புதுமைப் பரிசு!




(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பகோடாக் காதரின் உருவ அமைப்பை உருக்கி வார்த்த தோற்றமுடையவர் தான் கந்தசாமி. அந்தப் பாரிய உடலைக் கொண்ட அவருக்கு தான் ஒரு கமலஹாசன் என்று நினைப்பு.

தெரு அளப்பதே அவருடைய தொழில் என்றாலும் ஆள் பெரிய தண்ணிச்சாமி. பொட்டைகளைக் கண்டு விட்டாலே போதும். ஆள் பெரிய நடிகனாகவே மாறி விடுவார்.
ரஜனிகாந்தின் ‘ஸ்டைல்’ நடை அளந்து ராஜேந்தரைப் போல விழுந்து கிடக்கும் தலைமயிரை வாரிக் கோரி ஒரு மூலையில் எறிந்து விட்டு காதல் மன்னன் ஜெமினி கணேசனைப் போல ஒரு பார்வை பார்ப்பார்.
சில வேளைகளில் விஜயகாந்த் என்ற எண்ணத்தில் அருகில் உள்ள மதிலில் தாவி ஏறி இருந்து கலைஞர் கருணாநிதியின் காதல் வசனங்களை உதிர்த்திடுவார்.
அவருடைய மூஞ்சியையும் காதல் வசனத்தையும் அவதானித்த பெண்கள் குழாமோ அவரைப் பார்த்து ‘கந்தா! கடம்பா! இது என்ன உடம்பா? ஆளைப்பார்த்தால் பீப்பா’ என்று கூறிச் சிரித்தவுடன்.
கந்தசாமி ஒருகை ஓசையில் வரும் பாக்கியராஜ் போல ஊமையாகி, முகமெல்லாம் சுருண்டு கொறக்காப் புளி போல் மாறிவிடும்.
கந்தசாமிக்கு வள்ளி என்ற பெண் மீது ஒரு கண். அதனால் வள்ளி வரும் நேரம் ஒரு மதிலின் மீது ஏறி அமர்ந்து கொண்டு கவிஞர் வைரமுத்துவை காய்பியடித்து சிவாஜி பாணியில் வசனங்களைப் பேச ஆரம்பித்தார்.
‘அன்பினும் இனிய வள்ளி! என் இதயத்தை அள்ளி செல்கிறாய் நீயும் தள்ளி, நானோ வருகிறேன் பின்னால் துள்ளி உன்னிடம் பள்ளி கொள்ள இல்லையேல் நானும் போவேன் காதலைக் கிள்ளி, முடிவில் வருவதோ எனக்கு கொள்ளி’
இதைக் கேட்ட வள்ளிக்கு கந்தசாமி மீது ஒரு இரக்கம் பிறந்தது. திரும்பிப் பார்த்து சென்று விட்டாள்.
அதன் பிறகு கந்தசாமியோ தனது கவச வாகனத்தை (பைசிக்கிளை) எடுத்துக் கொண்டு வள்ளியின் திருமுகத்தைக் காண அவளது வீட்டுக்கு முன்னால் வலம் வருவார்.
தினசரி வலம் வந்தாலும் ஒருபோதும் அவளது திரு முகத்தைக் கந்தசாமியால் காண முடியவில்லை.
ஒரு நாள் வழமை போல் கவச வாகனத்தை எடுத்துக்
கொண்டு அவ்வீதி வழியால் பவனி வந்து கொண்டிருந்தார்.
அப்போது தற்செயலாக வள்ளியைக் கண்டுவிட்டார். வள்ளியைப் பார்த்து பல் இளித்த வண்ணம் திரும்பிப் பார்த்துக் கொண்டே வாகனத்தை முன் செலுத்திக் கொண்டேயிருந்தார்.

அப்போது பக்கத்து வீட்டில் உள்ள ஒரு வேலைக்கார பையன் கழிவுக் குப்பைகளை பையில் கொட்டுவதற்காக பையை தலையில் சுமந்த வண்ணம் தெருவைக் குறுக்கறுத் துக் கொண்டிருந்தான்.
அவன் மீது கந்தசாமியின் சைக்கிள் மோதிக் கொண்டது.
கந்தசாமி கீழே, பைசிக்கள் மேலே, பையில் இருந்த குப்பைகள் எல்லாம் கந்தசாமியின் தலைமேலே சிதறிக் கொட்டப்பட்டு விட்டது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்து சனங்கள் ஒன்று கூடி விட்டார்கள்.
இவை அனைத்தையும் அவதானித்த வள்ளிக்கு கந்தசாமி மேல் காதல் பிறந்தது. பின்பு காதலாக இருந்தது. இரண்டு வாரங்களில் கசிந்து கண்ணீர் மல்கி கல்யாணத்தில் போய் முடிந்தது .
ஆனால், வள்ளி மிகவும் ஒல்லியாக இருப்பது கந்த சாமிக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
எனவே மனைவியை அழைத்துச் சென்று அருகில் உள்ள டாக்டரிடம் காட்டினார். அதற்கு டாக்டர் ‘இரும்புச்சத்து குறைவாக உள்ளது’ என்றார்.
எப்படியாவது மனைவியைத் தெளிய வைக்கவேண்டும் என்ற ஆதங்கம் வரவே கோழிமுட்டை வாங்கிக் கொடுப்போம் என்று எண்ணி முட்டையை ஊரில் வாங்குவதற்காகச் சென்றார்.
அங்கு சற்று விலை அதிகமாக இருக்கவே டவுனுக்குச் சென்றால் மலிவு விலையில் வாங்கலாம் என்றெண்ணி பைசிக்கிளில் டவுனுக்குச் சென்று மலிவு விலையில் பல முட்டைகளை வாங்கி எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி வந்தார்.
வரும் வழியில் வெடிகுண்டு ‘செக்கிங்’ பண்ணும் வகையில் பார்சல் நசுத்துப் பார்க்கப்பட்டது.
கந்தசாமி வீட்டிற்கு வந்து பார்சலை அவிழ்த்துப் பார்த்த போது எல்லா முட்டைகளும் உடைந்து காணப்பட்டன.
ஒரு நாள் கந்தசாமி ‘இதோ பார் என் மனைவிக்கு இரும்புச் சத்தைக் கூட்டிக் காட்டுகிறேன்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,
மனைவிக்குத் தெரியாமல் குசினிக்குள் சென்று மனைவி சமைத்து வைத்திருந்த சொதிக்கறிச் சட்டிற்குள் ஒரு இரும் பைப் போட்டு விட்டு நைசாக வந்து விட்டார்.
சிறிது நேரத்தின் பின்பு இருவரும் சாப்பிடச் சென்ற போது அங்கு குசினிக்குள் சொதி வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது.
உடனே மனைவி சட்டியைத் திறந்து பார்த்தாள். சட்டிக்குள் ஒரு இரும்புத் துண்டு மட்டும் கிடந்தது. அத்துடன் இரும்பு போட்ட பாரத்தில் சட்டியும் வெடித்திருந்தது.
இதைக் கண்டதும் வள்ளிக்கு சிரிப்புத் தாளவே முடியவில்லை. ஆனால் கந்தசாமியோ தான் செய்த மொக்கு வேலையை நினைத்து தலை குனிந்திருந்தார்.
குடியின் பிடியில் சிக்கிய கந்தசாமியை வறுமை வாட்ட ஆரம்பித்தது. மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பினால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். அத்துடன் வெளிநாடு சென்று வந்தால் மனைவியும் தெளிந்து விடுவாள் என்ற அவருடைய குள்ள நரி மூளை வேலை செய்யவே நண்பர்களின் ஆலோசனைப் படியும் உதவியும் மூலமும் ஒருவாறு மனைவியை குவைத் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
மனைவியின் வெளிநாட்டுப் பணத்தினால் தினசரி இங்கிலீசுப் ‘பிளேன்டீ’ (சாராயம்) குடித்துவிட்டு ஏ,பீ , சீ. டீ ,… தெரியாத கந்தசாமி போவோர் வருவோரிடம் சரளமாக ஆங்கிலம் பேசிடுவார்.
இப்படியாக ஒரு பூரணை தினத்தன்று இங்கிலீசுப் ‘பிளேன்டீ’ குடித்துவிட்டு இரவு பத்து மணியளவில் ‘டவுனி’ லிருந்து சைக்கிளில் வரும்போது போலிஸ்காரன் ‘லைட்’ எங்கே என்று கேட்க,
கந்தசாமி ஏதோ (ஆங்கில அகராதியிலே இல்லாத) ஆங்கிலத்தில் பேசி சந்திரனைக் காட்டவே கோபம் கொண்ட பொலிஸ்காரன் கந்தசாமிக்கு முதுகு நிரம்பக் கொடுத்தனுப்பி விட்டான்.
இதனால் மனமுடைந்த கந்தசாமி வீட்டுக்கு வந்தவுடன் ‘இதோ தற்கொலை செய்கிறேன்!’ என்று பலமாகக் கத்தி விட்டுக் கிணற்றிலே குதித்துவிட்டார்.
இச்சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் அக்கிணற்றையே குழுமிவிட்டார்கள்.
ஆனால் கந்தசாமிக்கோ நீரில் பட்டவுடன் மப்பு முறிந்து விட்டது.
சனத்தைக் கண்டதும் வெட்கம் தலைக்கேறவே கிணறு இறைப்பது போல் பாசாங்கு செய்து கொண்டார்.
வள்ளி வெளிநாட்டுக்குப் போய் மூன்று வருடங்கள் உருண் டோடிவிட்டன. அன்று வள்ளியிடமிருந்து கந்தசாமிக்கு நீண்ட தொரு கடிதம் வந்தது. கந்தசாமி அதை அவசரம் அவசரமாக உடைத்துப் பார்த்தார். அதில்,
‘அன்புள்ள அத்தான்!
நான் அனுப்பும் பணத்தில் நீங்கள் தினசரி குடித்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன். இந்த மாதத்துடன் எனது ‘கொன்ராக்’ முடிவடைகிறது. எனவே நான் 1987ஆம் ஆண் டுப் புதுவருடத்தைக் கொண்டாடுவதற்கு இலங்கை வந்துவிடு வேன். எனவே தவறாது எயார்ப்போட்டில் எனக்காக காத்து நிற்கவும். நான் எனது மூன்று வருட காலத்தில் குவைத் நாட்டில் உழைத்த ஒன்றரையுடன் வருகிறேன். இப்படிக்கு,
உங்கள் வள்ளி’
கந்தசாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. எனது மனைவி ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்துடன் வருகிறாள். இனி நான் ஒரு லட்சாதிபதி. எதிர்வரும் புத்தாண்டில் நானே லட்சாதிபதி என்று குதூகலித்தார்.
வள்ளி வரும் நாளும் வந்தது. கந்தசாமி ஆவலுடன் அவள் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
விமானமும் வந்து சேர்ந்தது. விமானத்தில் வந்தவர்கள் ஒவ்வொருவராக இறங்கிக்கொண்டு வெளியே வந்தனர். ஆனால் வள்ளியைக் காணவில்லை. நீண்ட நேரத்தின் பின் ஒரு பெண் கந்தசாமியின் அருகே வந்து ‘அத்தான் போக லாமா?’ என்றாள்.
கந்தசாமியால் நம்பவே முடியவில்லை. கண்ணில் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றிக் கையிலெடுத்துக்கொண்டு பார்த்தார்.
ஆம்! அது அவருடைய மனைவி. வள்ளிதான்! இடுப்பிலே ஒரு குழந்தை, வயிற்றினிலே ஐந்து மாதக் குழந்தை.
இதுதானா அவள் ஒன்றரையுடன் வருகிறேன் என்று எழுதியிருந்தது. ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.
ஆனாலும் தனக்குக் கிடைக்காத பாக்கியம் மனைவி மூலமாவது கிடைத்ததே என்று பெருமிதப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் வள்ளியின் கையிலிருந்த குழந்தை கந்தசாமியின் கையில் தாவிக்கொண்டது,
கந்தசாமியோ அதைப் புத்தாண்டுப் பரிசாகப் பெற்றுக் கொண்டார்.
– ஓ. கே.குணநாதன் நகைச்சுவை கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1993, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு