புளி மூடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
இணைய வெளியீடு: November 10, 2026
முதற்பதிப்பு: 1994
பார்வைகள்: 131 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாஞ்சிலாரின் முதுகலைக் கணிதப் படிப்பு, புள்ளியல் பாடம் உள்ளடக்கியதால், அவரது விஷயங்களைப் படிப்படியாக அடுக்கி வைக்க உதவுகிறது. எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்தல் அவர் செயலை நேர்த்தியாக்குகிறது. தன் படைப்பில் தான்தான் கதாநாயகன்.. தன்னுணர்வுகள்தான் கதையின் கரு,.. தன்னைத் தாண்டிச் செல்வதை படைப்பின் பலமாய் இருந்து, படைப்புகளின் யதார்த்தத்தை, மென் உணர்வுகளென நிலை நிறுத்துகிறது.


நினைவு தெரிந்த நாள் முதலே அந்தப் புளிய மரம் நின்றது. தேரேகாலின் கரையில், ஆற்றங்கரை சாலையாகியபோது, ஊருக்கு மேற்கிலிருந்து நுழையும் வாயிலில். பின்பு புளிய மரத்தை அடுத்து ஆரம்பப் பாடசாலை வந்தது. சின்ன ஊருக்குச் சின்னப் பாடசாலை. நீளவாக்கில் மோட்டுக்காமணம் போல ஒட்டுப்பணி ஐந்து கரும்பலகை கள் ஐந்து வகுப்புகளுக்கு அடையாளங்கள். வேறு பிரிப்புக்கள் கிடை யாது. ஐயர் வாத்தியார் பாடம் நடத்தினால் ஐந்து வகுப்புகளுக்கும் கேட் டது. பாடசாலையின் முன்னால், கூடத்துக்கு இணையாக ஓடும் நீண்ட கல்தூண்கள் நின்ற வராந்தா. முன்னால் ஒரு கொடிக் கம்பம், சிறிய பெயர்ப் பலகை.

அந்தப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் புளிய மரத்துக்கும் நீண்ட காலச் சொந்தம். எல்லாத் தொட்டு விளையாட்டுக்களுக்கும் புளிய மரம் தாச்சி! பழங்காலப் புளி ஆனதால் ஏறுவதற்குத் தோதான கிளைகள் கிடையாது.மூன்று பேர் நின்றால் மரத்தை ஆவிச் சேர்த்துப் பிடிக்கலாம்.

ஊருக்குப் பஸ் வந்தபோது புளியமரமும் பஸ் ஸ்டாப் ஆனது. புளிய மரத்தின் உடலில் ஆணி அடித்து அந்த ஊர் இளைஞர் மன்றத்தார் பஸ் வரும் நேரம் குறித்த அறிவிப்புப் பலகை தொங்கவிட்டனர். ஆனால் பஸ் வழக்கமாய் மூன்று நாட்களில் நான்கு முறைதான் வந்தது.

எல்லாப் பருவங்களிலும் பள்ளி இடை நேரங்களில் புளியம்பூ பொறுக்கினார்கள் மாணவர்கள். பள்ளிக்கூடத்தில் ஒன்றுக்குப் போவதற் கெல்லாம் தனி இடம் கிடையாது. ஒன்று ஆற்றங்கரை அல்லது புளிய மூடு. ஒரு வேறுபாடு, பையன்கள் நின்றும் சிறுமிகள் அமர்ந்தும். மதிய உணவு இடைவேளையில் தேவையானால் குளிக்கலாம். உடுப்பையும் நிக்கரையும் புளிய மர மூட்டில் உரிந்து வைத்துக் கொள்ளலாம்.

பண்டாரம் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கூட இடைவேளை மணி அடித்ததும் அம்மாவிடம் பால் குடிக்கப் போனான். மணி அடித் ததும் முதலில் வெளியில் சாடுபவன் அவன்தான். புளி காய்த்திருக்கும் சீசன்களில் பால் குடிப்பதை மறந்து புளியம்பழம் பொறுக்கினான். ஆற்றங்கரையில் நின்ற மரமானாலும் பெரிய வாலாங் கொத்துக்கள் கிடையாது.பெரும்பாலும் ஒற்றைக் கொட்டை. தவறினால் இரட்டைக் கொட்டை. நொண்டங்காய் கிடைத்தால் நல்ல ருசியாக இருக்கும். தவசி முத்து டீச்சருக்கும் நொண்டங்காய் பிடிக்கும்.

திருக்கார்த்திகைக்கு ‘வாணப்பூ வர்ணப்பூ’ என்று சுழற்றிக் கொண்டோடக் கட்டும் வாணத்துக்கான கரிப்பொடிக்குப் புளியம் பட்டையும் வேண்டும். ஐப்பசி மாதக் கடைசியில் பட்டை பெயர்ந்து புண்பட்டு நிற்கும் அடிமரம்.

வடக்கு மலையில் மழை பெய்தால் பழையாறும் தேரேகாலும் செங்காவி நிறத்தில் புது வெள்ளம் நுரைத்துப் பெருகும். தாழக்குடி பெருங்குளம் உடைத்துவிட்டால் பள்ளிக்கூடப் படிப்புரை மட்டத்தில் தண்ணீர் மோதும். புளிய மரத்துக்கு இடுப்பளவு இருக்கும். பெரு வெள்ளத்தில் இன்னதெல்லாம்தான் வரும் என்று சொல்லமுடியாது. மலைபடு பொருட்கள், பத்து நாட்கள் முன்பு புதைத்த பிணம், எவளோ தண்ணீர் கோரப் போய்க் கை தவறிவிட்ட பித்தளைக் குடம், மலைப்பாம்பு…

அப்படி மழைக்காலத்தில் வந்த பாம்பொன்று புளிய மரத்தில் குடி புகுந்திருக்க வேண்டும். குடியிருக்கத் தோதாகப் புளிய மரத்தின் அடி வயிற்றில் பெரிய பொந்தொன்றும் இருந்துதான் ஆகவேண்டும்.

அந்த ஊரில் கள்ளர் பயம் கிடையாது. பேய்க்கு ஊர்ப் பெண்டிர் பயந்தவரும் அல்ல. முன்னிரவு நேரத்தில் கொல்லைக்குப் போய்விட்டு ஆற்றுப்படித் துறையில் கால் கழுவி வந்த பெண்ணுக்குப் புளியமரத்து மூட்டில் வடம் போல் ஏகதேசமாய் ஏதோ ஒன்று புரள்வது தென்பட்டது. “ஐயோ பாம்பு” என்று அலறியோடியவள் வீட்டுக்குப் போன பிறகும் மூச்சு வாங்கியது.

பஸ் கால அட்டவணைக்குப் பக்கத்தில், இளைஞர் மன்றத்துக் காரர்கள் ‘புளிய மரத்தில் பாம்பு வசிக்கிறது-எச்சரிக்கை’ என்று எழுதி, மின்சார இலாகாவினர் போடுவது போல் ஒரு மண்டையோட்டுக் குறியும் வரைந்தனர். புளிய மரத்தில் இறுகிய இரண்டாவது நாலங்குல ஆணி அது.

நல்ல போதையிலிருந்த தாணப்பன், சுசீந்திரம் தேர்வடம் கனத்தில், முன்தினம் இரவில், பாம்பைக் கண்டதாகச் சொன்னான்.

கூடுமானவரை பாம்பும் மனிதர்கண்ணில் தென்படாமல் நடமாட முயற்சி செய்திருக்கலாம். ஆனால் எத்துக்குத்தாய் தென்பட்டுப் புதுப்புது பீதி கிளம்பியது.

ஊருக்கு நடுவிலிருந்த முத்தாரம்மன் கோவில் வாசலில் படம் விரித்து நின்றதை இரவில் (வாழைக் குலை திருடி விட்டுத் திரும்பு கையில்) கண்டதாக ஒருவர் சொன்னார்.

அதிகாலை ஐந்தரை மணிக்குத் தொழுவில் பால் கறக்கப் போகும் போது, கராச்சிப் பசுவின் சுரந்து நின்ற மடியில், பாம்பு கன்றுக்குட்டி போல முட்டி முட்டிப் பால் குடித்துக்கொண்டிருந்ததாக வேறொருவர் சொன்னார்.

உறியில் அடை வைக்க வைத்திருந்த முட்டையில் மூன்றைக் குடித்து விட்டது என்றாள் ஒருத்தி.

இளைஞர்மன்றம், ‘புளிய மரத்தை உடனே வெட்டு’ என்று சுவரில் எழுதியது.

ஊர் முதலடிக்குச் சின்ன வயதில் உதயம்பழம் தின்ற உணர்வு பல்லில்லா வாயில் சுரந்தது.

புளிய மரத்தின் மூட்டில் நாகர் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து பால் ஊற்றினால் தொந்தரவு செய்யாது என்றனர்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும் மொத்தப் பிள்ளைகளும் பாம்பு கடித்துச் சாகும் அபாயத்தில் இருப்பதாய்ச் சொன்னார் மூக்கையா வாத்தியார்.

“பாம்பு யாரையும் கடிக்காது ஓய். நீர் அதைக்கடிக்காமல் இருந்தால் போதும்!” என்றார் ஐயர் வாத்தியார், இடக்கரடக்கலுடன்.

புளிய மரத்தை வெட்டுவது என்பது அவ்வளவு லேசான காரியமும் அல்ல.

பூதப்பாண்டி தாசில்தாருக்கு ஒரு ‘அர்ஜி’ எழுதி முக்கால் ரூபா ஸ்டாம்பு ஒட்டிக் கொடுக்க வேண்டும். அது தாழக்குடி பகுதிக் கச்சேரி பார்வத்தியக்காரருக்கு வரும். அவர் வந்து பார்த்து விசாரணை செய்து தாசில்தாருக்கு எழுதவேண்டும்.

  1. மேற்படி புளிய மரத்துக்குப் பாத்தியதைக்காரர் உண்டா?
  2. மரம் புறம்போக்குப் புரையிடத்தில்தான் நிற்கிறதா?
  3. மரத்தை வெட்டுதல் உண்மையில் அவசியம் தானா?
  4. மரத்தின் உத்தேசமான வயது என்ன?
    5.மரத்தின் குத்துமதிப்பான மதிப்பீடு என்ன?
  5. புறம்போக்கு மரம் என்றால் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளதா?
  6. குத்தகைக்கு ஏலம் பிடித்தவரின் அனுபோக காலம் இன்னும் எவ்வளவு பாக்கி உள்ளது?
  7. குத்தகைத் தொகை முழுவதும் வசூலாகியுள்ளதா?
  8. மரத்தை வெட்டினால் இனக்கலவரம் வருமா?

இத்தனையும் ஆனபின் தாசில்தார் மரத்தை முறித்தெடுப்பதற்கு ஏலம் விடும் தேதியை நிர்ணயிப்பார்.

முதலடி தன் மகளுக்கு வரும் வைகாசியில் கல்யாணம் கழிக்கலாம் என்றிருந்தார். புளிய மரம் ஏலத்தில் கிடைத்தால், அடியந்திரத்துக்கு விறகு வெளியில் வாங்கத் தேவை இராது. புளிய விறகு நன்கு நின்று எரியும். நல்ல வைரம் பாய்ந்த பழையமரம். மூட்டுத்தடி மாத்திரம் மூன்று துண்டாகக் கசாப்புக் கடைக்காரனுக்குக் கொடுத்தால், ஏலத் தொகையும் வெட்டி மாற்றும் கூலியும் வசூல். கொப்புகளும் வாறுமாய் நாலுவண்டிப் பாரம் இருக்கும். தாலுகா ஆபீசில் குமாஸ்தாவாக இருக்கும் சொக்காரன் மகன் சுப்புக் குட்டியிடம் சொல்லி வைக்க வேண்டும்.

ஆனால் பாம்பு இருக்கிறது என்ற காரணத்துக்காகப் புளிய மரத்தை முறிக்க ‘அர்ஜி’ கொடுக்க முடியாது. அப்படிப் பார்த்தால் புறம்போக்கு மரங்கள் அநேகமும் பொந்துகள் கொண்டவை. பொந்துகளில் பாம்பு தாமசிக்கவே செய்யும். சொல்லாமல் கொள்ளாமல் வெட்டி மாற்றலாம் என்றால், எல்லாப் புறம்போக்கு மரங்களுக்கும் எண்கள் இருந்தன. ஆனால் எல்லா மரங்களும் மூளிபட்டுத்தான் நின்றன. சர்க்காருக்கு எண் எழுதிய அடிப்பாகமும் சாத்திரத்துக்கு ஒரு கிளையும் விட்டு வைத்து விட்டு குத்தகைக்காரர் தேவைக்குக் கொப்புகளைத் தறித்துக் கொள்வார். வேறு குத்தகையில்தான் என்ன வருமானம்? தென்னை, பனைகளுக்குக் கிளைகள் இல்லை என்பதால் பெரிய லாபமில்லை. மாப்பிள்ளை பிடித்த காசு பிள்ளை அழிக்க ஆச்சு என்பது போல், தென்னை மரங்கள் உச்சிக் கொண்டையில் நாகமணி போல் சேமித்து வைத்திருக்கும் காய்களைப் பறித்தால் ஏற்றுக் கூலிக்குத்தான் சரியாக இருக்கும்.

புளிய மரம் ஊருக்கு நுழைவாயிலில் நின்றதால், கொஞ்சம் நிழலும் தந்து, காயும் உதிர்த்ததால், அது கிளைகளைப் பறிகொடுத்து மூளி பட வில்லை. மேலும் ஊரில் எப்போதும் மக்கள்வழி, மருமக்கள் வழி என்று எதிரணிகள் உண்டு. ஊர்ச்சண்டை வளரும்.

பாம்பு வசிக்கிறது என்ற காரணம் தவிர்த்து வேறு என்ன காரணம் வலுவாக எழுத முடியும்? மரத்தின் அடிப்பாகத்தில் பெரும் பொந்து ஆள் நுழையும் அளவில் இருக்கிறது. எனவே மரம் எப்போது வேண்டு மானாலும் சாய்ந்து உயிர்ச்சேதம் உண்டாகலாம். அதிலும் பள்ளிச் சிறுவர்கள் எப்போதும் விளையாடுமிடம். ஆதலால் அபாயம் இன்னும் அதிகம் என்று எழுதலாம். வேண்டுமானால் அடிமரத்தில் கோடரி கொண்டு கொத்திப் பொந்தைப் பெரிதாக்கி, கொத்தியது தெரியாமல் களிமண் பூசி வைக்கலாம். பார்வத்தியக்காரருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தால் சரியாகிப் போகும். சில சமயம் அவரும் ஒரு வண்டி விறகு கேட்பார், பணம் தருவதாய்ச் சொல்லி. விறகுக்கும் பணம் வராது. வண்டி வாடகையும் நஷ்டம். அடிமரத்தில் பொந்து செய்யும்போது பாம்பு பாய்ந்து வெளியே வந்தால் என்ன செய்வதென்றான் ஒருவன். பொந்தில் புகை போடும் யோசனையும் அதனால் போயிற்று.

ஆனால் பாம்பு அது பற்றிய அக்கறைகள் இல்லாமல் இருந்தது.

மப்பும் மந்தாரமுமாய் இருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அது இரைதேடி வெளியே வந்தது. கால நேர நிர்ணய சக்தி கடந்த மூப்பு அதற்கு வந்திருக்க வேண்டும். காலனின் விளி அதன் கட்செவிக்கு எட்டி இருக்க வேண்டும். அல்லது பசி எல்லாவிதத் தற்காப்பு உணர்வையும் தகர்த்திருக்க வேண்டும்.

புளிய மரத்தின் அடிமரம் முடிந்து கிளைகள் தொடங்கும் இடத்தி லிருந்து புறப்பட்டுச் ‘சரசர’ வெனக் கீழிறங்கியது பாம்பு.

மதிய உணவு தாண்டிய மயக்கத்தில், புளிக்கறி ஏப்பம், நெத்திலிக் கருவாட்டுப் புளிமுள ஏப்பம், தீயல் ஏப்பம் விட்டுக்கொண்டு பள்ளிக் கூடப் படிப்புரையில் பத்து இருபது பேர் படுத்தும் சாய்ந்தும் கிடந்தனர். பீடிக்குத் தீப்பெட்டி தேடியவன்கண்ணில் பாம்பு இறங்குவது தெரிந்தது.

நொடியில் சக்கரவியூகம் போலும் துரியோதனப் படைகள் போலும் அபிமன்யு போலும் ஒரு காட்சி அமைந்தது.

நல்ல பாம்புதான். சங்கு முத்திரை தெளிவாகக் காணக் கிடைத்தது. அரைமனதுடன் படம் விரித்துப் பாம்பு சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்தது.

பாரவண்டியின் தட்டிக்கு நின்ற காட்டுக் கம்புகளில் நான்கைப் பிடுங்கி வந்தனர்.

சூழ்நிலையைப் பதிவு செய்துகொண்டு, கால் வட்ட வடிவில் திரும்பி,காற்றை முழுதாய் உள்வாங்கி, பாம்பு முதல் சீற்றத்தை எழுப்பு முன் ‘சொத்’தென்று கழுத்தில் கம்பு விழுந்தது. பாம்புதுவண்டு விட்டது. போடுபோடென்று போட்டுத் தலையைச் சதைத்துவிட்டனர்.

பாம்படித்துப் போட்ட செய்தி கேட்டு ஊர்ச்சனம் பூரா புளியமரத்து மூட்டில்.

”ம்… சனியனைத் தூக்கி வேலியிலே வீசுங்கப்பா” என்று முதலடி சலித்தார். நல்ல காய்வு கொண்ட புளிய விறகு கைதவறிப் போன சோகம் சொல்லில் சுண்டியது.

“யேய்… இண்ணைக்கு நாயித்துக் கௌமை… நாகப்பாம்பைக் கொண்ண பாவம் நாலு செம்மத்துக்கும் தீராது. குழி தோண்டி, பாலூத்தி, புதைக்கணும்!” என்றார் ஒரு கிழவர்.

பாம்பின் வால் இறுதி அசைவுகளில் இருந்தது.

“நல்ல செத்திட்டா பாருங்கடே… திரும்பி உசிரு வந்திட்டுண்ணா நூறு மைலு தாண்டீண்ணாலும் எந்தப் பத்தயத்துக்குள்ளே போயி ஒளிச்சுக்கிட்டாலும் தேடி வந்து கொத்தும்!” என்றார் ஒருவர். அவர் சமீபத்தில் மணத்திட்டை டூரிங் டாக்கீஸில் தொலைந்து போய்விட்ட நாகமாணிக்கத்தைத் தேடி அலையும் பெருந் தொடைகள் கொண்ட நாகராணிப்படம் ஒன்று பார்த்திருந்தார்.

இனி பாம்புக்கு உயிர் வர வேண்டுமானால் தெலுங்கு சினிமாவின் மந்திரவாதிதான் வரவேண்டும்.

“சரிடே… சவத்தைப் பொதைச்சிரலாம். நயினாரு… வீட்லே போயி அரைத் தம்ளர் பாலுகொண்டா… பூசாரி வீட்டிலே கொஞ்சம் பூ கேளு… ராமசாமி கடையிலே மூணு சாம்பிராணித் திரி வேண்டிக்கோ…”

ஆற்றங்கரை ஓரம் நின்ற மஞ்சணத்தி மூட்டில் குழி தோண்டுவது என்று தீர்மானம் ஆகியது.

யார் வயலிலேயோ தளை கொத்தி வைத்துவிட்டு கோடி மண் வெட்டியுடன், பத்ரகாளி வயற்காட்டில் இருந்து ஆற்றில் இறங்கி, மண்வெட்டியைப் பளபளப்பாகக் கழுவி, கைகால் முகம் கழுவி, நான்கு வாய் தண்ணீர் குடித்துவிட்டு, ரோட்டில் ஏறிப் புளியமர மூட்டுக்கு வந்து, எட்டிப் பார்த்து, துவர்த்தால் முகத்தைத் துடைக்கலானான்.

பத்ரகாளிக்கு இருபது வயதிருக்கும். அந்த வயதில் சுமக்க வேண்டிய சுமையல்ல அவன் சுமந்துகொண்டிருந்தது. போன தலை முறையில் காலாட்டி உட்கார்ந்து சாப்பிட்ட குடும்பம். பத்துப் பூரா பயிரேறி முடிந்து, எல்லா நாட்களிலும் நிரப்பாக வேலையில்லாத ஒறுவினைக்காலம். மதிப்புச் சோலியாக இருக்க வேண்டும். காலையில் போய் ஒரே எடுப்பாக நின்று தீர்த்துவிட்டு வருகிறான் போலும்.

முகத்தில் நல்ல பசி தெரிந்தது.

அது மதியம் சாப்பிடாத பசி மட்டும் அல்ல. இரண்டு மூன்று வேளைகளுக்கான பசியின்கூட்டுத் தொகை.

முதலடி சொன்னார் –

”யேய்… பத்ரகாளி வந்திற்றாண்டே.. மம்பிட்டியும் வச்சிருக்கான்… மக்கா ஒரு குழி தோண்டீருலே…”

ஒரு சிங்கிடி சொன்னார்-

“ஒரு முட்டளவு ஆழம் இருக்கட்டும் என்னா? அதும் ஒரு புண்ணியந்தான் பாத்துக்கோ…”

பத்ரகாளியின் வயிறு, எட்டு நாள் இரை எடுக்காத சாரைப் பாம்பு போல், ஒரு எவ்வு எவ்வி இறங்கியது.

முதலடியைப் பார்த்துச் சொன்னான்-

“தோண்டீரலாம் பாட்டா… ரெண்டு ரூவா ஆகும்…”

“ஏய்… இது… இது என்னதுடே?”

“கட்டும்ணாபாரும். இல்லாட்டாவேற ஆளை விட்டுத் தோண்டிக்கிடும்…”

மண்வெட்டியைத் தூக்கித் தோளில் சாத்தி, பத்ரகாளி நடந்து போனான்.

புளியமரம் தன்னுயிர் தப்பியதற்கும் சேர்த்து, சற்றுக் குலுங்கிக் கொண்டது.

– புதிய பார்வை, மே 1994.

நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *