புதிய தரிசனங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2025
பார்வையிட்டோர்: 572 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிறைசூடி மாஸ்ரரை முதலில் அவன் கவனிக்கவில்லை. மாலை வெய்யிலுக்கு முதுகைக் காட்டி, நிழல்கள் நீண்டு முன்னே படர்ந்துவர, முகங்கள் தெளிவில்லாமல் பேசிக் கொண்டு கோவிலிலிருந்து வந்த அந்த மூன்று பேரில் சூடியர் நடுவில் வந்தார். 

‘எட….தன பாலே? எப்ப வந்த நீ?…. கடவுள்தான் இப்ப உன்னைக் கொண்டுவந்து இதிலை நிக்க விட்டிருக்கிறார்….’  

-வியப்பும் மகிழ்வும் அவர் குரலில். 

‘வாழ்க்கையில் ஒரு இலட்சியத்தை – சிந்தித்தோ சிந்தியாமலோ, சரியோ பிழையோ – பற்றிக் கொண்டு; அவர்களளவில் ஒரு அர்த்தத்தைக் கண்டு கொண்டு இந்த மூன்று மனிதர்களும்….’ என்று பொதுவாகவே கண்ணோட்டி யோசித்துக் கொண்டிருந்தவன், நிமிர்ந்தான். ‘ஸேர்….! றிஃப்ளெக்ஸ் அக்ஷன் போல குந்தியிருந்த கல்லிலிருந்து எழும்பினான். 

பிறைசூடி அவரது பட்டமா பெயரா என்று முன்பு: படிக்கிற காலத்தில் – அவனைக் குழம்பச் செய்த அதே உத்தூளனமான நீற்றுப் பூச்சு. சந்தண வட்டத்தில் அடங்கிய குங்குமம். காது மடலிலிருந்த வில்வம் எட்டிப் வார்த்தது. 

‘…ஒம், ஸேர்!’ என்றான் மீண்டும். 

அவர் தலை முழுவதும் நரைத்தாயிற்று. முன்னிலும் உயரமாய் மெலிதாய்த் தெரிந்தார். முகத்தில் புதிதாய்ச் சுருக்கங்கள். வருஷத்தில் இரண்டு மூன்று தடவை பயணத் தில் வருகிறபோது வழி தெருவில் காண்பதுதானென்றாலும், இவ்வளவு அருகாகப் பார்த்துப் பத்து வருஷங்களிருக்குமா? 

‘நீங்கள் முன்னாலை போங்கோ…. நான் இவன் தம்பி யோடை பேசிக்கொண்டு வாறன்’ 

வயலும் வெளியுமாய்க் கோவிலைச் சூழ்ந்து படர்ந் திருந்த அந்த இடத்தில், மாலை மனோகரமாக இருந்தது. பூசை மூடித்துக் கதவைச் சாத்துகிற ஐயர் அந்தப் பிரதே சத்தின் அமைதியைக் கிழிக்கிறார். 

‘இதிலை இருங்கோவன் ஸேர்’ விலகி, கல்லைக் காட்டி நின்றான். கோவில் முன் மதிலிலிருந்து உடைந்து விழுந்த பாறைக்கல், குருக்கத்தி முளைத்த இடுக்குகளுடன் கறுப்புக் கல், திண்ணை மாதிரி. 

வேண்டாம்,வா…. மெல்ல நடப்பம்….’ 

இந்துக் கல்லூரியில் ஜி. ஸீ, ஈ, படித்த அந்த மூன்று வருஷமும் கணிதமும் தமிழும் படிப்பித்தவர். எங்கோ மலை நாட்டுப் பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த புதிதில், அவர் களுக்குச் சிரிப்பு மூட்டியவர், வந்த பின்தான் தங்களூர் ஆள், தூரத்து உறவு என்று தெரிய வந்தது. ஒரு தவணை முடிய முந்தியே சிரிப்பு எல்லாவற்றையும் வியப்பும் மதிப் புமாய் மாற்றினார். கணிதத்தில் மன்னன், சிவப்பழம், அந்த வயதில் இவர்களுக்கு ஒரு நடமாடும் என்ஸைக்னோ பீடியா. 

சைக்கிளை உருட்டிக்கொண்டு சூடியரோடு நடந்தான். சந்தணமும் இன்னுமெதுவுமோ தன்னைச் சூழ்ந்து கமழ, அவர் பேசிக் கொண்டு வந்தார். எப்போ திரும்புகிறான் 

ஏன் அடிக்கடி ஊர்ப்பக்கம் வருவதில்லை, கொழும்பில் வாழ்க்கை நிலைமை, வேறேதும் படிக்கிறனா, இன்னமும் கதைப் புத்தகங்களுடன் மினைக்கெடுவதுண்டா – எல்லாம் கேட்டார். ஜனவரியில் தன் மகன் சௌதிக்குப் போனது, தா ன் சுகமில்லாமல் ஆஸ்பத்திரியிலிருந்தது, கடைசி மகளு க்கு இப்போ கலியாணம் பேசுவது எல்லாம் சொன்னார். 

‘அவன் எப்பிடி உன்ர கூட்டாளி, இப்ப?’ 

‘ஆர், ஸேர்?……..’

‘ஜெயநாதன்?…….’ 

‘கொழும்பிலைதான்…….’ 

‘அது தெரியும்…. இப்ப உன்னோட எப்பிடி? முந்தி இரண்டு பேரும் வலு நெருங்கின சினேகிதமெல்லோ?….’ 

‘அதே மாதிரித்தான் ஸேர் இன்னும்….’ மெல்லச் சிரித்தான். 

‘சரி, நீ என்ர பிள்ளை மாதிரி…. உன்னைத்தான் கேக்க வேணும். ஒரு சம்மந்த விஷயம்’ – ஸீரியஸாகக் கேட்டார். 

“ஜெயநாதன் ஆள் எப்பிடி?’ 

‘உங்களுக்குத் தெரியுந்தானே ஸேர்…. முந்தியைப் போலதான் இப்பவும் – ஒரு கெட்ட பழக்கமுமில்லாதவன்….’ 

‘உன்ர சினேகிதன் எண்டதுக்காகச் சொல்லாதை….’ அவர் சிரித்தார்: 

‘…….. என்ர மகளுக்குத்தான் இந்தப் பேச்சுக்கால்…’

‘இல்லை ஸேர், அவனிலை ஒரு கெட்ட பழக்கமுமில்லை. ஆனா……’ 

‘சொல்லு……..’ 

‘உங்கடை மகளுக்கெண்டு சொல்லுறீங்கள், அது தான்…’

‘ஏன்? என்ன?’ 

‘அவன்ர போக்குகள் உங்களுடைய குடும்பத்துக்கு ஒத்து வருமோ எண்டுதான்….’ 

பிறகும் சிரித்தார் : 

‘அவன் ஒரு கொம்யூனிஸ்ற், நாங்கள் கோயில். குளமெண்டுதிரியிற ஆக்கள்…அதையே சொல்லுறாய்?” 

தனபால் தலையாட்டினான். 

‘…அதெல்லாம் முந்தியே எனக்கு நல்லாத் தெரியும். ஆனா, உன்னை நான் முக்கியமாகக் கேட்க நினைச்சது இது தான்: அவன்ர மனப்போக்குகள் எப்பிடி? தனக்கு வாறவள் கடவுள் நம்பிக்கையுள்ளவளாயிருக்கிறதை ஒப்புக் கொள்வானோ? அப்பிடி வந்தா, அவளின்ர நம்பிக்கையளிலை குறுக் கிடாம போகக் கூடிய ஆளோ?….இது பார், பிறகு பிரச்சினைகளைக் கொண்டுவரும்’ 

‘இல்லை ஸேர், எனக்குத் தெரிஞ்ச அளவில் அவன் அப்பிடியான ஆளில்லை–பெண்சாதியாயிருந்தாலும் அவளுடைய சுதந்திரத்தை மதிக்கக் கூடியவன். ஆனா, நான் நினைச்சது உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்குமோ எண்டு தான்…’ 

‘எங்களை பொறுத்தளவிலை அவன் கொம்யூனிஸ் ஆக இருக்கிறதை பிழையாகவோ பிரச்சினையாகவோ எடுக்கவில்லை. ஏனெண்டால் கடவுள் இல்லையெண்டு சொன்னாலும், கடவுளுக்கு மிக நெருக்கமானவன் ஒரு நல்ல கொம்யூனிஸ்ற் தான்…?’ 

தனபால் ஒருகணம் நின்று, அவரைத் திரும்பிப் பார்த்தான். 

– மல்லிகை, மார்ச் 1981.

– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *