கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2025
பார்வையிட்டோர்: 1,899 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிழக்கு வெளுக்கத்தொடங்கியது. இருட்டுக்குள் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது இதமாக இருந்தாலும் மனதுக்குள் குழப்பமும் விரத்தியும் சுருள் சுருளாய் அப்பிக்கிடந்தன. சூரியக் கதிர்கள் பனி மூட்டத்திகுள் கரைந்துகொண்டிருக்க, பனிக்குளிர் சுவாசம் வழி உள்ளே இறங்கி தொண்டைக்குள் கரகரத்தது. தொண்டையைச் செருமிக் கோழையைக் காறித்துப்பினார் மருதுசேர்வை. இறுமியதில் நெஞ்சுக்குழியில் சுத்தியலால் அடித்த வலி. பாறாங்கல்லைத் தூக்கி தலைக்கு மேலே வைத்திருந்தது போல உடம்பு வேறு பிணமாய்க கனத்தது. 

தலைப்பாகைக்குள் விரலை நுழைத்து பாதி முடிந்திருந்த சரவணா சுருட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டார். வத்திப்பெட்டி கால் சட்டைப் பைக்குன்ளிருக்க, மடக்கியிருந்த காலை நேராக்கிக் கொண்டு ரெட்டைக்கிளி வத்திப்பெட்டியைச் சுளுவாக எடுத்தார். காலை நீட்டியதில் கமலஞ்செய்யின் சனி மூலையில் செழிபபாயிருத நெற்பயிர்களில் கால் பட, கையால் தொட்டுக் கண்ணில வைத்துக் கொண்டார். இயலாமை, லாடம் கட்டப்படும் மாடு போல கால்களைக் கட்டிக்கொண்டு கவிழ்ந்து உப்பிக்கொண்டிருக்க, ‘த்தூ! என்று விட்டேற்றியாய்த் துப்பிவிட்டு ‘செத்துப் போனாக்கூடத் தேவலை’ என்றார் சுயகழிவிரக்கம் தாளாமல்.

‘அறுபதாயிரமாம் தாயீ கண்ணாலே கூடக் கண்டதில்லையே என்ன செய்யப்பேறேனோ’. வாய் தனக்குத்தானே மீணடும் மீண்டும் குழறிக்கொண்டிருந்தது

மூணு காலம் மழ பெஞ்சி, கமலஞ்செய்யில காலாகாலத்துலெ நாத்து பாவி, பருவத்துலெ பாத்து நட்டு, குத்துகுத்தாநட்டு வெச்சதெல்லாம் கொடிமரமா முப்போகம் வௌஞ்சாக்கூட அத்தினி காசெ பாக்க முடியுமான்னு வலிச்சிக்கிட்டேயிருந்திச்சி. முப்பதாயிரமே வல்லிய பணம்தான் செட்டியார் வீட்லெ வெச்சி ஒருதரம் பாத்திருக்கோம். ‘வாழுக்கெமொட்டான்’ வயலை மொத்தமா வித்து கொடலிறக்கம் ஆப்பரேசன் செஞ்சப்போ பாத்தது. சொள சொளயா பணத்தை முத்தமமா மடியிலெ மொத்தமா பாத்தப்போ மனசு வலிச்சது நெசம் வயலெ வித்து சாப்புட்டவனுக்கு வம்சம் இருக்காதாம் சொன்னதும் சர்தாம் போல. கொள்ளி வெக்கவும் வழியில்லெ. வாழ வைக்கவும் வயலில்லெ. 

அன்னக்கி பொழச்சி இன்னக்கிம் என்ன பண்ணுதோம்? அதே பொழப்பு. நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாறுண பொழப்பு. அன்னக்கி வந்த முப்பதாயிரம் பணத்துலேயாவது கொடலைத் தூக்கி எறிஞ்சதுபோக ரெண்டு எருமையும் நாலு செம்பிலியும் வாங்கி வளத்தோம். அதாவது கொடலுக்குப்பதிலா வீட்லெ கெடந்துச்சி. அதுவும்’ ரெணடு வருச பஞ்சத்து லெ கறி யாவும் கொடலாவும் பணமாவும் வவுத்துக்குள்ளே போக, மிஞ்சினது முத்தம்மாளும் நானுந்தான். இந்த கமலஞ்செய்யும். 

அடுத்து இந்தா முத்தம்மாவுக்கும் வந்துருச்சி. என்ன பாளாப்போன வாழுவோ? செத்துச்செத்து பொழக்கிறோம். பொழச்சி என்ன பண்ண? பொணமாப் போகத்தான் பொழச்சிப் பொழச்சி சாகுறது, செத்துச் செத்துப் பொழககிறது! 

என்னக்கிம் போலத்தான், நல்ல கெழமையிலெ குப்பெயக் கொட்டி, வெதைபாவு செஞ்சி, நாத்தும் பாவினோம் நல்ல கருந்தோவை மாதிரி நரத்து, பொசு பொசுன்னு நின்னு நடவும் செஞ்சோம். நடவுக்குள்ளே அவ கொணக்கமாயிட்டா. பாதகத்தி மக. சேரோடல்லெ அள்ளிக்கிட்டுப்போனோம் ஆசுபத்திரிக்கி. என்ன கொறையோ மாரியாத்தா முத்தம்மாவுக்கு இப்புடிப் பண்ணிப் புட்டியே.. அவளுக்கு ஒண்ணுன்னா எனக்குத் தாங்க முடியுமா? 

புத்துநோயாமே கர்ப்பப்பையிலே. கரண்டு வெக்கெணுமாம். இல்லாட்டி கொத்தா ஆஞ்சி தூர எறியணுமாம். அதெல்லாம் என்ன கருமமோ.? யாரு தாயி கண்டா. ஒனக்குப்போயா அதெல்லாம் வரணும் யாருக்கு என்னதுரோவம் செஞ்ச நீ? யாருக்கு நாம் என்ன பாதகத்தம் செஞ்சோம். பசுவுக்குப் புல் அறுத்துப்போடாமே சாப்புட மாட்டியெ நீ. வாலு நெறிஞ்சி கெடந்தாலும் வந்து வக்கணையா ஒம்பக்கத்துலெ உக்காந்துக்குட்டு நக்கி நக்கிச் சாப்புடும் நாயிக்கிப் போடாமெ என்னிக்கா சாப்புட்டுருக்கியா நீ? என்ன பண்ணுனோம். யாருக்குப் பண்ணுனோம். 

அம்மா.. தாயே கருமாரி. ஆடி மாசம் முழுக்க வெரதம் இருந்து கடல்லே குளிச்சி மஞ்சப்பூசி ரெண்டு பேருமா வந்து புள எறங்குறோம். எம்பொண்டாட்டிய பத்திரமாக் கர சேத்துரு அவெ இல்லாமெ நா வாழமுடியாது வாழுறதுலேயும் அர்த்தமுல்லே. 

மெதுவாக பனிக்காற்று வீச ஆரம்பித்தது. பயிர்கள் ஒரு இசைக்கேற்ப தெற்கு மூலையிலிருந்து வடக்கு நோக்கி தொடாச்சியாகத் தலையாட்டின. கண்ணுக்குத் தெரியாத ஆறு பாய்ந்து வருவது போன்று அவை குனிந்து வணங்கி வழி விட்டன கீழ வரப்பில் இருந்த வேம்பின் நிழல் நீண்ட தொரு கருங்கூந்தலாய் மேறகு நேக்கி விழந்து கிடக்க. நேற்றிரவின் எச்சில் பயிர்களின் மேல் துளித் துளியாய் ஒட்டிக்கிடந்தது. 

மருதுசேர்வையின் மனதுக்குள் கம்பளிப்பூச்சி நசுநசுத்துக் கொண்டிருந்தது. 

சுருட்டு விரலுக்கருகில் வந்து வெப்பமாய்த் தாக்க, தரையில் தேய்த்து வரப்புக்கு அந்தப் பக்கம் வீசினார்.

ஒரு சொம்பு நெறய சோத்துத்தண்ணீர் குடிச்சா நல்லாயிருக்கும். இந்து கிறுகிறுப்பாவது கொறையும். என்னபண்ண? மூணு நாள்ச்சி நல்லா சாப்புட்டு இதுலெ வோத்துத்தண்ணீயாம்…. சோத்துத்தண்ணீ. யாரு குடுப்பா. யாரு இருக்கா குடுக்குறதுக்கு? முத்தம்மா ஆசுபத்திரில் கெடக்குறா. பக்கத்துலேயும் வீடுக இல்லெ. வணணாவிட்டு நாச்சம்மை அத்தாச்சி குடுப்பாக. இல்லாட்டி நாடாயி வீட்டு பாசியம்மா அத்தாச்சி தரும். நல்லா ஊறுவாயெ கரச்சி கொஞ்சம் மோரும் சேத்து அது மட்டுந்தான் தரும். போயிக் குடிக்காலம் குடிச்சிட்டு என்ன பண்ணுறது? யாரப் பாத்து பணத்துக்கு வழி பண்ணுறது? அதான் இப்போ ரோசனை . 

மரமட்டை விக்கலாமுன்னா. என்ன இருக்கு? சுடுகாட்டு ஒட மரம் ஒண்ணுதான் இருந்துச்சி. அதுவும் போன வருஷம் வெவசாயச் செலவுக்கு வெட்டி வித்து முடிஞ்சது. மிச்சப்பணத்துலெ தீவாளிக்கி கிடாக் கறி ஒருகிலோ. அவ்வளவுதான் சுடுகாட்டு ஒட மரம். அது கூடத் தப்புத்தான். இப்போ சுடுகாட்டுலேயும் நெழலில்லே. நின்ன ஒரே மரம் அதான். அதையும் வெட்டியாச்சி. பருசாரி வீட்டு பொன்னையன் தூக்குமாட்டிச் செத்துப் போனப்ப ரொம்ப நேரம் வெயில்லே நின்னாகளாம் சுடுகாட்டுலெ. என்ன பண்ணுறது. பொணத்தை எரிக்கும்போதும் நெழலு கேக்குது. 

நிமிர்ந்து வானத்தைப் பார்த்தார். தூரத்தில் ‘தொண்டி வண்டி’ போகும் சத்தம் கேடடது. 

மணி ஆறரைப்பு. கடத்தெருவுக்குபோயிப் பார்க்கலாம். காசிப்பய இருப்பான். காசி நெனச்சாதரலாம். நெல்லு வெயாபாரம். காசு பணம் பொழங்குற கை. தருவானா? ஏற்கனே ஒரம் வாங்கினது பாக்கி. இதுலே அறுபதாயிரம் கேட்டா..? நாயை அவுத்து விட்டுருவான். சின்னப்பய. நாபாத்து வளர்ந்த பய. கோயிலுக்கென்றுதூறு எடுக்கும் போது தங்க மூட்டை கெடச்சதா சொல்லுதாக. ரெண்டு வருசம் பட்டணம்பக்கம் பொயிட்டு வந்து ஒரக்கட நெல்லுக்கட வெச்சிப் புட்டானுவே. இன்னக்கி ராச வாழுவு. பொண்டாட்டி சித்துராங்கி. காசெக் கண்ணுலெ கட்டிக்கிவா. 

எழுந்தார். தொண்டயைச் செருமுவது கஷ்டமாக இருந்தது. வயலை மேலிருந்து பார்த்தார். வானத்தைக் கீழிருந்து பார்த்தார். பயிர்கள் சுகமாக ஆடிக்கொண்டிருக்க வானம் நீலமாய் மாறிக் கொண்டிருந்தது. ‘இந்த வய மட்டுமில்லெ. இதே அளவு வானமும் எனக்கு சொந்தமப்போய். வானமும் சொந்தம். அந்த வானமும் சொந்தம்’ மனதுக்குள் அலையாக அந்த எண்ணம் படர, வேதனை வந்து பழிப்புக்காட்டி எகத்தாளமாய்ச் சிரித்தது. மனசு மரவட்டையாய்ச் சுருட்டிக்கொண்டது 

‘ஹெ..ஹெ..வானம் சொந்தமாம் வெளியே சொல்லாதப்போய். கேவலம்.‘

சுடுகாட்டு வழியாத்தான் வீட்டுக்குப் போவணும் வரும்போதும் அந்த வழிதான். போகும் போதும் அந்த வழிதன். எத்தினி பேரைப் பாத்தூட்டோம். எத்தினி பேரு போயிட்டாங்க. கல்லு வீடு கட்டி யாண்டு ரெட்டைப்பாடையிலே போன ராமசாமித்தேவருலெ இருந்து நாண்டுக்கிட்டுச் செத்துப்போன தனபாக்கியம் அத்தாச்சி வரை. மண்ணாண்டவன்லெ இருந்து பிடிமண்ணு இல்லாமப் போனவன் வரைக்கும் எத்தினி பேரு. வடக்குலெ நமக்கும் கோனாருமாருகளுக்கும். தெக்கே நாடயிகளுக்கும் மத்தவு களுக்கும். எல்லாம் இங்கெதான். மண்ணுமேடா சாம்பக் குவியலா கள்ளிச்செடியா பெரண்டைச்செடியா. எல்லாம் இங்கெதான் எல்லாரும் இங்கெதான். போங்கப்பா. போங்க. தனபாக்கியத்தை எரிச்ச சாம்பல்லெ எவனோ ஒருத்தன் ரெண்டுக்குப் போயிருந்தான் இல்லாட்டி நாயா இருக்கும். 

ஒட மரம் நின்ன எடம் வெறுமையாய்க் கெடந்தது . ஒட மரத்தை வெட்டுனப்போ யாரோ பேசிக்கிட்டதா முத்தம்மா சொன்னது நெனப்புக்கு வந்தது. 

‘என்னங்க..’ 

‘ம்ம்.. சொல்லு. என்ன வெசயம். ..?’ 

‘ஒட மரத்தை வெட்டியாவணுமா?’ 

‘ஏந்தாயி வேற வழி? காசிப்பய ஒன்னத்தானே கேட்டான், கடனெ எப்போதரப்போறீயன்னு? அதுகூட ஒனக்கு மறந்து போச்சா? ஈரத் துணியக் கட்டிக்கிட்டு வவுத்துப்பாட்டை முடிச்சிக்கலாம். வசவுப் பாட்டை எப்புடி முடிக்கிறது சொல்லு. தீவாளி வருது.. ஒரு நல்ல சேல துணி எடுத்து எத்துனி வருசம் இருக்கும்? விடு தாயீ. செத்துப் போனாநமக்கு நெழலு வேணாம். எரிக்க இல்லை பொதைக்க சேரிப் பயல்களுக்கு சாராயம் வாங்கிக்கொடுத்தா போதும் அதுக்காவது ப ணத் தைக் கொஞ்சம் வெச்சிக்கிட்டு மத்ததெல்லாத்தையும் வித்துறலாம். ‘ 

‘இல்லேங்க. அந்த மரம் பொகச்ச மரமாம். ஊருலெ செத்துப்போன, நல்ல ஆவிக கெட்ட ஆவிக எல்லாம் அதுலதான் அடஞ்சி இருக்கதா பேசிக்கிறாக நாம அத வெட்டி, அப்புறம் நமக்கெதாவது வந்துட்டா? வேணாமுங்க.’

‘என்னடி இது கூறுகெட்ட தனமாப் பேசுறே? ஆவியாது சாவியாவது?’ 

‘இல்லேங்க. எனக்கென்னமோ இது செரியாப்படலெ. நா சொல்லுறதெ செய்யுறீகளா? ஒரு கூவாத ‘ சாவ ‘ வாங்கி கழுத்தறுத்துப் போட்டுப்புட்டு மரத்தை வெட்டுவோமே.. காளியம்மக்கா சொல்லுச்சி. என்ன சொல்லுறீங்க? எதுக்குங்க தெரிஞ்சி தப்புப் பண்ணணும்? வேணாமுங்க. ‘ 

‘செரி. அது வேற செலவு. ம்ம். நீ சொல் லி நா என்னக்கி தட்டியிருக்கேன். பண்ணிப் போட்டுருவோம் பூசாரிப்பயகிட்டெ சொல்லிரு சேவலுக்கு.’ 

சேவல அந்தப் பயலுவ வெட்டுனாங்களோ இல்லை கொண்டு போயி சாராயத்துக்கு வித்துப்புட்டாங்களோ தெரியலை. அதான் கொறயா? அம்மா. . தாயீ. 

கடத்தெரு வழக்கம் போலிருந்தது. சுப்பையாத்தேவர் நேற்றிரவு ‘ பிபிசி’ யில் கேட்டதாய் ஒரு தகவலைச் சொல்லிக்கொண்டிருந்தார். 

“மருது மாமா, காசி அண்ணன் உங்களைத் தேடுனாரே. . பாத்தீகளா?” காசி கடையில் ‘டீ’ போடும் சின்னத்தம்பி கேட்டான். 

“இல்ல மருமவனே. . எப்பொ.” 

“இப்பொத்தான். வீட்டுக்குப்போனாரு போல. நீங்க இல்லையாம். ஒக்கூரு போயிருக்காரு. ஒரு டீயும் பன்னும் சப்புடுங்க. இப்போ வந்துருவாரு.” 

ரோட்டை அடைத்துக்கொண்டு புழுதி கிளம்பப்போயின செம்மறி யாடுகள். புழுதி நாசியை அடைத்தது. வேட்டியில் மூக்கைத் துடைத்துக்கொண்டார். ‘ எப்படியும் குட்டியும் குளுவானுமா ஆயிரம் இருக்கும். முடிவெட்டாமெ விட்டுருக்கானுவொ?’ “என்ன மாமா அப்புடிப் பாக்குறீயெ? எல்லாம் பரமக்குடி ஆடுக. சடையமங்களத்துலெ கெட போட்டுருக்காக” என்றான் சின்னத்தம்பி அவரிடம் அவர் கேட்காமலே.

மெதுவாகக் குரலத் தாழ்த்தியவன், “கெட போட செம குட்டி ஒண்ணும் வந்திருக்குடோய்” என்றான் அருகிலிருந்த அவன் வய தொத்தவனிடம். 

ஆட்டுமந்தை பின்னாடியே வந்தான் காசிப்பய. புது வண்டி வாங்கி யிருக்கான் போல மூஞ்சியெல்லாம் தூசி பரவிக்கெடந்தது புதுசா தாடிவேற வெச்சிருந்தான். மோவாயச் சுத்தி தாடி. என்ன கருமமோ? மீசைய முறுக்கி வெச்சித்தான் நமக்குப் பழக்கம். இந்தக் காலத்துலெ இதுல்லாம் என்ன எளவோ? 

“வாங்க சித்தப்பு. வீட்டுக்குப் போயிருந்தேன். நீங்க இல்லை டவுனுக்குப் போனீகளா? ஆஸ்பத்திரில சின்னம்மா எப்புடி இருக்காக? பரவாயில்லையா?” 

“நல்லாயிருக்கப்போய் என்ன நல்லா? என்னையும் அப்புடியே கூட்டிக்கிட்டா நல்லாயிருக்கும்.” 

கண்ணு கலங்கியது. 

“அப்புடியெல்லாம் பேசாதியப்பு. எங்க அப்பாகூடல்லாம் கெடந்து கஷ்டப்பட்டவரு நீங்க. நீங்க அப்புடில்லாம் பேசக்கூடாது. நிம்மதியா இருக்கணும்.” 

“எங்கெ தம்பி நிம்மதியாயிருக்கது? தப்பா நெனச்சிக்காதீயெ. கொஞ்சம் மொடை பணத்தை இப்பொ கேக்காதீய. வௌஞ்சோனே பாத்துக்கலாம். இப்பொ இவ ஆசுபத்திரி செலவுக்கே திண்டாடுறேன். வேற வழியில்லெ.’ 

“அய்யய்யெ.. அதுக்காக கூப்பிடலெ சித்தப்பு. சின்ன வெசயம். நல்ல வெசயம்தான். உங்க பணப்பிரச்சனையும் தீர்ந்த மாதிரி. அதான் மத்த சாதிப்பயகிட்டெ கேக்குறதுக்கு முன்னாடி உங்ககிட்டெ கேட்டுக்கலாமுன்னு இருந்தேன்.” 

சின்னதாக ஒரு பெருமூச்சு விட்டார். 

“சொல்லுப்பா. என்ன வெவரம்?”

“ஊர்ப்பயலுகளுக்குத் தெசிஞ்சிருக்கும் நம்ம ஊர்ல ஒரு சினிமாப் படம் எடுக்குறதுக்கு மெட்ராசுலெ இருந்து வந்து பஞ்சாயத்துலெ அனுமதி கேட்டாக. எல்லாரும் விரும்புனாக. நானும் சரியின்னு சொல்லிப்புட்டேன்.” 

“ஓஹொ. . ம்ம்.” 

“இல்லெ. அதுலெ பாருங்க. ரெண்டு மனுசக வந்து என்னைப் பாத்தாக. கோயிலு கொளமுல்லாம் நல்லாயிருக்கு. அங்கெல்லாம் ஷூட்டிங் எடுக்குறோமுன்று சொல்லிட்டாக. அதததுக்கு சில்லறையா பணம் ஏதும் குடுக்காட்டியும் மொத்தமா ஊருக்குன்னு ஏதாவது தருவாகன்னு நெனக்கிறேன். கோயிலு திருவிழாவுக்கும். இப்பொ என்னன்னா, ஒரு வய தேவப்படுதாம். நம்ம கமலஞ்செய்ய பாத்தாக போல. ரெண்டு பக்கம் ஆறு மாதிரி ஆழமான வாய்க்கா. கெழக்குப் பக்கம் வேப்பமரம். சுத்தி அனவா வெட்டுன வரப்பு. உங்க வய வெலைய கொற சொல்ல முடியுமா என்ன? புடிச்சுப்போச்சாம். ஒரு ரெண்டு மூணு நாளு அதுலெ ஷுட்டிங் பண்ணிக்கலாமான்னு கேட்டாக. பணமும் கூடக்கொறை கேட்டு வாங்கிக்கலாம். அதான் நீங்க வேற சங்கடத்துலெ இருக்கியவுகளெ.” 

“அம்மா … தாயீ. . காளியாத்தா. நல்லதும்மா. முத்தம்மா பொழச்சிக்குவா. காப்பாத்திருவேன்.“ திடுமென ஒரு நம்பிக்கை வந்தது. நெஞ்சுக்குள் அடித்த நெருப்பின் அனல் குறைந்து உறைந்து ஜில்லிட்டது. ஆசுவாசப்படுத்திக் கொண்டார். மனசுக்குள்: சில்லென்று காற்றடிக்க மழைமேகம் தவழ்ந்தது. 

“என்னப்பு பேசாமெ இருக்கியெ?” 

“இல்லெ. . தம்பி. ஒரு, ஒரு நாளு கழிச்சி சொல்லலாமா? சிள்னதாய் ஒரு ரோசனை.” 

“செரி. அதும் செரிதான். நல்லா யோசிங்க. நாளக்கிக் காலையிலெ சொல்லுங்க. மத்த சாதிப்பயக ரெடியா இருக்கானுவெ. யோசிச்சிக் குருங்க. அதான். வேறொண்ணுமில்லை.” 

இப்பவே ஒத்துக்கொள்ளலாம்தான். ஆனா என்னமோ ஒடனே ‘ஒத்துக்கண்ணு’ சொல்லத்தோணலை, 

“வாறேன் தம்பி.”

“ம்ம். வாங்கப்பு. ஏதாவது ஒரங்கிரம் வேணுன்னா வந்து வாங்கிக்குங்க. ரோசிக்காதீங்க” 

காட்டூர்ணிக்கரையில் கொட்டவை போட்டிருந்தாக. அச்சு அசலாய் வீடு மாதிரி. பயலுவல்லாம் அங்கெதான் கெடந்தானுவெ. ஊருல்லெ புதுசா ஒரு வெதம் பரவியிருந்துச்சி. முத்தாம்மாகிட்டெ சொன்னப்போ சிரிச்சா. பொம்பளையலாம் வந்துருக்காவுகளான்னு கேட்டா. 

ரெண்டு நாளு கழிச்சித்தான் நம்ம வயல்லெ எடுக்கப்போறாகளாம். சின்னதாய் ஒரு ஆசெ. என்ன எடுக்கப்போறாக? யாரக் கேக்கணு முன்னு தெரியலை. சின்னத்தம்பி சொன்னான், ஏதாவது பாட்டுசீனு எடுப்பாங்கன்னு. காசிய கேப்பமா? என்னன்னு தெரிஞ்சிக்கிட்டா கொஞ்சம் சந்தோசமாயிருக்கும். பொதி பாத்தீயவளா? வவுத்துப் புள்ளக்காரி மேடு வவுத்தை துணியப்போட்டு மூடி வெக்கிறமாதிரி வெச்சிக்கிட்டு நிக்கிற பயிருக. நல்ல செறிவா இருக்குற தாய்ப்பயிரு மெது மெதுவா வளந்து தண்டு உப்பி மேலே வந்து மொத தோகையை வெலக்கி பச்சைக் கொழந்தையாட்டம் கருது எட்டிப் பாக்குறப்போ இருக்குற அழகு இருக்கே. அ டடா! நாளக்கிம் போயிப்பாக்கணும். 

காசி சொன்னப்போ வவுத்தைப் பிடிச்சிக்கிட்டேன். நெஞ்சிக்கூடு வெடிச்சிரும்போல இருந்துச்சி. காலுக்குள்ளெ கொழு மாட்டுன மாடு மாதிரி தவிச்சேன். ரெம்ப சுளுவா சொன்னான். ஒரு சண்டக் காட்சியாம். அப்புறம் வயல்லெ குண்டு வெடிக்கிற மாதிரியாம். அங்கங்கெ தீ பரவுமாம். அய்யோ. . கடவுளே. நா செத்துப் போயிறணும். இதப்பாக்க நா இருக்கவே கூடாது. பொதியா. .. பொதி. வவுத்துப்புள்ளக்காரியா. அந்தக் கொடுமை வேண்டா முய்யா. பொகையான் பூச்சியடிச்சி ஒண்ணும் வெளையாமெ சாவியா போனாக்கூட நான் நெருப்பு வெக்க மாட்டேன்ய்யா. நெருப்பு வைக்கிறீயளா? குண்டு வைக்கிறீயளா? பயிருக என்ன போகிப் பண்டிகைக்கி கொழுத்துற பழைய பாயி மாதிரியாய்யா. என்ன பேசுறீய? படிச்சவுகள்ளாம் சேந்து என்ன பண்ணப்போறோ முன்னு யோசிச்சுத்தான் பண்ணுறீகளா? 

“சித்தப்பா, இதுலெ என்ன இருக்கு. இனிமே அது வௌஞ்சி உங்களுக்குப் பணம் வந்து, நீங்க சின்னம்மாவக் காப்பாத்த முடியுமா? உங்க நல்ல நேரம். இப்படி வந்து அமஞ்சிருக்கு. எப்புடியும் எல்லா எடத்தையும் அப்படிப் பண்ணமாட்டக. எல்லாம் முடிஞ்சி என்ன மிஞ்சுதோ அது நமக்கு லாபம் வாங்குன பணம் போக. அப்புறம் பாத்து கூடக்கொறய பண்ணிக்கலாம்.” 

“இல்லைப்பா. மனசுக்கு சரியில்லை.” 

“என்ன பேசுறீயப்பூ, நெனவோடுதான் பேசுறீயளா? ஏற்கனவே அதுக்கு இதுக்குன்னு பலசாதிப் பயளுவகிட்டேயும் கடன ஒடன வாங்கியிருக்கீக. மாத்துரை மருந்துக்குன்னு வேற எங்கிட்டேயும் வாங்கி கட்டியாச்சி. ரோசிக்குங்க. அப்பறம் உங்க இஷ்டம்” 


பொழுது மேற்கில் நகர்ந்து கொண்டிருந்தது. மருதுசேர்வை கீழ வரப்பில் சாய்ந்திருந்தார். உடம்புச்சூட்டில் வேட்டியே சூடாகி யிருந்தது. குனிந்து பயிர்களைப் பார்த்தார். எந்தவிதக் கவலையு மில்லாமல் இருந்தன பயிர்கள். குத்து குத்தாய், குடும்பம் குடும்பமாய் பத்துப்பதினைந்து முடிச்சுகளாய் கொப்பும் குலையுமாயிருந்தன. உச்சந்தலையில் இலைப்பச்சையாய் வெளிர்த்தும் அடியில் கரும்பச்சையாயும் பூரண பூரிப்போடு இருந்தன அவை. மறையும் சூரியனின் ஒளிக்கதிர் பயிர்களின் மேற் பரப்புகளில் பட்டு ஆங்காங்கு மினிக்கிக்கொண்டிருந்தது. புதிதாய் பிறந்த கருதுகள் கூட்டத்தை வெறிக்கும் பிள்ளைகள் போல அங்கு மிங்கும் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தன. பிளந்த தோகைகள் வயதுக்கு வந்த பெண்ணைப்போல பளிச்சென்றிருந்தன. 

இந்தக் கூட்டத்துக்கு தீ வெக்கெணுமுன்னு எப்புடியா தோணுது இவுகளுக்கு. பச்சப்புள்ள மாதிரி இருக்க இதோட அடி வயித்துலெ ஓங்கி மிதிக்க எப்புடியா தைரியம் வருது… அதோ ஒத்தி ஒத்திப்போற தட்டாம் பூச்சி மாதிரி கருதுகளத் தடவித்தடவிப் போகணும் போலயிருக்கே. அந்தப் பால்வண்டு மாதிரி ஒவ்வொரு குத்துச் செடிக்கும் இடையில ஓடியாடணும் போலயிருக்கே. ஒளிஞ்சி வெளயாடணும் போலயிருக்கே. கட்டிக்கிட்டு அழணும் போலயிருக்கே. 

முத்தம்மா..! நானும் வாறேன் இரு. ரெண்டு பேரும் சேந்து போவலாம். இந்த அக்கிரமத்தைச் செஞ்சிட்டு நா உயிரோட இருக்கலாமா? ஓங்கைபட்டு வளர்ந்த, ஓங்காலுமிதிச்ச மண்ணுலெ பொறந்த இந்தப் பொறவிகளைக் கொன்னுட்டு நாம உயிரோடு இருக்கலாமா? 

இருட்டினில் காட்டூரணிப்பக்கம் நடந்தார். குளத்தின் மேலக் கரையில் இருவர் அமர்ந்திருப்பதாய்த் தோன்றியது. நெருங்கியதில் சின்னதாய் இருந்த மேசை மேலே இரண்டு மூன்று பாட்டில்கள் இருந்தன. அவர்களைச் சுற்றி புகைமூட்டமாகவும் இருந்தது. 

“என்னப்பு? என்ன வேணும்? யரரைப் பாக்கணும்?” கொஞ்சம் எரிச்சலாய்த்தான் இருந்தது அவருக்கு. ‘நம்ம ஊருலெ வந்து இருந்துக்கிட்டு நம்மளயே யாருன்று கேக்குறானுவொ!’ 

துண்டை எடுத்து கையைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அருகில் வந்து “அய்யா. .. ஒரு விஷயமுய்யா” என்றார் மெதுவாக 

“வாங்கப்பு. உக்காருங்க. என்ன விஷயம் சொல்லுங்கப்பு.” 

அவர்களுக்கு பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்பட்டது போலும். பச்சைப்பயிர் கண்ட பசுவைப்போல ஆர்வத்தோடு உணர்வுக் குழம்பாய் அவர் சொல்லச் சொல்ல ‘ம்ம்..ம்ம்’ போட்டுக் கொண்டிருந்தார்கள். 

நெஞ்சுக்குள் சின்னதாய் ஒரு நிம்மதி பரவ, மருதுசேர்வை அவர்களது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். ‘என்ன சொல்லுதாகளோ?’ 

“நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம். ஆனா அது டயரெக்டர் சமாச்சாரம் பெரியவரே. நாங்க ஏதாவது சொன்னா நாளக்கி எங்க பொழப்புப்போயிரும்.” 

“இல்லேய்யா..கொஞ்சம் சொல்லுங்க. வயக்கரையிலெ வெச்சுக்கச் சொல்லுங்க. கஷ்டப்பட்டு வெதைகாத்து, நாளு பாத்து நாத்துப் பாவி நானு ம் எம்பொண்டாட்டியும் ராத்திரி பகல் பாக்காமே எறவா மரத்தைப்பூட்டி தண்ணி எறச்சிக் காப்பாத்துனதுய்யா. வாயைக்கட்டி வவுத்தக்கட்டி புள்ளங்கெளெ வளக்குற மாதிரி வளத்துருக்குமய்யா. பயிருக வாடுனா நா செத்துப் போயிடுவேன். எம்பொண்டாட்டிக்காக அல்லாடுறேன். இல்லாட்டி குடுத்துருக்கமாட்டேன்.”

“சொன்னா புரிஞ்சுக்க மட்டேங்கிறீங்க. வயக்கரையிலெ எடுக்குறதுக்கு எதுங்கு நாங்க உங்க வயலக் கேக்கணும்? கிளை மேக்ஸ் சீனுங்கய்யா. இது நல்லா வரணும். இத நம்பித்தான் நாங்க இருக்கோம். இதுலெ எந்த அளவுக்கு நல்லாப் பண்றோமோ அதப் பொருத்துத்தான் படம் ஓடுறதும் ஓடாததும். கிளைமேக்ஸ் பெரியவரே. தத்ரூபமா இருக்கவேண்டாமா? ரியாலிட்டி வேண்டாமா?” 

”அய்யா..” எதுவும் சொல்லத் தெரியவில்லை அவருக்கு. கண்கள் கலங்கின. அவமானப்பட்ட நாய்க்குட்டி கால்களுக்குள் வாலை இடுக்கிக்கொண்டு திசை தெரியாமல் ஓடத்துவங்கியது. தோற்றுப் போன குதிரை மருவிக்கொண்டு வயலைச் சுற்றியே வந்தது. 

முத்தம்மாவிடம் என்ன சொல்லுவது? கால்கள் தடுமாறின. ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க பெருமூச்சும் வெறுமையுமே மிஞ்சின. வாடி வாசலைத் திறப்பதற்குள்ளாகவே காலொடிந்து முடங்கிப்போன காளையாய் நொந்துபோய் நடந்தார். 

கிழிந்த துணியாய்க் கிடந்தாள் முத்தம்மா. விரக்தியாகச் சிரித்தாள். செத்துப்போவது உறுதியாகத் தெரிந்துவிட்டது அவளுக்கு. ‘கமலஞ் செய்யை விட்டுட்டுப் போறோமே’… கண்ணீர் மேவி வந்தது. நினைவலைகள் ஒவ்வொன்றாய் புரண்டு புரண்டு வந்தன. ததும்பின. லேசாய் ஒரு விக்கலுக்குப் பிறகு மெதுவாய் ஏதோ பேச எத்தனித்தாள். 

“கமலஞ்செய்யி..வயலெ மணியாரு வீட்லெயிருந்து வாங்குனாங்க ளாம். சாவுற வரைக்கும் சொல்லுவாக. அதுவும் காசெக்குடுத்து எதுவும் வேணாமுன்னு குடும்பத்தோட கொழும்புக்கு போனப்ப இந்தாஅஞ்சம்மா.. புருஷன தவறவிட்டுட்டு கைக்கொழந்தையோட அள்ளாடுறெ. ஏதாவது குடுத்துட்டு இந்த வயலை எடுத்துக்கோ அப்புடின்னு அத்தெகிட்டே குடுத்தாகளாம். நெல்லுப்பானையிலே சேத்துவெச்ச இருவது ரூவாயைக் கொடுத்து அத்தெ வாங்கினாக ளாம் அத்தெ. மணியாரு வீட்டம்மா செத்துப்போன பின்னாடி வாங்கிப்புட்டு கையிலெ நம்பட்டியெ எடுத்துக்கிட்டு நேரே வயலுக்குப் போனாங்களாம். மொக மொகமா தாமரை பூத்துக் கெடக்காம். தெக்குப்பக்கம் கொளம் மாதிரி மீனு குதிக்கிதாம். கெழுத்தியும் கெண்டையுமா அப்புடியே முந்தானைக்குள்ளெ வாரிப்போட்டுக்கிட்டு வந்தாகளாம். அன்னையிலேயிருந்து அவுக சாவுறவரைக்கும் அதுலெ அரப்புடி நெல்லாவது வௌஞ்சிருமாம். பஞ்சமாப் போனதேயில்லயாம். கமலஞ்செய்யினா கமலஞ் செய்யிதான்னு எப்பவும் சொல்லுவாக.” 

அவளுடைய கண்கள் அங்குமிங்கும் அலைந்து மேல்நோக்கி நின்றன. ஓரிரு நிமிடங்கள் கழித்துக் கீழே வந்தன. “ சொல்லு. நா என்ன பண்ணட்டும். கமலஞ்செய்ய அவுகளுக்கு கொடுத்துறவா? ஒன்ன இந்த நெலமையிலெ எனக்குப் பாக்க முடியலெ. என்ன பண்ண? ஒரு வழி சொல்லு தாயி. மனசு ஒடஞ்சி கெடக்கு எனக்கு. ஒன்னக் காப்பாத்த வக்கில்லாத ஒருவனா நிக்குறென் ஒம்முன்னாடி. சொல்லு.” 

பேச முடியவில்லை அவளால். அவருடய கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். திடுமென கண்களுக்குள் பூகம்பமாய் அதிர்வுகள் கைகால்கள் வெட்டிவெட்டி இழுத்தன. தலை விழுக் விழுக்கென்று மேலே கீழே ஏறியிறங்க, தொண்டைக்கும் நெஞ்சுக்கும் கரட்டுகரட்டென்று இழுப்பு. படுக்கை முழுவதும் வேகமாய் அதிர, கோழையும் ரத்தமும் குபுக்கென்று வெளியடிக்க, ‘ அம்மா.. தாயே என்னைய விட்டுட்டுப் போயிராதேடா. . என்றவாறு பதறி விழுந்து கதறியவர், நெஞ்சு வெடித்தவராய்க் கத்தினார் “அய்யோ யாராவது வங்களே.. எம்பொண்டாட்டியைக் காப்பாத்துங்களே. ….!” 

சத்தம் கேட்டு வெளியே போய்க்கொண்டிருந்த டாக்டரும் நர்ஸூம் உள்ளே பாய்ந்து வந்தார்கள். 


நிலவு அமைதியாய்த் தவழ்ந்துகொண்டிருந்தது. மனத்தில் சஞ்சலமே யில்லை. வெண்ணிற பஞ்சு போன்றதொரு நிலவொளிப் பரவலில் பயிர்கள் கொஞ்சிக் குலவிக்கொண்டிருந்தன கனவுகண்ட பயிர்கள் விழித்துப்பார்த்து வெட்கம் கொள்ள, கமலஞ்செய்யின் நான்கு வரப்புகளையும் சுற்றிச்சுற்றி வந்தார் மருதுசேர்வை. கூட முத்தம்மாளும் வந்தாள். தூக்கிச் சொருகிய புதுச்சேலையில் ரொம்பவும் அழகாக இருந்தாள். மீசையை முறுக்கிவிட்டிருந்த மருது சேர்வை, அவளின் கொசுவத்தைப் பிடித்து இழுக்க, வெட்கத்தோடு விலகி ஓடி முந்தானைக்குள் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள். வேகம் கொண்ட காளையாய் வெறியோடு அவர் நெருங்கி முந்தானையை விலக்க, நிலவையும் மிஞ்சும் வகையில் பூரித்துப் போயிருந்தது அவளின் முகம். ஊத்தாவுக்குள் அகப்பட்ட இறாமீன் போல குதித்து சடசடத்தது அவரின் மோகம். 

‘வேணாம். சோறு போடுற சாமி இது. இங்கெ தப்புப்பண்ணக் கூடாது. எந்திரிங்க.‘ 

‘ம்க்கூம். இதுக்குத்தான் ராத்திரிலே தனியாப்போறீகன்னு தொணையா வந்தியாக்கும். இதுக்கு நா தனியாவே வயலுக்கு வந்திருப்பேன். ‘ 

விடிவெள்ளி தேவகோட்டை மூலையில் இருந்தது. ‘மணி நாலு இருக்குமா?’ மனசுக்குள் காரங்காய் முட்கள் கட்டம் கட்டமாய்ப் பின்னிக்கிடந்தன. நிலவு ஒதுங்கிப்போய் மறைவில் கிடந்தது வாமடையில் சலசலவென்று நீர் பாய்ந்துகொண்டிருக்க, சிறு சிறு மீன்கள் குதித்துக் கொண்டிருந்தன. பயிர்கள் இரவிலும் மெதுவாக அழகாக புன்னகை பூத்துக்கொண்டிருந்தன. 

வாமடையின் முகப்பில் பொத்தென்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டார் மருதுசேர்வை.

எழுந்து காட்டூரணிப்பக்கம் நடந்தார். காசிப்பயலையும் பாக்கணும்.

– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *