பைத்தியக்காரத் தண்ணீர்
மோசஸின் குருநாதரான கிதர், மனித குலத்திற்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார்.‘குறிப்பிட்ட ஒரு நாளின் இரவில், உலகில் உள்ள நீர் யாவும் மறைந்து, புதிய நீர் வந்துவிடும். அதை அருந்தும் மக்கள் அனைவரும், பைத்தியக்காரர்களாக ஆகிவிடுவார்கள். எனவே, அதிலிருந்து தப்பிக்க, இப்போது உள்ள நீரை பத்திரப்படுத்தி வையுங்கள்!’ என்று அவர் சொன்னார்.

இதைக் கேட்ட மக்கள் அனைவரும் பைத்தியக்காரத்தனமான உளறல் என்று அதை ஒதுக்கினர். யாரும் அவரது பேச்சை நம்பவில்லை.
ஆல்பின் என்கிற ஒரே ஒரு மனிதர் மட்டும் இதை நம்பினார். அவர் தனக்குத் தேவையான அளவு நீரை தனது வீட்டில் சேகரித்து வைத்துக்கொண்டார்.
குறிப்பிட்ட நாள் இரவில் நீர்நிலைகளில் உள்ள நீர் யாவும் வற்றி, புதிய நீர் நிறைந்தது. மற்ற மனிதர்கள் யாவரும் உறக்கத்தில் இருந்ததால் அவர்களுக்கு இந்ந மாற்றம் நிகழ்ந்தது தெரியவில்லை. ஆல்பின் விழித்திருந்து பார்த்ததால் அவருக்கு மட்டும் அது தெரிந்தது.
மறு நாள் விடியற்காலையிலேயே அவர், “புதிய தண்ணீர் வந்துவிட்டது. அதைக் குடித்துவிடாதீர்கள். பைத்தியம் பிடித்துவிடும்” என்று ஊர் முழுதும் உரக்கக் கூவினார்.
அதைச் செவியுற்ற மக்கள், அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று பேசிக்கொண்டார்கள்.
அந்த மனிதர்கள் யாவரும் புதிய நீரையே பருகினர். அவர்களின் குணத்தை அது மாற்றியது. அவர்கள் பைத்தியக்காரத்தனமானவர்களாக ஆகிவிட்டனர். ஆனால், அது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் தங்களை இயல்பாகவே உணர்ந்திருந்தனர். தாம் முன்பு எப்படி இருந்தோம் என்பதும், இப்போது ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை.
ஆல்பினுக்கு மட்டுமே மற்ற மனிதர்களின் மாற்றம் தெரிய வந்தது. அவர் அதை அவர்களிடம் சொன்னார். ஆனால், அவர்கள் அவரைப் பைத்தியம் என்று பரிகசித்தனர்.
அவரது எண்ணம், பேச்சு, செயல் யாவுமே அவர்களுக்கு வினோதமாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் பட்டன. ஏனெனில், அவர்களுடைய எண்ணம், பேச்சு, செயல் ஆகியவற்றுக்கு மாறாக அவருடையவை இருந்தன.
ஆல்பின் தனது சேகரிப்பில் இருந்த நீரை மட்டுமே அருந்தி, தனது பழைய மன சமநிலையை, நல்லறிவைத் தக்க வைத்துக்கொண்டிருந்தார். ஆனால், இந்தப் பைத்தியக்காரத்தனமான உலகில் அவரால் தொடர்ந்து வாழ்வது இயலாத காரியமாக இருந்தது. ஏனெனில், மக்கள் அவரை விரோதியாகக் கருதினர். அவரை ஏளனப்படுத்தி, ஒதுக்கி வைத்தனர்.
அந்த மக்களோடு வாழ வேண்டுமென்றால் அவர்களைப் போலவேதான் இருந்தாக வேண்டும் என்பது அவருக்குப் புரிந்தது. முடிவில் வேறு வழியின்றி அவரும் புதிய நீரை அருந்தி, மற்ற மனிதர்களைப் போலவே பைத்தியமாக ஆகிவிட்டார்.
அதன் பிறகு அனைவரும் அவருக்குப் பைத்தியம் குணமாகி, நல்லறிவு பெற்றுவிட்டதாகக் கூறி அவரை ஏற்றுக்கொண்டனர்.