஆனான் அத செஞ்சவன் ஒருத்தன் இருக்கான்னு சொல்றேன்..’ ‘அது ஒவ்வொருத்தருடைய பிலீஃப்.. நாம ஏதாவது பண்ணியே ஆகணுமே.. அதுக்கு தான் டிசைன் ஏதேதோ நம்மல பண்ண வெச்சுண்டே இருக்கு..’
‘யாருயா கேட்டா இந்த வலிய.. நிறைய பட்டாச்சு.. உங்களுக்கு தெரியாததா.. வீட்டுக்கு எப்போ போனாலும் பிரச்சன தான்.. அங்க அவன் அடம்பிடி விட்டுடாதனு சொல்றான்.. இங்க இவர் அசஞ்சு கொடுக்கவே மாட்டேங்குறார்.. tug of war ல வர்ற மாதிரி என்னைய ரெண்டு பக்கமும் பிடிச்சு இழுக்குறாங்க.. நான் நிறைய மாறிட்டேனு கம்ப்ளைண்ட் வேற இதுல எங்க அக்கா..’ என்று சொல்லி வேறெங்கோ யோசனைக்கு சென்றாள்..
‘மாற்றம் நல்லது தானே சுமித்ரா.. சேன்ஞ் இஸ் இனெவிடபில் ரைட்?’ என்றான் கிருஷ்ணன்..
‘கரெக்ட் தான்.. ஆனா நம்மள சுத்தி இருக்கவங்களுக்கே அந்த சேன்ஞ் பிடிக்கலேனா..? நமக்கு ரொம்ப வேண்டியவங்களே அந்த change of behaviorஅ வெறுத்தாங்கனா..? Are all the changes good?” என்று வினவினாள் சுமித்ரா..
கிருஷ்ணனிடமிருந்து பதில் இல்லை..
பார்கவி எல்லாவற்றையும் சப்டைட்டில் இல்லாத இரானிய படத்தை பார்ப்பது போல கவனித்து கொண்டிருந்தாள்..
‘சரி விடு சுகுமார் வீட்டுக்கு வந்து பேசுனாரா அப்பாக்கிட்ட..?’
‘இல்ல.. அப்பா பேச கூட சம்மதிக்க மாட்டேங்குறார்.. நான் புரிய வைக்கனும்னு ட்ரை பண்றேன்.. but he was not at all ready to listen at all.. சுகு எவ்வளவு நல்லவன், கேர் டேகிங்க் மனுஷன்னு அவருக்கு புரிய மாடேங்குது.. அதான் பிரச்சன.. என் டெஸிஷன் தப்பா இருக்கதுனு he believes but ஒரு பூணூல் தடுக்குது..’
பார்கவி சுகுமாரை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறாள் கிருஷ்ணனிடமிருந்து, ஆனால் நேரில் சந்தித்ததில்லை…
சுமித்ரா டிஷ்யூ பேப்பர் எடுக்க நகர்ந்த உடன், பார்கவி கிருஷ்ணனிடம் ‘நீங்க எனக்கு அந்த சுகுமாரனோட ஃபோடோ கூட காமிச்சதில்லையே..’ என்று கேட்ட உடன் ‘வீட்டுக்கு போய் காமிக்கிறேன்’ என்றான் கிருஷ்ணன்..
சுமித்ரா வந்து உட்கார்ந்தவுடன் ‘சாரி பார்கவி உங்கள நான் ரொம்ப போரடிச்சுகிட்டு இருக்கேன்.. சொந்த கத சோக கதையெல்லாம் சொல்லி..’
‘ச்ச.. ச்ச.. அப்படி எல்லாம் இல்ல.. நீங்க ரெண்டு பேருமே ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றேள்….’
‘ஹ்ம்ம்ம்… கிருஷ்ணன் நான் அடிக்கடி ஒன்னு சொல்வேன் தெரியுமா, everything is pre planned nothing is sudden.. அத தான் recent days ல நெனச்சுக்கிட்டே இருக்கேன்.. எல்லாம் எங்கெங்கயோ pre plannedஆ நடந்து நமக்கு அது suddenஆ நடக்குற மாதிரி இருக்கு..’ என்ற சுமித்ராவின் தத்துவங்களுக்கு ஒரு சபாஷ் போட்டு கிருஷ்ணன், ‘Realizations பின்னுதே.. இன்னிக்கு நீ full flowல இருக்கேன்னு நினைக்கிறேன்..’
‘ஹ்ம்ம்.. எல்லாம் introspection தான்.. ஒரு பறவை மரத்துல பழம் சாப்டுட்டு இருக்கு, இன்னொரு பறவை சாப்புடுற பறவைய பாத்துக்கிட்டே இருக்கு..’ என்று கூறி சுமித்ரா காஃபியில் ஒரு மடக்கு உறிஞ்சினாள்..
பார்கவிக்கு கொட்டாவி அவ்வபோது வந்துகொண்டே இருந்தது.. சுமித்ரா மிகவும் பவ்வியமாக ‘Again sorry பார்கவி.. நானும் கிருஷ்ணனும் பேச ஆரம்பிச்சா இப்படி ஏதாவது எங்களுக்கு தெரிஞ்சத ஃபிலாசஃபி, ரிய்லைசேஷன்னு உளறிட்டு இருப்போம்.. நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு எப்படி போகுது.. நீங்களும் வொர்க் பண்றீங்கள?’ பார்கவி பேச தடுமாறி ஒரு வழியாக வாயிலிருந்து வார்த்தைகளை புடுங்கி இழுத்து ‘ஆ…ஆமாம்..’
‘ஹ்ம்ம்.. கிருஷ்ணன் எப்படி.. சமாளிக்க முடியுதா..’
கிருஷ்ணனை பாத்து சிரித்து கொண்டே இரண்டு கண்ணையும் அழகாக அரை நொடி மூடி திறந்து பார்கவியை வினவினாள்..
பார்கவி என்ன சொல்வது என்று தெரியாமல் கையை விரித்து அவளும் கிருஷ்ணனை பார்த்து சிரித்தாள்..
இன்னும் நிறைய விஷயங்களும், கடந்த கால நினைவுகளையும் கிருஷ்ணனும் சுமித்ராவும் பேசி கொண்டே இருக்கையில் பார்கவியால் ரொம்ப நேரம் போலியான சிரித்த முகத்துடன் அமர்ந்திருக்க முடியவில்லை.. ஆர்டர் செய்திருந்த உணவும் முடிந்துவிட்டது.. வெயில் தாழ்ந்து வெளிச்சம் குறைவதை எதேச்சையாக சுமித்ராவின் கவனத்தில் வர, ‘சரி கிருஷ்ணன்.. நான் கெளம்புறேன்.. ரொம்ப லேட் ஆயிடுச்சு.. நீங்க எங்கெங்க போறீங்க.. நீங்க ஏதோ ஜாலியா இருக்கனும்னு வந்திருப்பீங்க.. நான் வந்து உங்க planஅ கெடுக்குறேன்..’
‘யோவ் அதெல்லாம் இல்லை யா..’ என்று சொல்லும்போது ‘யா…’ வில் ஒரு குழைவு இருந்தது..
சுமித்ரா கடையை விட்டு இறங்கி போக கிருஷ்ணனும் பார்க்வியும் கூடவே சென்று வழி அனுப்பி வைத்தனர்..
‘பாத்து போயா..’ என்றான் கிருஷ்ணன் மனம் கனத்து கிடக்க..
வண்டி சற்று அருகில் நகர ஆரம்பிக்கையில், அருகில் திரும்பி ‘என்ன.. நீ தான் இந்த meeting நெனச்சு ரொம்ப ஆர்வமா இருந்த.. வாய தொறக்க காணும்?’
‘பேச நெனச்ச எல்லாத்தயும் பேச முடியறதா என்ன.. ஒரு விஷயத்த ரொம்ப வற்பறுத்தி செய்யணும்னு நினைக்கும் போது தான் அது சுத்தமா கை கூட மாடேங்குது..’
‘நீயும் அவள மாதிரி பேச ஆரம்பிச்சுட்ட.. உடல் வியாதிலேர்ந்து ஆரம்பிச்சு, பேச்சு, செயல்,அன்பு எல்லாமே தொத்து வியாதி தான்.. அதுவும் நம்ம நாட்டுல தொத்து வியாதி ரொம்ப அதிகம்..’
பார்கவி கிருஷ்ணன் சொன்ன எதையுமே காதில் போட்டுகொள்ளவில்லை..
சுமித்ரா ஆக்டிவாவில் யூ-டர்ன் எடுத்து சாலைக்கு மறுபுறம் சென்று வேகமாக தன்னைகடந்து செல்வதையே பார்த்து கொண்டிருந்தாள் பார்கவி..
புரியாத ஒரு உணர்ச்சி பார்கவியைபோட்டு ஆட்டிபடைத்தது மிகவும் தீவிரமாக..
தான் யாரையும் நிராகரிக்கும் அதிகாரமற்றவள்..
எல்லோரையும் ஏற்றுகொள்ளும் துர்பாக்கியசாளி..
சுமித்ரா ஒரு புள்ளியாகி மறையும் வரை பார்த்து கொண்டிருந்த பார்கவியை கிருஷ்ணன் ‘சரி.. வா நடக்கலாமா…’ என்றான் கிருஷ்ணன்.. ‘நடப்போம்.. இப்போ என்ன அவசரம்…’ என்று முதல் முறையாக எரிந்து விழுந்தாள்..