மாண்டவர் மீண்டது




(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நாடக பாத்திரங்கள்
பீமராஜன் – ஓர் சிற்றரசன்
ஆநந்தன், பிரம்மாநந்தன் – அரண்மனை விதூஷகர்கள்
வீரபத்திரன் – பீமராஜன் வேலையாள்
மஹாரானி – பீமராஜன் மனைவி
ரஞ்சிதம் – மஹாராணியின் வேலைக்காரி
முதல் அங்கம்
முதற் காட்சி
இடம்- ஆனந்தன் வீட்டில் ஓர் அறை.
ஆனந்தனும் பிரம்மாநந்தனும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.
ஆ: அடே தம்பி! இந்தக் கஷ்டத்துக்கு என்னடா செய் யரது அத்தையம்மாளே கேட்டா, கல்யாண செல் வுக்கு நூறு பொன் கொண்டு வந்தாதான் எம் பொண்ணே கண்ணாலம் பண்ணிக் கொடுக்க முடியும் இண்ணு கண்டிப்பா சொல்லி வுட்டாங்கடா இண் ணைக்கி. நானு எவ்வளவோ சொல்லி பாத்தேன், கொஞ்சம் கொறைச்சிக்கிங்க இண்ணா, கேக்க மாட் டேண்ராங்கடா ; நீ பொன்னே குறைச்சா நானு பொண்ணெ குறைச்சுடரேன் இண்றாங்க!
பி: அது என்னமா அண்ணா பொண்ணெ குறைக்கிறது?
ஆ: உம் – அதையும் கேட்டு பாத்தேன். நீ நானு கேக்ரத்துலே பாதி பொன்னு கொடுத்தா, நானும் எம் பொண்லே பாதி பொண் கொடுக்கிறேன் இண்ராங்க – நமக்கு மேலே இருக்கராங்கடா அவுங்க!
பி: நம்ம அத்தெ அல்லா !
ஆ: அதிருக்கட்டுண்டா – இப்பொ இந்த கஷ்டத்துக்கு என்னடா செய்யரது? எனக்கோ வயசாயி போச்சி: எத்தனி நாளு கண்ணாலம் இல்லாதே இருக்கிறது? கண்ணாலம் சீக்கிரம் ஆவணுமிண்ணு சொன்னாகா, நூறு பொன்னு சீக்கிரம் கொண்டா இண்ராங்க! இந்த கஷ்ட காலத்திலே இப்பொ நூறு பொன்னுக்கு எங்கே போரது? மானமோ காய்ஞ்சி போச்சி, துளி மெலேயே காணோம்! ராஜா என்னாடா இண்ணா, சண்டைக் கோசரம் பணம் வோணும் இண்ணு வரியெல்லாம் ஒஸ்த்திவுட்டாரு!
பி: ராஜாவே போய் கேட்டு பாரேன் அண்ணா, கலியாணத்துக்கு செலவுக்கு வோணும் இண்ணு.

ஆ: அது பிரயோ ஜனமில்லே! அல்லாம் நேத்து கேட்டு பாத்தேன்! இதுக்குள்ள என்னாடா உனக்கு கல்யாணம், அல்லாம் எம்பிள்ளைக்கி கலியாணம் ஆவும் போது உனக்கும் என் செலவிலே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் இண்ராரு! ராஜா பின்ளைதான் ஒனக்கு தெரியுமே – சின்ன பிள்ளே அவருக்கு கலியாண மாகரத்துக்கு இன்னும் எத்தனி வருஷமாகுமோ! அதுக்குள்ள எனக்கு கருமாந்திரமாயி பூடும் போலே இருக்குது!
பி: அண்ணா! எனக்கொரு நல்ல யுக்தி தோணுது அண்ணா !
ஆ: என்னாடா அது? சொல்லு பார்ப்போம்.
பி: உங்களுக்கு கருமாந்திரம் செலவுக்கு பொன் வோணும் இண்ணு நூறு பொன் கேட்டுப்பாருங்களே!
ஆ: குட்டுடா அவனே! – புத்திசாலி! எனக்கு கருமாந்திரம் ஆவணும், அதுக்கு பொன்னு ஓணும், இண்ணு நானே என்னாடா கேக்கரது?
பி: அது ஒரு கஷ்டம் இருக்குது வாஸ்தவம்தான் – ஆனா நானுசொல்ரத்தே கேளுங்க – நானு செத்து பூட்டேன் இண்ணு,ராஜாகிட்டபோயி, ரொம்ப அழரமாதிரி அழுது, கருமாந்திர செலவுக்காக இண்ணு, நூறு பொன் வாங்கி வந்துடுங்க – அப்பரம் பாத்துக்கலாம்.
ஆ: ஆமாண்டா தம்பி! நல்ல யுக்திதான் இது ! அப்பொ நானு உடனே போய் ராஜாவே கேக்கட்டுமா?
பி: போய் வாங்க!- அண்ணா – இன்னொரு சின்ன சமாசாரம்.
ஆ: என்னா சீக்கிரம் சொல்லு.
பி: உங்க கல்யாணத்தோடே எனக்கும் அப்படியே ஒரு கல்யாணம் பண்ணி வுடுங்களேன் அண்ணா?
ஆ: குட்டுடா அவனே! – என் கல்யாணத்துக்கே வழியே காணோம் – இதுக்குள்ள உனக்கென்னாடா கல்யாணம்?
பி: இல்லே அண்ணா உங்க கல்யாணத்தோடே எனக்கும் ஒண்ணு பண்ணியுட்டா, செலவு சுலபமா பூடுமே இண்ணு பாக்கரேன்.
ஆ: அமாண்டா, பொண்ணு எங்கேடா மொதல்லே?
பி: நம்ப அத்தைக்கு இரண்டாவது பொண்ணு இருக் குதே அண்ணா, அதுக்குக்கூட வயசாயி இருக்குது அண்ணா.
ஆ: கெட்டிக்காரன்! எல்லாம் விசாரிச்சி வைச்சிருக்கிரையா! – ஆமாண்டா அவுங்க அந்த பொண்ணெ உனக்குக் கொடுக்க ஒப்புக்கணுமே?
பி: அண்ணா நானு நேத்து மொள்ளபோய் கேட்டு பாத்தே – நம்ப அத்தெதானே இண்ணு-
ஆ: குட்டுடா அவனே!- ஏண்டா இதுக்குள்ள இந்த யுக்தி பண்ணையா? – அதிருக்கட்டும், அவுங்க என்னா பதில் சொன்னாங்க?
பி. பெரிய பொண்ணு இருக்கும்போது சின்ன பொண்ணுக்கு என்னமா கண்ணாலமாகரது அப்பா,பெரிய பொண்ணுக்கு கண்ணாலம் ஆகட்டும், அப்புறம் பாத்துகலாம் இண்ணாங்க.
ஆ: ஆமாம் கல்யாண செலவுக்கு என்னமான கேட்டாங்களா?
பி: என்னையும் நூறு பொன் கேட்டாங்க. எல்லாம் பேரம் பண்ணி அம்பது பொன்னுக்கு தீர்மானம் பண்ணி வைச்சிருக்கிறேன்!
ஆ: ஏண்டா இதெல்லாம் எங்கிட்ட சொல்லாதே என் கதை யெல்லாம் முன்னே கேட்டுகனையோ? குட்டுடா இவனே!
பி: இல்லே அண்ணா, எப்பவும் அண்ணாத்தெ சமாசாரம் மொதல்லே, தம்பி சமாசாரம் பின்னாலே.
ஆ: சரிதாண்டா தம்பி, நீ ரொம்ப புத்திசாலிதான். ஊட்டுலேயே இரு, நானு போய் ராஜாகிட்ட நீ சொன்னமாதிரி சொல்லி நூறு பொன்னு முன்னே வாங்கிகினு வந்தூடரேன்.
பி: கொஞ்சம் இருங்க அண்ணா- எனக்கு இன்னொரு யுக்தி தோணுது – ராஜாவும் ராஜாத்தியும் தனித் தனியா யிருக்கர சமயம் பாத்து, நீங்க ராஜாகிட்ட போய், நானு சொன்னமாதிரி கேளுங்க – நானு ராஜாத்திக்கிட்டபோயி பொன்னு கேட்டு வாங்கி வந்தூடரேன்.
ஆ: நல்லயுக்திதான் ஆனால் – குட்டுடா அவனே! நீ என்ன மாடா நீ செத்து பூட்டே இண்ணு செலவுக்கு கேப்பே?
பி: இல்லெ அண்ணா – இதுகூடவா உங்களுக்கு சொல்லணும்! நானு ராஜாத்திகிட்ட நீங்க செத்து பூட்டைங்க இண்ணு சொல்லி பொன்னு கேட்டு வாங்கி வர்ரேன்!
ஆ: அடே தம்பி ! நீ தாண்டா கெட்டிக்காரன்! நீ என்னே குட்டு சொல்ரேன் – நானு பட்டுகிரேன்.
பி: வேணாம் அண்ணா, என்னாண்ணாலும் நீங்க பெரியவங்க – சீக்கிரம் பொறப்படுங்க! – நீங்க அரண்மனைக்கு முன்புரமா ஜல்தியா போங்க, நானு பின்பக்கமா ராஜாத்தி இருக்கிற அந்தப்புரத்துக்கு போரேன். [போகிறார்கள்]
காட்சி முடிகிறது.
இரண்டாவது காட்சி
இடம் – அரண்மனையில் ராஜாவின் அறை. பீமராஜன் வேலையாளுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
பீ: ஏண்டா வீரபத்திரா, உங்களில் ஒரு கல்யாணம் பண்ணுவ தென்றால் எவ்வளவு செலவு பிடிக்கும்?
வீ: கொறைஞ்ச பட்சம் 25 பொன்னாவது பிடிக்குங்க-
பீ: அப்படியிருக்கும்போது, நமது அரண்மனை விதூஷ கன், தன் கல்யாணத்திற்கு அதிகமாகக் கேட்கிறானே.
வீ: தாராளமா – சம்பிரமாபண்ரதானா, 50 பொன்னாவது பிடிக்காதுங்களா?
பீ: அவன் நூறு பொன் வேண்டு மென்கிறானடா.
வீ: மஹாராஜா அரண்மனையில் உத்யோகஸ்தனாயிருந்து, அந்த அந்தஸ்துக்கு தகுந்தாப் போலே செலவு பண் ண்ணும், இண்ணு கேட்கராப் போலே இருக்குது.
பீ: அவன் நிரம்ப செலவாளி என்று நினைக்கிறேன்.
வீ: அது வாஸ்தவம் தானுங்க – அதிகமாகத்தான் செல வழிக்கிறான், கண்ணு மண்ணு தெரியாதே.
பீ: ஆனாலும் சில விஷயங்களிலே மாத்திரம் சிக்கனமாகத் தான் இருக்கிறான்,
வீ: மஹாராஜா சொல்வது என்னமோ வாஸ்தவம், தன் சொந்த விஷயங்களிலே ரொம்ப சிக்கினம், ஒரு காசு செலவழிக்க மாட்டான்-ஆ! இதோ வர்ரானுங்க அழுதுகினே !
ஆனந்தன் அழுதுக்கொண்டேவந்து பீமராஜன் காலில் விழுகிறான்.
ஆ: மஹாராஜா மஹாராஜா ? [அழுகிறான்]
பீ: என்னடாப்பா! என்ன சமாச்சாரம்? ஏன் அழுகிறாய்?
ஆ: மஹாராஜா! நானு என்ன சொல்லப்போரேங்க – என் தம்பி – தம்பி! [அழுகிறான்]
பீ: என்ன உன் தம்பிக்கு?
ஆ: [அழுதுக் கொண்டே] பதினெட்டு வருஷமாக என் கண்ணெப் போல வளர்த்தேனுங்க! கூட பிறந்த தம்பி! [தேம்பி அழுகிறான்]
பீ: ஐயோ பாவம்!
ஆ: ரொம்ப புத்திசாலிங்க! ரொம்ப கெட்டிக்காரன்? என் வார்த்தைக்கு ஒரு பேச்சு குறுக்க பேசமாட்டானுங்க! அவனைப் போல இந்த உலகத்துலே இன் னொரு தம்பி ஆப்படரது கஷ்டங்க![தேம்பி அழுகிறான்.)
பீ: பாவம்! என்ன உடம்பு?
ஆ: நானு என்னாண்ணு சொல்லப்போரேன்! மூணே மூணு நாள் காய்ச்சல்! நேத்து ராத்திரிகூட சாப்பாடு சாப்பிட்டானுங்க! எனக்கு கண்ணாலம் ஆவும்போது அவனுக்கும் ஒரு கண்ணாலம் பண்ண யோசிச்சிகினு இருந்தேன்! எள்விதி என்விதி! இப்படியாச்சி என் கதி! [தேம்பி அழுகிறான்]
பீ: [பெரு மூச்செறிந்து] உம்! விசனத்தை அடக்கிக் கொள் இனி விசனப்பட்டென்ன பலன்? உலகம் இப்படி யிருக்குது ! இதற்கு நாம் என்ன செய்யலாம்? உம் இந்த கர்மங்களுக்கெல்லாம் உங்களவர்களில் என்ன பிடிக்கும்?
ஆ: மஹாராஜா என் கையிலே இப்போ ஒரு காசுமில்லெ! [அழுகிறான்]
பீ: அதற்காக நீ துக்கப்படவேண்டாம் வேண்டிய செல் விற் கெல்லாம் நான் தருகிறேன். நேர்ந்து விட்டது அகஸ்மாத்தாய் இதற்கு என்ன செய்யலாம்! ஸ்வாமியை நம்பி தைரியமாயிரு – எவ்வளவு வேண்டு முனக்கு?
ஆ: மஹாராஜா ஒரு நூறு பொன்னாவது வேண்டும்.
பீ: நூறு பொன் எதற்காகடா? கலியாணத்திற்குதான் நூறு பொன் கேட்டாய்,
ஆ: மஹாராஜா கலியாணத்தைவிட இதற்கு அதிகமாகப் பிடிக்கும். கலியாணத்திற்காவது 4 நாள் எங்கள் பந்துக்களுக்கெல்லாம் சாப்பாடு போடவேண்டும். இதற்கு 10 நாள் சாப்பாடு போடவேண்டும். உங்க ளால்தான் இந்த காரியம் முடியவேண்டும் (அழுகிறான்] எப்படியாவது நூறு பொன் தயவு பண்ணவேண்டும், மந்திரியவர்களுக்கு நூறு பொன் உடனே கொடுக்கும் படி உத்தரவாக வேண்டும் – தம்பி! தம்பி!
பீ: அப்படியே ஆகட்டும். [ஒரு ஓலையில் எழுதிக்கொடுக்கிறார்]
ஆ: மஹாராஜா, காரியம் எல்லாம் ஆனவுடனே வந்து பாக்கரேன் அது வரைக்கும் கொஞ்சம் ரஜா கொடுக்கணும்; நான் வருகிறேன்,- தம்பி! தம்பி! [போகிறான்.]
பீ: பாவம்? தம்பிக்காக நிரம்ப துக்கப்படுகிறான்.
வீ: ஆமாங்க ரொம்ப அழுதான்.
பீ: ஆனாலும் கொஞ்சநாளைக்கு முன்னே அவன் அதன பிரசங்கியா யிருக்கிறான், நான் ஏதாவது சொன்னால் அதற்குமேலே பேசுகிறான், என்று சொன்னானே.
வீ: அதென்னமோ உண்மைதானுங்க; அந்த பயலே எனக்குக்கூட தெரியும் – அதனபிரசங்கி – என்நேரமும் ஏதாவது குட்ரயுக்தி பண்ணிக்கினே யிருப்பான் – அண்ணனுக்கு மேலே அவன்!
பீ: ஆனாலும் – பாவம்! என்னமோ சிறு வயதிலே பூட்டான்.
வீ: பாவம்! என்னமோ சிறுவயது தான் – இன்னும் கலியாணம்கூட ஆகலே.
பீ: ஆமாம், கர்மாந்திரத்திற்கெல்லாம் நூறு பொன் எதற்காகடா?
வீ: ஆமாங்க, அது அவன் கேட்டது அதிகம்தான்; மஹா ராஜா கொடுக்கரதெ நானு தடுக்கக்கூடாது இண்ணு சும்மா இருந்துட்டேன்.
பீ: ஆனாலும் நம்முடைய அரண்மனை விதூஷகன் பார், அவன் வீட்டில் ஏதாவது காரியம் நடந்தால், அந்த அந்தஸ்திற்கு தக்கபடி அவன் செலவழிக்க வேண்டாமா?
வீ: அதுக்கு என்ன சந்தேகங்கள்! அவன் அப்புறம் சரியாக செலவழிக்காப்போனா அது நம்ப மஹாராஜா வின் சமஸ்தானத்துக்கல்லவா பேச்சாகும் –
பீ: வீரபத்ரா-நான் அங்குபோவது – முடியாது – நீயே எல்லா காரியமும் சரியாய் நடக்கிறதா என்று பார்த்துவிட்டுவா.
வீ: உத்திரவு மஹாராஜா. [போகிறான்]
காட்சி முடிகிறது.
மூன்றாவது காட்சி
இடம் – அந்தப்புறம்.
மஹாராணி வேலைக்காரி ரஞ்சிதத்துடன் பேசிக் கொண்டிருக்கிறாள்.
ம: ஏண்டி ரஞ்சிதம், உன் பெண்ணுக்கு சீக்கிரம் கலியாணம் ஆகப்போகிறது என்றாயே – எப்பொழுது கலியாணம்!
ர: உம்- உம். அந்த கலியாணம் எல்லாம் பழுத்துப் போச்சம்மா! நம்ப அரமனெ விதூஷகன் ஆநந்தனுக் குத்தான் கட்டிக் கொடுக்கலாமிண்ணு இருந்தேன்; அல்லாம் ஆவட்டும் ஆவட்டும் யோசிக்கிறேன் இண்ணு சொல்லிகினு இருந்து, கடைசியிலே அவுங்க அத்தெ பொண்ணெ கண்ணாலம் பண்ணிக்கபோரேன் இண்ணு,நேத்து சொல்லி விட்டான் அம்மா! இந்த விதூஷகனுங்களே மாத்திரம் நம்பக்கூடாதம்மா. அவுங்க பேசரது, என்ன வெளையாட்டு. என்னா நெஜம்,இண்ணு சொல்றத்துக்கில்லே அம்மா.
ம: அவன் இல்லாமற்போனால் போகிறது – அவன் தம்பி ஒருவன் இருக்கிறானே, அவனுக்காவது பிடித்து கட்டுகிறது தானே?
ர: அவன் மாத்திரம் என்னா நிச்சயம்? அவன் தம்பி அங் கதன்!- அண்ணனுக்கு மேலே பொய் பேசுவான் அவன் – அதோ வர்ரான் பாருங்க – என்னமோ மூக்கே சிந்திகினு!
பிரம்மானந்தன் அழுதவண்ணம் வந்து மஹாராணியின் காலில் விழுகிறான்.
பி: மஹாராணி! மஹாராணி!
ம: என்னாடாப்பா? என்ன சமாசாரம்?
பி: மஹாராணி! என்கதியிப்படி – இப்படி ஆவுமிண்ணு நானு கனாவிலேகூட நெனைக்கலையே! என் தலைவிதி யிப்படியா இருந்தது! [அழுகிறான்]
ம: எள்ன அப்பா,சமாசாரம்? கொஞ்சம் துக்கத்தை அடக்கிக் கொண்டு சொல்,
பி: என்னாண்ணு சொல்ரது நானு! எங்க தகப்பனாரு தாயாரு இறந்த போதுகூட நானு இவ்வளவு துக்கப் படலே! அவுங்களுக்குமேலே என்னை அவ்வளவு பட்சமா பாத்து வந்தாரே! [அழுகிறான்]
ம: யார் யார்?
பி: எங்க அண்ணாத்தே! அவரெப்போலே அண்ணாத்தே இந்த பூலோகத்திலேயே கெடைக்கப் போராங்களா இனிமேலே! எனக்கு முன்னே கொடுக்காதே வாயிலே ஒரு துரும்பு போடுவாரா? நேத்துகூட – தம்பி! ஒனக்கு கண்ணாலம் தீர்மானிக்காதே நானு கண்ணா லம் பண்ணிக்கமாட்டேன் இண்ணாரே! நம்ப ரெண்டு பேருக்கும் ஒண்ணா கண்ணாலம் ஆவணும் இண்ணு சொன்னாரே! என் கிராச்சாரம்! கிராச்சாரம்! [நிரம்ப அழுகிறான்.]
ம: கொஞ்சம் துக்கத்தை அடக்கிக்கொள் அப்பா! பிறக் கிறதும், இறக்கிறதும் தெய்வ சங்கல்பம் – இதற்கு நாம் என்ன செய்யலாம்? – பாவம்- சின்ன வயது! கலியாணத்திற்காக ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தான்.
ர: ஆமாம்!- எம் பொண்ணெ கண்ணாலம் பண்ணிக்கினு செத்திருந்தா?
ம: அடி ரஞ்சிதம்! இறந்து போனபின் ஒருவரையும் தூஷிக்கலாகாது, நேத்துகூட என்னைவந்து கண்டு கொண்டு போனானே பாவம்!- என்ன உடம்பு அப்பா அவனுக்கு?
பி: உடம்புக்கென்னா -நண்ணாதாயிருந்தது, இன்னமும் இருக்குது – இருந்தாப்போலே இருந்து திடீரிண் சாஞ்சிவுட்டாரு! திடீரிண்ணு காத்தடிச்சி கப்பல் கவுந்துபோச்சி -மஹாராணி! மஹாராணி! [நிரம்ப அழுகிறான்]
ம: மனதை தேற்றிக்கொள் அப்பா! பிறப்பதும் இறப்பதும் சகஜம்.
பி: ஐயோ! இறக்கிறதும் பெழைக்கிறதும் சகஜமாயிருக்க கூடாதா!
ம: அது திருவுளச் செயல்! கண்ணைத் துடைத்துக்கொள் அப்பா, மேல் நடக்க வேண்டிய காரியத்தைப் பார்!
பி: மேலே நடக்கவேண்டிய காரியம் என்னா இருக்கிறது! நானுகூட செத்துப் பூடலாம் இண்ணு இருக்கிறேன்! மஹாராணி எனக்கு உத்தரவு கொடுங்க,[அழுகிறான்.]
ம: சீச்சி! அப்பா சொல்லாதே! போனவர்கள் போன போதிலும் இருக்கிறவர்களாவது சுகமாய் வாழ் வேண்டாமா?
பி: இனிமேலே எனக்கென்னா சொகம் இருக்குது! அவ ரெப்போலே என்னெ பட்சமா யார் காப்பாத்த போராங்க! [அழுகிறான்]
ம: பயப்படாதே, மஹாராஜா இல்லையா? நான் இல்லையா? இப்போ உன் செலவிற்கு ஏதாவது வேண்டுமா கேள் தருகிறேன்.
பி: ஒரு அம்பது பொன்கொடுங்க!- ஏழைங்க எங்களுக்கு என்னாத்திற்கு அதிகம்?
ம: அப்படியல்ல, நான் மந்திரிக்கு ஒரு ஓலை கொடுக்கிறேன் – நூறு பொன் கொடுக்கும்படி – நன்றாக சம்பிரமாக நடத்து காரியத்தை! மஹாராஜா அரண்மனை விதூஷகனுக்கு தக்க அந்தஸ்தின்படி.
பி: எல்லாம் உங்கதயவு – கொடுங்கள் [மஹாராணி ஒரு ஓலையை எழுதுகிறாள்.] ஐயோ! இப்படிப்பட்ட தயாளத்தெ கேட்டு அவரு சந்தோஷப்பட கொடுத்துவைக்க இல்லையே!
[ஓலையை வாங்கிக்கொண்டு] நானு வர்ரேன் மஹாராணி! (போகிறான்.)
ர: எனக்கென்னமோ சந்தேகமாயிருக்குது அம்மா! அவன் நல்ல பலசாலியாச்சே! திடீரிண்ணு என்னமா செத்து பூடுவான்! நான் போய் பாத்து வரட்டுமா?
ம: சீச்சீ! இதுலேகூடவா உனக்கு சந்தேகம்? உன் பெண் ணைக் கலியாணம் பண்ணிக்கொள்ளவில்லை யென்று உனக்கு கோப மிருக்கிறாற் போலிருக்கிறது! ஒருவிதத் தில் உன் பெண்ணை அவன் கலியாணம் பண்ணிக் கொள்ளா திருந்தது நல்ல தல்லவா! கலியாணம் பண் ணிக் கொண்டிருந்தால் அவள் கதி இப்பொழுது என்னவாயிருக்கும்?
ர: நீங்க சொல்வது சரிதான் – எதுக்கும் நானு போயி பாத்துவுட்டு வர்ரேன் – உத்திரவு கொடுங்க கொஞ்சம்.
ம: போய்வா! – போய் சீக்கிரம் வந்துவிடு. [ரஞ்சிதம் போகிறாள்.]
காட்சி முடிகிறது.
நான்காவது காட்சி
இடம்- ஆநந்தன் வீட்டில் ஓர் அறை.
ஆனந்தனும், பிரம்மாநந்தனும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.
ஆ: அடே! தம்பி! இந்த பொம்மனாட்டிங்களே மாத்திரம் எப்பவும் நம்பக்கூடாதுடா! நூத்தியம்பது பொன் கொண்டு வந்தா நம்ப ரெண்டு பேருக்கும் கண்ணாலம் பண்ணிக் கொடுக்கிறேன் தன் ரெண்டு பொண்ணு களையும் இண்ணு சொல்லிவுட்டு, இப்போ. இன்னம் 50 பொன் வோணும் இண்ணு கேக்கரா பாத்தையா, நம்ப அத்தே! இப்படி மோசம் செய்யலாமாடா நம்மே?
பி: ஆமாம் – நம்ப மாத்திரம் கருமாந்திரத்துக்கு இண்ணு சொல்லிவுட்டு ராஜாகிட்ட இருந்து கல்யாணத்துக்கு. பொன் மோசம்பண்ணி வாங்கிவரலையா? அப்படி தான் அல்லாரும்; ஆனாலும் நம்ப அத்தெ நம்ப கல் யாணத்துக்கு தானே கேக்கரா- அதுவும் சாமானுங்க வெலெ அதிகமா போச்சிண்ணு! எப்படியாவது அந்த 50 பொன்னும் தேடரவழியே பாக்கலாம் அண்ணா.
ஆ: ஆனா, அதுக்குவழி நீதான் சொல்லு.
பி: அண்ணா. நீங்க இந்த வழியாபோங்க – நானு இந்த வழியா போரேன் – ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து போவரத்துக்கில்லே – இன்னும் யாரையானா ஏமாத்தி 25. 25 பொன் வாங்கிகினு வரலாம் – புறப்படுங்க. [புறப்படுகிறார்கள்.]
ஆ: [திடீரென்று’திரும்பிவந்து] அடெ! தம்பி! கெட்டுதே குடி! ராஜா ஆளு, வீரபத்திரன் – நம்ப வூட்டுக்கு வர்ராண்டா! அவன்கிட்ட நீ செத்து போயிருக்கிரே இண்ணு சொல்லி யிருக்கிறேன்டா. – வாவா! இப்படி படுத்துக்கோ – செத்து போனாபோலே மூச்செபுடிச்சிகினு இரு [பிரம்மாநந்தன் அப்படியே செய்கிறான்]
வீரபத்திரன் வருகிறான்.
ஆ: வா அப்பா!வீரபத்தரா! நல்ல சமயத்துக்கு வந்து சேந்தே! எனக்கு யாரும் திக்கில்லே, ஒரு தம்பி இருந்தா அவனும் இப்படி கைவிட்டுட்டான் என்னெ! இந்த சமாசாரம் நம்ப பந்துக்களுக்கெல்லாம் சொல்ல ணுமே, ஆளுயார் ஆப்புடுவான் இண்ணு கவலைபட்டு கினு இருந்தே, சரியான சமயத்துக்கு வந்து சேர்ந்தே அப்பா – நீ சமய சஞ்சீவி?
வீ: [தனக்குள்) நல்ல வேலெதான்!-அப்படியே ஆகட் டும் – என்னாண்ணு சொல்ல?
ஆ: இதுகூடவா தெரியாது – நாளெகாலே செத்துபோன வனுக்கு தகனம் இண்ணு சொல்லிவிடு – சீக்கிரம் புறப்படு.
வீ: அப்படியே. [போகிறான்]
பி: [எழுந்திருந்து] நல்ல யுக்தி பண்ணைங்க அண்ணா இல்லா போனா நானு எத்தனி நாழிமூச்செ புடிச்சி கினு இருக்கிறது?
வீ: [வெளியில் இருந்து) ஆனந்தா –
ஆ. அடடே! திரும்பிவர்ராண்டா- படுத்துக்கோ. படுத்துக்கோ! [பிரம்மாநந்தன் அப்படியே செய்கிறான்]
வீரபத்திரன் மறுபடி வருகிறான்.
வீ: ஏண்டாப்பா, எத்தனி நாழிக்கி இண்ணு சொல்ரது?
ஆ: வெய்யில் அதிகமா ஏர்ரத்துக்குள்ளோ – அஞ்சிநாழிக்குள்ள – இண்ணு சொல்லிவிடு.
வீ: உம் – ஆநந்தா – என்னாடா என்னமோ மூச்சு வர்ராப் போலே இருக்குதே ?
ஆ: உம் உம்! பயித்தியமா என்ன!- காத்து அடிச்சத்துலே துணி அப்படி ஆடுது – சீக்கிரம் போய் வா அப்பா!
வி: இதோ. [போகிறான்]
ஆ: மறுபடியும் திரும்பி வந்தாண்ணா என்னா செய்யரது! – இந்த கதவே மொள்ள தாப்பாள் போட்டுகிறேன் அடே! தம்பி, நம்ப ரெண்டு பேரும் ஒண்ணா வெளியே போனா யாராவது பாத்து, வூட்டிலே ஒருத்தரும் இல்லே இண்ணு தெரிஞ்சா. ஏதாவது சந்தேகத்துக்கு எடமாகும் – நம்ப சூது தெரிஞ்சு பூடும் – நான் இங்கேயே இருக்கிரேன் – நீ போய் மொதல்லே – அந்த வழியா – எவ்வளவு பொன் கொண்டு வர முடியுமோ பாரு.
பி: அப்படியே அண்ணா – நீங்க சொல்ரதும் சரிதான்.
[மற்றொரு வழியாகப் போகப் பார்க்கிறான். திடீரென்று திரும்பி வந்து]
அண்ணா! அண்ணா! ராஜாத்தி வேலைக்காரி வர்ராண்ணா ராஜாத்தி கிட்ட நானு பேசிக்கினு இருந்தபோது- நான் சொன்னத்தெ யெல்லாம் கேட்டுகினு இருந்தா! அவ மொகத்தே உத்துபார்த்தேன் – என்னமோ சந்தேகப்பட்ட மாதிரி அப்பவே தோணுச்சி- இப்ப வந்து, உங்களெ பாத்துட்டா இண்ணா, காரியம் கெட்டு பூடும்! – நீங்க படுத்துகிங்க! படுத்துகிங்க! என்மாதிரி!
[அப்படியே ஆநந்தன் செய்கிறான்.)
ரஞ்சிதம் வருகிறாள்.
பி: என்னாம்மா சமாசாரம்? இந்த வேளயில் வந்தைங்களே?
ர: வேறே ஒண்ணுமில்லே, மஹாராணி அனுப்பிச்சாங்கோ – எப்போ எடுக்கப் போராங்கண்ணு கேட்டு கினு வரச்சொல்லி – அரண்மனையிலிருந்து நாலு ஆளு அனுப்பிக்கரத்துக்காவ.
பி: அவ்வளவு உபகாரம் யார் பண்ணப்போராங்க!- நாளெ காலமே தானிண்ணு சொல்லுங்க-எங்க பந்துங்களெல்லாம் வரவேண்டியிருக்குது.
ர: அப்படியே சொல்கிறேன். [போகிறாள்]
ஆ: (எழுந்திருந்து] அடே, அவ திரும்பிவரப்போரா பாத்துகினு இரு –
பி: வரமாட்டா அண்ணா, நாளே காலமே வரைக்கும்! [அந்த பக்கம் போய்பார்த்து]
அண்ணா! அண்ணா! நீங்க சொன்னது சரிதான் அண்ணா! அதோ திரும்பி வர்ராள்! படுத்துங்க! படுத்துங்க!
[ஆனந்தன் அப்படியே செய்கிறான்]
ரஞ்சிதம் மறுடியும் வருகிறாள்
ர: அப்பா, ஒண்ணு கேக்க மறந்து பூட்டேன். நாளே காலமே எத்தனி நாழிக்கு?
பி: பத்து நாழிக்கிமேலே- ஒருவேளை எங்க பந்துக்க ளெல்லாம் வர்ரத்துக்கு நேரமானா-
ர: அது நாயந்தான், நான் வர்ரேன் – ஏண்டாப்பா இங்கே நானு வர்ரப்போ என்னமோ பேச்சி கொரல் கேட்டாப்போலே இருக்குதே?
பி: நானு யாரோட பேசரது? இந்த பக்கத்து வூட்லே ஒரு பயித்யம் இருக்குது, அது சும்மா பேசிகினு இருக் கும் – அந்தக் குரல் கேட்டிருக்கும்!
ர: சரிதான் – நானு வர்ரேன். [போகிறாள்]
பி: இந்த கதவெயும் தாப்பாள் போட்டுக்கரேன். [அப்படியே செய்து]
அண்ணா, மீதி 50 பொன் சம்பாதிக்கரத்தே அப்புறம் பாத்துகலாம் – முன்னே இந்த ராத்திரியே நம்ப சாமான்களே சுத்திகினு, இந்த ஊரே விட்டு பூட ணும்! இல்லாபோன சமாசாரம் வெளியாயி பூடும், அப்புறம் ராஜா நம்மே தண்டிச்சூடுவாரு! கண்ணாலம் எப்படியாவது ஆயிபோனா பரவாயில்லே, அப்புறம் கல்யாணம் இப்பொதானே ஆச்சி, இண்ணு மன்னிச் சுட்டாலும் உடுவாரு.
ஆ: ஆமாண்டாப்பா! – வா,நம்ப துணிமணியெல்லாம் சீக்கிரம் மூட்டை கட்டுவோம்.
[அப்படியே செய்கிறார்கள்.]
காட்சி முடிகிறது.
ஐந்தாம் காட்சி
இடம் – அரண்மனைத் தோட்டம்.
மஹாராஜாவும், மஹாராணியும், எதிர்புறமாக வந்து சந்திக்கிறார்கள்,
ம: தேவி, என்ன அவ்வளவு அவசரமாய் வருகிறாய்?
தே: உங்களை பார்க்கத்தான் வந்தேன்.
ம: நான் உன்னைப் பார்க்க அவசரமாய் வந்தால் – நீ என்னைப் பார்க்க அவசரமாய் வருகிறாய்; என்ன விசேஷம்?
தே: நமது அரண்மனை விதூஷகன் திடீரென்று இறந்து போய் விட்டானாம்.
ம: யார் நமது அரண்மனை விதூஷகனா!- ஆநந்தனா !
தே: ஆமாம்-பாவம்!
ம: உனக்கென்ன பயித்தியமா? உனக்கு யாரோ தப்பாக சொல்லியிருக்க வேண்டும்!- திடீரென்று போனது அவனல்ல – அவனுடைய தம்பி-
தே: உம் எனக்கா பயித்தியம்? அவன் தம்பி இப்பொழுது தான் என்னிடம் வந்து சொல்லிவிட்டுப் போனான்! – தம்பி உயிரோடு தான் இருக்கிறான். இறந்து போனது அவன் அண்ணன் ஆனந்தன்.
ம: நீ என்ன கனவு கினவு காண்கிறாயா என்ன! ஆனந் தன்தான் என்னிடம் வந்து சற்று முன்பாக அவன் தம்பி திடீரென்று இறந்து போனான் என்று சொன் னானே?
தே: என்ன வித்தையாயிருக்கிறது!- அவன் தம்பி என்னிடம் வந்து இப்பொழுதுதான் அழுதுவிட்டு போனானே – அவன் அண்ணன் கர்ம செலவுக்காக மந்திரியிடம் நூறு பொன் கொடுக்கும்படி ஓலை வாங்கிக் கொண்டு போனானே !
ம: பிரம்மானந்தனா ! என்ன ஆச்சரியம்! அவன் இறந்துபோனான் என்றுசொல்லி ஆநந்தன் என்னிடம் நூறு பொன்னுக்கு ஓலை வாங்கிக்கொண்டு போனானே -நீ என்னவோ மதிமயங்கியிருக்கிறாய். தான் சொல்வ தைக் கேள்! மடிந்தவன் ஆனந்தன் தம்பிதான்!
தே: இதென்ன இப்படி சொல்கிறீர்களே! அவனை என் கண்ணால் சற்றுமுன்பாக நான் பார்த்தேனே! மடிந் தவன் ஆனந்தன் தான்!
ம: பயித்தியக்காரி என் கண்ணால் – ஆநந்தனைப் பார்த்து விட்டு அவன் மடிந்தான் என்று நான் எப்படி நம்பு வது! இதோ வீரபத்திரன் வருகிறான் – அவனை வேண்டுமென்றால் – கேட்டுப்பார்.
வீரபத்திரன் வருகிறான்.
வீ: மஹாராஜா நமஸ்காரம்-ஆனந்தன் தம்பியை நாளைக் குத்தான் எடுக்க ஏற்பாடு செய்திருக்கிறான்.
தே: யாரை?
வீ: ஆநந்தன் தம்பியை – பிரம்மானந்தனை.
தே: என்னடா அப்பா ஆச்சரியமாயிருக்கிறது! இப் பொழுதுதான் சற்று முன்னே என்னிடம் அவன் வந்து தன் அண்ணன் இறந்துபோய் விட்டதாகச் சொன்னானே!
வீ: இல்லைங்க இறந்துபோனது ஆனந்தன் தம்பிதான், நான் தான் அவன் வீட்டுக்குப்போய் பிணத்தைப் பார்த்துவிட்டு வருகிறேனே.
தே: எனக்கென்னமோ இன்னும் சந்தேகமாக இருக்கிறது -ஆ இதோ நமது வேலைக்காரி ரஞ்சிதம் வருகிறாள். அவள் அவர்களுடைய வீட்டிற்குப்போகத்தான் உத் திரவு கேட்டுக்கொண்டு போனாள் !- ரஞ்சிதம்!-
ரஞ்சிதம் வருகிறாள்.
தே: ரஞ்சிதம், இறந்துபோனது யார் அடி?
ர: இதென்னம்மா இப்படி கேக்கரைங்களே! இறந்து போனது நம்ப அரண்மனை விதூஷகன் – ஆநந்தன்!
வீ: ஆநந்தனா!- பயித்தியம்.
ம: பயித்தியக்காரி!
ர: எனக்கா பயித்தியம்?- மஹாராஜா, என் பேரிலே சும்மா கோவிச்சிகாதைங்க, நானு அவுங்க வூட்டுக்கு போய்தான் இப்ப வர்ரேன்-நான் அங்கே நேரேபார்த் தேன் – ஆனந்தன்தான் செத்துப் போய் விட்டார்! பாவம் அவர் தம்பி ரொம்ப துக்கப்படுகிறான் பாவம்!
வீ: ஏ! உனக்கென்ன கண்ணு கெட்டுப்போயிருக்குதா என்ன! நான் போய் இப்போதான் பாத்தூட்டு வர்ரேன் – அவன் தம்பி செத்துப்பூட்டானிண்ணு ஆநந்தன் ஓயாதே அழுதுகினு இருந்தானே!
ம: வீரபத்திரன் பொய் பேசமாட்டான்! தேவி, நீயும் உன் தாதியும் சொல்வது ஏதோ மனப் பிராந்தியாகும்.
தே: இதென்ன இப்படி சொல்கிறீர்களே!-என் கண்தான் கெட்டுப்போயிருந்தது, ரஞ்சிதம் கண் கூடவா கேட் டுப் போயிருக்கும்- அவளுக்கும் மனோப்பிராந்தியா யிருக்குமா?
ம: [கோபத்துடன்] தேவி! என்ன இன்னும் அதையே சொல்கிறாயே! ஆனால் என் கண்கள் கெட்டுப்போய் விட்டதென்கிறாயா?
தே: நாதா! நீங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள் என்மீது! எனக்கென்னமோ இன்னும் சந்தேகமாகத்தானிருக் கிறது – நாம் நேரில் அவன் வீட்டுக்குப் போய் பார்ப் போம், வாருங்கள் – அப்பொழுது தெரிந்து போகிறது, யார் வார்த்தை பொய், யார் வார்த்தை நிஜம் என்று.
ம: அப்படியே செய்வோம் – நான் குதிரையேறி அங்கு போகிறேன் – நீ பல்லக்கில் அங்கு உடனே வந்து சேர் -யார் இறந்தது என்று தெரிந்து விடுகிறது!வீரபத் திரா, நீயும் என்னுடன் வா- [போகிறார்]
வீ: அப்படியே!- ஏ! ரஞ்சிதம், எல்லாம் உன்னாலே வருது இந்த கஷ்டமெல்லாம்.
ர: ஏ ! நீ தான் பொய் பேசரே! (வீரபத்திரன் போகிறான்.) அம்மா நானும் ஓங்களோடே வர்ரேன்-அவுங்க வூட் டுக்குப் போய் இந்த வீரபத்திரன் பொய் பேசனத்தே ரூபிக்கலாம் வாங்க! [போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
ஆறாவது காட்சி
இடம் – ஆநந்தன் வீடு.
ஆநந்தனும், பிரம்மாநந்தனும், மாறுவேஷம் பூண்டு மூட்டைகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆ: அடே தம்பி! இந்த வேஷம் எனக்கு எப்படி யிருக்குதுடா?
பி: எனக்கே உங்களெ கண்டு பிடிக்கமுடியலெ அண்ணா! அச்சம் அப்படியே அம்பட்டனா பொறந்தது போலவே இருக்குது உங்களே பாத்தா! அப்படியே எப்பவும் இருந்தூடுங்களே அண்ணா!
ஆ: குட்டுடா இவனே!- ஏண்டா என்ன அம்பட்டனாக்கி வுட பார்க்கிறாயோ? – நீ சன்யாசியா இப்படியே இருந்துடேன்?
பி: இருந்தூடரேன் அண்ணா- அப்புறம் எப்படி கண்ணா லம் பண்ணிக்கிறது இண்ணு பாக்கரேன்.
ஆ: முன்னே இந்த ஊரே விட்டு வெளியே போர வழியெ பார்க்கலாம் – அப்புறம் கண்ணாலத்தேபத்தி யோசிக்க லாம் – நம்ப ரெண்டுபேரும் ஒண்ணாபோனா ஏதாவது சந்தேகத்துக்கு எடமாகும் – நம்ப ஒவ்வொருத்தரும் ஒருவழியா போகலாம் வூட்டேவுட்டு ; அப்புறம் வூருக்கு வெளியிலே இருக்கிற பனையாத்தா கோவிலண்டே சேருவோம் – நீ அப்படி சுத்திகினுவா – நானு இப்படி சுத்திகினு வர்ரேன் – நானு முன்னே புறப் படரேன் – [புறப்படுகிறான்.]
[வெளியில் சத்தம்] அதென்னடா சத்தம்?
(வெளியில் பார்த்து] அடடே! கெட்டுதடாகுடி! மஹாராஜா வர்ராருடா குதிரைமேலே நம்பவூட்டுக்கு! என்னமோ சந்தேகப் படராரோ என்னமோ!- வாடா! வாடா! சீக்கிரம்! இந்த வேஷத்தை எடுத்தூட்டு முன்னெபோலெ செத்தாப்போலே படுத்துக்கோ!
பி: என்ன அண்ணா, பெரிய கஷ்டமாயிருக்குது! எத்தனி தரம் செத்து போரதண்ணா!- வேஷத்தே கலைச்சூட ரேன் அண்ணா! இந்தசன்யாசி உடுப்பெ இங்கே ராஜா பாத்தாருண்ணா, என்னமானா சந்தேகப்படுவாரு. இந்ததெருவுலே குப்ப தொட்டியிலே போட்டுடரேன்.
[வெளியேபோய் உடனே ஓடிவருகிறான்.)
அண்ணா அண்ணா! நம்ப யோசனே யெல்லாம் பாழாப் போச்சி அண்ணா!-ராஜாத்தி இந்த பக்கம், பல்லக் கிலே வந்து எரங்கராங்க! அந்த வேலெக்காரி என்ன மானா கோள் சொன்னாளோ என்னமோ !– நீங்க செத்து பூட்டைங்க இண்ணு மஹாராணி கிட்ட சொல்லி விட்டேனே! நீங்களும் செத்தாப்போலே படுத்துங்க- உங்க வேஷத்தெ எடுத்துவுட்டு சீக்கிரம்!
ஆ: என்னடா எழவாபோச்சி! ஒரு கண்ணாலம் பண்ணிக் கிரத்துக்காக, எத்தனிதரண்டா செத்துப்பூடரது?
[அப்படியே செய்கிறான்]
அடே! தம்பி ! மூச்சிகிச்சி உடாதே! – கப்சப்
பி: அண்ணா! நீங்க கண்ணெ கிண்ணெ தெறக்கப் போரைங்க பத்திரம்!
ஆ: குட்டுடா இவனெ! – படுத்துக்கடா!
பி: நீங்க படுத்துங்க அண்ணா! [இருவரும் படுத்துக் கொண்டு போர்த்துக் கொள்கிறார்கள்]
பீமராஜன் வீரபத்திரனுடனும், மஹாராணி
ரஞ்சிதத்துடனும், இரண்டு பக்கங்களிலிருந்து வருகிறார்கள்.
பீ: என்ன ஆச்சரியம்! – இரண்டு பெயரும்
ம: இறந்து போய் விட்டார்களா என்ன!
பீ: அது எப்படி நேர்ந்திருக்கக் கூடும்?- தன் தம்பி இறந்து விட்டதாக என்னிடம் வந்து சொன்னானே, ஆனந்தன்!
ம: தன் அண்ணன் காலமாய் விட்டதாக, பிரம்மானந் தன் சற்று முன்பாகக் கூறினானே என்னிடம்!
வீ: இரண்டுபேரும்-ஒரே சமயத்துலே செத்துப்போயிருந்தா –
பீ: நீ ரொம்ப புத்திசாலி! எவனாவது ஒருவன் தானே முதலில் இறந்து போயிருக்கக் கூடும்? ஒரு வேளை முன்பு தம்பி செத்துப் போயிருப்பான், பிறகு அண்ணன் அந்த வருத்தம் தாளமுடியாது இறந்து போனானோ என்னமோ?
ம: நாதா, அப்படி யிராது, அண்ணன்தான் முதலில் இறந்துபோயிருக்கவேண்டும், தம்பி என்னிடம் கூறின படி: அப்புறம் அண்ணன் போய் விட்டானே என் துக்கத்தால் மாண்டுபோனானோ என்னமோ ?
பீ: இந்த சந்தேகத்தை யார் நிவர்த்தி செய்வது? எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது – அடெ வீரபத்திரா! நம்முடைய அரண்மனை வெட்டியானிடம் நடந்ததை சொல்லி, பட்டணமெல்லாம் பறையறையச் சொல்- இவர்களிருவர்களில் யார் முதலில் காலமாய் விட்டது என்பதைக் கண்டு பிடித்துச் சொல்பவர்களுக்கு நான் நூறு பொன் கோடுப்பதாக!
ஆ.பி.: [ஒரே தடவையில் இருவரும் எழுந்திருக்கிறார்கள்.] ஆ! ஆ!
ஆ: நான் சொல்ரேன் – என் தம்பிதான் மொதல்லே செத்து பூட்டான் மஹாராஜா!
பி: நான் சொல்ரேன்! என் அண்ணன்தான் மொதல்லே செத்துபூட்டார் மஹாராஜா
[எல்லோரும் நகைக்கிறார்கள்]
ஆ: நூறுபொன் எனக்குதான் கொடுக்க வேண்டும் மஹாராஜா!
பி: நூறுபொன் எனக்குதான் கொடுக்கணும் மஹாராஜா!
பீ: இதென்ன விகடமடா திருட்டுப்பயல்களா! உங்கள் இருவரையும் வாஸ்தவத்தில் கொன்றுவிடும்படி உத் திரவு செய்கிறேன் மந்திரிக்கு!
ஆ: மஹாராஜா! மஹாராஜா! அப்படி உத்திரவு ஆவக் கூடாது!
பி: மஹாராஜா! ஓணும்மிண்ணா, எங்களுக்கு கண்ணாலம் ஆனபிறகு கொண்ணுடச் சொல்லுங்கள்.
பீ: ஏண்டா! உங்களுக்கு கல்யாணம் ஆவதற்காக இறந் ததுபோல் பாசாங்கு செய்யச் சொன்னார்களோ!
பி: இல்லை மஹாராஜா! நீங்க கோவிச்சிக்ககூடாது தயவு பண்ணி!- நடந்த சமாசாரத்தெ நானு நெஜம்மா சொல்லி வுடரேன் – எங்க அத்தைக்கு இரண்டு பொண் ணுங்க இருக்கிறாங்க – அவங்களே எங்களுக்கு கண்ணா லம் பண்ணி கொடுக்கிரேனிண்ணாங்க – நீங்க என்னமோ இளவரசருக்கு கண்ணாலம் ஆவும்போது பாத்துகலாம் இண்ணைங்களாம் – அது வரைக்கும் எப்படி காத்து கி னு இருக்கிறது – சீக்கிரம் கண்ணாலம் ஆவணும் இண்ணு –
பீ: [சிரித்துக்கொண்டே] கருமாந்திரத்திற்காகப் பொன் கேட்டீர்களோ!
ஆ: ஆம் மஹாராஜா! ஆயிரம் பொய் பேசியானாலும் ஒரு கண்ணாலம் பண்ணலாம் இண்ணு பெரியவங்க சொல்லியிருக்கிராங்க! நாங்க ஒவ்வொரு கண்ணாலத்துக்காக ஒவ்வொரு பொய்தானே பேசினோம்!
[எல்லோரும் நகைக்கிறார்கள்]
காட்சி முடிகிறது.
நாடகம் முற்றியது.
– மூன்று நகைச்சுவை நாடகங்கள், முதற் பதிப்பு: 1956, ப.சம்பந்த முதலியார் பி.ஏ, பி.எல்., சென்னை.