கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2025
பார்வையிட்டோர்: 6,959 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

முன்னுரை

ஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள். அத்தகைய வைபவத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அதன் மகிமையைச் சொல்லத்தரமன்று!

ஆஸ்தான கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அவருடைய சொந்த ஊராகிய நாமக்கல்லில் பாராட்டு உபசாரம் நடத்தினார்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். இவையெல்லாம் நடந்திராவிட்டால் உலகத்துக்கு எப்பேர்ப்பட்ட அமர இலக்கியம் நஷ்டமாய்ப் போயிருக்கும் என்பதை நினைத்தால் நெஞ்சு திடுக்கிடுகிறது!


நான் எழுதுகிற கதைகள் அமர இலக்கியங்கள் என்பது அடியேனுடைய தாழ்மையான அபிப்பிராயம். (தாழ்மையான அபிப்பிராயமே இப்படியிருந்தால் உயர்வான அபிப்பிராயம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா!) மற்றக் கதைகள் விஷயம் எப்படியிருந்தாலும், இந்தப் ‘பொய்மான் கரடு’ என்கிற கதை, அமர இலக்கியம் என்பது பற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.

‘அமர இலக்கியம்’ என்பது என்ன? பச்சைத் தமிழில் ‘சாகாத இலக்கியம்’ என்று சொல்லலாம். நல்லது! இந்தப் ‘பொய்மான் கரடு’ என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது; ஆனாலும் யாரும் சாகவில்லை! ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை! ஒரு பெரிய கேணி, வாயை ‘ஆ’ என்று திறந்து கொண்டிருக்கிறது; அதுவும் ஏமாந்து போகிறது! கதாபாத்திரங்கள் அவ்வளவு பேரும் கதை முடிவில் நன்றாகப் பிழைத்திருக்கிறார்கள்! இப்படிப்பட்ட கதையை ‘அமர இலக்கியம்’ என்று சொல்லாவிட்டால், வேறு எதைச் சொல்லுவது?

மேனாட்டுக் கீழ்நாட்டுப் பிரபல கதை ஆசிரியர் பலர், ‘நான் கதை எழுதுவது எப்படி’ என்பது பற்றி எழுதியிருக்கிறார்கள். என்னையும் அப்படிப்பட்ட பிரபல ஆசிரியராக்கி விடவேண்டுமென்று சதியாலோசனை செய்த சில நண்பர்கள், ‘நீர் கதை எழுதுவது எப்படி?’ என்று கேட்பது உண்டு. ‘நான் கதையே எழுதுவதில்லையே என் கையில் பிடித்த பவுண்டன் பேனா அல்லவோ எழுதுகிறது?’ என்று பதில் சொல்லிச் சமாளிப்பேன். அதைக்கூடச் சிலர் நம்புவதில்லை. ‘நீர் உண்மையில் பவுண்டன் பேனாவைக் கொண்டுதானா எழுதுகிறீர்? சில சமயம் நீர் போடுகிற போட்டைப் பார்த்தால், கடப்பாரையைப் பிடித்துக்கொண்டு எழுதுவது போலத் தோன்றுகிறதே!’ என்பார்கள்.

அது எப்படியாவது இருக்கட்டும். இந்தப் ‘பொய்மான் கரடு’ என்னும் கதையை நான் எழுதியது எப்படி என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.

ஆஸ்தான கவிஞர் ஸ்ரீராமலிங்கம்பிள்ளை அவர்களுக்கு நாமக்கல்லில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நான் சென்றபோது வழியில் ‘பொய்மான் கரடு’ என்னும் இடத்தைப் பார்த்தேன். அந்தக் காட்டின் குகையில் தோன்றிய மாயமானையும் பார்த்தேன். அந்த மாயமான் மலைக் குகையிலிருந்து என் மனக் குகையில் வந்து புகுந்து கொண்டது. மிகவும் தொந்தரவு படுத்திக்கொண்டிருந்தது. எத்தனைதான் நல்ல வார்த்தையாகச் சொல்லியும் என் மனதைவிட்டுப் போக மறுத்துவிட்டது. கனவிலும் நனவிலும் வேண்டாத இடங்களிலும் எதிர்பாராத சமயங்களிலும் அந்தப் பொய்மான் என் கவனத்தைக் கவர்ந்து பிராணனை வாங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் எனக்குக் கடுங்கோபம் வந்து, ‘ஓ, பொய்மானே! நீ என் மனதை விட்டுப்போகிறாயா இல்லையா? போகாவிட்டால் உன்னைப்பற்றி ஒரு கதை எழுதி ஊர் சிரிக்க அடித்து விடுவேன்!’ என்று சொன்னேன். அதற்கும் அந்தப் பொய்மான் அசைந்து கொடுக்கிறதாக இல்லை. கடைசியில் ஒரு கதை எழுதியே தீர்த்தேன். பாத்திரங்கள் பெரும்பாலும் சேலம் ஜில்லாவைச் சேர்ந்த பாத்திரங்கள். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் தங்கியிருந்த காலத்தில் பார்த்துப் பழகிய பாத்திரங்கள்.

பாத்திரங்கள் சிலர் முரடர்களாயிருப்பதாகவும், கதையும் சில இடங்களில் கரடு முரடாயிருப்பதாகவும் வாசகர்களுக்குத் தோன்றினால், அது கதை நடந்த இடத்தின் கோளாறே தவிர, என் குற்றமன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சமயம் பொய்மான்கள் எதிர்ப்படுகின்றன. அந்தச் சமயத்துக்கு அவை உண்மையாகவே தோன்றுகின்றன. அந்தப் பொய் மான்களைத் துரத்திக்கொண்டு நாம் ஓடுகிறோம். துரத்திப் போகும்போது அம்மம்மா, எத்தனை பரபரப்பு! எவ்வளவு மனக்கிளர்ச்சி! என்ன தீவிர உணர்ச்சி! ஆனால் எவ்வளவு தூரம் தேடிப் போனாலும் பொய்மான் வெறும் மாயைத் தோற்றந்தான் என்பதைக் கடைசியில் உணர்கிறோம். ஏமாற்றம் அடைகிறோம்.

நம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும் திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் ‘பொய்மான் கரடு’ என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.
ரா. கிருஷ்ணமூர்த்தி
‘கல்கி’

அத்தியாயம் – 1

ஒரே தொழிலைச் சேர்ந்தவர்கள் நாலு பேர் ஓரிடத்தில் கூடினால் தங்கள் தொழிலைப் பற்றிப் பேசுவது இயற்கையேயாகும். நகைக் கடை வியாபாரிகள் நாலு பேர் ஓரிடத்தில் சேர்ந்தால் தங்கம், வெள்ளி விலைகளைப் பற்றிப் பேசுவார்கள். மளிகைக் கடைக்காரர்கள் துவரம் பருப்பு மிளகாய் வற்றல் அல்லது மிளகு விலையைப் பற்றிப் பேசுவார்கள். பத்திரிகையாளர்கள் சிலர் ஓரிடத்தில் கூடினால் அந்த அந்தப் பத்திரிகைகளின் ‘சர்க்குலேஷன்’ என்ன, யார் அதிகப் பொய் சொல்லுகிறார்கள் என்பது பற்றி விவாதிப்பார்கள்.

ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் ஐந்தாறு பேர் சேர்ந்தால் எதைப்பற்றிப் பேசுவார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? சில நாளைக்கு முன்னால் ஒரு ‘டீ பார்ட்டி’க்குச் சென்றிருந்தேன். கொஞ்சம் தாமதித்துச் சென்றபடியால் எங்கே உட்காரலாமென்று அங்குமிங்கும் பார்க்க வேண்டியதாயிற்று. ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் சிலர் சேர்ந்திருந்த மூலையிலே தான் ஓர் இடம் காலியாக இருந்தது. அங்கே சென்று உட்காரும்படி நேர்ந்தது.

அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் தெரியுமா? ‘கொலைக் கேஸுகளைப் பற்றித்தான். கொலை வழக்குகள் எந்த எந்த ஜில்லாக்களில் குறைந்திருக்கின்றன எந்த ஜில்லாக்களில் அதிகமாயிருக்கின்றன என்னும் விஷயத்தைப்பற்றி அபிப்பிராய பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ‘மதுவிலக்குச் சட்ட அமுலுக்குப் பிறகு திருநெல்வேலி ஜில்லாவில் கொலைக் குற்றங்கள் குறைந்திருக்கின்றன’ என்று ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜ் அபிப்பிராயப்பட்டார். அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. “கோயமுத்தூர் ஜில்லாவில் கொலைக் குற்றங்கள் முன்போலவே இருக்கின்றன; குறையவும் இல்லை. அதிகமாகவும் இல்லை” என்றார் ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜ். அதையும் யாரும் ஆட்சேபிக்கவில்லை.

இன்னொருவர், “சேலம் ஜில்லாவில் கொலைக் குற்றம் அதிகமாகியிருக்கிறது” என்று சொன்னார். “அப்படியா? அது எப்படி சாத்தியம்?” என்று ஒருவர் கேட்டார். “எப்படி என்றால், அப்படித்தான்! உண்மை அப்படியிருக்கிறது!” என்று முதலில் பேசிய ஹைக்கோர்ட் ஜட்ஜ் கூறினார் . இதற்கு அப்பீல் ஏது?

பார்ட்டி முடிந்தது. அவரவர்களும் எழுந்துசென்றார்கள். ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் தனித்தனியே பிரிந்ததும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்யத் தொடங்கியிருப்பார்கள். ஆனால் சேலம் ஜில்லாவில் கொலை அதிகமாயிருக்கிறது என்று ஒரு ஜட்ஜு சொன்ன வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு சேலம் ஜில்லாவுக்கு நான் போயிருந்தேன். அங்கே தற்செயலாக ஒரு கதை கேள்விப்பட்டேன். அந்தக் கதையில் முக்கியமான சம்பவம் ஒரு கொலைதான்! குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படாத மர்மமான கொலை! அதன் வரலாறு என் மனத்தில் வந்து வட்டமிட்டது. அதை சுற்றிச் செங்கோடக் கவுண்டன், செம்பவளவல்லி, பங்காருசாமி, சுந்தரராஜன், குமாரி பங்கஜா முதலியவர்கள் வட்டமிட்டு வந்தார்கள். இதற்கெல்லாம் பின்னணியில் பொய்மான் கரடு, ஒரு பெரிய கரிய பூதம் தன்னுடைய கோரமான பேய் வாயைத் திறந்துகொண்டு நிற்பது போல் நின்று கொண்டேயிருந்தது.

சேலத்திலிருந்து நாமக்கல்லுக்கு ஒரு சிநேகிதரின் மோட்டார் வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். காலை நேரம். வானத்தை நாலாபுறமும் மேகங்கள் மூடியிருந்தன.

“இந்த ஜில்லாவில் மழை பெய்து ஆறு மாதம் ஆயிற்று. இன்றைக்குத்தான் மேகம் மூடியிருக்கிறது. மழை பெய்தால் நல்லது. ஒருவேளை மேகம் இன்றைக்கும் ஏமாற்றிவிட்டுப் போய்விடுமோ, என்னமோ?” என்று மோட்டார் டிரைவர் கூறினான்.

“இந்த ஜில்லாவில் மட்டும் என்ன? தமிழ்நாடு முழுவதிலுந்தான் மழை இல்லை!” என்றேன்.

“மற்ற ஜில்லாக்களில் மழை இல்லாததற்கும் இந்த ஜில்லாவில் மழை இல்லாததற்கும் வித்தியாசம் உண்டு ஸார்! இங்கே கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. இன்னும் கொஞ்சநாள் மழை பெய்யாவிட்டால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது!” என்றான்.

மேகத்துக்கும் மழைக்கும் மனிதனுடைய வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தத்தைப் பற்றிச் சிந்தனை செய்யத் தொடங்கினேன். கார் ‘விர்’ என்று போய்க்கொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் சேலம் ஜில்லாவில் சாதாரணமாகத் தென்படும் காட்சிகள்தான். விஸ்தாரமான சமவெளிப் பிரதேசங்கள், இடையிடையே கரிய நிற மொட்டைப்பாறைகள். சோளமும் பருத்தியும் முக்கியமான பயிர்கள். மழையில்லாமையால் சோளப் பயிர்கள் வாடி வதங்கிக் கொண்டிருந்தன.
பாலைவனத்து ஜீவ பூமிகளைப்போல் அபூர்வமாக அங்கங்கே பசுமையான சிறு தோப்புகள் காணப்படும். அந்தத் தோப்புகளுக்கு மத்தியில் ஒரு கேணி இருக்கிறதென்று ஊகித்தறியலாம். ஒவ்வொரு கேணியைச் சுற்றிலும் ஐந்தாறு தென்னை, ஒரு வேம்பு, இரண்டு வாழை, அப்பால் சிறிது தூரம் பசுமையான பயிர் இவற்றைக் காணலாம். கேணிகளில் கவலை ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பார்கள். கேணிகளில் ஒரு சொட்டு ஜலம் இருக்கும் வரையில் விடாமல் சுரண்டி எடுத்து வயலுக்கு இறைத்து விடுவார்கள்!
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு, குடியானவர்களின் வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களைப் பற்றி எண்ணிக்கொண்டு, மணிக்கு முப்பது மைல் வேகத்தில் போய்க்கொண்டிருந்தேன். அரை மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு தூற்றல் போடத் தொடங்கியது. சாலையில் சென்றவர்கள் மழைக்குப் பயந்து ஓடவும் இல்லை; ஒதுங்க இடம் தேடவும் இல்லை. வேகமாய் நடந்தவர்கள் கூடச் சிறிது நின்று வானத்தை அண்ணாந்து பார்த்து மழையின் இன்பத்தை அநுபவித்தார்கள்.

சற்றுத் தூரத்தில் ஆடுகள் ஓட்டிக்கொண்டு போன சிறுவன் ஒருவன் குஷாலாகப் பாட ஆரம்பித்தான்.

தூற்றல் போட்டுக் கொண்டிருக்கும்போதே மேகங்கள் சற்று விலகிச் சூரியன் எட்டிப் பார்த்தது. காலைச் சூரிய கிரணங்களில் மழைத் துளிகள் முத்துத் துளிகளாக மாறின. வானம் அச்சமயம் முத்து மழை பெய்வதாகவே தோன்றியது.

சாலை ஓரத்துக் கிராமம் ஒன்று வந்தது. ஒரு பக்கத்தில் பத்துப் பன்னிரண்டு குடிசை வீடுகள் இருந்தன. ஒரு குடிசையின் வாசலில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் பெரியவர் ஒருவர் உட்கார்ந்து மழையை அநுபவித்துக் கொண்டிருந்தார். கட்டிலில் விரித்திருந்த ஜமக்காளத்தை கூட அவர் சுருட்டவில்லை.

குடிசைகளையொட்டியிருந்த சில்லறைக்கடை ஒன்றில் ஒரு வாழைப்பழக் குலையும், ஒரு முறுக்கு மாலையும் தொங்கிக் கொண்டிருந்தன. வீதி நாய் ஒன்று முறுக்கு மாலையை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தது. அதைக்கூடக் கவனியாமல் கடைக்காரப் பையன் மழையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

மோட்டார் வண்டி நின்றது. சாலையின் ஒரு பக்கத்தில் குடிசைகள் இருந்தன என்று சென்னேனல்லவா? இன்னொரு பக்கத்தில் ஒரு செங்குத்தான கரிய பாறை. அதற்கு முன்புறம் ஓர் அரசமரமும் வேம்பும் பின்னித் தழுவி வளர்ந்திருந்தன. அரச வேம்பு மரங்களைச் சுற்றிக் கருங்கல் மேடை எடுத்திருந்தது.

டிரைவர் வண்டியிலிருந்து இறங்கினான். வேறு ஏதோ காரியமாக இறங்குகிறான் என்று நினைத்தேன்.

“ஸார்! கொஞ்சம் கீழே இறங்குங்கள்! உங்களுக்கு ஒரு வேடிக்கை காட்டுகிறேன்!” என்றான்.

வேண்டா வெறுப்புடன், “இந்த வம்புக்காரனிடம் அகப்பட்டுக் கொண்டோமே?” என்று அலுத்துக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கினேன்.

“என்ன வேடிக்கை? எங்கே?” என்று கேட்டேன்.

“அதோ பாருங்கள்!” என்று சாலைக்கு ஐம்பது அடி தூரத்தில் செங்குத்தாக உயர்ந்திருந்த கரிய பாறையைக் காட்டினான்.

“என்னத்தைப் பார்க்கிறது? மொட்டைப் பாறையாக நிற்கிறதே! ஒரு மரம் செடி புல் பூண்டு கூடக் காணோமே?” என்றேன்.

“இல்லை, ஸார்! அவசரப்படாமல் நிதானமாய்ப் பாருங்கள்! பாறையில் ஒரு பொந்து மாதிரி இருக்கிறதே அதற்குள் பாருங்கள்! நீங்கள் கதை எழுதுகிறவர் ஆச்சே, அதற்காகத்தான் பார்க்கச் சொல்லுகிறேன். உங்கள் மாதிரி ஆட்கள்தான் இதைப் பார்க்கவேண்டும்!”, என்றான்.
இதைக் கேட்டதும் நானும் அவன் சொல்வதில் ஏதோ இருக்கவேண்டும் என்று கவனமாகப் பார்த்தேன். கரிய பாறையின் இருண்ட பொந்துக்குள் ஏதோ ஒன்று தெரிந்தது.

“தெரிகிறதா? மான் தெரிகிறதா?” என்று டிரைவர் கேட்டான்.

ஆம்; அவன் சொன்னபிறகு பார்த்தால் அந்தப் பாறையின் பொந்துக்குள்ளேயிருந்து ஒரு மான் எட்டிப் பார்ப்பது நன்றாய்த் தெரிந்தது. ஆனால் அந்த மான் அசையாமல் நகராமல் நின்ற இடத்திலேயே நின்றது.

“ஆமாம்; அந்தப் பொந்தில் மான் நிற்பது தெரிகிறது. உள் பாறையில் அப்படி மான்போல் செதுக்கி வைத்திருக்கிறதா?” என்று கேட்டேன்.

“அதுதான் இல்லை. அருகில் போய்ப் பொந்துக்குள் பார்த்தால் ஒன்றுமே இல்லை. வெறும் இருட்டுத்தான் இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் மட்டும் அந்த மாயமான் தெரிகிறது!” என்றான்.

“நீ சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. அதோ மான் நிற்பது நன்றாகத் தெரிகிறதே! அங்கிருந்து நம் பேரில் அப்படியே தாவிக் குதிக்கத் தயாராக நிற்கிறதே!” என்றேன்.
“அதுதான் ஸார், வேடிக்கை! அதற்காகத்தான் உங்களை இறங்கிப் பார்க்கச் சொன்னேன். உண்மையில் அந்தப் பொந்துக்குள் ஒன்றுமேயில்லை. இங்கிருந்து பார்த்தால் மான் நிற்பது போலத் தெரிகிறது. இன்றைக்கு நேற்றைக்கு இல்லை. வெகுகாலமாக இப்படி இருக்கிறது. அதனாலேதான் இந்தப் பாறைக்குப் ‘பொய்மான் கரடு’ என்ற பெயரும் வந்திருக்கிறது. உங்களையும் என்னையும் போல் எத்தனை ஆயிரம் பேர் எத்தனை காலமாக இங்கே நின்று அந்தப் பொய் மானைப் பார்த்து ஏமாந்து போயிருக்கிறார்களோ?” என்றான் டிரைவர்.

“நான் ஒன்றும் ஏமாறவில்லை! கட்டாயம் அங்கே ஒரு மான் இருக்கிறது!” என்றேன்.

“உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை போல் இருக்கிறது. வாருங்கள், என்னுடன்!” என்றான்.

அவனைப் பின்பற்றித் தட்டுத் தடுமாறி மலைப் பாறையில் ஏறினேன். குகைக்குச் சமீபத்தில் சென்று எட்டிப் பார்த்தேன். அதற்குள் ஒரு மான் – பாறையில் செதுக்கிய மான் – கட்டாயம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு பார்த்தேன். ஆனால் ஏமாந்துதான் போனேன். வெறும் இருட்டைத் தவிர அந்தப் பொந்துக்குள் வேறு ஒன்றுமே இல்லை.

“இப்போது நம்புகிறீர்களா?” என்று டிரைவர் கேட்டான்.

கீழே இறங்கி வந்தோம். சாலையில் நின்று மறுபடியும் பார்த்தேன். பொய் மான் சாக்ஷாத்தாக நின்று எட்டிப் பார்த்து என்னைக் கேலி செய்தது.

முண்டும் முரடுமாக நின்ற நெடும் பாறையில் ஏதோ ஒரு பகுதியின் நிழல் அந்தப் பொந்துக்குள் விழுந்து மாயமான் தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்குள்ளே அந்த ஊரிலுள்ள சின்னப் பசங்கள் எல்லோரும் வந்து எங்கள் வண்டியைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை விலக்கிவிட்டு டிரைவர் வண்டிக் கதவைத் திறந்தான். நான் ஏறி உட்கார்ந்ததும் வண்டி நகர்ந்தது.

“ஒருவராவது இந்த நாளில் ராமேசுவரம் காசி போகிறதில்லை. ஆனால் ஊருக்கு ஊர் பிள்ளைகள் வசவசவென்று பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்!” என்றான் டிரைவர்.

என்னுடைய ஞாபகமெல்லாம் அந்தப் பொய்மான் பேரிலேயே இருந்தது. அதைப்பற்றி உள்ளூரில் ஏதாவது கதை வழங்கி வரவேண்டும் என்று நினைத்தேன்.

“அந்தப் பொய்மான் கரடு ரொம்ப விசித்திரமானதுதான். அதைப்பற்றி ஏதாவது பழைய கதை உண்டா?” என்று கேட்டேன்.

“பழைய கதை ஒன்றும் இல்லை. நான் கேள்விப் படவில்லை. ஆனால் புதிய கதை ஒன்று உண்டு; ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால் நடந்தது. ஐயாவுக்குக் கேட்க இஷ்டம் இருந்தால் சொல்லுகிறேன்” என்றான்.

“இது என்ன வார்த்தை? இஷ்டம் இருந்தால் என்ன வந்தது? நான் தான் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறேனே! நடக்கட்டும்; நடக்கட்டும்! காரை மட்டும் எதிரே வரும் லாரிகளுடன் மோதாமல் ஜாக்கிரதையாக விட்டுக்கொண்டு கதையைச் சொல்; கேட்கலாம்! நாமக்கல் போய்ச் சேருவதற்குள்ளே கதை முடிந்துவிடும் அல்லவா? அப்படியானால் சரி, உடனே ஆரம்பி கதையை!” என்றேன்.

அத்தியாயம் – 2

பொய்மான் கரடுக்குச் சுமார் ஒரு மைல் தூரத்தில் செங்கோடக் கவுண்டனின் காடும் கிணறும் இருந்தன. சேலம் ஜில்லாவில் காடு என்றால், வயல், நிலம், பண்ணை என்று அர்த்தம். செங்கோடனுடைய ஐந்து ஏக்கரா நிலம் அவனுக்குத் தியாக வீர மான்யமாகக் கிடைக்கவில்லை. ஆயினும் அவனுடைய பெற்றோர்கள் அந்த நிலத்தைப் பண்படுத்துவதற்கும் கேணி எடுப்பதற்கும் செய்த தியாகங்களின் பலனை இன்றைக்குச் செங்கோடன் அனுபவித்து வந்தான். அவனுடைய ஐந்து ஏக்கரா நிலத்தில் பொன்னும் மணியும் முத்தும் பவளமும் விளையும். இவற்றைக் காட்டிலும் விலை உயர்ந்த பொருள்களான நெல்லும் சோளமும் பருத்தியும் மிளகாயுங்கூட விளையும். செங்கோடனுடைய கேணி, புதையல் எடுக்கும் கேணி. வருஷம் முழுவதும் அதில் புதையல் எடுத்துக்கொண்டே இருக்கலாம். அப்படி வற்றாமல் தண்ணீர் சுரக்கும் கேணி அது. மூன்று வருஷமாக மழை பெய்யாமல் சுற்று வட்டாரத்துக் கேணிகளில் எல்லாம் தண்ணீர் வற்றிவிட்ட போதிலும் செங்கோடன் கேணியில் மட்டும் தண்ணீர் சுரந்து கொண்டேயிருந்தது. செங்கோடனும் தினந்தோறும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாக்காமல் வயல்களுக்கு இறைத்துக் கொண்டிருப்பான். மூன்று போகம் பயிர் செய்து பலன் எடுப்பான்.

செங்கோடன் அநாதை. அவனுடைய தாய் தந்தையர் காலமாகிவிட்டனர். அக்கா, தங்கை, அண்ணன், தம்பி பிச்சுப் பிசிறு ஒன்றும் கிடையாது. வயதான கிழ அத்தை ஒருத்தி சில காலம் அவன் வீட்டில் இருந்து சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குச் சோறு போட மனம் இல்லாமல் செங்கோடன் அவளை அடித்து விரட்டிவிட்டான் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல; அந்த அத்தைக் கிழவி தன் தங்கை மகளைச் செங்கோடன் கழுத்தில் கட்டி விடப் பிரயத்தனம் செய்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேதான் அவளைத் துரத்தி விட்டான்.

செங்கோடனைக் கலியாண வலையில் சிக்கவைத்து இல்லறத்தில் அமர்த்திவிட இன்னும் பல முயற்சிகளும் நடந்து கொண்டிருந்தன. அதே ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் பல பெண்கள் அவனுக்காக மற்றவர்களால் பேசப்பட்டார்கள். ஆனால் செங்கோடன் ஒன்றுக்கும் பிடி கொடுக்கவேயில்லை; யாருடைய வலையிலும் சிக்கவில்லை. கடைசியில் அவன் இந்தக் கலியாணப் பேச்சுத் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு காரியம் செய்தான். ஊருக்குள் இருந்த குடிசையைக் காலி செய்துவிட்டு அவனுடைய காட்டின் நடுவில் கேணிக் கரையில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு குடியிருக்கத் தொடங்கினான். அதிலிருந்து செங்கோடனுக்கு மனநிம்மதி ஏற்பட்டது. ஆனால் ஊரில் கெட்டபெயர் பரவிற்று. அவன் தரித்திரம் பிடித்த கருமி என்றும், பெண்டாட்டியைக் கட்டிக் கொண்டால் அவளுக்குச் சோறு போட வேணுமே என்பதற்காகப் பிரமச்சாரி வாழ்க்கை நடத்துகிறான் என்றும் அக்கம்பக்கத்து ஊர் ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். இது ஒன்றும் செங்கோடன் காதில் விழவில்லை. அவன் உண்டு, அவன் கேணி உண்டு, அவன் விவசாயம் உண்டு என்று வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஆனாலும் அவனுடைய மனநிம்மதி ஒவ்வொரு சமயம் குலைவதற்குக் காரணமாயிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் செம்பவளவல்லி. ‘செம்பா’ என்று கூப்பிடுவார்கள். செம்பா பெரிய குடும்பத்தில் பிறந்தவள். தாய், தகப்பன், பாட்டி, அத்தை, தம்பிமார்கள், தங்கைமார்கள் வீடு நிறைய இருந்தார்கள். செம்பாவின் தகப்பனுக்குக் காடு, கேணி எல்லாம் இருந்தபோதிலும் பெரிய குடும்பம் ஆகையால் ஓயாமல் தரித்திரம் குடி கொண்டிருக்கும். வயலில் எவ்வளவு விளைந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்குக் காணாது. வீட்டில் சாப்பாட்டுக்கு ஆட்கள் அதிகமே தவிர, உழைக்கக் கூடியவர்கள் அதிகமில்லை. இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் ஓயாத தரித்திரத்துக்கும் ஒழியாத கூச்சலுக்கும் மத்தியில் செம்பவளம் வாழ்ந்து, வளர்ந்து வந்தாள். சேற்றுத் தவளைகளுக்கு மத்தியில் செந்தாமரையைப் போலவும், குப்பைக் கோழிகளுக்கு மத்தியில் தோகை மயிலைப் போலவும், சப்பாத்திக் கள்ளிகளுக்கு மத்தியில் செம்பருத்திச் செடியைப் போலவும் அவள் பிரகாசித்து வந்ததாகச் செங்கோடன் அடிக்கடி எண்ணுவான்.

இவ்வாறு தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்த செம்பாவைக் கலியாணம் செய்துகொள்வது பற்றியும் அவன் அடிக்கடி யோசனை செய்யாமல் இல்லை. அவன் மனத்தில் தானாக அந்த யோசனை உதித்திராவிட்டாலும், செம்பாவின் பெற்றோர்களும் உற்றார் உறவினரும் அவனைச் சும்மா விடவில்லை. செங்கோடனை அவர்களில் யாராவது சந்திக்க நேர்ந்த போதெல்லாம், “ஏண்டா அய்யாக் கவுண்டன் மகனே! எங்கள் செம்பவளவல்லியை நீ கட்டிக்கொள்ளப் போகிறாயா, இல்லையா? இரண்டில் ஒன்று கறாராகச் சொல்லிவிடு! எத்தனை நாள் அவளைக் கன்னி கழியாமல் உனக்காக வைத்திருப்பது? நீ இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ பேர் ‘கண்டேன் கண்டேன்’ என்று கொத்திக் கொண்டு போய்விடக் காத்திருக்கிறார்கள்” என்று பச்சையாகக் கேட்டுவிடுவார்கள். ஆனால் செங்கோடன் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசைந்து கொடுப்பதில்லை. “அப்படி மேலே விழுந்து யாராவது பெண் கேட்க வந்தால் கட்டிக்கொடுத்து அனுப்புங்களேன்! நானா குறுக்கே விழுந்து மறிக்கிறேன்?” என்று பிடிகொடாமல் பதில் சொல்லுவான்.

எல்லோரும் சேர்ந்து சூழ்ச்சி செய்து செம்பாவைத் தன் கழுத்தில் கட்டிவிடப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பீதி செங்கோடன் மனத்தில் குடிகொண்டிருந்தது.

செம்பாவைக் கட்டிக் கொள்வதில் அவனுக்கு ஆசை இல்லாமல் இல்லை. பகலில் கேணியிலிருந்து தண்ணீர் இறைக்கும் போதும் சரி, காட்டில் மண்வெட்டி பிடித்து வேலை செய்யும் போதும் சரி, இரவில் தூக்கத்தில் கனவிலும் சரி, செம்பாவின் முகமும் புன்சிரிப்பும் கண் சுழற்றலும் அவன் மனத்தில் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். குடிசைக்குள் அடுப்பு மூட்டி உலைப்பானையைப் போடும் போதெல்லாம், ‘வீட்டில் ஒரு பெண்பிள்ளை இருந்தால் எவ்வளவு சல்லிசாக இருக்கும்! இந்த அடுப்பு மூட்டும் வேலையெல்லாம் நாம் செய்ய வேண்டியதில்லையல்லவா?’ என்று தோன்றும். ஆனாலும், கலியாணம் என்று செய்துகொண்டால் செம்பாவின் குடும்பத்தார் அனைவரும் தன் வீட்டில் வந்து உட்கார்ந்து அட்டூழியம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்றும், நாலைந்து வருஷமாகத் தான் அரும்பாடு பட்டு இராப்பகலாக உழைத்துச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைப் பரிசம் என்றும், சேலை என்றும், கலியாண விருந்து என்றும் சொல்லிச் சூறையிட்டு விடுவார்கள் என்றும் அவன் மனத்தில் பெரும் பீதி குடிகொண்டிருந்தது. செம்பாவின் பேரில் அவனுக்குள்ள ஆசையும், சேர்த்துப் புதைத்து வைத்திருந்த பணத்தின்மேல் அவனுக்கிருந்த ஆசையும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன. இரண்டையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பினான். ஆனால் எதாவது ஒன்றைக் கை விட்டுத்தான் ஆகவேண்டும் என்று ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று தயங்கினான். சில சமயம், ‘செம்பாவைப்போல் நூறு பெண்கள் கிடைப்பார்கள்; ஆனால் வெள்ளி ரூபாய் எண்ணூறு இலேசில் கிடைக்குமா? நாலு வருஷம் பாடுபட்டால் அல்லவா கிடைக்கும்?’ என்று தோன்றும். ‘பணமாவது பணம்! பணம் இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போகும். ஆனால் செம்பாவைப் போல் ஒரு பெண் ஆயிரம் வருஷம் தவம் செய்தாலும் கிடைப்பாளா?’ என்று இன்னொரு சமயம் அவனுக்குத் தோன்றும். இந்த இரண்டுவித எண்ணங்களுக்குமிடையே நிச்சயமான ஒரு முடிவுக்கு வர முடியாமல் செங்கோடன் திகைத்தான்; திணறினான்; திண்டாடினான்.

இப்படி இருக்கும்போது ஒருநாள் காலையில் செங்கோடன் கேணியிலிருந்து தண்ணீர் இறைத்துவிட்டு, மாட்டைக் கவலை ஏற்றத்திலிருந்து அவிழ்த்து விட்டு விட்டு, கிணற்றங்கரையில் மரத்து நிழலில் இளைப்பாற உட்கார்ந்தான். அப்போது அவன் மனம் தன்னை அறியாமல் செம்பாவின்மேல் சென்றது. ‘பணச்செலவைப் பாராமல் செம்பாவைக் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இச்சமயம் கஞ்சியோ, கூழோ, அல்லது நீராகாரமோ கொண்டு வருவாள் அல்லவா?’ என்று நினைத்தான். அந்தச் சமயத்தில் ஏதோ பின்னால் சலசலவென்று சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே இடுப்பில் சோற்றுக் கூடையுடன் செம்பா நின்றாள்.

மனத்தில் எவ்வளவு வியப்பும் மகிழ்ச்சியும் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், “அப்படியா! ஓகோ! நீதானா? யாரோ என்று பார்த்தேன்” என்றான் செங்கோடன்.

“என்னைப் பார்ப்பதற்குப் பிடிக்கவில்லையாக்கும்? நான் வந்தது பிசகுதான்!” என்றாள் செம்பா.

“யார் சொன்னது பிடிக்கவில்லை என்று? வா வா! வந்து விடு! இங்கே வந்து என் பக்கத்தில் உட்காரு!” என்றான் செங்கோடன்.

“இல்லை, நான் போகிறேன்!” என்று அரை மனத்துடன் செம்பா திரும்பிப்போகப் பார்த்தாள்.

செங்கோடன் எழுந்து ஓடிச் சென்று அவளை வழி மறித்து நின்று, “வா! வா! வந்துவிட்டுக் கோபித்துக் கொண்டு போகலாமா?” என்று சொல்லி, அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் அவர்கள் சும்மா இருந்தார்கள். உச்ச ஸ்தாயில் முறை வைத்துப் பாடிய இரண்டு குயில்களின் குரல் கேட்டது. அணிப்பிள்ளைகள் ‘கிளிக்’ ‘கிளிக்’ என்று சப்தித்தன. குருவி ஒன்று ‘சிவ்’ என்று பறந்து சென்றது.

“செம்பா! எங்கே இப்படி வந்தாய்? ஏதாவது காரியம் உண்டா?” என்றான் செங்கோடன்.

“ஒரு காரியமும் இல்லை; சும்மா உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்?”

“காரியம் இல்லாமல் வெறுமனே பார்ப்பதற்கு வருவார்களா?”

“ஏன் வரமாட்டார்கள், கவுண்டா! போன சனிக்கிழமை சின்னமநாயக்கன்பட்டிக்கு சினிமா பார்க்கப் போயிருந்தோம். அதிலே மோகனாங்கி என்று ஒருத்தி வருகிறாள். அவள் தன் புருஷனுக்காக என்னென்ன கஷ்டமெல்லாம் படுகிறாள், தெரியுமா? அதைப் பார்த்து விட்டு அழாதவர்கள் கிடையாது.”

“ஓஹோ! சினிமா பார்க்கப் போயிருந்தீர்களா? ஏதோ கூடார சினிமா வந்திருக்கிறது என்று சொன்னார்களே அதற்கா போனீர்கள்? யார் யார் போயிருந்தீர்கள்?”

“அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி, எல்லாருமாகத்தான் போயிருந்தோம். தலைக்கு இரண்டே காலணா டிக்கெட். மொத்தம் ஒரு ரூபாயும் மூன்று அணாவும் செலவு. ‘போனால் போகட்டும்! இந்த மாதிரி அதிசயக் காட்சிகளை எங்கே பார்க்கப் போகிறோம்? ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் பார்க்க முடியுமா?’ என்று அப்பா சொன்னார். நிஜமாக எவ்வளவு நன்றாயிருந்தது தெரியுமா? நீ கூடப் போய்ப் பார்த்துவிட்டு வா” என்றாள் செம்பவளம்.

“உங்களுக்கென்ன, கொழுத்த பணக்காரர்கள்! இஷ்டப்படி செலவு செய்கிறீர்கள்! நான் எங்கே போக அம்புட்டுப் பணத்துக்கு?” என்றான் செங்கோடன்.

நமது சென்னை முதன் மந்திரி கனம் குமாரஸ்வாமி ராஜாவும் நமது கதாநாயகன் செங்கோடக் கவுண்டனும் சினிமா விஷயத்தில் ஒன்றுபட்டவர்கள். இரண்டு பேரும் சினிமா பார்த்தது கிடையாது!

ஊர் உருப்படாமல் போய்க்கொண்டிருப்பதற்கும் காலா காலத்தில் மழை பெய்யாமல் தேசம் நாசமாய்ப் போய்க் கொண்டிருப்பதற்கும் சினிமாதான் காரணம் என்பது செங்கோடனுடைய சித்தாந்தம்!

அத்தியாயம் – 3

செங்கோடக் கவுண்டன் சினிமாவைப் பற்றித் தன் கொள்கையை வெளியிட்டதும் செம்பவளவல்லியின் முகம் சுருங்கிற்று. சற்றுத் தலையைக் குனிந்துகொண்டு சும்மா இருந்தாள்.

பிறகு, “கவுண்டா! ஊரிலே எல்லாரும் உன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.

“ஊரிலே இருக்கிறவர்கள் என்ன பேசிக்கொண்டால் எனக்கு என்ன? நான் எதற்காக அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டும்?” என்றான் செங்கோடன்.

“அப்படியில்லை, கவுண்டா! நாலுபேர் பேசுவது உனக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்!”

“அப்படியானால் நீதான் சொல்லேன், நாலு பேர் பேசுவது உனக்குத் தெரியும் போல் இருக்கிறதே!”

“தெரியாமல் என்ன? ஊரெல்லாம் பேசிக்கொள்வது என் காதில் விழாமல் இருக்குமா? நீ இங்கே கேணிக் கரையில் வந்து தனியாகக் குடிசை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதனால் உன் காதில் விழவில்லை.”

“என்னதான் ஊரில் பேசிக்கொள்கிறார்கள், சொல்லி விடேன்! இவ்வளவு தூரம் ஏன் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறாய்?”

“எனக்குச் சொல்லவே தயக்கமாயிருக்கிறது. வாய் கூசுகிறது. நீ கருமியாம்! பணத்தாசை பிடித்தவனாம், விநாயகருக்குக் கலியாணம் ஆகிறபோதுதான் உனக்கும் கலியாணமாம். யாராவது ஒருத்தியைக் கட்டிக் கொண்டால் அவளுக்குச் சோறு போட்டுத் தொலைக்க வேணுமே என்பதற்காக நீ கலியாணம் பண்ணிக்கொள்ளாமல் தானே பொங்கித் தின்று கொண்டிருக்கிறாயாம்! நீ பணத்தைச் சேர்த்து புதைத்து வைத்திருக்கிறாயாம். புதையலைப் பூதம் காக்குமாம். ஒரு நாளைக்கு அந்தப் பூதம் உன்னையும் அடித்துக் கொன்றுவிடுமாம். நீ இரத்தம் கக்கிச் சாவாயாம்! போதுமா? இப்படியெல்லாம் கண்டபடி ஜனங்கள் பேசுகிறார்கள்; எனக்குக் கேட்கச் சகிக்கவில்லை” என்று சொல்லி விட்டுச் செம்பவளவல்லி விம்மத் தொடங்கினாள். அவளுடைய கண்களிலிருந்து முத்து முத்தாகக் கண்ணீர் வடிந்தது.

“சேச்சே! ஊரிலே எந்த நாயாவது ஏதாவது குரைத்தால், அதற்காக நீ ஏன் அழ வேண்டும்? அழாதே, செம்பா!” என்றான் செங்கோடன். செம்பாவின் கண்ணீர் செங்கோடனுடைய பணத்தாசை பிடித்த மனத்தைக் கூடக் கொஞ்சம் கரைத்துவிட்டது. அவளுடைய கண்ணீரைத் துடைக்கலாமா, வேண்டாமா என்று தயங்கித் தயங்கிக் கையை நீட்டினான்.

செம்பாவின் விம்மல் சிறிது குறைந்தது. “கவுண்டா! நாங்கள் பார்த்த சினிமாவில் மோகனாங்கி கண்ணீர் விட்டபோது மதனசுந்தரன் என்ன செய்தான் தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டே செம்பா செங்கோடனுடைய கைகளைப் பிடித்து இழுத்து சினிமாவில் கதாநாயகன் செய்தது போல் செய்து காட்டினாள்.
“சீச்சீ! அவர்களுக்கெல்லாம் வெட்கம், மானம் ஒன்றும் இராது போல் இருக்கிறது. மிருக சென்மங்கள் போல் இருக்கிறது. ஆயிரம் பேர் பார்த்துக் கொண்டிருக்கையில் இப்படியா செய்வார்கள்?” என்றான் செங்கோடன்.

“நிஜமாக இல்லையே? திரையிலே தானே?” என்றாள் செம்பா.

“திரையிலே என்றாலும் ஆயிரம் பேர் பார்க்கிறார்கள் இல்லையா?”
“ஆயிரம் பேர் என்ன? லட்சம் பேர் பார்க்கிறார்கள். உன்னைத் தவிர எல்லாரும் சினிமா பார்க்கிறார்கள். அது கிடக்கட்டும், தள்ளு!…..கவுண்டா! ஊரார் பேசுகிறதெல்லாம் பொய்தானே? உன் பேரிலே பொறாமையினால்தானே அவர்கள் அப்படியெல்லாம் பேசுகிறார்கள்?”

“எதைப்பற்றிச் சொல்கிறாய்?”

“பெண்டாட்டிக்குச் சோறுபோடப் பயந்துகொண்டு நீ கலியாணம் பண்ணிக்கொள்ளாமல் இருக்கிறாய் என்கிறார்களே! அதுதான்….”

“முட்டாப் பயல்களுக்குப் பிறந்த பயல்கள்தான் அப்படிச் சொல்வார்கள்! நான் உன்னைக் கட்டிக்கொண்டால், அதனால் எனக்கு லாபமா, நஷ்டமா? இன்றைக்கெல்லாம் உன் சாப்பாட்டுக்காக மாதம் ஏழு, எட்டு ரூபாய் ஆகலாம். நீ செய்கிற வேலையினால் எனக்கு இருபது ரூபாய் மிச்சமாகுமே? இந்தக் கணக்குத் தெரியாத சோம்பேறிப் பயல்கள் ஏதாவது உளறினால் அதை நீ ஏன் காது கொடுத்துக் கேட்க வேண்டும்? அதற்காக ஏன் வருத்தப்பட வேண்டும்?” என்று செங்கோடன் ஆத்திரமாகப் பேசினான்.

“எங்கே அந்தக் கணக்கு உனக்கும் தெரியவில்லையோ என்று பார்த்தேன். அத்தனை பெரிய குடும்பத்தில் இரவும் பகலும் உழைத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு என்று சொந்தக் குடித்தனம் ஏற்பட்டுவிட்டால் இன்னும் எப்படி உழைப்பேன்? என்னால் உனக்கு ஒரு நஷ்டமும் இராது. ஓர் எருமை வாங்கி கட்டிக்கொண்டால் அதிலே மட்டும் மாதம் இருபது ரூபாய்க்கு மேலே செட்டுப் பிடிக்கலாம். என்னால் உனக்கு லாபமே தவிர நஷ்டம் ஒன்றும் ஏற்படாது” என்றாள் செம்பவளவல்லி.

“அதெல்லாம் நான் யோசனை செய்துதான் வைத்திருக்கிறேன். செம்பா! வேறொரு காரியத்தை உத்தேசித்துக் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன். என் காட்டைச் சேர்ந்தாற்போல் சேலம் முதலியாருக்கு ஓர் ஏக்கரா நிலம் இருக்கிறது. அது எனக்கு ரொம்ப இடைஞ்சமடைஞ்சலாயிருக்கிறது. கேணியிலிருந்து என் நிலத்துக்குத் தண்ணீர் இறைக்கச் சுற்றி வளைத்துக்கொண்டு வாய்க்கால் போகிறது. தண்ணீர் ரொம்ப வீணாகிறது. அந்த ஓர் ஏக்கரா நிலத்தை வாங்கிவிட்டேனானால் அப்புறம் கவலை இல்லை. பிறகு நம்முடைய கலியாணத்துக்குத் தேதி வைக்க வேண்டியதுதான்.”
“அதற்காக ரொம்ப நாள் தள்ளிப் போடுவது நல்லதல்ல. நீ கலியாணப் பேச்சை எடுக்க மாட்டாய் என்று சொல்லி, அப்பா எனக்கு வேறு இடம் பார்க்க ஆரம்பித்து விட்டார்…..”

“நான் ஒருவன் இருக்கிறபோது, வேறு எந்தப் பயல் மகன் வந்து உன்னைக் கட்டிக்கொண்டு போய்விடுவான்? யாராவது உன் கிட்ட வந்தால் அரிவாளால் ஒரே வெட்டாய் வெட்டிப் போட்டுவிட மாட்டேனா? அந்த எண்ணத்தை மட்டும் உன் அப்பன் அடியோடு விட்டு விடட்டும்” என்றான் செங்கோடக் கவுண்டன்.

செம்பவளவல்லியின் முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. “உன்னுடைய மனசு எனக்குத் தெரிந்திருக்கிறபடியால் தான் நானும் பொறுமையாயிருக்கிறேன். வேறு மாப்பிள்ளை தேடும் பேச்சே உதவாது என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கவுண்டா! காலையிலேயிருந்து நீ பசியோடுதானே வேலை செய்துகொண்டிருந்தாய்? இந்தா, இந்தக் கஞ்சியில் கொஞ்சம் குடி” என்று பரிவுடன் சொன்னாள்.

“உங்கள் வீட்டுக் கஞ்சி எனக்கு வேண்டாம். உன் அப்பன் உன்னைச் சண்டை பிடிப்பான்.”

“அதெல்லாம் யாருக்கும் தெரியாது. அப்படித் தெரிந்து கேட்டால் கஞ்சி சாய்ந்து கொட்டிவிட்டது என்று சொல்லி விடுகிறேன்.”

“இதோ பார், செம்பா! இப்போதான் எனக்கும் நினைவு வந்தது; நம்ம தென்னையிலிருந்து ஓர் இளநீர் பிடுங்கிக் கொண்டு வந்து உனக்கு வெட்டித் தருகிறேன்” என்று செங்கோடன் கையில் அரிவாளுடன் எழுந்தான்.

“நன்றாயிருக்கிறது! யாராவது இளநீரைப் பிடுங்குவார்களா? இளநீர் முற்றித் தேங்காய் ஆனால், சந்தையில் ஆறு அணாவுக்கு விலை போகுமே?” என்றாள் செம்பா.

“ஆறு அணாவைத் தள்ளு குப்பையில்! நமக்காகப் பணமா, பணத்துக்காக நாமா?” என்று சொல்லிக் கொண்டு செங்கோடன் சென்று கையெட்டுகிற தூரத்தில் காய்த்துத் தொங்கிய இளந் தென்னையிலிருந்து ஓர் இளநீர் அறுத்துக் கொண்டுவந்து தன் காதலிக்குக் கொடுத்தான். அதை அவன் தனக்காகச் செய்த ஒரு மகத்தான தியாகம் என்றே செம்பவளம் கருதி இறுமாந்து மகிழ்ந்தாள்.

– தொடரும்…

– பொய்மான் கரடு (குறுநாவல்), முதற் பதிப்பு: 1951.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *