பௌர்ணமி நிலவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2025
பார்வையிட்டோர்: 344 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இன்னைக்கு மொட்டைமாடியில் படுத்தாலென்ன…?” 

ஹின்சி புத்தகத்தை மூடிவிட்டு அம்மாவை அதிர்ச்சியாகப் பார்த்தாள். சாதாரணமாக இயற்கை ரசனையே இல்லாத அம்மா, இன்று…. அதுவும் பௌர்ணமி தினத்தன்று மொட்டை மாடியில் படுப்போம் என்கிறாளே…! 

“வேணாம் கொசு கடிக்கும்” 

எதிர்பார்த்தது போலவே அப்பாவிடம் இருந்து சாதகமான பதில் வரவில்லை. ச்சே… இந்த ரெண்டுபேருமே மோசம். அனுபாமா வீட்டில் அடிக்கடி மொட்டைமாடியில்தான் படுப்பாங்களாம். ரமேசின் பாட்டி இன்னுமே நிலா காட்டித்தான் சோறூட்டுவதாய் ரமேஸ் சொல்லியிருக்கிறான். 

இன்று எப்படியாவது அப்பாவை தாஜா பண்ணிட வேண்டியதுதான். நகத்தை கடித்துக்கொண்டே ஹின்சி அப்பாவிடம் போனாள். 

“அப்பா…” 

நிமிராமலேயே “ம்” என்றார் சபாபதி. 

“அப்பா…” 

“என்ன வேணும்” 

சபாபதியின் மடியில் அமர்ந்து, விரல்களை மடக்கிவிட்டுக்கொண்டே ஹின்சி கேட்டாள். 

“இன்னைக்கு மட்டும் மொட்டைமாடில படுப்போமா…?” 

“வேண்டாண்டா பனி கொட்டும், கொசு கடிக்கும்… அப்பறம் செல்லத்துக்கு காய்ச்சல் வரும்” 

“நாளைக்கு ஸ்கூலும் இல்ல ப்ளீஸ்ப்பா ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்…” 

ஹின்சி கெஞ்சினாள். 

அதற்குமேலும் சபாபதியால் மறுக்கமுடியவில்லை. சரியென ஒப்புக்கொண்டுவிட்டார். 

ஹின்சி அம்மாவின் கையில் தொங்கிக்கொண்டே அவசரப்படுத்தினாள். 

“அம்மா சாப்பிட ஏதாவது கொண்டு போகலாமா…?” 

“ம்ஹும், பல் துலக்கியாச்சு” 

“தண்ணியாவது எடுத்துக்கவா? 

ஹின்சிக்கு தலைகால் புரியாத சந்தோசம். எத்தனை நாளைய கனவு. நிலாவை பார்த்துக் கொண்டிருப்ப தென்றால் அவளுக்கு அப்படியொ ரு விருப்பம். அதுவும் பௌர்ணமி நிலவு இருக்கிறதே, அதைப் பார்த்துக்கொண்டே ஆயிரம் கதை பேசலாம். தன் ரசனையை ‘பெரியத்தனம்’ என்றும் நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்கள். ரசிப்பதற்கு வயது ஒரு தடையா என்ன…? ஏனோ நிலா ஆண்டவனின் அற்புதப் படைப்பென்றே ஹின்சிக்கு தோன்றியது. 

போனமாதம் தமிழ் டீச்சர் சொல்லும்வரை, நிலா தன்கூடவே நடந்து வருவதாய்தான் ஹின்சி நினைத்துக்கொண்டிருந்தாள். ஒருமுறை எல்பிரட் மாஸ்டரிடம் இங்லிஷ் டியுஷன் முடிந்து நண்பர்களுடன் நடந்து வரும் போது எல்லோருக்குமே பெரிய சந்தேகம். 

பானு சத்தியம் பண்ணி சொன்னாள் நிலா தன் வீட்டு வானத்தில்தான் இருந்ததாம். ரமேசும் சண்டைப்பிடித்தான். பாட்டி நிலாச்சோறும் ஊட்டினாளாம். ஹின்சிக்கு தெரியும் வீட்டுக்குள் போகும் வரை நிலா தன்கூடத்தான் வந்ததென்று. ஒருவேளை வீட்டுக்குள் சென்றபின் வேறெங்கும் போயிருக்குமோ…! 

தமிழ் டீச்சர் நிலாபற்றி சொல்லிக் கொடுத்தப்பின் எல்லோருக்குமே சிரிப்பு. ரமேஸ் வந்து தலையில் குட்டிவிட்டு, 

“சொன்னேனே கேட்டியா….?” என்றான். 

“பொய் சொல்லாதடா உனக்கும் இப்பதான் இந்த விஷயம் தெரியும்” 

பானு திரும்பவும் ரமேசின் தலையில் குட்டப்போனாள். 

“சரி சரி யாரும் சண்டைபோட வேணாம். இப்போதான் உண்மை தெரிஞ்சிடுச்சே. இனி ஒவ்வொரு பௌர்ணமிக்கும் எல்லாரும் நிலா பார்த்துட்டுதான் தூங்கணும் சரியா…? 

ஹின்சிதான் இந்த ஐடியாவை சொன்னாள். எல்லோருக்கும் இது பிடித்துப்போக, ஆமோதித்து விட்டனர். 

அதற்குப்பின் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த தினம் ஸ்கூலில் நிலாக் கதைதான். நிலாவில் ஔவைப்பாட்டி தெரிந்தாளாம். விளக்கு எரிந்ததாம் ரமேஸ் பொய்யாகவெல்லாம் கதை சொல்லுவான். பானு, தான் நிலாப்பாட்டு பாடியதாய் பெருமையடிப்பாள். ஹின்சிக்கு என்ன சொல்லுவதென்றே தெரியாமலிருக்கும். இறுதியில் தானும் நிலாச்சோறு தின்றதாய் பொய்விடுவாள். 

ஒரு தடவை தாங்கமுடியாமல் அழுது கொண்டே ஹின்சி உண்மையைச் சொல்லிவிட்டாள். 

“பானு, நான் இதுவரைக்கும் நைட்ல நிலா பார்த்ததே இல்ல தெரியுமா…? எப்ப கேட்டாலும் காச்சல் வருன்னு அம்மா விடமாட்டாங்க. அப்பாவும் அம்மாவும் எப்பவுமே சண்டை போட்டுட்டே இருப்பாங்களா…. நானும் தூங்கிடுவேன்”

பானுவிற்கு ஹின் சியை பார்க்க பாவமாய் இருந்தது, அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதாய் ஹின்சி வருத்தப்படுவாள். அப்பா எது கதைத்தாலும், அம்மா எதிர்த்து பேசுவாளாம். அம்மா விரும்பும் எதையுமே அப்பா விரும்புவதில்லையாம். அம்மா நீலச்சட்டை போட சொன்னால், பச்சை சட்டைதான் அழகென்று அப்பா ஏசுவாராம். 

தனக்கு எல்லா வசதியும் இருந்தாலும் எங்கோ ஒரு குறையிருப்பதாய் ஹின்சிக்கு தோன்றும். அது என்னவென்று கண்டுப்பிடிக்க முடியாமல் அந்த பிஞ்சு தனக்குள்ளேயே வெதும்புவாள். 

எது எப்படியோ இன்றாவது அம்மாவும் அப்பாவும் ஒத்துக் கொண்டார்களே அதுவும் பெரிய சாதனைதான். ஹின்சி தன் புது பொம்மையையும் அணைத்துக்கொண்டே மொட்டைமாடிக்கு ஏறிப்போனாள். 

நிலாவில் பால்வெளிச்சத்தில் அந்தத்தெருவே குளித்து சிரித்துக் கொண்டிருந்தது. இதமான குளிர்காற்று ஆடைக்குள் ஊடுருவி மயிர்க்கால்களை கூச்செறிய செய்ய, ஹின்சி கண்களை மூடி அதை அனுபவிக்கத்தொடங்கினாள். 

“தேவையா இது இன்னைக்கு தூங்கின மாதிரிதான்” 

அப்பா முணுமுணுத்துக்கொண்டே பாயை விரித்தார். 

“நுளம்புச்சுருளை கொஞ்சம் எடுத்திட்டு வருவீங்களா….?” 

அம்மா சொன்னதை அப்பா கண்டுகொள்ளவே இல்லை. 

“உங்களைத்தான் சொல்றேன். நுளம்புச்சுருளை கொஞ்…” 

அம்மா முடிக்க முன்னமே அப்பா தொடங்கி விட்டார். 

“உனக்கு தேவையிருந்தா போய் எடுக்க வேண்டியது தானே… சும்மா இருந்த பிள்ளையை கிண்டி விட்டதும் இல்லாம, நுளம்புச்சுருளாம் நுளம்புச்சுருள்” 

“முடியல்லன்னா முடியாதுன்னு சொல்லுங்க…” 

அவர்களுக்குள் சண்டை முற்றிக்கொண்டே போனது. “ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம். வா ஹின்சி கீழ போகலாம்”. 

ஹின்சி அம்மாவின் கையை உதறித்தள்ளிவிட்டு அப்பாவிடம் போய் படுத்துக்கொண்டாள். ஒருவாறு அவர்களது வாய்த்தர்க்கமும் நின்று போனது. அம்மா ஒருபக்கம் ஒருக்களித்து தூங்குவது போல் இருந்தாள். அவள் பாவனைதான் செய்கிறாளென ஹின்சிக்கு புரிந்தாலும் அவளை எழுப்பாமல் அப்பாவுடன் மல்லாக்கப்படுத்து நிலாவை நோட்டம் விடத் தொடங்கினாள். 

ஏனோ தெரியவில்லை ஆகாயமும் நிலாவும் நட்சத்திரங்களும் கைதொடும் தூரத்திற்கு வந்துவிட்டாற் போல ஹின்சியின் மனம் கூத்தாடியது. 

“அப்பா உங்களுக்கு நிலா பிடிக்குமா….?” 

“பிடிக்கும்” 

“எவ்வளவு பிடிக்கும்…” 

“நிறையப்பிடிக்கும்” 

“நிறையன்னா எவ்வளவு” 

சபாபதிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. மௌனமாகிவிட்டார். அவளே தொடர்ந்தும் தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தாள். 

“எனக்கும் நிறைய பிடிக்கும்ப்பா. உங்களைவிட, அம்மாவை விட, பானு ரமேஸ் சீதா… இவங்களைவிட ஏன்! இந்த பொம்மையைவிட ரொம்ப பிடிக்கும். அங்கபாருங்க… நிலா எவ்வளவு அழகா, சுத்தமா பிரகாசமா… எனக்கு நிறைய்…யப்பிடிக்குதுப்பா. நிலா பார்த்துக்கிட்டே படுக்கணும், அம்மா என் தலையை கோதிட்டே கதை சொல்லணும், உங்க மடியில இருந்து சாப்பிடணும். அப்பறம் மூணுபேருமா பாட்டுப்பாடணும் ஒடிப்பிடிச்சு விளையாடணும், தலையணை சண்டை போடணும், பூக்கன்று வளர்க்கணும்… இப்படி நிறைய ஆசயிருக்குப்பா. ஆனா எதுவுமே உங்களுக்கு தெரியாது. கேட்கவும் மாட்டீங்க. பானுவோட அம்மாவும் அப்பாவும் சண்ட போடவே மாட்டாங்களாம். அவக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா…?” 

ஒரு பத்துவயது குழந்தை பேசுவதை போல ஹின்சி பேசவில்லை. ஆனால் அவள் சொன்ன அத்தனையுமே சபாபதியை யோசிக்க வைத்தது. 

“அப்பா, நிலாவுக்கும் அப்பா அம்மா இருப்பாங்களா…?” 

“சாமியோட புள்ளதான் நிலா” சபாபதி யோசித்தப்படியே பதில் சொன்னார். 

அப்போ நிலா விரும்பினதெல்லாம் சாமி கொடுப்பாரா…?” 

அவள் விடாமல் கதைத்துக்கொண்டே இருந்தாள். சபாபதி குழந்தையை மெதுவாக தன் பக்கம் திருப்பி, தலையை வருடிக்கொடுத்தப்படி அணைத்துக்கொண்டார். 

நிலா ஞாபகத்துடனேயே ஹின்சி தூங்கிப்போனாள். சபாபதியால் தூங்க முடியவில்லை. அவருக்கு நெஞ்சு வலிப்பது போல் ஒரு உணர்வு. 

இடையிடையே மூக்கை உறிஞ்சி உறிஞ்சி மெலிதாய் விம்மும் சத்தம் வேறு. சபாபதிக்கு மனைவியின் மனநிலை புரிகிறது. இவ்வளவு நேரமும் பேசிக்கொண்டிருந்ததை அவளும் கேட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். மனைவி அழுவதை சபாபதியால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவளையும் தன்னுடன் அணைத்து, ஆறுதல் சொல்ல வேண்டுமென்று… அவள் கண்ணீரை தன் இரு கைகளாலும் துடைத்து விட வேண்டுமென்று… இன்னும் இன்னும் எப்படியெல்லாமோ அவரது மனம் அவாவுகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று… ஏதோ ஒன்று அதைத் தடுக்கிறதே…! 

சபாபதிக்கு நம்பிக்கை இருந்தது. அடுத்த பௌர்ணமிக்கு முதல் அந்த ஏதோ ஒன்று செத்துப் போய் விடுமென்று. 

– சுடரொளி

– பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007, ஞானம் பதிப்பகம்,கொழும்பு.

பிரமிளா பிரதீபன் பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *