மகளும் மருமகனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 7,534 
 
 

“வாங்க, வாங்க , எப்ப வந்தீங்க? கனடாவிலிருந்து” கண்மணி யாரு வந்திருக்கிறது பாரு..!” என்றார் மாதவன். “வாங்க தம்பி, வா பத்மினி” என்று முகத்தில் புன்னகையுடன், கையில் சாம்பார் கரண்டியுடனும் சமையலறையிலிருந்து வெளியே வந்து அழைத்தாள் கண்மணி. கண்மணியின் இளைய சகோதரி பத்மினி.

“என்னம்மா கையில் கரண்டியோடு வர்றே பயமா இருக்குமா…!” என்றார் கிண்டலாக, சிரித்தபடியே, பத்மினியின் கணவர் செந்தில் நாதன்.

“இல்ல தம்பி, இவரு அவசரமா கூப்பிட்டதால அப்படியே வந்துட்டேன்” என்றாள் கண்மணி “. “பரவால்லம்மா சும்மா தமாஷா தான் கேட்டேன்?” என்றார் செந்தில் நாதன்”.

“எப்ப வந்தீங்க..?, கனடாலிருந்து? சாயா எப்படி இருக்கா? அவ பொண்ணுங்க இரண்டும் பேரும் எப்படி இருக்காங்க? என்ன படிக்கிறாங்க?” என்று ருக்மணி அவள் பங்குக்கு தொடர்ந்து கேட்க,

“பேத்திங்க இரண்டு பேர்ல, ஸ்ரீயா 6th, மாயா 4th” என்றாள் பத்மினி.

“வந்து மூணு நாள் ஆகுது, வீடு வீடாக இல்லை, சுத்தம் செய்வதற்கே இரண்டு நாட்கள் ஆகி விட்டது, அதுவும் மூன்று பேரை வைத்து சுத்தம் செய்தேன்னா வீடு எப்படி இருந்திருக்கும்ன்னு பாருங்கோ? பூட்டியிருந்த வீட்டுக்குள்ள எப்படி தான் அவ்வளவு தூசிகளும், ஒட்டடைகளும், சேர்ந்ததோ தெரியல? ” என்றார் செந்தில் நாதன் சற்று கவலையுடன்.

“நீங்க கனடா போய் நாலு வருஷம் இருக்குமா..?” என்றேன்.

“ஆமாம் நாலு வரூஷத்துக்கு மேலேயே ஆகுது” என்றார் செந்தில்.

“ஆனா ஒன்னு, சுத்தம் செய்வதற்கு இங்கே ஆட்கள் கிடைக்கிறார்கள்”. ‘கனடாவில் இது போன்ற வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் கஷ்டம்’ “ஆனால் இங்கிருப்பது போல் அங்கே அவ்வளவு தூசிகள் சேராது”. ‘அதனால் நாமே மாதத்தில் ஒரு நாள் சுத்தம் செய்துக் கொள்ளலாம்” என்று பேசி முடித்த செந்தில் நாதன்,

‘எங்கள் வீட்டை தன் கண்ணாலேயே சுற்றியுள்ள இடங்கள், பொருட்கள் அனைத்தையும் பார்த்தார்’. “உங்கள் வீட்டு சுவர் , தரை, சோபா, சேர், டிவி, lights எல்லாமே இவ்வளவு clean ஆ இருக்கே எப்படி…? என்றார் ஆச்சரியத்துடன்…!”

என் கணவர் என்னை பார்த்து, தன் ஷர்ட் காலரை தூக்கி விட்டு எப்படி…? என்றார்.

உடனே, நான் “ரிடையர்டு ஆன இவருக்கு வீட்டில் வேற என்ன வேலை?” Cleaning எல்லாம் இவர் வேலை தான். “எப்ப பார்த்தாலும் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருப்பார்”. “காலையில் 6.00 மணிக்கு எழுந்தார்னா, பல்லை துலக்கி விட்டு, வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார். மணி பத்து ஆகும்.. குளிச்சிட்டு டிபன் சாப்பிட,” இவர் வந்து சாப்பிட்ட பிறகு நான் சாப்பிடணும், அதுக்காவது சீக்கிரம் வாங்க என்றால் வர மாட்டார்”. “அரை குறையா விட்டுட்டு என்னால் வர முடியாது”, “உனக்கு பசி எடுத்தா நீ சாப்பிடு, யாரு வேண்டாம்ன்னு..!” சொன்னது..? என்பார்.

‘பத்மினி செந்தில் நாதனை ஓர கண்ணால் பார்த்தாள்’.

“ஏம்மா உனக்கு பசி எடுத்தா நீ சாப்பிட வேண்டியது தானே..? அவருக்காக நீ ஏன் wait பண்ணணும் “என்று செந்தில் நாதன் கேட்க, இல்ல தம்பி… இந்த வீட்டல இருக்கிறது நாங்க இரண்டு பேர், பேசி கொண்டே சாப்பிட்டால், சாப்பாடு எப்படி இருக்குதுன்னு நான் கேட்க… அரை உப்பு சாப்பாடு எப்படி? இருந்தால் என்ன? என்று அவர் சொல்ல, எனக்கு ஒரு திருப்தி வரும்..! அப்பாடி, இன்றும் உப்பு, காரம் சரியாகத்தான் போட்டிருக்கேன் என்று.

“உனக்கும் அதே சாப்பாடு தானா..? என்று பத்மினி கேட்க,

“நீ வேறம்மா” , “அவ சாம்பார், ரசம், மோர் பொரியலை எல்லாம் தனியா எடுத்து வைச்சு, “அதில் அவளுக்கு தேவைப்படும் அளவு உப்பை சேர்த்துப்பா…! ” அப்பளம் ஒரு தட்டு நிறைய வறுத்து வைச்சுப்பா..

பின்ன எனக்கு என்ன? உங்களைப் போல BP, Sugar, Cholestrol ல்லாமா இருக்கு என்று கண்மணி கேட்க..

அவருக்கு High BP, Sugar, Cholesterol எல்லாம் இருக்கு. தினமும் இவருக்கு BP, Sugar test எடுத்து கனடாவில் இருக்கிற சுந்தருக்கு அனுப்பனும், ஒரு நாள் மறந்தா கூட மறுநாள் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ? நேற்று ரிப்போர்ட்டை ஏம்மா அனுப்பல.. என்பான்?

“ஏன் இன்னைக்கு? அப்பாக்கு BP அதிகமா? ஏதாவது Hard work பண்ணாறா? இல்ல வாக்கிங் போகலையா? என்று தொடர்ந்து கேட்டுனே இருப்பான்”,

“இல்லப்பா மறந்துட்டேன் என்றால்”, “உடனே தினமும் ராத்திரி 8.00 மணிக்கு அலாரம் வைச்சு ரிப்போர்ட்டை அனுப்புங்கன்னு பல தடவை சொல்லிட்டேன், இரண்டு பேருமே அந்த நேரத்தில் சரின்னு சொல்றீங்க, ஆனா செய்ய மாட்டீர்கள்” என்று சற்று கோபமாக பேசுவான்.

“செந்தில் நாதன் காபி சாப்பிடற பழக்கம் இருக்கா…? Sugar போட்டா.. போடாமலா..? என்றேன் “,

“ஏம்பா அப்படி கேட்கிறே? காலையில் ஒன்னு, மாலையில் ஒன்னு, ஒரு நாளைக்கு இரண்டு தான், அதுவும் அரை சுகருடன் என்று செந்தில் நாதன் கூற”,

நீயும் diabetic patient தானா…? என்று கேட்டேன்.

“இல்லப்பா சர்க்கரை கொஞ்சமா சாப்பிட்டா வயதான காலத்தில் கஷ்ட பட வேண்டாமே.. அதுக்கு தான் என்றார்” செந்தில்.

உங்களுக்கு என்ன வயசு? இப்ப என்றேன்

ஐம்பது ஆகுது என்றார் செந்தில்.

“டாக்டர் இல்லையா? அதுதான் எச்சரிக்கையாக இருக்கீங்க என்றாள் கண்மணி”.

“கண்மணி என்ன பேசினே இருக்கே? போய் ஸ்டாரங்கா மூணு காபி போட்டு எடுத்து வா என்றேன்” .

“என்ன மூணா..? உங்க கோட்டா காலைல முடிஞ்சு போச்சு, இதோட நாளைக்கு காலைல தான் என்றாள் கண்மணி”.

“எனக்கு வேண்டாம் கண்மணி, இவங்க இரண்டு பேருக்கு மட்டும் one by two கொடு போதும் ” என்றாள் பத்மினி.

“மணக்க, மணக்க காபி வந்தது, “டம்ளரை வாங்கி எட்டி பார்த்தேன். “இது one by two வா இல்ல.. One by four ஆ என்றேன்?.

“போதும், போதும் குடிங்க என்றாள் கண்மணி”. ‘செந்தில் நாதனும், பத்மினியும் சிரித்தனர்’.

“சென்னை பில்டர் காபி, காபி தான் மாதவன், இது போல ஒரு நாளும் சிங்கப்பூரில் கிடைக்காது என்றார் காபியை ருசித்துக்கொண்டே” . “இந்த மாதிரி டிகாஷனும், காபியும் போட எல்லோருக்கும் வராது மாதவன்” என்று செந்தில் மீண்டும் காபியை பற்றி கூற ‘கண்மணிக்கு பெருமை பிடிபடவில்லை, புன் முறுவல் பூத்தாள்’.

“அப்பறம் மதியம் இங்கேயே சாப்பிடுங்க என்றேன்..! அதுக்கென்ன..?தாராளமா..!
இன்னைக்கு மொத்தம் உங்க வீட்டில தான், ராத்திரி தான் கிளம்புவோம்” என்றார் செந்தில் நாதன் சிரித்துக் கொண்டே..

“வா, பத்மினி சமையலை கவனிக்கலாம் என்றாள் கண்மணி”. இருவரும் சமையலறைக்குள் போக..

“என்னப்பா கனடால பொண்ணும் மாப்பிள்ளையும் என்ன சொல்றாங்க”? எப்படி பொழுது போகுது? என்று கேட்டேன்.

சமையலறையை எட்டி பார்த்தார். மாடிக்கு போய் பேசலாமா என்றார், செந்தில் நாதன். மாடிக்கு சென்றோம். காற்று நல்லா இருக்கப்பா…! என்றார்.

“பின்னர் எனக்கு கனடா வாழ்க்கை பிடிக்கலப்பா…! ஏதோ இவளுக்காக தான் அங்கே போனேன்”. என் மகள் அவ அம்மாவை ரொம்ப பாசத்துடன் ஒரு ஆறு மாசம் வந்து இருந்துட்டு போம்மான்னு அப்படியே உருக, உருக பேசி அழைத்தாள். ” பத்மினியும் ஆறு மாதம் தானே..? வாங்க பேத்திகளோடு சந்தோஷமாக இருக்கலாம் என்று என்னை கட்டாயப் படுத்தி அழைத்து சென்றாள்” .

“எனக்கு இங்கிருந்த கிளினிக்கை மூடி விட்டு செல்ல மனமேயில்லை. நல்ல வருமானம், அது மட்டும் இல்ல, என் பொண்ணை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்,. சோம்பேறி. இங்க இருக்கும் போது வீட்டு வேலை ஒன்னு கூட செய்யமாட்டா..! பத்மினி தான் எல்லா வேலையும் செய்வா..! “அவ dress கூட இவள் தோய்ச்சி, மடித்து, iron பண்ண கொடுத்து வாங்கி வைக்க சொல்லுவா. அவ்வளவு சோம்பேறித்தனம்”.

“நான் கனடாவுக்கு கிளம்பும் போதே சொன்னேன்…!

“உன் மக உன்னை பாசமா கூப்பிடல, வேஷம் போடறா…! கனடாவுக்கு போக வேண்டாம்.. வீட்டு வேலைக்காக தான் கூப்பிடுறா என்று “, ‘இவ என் பேச்சை கேட்கல..!’

“ஏங்க, அவ கனடா போய் 8 வருஷம் ஆகுது. எல்லாம் திருந்தியிருப்பா…
அவங்க மாமனார் மாமியார் வேற அங்கே இருக்காங்க.. என்று மகளுக்கு பரிந்து பேசினாள்”, “அங்கே போன பிறகு தான் தெரிஞ்சது…!, மாமனார், மாமியார் கனடாவில் வேற ஊர்ல இருக்காங்கலாம்..! இவ கூட அவங்க இல்லை என்று “

“என் மகளும் மாப்பிள்ளையும் காலையில் 8.00 மணிக்கு தான் எழுந்து வெளியே வருவாங்க. பசங்களுக்கு 7.00 மணிக்கு வீட்டிற்கு முன் பஸ் வந்திடும், 8.00 மணிக்கு ஸ்கூல்ல இருக்கணும் . அதனால நாங்க இரண்டு பேரும் 5.00 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு டிபன், சாப்பாடு, தயார் செய்து விட்டு , பசங்களை 6.00 மணிக்கெல்லாம் எழுப்பி குளிக்க வைத்து, டிரஸ் பண்ண வைத்து, டிபன் சாப்பிட வைத்து அவங்களுக்கு, snacks box, water bottle, lunch box ready பண்ணி 7.00 மணிக்கு பஸ்ல அனுப்பிட்டு அப்பறமா தான் காபியே குடிப்போம்ன்னா பாரு” . “8.00 மணிக்கு மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் காபி கொடுக்கணும், அப்பறமா டைனிங் டேபிள்ள டிபன் ரெடியா இருக்கணும், இருவருக்கும் Lunch Box ready பண்ணி அவங்க bag ல போட்டு கொண்டு வந்து டேபிள்ள வைக்கணும்”.

“ஆக மணி 9.00 ஆகிடும். “அவங்க இரண்டு பேரும் கிளம்பி போன பிறகு அவளுக்கு மயக்கமா இருக்குன்னு சொல்லி அப்படியே சோஃபாவில் படுத்திடுவா.. “எனக்கும் அவளை பார்த்தா பாவமா இருக்கும். நான் கிச்சனுக்கு போய் எல்லாம் சுத்தம் பண்ணிட்டு, அவளை எழுப்பி, நாங்க டிபன் சாப்பிட மணி பத்து ஆகிடும்…

அதுக்கப்புறம், நான் கிளினிக் போய் மதியம் 2.00 மணிக்கு வருவேன். இரண்டு பேரும் சாப்பிட்டு விட்டு ஒரு குட்டி தூக்கம் போடுவோம். 5.00 மணிக்கு பேத்திங்க வந்திடுவாங்க.. உடனே நான் கிளினிக்கு கிளம்பிடுவேன்.

மறுபடியும் evening snacks, coffee பேத்திகளுக்கு பத்மினி தான் செஞ்சு தரணும் . வெளியே விக்கற snacks பசங்களுக்கு நல்லா இருக்காதாம் , என்பது என் மாப்பிள்ளையின் வாதம்.

“நாங்க அங்க போற வரைக்கும் break fast snacks, எல்லாம் வெளியே இருந்து தான் எல்லோருக்கும் வாங்கி சாப்பிட்டிருக்காங்க…”

பசங்க சொல்லுவாங்க, “பாட்டி நீங்க நல்லா சமைக்கிறீங்க… சாப்பிட ரொம்ப டேஸ்டா இருக்கு..!, நீங்க இங்க வந்த பிறகு தான் எங்களுக்கு சாப்பிடவே தோணுதுன்னு”

“ஏன் உங்க அம்மா சமைக்க மாட்டாளா..? என ஒரு நாள் பத்மினி கேட்க,

“பெரிய பேத்தி ஸ்ரீயா..பாட்டி நான் சொன்னேன்னு அம்மா கிட்ட சொல்லாதீங்க…!” நாங்க காலையில breakfast, snacks எல்லாம் வெளியே ஆர்டர் பண்ணி தான் வாங்கி சாப்பிடுவோம். மதியத்துக்கு மட்டும் தான் அம்மா சமைப்பாங்க, சாம்பார்ல ஒரு நாளைக்கு உப்பு கம்மியா இருக்கும், ஒரு நாளைக்கு அதிகமான காரம் இருக்கும் , vegetables வேகாது, rice half boil ல தான் இருக்கும் . “எங்க டாடி மட்டும் நான் கேன்டீனில் சாப்பிட்டுக்கிறேன்னு நைசா கிளம்பிடுவாரு”, “எங்க மூணு பேருக்கும் Night dinner -க்கு டாடி வரும் போது பார்சல் வாங்கி வந்திடுவாறு, சூடாவே இருக்காது.. smell வேற வரும்” . ஆனா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க பேசாம சாப்பிடுவாங்க…” நாங்க இரண்டு பேரும் நைசா தூங்க போய்விடுவோம், என்று கூறினாள்.

ஆனால், நாங்க அங்க போனவுடனே எல்லாத்தையும் நிறுத்திட்டு, பத்மினி தலைமேல கட்டிட்டாங்க.. பசங்கள பார்த்தாலும் பாவமாத்தான் இருக்கு.. அவ எவ்வளவு தான் வேலை செய்வாள்…?

“காலைல 5 மணியிலிருந்து 9 மணி வரையில், பின்னர் மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் நின்று கொண்டு வேலை பார்த்து, பார்த்து, இந்த நாலு வருஷத்தில் அவளுக்கு, முட்டி வலி, குதிகால் வலி, கை குடைச்சல், என தினமும் அவ படற கஷ்டம் எனக்கே பொறுத்து கொள்ள முடியல..! வலியை தாங்கற அவளுக்கு எப்படி இருக்கும்..?”

Saturday, Sunday – ல அவங்க நாலு பேர் மட்டும் வெளியே கிளம்பிடுவாங்க. ஒரு வார்த்தைக்கு கூட நீங்களும் வாங்கன்னு சொல்ல மாட்டாங்க, இரண்டு பேருமே. காலையில் போனா திரும்பி வர ராத்திரி மணி 12 ஆகும். நாங்க இரண்டு பேரும் தூங்காமல் இருந்து, கதவை திறந்து விடணும். ஒவ்வொரு வாரமும் இதையே தான் செய்வாங்க. “ஏம்மா ராத்திரி இவ்வளவு லேட்டா வர்றீங்களே…?” “எங்களுக்கு தூக்கம் கெட்டு போகுது சொல்ல, சொல்ல காதிலேயே வாங்க மாட்டாங்க இரண்டு பேருமே..” ருமூக்கு போய் கதவை சாத்திப்பாங்க”.

“பசங்கள நாங்க தூங்க வச்சிட்டு நாங்க தூங்க போகணும், அப்ப மணி 1.00 ஆயிடும், மறுநாளும் அதேமாதிரி காலைல கிளம்பி போயிடுவாங்க.. ராத்திரி 12 மணிக்கு மேல தான் வருவாங்க..”.

“நாங்க என்னமோ ஆதரவு இல்லாமல் இவங்கள நமபி இங்கே வந்த மாதிரி நடந்துப்பாங்க”. “என் பொண்ணு தான் அப்படின்னா…!” மாப்பிள்ளை அதுக்கு மேலே..!

“பேத்திங்க இரண்டு பேரும் பாட்டி நீயும், தாத்தாவும் எங்க கூட வாங்களேன் என்று…!, “உடனே மாப்பிள்ளை டைம் ஆகுது… போய் கார்ல ஏறுங்க… என்று அதட்டலுடன் கூறுவார்”.

“பொறுத்து, பொறுத்து, பார்த்தோம் பேத்திகளுக்காக பொறுமையுடன் இருந்தோம். பொறுத்தது போதும், பொங்கி எழு என்பார்களே..!, அது போல. எங்கள் இருவரின் விசா முடிய இன்னும் இரண்டு மாதம் தான் உள்ளது. யோசித்து பார்த்தோம்.

“சாயா, மாப்பிள்ளை, பேத்திகள், இல்லாத நேரம் பார்த்து இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். “பத்மினியின் இயற்கை வைத்தியம் பார்க்க சென்னைக்கு சென்று ஆறு மாதம் கழித்து வருவதாக கூறி விட்டு புறப்படுவது” என்று. நான் என் கிளினிக்கில் Resigning letter கொடுத்தேன். காரணம் கேட்டார்கள், என் மனைவியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை, எனவே உடன் இருந்து கவனிக்க வேண்டியுள்ளது என்று பொய்யான காரணம் கூறினேன். Resigning letter ஐ ஏற்று கொண்டார்கள். “நண்பர் ஒருவரிடம் flight ticket book பண்ண சொன்னேன்” . அதையும் அவர்களிடம் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் சொன்னேன்.

“என்ன தீடீர்ன்னு..? இப்படி சொன்னா எப்படி”? அப்ப உங்க வேலை? என்றார் மாப்பிள்ளை.

“வேலையை இரண்டு மாதத்திற்கு முன்பே ரிசைன் பண்ணிட்டதா சொன்னேன்” .

“ஏன் இதை என் கிட்ட இத்தனை நாளாய் சொல்லவில்லை? என்று கேட்டார்.

“நீங்க என்னிக்காவது இந்த நாலு வருஷத்தில ஒரு நாளாவது நின்னு பேசியிருக்கீங்களா..? “நாங்க வந்த அன்னிக்கு வாங்க… எப்ப வந்தீங்கன்னு? கேட்டதோடு சரி… இன்னிக்கு வரைக்கும் சாப்பிட்டீங்களா? உடம்பு எப்படி இருக்கு? ஊர் எப்படி இருக்கு? வேலை எப்படி இருக்கு? ஏதாவது ஒரு வார்த்தை கேட்டீங்களா? இல்ல.. சாயா கேட்டாளா…? நீங்க போவதும், வருவதுமாக உங்க வேலையை மட்டும் பார்க்கறீங்களேத் தவிர,

“நீங்களோ? இல்ல.. என் மகளோ..? ” எங்க இரண்டு பேர் உடல்நிலையை பற்றியாவது என்னிக்காவது கேட்டு இருக்கீங்களா?” போன மாதம் அவளுக்கு ஒரே இருமல், விடாமல் 15 நாளா இருமினே இருந்தாள். உங்க பசங்க இரண்டு பேரும், ஏன் பாட்டி இருமினே இருக்கீறீங்க? தாத்தா ஏதாவது மருந்து கொடுங்களேன்.. என்று பாசமாக கேட்டார்கள். பசங்களுக்கு இருக்கிற அந்த பாசம், உங்க இரண்டு பேர் கிட்ட கொஞ்சம் கூட இல்லையே.. தொடர்ந்து மருந்து கொடுத்து குணப்படுத்தினேன் என்றேன் சற்று கோபமாக..”

“ஏங்க.. என்று பத்மினி என்னை சமாதானபடுத்தினாள்” .

“நீங்க தான் டாக்டர் ஆச்சே உங்க கிட்ட போய் நான் எப்படி.. கேட்பது? என்றார் மாப்பிள்ளை.

” டாக்டர்ன்னா உடம்புக்கு எதுவும் வராதா? என்றேன்”. பின்னர் நான் நல்லா தான் இருக்கேன்..!, ” உங்க மாமியார்க்கு தான் இருமல், சளி, குதிக்கால் வலி, முட்டி வலி என நாளுக்கு நாள் அதிகமாயின்னே போகுது. அவளால நின்று கொண்டு வேலை செய்ய முடியல” . “எனக்கு தெரிந்த treatment எல்லாம் செஞ்சிட்டேன், ஒண்ணும் சரியாகல”. என்றேன்.

“என் பொண்ணு ஒரு வார்த்தை கூட ஏன் போறீங்கன்னு கேட்கல …” நானும் அவ கிட்ட பேசல.

“அதனால், பத்மினிக்கு இயற்கை வைத்தியம் செய்ய வேண்டும் என்று காரணம் கூறி, இந்த வருஷம் tourist Visa வை ரினிவல் பண்ண வேண்டாம் மாப்பள என்று சொன்னேன்.

“நாங்கள் கிளம்பும் போது பேத்திகள் இருவரும் திரும்பி எப்ப வருவீங்க? என்று அழுகையுடன் கேட்டார்கள்”. “பாட்டிக்கு உடம்பு நல்லா ஆனவுடனே வந்திடறோம்ன்னு சொல்லி கிளம்பி விட்டோம்.”.,

“சென்னைக்கு வந்து விட்டோம்” . ஆனால் இனிமேல் அங்கே போவதாக உத்தேசம் இல்லை.

“நாலு வருஷம் ஏதோ ஜெயில் இருந்தது போல இருந்தது”. “ஏதோ பேத்திகளின் பாசத்தால் பல்லை கடிச்சிக்கினு சமாளித்தோம்”.

“என் மாப்பிள்ளைக்கு நல்ல சம்பளம், வீடு சொந்த வீடு, தவிர இரண்டு வீடு வாடகைக்கு விட்டுள்ளனர், என் பொண்ணு வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை”. “பொண்ணு வேலையை ரிசைன் பண்ணிட்டு பசங்களை பார்த்துக் கொள்ளட்டும்”.

“நாம நல்லா இருக்கும் போதே, நம்மை கவனிக்காதவங்க, நாம உடல்நிலை சரியில்லாமல் படுத்தா, எட்டி கூட பார்க்க மாட்டாங்க…!” “இங்கேயாவது சொந்தம், பந்தம் இருப்பாங்க, இல்ல எதிர்ல, பக்கத்தில இருக்கிறவங்க எப்படி இருக்கிறீங்கன்னு கேட்பாங்க?, அவசரம்ன்னா உதவியும் செய்வாங்க…..!அந்த நாட்டில யார் இருக்காங்க? நமக்கு உதவி செய்ய..?

“ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ” “உன் பையன் கூப்பிட்டான்னு பாசத்தை பார்த்து மயங்கி கனடா போனீங்க…! அவ்வளவுதான்…. எங்களை மாதிரி கஷ்டபடுவீங்க…! இந்த காலத்தில் 99% பசங்க இப்படி தான் இருக்காங்க…! “சொல்லிட்டேன்.

“நாம ஒன்னும் வருமானம் இல்லாமல் அவங்க நிழல்ல நிற்க வேண்டிய அவசியம் இல்ல, “எனக்கும் சொந்த வீடு இருக்கு, பேங்க்ல 50 lakhs டிபாசிட் வச்சிருக்கேன், அதுக்கு வட்டி வருது, தவிர நான் மறுபடியும் கிளினிக் ஆரம்பிச்சா அதலேயும் வருமானம் வரும். எங்க இரண்டு பேருக்கும் தாரளமாக செலவு செய்ய முடியும்”.

“உனக்கும் சொந்தமான வீடு இருக்கு, பென்ஷன் வரும். சந்தோஷமாக இங்கேயே இருந்துட்டு போங்க. இப்ப நாங்களும் வந்திட்டோம்!. எங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால்… உங்களை கேட்கிறோம்..! உங்களுக்கு தேவைபட்டால் எங்களை கேளுங்கள்..!

“பிள்ளைகள், உறவுகளின் பாசம் என்பது நாம, நம்ம அப்பா அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை கிட்ட இருந்த மாதிரி எல்லாம் இப்ப கிடையாது . காலம் மாறிப் போச்சு.

எல்லாம் நம்ம ஜெனரேஷனோட சரி. எல்லார் வீட்டிலேயும் ஒரு பையன் இல்ல, ஒரு பொண்ணு தான் இருக்கு. காரணம் இன்றைய கால சூழ்நிலை, வருமானம் , விலைவாசி, செலவுகள். இதெல்லாம் அனுபவிச்ச நம்மை போன்றவர்களுக்கு தான் தெரியும்.

“யார் கிட்டேயாவது சொல்லணும்ன்னு தோணிற்று, உன் கிட்ட சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்” என்று இரண்டு மணி நேரமாக பேசி ஒரு வழியாக முடித்தார். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். குடித்து முடித்தார்.

“பாத்தியா…? மாதவன் ,” இவ்வளவு நேரம் பேசினேன், எனக்கு தொண்டை வறண்டு போயிருக்கும்ன்னு நினைச்சு, நீயா தண்ணி கொண்டு வந்து கொடுத்த பாரு” இது தான் பாசம் என்பது, நம் ஊர் மண்ணின் குணம்” என்றார் செந்தில் நாதன்.

“செந்தில் நாதன் என் மகன் இரண்டு வருஷமா எங்களை அங்கே வந்திடுங்கன்னு சொல்லிக் கொண்டே தான் இருக்கிறான், ஆனா நீ சொன்ன மாதிரி எம் பையன் கிட்ட கூட சோம்பேறித்தனம் நிறைய இருக்கிறது” .

“இங்கே இருக்கும் போது ஒரு வீட்டு வேலை கூட செய்ய மாட்டான்”, “லீவானா 12 மணிக்கு தான் எழுந்திருப்பான், குளிச்சிட்டு, சாப்பிட்டு மறுபடியும் ருமுக்குள்ள போயிடுவான்” . “எனக்கு தெரிந்த வரையில் ஒரு நாள் கூட வீட்டை சுத்தம் பண்ண மாட்டான், அவன் ருமுக்குள்ள போனாலே ஒரு கெட்ட நாற்றம் அடிக்கும், எங்களையும் சுத்தம் பண்ண வி மாட்டான். “அவன் ஆபீஸ் போற நேரத்துல நான் தான் அவன் ரூமுக்கு போய் எல்லாத்தையும் தூசி போக துடைச்சி, சாம்பிராணி புகை போட்டு , அவன் அழுக்கு துணியெல்லாம் எடுத்து வந்து வாஷிங் மிஷினில் போட்டு, தோய்ச்சி, காய வைத்து, அயர்ன் பண்ணி, அவன் பீரோவில் வைப்பேன். ஆபீஸ்லிருந்து வந்தவுடன், அவன் ரூமை பார்த்துவிட்டு ஒரு thanks கூட சொல்ல மாட்டான், இது யார் வேலை? உங்களை யார் இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னது? அப்பறம் கால் வலிக்குது, கை வலிக்குதுடான்னு, முனக வேண்டியதுன்னு சொல்லிக் கொண்டே கோபமா போய் ரும் கதவை சாத்திப்பான்.

“உடனே கண்மணி நான் சொன்னா கேட்கறீங்களா?” பாருங்க …!ஆபீஸ்லிருந்து டயர்டா வந்திருப்பான். கோபத்தில் காபி கூட குடிக்காமல் போய்ட்டான் என்று அவனுக்கு பரிந்து பேசுவாள்”. “நான் அதெல்லாம் சட்ட பண்றதேயில்லை, “இப்ப கூட அவங்க அம்மாகிட்ட தான் போன்ல பேசுவான், நானா அவன் கிட்டபேசினாதான் பேசுவான்”, “அப்பான்னா எதிர்கட்சித் தலைவர்ன்னு எல்லா மகன்களுக்கும் ஒரு நினைப்பு , அவ்வளவு வெறுப்பு”.

“அவன் தான் அப்படின்னா…? அவன் பொண்டாட்டி அவனை விட மகா, மகா சோம்பேறி…! “கல்யாண ஆகி மூணு மாதம் தானே எங்க கூட இருந்தா…!, “அந்த மூணு மாசத்துல ஒரு நாள் கூட சமையலறை பக்கம் எட்டி கூட பார்த்ததேயில்லை. கண்மணி தான் தட்டுலே சாப்பாட்டை போட்டு மஞ்சு வாம்மா சாப்பிடலாம் என்று அப்படியே செல்லமா அழைப்பாள். உடனே வர மாட்டா, இரண்டு தடவையாவது அவளை அழைக்கணும், அப்ப தான் வருவாள். டேபிள்ள உட்கார்ந்து சாப்பிட்டுட்டு தட்டை எடுத்து போய் அலம்பாமல், கிச்சன் ஸின்க்கில் போட்டுட்டு அவ ருமூக்கு போய்டுவா.

“பசிச்சா வந்து சாப்பிட போறா..? “நீ என்ன அப்படி அவளை கெஞ்சி கூப்பிடறே? என நான் கேட்டாலும் “. பாவங்க அம்மா, அப்பாவை விட்டுட்டு வந்திருக்கா, நாம தான் அவளை கவனிக்கணும்னு ..! சொல்லி சமாளிப்பா”. “மூணே மாசத்துல மஞ்சு அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா, விசா கிடச்சுதுன்னு தெரிஞ்ச உடனே மறுநாளே இங்க வந்து கிளம்ப தயாராயிட்டா…!”

“கண்மணி தான் ஏங்க பையன் ஆசையா தானே கூப்பிடறான், “ஒரு தடவை போயிட்டு, ஒரு மாதம் அவன் கூட இருந்துட்டு வரலான்னு சொல்லி கேட்டுனே இருக்கா..?”, “நீ சொல்றதை பார்த்தா எனக்கு பயமா இருக்கே..! என்றேன்…!”

“சரி வாங்க, கீழே போலாம், சாப்பாடு ரெடியாகி இருக்கும்…என கூறிக்கொண்டு திரும்பி பார்த்தா…!”
“கண்மணியும், பத்மினியும் தங்கள் கைகளை கட்டியபடியே எங்களை பார்த்து முடிஞ்சுதா…? இல்ல, Lunch break ஆ என்று கண்மணி கேட்டாள்”. என்ன சொல்றே..? கண்மணி என்று நான் கேட்க, நாங்க இரண்டு பேரும், இங்க வந்து ஒரு மணி நேரம் ஆகுது….! நாங்க வந்தது கூட தெரியாம ?, அவ்வளவு சீரியஸ்ஸா பேசிக் கொண்டே இருக்கீங்க.. என்றாள்.

“எல்லாம் கனடாவில் நடந்த நம்ம நாலு வருஷ கதையை தான் மாதவன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன், அவரும் அவருடைய பையனைப் பத்தி பேசினாரு என்றார் செந்தில் நாதன்”.

“நீங்க இரண்டு பேர் பேசியது எல்லாத்தையும் கேட்டு கொண்டு தான் இருந்தோம்”. ” பாதி தவறு நம்ம மேலேயும இருக்கு “.

“சின்ன வயசில அவங்களை எந்த வேலையும் செய்ய விடறதில்லலை.. முதல்ல சின்ன பசங்க , அப்புறம் படிக்கிற பசங்க, அப்புறமா, இப்ப தான் வேலைக்கு போறாங்க, நாம வீட்டில சும்மா தானே இருக்கோம்ன்னு எல்லா வேலை களையும் நாமே செய்ய வேண்டியது…! இப்ப, பசங்களை குறை சொல்லுறது என்ன நியாயம்? என்றாள் கண்மணி”.

“கண்மணி நீ சொல்லறது வாதத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்….! ஆனால் நாம எல்லாம் அப்படியா வளர்ந்தோம்..? சொல்லு..!” என்றாள் பத்மினி.

“நாம நம்ம வீட்டில எவ்வளவு வேலை செய்தோம்..? நம்மள யாரும் இப்படி செய், அப்படி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே..! ‌ நாமாகத்தானே செய்தோம்”,

“பொறுப்பு, அக்கறை, ஒழுக்கம், நல்ல குணம் என்பதெல்லாம் தன்னால் வர வேண்டும்”, “சொல்லி கொடுத்து வருவது, படிப்பு மட்டும் தான்” என்று கூறினாள் பத்மினி.

சரியாக சொன்னே..! பத்மினி என்றேன்.

வேலூர் டி.சீனிவாசன் என் பெயர்: D. சீனிவாசன் வயது: 65 (02.1960) பணி: ஓய்வு பெற்ற்வர் Mobille No: 9382899982 தற்போதைய முகவரி: சென்னை  email ID : mvdsrinivasan@gmail.comமேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *