மனதின் காயங்கள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2025
பார்வையிட்டோர்: 145 
 
 

கிருஷ்ணா அன்று இருந்ததை போல எப்போதும் மனம் உடைந்து போனதில்லை… அவன் அப்படி என்ன தவறு செய்து விட்டான் என்று அந்த நிறுவனம் அவனை பணியில் இருந்து வெளியேற்றினார்கள் என்று அவனுக்கு புரியாத புதிராகவே இருந்தது… அடுத்து என்ன என்று யோசிக்க யோசிக்க அவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் போலவே இருந்தது… அதனால் சற்று தேநீர் தயாரித்து பருகலாம் என்று சமையல் அறைக்கு சென்றான்…

ஆம் சொல்ல மறந்து விட்டேன் கிருஷ்ணா ஒரு திருமண பந்தத்தில் இன்னும் இணையாத மிகவும் ஒழுக்கமான மனிதன்… அவன் அப்படி எவரிடமும் மனதை பறி கொடுக்காமல் இருந்ததற்கான காரணம் சமூகத்தில் அங்கங்கே நிகழும் திருமண பந்ததத்தின் சீர்குலைவுகள் தான் காரணம் என்று மற்றவர்களிடம் அவனது திருமணம் பற்றி பேச்சு எடுத்தால் சிரித்துக்கொண்டே சொல்லி விட்ட போதிலும் அவனுக்கு உண்மையில் திருமணம் செய்ய விருப்பமில்லை என்று மட்டும் சொல்லலாம்..

ஆனால் அது மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது…ஏனெனில் அவனை நிறைய பேர் காதலித்தார்கள்…

ஆனால் அவனோ ஒரு வார இறுதி நாளில் அவர்களை அவனுக்கு பிரியமான தேநீர் விடுதிக்கு வரவழைப்பான்…அவர்களும் மிகவும் ஆவலாக கனவுகளோடு வருவார்கள்..அவர்களிடம் பலவிதமான கேள்விகள் கேட்பதற்கு முன்னால் தேநீர் முழுமையாக ரசித்து அதிலேயே ஒன்றி பேசாமல் அங்கிருந்த மரங்களை பறவைகளை ரசித்து பருகுகிறார்களா என்று முதல் தேர்வு அவர்களிடம் சொல்லாமலேயே வைப்பான்..

ஆனால் அது அவர்களுக்கு தெரியாது அல்லவா..அதனால் தேநீர் பருகிக் கொண்டே அவன் வேலை எவ்வளவு சம்பளம் உங்கள் வீட்டில் எத்தனை பேர் நீங்கள் எனக்கு முழு சுதந்திரம் வேலைக்கு செல்வதற்கு கொடுப்பீர்களா..இப்படி இத்யாதி இத்யாதி கேள்விகள் அவனை கேட்பார்கள்..

அவனோ எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் அந்த தேநீரை பருகுவதிலேயே மிகவும் நுட்பமாக இருப்பான்..அதை பார்த்து விட்டு பொறுமை இழந்து சென்ற பெண்கள் தான் அதிகம்..அப்படியே பொறுமையாக இருந்தவர்களில் அவன் தேநீர் பற்றி மட்டும் நிறைய பேசுவான்..

இதில் மீதி பாதி பேர்கள் இவனை கிறுக்கன் என்று முத்திரை குத்தி கோபமாக சென்று விடுவார்கள்…ஆக மொத்தம் இவனுக்கானவள் இவன் எதிர் பார்த்த மாதிரி இன்னும் அமையவில்லை..

அப்பாடா எப்படியோ அவன் தேநீர் தயாரிக்க சென்ற இடைவெளியில் உங்களுக்கு அவனை பற்றிய தகவல்களை சொல்லி விட்டேன்.. உங்களில் யாரேனும் முயற்சி செய்து பாருங்கள்..அவனை திருமணம் செய்ய..

தற்போது அவன் வந்து விட்டான்.. பிறகு பேசலாம்…

அப்படியே கிருஷ்ணா சோஃபாவில் அமர்ந்து கொண்டு அந்த தேநீரை பருகினான் மிடறு மிடறாக..

வாசல் கதவு திறந்து இருந்ததால் அவன் சாலையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்து கொண்டே அந்த தேநீர் கோப்பையில் உள்ள தேநீரை பருகி முடித்து அதை அப்படியே அங்கிருந்த டீபாயில் வைத்து விட்டு விட்டு வெறுமனே கைகளை தலைக்கு மேலே கட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தான்…

சாலையில் பரபரப்பாக செல்பவர்களை மிகவும் நிதானமாக ரசித்து பார்த்தான்.. அவனுக்கு சிறிது சிரிப்பு வந்தது… நேற்று வரை நான் கூட இப்படி தான் சாலையில் மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டு இருந்தேன்… ஆனால் இன்று என் நிலை அமைதியாக ஓரிடத்தில் உட்கார வைத்து இருக்கிறது…ஏதோ அந்த நிறுவனத்தின் முக்கால் வாசி பங்கு தன் பெயரில் அவர்கள் எழுதி வைத்து விட்டதாக அல்லவா நான் ஓடிக் கொண்டிருந்தேன் என்று தற்போது அந்த ஓட்டத்தை நிறுத்தியவுடன் நிதர்சனம் புரிந்தது..

ஆனால் நல்ல வேலையாக எந்த கடனும் இந்த வேலையை நம்பி வாங்கவில்லை…

அவர்கள் கை நிறைய சம்பளம் கொடுத்தார்கள்…

இந்த கடன் வேண்டுமா அந்த கடன் வேண்டுமா என்று ஒரு நாளில் எத்தனை அலைபேசி அழைப்புகள் அதை எல்லாம் மிகவும் நிதானமாக பதில் சொல்லி கடந்தான்… அது அவனுக்கு வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த புரிதல் கொண்ட மனிதன் என்பதை காட்டியது…

தற்போது வங்கியில் வீட்டு செலவுகள் போக ஒரு பெரிய தொகை இருந்தது..

அதனால் இன்னும் சில மாதங்களுக்கு ஏன் ஓரிரு வருடங்களுக்கு போதும்.. ஏனெனில் அவன் வீட்டை கூட நகர் புற வெளியில் இயற்கை சூழ்ந்த ஒரு எளிமையான வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தான்.. ஆனாலும் சாலையில் எப்போதும் பரபரப்பு உள்ள வீடு அது…

அதனால் வாடகை நகர் புறத்தை விட மிகவும் குறைவு..

தற்போது சாப்பாட்டிற்கோ மற்ற வீட்டு வாடகைக்கோ பெரிதாக பிரச்சினை இல்லை.. ஆனால் இப்படியே சும்மா இருப்பது இயலாத ஒன்று..

என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருக்கும் போது மீரா அலைபேசியில் அழைத்து இருந்தாள்..

என்ன கிருஷ்ணா என்ன செய்கிறாய் அலுவலகத்தில் இருந்து வந்து விட்டாயா என்று கேட்டாள்..

ஆமாம் மீரா அலுவலகத்தில் இருந்து வந்து விட்டேன்..இனி அலுவலகம் செல்ல தேவையில்லை என்று சொன்னான்…

அப்படி என்றால் வீட்டில் இருந்து வேலை செய்ய சொல்லி விட்டார்களா என்று ஆவலாக கேட்டாள்..

இல்லை இல்லை கொஞ்சம் பொறுமையாக கேள்..வேலை போய் விட்டது என்றான்..

என்ன வேலை போய் விட்டதா.. உங்கள் நிறுவனம் தானே மிகவும் பிரசித்தி பெற்ற டாப் டென் நிறுவனத்தில் எப்போதும் இருக்கும்.. அந்த நிறுவனத்தில் ஆள் குறைப்பு நடவடிக்கையா என்று ஆச்சரியமாக கேட்டாள்…

ஆம் மீரா பெரிய பெரிய நிறுவனங்கள் தான் ஏதோவொரு சாக்கு சொல்லி ஆட் குறைப்பு நடவடிக்கைகள் செய்கிறார்கள்.. இதில் என்ன அதிசயம் என்று கேட்டான்…

சரி சரி நீ இது பற்றி பெரிதாக யோசிக்காதே.. நான் எங்கள் நிறுவனத்தில் ஏதாவது காலி பணியிடங்கள் உனக்கு தகுந்தார் போல உள்ளதா என்று பார்க்கிறேன்..நீ இது பற்றி பெரிதாக யோசிக்காதே..சரியா என்று கேட்டாள்..

சரி மீரா.. நான் அது பற்றி சிறிது மன வருத்ததோடு தான் இருந்தேன்.. ஆனால் தற்போது அந்த வருத்தம் இல்லை.. ஏனெனில் எனக்கு இந்த இடைவெளியை கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கிடைத்த வாய்ப்பாக நினைக்கிறேன்…

ஹே.. மிகவும் மகிழ்ச்சி..நாளை நான் விடுப்பு சொல்லி விட்டு வருகிறேன்.எங்காவது போகலாம் நீ முடியாது என்று சொல்லி விடாதே என்று உற்சாகமாக கேட்டாள்…

அதெல்லாம் முடியாது என்று சொல்ல மாட்டேன்..நீ இல்லை என்றாலும் நான் எங்காவது எனது இரு சக்கர வாகனத்தில் அது எங்கே போகிறதோ அங்கே போகலாம் என்று தான் நினைத்து இருந்தேன் என்றான் கொஞ்சம் சிரித்துக்கொண்டே..

சரி டா.. நான் நாளை வருகிறேன்..

நீ இரவு உணவு தயாரிக்க போ என்றாள்..

நான் அதெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்..நீ ஒழுங்காக வேலை முடிந்து சாலையில் எவர் மீதும் உன் வண்டியை இடித்து விடாமல் வீட்டுக்கு போ என்றான்..

உனக்கு என்னிடம் வம்பு இழுத்து பேசாமல் உறக்கம் வராது அப்படி தானே கிருஷ்ணா.. சரி நீ போனை வை என்று சொல்லி பொய் கோபம் கொண்டு அலைபேசியை தொடர்பை துண்டித்தாள்..

எப்படியோ அவனது நீண்ட கால பள்ளி தோழி வெகு நாட்களுக்கு பிறகு அலைபேசியில் அழைத்து பேசியதில் அவனது வேலை பறி போனதால் ஏற்பட்ட மனக் காயம் ஆறியது போல இருந்தது..

அப்படியே தனக்கு பிடித்த ரேடியோ மிர்ச்சி வானொலி ஒலிபரப்பை கேட்டுக் கொண்டே இரவு உணவாக சப்பாத்தி மாவு பிசைய ஆயத்தமானான்…

வானொலியில் வாகாய் வாகாய் வாழ்கிறேன்..என்ற வரிகள் கேட்டது…

உண்மை தானே.. இந்த பிரபஞ்சம் எவ்வளவு அற்புதமான பேரழகை தனக்குள் புதைத்து வைத்து உள்ளது.. அந்த புதையல் எவ்வளவு ஆசுவாசமான உணர்வுகளை நமக்கு இலவசமாகவே அளிக்க காத்து இருக்கிறது..அதை விடுத்து எப்போதும் ஓட்டம் ஓட்டம் என்று யாருக்காகவோ ஓடினால் எப்படி இதை அனுபவிப்பது… கொஞ்ச நாள் இந்த பிரபஞ்சத்தின் அழகை மிகவும் நிதானமாக பருக வேண்டும்.. அது நான் நேசித்து கிடக்கும் தேநீரின் சுவையை விட பிரமாண்டமானது…என்று நினைத்தபடியே மாவை பிசைந்து முடித்து விட்டு குருமா வைக்க தயாரானான்…

அங்கே இரவு மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது.. கிருஷ்ணா மன பாரமோ மெல்ல மெல்ல குறைந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *