பிழைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2025
பார்வையிட்டோர்: 489 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடற்காற்று, சீறிச் சுழன்றது! கடலலைகள், வானை நோக்கிப் பாய்ந்துச் சாடின… கடலோடு காற்று முயங்கிக் குழம்பித் தறிகெட்டுச் சுழன்றது. 

அந்தச் சூறாவளியில் ஓர் சடலம் சுழன்று திரிந்து அலைக்கழிகிறது… 

அதுதான் பிழைக்கப் போனவனின் கதி! 

வானவீதியில் ஒளி சிந்திச் சிலிர்க்கும் தாராகணங்கள் இருண்டு கவிந்த வானம் கன்னங்கரிய கடல்: வரம்பற்ற நீர்ப்பரப்பு. கடல் நடுவே படகொன்று செல்கிறது. படகில் ஐந்துபேர்தான் பிரயாணிகள். கறுத்த இரண்டு உருவங்களின் வலுமிக்க புஜங்களில் வியர்வை வழிய துடுப்புகள் நீரிற் சுழல்கின்றன. 

படகில் அமர்ந்திருக்கும் ஐவரில் ஒருவன் இளைஞன் மற்றவர்கள் நடுத்தர வயதுடைய ஏழைகள்… ஒருவன் சரிகை அங்கவஸ்திரக்காரன். அந்த இருளில் அவன் காதிலுள்ள வைரக் கடுக்கன் மின்னுகிறது. 

அலையில் படகு அல்லாடுகிறது. ஒருவர்மீது ஒருவர் சாய்கின்றனர். ஒருவராவது வாய்திறந்து பேச வேண்டுமே… உள்ளம் கனத்தால் வாய்திறக்குமா? 

அந்த இளைஞனின் கண்கள் கலங்குகின்றன. சோகமும் பீதியும் அவன் இதயத்தை அழுத்துகின்றன… பாய்மரம் ‘சடசடக்கிறது… படகைக் காற்றா தள்ளு கிறது?… இல்லை… விதி தள்ளுகிறது!… 

அவன் விழிகள் படகுவந்த திசையை- சூன்ய இருள் மண்டிக் கிடக்கும் பிறந்த பொன்னாட்டை ஏக்கத்தோடு பார்க்கின்றன… அவன் விழிகளுக்கு அந்த இருளின் சூன்யத்தை வெட்டிக் கிழித்து பார்வையை ஓட்ட சக்தி இருந்தது. ஆனால் அந்த இருளை விலக்கி சோதியாகிச் சுடர் விடச் சக்தி இல்லை. தாய்த்திருநாட்டை நோக்கிக் குத்திட்டு நிற்கும் அவன் விழிகளில் கண்ணீர் திரை இடுகிறது. 

ஒரு பெருமூச்சு. 

இமைகள் மூட, கன்னத்து எலும்புக் குழியில் கண்ணீர் வடிந்துத் துளிக்கிறது. 

படகோட்டி மெல்லிய குரலில் எச்சரிக்கிறான். 

“கரைக்கு வந்துட்டோம்…” 

“இனிமேதான் உஷாராயிருக்கணும்…” 

அந்தப் பிரயாணிகளின் முகத்தில் சோகத்தின் கீறல் படிந்த மகிழ்ச்சி ரேகைகள் படர்கின்றன! தங்கள் ‘சுவர்க்க பூமி’ நெருங்கி விட்டதைப் போன்ற சபலம்! 

இளைஞனின் உள்ளம் ஆண்டவனுக்கு நன்றி கூறுகிறது! 

கடலின் அலைகள் ‘தள தள’க்கின்றன. துடுப்பு வீச்சின் ‘சலக்…சலக்’ கென்ற… சப்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்… 

எதிர்த்திசையிலிருந்து திடீரென நான்கைந்து ‘டார்ச்’ லைட்டுகள் நடுக்கடலை நோக்கிப் ‘பளீ’ரிடுகின்றன! 

”ஐயோ!”… வெனப் படகுக்காரன் அலறுகிறான்…

‘டார்ச்’ லைட்டுகளின் ஒளிவீச்சு கடலைத் துழாவுகிறது! 

துடுப்புகள் திசைமாறிச் திசைமாறிச் சுழல்கின்றன! படகின் படகுப் பிரயாணிகள் தலை தெரியாது குனிந்து கொள்கின்றனர்… சரிகை அங்கவஸ்திரக்காரன் மட்டும் தலையைத் தூக்கி மேலே பார்க்கிறான்… 

ஒரு நிமிஷம்… 

இரண்டு நிமிஷம்… 

ஒரு ‘டார்ச்’ லைட்டின் வெளிச்சம் சுழன்று திரும்புகிறது! 

அதோ!… படகின் மீது ஒளி வட்டம் விழுந்து கடல் நீர் பிரகாசிக்கிறது! சரிகை அங்கவஸ்திரக்காரன் குனிந்து தலை மறைத்துக் கொள்கிறான். துடுப்புகள் ஒரு வினாடி ஓய்வு பெறுகின்றன. 

“விர்…விர்…”ரெனக் கவரயிலிருந்து ‘விசில்’கள் அலறுகின்றன. 

படகு, வட திசை நோக்கி விரைகிறது! சரிகை அங்க வஸ்திரக்காரன் கலவரத்துடன் கூறுகிறான், பிரயாணிகளைப் பார்த்து… 

“உம்… இறங்கு… ஐயா… கரைக்கு வந்தாச்சு…. இங்கே இடுப்பளவு தான் ஆழம்… உம் சீக்கிரம்… கரைக்குப் போகலாம்” 

படகோட்டிகள் மௌனம் சாதிக்கின்றனர்… 

ஒருவர் பின் ஒருவராக நான்கு பிரயாணிகளும் கடலுக்குள் சரிகின்றனர். 

கடைசியாக இளைஞன் இறங்குகிறான்… ஒருகையால் படகைப் பிடித்துக்கொண்டு நீரில் இறங்குகிறான். ஆழம்!… இடுப்பளவா?… கழுத்துவரை… அதற்கும் அதிகம்!… 

‘ஐயோ!… அது நடுக்கடல்!… அவனுடைய சக பிரயாணிகள் அதோ, திக்குமுக்காடுகிறார்கள்! அவன் படகைப் பிடித்து ஏற முயல்கிறான்… அவன் கையைப் பிடித்து நீரில் தள்ளுகிறான் சரிகை அங்கவஸ்திரக்காரன்… படகு வந்த திசைநோக்கித் திரும்புகிறது…. 

இளைஞன் தன் சக பிரயாணிகளையும், படகையும் இப்பொழுது பார்க்கவில்லை… கைகளை எட்டி வீசி நீந்துகிறான்… நீந்துகிறான்… 

நாசியிலும் வாயிலும் கடல் நீர் புகுகிறது… அவ்வளவு தான் அவனுக்கு நீந்த முடியும். 

‘அட, பாவி… என்று சரிகை அங்கவஸ்திரக்காரனை சபிக்க வாய் திறக்கும்போது அவனுள் கடல் நீர் புகுந்து மரணத்தைத் துரிதப்படுத்துகிறது. 

அவனுக்கு இப்பொழுது யாவும் பொய். அவன் மனைவியின் கண்ணீர்… முதுமையடைந்த பெற்றோரின் பாசம்… அவனுக்குப் பிழைக்க வழிகாட்டிய ‘புண்ணிய வாளனின்’ ஆசை வார்த்தைகள் யாவும் க்ஷணநேர மாயையாகி விட்டன. மரணம் ஒன்றே நிதர்சனமான தோற்றத்தோடு அவனை எதிர் நோக்கி இருகை நீட்டி அழைக்கிறது. அதோ, அவன் மரணத்தின் கரங்களில் தத்தி தத்திப் புரள்கிறான்… இன்னும் கூட நம்பிக்கை… உயிர் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கை… நீந்துகிறான்… உயிர்! அதென்ன அவ்வளவு சமான்யமா? 


“திரை கடலோடியும் திரவியந்தேடுன்னு சொல்லு வாங்க. நீ, யாரப்பா… பொழைக்கத் தெரியாத ஆளு. சிலோன்லே இங்கே மாதிரி பட்டினி கெடந்து சாகிறதுங்கறது இல்லே… கையில மூணு துட்டு இல்லாமெ போன பயலுவல்லாம் ரெண்டு வருசத்திலே லெச்சாதி பதியாயிட்டானுவ…” என்று நீட்டி முழக்கினான் சரிகை அங்கவஸ்திரக்காரன்!… 

“அதெல்லாம் சரிதாங்க… உள்ளூர் கஞ்சியோ கூழோ குடிச்சாலும் குடும்பத்தோடே இருக்கறமாதிரி ஆகுங்களா?…” என்றான் அந்த வாலிபன்! 

•அது சரி… நான் என்னத்தை அதுக்கு மேலே சொல்றது… காலத்துக்குத் தகுந்த மாதிரிதானே புத்திப் போகும்… என்னவோ நமக்குத் தெரிந்த புள்ளை யாச்சேன்னு சொன்னேன்… அப்புறம் உன்னிஷ்டம்…” 

“அப்ப… என்ன சொல்றீங்க” என்று குழம்பிய மனத்தோடு கேட்டான் இளைஞன் 

“நான் சொல்றபடி கேளு… நம்ம செட்டியாருக் கிட்டே நானே கொண்டுபோயி ஒன்னெ ஒப்படைச்சுடு றேன்… கடையிலே அப்படி ஒண்ணும் வேலை இருக்காது. சாப்பாடெல்லாம் போட்டு மாசம் எண்பது ரூபா குடுப் பாங்க… நல்ல காசு பொரள்ற இடம்… நம்ம தமிள் ஆளுங்க பொளைச்சி போகட்டுமேன்னுதான்…இல்லாட்டி அங்கே இல்லாத ஆளா?… வெள்ளிக்கிளமை தோணி போவுது… மூணு ஆளுவ வருது… நீயும் வந்தா …வா…” 

“….”

“ஒண்ணும் கவலையே இல்லை… அங்கே போனா தெரியும்… அப்புறம் சொல்லுவே… சிங்களத்துக் குட்டிகளை பார்த்துக்கிட்டே இருந்தாலும் போதுமே!…” 

“சே… சே… அதெல்லாம் எதுக்குங்க? பொழைப்பு கெடச்சா போதும்…” 

‘‘அட, ஒனக்குச் சொல்லலை… அவ்வளவு நல்ல ஊரு… ஜனங்கெல்லாம் நல்லா இருப்பாங்கன்னு சொல்றேன்…” 

“இன்னம் யோசனை பண் றீயா…சம்பளம் அல்லாமெ பல வழியிலேயும் காசு சேறும்… ரெண்டு வருஷத்திலே ஒரு ‘லகரம்’ சேத்துக்கிடலாம். நமக்குத்தான் தோணி வழி இருக்கவே இருக்கு… நெனைச்சா வந்துட்டுப் போலாமே… என்ன சொல்றே…” 

“ஆகட்டுங்க…” 

“ஆகட்டும்னா… ஏற்பாடெல்லாம் செய்ய வேண்டியதுதானே…” 

”உம்… செய்யுங்க…” 

“சபாஷ்… அதான் பொழைக்கிற புள்ளே… இந்தா… இப்போ இதை வச்சுக்க, இனிமே ஒனக்கு நல்லகாலம் தான்…” என்று அவனிடம் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை நீட்டினான். 

அந்த இளைஞனின் மனம் எதிர்காலத்தைப் பற்றி பல இன்பக் கோட்டைகளை எழுப்பி மகிழ்ந்தது! 

அவன் பிழைக்கப் போகிறானாம்! 


“ஐயோ!… கொளும்புக்கா? என்னை விட்டுட்டா?”..அவன் மார்பில் முகம் புதைத்து விம்மினாள் அவன் மனைவி. 

அவளுக்கு பதினெட்டு வயதுதான். போன வருஷம் தான் கல்யாணமாச்சு… அவள் வந்து வீட்டில் விளக் கேற்றிய நேரமோ என்னவோ… அவன் வேலையில் மண் விழுந்தது! காலம் அந்தத் தம்பதிகளைப் பார்த்து கொடூர மாக நகைத்தது. கண்ணீரில் பசியாற முடியுமானால் அவர்களுக்குக் கவலையே இல்லை. 

உள்ளூரில் பட்டினி கெடந்து, சாகிறதை விட எங்காவது கண்காணா தேசத்துக்குச் சென்று பிழைக்கலாம், என்று அவன் நினைத்தாலும் போவதற்குத் தைரியமில்லை. கட்டிய மனைவியையும், பெற்ற தாய்  தகப்பனையும் விட்டுப் பிரிய அவன் மனம் போதிய பலம் பெறவில்லை. 

அப்பொழுது தான் அங்கு வந்தான். சரிகை அங்கவஸ்திரக்காரன்- சிலோனில் கொள்ளையடிக்கும் ‘தமிழ் மார்வாரி’ யின் ஏஜண்ட் 

அவன் சொன்னதெல்லாம் உண்மையா?… இலங்கையிலுள்ள தமிழ் முதலாளிகளுக்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அபிமானம் ஏற்பட்டுவிட்டதா?… தமிழர்கள் ‘பிழைத்துப் போகட்டும்’ என்ற தயாள மனப்பான்மையா?… 

இல்லை… 

சிங்களத்தார்கள் சோணாகிரிகளல்லர்; அங்குள்ள தொழிலாளிகள் மன்னார்சாமித் தொழிலாளர்களல்லர்! ஷாப் சட்டத்தை ஏய்ப்பதற்குத் தமிழ் முதலாளியுடன் சேர்ந்துத் தாளம்போட ‘மாட்டார்கள். லெட்ஜரில் ஒரு கணக்கு – கொடுக்கும் சம்பளம் அதில் பாதி… என்றால் மிகுதிக்கு அது ஜவுளிக் கடையானால் இரண்டு பீஸ் துணி எடுத்துக்கொண்டு போய்விடுவான் வேலைக்காரன்… 

இல்லாவிட்டால்… அவர்கள் மூதாதையர்கள் ‘லங்கா தகன’ அனுபவசாலிகள் என்பது ‘தமிழ் மார்வாரி’ களுக்குத் தெரியும். 

இதைச் சமாளிக்க, தமிழ் மக்களை ஏமாற்றி அழைத்துச் சென்று தங்கள் தொழிற்சாலைகளுக்குள்ளோ கடைகளுக்குள்ளோ காலம் முழுதும் அடிமைகளாக அடைத்து வைத்து நாள் முழுதும் மிருகங்களாக உழைக்க வைத்து, பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த அடிமை களுக்குச் சம்பளம் கிடையாது! வெளியுலகைக் காண உரிமை கிடையாது! 

சம்பளம் கேட்டால், எதிர்த்துப் பேசினால்… ‘இதோ கள்ளத்தோணிக்காரன்’ என்று அவர்களே போலீசுக்குக் காட்டிக் கொடுத்து விடுவார்கள். 

இந்தச் சிறையில் எண்ணற்றவர்கள் சிக்கிக்கின்றனர்! 

அப்படிப் பட்ட நரகத்தில், துயரப் படுகுழியில் ஏழைகளைத் தள்ளுவதற்காக இருக்கும் கங்காணிகளுக்குக் “கைக்காசு’ உண்டு! 

இதெல்லாம் அவனுக்குத் தெரியுமா?… அவன் மனைவிக்குத் தாள் தெரியுமா?… ஆனால் இருவருக்கும் பிரிவுதான் சகிக்கவில்லை! 

“வேண்டாங்க… இங்கேயே ஏதாவது வேலைப் பார்த்துக்கிட்டு எப்படியோ காலந்தள்ளலாம்…” என்று விம்மலுக்கிடையே கூறினாள் அவன் மனைவி! 

“அடி பைத்தியம்!… கொளும்புன்னா நீ என்னன்னு நெனைச்சே… தோ… கோடிக்கரையிலிருந்து இருபத்தஞ்சி மைல்தான் யாழ்ப்பாணத்துக்கு; இங்கேருந்து கும்பகோணத்துக்குப் போற மாதிரி…” 

“என்னெ இந்த நெலையிலே விட்டுட்டுப் போக ஒங்களுக்கு மனசு வருதா?…” அவள் மீண்டும் விம்மினாள் அந்தப் பசலை உடம்பு விம்மிக் குலுங்கிற்று! அவன் மார்பெல்லாம் கண்ணீர்க் கறை! 

ஆதூரத்துடன் அவள் முகத்தை நிமிர்த்தினான். சிம்னி விளக்கின் மங்கிய ஒளியில் நீர்நிறைந்த அழகிய விழிகள் ஜ்வலித்தன! முகம் சிவந்து உதடுகள் துடித்தன… 

அவள் முகம் தாய்மையின் கனிவு நிறைந்து ஏங்கிற்று! அவள் முகத்தோடு முகம் சேர்த்து கீழ்ஸ்தாயியில் தொண்டை கரகரக்க உணர்ச்சியுடன் கூறினான்… வார்த்தைகள் தழுதழுத்தன. 

“இன்னம் நாலு மாசத்திலே நமக்கு ஒரு புள்ளை பொறந்துடும் இல்லியா!” என்று அவன் கேட்கும்போது அவள் வயிற்றுப்பிண்டம் புரண்டு அசைவதில் அவள் மேனி முழுதும் ‘கிகிளுளுத்தது’ 

“கண்ணு… ஒனக்கு மாசா மாசம் பணம் அனுப்ப றேன்… கொழந்தைக்கு வித விதமா கொளும்பு சில்க்லே சட்டைதச்சு அனுப்புவேன்… ஒனக்குன்னு தனியா என்னென்ன வேணும்னு காயிதம் போட்டா அதெல்லாம் வாங்கி அனுப்புவேன்… நீ… ராணி மாதிரி ஆய்டுவே… இல்லியா”… 

அவன் அப்படிப் பேசும்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது… முகத்தை மூடிக்கொண்டாள்… 

“இன்னும் அழறியா?…” என்றவாறு அவள் கன்னத்தில் முத்தமிட்டான்… 

அப்பொழுதுதான் அவள் மீண்டும் அழுதாள்! அவன் போய் விட்டால்… இந்த அன்பு முத்தத்திற்கு ஏங்கித் தவிக்க வேண்டுமே! 

“ஐயோ!… வேண்டாம்… எனக்கு நீங்கதான் வேணும்…” 

”சே… சே… இது என்ன கொழந்தையாட்டமா? ஆறு மாசத்துக்கு ஒருதடவை வருவேன்… ரெண்டு வருஷத்துக் சுப்புறம் இங்கேயே வந்துடப் போறேன்… தைரியமா… இரு… இங்கே ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கும் கஷ்டப்படறதை விட, கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் அப் புறம் சொகப்படலாம்”… மீண்டும் அவளை அணைத்துத். தேற்றினான்… 

அவள் முகத்தில் சிறிது நம்பிக்கை! கண்கள் மட்டும். கலங்கி நீரைக் கொட்டுகின்றன! 

கிழிந்த கோரைப்பாயில் அவன் படுத்திருக்கிறான். அவன் மார்பில் தலைசாய்த்துச் சோர்ந்து கண்களை மூடுகிறாள் அவன் மனைவி. ஆதாரத்துடன் அவள் சிகையை வருடுகிறான் அவன்..பிறகு அவள் சிரத்தில் முத்தமிடுகிறான் … அவள் அயர்ந்து உறங்குகிறாள்… அவள் இதழ்க் கடையில் குறுநகை நெளிகிறது! மனம் இன்பக் கனவுகளில் கிறங்கிச் சுழல்கிறது. 

…அதோ, அவன் கொளும்புவிலிருந்துத் திரும்பி வரு கிறான். அவன் உடையெல்லாம் நாகரீகமாக மாறி இருக்கின்றன. அவனை அடையாளமே தெரியவில்லை! அவன் பின்னால் வண்டியிலிருந்து பெட்டி, கூடை, முதலிய சாமான்களை இறக்கி வைக்கிறான் வண்டிக்காரன்…. உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, மார்பு விம்ம வாசலில் வந்து நிற்கிறாள் அவள். வந்தவுடன் அவளை அணைத்துக் கொண்டு உள்ளே செல்கிறான்… தொட்டிலில் குழந்தை உறங்குகிறது. சுகமாசு நித்திரை புரியும் குழந்தையை எடுத்து முத்தமிடுகிறான். 

தொட்டிலில் குழந்தையைக் கிடத்திவிட்டு, ஒரு சிறிய பெட்டியை திறந்து அதனுள்ளிருந்து ஒரு வைரமாலையை யெடுத்து அவள் முன் காட்டுகிறான். அவள் ஆச்சர்யத்துடன் விழிக்கிறாள்… 

“இப்போ அழு!… அன்னிக்கு நான் போகும்போது அழுதியே… இப்போ அழேன்…” என்கிறான். அவள் கழுத்தில் அதை அணிவித்து அவளை மார்போடு அணைத்து அவள் முகத்தில் இதழ் பதிக்கிறான்!… 

அது- அவள் கனவு! கனவு, கனவாகி விட்டது!… 

அதோ! காலக்கடலில் ‘விதி’ப்படகு அவனைச் சுமந்து செல்கிறது! கரையோரத்தில் அவன் மனைவியும் பெற் றோரும் நின்று வழியனுப்புகின்றனர். அவன் மனைவி கண்கலங்கக் கரங்கூப்பி வணங்குகிறாள்… தெய்வத்தைப் பிரார்த்திக்கிறாள். 

படகு, பார்வையிலிருந்து மறைகிறது! முந்தானையை வாயில் அடைத்துக் கொண்டு, குமுறி அழுகிறாள் அவன் மனைவி! 

எதிர்கால சுகத்தில் நம்பிக்கை வைத்து தேறுதல் பெறு கிறாள்… தெய்வத்தின் அருள்வேண்டி திடம் பெறுகிறாள். மஞ்சள் கயிற்றை எடுத்து கண்களில் ஒற்றி மன நிம்மதி பெறுகிறாள்… கருவில் உறங்கும் சிசுவின் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து ஆறுதல் அடைகிறாள்! 

படகு, மறைந்தே போய்விட்டது! 

படகு சென்ற திசையில் திரும்பும் அவள் பார்வையைக் கண்ணீர் மறைக்கிறது! வறுமை வாழ்வை மறைத்து விட்டது…! 


சிங்களத் தீவின் கடற்கரையில் கள்ளத்தோணி பிரயாணிகளின் பிணங்களில் மூன்று கண்டெடுக்கப்படுகின்றன! 

தோணிக்காரர்கள் தப்பிவிட்டார்கள். 

பிறகென்ன?… ஆபத்து நேரத்தில் ஆள் கனத்தைத் தோணியில் வைத்துக்கொண்டு அல்லற்படுவார்களா?… தோணிக்குச் சுமை இருந்தால் தப்ப முடியுமா?… நம்பிய வர்களை நடுக்கடலில் கைவிட்டுத் தப்பி விட்டார்கள். 

அதோ…கடல் நடுவே, கண்டுபிடிக்கப்படாத இளைஞனின் பிரேதம்… அலை மடியில் முமம் புதைத்து, முக்குளித்து, மூழ்கி, விளையாடி யாத்திரை புரிகிறது அந்தச் சடலம். 

கடலன்னையின் அலைகரங்கள் தாலாட்ட மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான் அந்த வாலிபன். 

மனைவியின் எழில் முகத்தை இனிமேல் அவனால் கனவு காண முடியாது. அவளை விட்டு விட்டு வந்ததற் காக ஏங்கி இதயம் வெதும்பிக் கண்ணீர் சிந்த முடியாது. குழந்தைக்கு ‘சில்க்’ சட்டை அனுப்ப முடிய வில்லையே என்று வருந்தி அழமுடியாது அடிமைச் சிறையில் சிக்கி, நரகத்தில் உழன்று, ஏங்கி, இதயம் வெம்பி அணு அணு வாக வதைந்து சாக வேண்டிய அந்தத் துன்ப வாழ்க்கை யிலிருந்து அவன் விடுதலை அடைந்து விட்டான். 

கடற்காற்று. சீறிச் சுழன்றது! கடலலைகள் வானை நோக்கி பாய்ந்துச் சாடின… கடலோடு காற்று முயங்கிக் குழம்பித் தற்கெட்டுச் சுழன்றது. 

அந்தச் சூறாவளியில் ஓர் சடலம் சுழன்று, திரிந்து அலைகழிகிறது. 

அதுதான் பிழைக்கப் போனவனின் கதி. 

அவன் மனைவியைக் கேளுங்கள். தன் காதற் கணவன் பிழைக்கப் போயிருப்பதாகச் சொல்லுகிறாள். அவளுக்கு. யார் உண்மையைச் சொல்லுகிறார்கள்? 

ஏன் சொல்ல வேண்டும்? 

தாலிச்சரட்டைத் தடவிப் பார்த்தவாறு ஆறுதல் பெறட்டுமே! 

அவள் கணவன் பிழைக்கப் போயிருக்கிறனாம்..பிழைக்க… 

ஐயோ, ஆண்டவனே, அது என்ன பிழைப்போ!

– உதயம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1954, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *