புதிய ஊர், புதிய அனுபவம்…

இலுப்பைக்களத்தூர் ஒரு சிறிய நகரம். நகர வரிசைப்பட்டியல்களில் மூன்றாம் நிலை நகரம் போல் இருக்கும் எனக் கொள்ளலாம். ஆனால் வளர்ச்சி இப்போது வேகமாக உள்ளதைப் பார்த்தால் வெகுவிரைவில் இலுப்பைக்களத்தூர் இரண்டாம் நிலைக்குப் போய்விடும் என்று அங்கு வசிக்கும் மக்கள் கூறி வந்தனர்.
கிரிதர், சோம்நாத் இருவரும் இந்த ஊரில் வந்து இறங்கிய போது மதியம் ஒண்ணரை மணி ஆகியிருந்தது. இவர்கள் ஒரு பெரிய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனத்திற்கு பின்புல சேவைகள் செய்து தரும் ‘டிஜி ட்ரைவ்’ எனும் நிறுவனத்தில் பணி செய்து வருகின்றனர். தற்போது அந்த பெரிய நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் பணிகளுக்கு வேண்டிய அறிதிறன் ஆக்கம், திட்டமிடல் இது தொடர்பாக சேவைகள் செய்வதற்காக இவர்களை இவ்வூரில் ‘டிஜி ட்ரைவ் ‘ நியமித்துள்ளார்கள்.
கிரிதர், சோம்நாத் இருவரும் இத்துறையில் வெகுவேகமாக முன்னேறி இளம் வயதிலேயே ஒரு தலைமைப் பொறுப்பை ஏற்கும் வகையில் வந்ததற்கு காரணம் அவர்களின் ஆர்வமும், இரவு பகல் பாராது உழைத்ததன் பலன் என்று கூறலாம். அவர்களின் ‘டிஜி ட்ரைவ் ‘ நிறுவனத்தின் சமீபத்தில் திறக்கப்பட்ட அலுவலகம் இலுப்பைக்களத்தூரில் உள்ளது. புதிய ஊர், இதுவரை பார்த்திராத ஊர், தங்குமிடம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணி இவர்கள் இரண்டு நாட்கள் முன்பாகவே வந்து சேர்ந்து விட்டார்கள்.
“கிரி, இன்னிக்கு ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்கிக்கலாம், ஊரைச் சுத்திப்பாத்துட்டு வாடகைக்கு ஒரு இடத்தை நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள ஃபிக்ஸ் பண்ணிடலாம். என்னடா சொல்றே?” என்றான் சோம்நாத்.
“கரெக்ட் டா, அப்படியே செய்யலாம். அதுக்கு முன்னாடி லஞ்ச் முடிச்சுக்கலாம் டா.கொலைப்பசியா இருக்கு” என்றான் கிரிதர்.
“ஆமாண்டா, அதைச் செய்யலாம் முன்னாடி.ஏதாவது ஹோட்டலைக் கண்டுபிடி. பாத்து வச்சிருக்கியா ?” என்று சோம்நாத் கேட்டான்.
“இங்கே ஒரு ஏழெட்டு இருக்கு. அதுல பெஸ்ட் ரிவ்யூ வாங்கியிருக்கற ‘ அம்பாள் ரெஸ்டாரன்ட் ‘, அதுக்கு போவோம்.” என்று கூறி காரை அதை நோக்கி செலுத்தினான் கிரிதர்.
இலுப்பைக்களத்தூர் நகரில் எல்லா வசதிகளும் சிறப்பாகவே உள்ளது என்று கூறலாம். சாலைகள், ஊரின் மத்தியில் மூன்று கோவில்கள், அதனருகே அருமையான குளம், பூங்காக்கள், மற்றொரு பக்கத்தில் உயர்நிலைப்பள்ளி, மருத்துவமனைகள், திரையரங்கு, கொஞ்சம் தொலைவில் குடியிருப்பு வீட்டுத் தொகுப்புகள், தேவாலயம்,சில அடுக்கு மாடி கட்டிடங்கள் இவைகளைப் பற்றிய தகவல்களை படித்து விட்டு அதன் விவரங்களைப் பேசிக்கொண்டே கிரிதர், சோம்நாத் இருவரும் உணவகம் வந்து சேர்ந்தனர். உணவகத்தில் இவர்கள் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. இவர்கள் உள்ளே சென்றதும் ஒரு பணியாளர் வந்து வரவேற்று “சார், ரெண்டு நிமிஷம். உங்களுக்கு டேபிள் ரிசர்வ் பண்ணிடறேன்” என்றார். இருவரும் சரியென்று சொல்லி அங்கே அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர்.
ஒருவழியாக சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது அந்த உணவகத்தின் மேலாளரைக் கேட்டான் கிரிதர். “இங்கே குடியிருக்க வீடுகள் எங்கே கிடைக்கும்? நல்ல வீடா இருக்கணும்!”
மேலாளர் “இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் நிறைய வீடுகள் இருக்கு சார். நீங்க இங்கேருந்து ஒரு நாலு கடை தள்ளிப் போய் லெஃப்ட் சைட்ல ‘ சிவராம் ரியல் எஸ்டேட் ‘னு ஒரு சிறிய ஆஃபீஸ் இருக்கும். அவரைப் பார்த்து சொல்லுங்க உங்க தேவையை. நல்லா ஹெல்ப் பண்ணுவார். என் பேரு வேணு. நான்தான் உங்களை அனுப்பினேன்னு சொல்லுங்க சார்” என்றார்.
“தேங்க்ஸ் மிஸ்டர் வேணு” என்று சோம்நாத் சொன்னான். அவர் கூறியபடியே சிவராம் என்பவரை இருவரும் பார்த்து பேசினார்கள்.
“உங்களோட இப்பவே வரேன் சார். ஒரு ஆறேழு வீடு இருக்கு. உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். இப்ப எங்க தங்கிருக்கீங்க” என்று கேட்டார்.
“இப்போதான் வந்து சாப்பாடு முடிச்சிருக்கோம். இனிமேல்தான் ஒரு லாட்ஜ் தேடணும்.” என்று சிரித்தான் கிரிதர்.
“என்னோடு வாங்க. போற வழியில் ‘ குருநாத் ஹவுஸ் ‘ இருக்கு. அதுல ரூம் புக் பண்ணி லக்கேஜ் எல்லாத்தையும் வச்சுட்டு வாங்க. அவுட்டர்ல வாடகைக்கு வீடுகள் காண்பிக்கறேன்” என்று சிவராம் சொல்ல, “சரி, நீ இவரோடு பேசிட்டு இரு சோம், நான் போய் வண்டியை எடுத்துட்டு வரேன் ” என்று சொல்லி கிரிதர் சென்றான்.
சோம்நாத் தாங்கள் இவ்வூருக்கு வந்த காரணத்தை சிவராமிடம் விளக்கினான். “ஓ, டிஜி ட்ரைவ் கம்பெனியா, இப்பதான் ரீசென்டா ஓப்பன் பண்ணாங்க. நார்த் ஸ்ட்ரீட் ல இருக்கற ‘ ப்ளூ டவர் ‘ அபார்ட்மெண்ட்ல தான் இருக்கு. அவங்களுக்கு சில பெயிண்ட் வேலைக்கு நானும் கொஞ்சம் ஒரு பகுதி உதவியா இருந்தேன். முகேஷ் ஆர் மகேஷ் அப்டின்னு ஒருத்தரை மீட் பண்ணிருக்கேன் ” என்றார் சிவராம்.
“அவர் முகேஷ். அவர்தான் இங்கே அட்மினிஸ்ட்ரேஷன் பாத்துக்கறாரு. இன் ஃபாக்ட் நாங்க ரெண்டு நாள் கழிச்சு வந்திருக்கணும் அவர் சொன்னபடி. நாங்கதான் முன்னாடி வந்து வீடெல்லாம் பாக்கலாமேன்னு வந்துட்டோம்.” என்று சோம்நாத் சொன்னான்.
இந்த நேரத்தில் கிரிதர் வந்து விட, மூவரும் கிளம்பி குருநாத் ஹவுஸ் போய் அறை எடுத்து இவர்கள் கொண்டு வந்திருந்த பெட்டிகளை வைத்து விட்டு, சிவராமுடன் வாடகைக்கு வீடு பார்க்க விரைந்தனர்.
போகும் வழியில் ஒரு சிறிய சாலையில் உள்ளே இருந்த ஒரு தோட்டத்தில் பழங்கால பாணியில் கட்டப்பட்ட சின்ன பங்களா போன்ற வீடு இவர்கள் கண்களில் பட்டது. கிரிதரும் சோம்நாத்தும் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு தங்களுக்குள் புன்னகைத்துக்கொண்டனர்.
சிவராம் இவர்களை அழைத்துச் சென்று ‘பரமானந்த நகரில்’ உள்ள காலியாக இருந்த வீடுகளை காட்டினார். இருவருக்கும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சிவராம் உடனே ” சரி சார், பரவாயில்லை. அடுத்த வாரத்தில் இன்னும் ரெண்டு காலியாகப் போகுது. அதைப் பாருங்க. நிச்சயமா நல்லா இருக்கும். உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.
பிறகு மூவரும் திரும்பச் செல்லும்போது மீண்டும் அந்த பங்களா போன்றிருந்த அந்த வீட்டைப் பார்த்தார்கள். அதில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. சோம்நாத் உடனே ” மிஸ்டர் சிவராம், அந்த தோட்டத்தில் ஒரு வீடு இருக்கே அதுல யாருங்க இருக்காங்க? அது வாடகைக்கு தருவார்களா?” என்று கேட்டான்.
“சார், அதைப் பத்தி கேட்காதீங்க சார்! அதுல ஒருத்தரும் ஒரு மாசத்துக்கு மேல இருக்க மாட்டேங்கறாங்க. எனக்கு ஒத்து வரலே. அதனால் அதை நான் யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை. லாஸ்ட்டா ஒரு டாக்டர் நாலு மாசம் இருந்தாரு. அப்புறம் காலி பண்ணிட்டு போய்ட்டாரு. இப்ப காலிதான். ஓனர் எங்கேயோ ஃபின்லாண்ட் கண்ட்ரில இருக்காரு.இங்கே வர்றதே இல்லை.” என்று சிவராம் சொன்னார்.
“ஆனால் வீடு அந்த காலத்தில் நல்லா கட்டிருக்காங்க போலிருக்கே! உள்ளே போய் பார்க்க முடியுமா? “என்று கிரிதர் கேட்டான்.
“ஆமாம் சார், நல்லா கட்டிருப்பாங்க. இப்ப யாரும் அங்கே குடியிருக்கவில்லை. சாவி என் ஃப்ரெண்ட் முத்து கிட்டதான் இருக்கு. நீங்க பார்க்கணும்னா நாளைக்கு அவனை வரச்சொல்றேன். நானும் வரேன். போய் பாருங்க. பிடிச்சுதுன்னா பேசிக்கலாம். முத்துவே சொல்லிடுவான். அவன்தான் சுத்தம் செஞ்சு முடிஞ்ச வரைக்கும் மெயின்டெய்ன் பண்ணிட்டிருக்கான். ஓனரிடம் ஈமெயில் மூலம் இல்லேன்னா சில சமயங்களில் ஃபோன் மூலம் கான்டாக்ட் பண்ணி விவரங்கள் சொல்வான்.” என்றார் சிவராம்.
“சரி, நீங்க முத்துவை வரச் சொல்லிடுங்க. நாளைக்கு போகலாம் ” என்று கிரிதர் உறுதிப்படுத்தினான்.
பிறகு சிவராமை அவர் அலுவலகத்தில் இறக்கி விட்டு இருவரும் குருநாத் ஹவுஸ் வந்து சேர்ந்தார்கள். சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, ஊரில் உள்ள கடைத்தெரு வரை நடந்தார்கள். அனைத்தையும் பார்வையிட்டுக்கொண்டே வந்த போது அங்கே இருந்த ஒரு சிறிய உணவகத்தில் சூடான இட்லிகளை சாப்பிட்டு விட்டு தங்குமிடம் திரும்பினர். “எப்படியோ நாளை அந்த வீட்டை பார்த்து ஆவரேஜாக இருந்தால் கூட அதை வாடகைக்கு எடுத்து விடுவோம்” என்றான் சோம்நாத். ” நிச்சயமா, நானும் அதையே நினைச்சேன்” கிரிதர் ஆமோதித்தான்.
அடுத்த நாள் காலையில் சிவராம் சொன்னபடி முத்துவை அழைத்து வந்திருந்தார். எல்லோரும் புறப்பட்டு அந்த வீட்டிற்கு போனார்கள்.
வெளிச் சாலையிலிருந்து பார்த்தால் அந்த வீடு அருகில் இருப்பது போல் தெரிந்தது. ஆனால் சந்துக்குள் சென்று, தோட்டம் வழியாக சென்றபோது, முக்கிய சாலையில் இருந்து வீடு கணிசமான தொலைவில் உள்ளது எனத் தெரியவந்தது.
வீட்டின் முன்பு கார் நிறுத்த மேற்கூரையுடன் ஒரு இடம். நான்கு தூண்களுக்கு இடையில் நேர்த்தியாக அமைந்த திண்ணைப் பகுதி. உள்ளே கதவைத் திறந்ததும் ‘ குப்’ என்று வெளியே வந்த நுண்ணிய தூசிகளால் சோம்நாத் தும்மினான். ” போன வாரம் க்ளீன் பண்ண முடியலை சார், அதான் தூசி. எப்படி இருந்தாலும் பழைய வீடு சார். ஏதாவது தூசியும், ஒட்டடையும் படிஞ்சிட்டே இருக்கும். தோட்டம், செடிகள் எல்லாம் வேற இருக்குல்ல” என்று முத்து விளக்கம் தந்து கொண்டே வீட்டைச் சுற்றிக் காட்டினான். பெரிய வரவேற்பறை, வலது புறம் சமையலறை, இடது புறத்தில் இரண்டு பெரிய அறைகள், வரவேற்பறைக்கும் சமையலறைக்கும் இடையே ஒரு சிறிய தாழ்வாரம் போல் உட்பக்கம் சென்று கடைசியில் ஒரு அறையில் முடிந்தது. ஆனால் அது தாளிடப்பட்டிருந்தது.
முத்து சொன்னான். ” எல்லா இடத்திலும் வாட்டர் பைப் வசதி உண்டு. பாத்ரூம் எல்லாம் புதுப்பிச்சு இருக்கு. ஸ்விட்ச் எல்லாம் புதுசு சார். இது தவிர மேலே மாடியில் ஒரு அறை உண்டு. அதையும் யூஸ் பண்ணிக்கலாம்.”
அந்த உள்ளே தாளிட்ட அறை வாடகையில் இருப்பவர்களுக்கு இல்லை என்றும் அந்த அறையை திறக்க வேண்டாம் என்றும் ஓனர் சொல்வார் என்று முத்து சொன்னான். “அது ஏன் ” என்று கிரிதர் கேட்க, ” தெரியலே, எப்பவோ பழங்காலத்தில் இருந்தவங்க உபயோகிச்சதுன்னு நினைக்கிறேன். சென்டிமென்ட்டா அப்படியே வச்சுட்டாங்க போலிருக்கு. நான் ஒரு ரெண்டு தடவை எப்பவோ போயிருக்கேன். ஏழு வருஷத்துக்கு முன்னாடி வெளிநாட்டில் இருந்து ஓனர் வந்து சென்ற போது சுத்தம் செஞ்சேன். அவ்வளவுதான்.” என்றான் முத்து.
சோம்நாத், கிரிதர் மாடிக்கு சென்று அறையைப் பார்த்தனர். பிறகு ‘இந்த வீட்டையே பேசி முடிக்க’ முடிவு செய்தனர்.
சிவராம், முத்து இவர்களிடம் ” இந்த வீடு எங்களுக்குப் பிடித்திருக்கிறது. என்ன வாடகை மற்ற அட்வான்ஸ் டேர்ம்ஸ் எல்லாம் சொல்லுங்க. நாளைக்கு காலையில இங்கே வந்துடறோம்.அதுக்கு முன்பே உங்களுக்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறோம்.” என்றான் சோம்நாத்.
“ஓ.கே சார், வாடகை விவரங்களை இ மெயிலில் அனுப்பறேன். ஓனருக்கு அதை காப்பி வச்சுடுவேன். நீங்க அதன்படி அந்த அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யுங்க. நான் நாளைக்கு காலையில ரெண்டு பேரை அனுப்பி சுத்தம் செஞ்சு தரச் சொல்றேன். ” என்றான்.
“நீங்க அனுப்புங்க. நாங்க காலைல ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு இங்கே வந்துடுவோம். ஒரு ரூமை முடிஞ்ச வரை க்ளீன் பண்ணிக்கறோம். அப்புறம் அவங்க வந்து மீதியை செஞ்சுட்டு நல்லா மாப் பண்ணிட்டு போகட்டும். நிரந்தரமா வீட்டை தினமும் சுத்தம் செய்யறதுக்கு யாரையாவது ஏற்பாடு செய்தால் உதவியா இருக்கும் ” என்று சொன்ன கிரிதர், ” இப்போ அட்வான்ஸ் பத்தாயிரம் ஜி பே பண்றேன். நம்பர் சொல்லுங்க ” என்றான்.
“அதுக்கும் ஏற்பாடு பண்றேன் சார் ” என்ற முத்து அவன் கைபேசியின் எண்ணைக் கொடுத்தான். பிறகு ” இந்தாங்க, சாவி ” என்று வீட்டு சாவியை கொடுத்தான்.
மறுநாள் காலை கிரிதர், சோம்நாத் இருவரும் திட்டமிட்டபடி அந்த வீட்டிற்குள் வந்து விட்டனர். பெட்டி, பைகளை முதல் அறையில் வைத்து விட்டு, மீண்டும் வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். அங்கு ஒரு ஓரத்தில்
வைத்திருந்த தூசு அகற்றும் கருவியை எடுத்து வந்து இவர்கள் பெட்டி வைத்திருக்கும் அறையை சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். வெளியே இருந்த துடைப்பம் உதவியுடன் சில காகிதக் குவியல்கள், சிறிய கிழிந்த அட்டைகள் இவைகளை சுத்தம் செய்யும் நேரத்தில், அங்கிருந்த பழங்கால கட்டிலுக்கு அடியில் ஏதோ மின்னியது போன்று கிரிதருக்கு தோன்றியது. ” ஏய், சோம், இந்த கட்டிலுக்கு அடியில் பாரு, உனக்கு ஏதாவது தென்படுதான்னு? நான் ஏதோ பார்த்த மாதிரி இருந்தது” என்றான்.
சோம்நாத் தூசகற்றும் கருவியை நிறுத்தி விட்டு குனிந்து பார்த்தான். அவனுக்கும் ஏதோ பளிச் என மின்னிக்கொண்டு ஒரு ஓரத்தில் ஒரு சிறிய உருண்டை வடிவமாகக் கிடந்தது போல் தெரிந்தது. ” ஆமாம் கிரி, ஏதோ இருக்கற மாதிரி தெரியுது. ஆனால் கட்டில் காலுக்கும் அந்த பக்க சுவருக்கும் இடையே இருக்குன்னு நினைக்கிறேன். கட்டிலை கொஞ்சம் இந்த பக்கமா இழுத்து பார்ப்போம்.” என்றான்.
பழங்கால தேக்குமரக்கட்டில் மிகவும் கனமாக இருந்தது. இருவரும் தங்கள் முழு சக்தியை செலுத்தி கால் அடிக்கு கூடுதலாக இழுத்து விட்டனர். பிறகு கட்டில் மேல் ஏறி, அந்த பகுதியில் என்ன மின்னியது என்று பார்த்தனர். ஏதோ பெரிய கோலிக்குண்டு போல் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்ததை மெதுவாக குனிந்து எடுத்தான் சோம்நாத். கையில் இருந்த அந்த பொருள் ஒரு அருமையான பெரிய ‘வைரக்கல் ‘ என்று அறிந்தனர். வெளியே எடுத்து லேசாக துடைத்து பார்த்ததும் அது வெளிப்படுத்திய மின்னல் போன்ற ஒளி அறையெங்கும் பரவியது. அதிர்ச்சியில் கொஞ்ச நேரம் இருவருக்கும் பேச்சே எழவில்லை.
சிறிது நேரம் கழித்து “கிரி, என்னடா இது, இவ்வளவு பெரிய வைரக்கல், கோவில் சாமி கிரீடத்தில் இல்லேன்னா ராஜா,ராணி காலத்து ஆரங்கள் இதுல எல்லாம்தான் இது போல பாத்திருக்கோம் நாம. இதுயாருடையதா இருக்கும்? இதுக்கு முன்னாடி யாரோ ஒரு டாக்டர் ஃபேமிலி இருந்தாங்கன்னு சொன்னாங்களே, அவங்களோடதா இருக்குமோ? எத்தனை நாளா இங்கே இருக்குன்னு தெரியலையே? இவங்க இந்த வெளிப்புற ஒட்டடைய சுத்தம் செஞ்சுட்டு, தரையை க்ளீன் பண்ணிட்டு போய்டுவாங்க போலிருக்கு. யாரும் கட்டில் அடியில் சுத்தம் செய்ய முயற்சி செய்யலை ன்னு தோணுது.” என்றான் சோம்நாத்.
“ஆமாண்டா, கட்டில் வெரி ஹெவி இல்லையா, அதை நகர்த்த முயற்சி எல்லாம் செய்திருக்க மாட்டாங்க. இன்னொன்று, இவ்வளவு பெரிய வீட்டை இந்த அளவு சுத்தம் செஞ்சு வச்சிருக்கறதே பெரிய ஆச்சரியம்தான் ” என்றான் கிரிதர்.
“சரி, அதை விடுடா, இப்ப இதை என்ன செய்றது? நாம் எடுத்துக்கறதா, இல்லை முத்து கிட்ட கொடுக்கிறதா?” என்று கேட்டான் சோம்நாத்.
“இப்ப வேண்டாம் டா. முதலில் இதுக்கு முன்னாடி குடியிருந்த வங்க கிட்ட கேட்டு பார்ப்போம். அப்புறம் பார்க்கலாம் ” என்றான் கிரிதர். மேலும் சொன்னான். ” டேய் சோம், இது ஒரு அற்புதமான பழைய காலத்து வைரக்கல். மதிப்பு சில கோடிகளில் இருக்கும் நிச்சயம். இதை எப்படி, யாரு அலட்சியமா தொலைச்சுட்டு போவாங்க, போனாலும் திரும்ப வந்து சொல்லிட்டு தேடிப்பாத்திருக்க மாட்டாங்களா? இப்போதைக்கு நம்ம கிட்ட இருக்கட்டும் “
சோம்நாத் அந்த உயரிய வைரக்கல்லை பத்திரப்படுத்தி வைத்தான். பிறகு இருவரும் அன்று காலை பத்தரை மணிக்கு மேல் முத்து அனுப்பி வைத்து வீட்டை சுத்தம் செய்த நபர்களிடம் சோம்நாத் பேச்சுக் கொடுத்து பார்த்தான். இதற்கு முன்னர் மிகப்பெரிய வயதான பணக்காரர்கள் தங்கியிருந்தார்களா என்பது பற்றி கேட்டு, அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிந்தான்.
பிறகு மதியம் முத்துவிடம் ‘ நாங்கள் காலையில் அனுப்பிய தொகை கிடைத்ததா ‘ என்று உறுதி செய்தபின் தற்செயலாக கேட்பது போல் இதற்கு முன்னர் எந்த மாதிரியான குடும்பங்கள் இங்கு குடியிருந்தனர் என்பது பற்றி விசாரித்தனர். முத்து சொன்ன தகவலின் படி இரண்டு வருடங்கள் முன்பு ஒரு தொழிலதிபர் குடும்பம், இலுப்பைக்களத்தூரின் வெளி எல்லையில் உள்ள சிறுமலை எனுமிடத்தில் அவர்களுக்கு சொந்தமான பண்ணைத்தோட்டத்தில் புதிய வீடு கட்டுமானம் நடந்து கொண்டிருந்ததை கண்காணிக்க ஏழு மாதங்கள் இங்கே குடியிருந்தனர் என்று புரிந்து கொண்டனர். அவர்களின் முகவரி, முன்னால் இங்கிருந்த டாக்டர் முகவரி எல்லாவற்றையும் முத்துவிடம் வாங்கிக் கொண்டனர். முத்து காரணம் கேட்க, கிரிதர் ” எங்கள் கம்பெனியின் சாஃப்ட் வேர் ப்ரோக்ராம் ஏதாவது அவங்க பிஸினஸுக்கு உதவியா இருக்குமா என்று மார்க்கெட்டிங் செய்யத்தான்” என்றான்.
அடுத்த நாள் முதல் ஐந்து நாட்கள் அவர்கள் புதிய அலுவலக வேலைகள் தொடர்பாக மிகவும் ஒன்றிவிட்டார்கள். ஆனால் அவர்கள் வீட்டுக்கு வந்த மூன்றாம் நாளில் இரவு திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்து கொண்டான் சோம்நாத். வாசல் வரை போய் வந்தான். கிரிதர் ” என்னடா ஆச்சு, ஏன் இப்படி எழுந்துட்டே?” என்றான். ” இல்லைடா, ஏதோ கெட்ட கனவு மாதிரி இருந்தது.முழிப்பு வந்துடுச்சு. ஒண்ணும் இல்லை. தூங்குவோம்” என்றான் சோம்நாத்.
இன்னும் ஒரு நாள் கழித்து கிரிதர் தூக்கத்திலிருந்து ” என்ன சத்தம்” என்று கூறியபடியே எழுந்தான். “என்னடா ஆச்சு, ஏன் எழுந்திருச்சே” என்று சோம்நாத் கேட்டான். “ஏதோ சத்தம் பலமா கேட்டது போல் இருந்தது. அதான் தூக்கம் கலைஞ்சு எழுந்திருச்சுட்டேன். வேற ஒண்ணும் இல்லை” என்று சொல்லி மீண்டும் தூங்கப்போனான்.
அடுத்த இரண்டு வாரங்களில் அலுவலகப் பணிகளுக்கிடையே, முத்து கொடுத்த முகவரிகளில் இதற்கு முன்னர் இந்த வீட்டில் குடியிருந்த குடும்பங்களைத் தேடி கிரிதரும் சோம்நாத்தும் அலைந்தனர். ஒரு வழியாக அவர்களைக் கண்டு பிடித்து தங்கள் மனதில் இருந்த கேள்விகளைக் கேட்டனர்.
மருத்துவரும், அவர் மனைவியும் சொன்னார்கள். “அது என்னன்னு தெரியலை, அங்கே இருந்த வரைக்கும் சரியான தூக்கம் இல்லை. அதேபோல் கிளினிக்குக்கு ஆள் வர்றதும் திடீரென குறைஞ்சுடுச்சு. எங்களுக்கு ஷாக் ஆயிடுச்சு. இந்த வீடு கட்டற வேலை வேற ரொம்ப ஸ்லோவா போயிட்டிருந்தது.என்ன செய்யறதுன்னே தெரியலை. எப்படியோ பொறுமையா இருந்து, தொடர்ந்து ஃபாலோ அப் பண்ணி, முடிக்கறதுக்குள்ளே ஒரு யுகமே முடிஞ்ச மாதிரி ஆயிடுச்சு. ஆனால் பாருங்க இங்கே வந்து ஒண்ணரை வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. எந்த ப்ராப்லமும் இல்லை.”
கிரிதர் கேட்டான். “ஏதாவது கனவு வந்ததா, தூக்கத்தை கெடுப்பது போல்? உங்களுக்கு ஏதேனும் விலையுயர்ந்த பொருள் தொலைஞ்சு போனதா அங்கே இருக்கும்போது?”
அவர்கள்”அதெல்லாம் இல்லை.ஆனால் அந்த வீடு எங்களுக்கு ராசியில்லைன்னு மட்டும் நல்லா புரிஞ்சுது. என்றார்கள்.
அவர்களைப் போலவே மிகக் குறைந்த மாதங்கள் குடியிருந்த மற்றொரு குடும்பத்தினரும் “சரியில்லை சார். அங்கே போய் நுழைஞ்ச நாளில் இருந்தே ஏதாவது கஷ்டம்தான் சார். என் பையனுக்கு ஆக்சிடென்ட், என் வைஃப்க்கு காய்ச்சல், எனக்கு திடீர்னு வண்டி ஸ்கிட் ஆகி முழங்காலில் அடி இப்படி தொடர்ந்து தொல்லைகள். அதான் காலி பண்ணிட்டோம். பெரிய வீடுதான். வசதி எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிம்மதி இல்லை.” என்றனர்.
அவர்களும் எதுவும் காணாமல் போகவில்லை என்றனர். கனவு பற்றிக் கேட்கும்போது ” அப்படி எதுவும் இல்லை. எப்பவோ அரைகுறையா ஏதோ வந்தது.அது ஒரு பெரிய விஷயம் இல்லை.”
இருவரும் நன்றி சொல்லி விட்டு திரும்ப வீடு வந்து சேர்ந்தனர்.
“டேய், கிரி, நமக்கு இந்த தூக்கம் டிஸ்டர்பன்ஸ் எல்லாம் ஒரு வேளை இந்த வைரக்கல் வேலையா இருக்குமோ? அதை நாம் வச்சுக்கறதா, இல்லை ஓனர் கிட்ட கொடுக்கிறதா ஒரே குழப்பமா இருக்கேடா. அவங்களுக்கு இந்த மாதிரி ஏதும் அனுபவம் இல்லை. ஆனால் அவங்களுக்கும் ஏதேதோ தொந்தரவுகள் இந்த வீட்டுல இருக்கும்போது இருந்திருக்கு.” என்று சோம்நாத் கவலையுடன் கூறினான்.
“வைரக்கல்லுக்கும் அதுக்கும் எப்படிடா சம்மந்தம்? அதை அவங்க பாக்கவே இல்லையே. வேற ஏதோ வித்தியாசமாக நடந்திருக்கு அவங்களுக்கு. நாம ரொம்ப குழம்ப வேண்டாம். ஓனர் கிட்ட கொடுத்து விளக்கம் சொல்லிட்டு இருக்கிறதுக்கு பதிலா எனக்கு என்ன தோணுதுன்னா இங்கே ஏதாவது அம்பாள் கோவில் இருந்தா அங்கே உள்ள உண்டியலில் போட்டுடலாம்.என்ன சொல்றே நீ?” என்று கிரிதர் கேட்டான்.
“ஆமாம். இதை நாமே எடுத்துக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனால் இதை எடுத்து போய் ஏதும் வம்பு வராமல் இருக்கணுமேன்னு ஒரு பக்கம் உறுத்தலாக இருந்தது. சரி, நீ சொல்றதும் நல்லதுதான். இது பழங்கால கோவில் வைரம் மாதிரியே இருக்கு. அதனால் அம்பாள் கோவில் உண்டியலுக்கே போகட்டும். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. மன்டே ஆஃபீஸ் போறதுக்கு முன்னாடி கோவில் போய்ட்டு இதை உண்டியலில் சேர்த்துட்டு போவோம்.” என்றான் சோம்நாத்.
பிறகு வழக்கம்போல் அவர்கள் தினமும் சாப்பிடும் இட்லி சென்டர் எனுமிடத்தில் சாப்பிட்டு விட்டு வந்து வெகுநேரம் பேசிக்கொண்டும், இடையிடையே வேறு இடத்தில் உள்ள நண்பர்கள் அலைபேசியில் அழைத்ததற்கு உரையாடி முடித்து தூங்கச் சென்றனர்.
மறுநாள் காலை ஞாயிறு என்பதால் அவர்கள் வழக்கமாக செய்யும் ஒரு வாரம் உடுத்திய துணிகளைத் துவைப்பது, காய்ந்ததை இஸ்திரி செய்யக் கொடுப்பது, பிறகு காலை உணவு உண்டுவிட்டு, புத்தகங்கள், செய்தித்தாள்கள் வாங்குவது, மற்றும் வேறு சில வேண்டியவைகளை வாங்கி வருவது இவைகளை கிரிதரும் சோம்நாத்தும் செய்து விட்டு வீடு வந்தபோது மணி பத்தாகி விட்டது.
இதனிடையே சோம்நாத் அதிகாலை அவனுக்கு வந்த அந்த கனவு பற்றி கிரிதரிடம் சொன்னான். பதினோரு மணிக்கு வெளியே “சார், அண்ணா” என்று அழைக்கும் சத்தம் கேட்டது. இருவரும் வெளியே வந்தனர்.
அங்கே வெளி வராந்தாவில் நீல நிறத்தில் வெள்ளைப் பூக்கள் போட்டிருந்த சட்டையும், மஞ்சள் நிறத்தில் பட்டுப் பாவாடையும் அணிந்திருந்த சிறுமி நின்றிருந்தாள். பத்து அல்லது பதினோரு வயதிருக்கும்.சோம்நாத் “என்னம்மா, நீ யாரு, என்ன வேணும் உனக்கு?” என்று கேட்டான்.
அந்த பெண் சொன்னாள். “அண்ணா, என் பேரு நந்தினி. நாங்க ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்த வீட்டில் இருந்தோம். அப்புறம் ரொம்ப தூரம் போய்ட்டோம். என்னோட தங்க செயின் லாக்கெட்டில் இருந்த வெளிர் மஞ்சள் வைரக்கல் இந்த வீட்டில் விழுந்திடுச்சு. நான் விளையாடிட்டு இருக்கும் போது விழுந்திருக்கு எப்படியோ கழன்று. அது எங்களுக்கு அந்த ஊருக்கு போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சது. உடனே நானும் என் அப்பாவும் வர முடியல. இப்ப அப்பாவோடதான் வந்திருக்கேன். அங்கே வெளியே நின்னு பேசிட்டு இருக்காரு. அதுக்கு முன்னாடி நான் வந்துட்டேன். தயவு செஞ்சு அதை எடுத்துட்டு போக அனுமதி கொடுங்க அண்ணா” என்றாள்.
“நந்தினி, நான் உன்னை நம்பறேன். அதை எங்கே காணாமல் போச்சுன்னு தேடுவே, உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று சோம்நாத் கேட்டான்.
“எனக்கு தெரியுமே, நான் எப்பவும் அங்க ஒரு பெரிய கட்டில் இருக்கும். அதுக்கடியில் போய் ஒளிஞ்சு விளையாடுவேன். இங்கேருந்து உள்ள போய் முதல் அறையில்தான் அந்த கட்டில் இருக்கும் ” என்றாள் நந்தினி.
கிரிதர் அந்த சிறுமி நந்தினியிடம் கேட்டான்.” உன் அப்பா பேரு என்னம்மா?”
நந்தினி சொன்னாள். “கோசல ராஜா, அவருக்கு இது போல வேற இடத்தில் இன்னும் பெரிய வீடு இருக்கு. ஆனால் இதுதான் அவருக்கு அதிகமா பிடிச்ச வீடு” என்றாள்.
கிரிதர் “சரி, உள்ளே வந்து நீயே தேடிப்பாரு, நீ தொலைஞ்சு போனதா சொன்ன வைரக்கல். உன் அப்பா வரும்போது நான் சொல்லிக்கிறேன்” என்று நந்தினியை உள்ளே அழைத்துச் சென்றான். சோம்நாத் பின்தொடர்ந்து சென்றான்.
நந்தினி நேராக மிகச்சரியாக அந்த கட்டில் போட்டிருந்த அறைக்கு சென்று சுவர் ஓரத்தில் இருந்த கட்டிலில் தலை வைக்கும் பக்கம் இருந்த காலின் கீழ் குனிந்து தேடினாள். பிறகு நிமிர்ந்து ” இங்கேதான் விழுந்திருக்கும். இந்த இடத்தில்தான் நான் அடிக்கடி ஒளிந்து விளையாடுவேன்” என்றாள்.
சோம்நாத் உடனே கிரிதரிடம் “ஐ திங்க் கிரி, இவள்தான் உண்மையான சொந்தக்காரின்னு நம்பறேன். என்ன சொல்றே, கொடுத்துடலாமா?” என்று கேட்டான்.
கிரிதர்” கரெக்ட்தான். இவள் நடிக்கலை. உண்மையத்தான் சொல்றா. இவளிடமே அதை கொடுத்துடலாம். நமக்கும் பிரச்னை தீர்ந்தது” என்றான்.
நந்தினி இருவரையும் கவனித்து விட்டு “அண்ணா, நீங்க பாத்து எடுத்து வச்சிருந்தா, எங்கிட்ட கொடுங்க அண்ணா. அது இல்லாமல் எனக்கு தூக்கமே இல்லை. தினமும் ராத்திரில முழிச்சிட்டு இந்த வீட்டைப்பத்தியே நினைக்கிறேன்.” என்றாள்.
“ஓ.கே, ஓ.கே. நந்தினி, கவலைப்படாதே. எங்க கிட்ட பத்திரமா அந்த வைரக்கல் இருக்கு. உங்கிட்ட தர்றோம். உங்க அப்பா கிட்ட சொல்லிடு.” என்று சோம்நாத் கூறியபடியே, அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த வைரக்கல்லை எடுத்து வந்து நந்தினியிடம் காண்பித்து “இதுதான் நீ தேடி வந்ததா?” என்று கேட்டான்.
சந்தோஷம் பொங்கும் முகத்துடன், சிரித்தபடியே “ஆமாண்ணா, இதான் நான் தொலைச்ச கல். நீங்க பத்திரமா வச்சிருந்ததுக்கு ரொம்ப நன்றி ” என்று கூறி அதை வாங்கப் போனாள்.
கிரிதர், சோம்நாத் இருவரும் அதை அவள் கையில் கொடுத்தனர். பிறகு “இதை உனக்கு நல்லபடியா திருப்பி தந்ததுக்கு நீ எங்களுக்கு என்ன பரிசு தருவே” என்று கேட்டனர்.
நந்தினி அவர்கள் இருவர் கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு, “உங்களுக்கு சீக்கிரமே நான் பரிசு தருவேன் அடுத்த தடவை வரும்போது. ஆனால் நீங்க இங்க இருக்கணும்” என்று சொல்லி விட்டு வைரக்கல்லை எடுத்துக் கொண்டு துள்ளலுடன் வெளியே ஓடினாள்.
“எப்படி நம்மை சந்தோஷப்படுத்திட்டு போறா பாருடா, படு சுட்டி” என்று கிரிதர் சோம்நாத்தை பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னான்.
“சரி வா, வெளியே போய் நந்தினியோடு அவள் அப்பாவையும் பாத்துட்டு வருவோம்” என்று சோம்நாத் சொல்ல, இருவரும் வெளியே வந்து தெரு வரையில் சென்று பார்த்தனர். ஒருவரும் தென்படவில்லை. “சரி, அங்கே யாராவது தெரிஞ்சவங்க வீட்டுக்கு போய் இருப்பாங்க. அதுவரைக்கும் நாம வீட்டை கொஞ்சம் க்ளீன் பண்ணுவோம்.அந்த ஆட்கள் சரியாகவே செய்யலை” என்று சோம்நாத் கூற, உள்ளே வந்தனர் இருவரும்.
அந்த நேரத்தில் இவர்களின் அலுவலக குறிப்பேடுகளின் சில காகிதங்கள் நேர் அறை வாசல் வரை காற்றில் பறந்து சென்றிருந்தது. அதை எடுப்பதற்கு சென்ற சோம்நாத் ” டேய், கிரி இந்த ரூமில் இருந்து டஸ்ட் நிறைய வருதுடா.
“இந்த இடத்தைப் பாரு. அதான் லாக் பண்ணலயே, திறந்து சுத்தம் செஞ்சா என்ன? ஓனர் கேட்டா சொல்லிடுவோம்” என்றான்.
“சரி, வா, போய் பாக்கலாம். நமக்கு எதுக்கு வம்புன்னு நினைச்சேன். பரவாயில்லை, சுத்தம் தானே செய்றோம்” என்று சொல்லி கிரிதர், விளக்குமாறு எடுத்து வந்தான்.
‘கர்ட், கர், கிர்ர்’ என்ற சப்தங்களுடன் கதவின் தாளைத்திறந்து உள்ளே இருவரும் சென்றனர். ஒரே தூசி, குப்பை மயம். முகத்தில் இருவரும் கவசம் அணிந்து தூசி தட்டும் வேலையில் ஈடுபட்டனர். கடைசியாக இருந்த ஒரு கண்ணாடி கதவு பொருத்திய அலமாரியில் சில பெரிய புத்தகங்கள், பைகள் இருந்ததோடு ஒரு புகைப்படம் துணி சுற்றி கவிழ்ந்து இருந்தது.
மிக ஆர்வத்துடன் சோம்நாத் அதை எடுத்து துணியை அகற்றி படத்தில் இருந்த தூசியை துடைத்தான். அது ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் சுமார் பத்து நபர்கள் அனைவரும் சேர்ந்து நின்றும் உட்கார்ந்து கொண்டும் இந்த வீட்டின் முன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
“இங்கே பாருடா கிரி, இந்த போட்டோவை, இவங்கதான் இந்த வீட்டு ஓனர் குடும்ப நபர்கள் போல இருக்கு.” என்றான். கிரிதர் அதைப் பார்த்து விட்டு “அது போலத்தான் தெரியுது. அங்கேயே நிமிர்த்தி வச்சுடலாம்” என்று சொல்லி நகர முற்பட்டான்.
“டேய், கிரி, கொஞ்சம் உற்றுப்பாருடா, எனக்கு மட்டும்தான் அப்படி தோணுதா? அங்கே கீழ் வரிசையில் ரெண்டாவதா நின்னுட்டு இருக்கற நபரைப்பாருடா” என்று சத்தமாய் சோம்நாத் சொல்ல, கிரிதர் திரும்பவும் வந்து அவன் கை காட்டிய இடத்தைப் பார்த்தான். அங்கே சற்று நேரம் முன்பு நந்தினி என்று சொல்லிக்கொண்டு வந்த சிறுமி போலவே ஒருத்தி கழுத்தில் ஒரு வைரம் பதித்த ஆரம் அணிந்து நின்று கொண்டிருந்தாள். அது இவர்கள் வைத்திருந்த அதே வைரக்கல் போலவே இருந்தது.
“டேய், இப்ப வந்துட்டு போனாளே நந்தினி அவளை மாதிரி இல்லை, கழுத்தில் பாரு, அதே போலவே வைரக்கல் ஆரம்.பட்டுப்பாவாடை பார்டர் அதே மாதிரி இருக்கு பாருடா” என்றான் சோம்நாத்.
“அவள் மாதிரி இல்லைடா சோம், அவளேதான்” என்று சொல்லி ” ஃபோட்டோ கீழே பாருடா சோம்” என்று காட்டினான்.
அதில் புகைப்படம் எடுத்த வருடம் 1905 என்று எழுதப்பட்டிருந்தது. இருவருக்கும் வியர்த்துக் கொட்டியது.
புகைப்படத்தை அப்படியே நிறுத்தி, அலமாரியை மூடிவிட்டு தடதடவென இருவரும் வெளியே ஓடி வந்தனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களையறியாமல் மூச்சு வாங்கியது. ஐந்து நிமிடங்கள் கழித்து கிரிதர் அலைபேசியில் யாரையோ அழைத்தான். “யாருக்குடா இப்ப ஃபோன் செய்றே” என்று கேட்டான் சோம்நாத்.
“வேற யாரு, சிவராம்தான். சீக்கிரமா ஓடணும் இங்கேயிருந்து” என்று சொல்லிக் கொண்டே வெளிப்பக்கம் சென்றான். சோம்நாத் பின் தொடர்ந்தான்…
![]() |
பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க... |