பெரிய தனக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2025
பார்வையிட்டோர்: 194 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு பெரிய தனக்காரன் இருந்தா. இந்த ஊர்ல, ஒரே ஒரு கொசவன் வீடு இருந்திச்சு. அவந்தர் அந்த ஊருல இருக்கிறவங்களுக்குச் சட்டி செஞ்சு குடுக்கிறா. சட்டி வித்து – சட்டி வித்து கொசவன் ந….ல்…ல பணக்காரனாயிட்டர். நம்மள மாதிரி கஷ்டப்படாம, ஏதோ ஓரளவுக்கு வசதியா இருக்கர். 

இருக்கயில, ஒருநா, இந்தப் பெரிய தனத்துக்காரன், கொசவங்கிட்டப் போயி, ஒரு குளுதாணி செஞ்சு குடுண்டு கேட்டா. கேக்கவும். கொசவன், குளுதாணி செஞ்சு குடுக்கல. துட்டுத் தர மாட்டாண்ட்டு, செஞ்சு குடுக்காம விட்டுட்டா. 

ஒரு குளுதாணி கேட்டு, செஞ்சு குடுக்க மாட்டேண்ட்டானே, வக்காலோளி, இந்தக் கொசப்பயல மட்டமாக்கணும்ண்ட்டு, வாய்ப்ப எதிர்பாக்குறர். யாரு? இந்தப் பெரியதனத்துக்கார். 

ஒருநா, அடுத்த ஊர்ல இருந்து, ஏலக்காப் பாரம் ஏத்திக்கிட்டு, ஏழு மாட்டு வண்டிக மருதைக்குப் போகுது. நம்ம மேலக்கால்ண்டு வச்சுக்கங்க. அங்கிருந்து போகுது. 

போகயில, மழ புடிச்சுகிருச்சு. மழண்டா சோ…ண்…டு பேயுது. பேயவும், ஓடக்காடு – ஒடப்புக்காடெல்லாம் வெள்ளம் போகுது. அப்ப, அந்த ஊரு ஓடயில ஆளு கடக்க முடியாத வெள்ளம் போகுது. அடங்காத வெள்ளம். இந்த ஏழு மாட்டு வண்டிகளயும் இழுத்துக்கிட்டுப் போயிருச்சு. வெள்ளம் வத்தவும், அந்த ஊரு ஆளுங்க சிக்குன ஏலக்காய் மூட்டைகளத் தூக்கிக்கிட்டுப் போயி, வீட்ல வச்சுக்கிறாங்க. 

அப்ப, இந்த ஏழு வண்டிக்காரங்களும் போயி, அந்த ஊருப் பெரிய தனத்துக்காரங்கிட்டப் போயி, இந்த ஏலக்காய் மூட்டைகள வாங்கித் தரச் சொல்றாங்க. 

இதர் சாக்குண்ட்டு, பெரியதனத்துக்காரன், ஊரச் சாட்டி, கூட்டத்தக் கூட்டிட்டா. இதுக்கு மொதல்ல. இந்தப் பெரிய தனத்துக்காரன், என்னா செய்யுராண்டா, அந்த ஊருக் கோடாங்கி, குறி சொல்றவனக் கூப்பிட்டு, விசயத்தப் பூராஞ் சொல்லிட்டா. 

எப்டிண்டா; 

கொசவன் சுள்ள போட 

புகை கிளம்ப 

மேகந் திரள 

மழ பேய-ண்டு 

எழுதி, பிள்ளையாருக்கடில வச்சிரு. நாங்க, ஒன்னயக் கூப்பிட்டுக் கேப்போம். அப்ப, நிய்யி, பிள்ளையாரடி பிள்ளையாரடிண்டு உடுக்க அடி. அப்புறம் நாங்க பாத்துகிறோமண்டு பெரியதனத்துக்காரன் சொல்லிப்பிடுறா. 

சொல்லிப்பிட்டு, ஊரக் கூட்டிப் பஞ்சாயத்து வக்கிறாங்க. அப்ப, ஏலக்காய் வண்டிக்காரங்க, ஏழு பேரும் நிக்கிறாங்க. அப்ப, அந்தக் கொசவனும் வந்து, வேடிக்க பாத்துக்கிட்டு நிக்கிறா. அவனுக்கு எந்த விசயமுமே தெரியாது. 

அப்ப கூட்டத்துல பெரியதனத்துக்காரன் சொல்றா; நம்ம ஊர்ல திடீர்ண்டு மழ பேஞ்சு, வெள்ளம் வந்து, ஏழு வண்டி ஏலக்காய இழுத்திட்டுப் போயிருச்சு. இப்ப, இவங்க நம்மகிட்ட நட்டஈடு கேக்குறாங்க. திடீர்ண்டு மழ பேஞ்சதுக்கு, என்னா காரணம்ண்டு, மொதப் பாக்கணும். அதுக்கு – கோடாங்கிய, சாமியெரக்கிக் கேக்கணும்ண்டு சொல்றா. அந்த ஊர்ல எதுக்கெடுத்தாலும், சாமியெரக்கி, சாமியத்தர் கேக்குறது வழக்கம். இதுக்கும் சாமியெரக்கிக் கேக்குறாங்க. 

அப்ப,கோடாங்கி, உடுக்கடுச்சுச் சாமியெரக்குறர். எப்டி உடுக்கடிக்கிறாண்டா பிள்ளையாரடி பிள்ளையாரடிண்டு அடிக்கிறா. அடிச்ச அடில, உடுக்கு ஒடஞ்சு போச்சு. உடுக்கு ஒடயவும், சாமி மலையேறியிருச்சுண்ட்டு ஒக்காந்துக்கிட்டர் பிள்ளையாரடி – பிள்ளையாரடிண்டு அடிச்சானே. பிள்ளையாருக்குக் கீழ குறி இருக்குமோண்ட்டு, பிள்ளையாரத் தூக்குனாங்க. எல்லாம் பெரியதனத்துக்காரனோட செட்டப்தான். தூக்கிப் பாத்தா, கீழ ஒரு ஓல இருக்கு. அந்த ஓலைல 

கொசவன் சுள்ள போட 

புகை கிளம்ப 

மேகந் திரள 

மழ பேய-ண்டு 

இருந்திச்சு. இருக்கவும் எல்லாரும் கொசவனப் புடுச்சுட்டாங்க. மழபேஞ்சதுக்கு, கொசப்பயதான் காரணம்ண்ட்டு, அவனத் தெண்டம் வச்சுப்பிட்டாங்க. ஏழு வண்டி ஏலக்கா, மாடு – வண்டி அம்புட்டயும் கொசவந்தான் தரணும்ண்டு பெரியதனத்துக்காரன் சொல்லிட்டர். மீற முடியல, சொத்தப் பூராத்தயும் வித்துக் குடுத்திட்டா. 

சொத்துப் போகவும், ஏழயாப் போனர் கொசவன். ஏழயாப் போன கொசவன், வாழ்க்கைல ரொம்பக் கஷ்டப்படுறா. 

ஒருநா தேவையில, பெரியதனக்காரன், வயக்காட்டுக்குப் போறா. போகயில, இந்தக் கொசவன் மேக்க திரும்பி, வானத்தப் பாத்துக்கிட்டு இருக்கர். என்னா? மேக்க பாத்துக்கிட்டு நிக்கிறண்டு பெரிய தனக்காரன் கேக்குறீர். அப்ப, எம் பொண்டாட்டி சட்டி விக்யப் போனா. இன்னும் வரல. அதான் பாத்துக்கிட்டிருக்கேண்டு கொசவன் சொல்றா. 

வரலண்டு சொல்லவும், பெரியதனக்காரனுக்கு மனசு எரங்கிப் போச்சு. அவ் மேல ரொம்ப எரக்கப்பட்டு, ஒனக்கு நல்ல காலம் வருது, நிய்யி நாலஞ்சு சட்டி செய்ண்டு பெரியதனக்காரன் சொல்றர். சட்டி செஞ்சு ஆடி மாசம் பதினெட்டாந் தேதி அண்ணக்கி, சுள்ளய வையி, நான் ஒன்னய பொழைக்க வக்கிறேண்டு சொல்லிட்டுப் போயிட்டா. 

போகவும், நாலஞ்சு சட்டிகள, சும்மா பேருக்குச் செஞ்சு, ஆடி மாசம், பதினெட்டாந் தேதி சுள்ளய வச்சிட்டர் கொசவன். 

அண்ணக்கி மழ பேஞ்சிருச்சு. கொசவ, பெரியதனக்காரன் வீட்டுக்கு வந்தர். நான் சுள்ள வச்சதுனால் தான் மழ பேஞ்சுச்சு. இது என்னோட மழ ஊர்ல யாரும் வெதைக்கப்பிடாதுண்டு தண்டக்காரன விட்டுச் சாட்டச் சொல்றாண்டு பெரியதனக்காரன் சொல்லித் தந்துட்டர். விடுவானா கொசவன்? 

பெரியதனக்காரன் சொன்னது மாதிரி சாட்டிப்பிட்டர் வெதைக்கவிடாமச் செஞ்சுபிட்டா. 

ஊர்ல பஞ்சாயத்துக் கூடுது. அப்ப, பெரியதனக்கார், அண்ணக்கி அவன் சுள்ள போடவும் மழ பேஞ்சுச்சு. இண்ணக்கிம் அவன் போட்ட சுள்ளயினாலதா மழ பேஞ்சுச்சு. பாவம், அவனும் ரொம்ப ஏழயா இருக்கா. அதுனால, அவனுக்கு ஏதாச்சும் குடுத்துட்டுப் போயி, வெதைங்கண்டு பெரியதனக்காரன் சொல்லவும் அதுவும் சரிதாண்டு ஊராளுங்க சொல்றாங்க. 

பெரியதனக்காரன சொல்லவும், ஏருக்கு நாலஞ்சு ரூபா எல்லாரும் ஒப்புக் கொண்டுகிட்டு, ரூபாயத் தந்தாங்க. அத வாங்கி நல்லாப் பொளச்சானாம். காரியக்காரனப் பகைக்கக் கூடாதுண்றது இதுக்குத்தான். பெறகெதுக்கு. 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *