மஹாநாம தேரர் மான்மியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2024
பார்வையிட்டோர்: 1,150 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாது சாது… 
புத்தர் நிற்கிறார் பிட்சா பாத்திரத்தோடு
பிட்சா பாத்திரமாய் பூரணை கையில்! 
அரசை ஒதுக்கி 
அரசமர நிழல் அண்டிய ஆளுமை
பூரணையாய் அவரது கையில்! 
சண்டாளர் இட்ட மாமிச உணவும் 
சத்திரியர் தந்த அறுசுவை உண்டியும் 
பிட்சா பாத்திரத்தில் பற்றற்றுக் கிடந்தன. 
நிர்வாணம் என்கிற ஓர் தனிப்பாதை 
நிலத்தில் ஒட்டாது, பூ நடுரேகையாய் அவர்முன் நீண்டது.
எவரையும் ஈர்க்கும் அன்பின் உயிர்ப்பே அதனில் ஒளிர்ந்தது.
அசோகச் சக்கரம் மிகுந்தலை மலையில்! தேவ நம்பிய
தீஸன் சிரந் தாழ்த்தி நிற்கிறான்.
சங்கமித்தை – மகிந்தன் இருவரின் வரவால்
புத்தர் அமர்ந்த அரசமரக் கிளை 
அநுராதபுரத்தில் வேர்விடுகிறது. 
பௌத்தம் ஈழவள நாட்டின் வாழ்க்கை முறையாய், எல்லோர் நெஞ்சிலும் இழைக்கிறது. அற்ப சிறு உயிரையும் அன்பில்
தோய்க்கும் புத்தனின் விழிகள் வழியாய் அமைய,
நாடும் வீடும் மேலெழுகின்றன.

காலம் மாறுகிறது. அரச படையெடுப்புக்கள், ஆட்சியதிகாரப் போட்டியின் விளைவாய் குரோதம் மலிகிறது. இனம், மொழி என்ற பிரிவு வேறு. புத்தனில் பெருகிய அன்புக்குப் பதிலாய் இரத்தம் பெருகுகிறது. மஹாநாம தேரர் அதன் மொத்த உருவாய் வரலாற்றைத் தனது கையில் எடுக்கிறார். எல்லாளன்-கைமுனு யுத்தம் என்பதை அரச, ஆட்சியதிகாரப் போட்டியிலிருந்து இன, மத வாதப் போட்டியாய் மாற்றும் வேட்கையில் மஹாநாம் வெற்றி பெறுகிறார். அன்று தொடங்கிய அந்த இனவாத யுத்தம் இன்றுவரை: 

“மகனே, ஏன் கூனிக் குறுகிப் படுத்திருக்கிறாய்?” – விகாரமா தேவி துட்ட கைமுனுவைப் பார்த்து வினவினாள். 

“கூனிக் குறுகாமல் எப்படிக் கிடப்பது?” 

“ஏன் அப்படிச் சொல்கிறாய், மகனே?” 

“ஏனா, வடக்கே கொடுந்தமிழரும் தெற்கே கடலும் நெரிக்கையில், எப்படி நிமிர்ந்து கிடப்பது?” 

மஹாநாம் உருவாக்கிய பாத்திரங்கள் கதைத்தன. 

மஹாநாம தேரர் அரசியல்வாதியாய் மாறாதபோதும் அரசினைத் தீர்மானிக்கும் சக்தியாய் மாறுகிறார். 

எவருக்கும் அன்பையும் கருணையையும் போதித்த பௌத்தம், இன, மொழிக் குரோதத்தை வளர்க்கும் வார்ப்பாய் மாறிற்று. எவரையும் அன்பால் இணைத்த பௌத்தம், ‘சிங்கள பௌத்தமாய்’ மாறத் தொடங்குது. 

சிங்கள மாணவன் சிறுவயதிலிருந்தே எல்லாளகைமுனு யுத்தமே வரலாறாய்க் கற்று வருகிறான். 

2 

சாது சாது… 
பெரஹரா வருகுது, பெரஹரா வருகுது 
கசை அடி, கசை அடி – பெரஹரா வருவதை
கசையடி முழங்கி அறிவித்துச் செல்லும்
முன்னனி ஆட்கள் சடார் சடார்… 
தீப்பந்தம் சுழற்றி வருகுது இன்னோர் கூட்டம். 
அதற்குப் பின்னால் ‘கொட்டி செல்லங்’ என்றொரு
புலியாட்டம் நிகழ்த்தி வருகுது மற்றொரு கூட்டம்.
யானையில் பௌத்த சின்னங்கள் ஏந்திய
ஊர்வலம், பின்னால் 
வெள்ளையணிந்த ‘சில்’ நோன்பெடுக்கும்
மக்கள் கூட்டம் 
சாது சாது… 

மஹாநாமவின் சீடனாய் 1956இல் பண்டாரநாயக்க அவ தாரம். தியசேன குமாரயா! இருபத்திநாலு மணித்தியாலத்தில் “சிங்களம் மட்டும்’ சட்டம். எதிர்த்த தமிழ்த் தலைவர்கள் காலிமுகத் திடலில் கல்லெறிபட்டனர்; இரத்தம் சிந்தினர். மீண்டும் எல்லாள – கைமுனு யுத்தம் புதிய வடிவில்! பௌத்த குருமார் ஆதரவு வழங்கினர். சாது! சாது! 58இல் இனக்கலவரம் பெரிதாய் வெடித் தது. தமிழரின் உயிர்கள் காலுக்குக் கீழ் போட்டுக் கசக்கப்படும் சிற்றெறும்பாயிற்று. 

58இல் பாணந்துறையில் கோயில் பூச்கர் வெளியே இழுத்து வரப்பட்டு, பெற்றோல் ஊற்றிக் கொளுத்தப்படுகிறார். இன்னும் கோயிலில் தஞ்சம் அடைந்த தமிழர் பலருக்கும் அதே கதிதான். கொதிக்கும் தாருக்குள் போட்டு மூழ்கடிக்கப்படுகிறார்கள். தென் னிலங்கையில் தமிழர் போட்ட அவலக்குரலும் வேதனை அலறலும் கேட்டு, கொலைகாரக் கும்பல் இன்னும் வெறிகொண்டு ஆட்டம் போட்டது. 

மஹாநாம் தேரரின் சன்னதம் அவர்களில் தெரிந்தது. பண்டாரநாயக்கா தமிழர்கள் பட்ட அவலம் கண்டு பெருமிதம் அடைகிறார். அப்போது ஆளுநராக இருந்த ஒலிவர் குணத்திலகா, “இது மிக மோசமான நிலை. தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தவும்” என்று பண்டார நாயக்காவிடம் முறையிட, அவர், சுங்கானை வாயின் மறுபக்கம் திருப்பியவாறே, “என்ன அவசரம், அவர்கள் இதைக் கொஞ்சம் சுவைத்துப் பார்க்கட்டும். Let them taste” என்கிறார். அக்கூற்றில் ‘இனிமேல் சமஷ்டி கேட்க மாட்டார்கள்’ என்ற கருத்துப் பொதிந் திருந்தது. 

சாதி பார்க்கும் தமிழா, உனக்கு சமஷ்டி ஒரு கேடா! கோழையாய் இருக்கும் தமிழா, உனக்கு, கொள்கை ஒரு கேடா! 

அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்படாத, நொண்டி நொண்டி ஊர்வதுபோல் தமிழர்களுக்கு தெரிந்த அந்த இருபத்தி நாலு மணித்தியாலங்கள் வன்முறையின் உச்சத்தைத் தொட்டது. தமிழர்கள் வெட்டப்பட்டனர். தீயில் போடப்பட்டனர். பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, அவர்கள் பெண்ணுறுப்புகள் கோரமான முறையில் குதறப்பட்டன. 

இலங்கையில் சிங்கள பௌத்தம் காட்டும் ‘நிர்வாணம்’ எதுவெனத் தெரிந்தது. 

ஆனால், அடுத்த ஆண்டு பெளத்த மதத்திற்கும், சிங்கள இனத்துக்கும் அத்தனை தொண்டாற்றிய பண்டாரநாயக்காவுக்கு நன்றிக்கடன் செலுத்துவதுபோல், சோமராம தேரர் என்னும் பிக்குவானவர், அவர் இல்லம் சென்றார். பண்டாரநாயக்கா எழுந்து வணங்கிவிட்டு இருந்தபோது சோமராமவின் துப்பாக்கி வேட்டு அவர் நெஞ்சைப் பிளந்து ஆசீர்வதித்தது. நான் தரும் நிர்வாணம் இதுதான், சுவைத்துபாரும் என்பதுபோல் தமிழரின் சாபம் எதிர்வினையாயிற்று. 

மண்ணில் சரிந்தார் பிரதமர் பண்டா.
சாது சாது சாது… 
பெரஹரா வருகுது 
சடார் சடார் கசையடி முழங்குதா?
துப்பாக்கி வேட்டா? 
அதற்குப் பின்னால் ‘கொட்டி செல்லங்’ என்னும்
புலியாட்டம் நிகழ்த்தி வருவோர் கூட்டம்
கண்டி நடனக்காரர் கவிழ்ந்து நிமிர்கிறார்.
யானையில் பௌத்த சின்னங்கள் ஏற்றி 
ஊர்வலம் ஊர்வலம் 
மஞ்சள் அங்கியில் பௌத்த குருமார்
சடார் சடார் கசையடி முழங்குதா?
துப்பாக்கி வேட்டா? 
சாது சாது… 

3 

1977இல் மஹாநாம தேரரின் இன்னொரு சீடர், ஜெயவர்த்தன புரக் கோட்டையின் ராஜாவாகத் தன்னைப் பிரகடனப்படுத்து கிறார். அவர் ஆட்சியில் ஏறியதுமே, தமிழர் சிங்களவர் இனக்கல வரம் வெடிக்கிறது. தமிழரின் உடைமைகள் சூறையாடப்படு கின்றன. பலர் கொல்லப்படுகின்றனர். 

தமிழ்த் தலைவர்கள் தமக்கென ஒரு தனிநாடு என்ற பிரக டனத்தை முன்வைக்கின்றனர். இதற்குப் பதிலளிப்பதுபோல், “சண்டையா, சமாதானமா உமக்குத் தேவை?” என்கிறார் ஜெயவர்த் தனபுர ராஜா. சுயநலமிக்க தமிழா, உனக்கு சுயாட்சி ஒரு கேடா! அடிமையாய் வாழும் தமிழா, உனக்கு அறப்போர் ஒரு கேடா! 

தமிழ்த் தலைவர்கள் தம் பாராளுமன்றப் பதவியையும் இழந்து செய்வதறியாது திகைத்து நிற்கையில், தமிழ் இளைஞர்கள் புதிய முறையில் விடுதலைப் பெரஹரா நடத்த வருகிறார்கள். 

சாது சாது… 
விடுதலைப் பெரஹரா! விடுதலைப் பெரஹரா!
விடுதலை ஊர்வலம் வருகுது வருகுது
அணி அணியாக இளைஞர் நிற்கிறார். 
ஏ.கே. துவக்கோடு அணி நடை, வெடி இசை 
‘புலியாட்டம்’ என்கிற போலி அபிநயம் முடிந்து இப்போ
புலிகளின் நர்த்தனம் உண்மையாய் எழுந்தது. 
அது முதன்முதல் வேட்ட வேள்விப் பொருளாய்
யாழ்நகர் அருகே
12 இராணுவம் பலியிடப்பட்டது. 
புலிகள் நர்த்தனத்தின் எதிரொலி
தெற்கிலே கொடூரமாய் தெறித்தது. 
சாது சாது… 
மஹாநாம் வழிவந்த பௌத்த பிக்குமார்
ஆசி வழங்கலில் பெரஹரா நிகழுது. 
முதல்நாள் பௌர்ணமி போயா தினத்திலே
‘சில்’ நோன்பிருந்த சிங்கள பௌத்தர்கள்
அடுத்த நாள் ஆயிரம் கொலைவாள்கள் ஏந்தியே
ஊர்வலம் வந்தனர். 
சாது! சாது! கொல்லடா தமிழனை!
கொல்லடா தமிழனை! 
Sunday sil, Monday kill! 
என்ற வாசகம் பிரசித்தமாயிற்று. 
பிக்குமார் தலைமையில் பெரஹரா நிகழ்ந்தது. 
சாது சாது… 
சிங்க நர்த்தனம், சிங்க நர்த்தனம்! 
புதியதோர் ‘சிங்கபாகு’ அரங்கேற்றப்பட்டது. 

தமிழருக்கெதிரான இனவாதத் தீ கொழும்பெங்கும் கொழுந்து விட்டெரிந்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதற்குள் வெந்து அழிந்தனர். எஞ்சியோர் அகதிகளாக வடகிழக்கை நோக்கிக் கப்பலில் அனுப்பப்பட்டனர். 

சிங்க நர்த்தனம் இத்துடன் முடிந்தது. 

ஆனால், புலிகள் நர்த்தனம் இதன் பின்னர்தான் உக்கிரம் கொண்டது. சிங்கபாகுவுக்கு மேலும் மேலும் சவால்கள் விடப் பட்டதால், தாள தம்பட்டம் சங்கொலி முழங்கியே வெற்றி நிச்சயம் கண்டிடப் போர்கள் நிகழ்ந்தன. சமாதானத்திற்கான ஓர் யுத்தம் நிகழ்ந்தது. ஆயினும், இவை அனைத்தையும் உதறி எறிந்து, புலிகள் நர்த்தனம் முன்னேறி வந்தது. 

அநுராதபுர அரசமரக் கிளையிலும் அதிர்வுகள் கேட்டன. தலதா மாளிகையிலும் சத்தங்கள் அதிர்ந்தன. 

4

இனி என்ன செய்வது? 

நவீன மஹாநாம தேரர்கள் கூடித் தீர்வெடுத்தனர். 

ஆதிகாலந்தொட்டு அரசின் கொள்கைகளைத் தீர்மானிப்ப வராய் இருந்த மஹாநாம வழிவந்த புத்த பிக்குமார், இனிச் சிங்கள பெளத்த தர்மராஜ்ஜியம் ஒன்றை உருவாக்குவது ஒன்றே தாம் நாட்டுக்குச் செய்யும் கடமையெனக் கண்டனர். அதனால், அவர்கள் நேரடியாகவே அரசியலில் இறங்கத் தீர்வெடுத்தனர். அத்தீர்விற்கிணங்க சங்கைச் சின்னமாகக்கொண்ட ‘சிஹல உருமய’க் கட்சியின் பேரில் தேர்தலில் போட்டியிட்டு ஒன்பது ஆசனங்களை வென்றெடுத்தனர். 

சாது சாது… 
சங்கு ஊதி, பிக்குமார் பெரஹரா நிகழ்த்திறார். 
வலம்புரி, இடம்புரி, நத்தைகள், ஊரிகள்
சின்னதும் பெரியதும் பிஞ்சுகள் பழுத்தவை
மஞ்சள் அங்கியில் ஊர்வலம் வருகிறார். 
புலிகளை விரட்டியே நாட்டைக் காப்பாற்றுவோம்.
சாது சாது… 
கண்டி நடனக்காரர் ஆடியவாறு
பாட்டுப் பாடுகிறார்கள். 
சாதி பார்க்கும் தமிழா 
உனக்கு சமஷ்டி ஒரு கேடா?
பிரதேசவாதம் பேசும் தமிழா
உனக்குத் தனிநாடொரு கேடா? 

பிக்குமார் அணி திரள்கின்றனர். பிக்குமார் பஸ்ஸில் ஏறினால் எழுந்து நின்று ஆசனம் வழங்கும் மக்களுள்ள நாடு இது. இப்போ ஒன்பது ஆசனங்களைப் பெற்று அவர்கள் தர்மராஜ்ஜியம் ஒன்றை அமைக்கப் புறப்பட்டனர். ‘தர்மராஜ்ஜியத்துக்கு எதிராக நிற்கும் எவரோடும் நாம் கூட்டுச்சேரப் போவதில்லை’ என்று அவர்கள் கர்ஜித்தனர். சாது சாது… 

2002இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால், மீண்டும் 2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பின்தள்ளி அதைவிடப் பெரும்பான்மையோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வருகிறது. எனினும், ஆட்சியில் நிலைக்கக்கூடிய பலம் இல்லாததால், அது ஏனைய வெற்றிபெற்ற சிறுசிறு குழுக் களின் தயவில் தங்கிநிற்க வேண்டிய நிலைமை. அத்தகையவற்றில் ஒன்றாகவே ஒன்பது ஆசனங்களைப் பெற்ற புத்த பிக்குமார் அணி இருக்கிறது. ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கான வாக்களிப்பு நாடாளுமன்றத்தில் வந்தபோது, எந்தப் பக்கமும் சேர்வதில்லை என்று சொல்லிய தர்மராஜ்ஜியம் உருவாக்கும் பிக்குமார் குழுவி லிருந்து ஒருவர் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கத் தன்னிச் சையாக எழுந்துசெல்கிறார். 

சாது சாது…. சாது 
‘பன்சல’வில் இருந்தவர் இப்போ பாராளுமன்றத்தில்
இருக்கிறார். 
அரசை எதிர்த்து வாக்களிக்க முன்னெழுந்து செல்கிறார்.
தாள தம்பட்டம் எதுவுமில்லை. 
கசையடியும் கேட்கவில்லை. 
புத்தபிக்கு எழுந்து செல்ல 
அவரைச் சுற்றிவளைக்கின்றனர்,
அரச எம்.பி.மாரெல்லாம்!
ஏன் எதற்கு வளைக்கிறார்? 
காலில் விழுந்து ஆசி பெறவா? 
பஸ்ஸில் ஏறின் எழுந்து நின்று இருக்கை தருவோர்
பாராளுமன்றம் வந்த அவரைச் சும்மா விட்டுவைப்பாரோ…? 

புத்த பிக்குவைச் சுற்றிவளைத்த அரசாங்க எம்.பி.மார் நெருங்கி, நெருங்கி வருகிறார்கள். “ஏய் ஹக்கடியோ (ஏய் சங்கே) ‘பன்சல’வில் ‘பிரித்’ ஓதாமல், பாராளுமன்றத்தில் உனக்கென்னடா வேலை?” ஒரு எம்.பி. கத்துகிறான். “பச்சைக் கட்சிக்காரரோடு உனக்கென்னடா கூட்டு?” இன்னொரு எம்.பி. கத்துகிறான். 

“தர்மராஜ்ஜியம் காணப் போறாயோ? இந்தா வாங்கிக்கொள்” என்றொருவன் கத்தியவாறே, பிக்குவின் வயிற்றில் ஓங்கிக் குத்து கிறான். 

“அம்மே” என்று பிக்கு மெல்ல, வேதனை தாங்காது அலற “டேய் சங்கு, புலியோடயா கூட்டுச்சேரப்போற?” என்று கேட்ட வாறே இன்னொருவன் பிக்குவின் ஆண்குறியையும் விதையையும் சேர்த்து ஒரே நசி. 

“அம்மே… மஹே அம்மே…” 

புத்த பிக்குவின் கண்முன்னே தர்மராஜ்ஜியம் கீழே இறங்கி வந்தது. 

சிங்கள பௌத்த நிர்வாணம் பிக்குவுக்குச் சித்தித்தது. 

சாது, சாது, சாது… 

மஹாநாம தேரரின் ஆசி வழங்கல் அங்கே நிகழ்ந்தது. 

– எரிமலை 2005.

– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.

மு.பொன்னம்பலம் மு.பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *