மரம் வைத்தவன்
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 15,382
வழக்கம் போல் இன்றும் விடியற்காலை நாலரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. சளக்சளக்கென்று அம்மா வாசல் தெளிப்பதும், தொலைவிலிருந்து வரும் கொக்கரக்கோவும், பால்காரர்களின் சைக்கிள் மணிச் சப்தமும், பேப்பர் போடும் பையனின் கூவலும், அன்றைய பொழுது புலர்வதை, அதன தன் பாணியில் ஆரம்பித்துக் கொண்டிருந்தன. பனி கலந்த காற்றும், பவழ மல்லிகையின் தூக்கலான மணமும் மனதையும், உடம்பையும் சிலிர்க்கச் செய்தன. ஒரு நிமிடம் கண்களை மூடியபடி ‘இன்றைய தினம் நல்லபடியாக’ விளங்க இறைவனை வேண்டியபடியே எழுந்து கொண்டான் கண்ணன்.
வாசல் திண்ணையில் அன்றைய தினசரியைப் படித்துக் கொண்டிருந்தார் அப்பா. அதன்பின் பின்புறத் தோட்டத்துக்குப் போய் மரம், செடி, கொடிகளுக்குத் தண்ணீர் விட்டு, பவழமல்லிச் செடிகளுக்கடியில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை எடுத்து வருவார். மரகதப் பச்சையில் கொத்துக் கொத் தாய்ப் பிஞ்சு விட்டிருக்கும் மாமரமும், பட்டாடைச் சிறுமியர் போல் செழித்திருக்கும் வாழையும், ஏகத்துக்குக் காய்த்துத் தள்ளியிருக்கும் தென்னையும் அவரது வருகையை உணர்ந்தாற் போல், கிளைகளையும் இலைகளையும் அசைத்து வரவேற்கும். தமிழுக்கு அடுத்தபடியாக, அப்பா அதிகம் ஈடுபாடு காட்டுவது இந்தச் சிறு தோட்டத்தில்தான். குளித்துத் தயாராகிச் சரியாக ஏழரை மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார். அவர் பணியாற்றும் திருநாவுக்கரசு வித்யா சாலை இரண்டு தெருக்கள் தள்ளி இருந்தது.
சுந்தரம் வாத்தியார் என்றால் ஊரில் ஏசுமரியாதை, சிறிதும் ஆங்கிலம் கலக்காத தமிழும், அதை அவர் அற்புதமாகச் சொல்லித் தரும் தேர்த்தியும் அலாதியானது. ள,ழல, உச், சரிப்பு சரியாக வராத பிள்ளைகளுக்காகத் தனியே நேரம் ஒதுக்கி, அவர்கள் சரியாகப் பேசும் வரையில் மெனக்கெட்டுப் பயிற்சி தருவார். திருக்குறளும் அறநெறிச் சாரமும் தமது வாழ்விலும் பொருந்தும்படியாக வாழ்ந்து வந்தார். செய் தொழில் நேர்த்தியும், கடமையுணர்வும், வாக்குச் சுத்தமும், அவருக்குப் பள்ளியில் மட்டுமல்ல, அந்த ஊரரிலும் கூடுதல் மரியாதையைத் தந்திருந்தன.
“கண்ணா ! நீயும் குளித்து விட்டால், அப்பாவோடு சேர்ந்து பசியாறி விடலாம்…” அம்மாவின் குரல் கேட்டதும் விரைந்து தயாரானான்.
‘அம்மா, இன்றைக்கேனும் ஏதும் ஆரம்பிக்காமல் இருக்கணும்…’ என்று நினைத்தபடியே அமர்ந்த பொழுது, தட்டுக்களில் சிற்றுன்டியைப் பரிமாறியபடியே அம்மா ஆரம்பித்து விட்டாள்…
“என்னங்க! நம்ப அமுதாவுக்கு இந்த ஆனியோட இருபது வயது ரொம்பிடுதே… திமுதிமுனு வளந்துட்டாளே! அந்தப் பொண்ணுக்குக் கை, கால் மூனியா இல்லாம் ஏதாவது செஞ்சு போட வேண்டாமா? அந்தப் பண்ணையார் வீட்டுப் பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்கிறீங்களே? அவங்க இருக்கப்பட்டவங்கதானே? அந்தப் பணம் வந்தால் ஏதேனும் செலவுக்கு ஆகுமில்லையா…?”. அப்பா எதுவும் பேசவில்லை.
கண்ணனுக்கு மிகவும் ஆற்றாமையாக இருந்தது. வேலைக்குப் போகும் வயதில், தான் வெட்டியாக உட்கார்ந்து கொண்டு, இப்படி வேளாவேளைக்குச் சாப்பிடுவது குற்றவுணர்வைத் தந்தது. ஆனால், என்ன செய்ய? விஞ்ஞானத்தில் இளநிலைப் பட்டம் வாங்கி இரண்டாண்டுகள் ஆகிவிட்டன, வேலைதான் கிடைத்த பாடில்லை.
மிகுந்த சிரமங்களுக்கிடையே, மூன் நாண்டுகளுக்கு முன்பு, செல்வி அக்காவுக்குத் திருமணம் செய்யப்பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. உள்ளதைக் கொண்டு நல்லது செய்ய வேண்டும்… பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்க வேண்டும் என்று மிக எளிமையாக அப்பா திருமணத்தை நடத்தினாலும், அதற்கே முழி பிதுங்கிப் போனது, பேசாமல் படிப்பைத் தொடராமல், கிடைத்த வேலைக்குப் போவதாகக் கண்ணன் சொன்னபோது அப்பா வெகுவாகப் பதறிப் போனதோடு, அவனை உற்சாகப்படுத்தினார்.
“கண்ணா! நீ நன்றாகப் படிக்கணும். உன் கவனம் அதில் மட்டும்தான் இருக்கணும். எனது உடல் நோய்கண்டு விழாத வரை… எனது பணிக்கு இடையூறு ஏற்படாதவரை, உனது படிப்புக்கு எந்தத் தடங்கலும் வரக்கூடாது. நாலடியாரில் வருமே…. ‘கரையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை, அதன் விழுதுகளே நிலைத்து நின்று காப்பாற்றும்…’. அது போல், நலிவுற்ற தந்தையை அவன் பெற்ற பிள்ளைகள் ஆதரவோடு காப்பாற்றுவார்கள் என்று…. அந்த உணர்வு மட்டும் உனக்கிருந்தால் போதும். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்” என்று தன்னம்பிக்கைச் சின்னமாக அவர் சொல்லும் போது, ‘கடவுளே! இந்த அருமையான அப்பாவிற்காகவேனும், எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும்’ கண்ணனின் மனது அரற்றும். ஆனாலும் ‘நேரம்’ என்று ஒன்றிருக்கிறதே! அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகாது அல்லவா?
செல்வி அக்காவின் சுபச் செலவுகள் ஒருவிதமாக ஓய்ந்து, செலவுகள் சுட்டுப் பாட்டுக்கு வந்த போது… சுறுசுறுவெனக் குட்டி தேவதையாகத் திரிந்து கொண்டிருந்த அமுதா, குப்பென்று மலர்ந்த பூங்கொத்தாகத் தெரிந்தாள். பொண்ணு வளர்த்தயோ, பீர்க்கு வளர்த்தியோ என்ற தினுசில் அவளது வளர்ச்சி, அம்மாவின் தவிப்பையும் பொறுப்பையும் அதிகமாக்கியபோது, கண்ணனையும் கவலை தாக்கியது.
சும்மா இருக்கப் பிடிக்காமல், உள்ளூர் நூலகத்தில் காப்பாளராகப் போய் வந்தாலும் அவ்வேலை, அதிகம் ஒன்றும் ஈட்டித் தரவில்லை. வேலை நியமன அலுவலகத்துக்குச் சென்று கல்வித் தகுதிகளைப் பதிவுசெய்து விட்டு வந்ததுதான் மிச்சம்… இன்றுவரையில் ஒரு நியமனத் தேர்வுக்குக் கூட அழைப்பு வந்ததில்லை. அவனது தோழர்களெல்லாம் பட்டப்படிப்புடன் கூடவே எது எதையோ படித்து வைத்திருந்தார்கள். மேலும் கரை வேட்டிக் கட்சிக்காரர்களின் சிபாரிசு கிடைத்தவர்களுக்குக் கைமேல் பலனாக வேலை கிடைத்துக் கொண்டிருந்தது.
நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் படித்து முடித்தாயிற்று. அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகளும், உதய மூர்த்தியின் ஊக்கக் கட்டுரைகளும், விவேகானந்தரின் எழுச்சிமிக்க எழுத்துக்களும் அவனது மனதைப் பண்படுத்தின. புத்தக உலகத்து வித்தகர்களின் எழுத்திலிருந்து. சரியான வேலை கிடைக்காமல் அவதிப்படுவது வரை, அவனது நண்பன் மணிமாறனிடம் பகிர்ந்து கொள்வதில், அவ்வப்போது மனபாரம் சற்றுக் குறைத் தாற்போல் இருக்கும்.
‘யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு
கைப்பிடி யாவர்க்குமாம் பசுவுக்கொரு
வாயுரை; யாவர்க்குமாம் உளங்குளிர ஒரு
இன்சொல்; யாவர்க்குமாம்…’
அப்பாதான் கணீரென்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பாவிடமிருந்து. நான் என்றைக்குச் சுமையை வாங்கிக் கொள்ளப் போகிறேன்…?
மனதுள் வேதனை புரளவே, காலார தோட்டப் பக்கம் நடக்கலா மென்று எழுந்து கொண்டவனை, ‘கண்ணா! வீட்லதான் இருக்கியா?” என்ற மணிமாறனின் குரல் ஈர்த்தது.
“வா மணி.”
“கண்ணா, கொஞ்சம் வெளியில் போய் வரலாம்…வருகிறாயா?”
“இதோ வருகிறேன்” சட்டையை மாட்டிக் கொண்டு, “இதோ வந்துடறேம்மா…” என்று சொல்லியபடியே இருவரும் நடந்தார்கள். வெளிக்காற்றில் மனப்புழுக்கம் தணியக்கூடும்…
“கண்ணா! ஒரு நல்ல சேதி…உனக்கு விடிவுகாலம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. நேற்று நம்ப ராவுத்தர் கடைக்குப் போயிருந்தேன்…அவரது மாப்பிள்ளை சவூதியிலிருந்து வந்திருக்காராம். அங்கே அவரது கம்பெனிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க வந்திருக்கிறாராம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தமாம்; மூன்று வேளை உணவும், தங்கும் இடமும் இலவசமாம்….எனக்கு உடனே உனது நினைவுதான் வந்தது.”
மணிமாறன் சொல்லச் சொல்லக் கண்ணனுக்கு உள்ளம் நெகிழ்ந்தது. ராவுத்தரின் மாப்பிள்ளைக்குக் கண்ணனின் அடக்கமும், பணிவும் நிரம்பவே பிடித்துவிட்டன.
“தம்பி கண்ணா! உனக்கு விருப்பம் என்றால், பாஸ்போர்ட்டுக்கும், டிக்கெட்டுக்கும் சீக்கிரமே ஏற்பாடு செய்து விடுவேன். இன்னும் சரியாக இரண்டு வாரங்களில் கிளம்பும்படி இருக்கும்…” அவரிடம் சம்மதம் தெரிவித்து வீட்டுக்கு விரைந்தான்.
அப்பாவிடம் சொன்னபோது, அவர் இரண்டு கைகளையும் உயரே தூக்கி வணங்கியவராய், “நான்தான் சொல்வேனே, ‘மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்’ என்று. ஒன்றைத் தெரிந்து கொள் கண்ணா! போற்றி வளர்க்கும் தமிழும் சரி; புதைத்து வளர்க்கும் மரமும் சரி… நம்மைக் கட்டாயம் மேலே உயர்த்தும்…” அம்மா வந்து அவன் தோளைத் தொட்ட போது கண்களில் நீர் நிறைந்து, வாய்க்குள் வார்த்தைகள் சிறைப்பட்டன.
உள்ளூர்க் கடையிலேயே அமுதாவோடு சென்று, சுமாரான ஒரு பெட்டியும், இரண்டு செட் உடுப்புக்களும் வாங்கிக் கொண்டான். அன்பாகவும், சற்றே பிடிவாதமுமாக அமுதா வற்புறுத்தியதால், கான்வாஸ் காலணிகளும், இரண்டு கழுத்துப் பட்டிகளும் (டை) வாங்கிக் கொண்டான். வீட்டில் இருக்கும் நாட்கள் குறையக் குறைய, மனம் இரும்பு குண்டாகக் கனத்தது.
அப்பாவின் அண்மையையும், அம்மாவின் அன்பையும், அமுதாவின் பாசத்தையும் இப்படிப் பிரிவதில் அவனுக்கு உடன்பாடு இல்லைதான். ஆனால் குடும்பச் சூழ்நிலையும், தலைமகனுக்கே உரிய பொறுப்புணர்வும்….உலகின் துருவப் பிரதேசங்களுக்குக் கூட அவனை அனுப்பிவிடத் தயாராகி இருந்தன!
***
அந்தப் பெரிய விமானம் ஜெட்டா நகரின் கிங் அப்துல் அஜீஸ் விமான நிலையத்துள் தரையிறங்கியது. சவுதியின் செழுமையும், பணக்காரத்தனமும் அந்த விமானதளத்தைக் கடந்து வரும்போதே, தெரிந்தது. வெள்ளை வெளேரென்ற நிறமும், வாட்டசாட்டமுமாக, மேலங்கியுடன் அரேபியர்கள் போய்க் கொண்டிருந்தபோது… மிகவும் பிரமிப்பாக இருந்தது. அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும் இன்னவென்று தெரியாத பிறநாட்டவர்களும் இங்கும் அங்குமாகச் சென்று கொண்டிருந்தனர்….வேலைப் பாடுகளுடன் தெரிந்த மசூதிகளும், வானளாவிய கட்டிடங்களும். கண்ணன் இதுவரை மனத்தால் கூடப் பார்த்தறியாத சுந்தரபூமியாகத் தெரிந்தது. யாரோ ஒரு அரேபியருடன் ராவுத்தரின் மாப்பின்ளை சரளமாக அரபுமொழி பேசிக் கொண்டே அவனை அழைத்துச் சென்றார்.
அவர் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் தங்கிக் கொண்டவன், மறுநாள் அவரைப் பார்க்கக் கிளம்பினான். புது உடுப்புக் களையும், காலணியையும் அணிந்து கொண்டவன், மறக்காமல் கழுத்துப் பட்டியையும் அணிந்து கொண்டான். அம்மாவின் முகம் மனதுள் எட்டிப் பார்க்கவே, கையோடு கொண்டு வந்திருந்த திருநீற்றைச் சிறுகீற்றாகப் பூசிக் கொண்டான். இந்த வேலையில், பணம் சேர்ந்தவுடன், முதல் வேலையாக அம்மாவுக்கு இரட்டைவடச் சங்கிலி வாங்கிவிட வேண்டும். உற்சாகப் பந்தாக வந்தவனை ராவுத்தரின் மாப்பிள்ளை எதிர்கொண்டார். அவரது அலுவலக அறைக்கு வெளியே விதவித சாயல்களில் மனிதமுகங்கள். ராவுத்தரின் மாப்பிள்ளை அவனிடம் ஒரு அட்டைப் பெட்டியைத் தந்தபடியே பேசினார்.
“தம்பி கண்ணா! இந்தப் பெட்டியில் நீ அணிந்து கொள்ளக்கூடிய சீருடையும், காலுறையும், தொப்பியும் உள்ளன. நீ வரும் வழியில் பார்த்தாய் அல்லவா? அவர்களோடு நீயும் கிளம்பணும்…உன்னை இட்டுச் செல்லும் வண்டியில், நீண்ட ரம்பமும், பெரிய கத்தரியும், புல் வெட்டும் இயந்திரமும் உள்ளன…முதல் நாள் என்பதால் அவர்களை நன்றாகக் கவனித்துக் கொள், நாளை முதல், நீயாகச் செய்யப் பழகு…இந்த நாட்டு அரசாங்கம் பொது மக்களுக்காக, பல கோடி பணம் செலவழித்துப் பொழுதுபோக்குப் பூங்காவை ரியாத்தில் அமைக்க இருக்கிறது… அதையொட்டி…புற்களை வெட்டிப் புது வடிவங்களோடும்; மரங்களின் வேண்டாத கிளைகளை வெட்டி அழகு படுத்தியும் புதுமையாகச் செய்ய வேண்டும். பேரீச்சை மரங்களை வரிசைப்படுத்தி நடவேண்டும். அத்தோடு, ஜப்பானிய முறைப்படி ‘பொன்சாய்’ எனப்படும் மரங்களை வெட்டிப் பெரிதாக அவற்றை வளரவிடாமல் நிழலில்…அதிகம் வெய்யில் படாமல் தொட்டிக்குள் அடக்கிப் பக்குவமாக வளர்க்கணும்…” என்று சொல்லச் சொல்ல கண்ணனின் மனது சுக்குநூறாக நொறுங்கிப் போனது.
மரங்களை வெட்டி…கிளைகளை ஒடித்து ஓடித்து அடக்கி வளர்ப்பதா? இது மரங்களைத் துன்பப்படுத்துவது ஆகாதா? கண்ணனின் மனத்துள் அவன் அப்பா தோட்டத்தில் பயிர்களை ‘கண்’ணாக காக்கும் காட்சிகள் படமாக விரிந்தன.
“என்ன தம்பி…யோசனை பலமா இருக்கு…” ராவுத்தரின் மாப்பிள்ளையின் குரல் அவனை நனவுலகுக்குக் கொண்டு வந்த போது…அவனது எண்ண ஓட்டம் தடைப்பட்டது. அப்பாவிடம் சொல்ல வேண்டும்… ‘மரம் வைத்தவன் தண்ணீர் மட்டும் விடவில்லை….கூடவே கண்ணீரும் விடுகிறான்’. அப்படி நினைத்தபடியே, அந்தப் பணியாளர்களோடு சேர்ந்து கொண்டபோது…சீருடைக்கு மாறியிருந்தான் கண்ணன்!.
– மார்ச் 2005