மகிழ்ச்சி மற்றும் பேருவகைக்கான வழி
பெரும் பணக்காரர் ஒருவர், உண்மையான மகிழ்ச்சி மற்றும் பேருவகைக்கான வழி எது என்பதைத் தேடிக்கொண்டிருந்தார். அதைச் சொல்பவருக்கு எவ்வளவு தொகையையும் பரிசாகத் தர அவர் தயாராக இருந்தார். ஒவ்வொரு குருமார்களாகத் தேடிச் சென்று கேட்டும், உரிய வழியை எவராலும் சொல்ல இயலவில்லை.

அதன் பிறகு, ஒரு பை நிறைய வைரங்களை எடுத்துக்கொண்டு, பல்வேறு வகையான குருமார்களை நாடிச் சென்றார். “மகிழ்ச்சி மற்றும் பேருவகைக்கான ரகசியத்தை நீங்கள் எனக்குச் சொன்னால், இந்தப் பையில் உள்ள வைரங்கள் முழுவதையும் உங்களுக்குத் தருகிறேன்” என அவர்களிடம் சொல்வார். அப்போதும் அவருக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை.
ஜென் குரு ஒருவரிடமும் அதே போல சென்று, சொன்னார். அப்போது ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. குரு அந்தப் பையை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
பணக்காரரால் அதை நம்பவே இயலவில்லை. எவ்வளவு பெரிய ஜென் குரு அவர்! புகழ் பெற்ற ஞானி. துறவியான அவர், இப்படி வைரங்களின் மீது பேராசை கொண்டு, அதைத் திருடிச் சென்றுவிட்டாரே!
“அந்தக் கள்ளத் துறவியைப் பிடியுங்கள்! அவன் ஒரு மோசடிப் பேர்வழி. ஏமாற்றுக்காரன். அவன் எனது வைரங்களைத் திருடிக்கொண்டு ஓடுகிறான். பிடியுங்கள் அவனை!” எனக் கூச்சலிட்டபடி, குருவைத் துரத்திக்கொண்டு ஓடினார்.
குரு உள்ளூர்க்காரர் என்பதால் அவருக்கு அந்த ஊரில் உள்ள சந்து – பொந்துகள், மூலை – முடுக்குகள் யாவும் அத்துபடி. எனவே, அவர் எங்கே ஓடி ஒளிந்து கொண்டார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பணக்காரர் சோர்ந்துபோய், “நான் வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து முழுவதும், ஒரு நிமிடத்துக்குள் பறிபோய்விட்டதே…! எனது வாழ்க்கையே வீணாகிவிட்டதே…! இனி நான் என்ன செய்வேன்…?” என்று புலம்பியபடி திரும்ப வந்தார்.
வருகிற வழியில் அந்த ஜென் குரு, முன்பு அமர்ந்திருந்த அதே மரத்தடியில் இப்போதும் அமர்ந்திருந்தார். பணக்காரரின் அந்த வைரப் பை, குருவின் முன்னே வைக்கப்பட்டிருந்தது.
அதைக் கண்ட அவர், ஓடோடிச் சென்று, வைரப் பையை எடுத்து, நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொண்டு, “என் செல்வம் திரும்பக்
கிடைத்துவிட்டது! என் வாழ்க்கை திரும்பக் கிடைத்துவிட்டது!!” என மகிழ்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.
ஜென் குரு அமைதியாக, “இதுதான் மகிழ்ச்சிக்கும், பேருவகைக்குமான வழி!” என்றார்.
இருப்பதை வைத்து திருப்திப்படும் மனம் ஆசீர்வதிக்கப்பட்டது. அத்தகையவர்களே நிரந்தரமான மகிழ்ச்சியையும், பேருவகையையும் அடைகிறார்கள். எதிலும் திருப்தியற்ற மனம் சபிக்கப்பட்டது. அவர்களால் ஒருபோதும் நிரந்தரமான மகிழ்ச்சியையும் பேருவகையையும் அடைய இயலாது.
மேலும், நம்மிடம் உள்ளவற்றின் மதிப்பு, அது இருக்கும்போது நமக்குத் தெரியாது. அதை இழந்த பிறகுதான் தெரியும். எனவே, நம்மிடம் உள்ளவற்றின் மதிப்பை, அது உள்ளபோதே உணர்ந்து, அவற்றில் திருப்தியடைவோம். மகிழ்ச்சியும் பேருவகையும் தானே வரும்.