கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 7,842 
 
 

(1943ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2

1. குழந்தைப் பருவத்துக் கனவுகள்

ஸ்நான அறையில், ஒவ்வொரு செம்பாக வெந்நீரை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டபோது எனக்கு வெகு ஆனந்தமாக இருந்தது. மூன்று ‘வாளி’களிலும் இருந்த வெந்நீர் தீர்ந்து விட்டதைக் கண்டதும், சிறுகுழந்தை வருத்தப் படுவதுபோல என் முகம் சுண்டியது. துண்டை எடுத்து உடம்பைத் துடைத்துக்கொண்டே, ‘தண்ணீரைப் பார்த்தால் மனிதனின் பால்யம் திரும்புகிறது’ என்பது உண்மைதான். அவனுக்குத் தண்ணீரோடு விளையாடத் தோன்றுகிறது. நம் ஸம்ஸ்கிருத கவிகள் தண்ணீருக்கு ஜீவனம் என்று பெயர் வைத்திருக்கிறார்களே; அது வீணுக்கு. அல்ல என்று நினைக்கலானேன். 

ஆனால், ஸ்நான அறைக் கதவின் தாழை நான்’ அகற்றியதுதான் தாமதம்; ‘தண்ணீர் விஷயமாக ஸம்ஸ்கிருத கவிகளின் கொள்கை முற்றும் தவறானது’ என்று கடுமையான குரலில் கூச்சலிட்டுக்கொண்டு, ‘உஸ்’ என்று அலைகாற்று உள்ளே வீசியது. வயல்வழியே ஓடும் பசுமாடுகள் போகிற போக்கில் நெற்கதிர்களில் வாய் வைப்பது போல, உடலை ஊசிபோல் குத்திய அந்தக் காற்றும் மழைநீரையெல்லாம் கூடவே தாங்கி வந்திருந்தது! சுடச் சுட வெந்நீரினால் இன்புற்ற என் உடல்மீது சில்லென்ற அந்தத் திவலைகள் பட்டவுடனே எனக்குப் புல்லரித்தது. 

நான் வெளியே பார்த்தேன். மழை ஓயாமல் ‘சோ’ வென்று பெய்து கொண்டிருந்தது. மழை ஒரு பாட்டம் பெய்து விட்டதோ இல்லையோ, மறுபடியும் வானம் கவிந்து கொண்டு வரும். இருண்ட வானம் என் கண்ணுக்குக் கலங்கிய கடல் போலத் தோற்றியது. அந்த மழைச் சரங்களை அந்தக் கடலிலே உயர எழும்பி வீசும் அலைகளென்றே சொல்லலாம். 


மாடி வராந்தாவில் நின்றுகொண்டு அழகிய பயங்கரமான அந்த அடைமழைக் காட்சியைக் கண்ட மாத்திரத்தில், கணப்பொழுது நான் என் உணர்வையே இழந்தேன். எழில் நிரம்பிய ஒரு சபாமண்டபத்தில் எண்ணிலா மின்சார விசிறிகள் கிர்கிர்ரென்று சுழலுவதுபோல, என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் மரங்களின் நுனிக் கிளைகளெல்லாம் ஆடிக்கொண் டிருந்தன. வீட்டுக்கு வெளியில் வாய்க்கால் வழியே சலசலவென்று ஓடிய நீரைக் கண்டதும், பள்ளிக்கூடம் விட்டவுடனே வெளியே ஓடிவரும் சிறுவர்களின் கும்பல் என் நினைவுக்கு வந்தது. தெருவில் எவனோ ஒருவன் போய்க் கொண் டிருந்தான். தன் குடையைச் சமாளிக்க அவன் பட்ட பாடு; அப்பப்பா! 

அந்தக் காட்சியைக் கண்டு நான் சிரிப்பதாயிருந்தேன்; ஆனால் உடனே எனக்கு முத்தண்ணாவின் நினைவு வந்தது. சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று, வெகு நாட்களாகச் சொல்லி வந்தும், அஜயனின் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துக்கு அவர் வரமுடியாமற் போயிற்று; அதனால் இன்று கட்டாயம் வரவேண்டுமென்று அவரிடம் சொல்லியிருந்தேன். ஞாயிற்றுக் கிழமை யாதலால் வேடிக்கையாக நாலு நாழிகை வம்பளக் கலாம் என்ற ஆனந்தத்தில் மூழ்கியிருந்தேன்; ஆனால், ‘இன்று என்ன கிழமை?’ என்று பார்த்துக்கொண்டா வருகிறது மழை? 

சென்ற ஞாயிற்றுக்கிழமை ஜூரம் வந்ததால் முத்தண்ணா வர முடியவில்லை. இன்னமும் அவர் உடம்பு சரியான பாடில்லை. ஆகையால், ‘காற்றுப் பட்டு ஜுரம் மறுபடியும் திருப்பிக் கொண்டால் என்ன செய்வது?’ என்று அவர் நினைக்கலாம். 

இன்று முத்தண்ணா வராவிட்டால் அடியோடு ஸ்வாரஸ் யமே இல்லை. போன ஞாயிறன்று, அஜயனின் ஆண்டு நிறைவுக்காக ஐம்பது பேர் வந்து கூடியிருந்தார்கள் என்பது வாஸ்தவமே; ஆனால் முத்தண்ணா ஒருத்தர் வராததனால், அந்தக் கொண்டாட்டத்தில் ஏதோ குறை இருப்பதாக எங்கள் இருவருக்கும் அடிக்கடி தோன்றியது. 


முத்தண்ணாவின் விஷயத்தில் எனக்கு இத்தனை பரிவு உண்டாவதற்குத் தக்க காரணம் உண்டு. சாதாரண ஹைகோர்ட்டு வக்கீலாக இருந்தும், சென்ற இருபது வருஷ காலமாக வக்கீல்களிடையே முதல் ஸ்தானம் வகிப்பதை அவர் இன்னும் விடவில்லை. இதனால் அவருடைய அறிவு அதிகப் பிரகாசமாக விளங்கியது; புதிய வக்கீல்களைக் கை கொடுத்து முன்னுக்குக் கொண்டு வந்ததில் வெளிப்பட்ட அவருடைய தாராள மனப்பான்மையும் அதிகம்; அது அவர் பெருமைக்கு அழகு செய்வதாக இருந்தது. 

என் முதல் வழக்கிலேயே நான் தோற்றுப்போய் நம்பிக்கையை அடியோடு இழந்துவிட்டேன். பம்பாயை விட்டுப் பேசாமல் ஓடிவிடுவதென்றும் எங்காவது உபாத்தி யாயராவதென்றும் அப்போது எண்ணமிட்டேன். ஆனால் முத்தண்ணா எனக்குத் தைரியமூட்டினார். அந்த வழக்கை நடத்தியபோது நான் செய்த பிழைகளை அவர் தண்ணிய மொழிகளில் எனக்குச் சொல்லிக் காட்டினார்; கடைசியில், “வாழ்க்கை என்பது ஊ ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது” என்று எனக்கு உபதேசம் செய்தார். 

அவருடைய இந்த வாக்கியந்தான் முதலில் என்னைப் புகழ் பெற்ற வக்கீலாக்கியது; பிறகு அன்புள்ள மனைவியையும் எனக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. 

இந்த வாக்கியம் நினைவுக்கு வந்ததும், ‘முத்தண்ணா இந்த அடைமழைக்குப் பயந்து வராமலே இருந்துவிடுவார் என்ற என் சந்தேகத்துக்கு ஆதாரமே இல்லை’ என்று எண்ணினேன். 


மழை சற்று ஓய்ந்திருந்தது. எங்கிருந்தோ இரண்டு குருவிகள் சிறகடித்துக்கொண்டு வந்தன. வராந்தாவின் மூலையில் அவை புகலிடம் தேடலாயின. அவற்றில் ஒன்று ஒரு சரத்தின் சிறு சந்தில் பட்டென்று போய் உட்கார்ந்தது; மற்றொன்று கணப்பொழுது அங்கேயே படபடவென்று ஓசைப் படுத்தியது. பிறகு அவை இரண்டும், மீண்டும் தொடங்கிய மழையில் நனைந்தபடி எங்கோ தொலைவில் பறந்து சென்றன. 

முத்தண்ணாவின் வருகையை எதிர்பார்த்து நான் வராந் தாவில் அப்படியே நின்றிருந்தேன். எதிர் வீட்டுப் புழைக் கடையிலிருந்து எலும்புந் தோலுமான பெண்மணி ஒருத்தி, குடத்தை இடுப்பில் சுமந்து, மழையில் நனைந்தபடியே தண்ணீர் கொண்டுவரச் செல்வதை நான் பார்த்தேன். என் வீட்டில் அருணா கிராமொபோன் வைத்திருந்தாள். அதன் இசை என் காதில் விழுந்தது : 

“குழந்தைப் பருவத்துக் கனவுக ளெல்லாம் 
கொள்ளை கொண்டவர் ஆரோ?-எல்லாம்
கொண்டு போனவர் ஆரோ?” 

என்ன காரணத்தினாலோ, என் மனம் வீணாக அமைதியை இழந்தது. 

வாசலில் தபால்காரனைப் பார்த்தபோது, தலையிலிருந்து ஒரு பெரிய பாரம் நீங்குவதுபோல இருந்தது எனக்கு. 
முத்தண்ணா வரும்வரையில் பொழுது போக்க ஏதாவது சாதனம் கிடைக்குமல்லவா? 

தினசரிப் பத்திரிகையில் வெவ்வேறு இடங்களில் மழை பெய்த செய்திகளை நான் மிகவும் ஊக்கமாகப் படித்தேன். இன்றை மழையின் தொந்தரவை ஆயிரக்கணக்கான பேர்கள் நம்மோடு அநுபவிக்கிறார்கள் என்ற எண்ணம் எனக்குப் பெரிதும் ஆறுதல் அளித்திருக்க வேண்டும். 

மழைச் செய்திகளுக்குக் கீழேயே, வானிலை ஆராய்ச்சி நிலையத்தார் புயல் அடிக்கப் போகும் செய்தியை அறிவித்திருந்தார்கள். 

படித்துக்கொண்டே இருக்கையில் என் பார்வை அந்தப் யத்தியின் கீழ்ப்புறத்தில் சென்றது. 

இயற்கையில் உண்டாகும் எந்தப் புயலும் இணையாக முடியாத அத்தகைய விசித்திரப் புயலொன்று என் மனத்தில் வீசியது. கணப்பொழுது நான் புலனிழந்து சூனியமாக இருந்தேன். இருட்டில் மின்சார விளக்கைப் போடப்போக, மேலே மூடி இல்லாததால் சட்டென்று கையில் பலமான மின்சார அதிர்ச்சி உண்டானால் எப்படியோ, அப்படி ஆயிற்று என் நிலை. 

சாய்வு நாற்காலியில் உடலைச் சாய்த்து நான் கண்களை மூடிக்கொண்டேன்; ‘பத்திரிகையில் சும்மா எதையோ படித்தோம்!’ என்று எனக்குத் தோற்றியது. 

உடனே பத்திரிகையைப் பிரித்து, முன்பு கண்ட அந்தச் செய்திமீது மீண்டும் பார்வையைச் செலுத்தினேன். நான் படித்த ஒவ்வோர் எழுத்தும் அங்கே அப்படியே இருந்தது: 

‘மிஸ் கருணா, பி. ஏ., எல். டி. யின் திருமணம்’ 

கொட்டை எழுத்திலிருந்த இந்தத் தலைப்பின்கீழ், கருணா தன் பள்ளிக்கூடத்து டிராயிங் உபாத்தியாயரையே மணந்து கொண்ட செய்தி வெளியாகியிருந்தது. 

கையிலிருந்த பத்திரிகைத் தாளை நான் கசக்கி எறிந்தேன். 


மூடிய என் கண்முன்பு பழைய நிகழ்ச்சி ஒன்று வந்து நின்றது. பி. ஏ. வகுப்பில் இருந்தபோது, கருணாவும் நானும் ஒரு நாள் உலாவப் போயிருந்தோம். மாமரங்களில் அப்போதுதான் பிஞ்சுகள் விட்டிருந்தன. அவற்றைக் கண்டதும் கருணாவின் வாயில் நீரூறியது. நான் ஒரு மரத் திலேறி இரண்டு மூன்று பிஞ்சுகள் பறித்தேன். பிஞ்சோடு கலந்து தின்ன அங்கே உப்பு அகப்படுவது சாத்தியமாக இல்லை; ஆகவே அது புளிக்கிறதா என்று அறிவதற்காகச் சிறிது கடித்துப் பார்த்தேன். விஷயம் தெரியாமலே, கருணா அதையே எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். தன் தப்பை உணர்ந்ததுமே அவள் முகம் வெட்கத்தினால் சிவந்தது. நான் அவளைப் பார்த்து, “உனக்குப் பெயர் வைக்கும்போது ஒரு தவறு செய்துவிட்டார்கள்!” என்றேன். 

அவள் என்னை இமையாமல் உற்றுப் பார்த்தாள். 

“உன் பெயரில் ‘க’ என்பது தவறாக வந்துவிட்டது; அது ‘அ’ என்று இருந்திருக்க வேண்டும்” என்றேன். 

“என் பெயர் அருணா என்று இருந்திருக்க வேண்டுமோ?”

“ஆமாம்.”

“அப்படியானால் உங்கள் பெயரும் வேறாகத்தான் இருந்திருக்க வேண்டும்!” 

“ஏன்? தேவதத்தன் என்ற பெயர் அப்படி ஒன்றும் கெடுதலாக இல்லையே!” 

“சே! அதைவிடத் திவாகரன் என்ற பெயர் எவ்வளவோ பேஷாக இருக்கிறதே!”

அருணாவும் திவாகரனும்! 


கருணா கருணாவாகவே இருந்துவிட்டாள்; ஆகவே தேவதத்தனும் திவாகரனாகவில்லை. அந்தச் சமயத்தில் நான் வேடிக்கையாகக் கருணாவுக்கு அருணா என்று பெயர் வைத்தேன்; பிறகு அவள் என் கல்யாணக் கோரிக்கையை மறுத்தபோது நான் கோபத்தோடு அவளுக்கு எத்தனை பெயர் வைத்தேன் என்பதைக் கணக்கிடவே முடியாது. 

என்னைவிடக் கெட்டிக்காரனாகவோ, என்னைக் காட்டிலும் பணக்காரனாகவோ அவளுக்கு எவனாவது ஒரு காதலன் இருந்திருந்தால், அவளுடைய மறுப்பின் அர்த்தம் எனக்குப் புரிந்திருக்கும். ஆனால் என்னிடம் மிகவும் மரியாதை காட்டி, “எனக்குக் கல்யாணம் செய்துகொள்ளவே தோன்றவில்லை” என்று அவள் பதில் சொன்னபோது, ‘பெண்களே பெரிதும் தாந்தோன்றிகள் தாம்’ என்றே எண்ணினேன். 

“ஏன், இன்றைக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா என்ன?” என்று என் மனைவி கேட்ட கேள்வி என்னை அந்த மயக்கத்தி லிருந்து எழுப்பியது. அவளைப் பார்த்தவுடனே, சற்று நேரம் முன்பு எனக்குத் தோன்றிய எண்ணத்தை நினைத்து எனக்கே வெட்கம் உண்டாயிற்று. ‘பெண்களே பெரிதும் தாந்தோன்றிகள்!’ என்பது சரிதானா? சட்! சென்ற நாலைந்து வருஷத்திய என் இல்லற அநுபவம், ‘பெண்கள் மிகவும் ஆலோசனை செய்பவர்கள்’ என்றது. முத்தண்ணாவின்’ சொல்லை மீற இயலாததனால் நான் இவளை மணக்கச் சம்மதித் தேன். கல்யாணமான பின்பு எத்தனையோ நாள் வரைக்கும் என் மனைவியிடம் வெறுப்புடனேயே நடந்துகொண்டேன் கருணாவுக்குச் சொந்தமான இடத்தை இவள் ஆக்கிரமித்துக் கொண்டு, எனக்கு ஏதோ மன்னிக்க முடியாத குற்றம், இழைத்து விட்டது போலவே கருதிவந்தேன். 

ஆனால் இவளுடைய தீவிரமான காதல் என் மனத்தை விரைவிலேயே வசமாக்கியது. கற்பனைக்கு அழகான கருணா வின் உருவைவிட, கருத்துக்கு ரம்மியமான மனைவியின் உருவமே என் மனத்தில் நன்றாகப் பதிந்தது. சமீபத்தில், பத்திரிகைகளில் காதற் கதைகளைப் படிக்கும்போதுதான் எனக்குக் கருணாவின் நினைவு வரும்; அதுவும் மங்கிய புகைப் படம்போல. மனத்துக்கு ஆவலூட்டும் வல்லமை அந்த நினைவில் அடியோடு இல்லை. 

இன்று இந்தச் செய்தி மட்டும்- 

முத்தண்ணாவின் கார் வரும் சத்தத்தைக் கேட்டு, நான்- அவ்விடத்திலிருந்து எழுந்தேன். 


என் கவனம் சாப்பாட்டில் இல்லை என்பதை என் மனைவி” பளிச்சென்று கவனித்துவிட்டாள். இத்தகைய விஷயங்களில் பெண்களின் பார்வை ‘மைக்ராஸ்கோப்’பைவிடக் கூர்மை யானது. 

“இன்று என்ன உடம்பு உங்களுக்கு?” என்று அவள்- கேட்டாள். 

முத்தண்ணாவும் திரும்பிப் பார்த்தார். இலையில் இருந்த எந்தப் பண்டத்தையும் நான் தொடவேயில்லை. 

என் உடம்பு ஏதோ செய்துகொண் டிருந்தது; ஆனால் அந்த ‘ஏதோ’வை மனைவியிடம் சொல்ல என்னால் முடியவில்லை. ‘கல்யாணம் செய்துகொள்ளவே எனக்குத் தோன்றவில்லை’ என்று எனக்குப் பதில் சொன்ன கருணா, ஒரு டிராயிங் உபாத்தியாயரை மணந்துகொள்வதா? அன்றைக்கு, வருங் காலத்தில் வக்கீலாகப் போகும் கணவன் அவளுக்கு வேண்டா மாக இருந்தது; இன்று? கல்யாணம் செய்துகொள்ளும்படி அவள் அந்த டிராயிங் உபாத்தியாயரிடத்தில் அப்படி எதைக் கண்டுவிட்டாள்? 

அன்புள்ள மனைவி, தொட்டிலில் கிடக்கும் சிறு குழந்தை அஜயன், சொந்தத் தமையனார்போல விளங்கும் முத்தண்ணா – இவர்கள் எல்லாரையும் கொஞ்சங்கூட லட்சியம் செய்யாமல் என் மனம் கருணாவைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டு இருந்தது. ‘நேராக இப்படியே போய், வாழ்நாள் முழுவதும் மனத்தில் உறுத்தும்படியாக அவ்வளவு கடுமையான சொற் களில் கருணாவைத் திட்டிவிட்டுத் திரும்ப வேண்டும்’ என்று நினைத்தேன். 


முத்தண்ணா வாயில் பாக்கைப் போட்டுக்கொண்டே, “உங்களுக்கு உடம்பு என்ன செய்கிறது?” என்று கேட்டார். என் மனம் பின்னும் அதிகமாகக் குழம்பியது. கல்யாணமாவதற்கு முன்னமே, நான் அவரிடம் என் முந்திய வாழ்க்கை யில் கருணா வந்துபோனதைச் சொல்லியிருந்தேன். அந்தச் சமயத்தில் என் மனத்தைத் திருப்புவதற்கு அவர் தமக்குப் பிரியமான அந்த வாக்கியத்தையே கூறியிருந்தார்; ‘புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவதுதான் வாழ்க்கை’ என்பதைத் தான். 

என் மனத்திலிருந்த காதற்புயல் தணிந்துவிட்டது என்ற நினைப்பில் நான் அப்போது திருமணம் செய்துகொள்ளத் தயாரானேன். ஆனால் சற்று நேரத்துக்கு முன் பத்திரிகையில் அந்தச் செய்தியைப் படித்ததுமே அந்தப் புயல் பேரிரைச் சலோடு திரும்பி மூண்டுவிட்டது. இந்தச் செய்தியை முத்தண்ணாவுக்குத் தெரியாமல் மறைத்து வைப்பதில் பயன் இல்லை. கசங்கிப்போன அந்தப் பத்திரிகைத் தாளை அவரிடம் கொடுத்தேன். 

அவர் ‘டின்ஸ்டினை’ப் பற்றிய செய்தியை வாசிக்க ஆரம் பித்தபோது எனக்கு என்ன கோபம் வந்தது தெரியுமா? கருணாவின் திருமணச் செய்தியைச் சுட்டிக்காட்டி, “இதைப் படியுங்கள்” என்றேன். 

அந்தச் செய்தியைப் படித்ததும் அவர் சாந்தமாக என்னைப் பார்த்தார்; ஒரு விநாடி பொறுத்துச் சிரித்துக் கொண்டே, “காலேஜில் உங்களோடு படித்தாளே; அவள் இந்தக் கருணாதானே?” என்று கேட்டார். 

“ஆம்” என்று தலையசைத்தேன். 

“நீங்கள் அவளுக்கு உங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கடிதம் எழுத வேண்டும்.” 

‘வயதான மனிதர்கள் பட்டுப்போன மரங்களைப் போன்ற வர்கள். மெல்லிய கற்பனைத் தளிர் அவர்கள் மனத்தில் எப்போதும் தளிர்க்காது போலும்!’ என்று எனக்குத் தோன்றிற்று. 

முத்தண்ணா மேலும், “ஒரு சாதாரணப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு நீங்கள் சுகமாகத்தான் இருக் கிறீர்கள்; அல்லவா? கருணாவும் அவ்விதமே சுகமாக இருப்பாள்” என்றார். 

நான் சுகமாக இருக்கிறேன் என்று முத்தண்ணா சொன்னது பொய்யல்ல; ஆனால் நான் முழுக்க முழுக்கச் சுகமாகவே இருக் கிறேனா? இல்லையே! கருணாவின் கல்யாணச் செய்தியைப் படித்தவுடனே, சிராய்த்துக் குணமாகியிருந்த காயத்திலிருந்து திடீரென்று இரத்தமும் சீழும் பெருகுவதுபோல என் மன நிலை மாறிவிட்டதே. 

நான் முத்தண்ணாவைப் பார்த்து, “முதற் காதல் என்பது ஓர் எரிமலை. அது தணிந்ததுபோலத் தோன்றினாலும் மீண்டும் எப்போது பற்றிக்கொள்ளும் என்பதை நிர்ணயிக்க முடியாது” என்றேன். 

முத்தண்ணா அமைதியாக, “உங்களைப் போல் நான் அவ்வளவு காவியப் பித்தனல்ல. ஆனால் எனக்குத் தோன்று வதைச் சொல்கிறேன்: முதற் காதல் என்பது வாழ்க்கையிலே ஒரு புயல். புயலில் அகப்பட்டுக்கொண்டவன், தனக்கு மிகவும் அருகிலுள்ளவனுடைய கழுத்தைக் கட்டிக் கொள்கிறான் அல்லவா? முதற் காதலிலும் அதுதான் நடக்கிறது” என்றார்.. 

காதலைப் போன்ற ஒரு தெய்விகக் கருத்தை முத்தண்ணா. இவ்விதம் அறுத்துக் கிழித்துப் பார்த்ததை நான் அடியோடு. ஒப்பவில்லை என்னும் விஷயம் என் முகத்தில் பிரதிபலித் திருக்க வேண்டும். ஏனெனில், அவர் என்னை உற்றுப் பார்த்து விட்டு, “நான் சொல்வதில் சிறிதளவாவது உண்மை இருக் கிறது என்பதை நீங்கள்கூட ஒப்புக்கொள்வீர்கள். இன்றல்ல, இன்னும் பத்து வருஷங்கள் கழித்து! நல்ல காளைப் பருவத்தில் நான் இவ்விஷயத்தில் உங்களைவிடப் பித்தனாக இருந்தேன்.. ஆனால் அந்தக் காலத்தில், ‘காதலென்றால் என்ன?’ என்பது பற்றி நான் வெறுமே கற்பனை செய்துகொண் டிருந்தேன்.. அது என்ன என்பதை இன்று நான் என் அநுபவத்தினால் சொல்ல முடியும்” என்றார். 

முத்தண்ணாவின் பேச்சு என் மனத்தில் ஒருவிதமான விசித்திர ஆவலை உண்டாக்கியது. முத்தண்ணாவுக்கு ஊர் முழுவதும் மரியாதை; அவருடைய ஒழுக்கத்தைப்பற்றி? யாருக்கும் லவலேசமும் சந்தேகமே இல்லை; ஆதலால்,. காதலைப்பற்றிய அவருடைய அநுபவம் எத்தகையதாக. இருக்கும் என்பதை என்னால் ஊகிக்கக்கூட முடியவில்லை.. கர்நாடக முறையில் நடந்த தம் திருமணத்தை வர்ணிக்க வேண்டுமென்று அவர் ஒருவேளை நினைத்திருப்பாரோ? 

முத்தண்ணா என்னைக் கனிந்த பார்வையோடு பார்த்துக் கொண்டே, “என் அநுபவத்தை உங்களுக்குச் சொல்லு கிறேன். பெரியவர்கள் இத்தகைய விஷயங்களை இளைஞரிடம், அவ்வளவேன், தம்மோடு ஒத்த தம் நண்பர்களிடங்கூடச் சொல்லும் வழக்கமே நம் சமூகத்தில் இல்லை; இதனால் லாபத் தைவிட நஷ்டந்தான் அதிகமாகிறது. இளம் சந்ததியாரின் சிந்தனைகள் கனவுகளினாலேயே வளர ஆரம்பிக்கின்றன. ஏதாவது ஒரு சிறு அடிபட்டால்கூட அந்தக் கனவுகள் சிதைந்துவிடுகின்றன. வாழ்க்கையைப் பற்றிய உண்மை யறிவு இல்லாமையால், அந்தச் சிதைந்த கனவுகளின் துணுக்குகளை ஒட்ட வைப்பதிலேயே அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. ஆயினும், உடைந்த கோப்பையின் துணுக்கு களை ஒட்ட வைத்து அதிலிருந்து யாராவது தண்ணீர் குடிக்க. முடியுமா?” என்றார். 

முத்தண்ணாவின் பேச்சு ஸ்வாரஸ்யமாக இருந்தது;~ ஆனால் அவருடைய கொள்கை எனக்குத் தேவையாக இல்லை;: அநுபவந்தான் தேவையாக இருந்தது. 

அவர் என் முகத்திலிருந்த அமைதியின்மையைக் கவனித்த வுடனே, “நான் டாக்டராவதாக இருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். 

“டாக்டரா!” என்ற ஆச்சரியச் சொல்தான் என் வாயி லிருந்து வெளிவந்தது. முத்தண்ணா வக்கீல் தொழிலில் மிகவும் ஆழ்ந்து லயித்துப்போயிருந்ததைக் கண்டு, நாங்கள் எல்லாரும், ‘அவராக விரும்பி வக்கீலாகியிருக்க வேண்டும்’” என்றுதான் எப்போதும் நினைத்திருந்தோம். 

அவர் என் முகத்தில் தெரிந்த வியப்பைக் கண்டு,. “டாக்டர் தொழில் என்ற திசையை நோக்கி நான் படகைச் செலுத்திக்கொண் டிருந்தேன்; ஆனால் நடுவிலே ஒரு புயல் வந்து வீசியது. படகை எங்கிருந்தோ எங்கோ அடித்துக் கொண்டு போயிற்று. அங்கிருந்து வக்கீல் தொழில் என்னும் கரை எனக்குச் சமீபமாகத் தென்பட்டது; அதைப் பிடித்தேன்; அவ்வளவு தான்!” என்றார். 

புயல்! 

‘காதல் என்பது ஒரு புயல்’ என்று முத்தண்ணா சற்று நேரத்துக்கு முன்புதான் சொல்லியிருந்தார். மேலே அவர் என்ன பேசப்போகிறார் என்பதைக் கேட்க எனக்கு மிகவும் ஆவலாக இருந்தது. 

முத்தண்ணா சொல்லிக்கொண்டு போனார். 

“நான் நாலாவது பாரத்தில் படித்துக்கொண்டிருந்த போதே என் தகப்பனார் இறந்துவிட்டார். என் சித்திக்கு இங்கே சொந்த வீடு இருந்தது. சிற்றப்பா பெரிய வக்கீலாக இருந்தார். என் தாய், தன் தங்கையிடம் புகலடைந்தாள். ஆனால் நான் மெட்றிகுலேஷன் தேறிவிட்டுக் காலேஜுக்குப் போகும் தருணத்தில் இரு சகோதரிகளும் ஆறு மாதங் களுக்குள்ளே இறந்தார்கள். வக்கீல் சீக்கிரமே இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டார். ஆயினும், என் தகப்பனார் வைத்துப்போன பணத்தைக் காப்பாற்றி வைத்து, என்னை டாக்டராக்குவதாகத் தம் மூத்த மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதியை மட்டும் அவர் கைவிடவில்லை. 

“காலேஜில் இருந்தபோது அவரிடமிருந்து சமயத்தில் எனக்குப் பணம் கிடைத்துவந்தது. நானும் பரீட்சைகளில் தேறிவந்தேன். ஆனால் விடுமுறையில் வீட்டுக்கு வந்தாலோ என் பாடு பிராண சங்கடந்தான். வக்கீல் ஐயா எல்லா விஷயத்திலும் இளையாளின் கைக்குள் அடங்கியிருந்தார். அந்த அம்மாளுக்கோ என்னோடு பேசக்கூடப் பிடிக்காது. சக்களத்தி வீட்டு நாய்களைக்கூடப் பெண்கள் கண்டு சகிக்க மாட்டார்கள் என்று சொல்லுவதுண்டு. அப்படியிருக்க, நான் அவளுடைய சக்களத்திக்கு அக்கா பிள்ளை தானே?” 

முத்தண்ணாவின் இந்த வேடிக்கைப் பேச்சில் சிரிக்கும்படி யாக ஒன்றும் இல்லை. அவர் சிரிக்கவே, நானும் சிரிக்கத்தான் வேண்டியிருந்தது. நான் அவரை உற்றுப் பார்த்தேன்.. மேற்பகுதியை எப்படிச் சொல்வது என்று அவர் மனத்துக்.. குள்ளேயே யோசித்துக்கொண் டிருந்தார் போலிருக்கிறது. 

சில விநாடிகள் கழித்து அவர் கதையைத் தொடர்ந்தார்: 

“கோடைக் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் மனிதனுக்குத் தாகம் அடங்குவதில்லை அல்லவா? அவ்விதமே இருபதாவது பிராயத்தில் மனிதனின் மனத்தில் வேட்கை எழுகிறது. தோழர்களோடும் தோழிகளோடும் ஓயாமல் பேச வேண்டும், விளையாட வேண்டும், சிரிக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் வீட்டில் என்னுடைய இந்த வேட்கையைத் தணிக்க யாருமே இல்லை. அந்தக் காலத்தில் இங்கிருந்து காலேஜுக்குப் போகும் பையன்கள் மிகக் குறைவு. வெளியே அவ்வளவாக நண்பர்கள் இல்லை; வீட்டிலும் பரிவுள்ளவர் யாருமில்லை; இந்த நிலையில் நான் பட்ட வேதனையைச் சொல்லி முடியாது. அதே சமயத்தில் எங்கள் வீட்டுக்கு ஒரு புதிய சமையற்காரி வந்தாள். அவளோடு பதினாறு பதினேழு வயதுள்ள ஒரு பெண்ணும் இருந்தாள். அந்தப் பெண் ஆசையோடு எனக்குப் பணிவிடை செய்வாள். மடியான துணிகளை எடுத்துப்போய் ஸ்நான அறையில் வைப் பது, நான் சாப்பிட்டானதும் பாக்கு டப்பியை என் முன்னால் கொண்டு வைப்பது, பூக்கள் எனக்குப் பிரியமாதலால் என் மேஜைமேல் ஞாபகமாக மலர்களைக் கொண்டுவந்து வைப்பது- எல்லாம் சாதாரண விஷயங்களே. ஆனால் இவற்றால் அவளி டத்தில் எனக்குப் பரிவு உண்டாயிற்று. 

“நான் அப்போது மருத்துவக் கல்லூரியில் நாலாவது ஆண்டு படித்துக்கொண் டிருந்தேன். விடுமுறை முடிவதற்கு ஒரு வாரந்தான் இருந்தது. அந்தப் பெண்ணுக்குத் திடீரென்று ஜுரம் வந்தது. அது ‘டைபாயிட்’ என்று தீர்மானமாகத் தெரிந்தது. அவளுக்குப் பணிவிடை செய்ய நான் வீட்டிலேயே: தங்கினேன். ஒரு சமையற்காரியின் மகளுக்காக நான் காலேஜுக்குப் போகாமலிருப்பது வீட்டில் யாருக்குமே பிடிக்கவில்லை. ஆனால் அந்த வயதில் யாரிடமாவது தீவிர மான அன்பைச் செலுத்தினாலன்றி மனிதனுக்குத் திருப்தி உண்டாவதில்லை. அவளுடைய படுக்கையருகில் உட்கார்ந்து இரவும் பகலும் விழித்திருப்பது எனக்குப் பெரு மகிழ்ச்சி அளிக்கும். என்னைப் பார்க்கும் போதெல்லாம், குழி விழுந்த அவள் கண்களில் நீர் நிரம்பி வழியும். அந்தக் கண்ணீரைக் கண்டதும், நான் பட்ட பாடு அனைத்தும் நிறைவேறிவிட்டது என்றே எனக்குத் தோன்றும்.” 

முத்தண்ணா மிகவும் மெதுவாகக் கதை சொல்லி வருகிறார் என்பதை உணர்ந்து நான் இடையிலேயே, “அப்புறம்?” என்று கேட்டேன். 

அவர் சிரித்துக்கொண்டே சொல்லலானார் : 

“அப்புறம், என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடந்தது. அவள் ‘டைபாயிடி’லிருந்து பிழைத்தெழுந்தாள். நான் படுக்கையில் படுத்தேன். நாற்பத்தொன்பது நாட்கள் நான் ஜுரத்தில் படுத்திருந்தேன்; ஆனால், சற்றும் சலிப்படை யாமல் அவள் எனக்குப் பணிவிடைகள் செய்தாள். ஜுர வேகத்தில் நான் நடுநடுவே கண்ணைத் திறந்து பார்ப்பேன். அந்தச் சமயத்தில் படுக்கையின் அருகில் உட்கார்ந்திருந்த அந்த அழகிய பெண்ணைக் கண்டபோதெல்லாம் எத்தனையோ மென்மையான உணர்ச்சிகள் என் மனத்தில் பாய்ந்து செல்லும். 

“நோய்வாய்ப்பட்டதனால் அந்த வருஷம் எனக்கு வீணாகப் போயிற்று. அதனால், குணமான பின்புங்கூட நான் வீட்டி லேயே தங்கினேன். எங்கள் இருவருக்குமிடையே இருந்த வேற்றுத்தன்மை நோயிலே அடியோடு ஒழிந்துபோயிற்று. அவள் என்னோடு பேசும்பொழுது, தான் ஒரு சமையற்காரியின் மகள் என்ற விஷயத்தை மறந்துவிடுவாள். இருக்கும்போது ‘நான் ஒரு டாக்டராக வேண்டியவன்’ என்ற அவளுடன் விஷயம் எனக்கும் நினைவுக்கு வராது. 

“நாங்கள் இருவரும் எப்போதும் வரம்பு மீறிச் சென்ற தில்லை; ஆனால் காதல், ஸ்பரிசத்தினால்தான் வெளிப்பட வேண்டுமா என்ன? சாதாரணக் கடைவிழியிலிருந்துகூட அது வெளியாக முடியும். 

“அவள் இல்லாமல் எனக்குப் பொழுதே போகவில்லை. எனக்குப் படிப்பில் கவனம் செல்லவே இல்லை. பிறகு நான் கல்லூரிக்குச் சென்றதும், அவள் தாய் திடீரென்று அவளுக் குத் திருமணத்தை முடித்துவிட்டாள்.” 

முத்தண்ணா கணப்பொழுது பேசாமல் இருந்தார். பின்பு சிரித்தவண்ணம், “அந்தக் கல்யாணச் செய்தியைக் கேட்டு என் அமைதி குலைந்து போயிற்று. நான் தவித்த தவிப்பை என்னவென்பது! நாவல்கள் படித்தபடி இராக்கண் விழிப்பது, கண்ட வேளையில் கிண்ணங் கிண்ணமாகத் தேநீர் குடிப்பது- இப்படி என் வாழ்க்கை தொடங்கியது. ‘டைபாயிடு’க்குப் பிறகு எனக்கு உடம்பு அவ்வளவாகத் தேறவில்லை. ஆகவே நான் மீண்டும் நோயாளியானேன். டாக்டர்கள், ‘சோகை’ என்று என்னை ஊருக்கு அனுப்பிவிட்டார்கள். அங்கே அந்தப் பெண்ணின் ஞாபகத்தால் என் நோய் அதிகரிக்கும் என்று நினைத்திருந்தேன்; ஆனால்-” என்று இழுத்தார். 

“ஆனால், என்ன ஆயிற்று?” 

“சித்தியின் கணவர் ஒரு தடவை என்னிடம் கோபமாகப் பேசினார். “டாக்டர் தொழில் செய்வது எப்படியாவது போகட்டும். உட்கார்ந்தபடியே வக்கீல் பரீட்சைக்குப் போய், எனக்கு உதவி செய்யக்கூட உன் கையால் ஆகாது போலிருக் கிறதே!’ என்று அவர் சொன்னார். அவர் சொன்ன சொற்கள் என் உள்ளத்தில் அம்புபோலப் பாய்ந்தன. மறுநாள் நான் வக்கீல் பரீட்சைக்குப் படிக்க ஆரம்பித்தேன்.” 

பேச்சை முடிக்காமலே நடுவில் விட்டு முத்தண்ணா நாற்காலியிலிருந்து எழுந்தார்; வராந்தாவுக்குச் சென்று, “வானம் நன்றாக வெளிவாங்கி விட்டதே!” என்றார். 

“அந்தப் பெண் மீண்டும் எப்போதாவது உங்களைச் சந்தித்தாளா?” என்று அவர் அருகில் சென்று கேட்டேன். 

“பல வருஷங்களுக்கு அப்புறம், முந்தாநாள் தான் அவளைப் பார்த்தேன். 

“எங்கே பார்த்தீர்கள்?” 

“ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட வயல்களைப் பார்ப்பதற் காக நான் ஒரு சிறிய கிராமத்துக்குப் போயிருந்தேன். அங்கே ஓர் உஞ்சவிருத்திப் பிராம்மணன் வீட்டில் என் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இலையிலிருந்து எழுந்திருக்கும் வரையில், எனக்குப் பரிமாறியவள் அந்தப் பெண்தான் என்பது எனக்குத் தெரியவே இல்லை. ‘என்னைத் தெரிய வில்லையா உங்களுக்கு?’ என்று அவளாக என்னைக் கேட்டாள். இல்லாவிட்டால் அவளை நான் அறிந்தே இருக்கமாட்டேன்.” 

“அவள் யாரென்று கூடவா உங்களுக்குத் தெரியவில்லை?”

எதிர்வீட்டில் புழைக்கடைப் பக்கத்திலிருந்த எலும்புந் தோலுமான பெண்மணி, தன் குழந்தைகளுக்குக் கையலம்பு வதற்காக அவற்றை இழுத்துக்கொண்டு அப்போதுதான் வாசலில் வந்தாள்; முத்தண்ணா அவளைச் சுட்டிக் காட்டி, “இவளைப் போல இருந்தாள் அவள்! ஆகவே நான் எப்படி அவளைத் தெரிந்துகொள்வது?” என்றார். 

ஒரு நிமிஷம் கழித்து அவர் நகைத்துக் கொண்டே, “புயலில் இரண்டு படகுகள் தற்செயலாகச் சந்திப்பது போன்றதுதான் மனிதனுடைய முதற் காதலின் நிலையும். புயல் தணிந்ததும் அந்தப் படகுகள் தத்தம் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுகின்றன. பல தடவை அந்த இடங்கள் ஒன்றுக்கு ஒன்று வெகு தொலைவில் இருக்கும். அதற்கு யார் என்ன செய்யலாம்?” என்றார். 


வெளியே மஞ்சள்வெயில் படர்ந்திருந்தது. முத்தண்ணா வின் பேச்சிலே, ஒவ்வொரு மனிதனின் அநுபவத்துக்கும் வரும் உண்மையின் ஒரு கதிர் ஒளி விடுவதாக எனக்குத் தோற்றியது. 

முத்தண்ணாவைக் ‘கார்’ வரையில் கொண்டுவிட்டு வர நான் கீழே சென்றிருந்த போதிலும், என் மனைவி வைத்திருந்த கிராமொபோனிலிருந்து, “குழந்தைப் பருவத்துக் கனவுக ளெல்லாம் கொள்ளை கொண்டவர் ஆரோ?” என்ற பாட்டின் இசை என் காதில் விழுந்துகொண் டிருந்தது. “முத்தண்ணா போனவுடனே, மாடிக்கு ஓடிப்போக வேண்டியது; அவளை அருணா என்று கூப்பிட வேண்டியது; ‘காணிநிலம் வேண்டும் என்ற பாட்டை வையடி’ என்று அவளுக்கு உத்தரவு போட வேண்டியது” என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன். 

மாடிப்படி ஏறுகையில் என் காதில் விழுந்த பாட்டைக் கவனித்தேன் : ”உலகம் பலவிதமாம் – நெஞ்சே, உலகம் பலவிதமாம்” என்ற பாட்டு அது. 

– தொடரும்…

– புயலும் படகும், கதை மூலம்: வி.ஸ.காண்டேகர், தமிழாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: டிசம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *