கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2025
பார்வையிட்டோர்: 183 
 
 

(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவனைப் பற்றி உங்கள் அநேகருக்கு அதிகமாகத் தெரியாது. அவன் என்னுடைய நெருங்கிய நண்பன்.

நேற்று சாயந்திரம் வெகு நேரம் அயர்ந்து தூங்கிய வனே போன்று திடீரென்று எழுந்தான். மணி ஐந்து அடித்து விட்டது. அவசர அவசரமாகவே காப்பியைக் குடித்து விட்டு, தினம் செல்வதைவிடக் குறைந்த நேரத்திலேயே ஆடைகளணிந்து கொண்டு வெளியே புறப்பட்டான். அநேகமாக ஊரின் ‘பொறுக்கி’களை (பொறுக்கி எடுத்த பிரமுகர்கள்) அவனுக்குத் தெரியும். ‘குட்ஈவினிங்’ வைப்பது முதல் சிறிது நின்று சல்லாபம் செய்யும் வரையிலுள்ள, அவனுடைய நண்பர்களின் தொகை கணக்கிலடங்காது என்று சொல்வது மிகையாகாது. அன்று சாயந்திர ஊர் பவனி செல்லுதல் கொஞ்சம் நாழிகை ஆகிவிட்டது என்று சஞ்சலமுற்றவனே போன்று நிதானமின்றியும் வேக மாகவும், அந்த முக்கியமான நான்கு வீதிகள் சேரு மிடத்தை அடைந்தான்.

சாதாரணமாகவே அவ்விடம் ஜன நடமாட்டம் உள்ளது. அன்றைய தினம் கொஞ்சம் அதிகமாகவே ஜனங்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண் டிருந்தனர். ஜனங்களின் இரைச்சல் ஆரவாரத்திடையே கை தட்டிக் கூப்பிடும் சப்தமும் கலந்திருந்தது. அவ்விடத்தை அவன் அடைந்ததும், அவன் நடையில் ஒரு நிதானம் ஏற்பட்டு, மனதும் யோசனைகளைக் கொள்வதாகியது.

என் நண்பனின் பழக்க வழக்கங்கள் மூலமாகவே, நவநாகரீகம் வெளிவிளக்கம் கொள்வதென்ற அபிப்பி ராயம் எனக்கு உண்டு. அவனுடைய ஒவ்வொரு செய்கைக்கும், எண்ணத்திற்கும், மாறாக நாஸுக்கற்ற விதத்தையும் அவன் கண்டு கொண்டு, அவைகளை விலக்காமலில்லை. ஆனால் அப்போது எவ்வித விருத்த விஷயங்களுக்கும், தலை சிறந்ததாக அவன் மனத்தில் வெறுப்படையும்படி நின்றது, இவ்வகையில் ஒருவருக் கொருவர் கை தட்டிக் கூப்பிட்டுக் கொள்ளுதல்தான். ஆமாம், அது எவ்வளவு நாசுக்கற்ற பழக்கம், அநாகரிகம், காட்டுமிராண்டித்தனம்! அவ்வகையாகக் கூப்பிடுவோரும், கூப்பிட வைத்துக் கொள்வோரும் கீழ்த்தரமானவர்கள். அவ்வகையில் தன்னை யாராவது கூப்பிட்டால், அவர் எத்தனை ஆப்தமாக இருந்தாலும், கண்டிப்பாய், அவர் சிநேகத்தையும் தான் இழக்கத் தயாராக இருப்பதைத் தன் மனதிற்கு நன்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தான்.

அப்போது பின்னாலிருந்து ஒருவர் கைதட்டிக் கூப்பிட்ட சப்தம், திடீரென்று அவன் பிடரியில் அடித்தது போன்றுதான் இருந்தது. கொஞ்சம் லாகவமாக அப்பேர்ப்பட்ட பிராணியைப் பார்ப்போமென்று தலையைத் திருப்பினான். அவனுக்குச் சுமார் முப்பது தப்படி பின்னால் வந்த ஒருவன் இன்னும் வேகமாகத் தட்டிக்கொண்டே, “உங்களைத் தானுங்க-” என்று கூச்சலிட்டுக் கொண்டு அவனை நெருங்குவதைப் பார்த்தான். உலகத்திலே பிரளயம் வந்தாலும் கூட அப்போது அவன் அவ்வளவு பீதி அடைந்துவிட மாட்டான். அப்போதுதான் குறுக்காக அந்த ‘ரிடையர்ட் சப் ஜட்ஜ்’ போய் கொண்டிருந்தார். கொதிக்கும் மனதைக் கொண்டவனே ஆயினும், புன்னகையை முகத்தில் கொண்டு அவருக்கு ‘குட் ஈவினிங்’ வைத்தான். அவரும் திரும்பி மரியாதை வைத்துச் சென்றார். அவர் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்ளுவார். நினைத்துக் கொள்ள மாட்டார் என்ற எண்ணத்தில் சிறிது சமைந்து நின்ற அவனை, அந்த கூப்பிட்ட மனிதனும் நெருங்கி விட்டான்.

பக்கத்தில் வந்து, “உங்களைத் தானுங்க-” என்று உரத்தே சொன்னான்.

‘ஆமாம், உன்னைத் தேடிக் கொண்டுதான், போகிறேன். வாப்பா வா…!” என்றான். உள்ளிருந்து எழுந்த ஆத்திரம் இவ்வகையாக வார்த்தையில் பீறிக் கொண்டு வந்தது. மனத்திலோவெனின் அவன் மூக்கைப் பிடித்துக் குலுக்கினால் அவன் கண்களிலிருந்து நீர் தளும்புமா என்ற பிரச்னை ஏற்பட, அதையும் அவனை விழித்து நின்ற என் நண்பனின் கண்கள் காட்டின. ஆனாலும் மேலே நீட்டியும் கைக்கு எட்டாது என்பதும், அப்படி எட்டினாலும் அவன் மூக்கைத் தன் இரண்டு கைகளாலும்தான் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதும் குறுக்கிட்டு, கூடாது என்று தடை செய்தது போன்று பேசாதுதான் நின்று விட்டான்.

“ஆமாங்க, எனக்குத் தெரியுங்க” என்றான் நாட்டுப் புறத்தான், இவனை மேலும் கீழுமாக உற்றுப் பார்த்துக் கொண்டே. அவன் ஒரு முடிச்சுமாறியாக ஏன் இருக்கக் கூடாது. அப்படியிருந்தாலும் பயமில்லை. தன்னுடைய ஸில்க் ஷர்ட்டுக்குப் பை இல்லை. மடியிலும் ‘பர்ஸ்’ இல்லை. ஒருக்கால் தாசி வீட்டுத் தரகனாக இருக்க லாமோ? அப்படியாயின் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்ளுவார்கள் அப்போது பார்க்கும் தனது நண்பர்கள்? இப்படி என்னவெல்லாமோ ஒரு வினாடியில் தோன்றுவ தாயின. ஒருக்கால் அவன் தனக்குத் தெரிந்தவனோ என்றும் மறந்துவிட்ட தன் ஊர்ப் பண்ணை ஆனோ என்றும், என்னவெல்லாமோ எண்ணினான். எப்படியாயினும், தன் பெருமையை மிகவும் நோவச் செய்ததில் மனது உருகியே போய்விட்டது. ஆத்திரம் மூண்டது. அவன்தான் என்ன செய்வான், தானாகப் பிடித்துக் கொண்ட சனியனுக்காக! “என்ன-?” என்றான் என் நண்பன்.

“ஆமாங்க, உங்களைத்தானுங்க-” என்றுதான் பதில். துன்பங்கள் அவ்வளவு சீக்கிரமாகவா நீங்கிவிடும்? அப்படி யாயின், கஷ்டகாலத்திற்கும், சனீஸ்வர பகவானுக்கும் என்னதான் மதிப்பு இருக்கப் போகிறது?

“சரியப்பா –

இங்கேயே இரு. நான் அவசரமாகக் கடைத்தெரு போக வேண்டும். ஐந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன்” என்று விட்டால் போதுமென்று, அமுத்தல் நடையையும் இழந்து, ஓடுவதுபோன்று அவனை விட்டு நடந்தான். அப்போதும் “சரிங்க-” என்ற சப்தம் பின் தொடர்ந்து காதில் கேட்டது.

கடைத்தெரு வழியாகவும், ஒரு குறுக்குச் சந்தாக அவனை ஏமாற்றிப் போய்விட முடியும். அப்படித்தான் என் நண்பனின் எண்ணமும். மூன்று பர்லாங், முட்டி பிடித்த சந்துகளில் போவதும், அதனால் சில சில பேர் வழிகளை நடுவில் காணக்கூடாது போவதையும் கூட அவன் பொருட்படுத்தவில்லை.

கடைத்தெருவின் நடுவில் ஒரு சிநேகிதன் தென் பட்டான். அவனோடு பேசி குறுக்குச் சந்தை அடையும் போது அரை மணி நேரம் ஆகிவிட்டது. சந்தில் நுழையும் போது கை தட்டல் சப்தமும், “உங்களைத் தானுங்க-” என்றதும் அவனைத் தூக்கியே போட்டுவிட்டது.

“சரி, வாப்பா” என்று முன்னே சென்றான். வழக்க மாக அரை மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் ஒரு கடையை அடைந்ததும் அதனுள் சென்றான். அங்கு கூடின இரண்டொரு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த ஆள் ஞாபகத்தையே ஒழித்து விட்டான். வீட்டிற்குச் செல்ல வெளிக் கிளம்பி பத்து தப்படி சென்றதும் பழையபடியே கை தட்டல் சப்தமும் “உங்களைத் தானுங்க-” என்ற வார்த்தையும் காதில் விழுந்தன. அப்போது மணி ஏழரை ஆகிவிட்டது. நன்றாக இருட்டியும் விட்டது. அதிகமாகப் பிறர் கண்ணில் படாது அவனோடு போவது என்பதைப் பற்றி எண்ணும்போது தன் மனது ஒருவகைச் சாந்தத்தை அடைந்ததை உணர்ந்தான்.

“சரி, வா-” என்று அழைத்துக் கொண்டே நடந்து சென்றான். நடுவில் கொஞ்சம் ஆத்திரமாக, “ஆமாம், உனக்காகத்தான் காத்திருந்தேன்” என்று சொல்லி, பேசாது முன் சென்று கொண்டிருந்தான் என் நண்பன்.

“ஆமாங்க-தெரியுங்க-” என்று சொல்லிக் கொண்டே அவனும் பின்தொடர்ந்தான். அவனுடைய மூக்கு ஞாபகம் என் நண்பனுக்கு நடுவில் வந்தது போலும்! பின்னால் வந்தவன் அதே சமயத்தில் “ஆமாங்க – என்னைப் பார்த்தாலே மறக்காதுங்க + என் மூக்குங்க-” என்று சொல்லி நிறுத்தி என் நண்பனுடைய சட்டையை மேலும் கீழும் பார்த்தான்.

“ஆமாம்-என் சட்டைக்குப் பை இல்லைடா” என்றான் என் நண்பன்.

“ஆமாங்க -” என்றான் அவன். என் நண்பன் மனது அப்போது பையில்லாச் சட்டையிலிருந்து ‘பாஷன்’ நாசுக்கு முதலிய மூலைகளுக்குக் குறுக்காக ஓடிக் கொண் டிருந்தது. இதற்குள் இருவரும் எங்கள் ஊர்ப் பெரிய மைதானத்திற்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். என் நண்பனோவெனில் உலக நடப்பை மறந்து ஒன்று கூடும் ஞாபக சக்தியையும் அன்று சாயந்திரம் முதல், இழந்தவன் போன்று தான் தோன்றினான். ஏதோ மறந்ததை ஒரு பிசகான காரியத்தை ஞாபகப் படுத்திக் கொள்வதே போன்றுதான் அவன் மனது சஞ்சலமடைந்து கொண்டிருந்தது.

மைதானத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே அதன் வாயிலில் வந்து நின்றான். “சரீங்க” என்றான் அந்த நாட்டுப்புறத்தான்.

என் நண்பனுக்குத் தெரிந்த அநேக நண்பர்கள் மைதானத்தின் உள்ளே போய்க் கொண்டிருந்தனர். அவனுடைய ஊறிய நாகரீகப் பழக்கமே, அவன் கையைத் தூக்கி ‘குட் ஈவினிங்’ செய்வித்தும், தலையை அசைத்தும் கொண்டிருந்தது போலும். மூளை மட்டும் இடம் விட்டு எங்கேயோ வெகு தூரத்தில் உலாவச் சென்றதுதான்.

“என்னடா விசேஷம்?” என்றான் திடீரென்று என் நண்பன். அவன் வார்த்தைகளில் ஒரு ஆத்திரம் தொனித்தது. கூட்டத்தைக் கண்டதும் அவன் மனத்தில் ஒரு நிதானமும் தைரியமும் கூடச் சேர்ந்து கொண்டது போன்றுதான் அவன் நின்ற தோரணை தெரிவித்தது.

“கேசுங்க-” என்றான் பட்டிக்காட்டான்.

“ஆமாம்-” என்றான் மறதியில் ஏதோ ஆமோதிப்பவன் போன்று என் நண்பன்.

“லெட்டருங்க-” என்று மடியிலிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினான் பட்டிக்காட்டான். “ஐயா கொடுத்தாரு கொடுக்கச் சொல்லி-” என்றான்.

“யாரு?”

“அவங்க – ரயிலிலே, என்னைத் தெரிஞ்சுண்டு – அந்த ஐயா எங்கிட்டே சொன்னாரு- கொடுத்தாரு-”

“என்ன-?” என் நண்பனுக்குக் கொஞ்சம் ஆச்சரியம் மேலிட்டது. அவன் விஷயங்களையும் தெரிந்து கொள்ள அவாக் கொண்டான். “அந்த ஐயா கேட்டாரு ‘எங்கே போறேன்?’னு சொன்னேனுங்க-அவங்க சொன்னாரு ‘வக்கீலய்யா நல்ல நல்ல ஆர்க்குமெண்டு செய்வாரு முனிசீபே அவங்களுக்குத் தனது’ன்னு. என்னை தெரிஞ் சிருக்கும்’னு கூடச் சொன்னாரு- ‘டேய் எங்கே போனாலும் அவங்கதாண்டா. சாயங்காலம் பார், சில்க் சட்டை விசிறி மடிப்பு அங்கவஸ்திரம் சோரா பாத்தாலே உனக்குத் தெரியும்டா அவங்களை’னு அது சரிதானுங்க. உங்களைப் பார்த்ததே தெரிஞ்சுடுத்தே எனக்கு!” என்றான் பட்டிக்காட்டான்.

செய்கிறதை அறியாமலே, அவன் லெட்டரை வாங்கிய என் நண்பனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அல்ல, எல்லாம் நன்கு புரிந்துவிட்டது போன்றுதான். ஒரு சிரிப்புக் கூட வந்துவிட்டது. தன்னைப் பார்த்துக் கொண்டான் என்றுதான் நான் நினைக்கிறேன். தன் முகத்திற்கு நேராக மூன்று நிமிஷம் பிடித்தும், கண்கள் கவரின் விலாசத்தைப் பார்த்தும் அவனுக்கு விளங்கவில்லை. யோசனைகள் அல்லவோ அவன் மனத்தில். கடைசியாக விலாசத்தை உரத்தே படித்தான். ‘வக்கீல் சுப்ரதிவ்யம் அய்யங்கார்’ என்று எழுதியிருந்தது.ஆமாம், அவரும் என் நண்பனுக்கு நன்றாகத் தெரிந்தவர்தான். அவர் அந்நகரில் ஒரு பிரபல வக்கீல்.

கொஞ்சநேரம் முன்புதான், அவர் மைதானத்திற்குள் சென்றார். தானும் அவருக்கு ‘விஷ்’ பண்ணியது ஞாபகம் வந்தது. அவர் அமுத்தல் ஆசாமிதான். வக்கீல் தரகர் சொன்னது உண்மை தான். “சில்க் சட்டையிலும் விசிறி மடிப்பு அங்க வஸ்திரத்திலும் தினம் தினம் சாயங்காலம் அவர் போகும்போது அவரைச் சுட்டிக் காட்டாமல் இருக்கப் பொட்டையன் கண்களால்கூட முடியாது. ஆனால் இன்றைய தினம் அவர் உடை ஒரு மாதிரியாக……” என்று என் நண்பன் யோசித்துக் கொண்டே மைதானம் பக்கம் பார்த்தான். அவனைத் தூக்கி வாரிப்போட்டது அங்கு பார்த்த காட்சி!

கதர் ஜிப்பாவும், குல்லாயும் உயிர் பெற்று உலாவுவதைப் போன்றுதான் நினைத்தான். தன்னை ஒரு தரம் பார்த்துக் கொண்டான். ஆம், கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வந்தது. ஏதோ மத்தியானம் உறங்கியவன் அநேக ஆண்டுகளை, சாயங்காலம் எழுவதற்குள் நித்திரையில் கழித்து, தெரியாது எதிரில் இருந்த சில்க் சட்டையையும் விசிறி மடிப்பு அங்கவஸ்திரத்தையும் போட்டுக்கொண்டு வெளியே வந்துவிட்டான் என்ற தோற்றத்தைத் தான் முதலில் அடைந்தான். ஒரு வகை மயக்கம் உலகத்திலே ஒருவரும் இத்தகைய உடுப்புக்களில் தோன்றவில்லை அன்று, ‘பாஷன்’ மாறிப் போய்விட்டது போலும்! ஆனாலும் நிச்சயமாக நேற்று வரையில் சில்க் சட்டையும் விசிறி மடிப்பும் ஊரில் உலாவியதே-

திடீரென்று அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்று சாயங்காலம் ‘ஜவஹர்’ அவ்வூர் வருகிற விஷயம் தெரிந்தது. மேடையின் மீது போடும் ஆசனங்களில் ஒன்றில் உட்காரும் அந்தஸ்து சுப்ரதிவ்யம் அய்யங்காருக்கு அன்று உண்டு என்பதையும் தெரிந்து கொண்டான். ஆமாம், ஒரு நாளைக்காவது சில்க்கும் விசிறி மடிப்பும் ரஜா வாங்கிக் கொண்டு வீட்டு ஸ்டாண்டில் இருக்கின்றன. புதிதாகத் தைத்ததும் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டது மான ஜிப்பாவும், குல்லாவும் வெளிவந்து உலாவுகின்றன என்பது தான் அவன் மனதில் தோன்றி நிச்சயம் கொண்டது……

“நான் அல்லடா அவர். இப்படியே நேராகப் போய் வலது பக்கத்தில் இரண்டாவது விதி திரும்பி 18-ம் நம்பர் வீட்டிற்குப் போ-அங்கே இருப்பார் வக்கீல் ஐயா-” என்றான். பட்டிக்காட்டானுக்கு நம்பிக்கை இல்லை. உள்ளே மேடையில் அவர் இருக்கிறார் என்றாலோ, அந்த உடையில் அவரைப் பார்த்தால் நிச்சயம் நம்பமாட்டான், மற்றும் தன்னையும் விடமாட்டான் என்று நண்பனுக்குத் தெரிந்தது.

“அவர் என் சிநேகிதர்தான். ஆமாம், ரயிலிலே அந்த ஐயா சொன்னதும் சரிதாண்டா. அவர் ரொம்ப ஷோக்கானவர் தாண்டா – ஜிப்பா – சீ, சீ-இல்லை. சில்க் சட்டையிலும், விசிறி மடிப்பிலும் – போய்ப் பாரு, வீட்டிலே இருக்காரு அவருக்குத் தலைவலி இன்னிக்கு வெளியிலே வல்லை” என்று சொல்லி அவனை மெதுவாக அனுப்பினான்.

தன்னை ஒரு தரம் பார்த்துக் கொண்டான். அப்போது தனிமையாக அவன் அந்த மைதான வாயிலில் நின்று கொண்டிருந்தான். உள்ளே பிரசங்கம் நடந்து கொண் டிருக்கிறது. தனியாக பைத்தியக்காரத்தனத்தில் தான் இருப்பதாக ஒரு எண்ணம் முதலில் – பிறகு உலகமே பைத்தியக்காரத்தனமாய்ப் போய்விட்டதோ என்ற யோசனையும், சம்சயமும், கடைசியாக, ஒன்றுமே புலப்படாமல் ‘பைத்தியக்காரத்தனம்’ என்று ஒரு தரம் முணுமுணுத்து மூச்சு விட்டான். யார் யார் எப்படி எப்படி என்பதை அவனால் உணர முடியவில்லை அப்போது.

எப்போதும் முடியாதென்ற எண்ணம் தான் எனக்கும்.

– மணிக்கொடி 1938

மௌனி மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். எஸ். மணி ஐயர் என்கின்ற இயற் பெயருடைய மௌனி, ஜூலை 27, 1907-ல் தஞ்சாவூர் மாவட்டம்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *