பிள்ளையார்பாட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 1,923 
 
 

எங்களுக்கு திருமணமான புதுசு, என்னோட ஆபிஸ்ல எனக்கு மேரேஜுக்குகூட நாலுநாள் மட்டுமே லீவ் கொடுத்ததால், மேனஜரை பழி வாங்க வழி தெரியாம, என் வைப் தியாவையும் அங்கேயே வேலைக்கு சேர்த்துட்டேன். நானும் தியாவும் ஒரே ஆபிஸ்ல வேல பாக்குறதால தினமும் ஒன்னாவே போறது வரதுன்னு எங்க ரொமான்ஸ வேற மாறி மாத்திகிட்டோம். கல்யாணத்துக்கு முன்னாலும் இருவரும் அதிக பேசி புரிந்தகொள்ள முடியாத சூழ்நிலை, அதனால் அதிகபட்சமாக இருவருக்குமிடையே புரிதல் மிக குறைவு. இருப்பினும் பெண் பார்த்த முதல் நாளிலிருந்து முழுசா காதலிச்சுதான் கட்டிகிட்டேன். இவ்வாறாக என் திருமண காதல் வாழ்க்கை பயணம் தொடர்ந்தது.

தினமும் நாங்கள் வேலைக்கு போகும் வழியில் ஒரு கிராமத்தின் வாயிலில் ஒரு பிள்ளையார் கோயில், இயற்கையாக அரசமர மற்றும் வேப்பமர புனைவின் மத்தியில் ஒரு பிள்ளையார் சிலை அழகாக நேர்மறை எண்ணத்தை பரப்பும் வகையில் எந்தவித கட்டிடமும் இல்லாமல் அமைந்திருந்தது. எனக்கு இவ்வளவுதான் கடவுள் வெளிப்பாடு. நான் ஒரு கலப்படமான பகுத்தறிவாளன், இல்லை….இல்லை கலப்படமான நாத்திகன், பாத்திங்களா இத கூட சரியா சொல்ல தெரில, மொத்ததுல ஒரு குழப்பவாதி. தியாவை பற்றி இந்த அளவுக்குகூட எனக்கு தெரில, ஆனா அந்த இடத்தை தினமும் பைக்கில் கடக்கும்போது ரசித்தவாறு, வழிபட்டவாறு வருவாள். அந்த க்யூட் மொமென்ட் எனக்கு பிடிக்கும். கல்யாணமான புதுசுல்ல அதெல்லாம் அப்டிதான்.

அன்று அந்த பிள்ளையாருக்கு, எங்கள் வீட்டில் பூத்திருந்த செம்பருத்தி பூவை வைத்து வழிபட எண்ணி தயாராகிகொண்டிருந்தாள் தியா. அந்த வகையில் எனக்கும் அந்த பட்ஜெட் பிள்ளையாரை பிடித்திருந்ததுதான். மேலும் எனக்கு மேரஜாகி தியா என்னிடம், அவளா விருப்பத்தோடு சுயமா கேட்ட முதல் விஷயம் அந்த பிள்ளையாரை வழிபட்டு செல்வது. நானும் பொண்டாட்டியை கரக்ட் பண்ண பிள்ளையாரை பயன்படுத்திகொண்டேன். ஏன்னா தியாவை பத்தி சொல்லணும்னா, ..ம்ஹூம்… ஒன்னும் முழுசா தெரியாது, ரிசர்வுடு டைப். அதிகம் எதையும் எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டா…அவ்வளவுதான் தெரியும். அதனால் பிள்ளையார் சுழி போட்டு புரிதலை ஆரம்பிப்போம்

வழக்கத்தைவிட கொஞ்சம் மேக்கப் அதிகமாக போட்டுகொண்டு, பிள்ளையாரை கரெக்ட் பண்ண செம்பருத்திப்பூ மாலை கட்டிக்கொண்டு கிளம்பினாள் தியா. அன்று பிள்ளையாரை வழிபடுவதற்காக, காலையிலிருந்து நானும் அவளும் ஒரு முத்தம்கூட பரிமாறிக்கொள்ளவில்லை, அவ்வளவு தியாகம் செய்து அந்த பிள்ளையாரை பாக்க ஆர்வமாக வந்தோம்.

எங்களுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ஏற்கனவே ஒரு பாட்டி, பிள்ளையாரை குளிப்பாட்டி, ஜோடித்து அழகா பொட்டு பூவெல்லாம் வச்சி, சாமி கும்பிட்டு கொண்டிருந்தாங்க. அதை பார்த்த தியா அதிர்ச்சியில் பேசவே இல்லை. இல்லாட்டி மட்டும் அப்டியே சொற்பொழிவா நடத்த போறான்னு முதல்ல நானே பேசினேன் “பிள்ளையார் பாட்டி” னு சத்தமா கூப்பிட்டேன். அருகே வந்து தியா வாயை மூடினாள். தியா “மாமா இரு, ஏன் இப்டி கத்துற?” நான் “அப்புறம் என்னடி நீயே இன்னைக்குதான்…” தியா முறைத்தபடி, பிள்ளையாருக்கு அருகே சென்று என்னை கூட கூப்பிடாம போய் அந்த செம்பருத்திபூ மாலையை பிள்ளையாருக்கு அணிவித்து காலில் விழுந்து கும்பிட்டு திரும்பினாள்.

மீண்டும் பைக்கில் பயணத்தை தொடர்ந்தோம். தியா “யாரு மாமா அது?” நான் “பிள்ளையார்பாட்டி”. தியா “அப்போ உனக்கு அவங்கள தெரியுமா? நான் “ஆமா நானும் அவங்களும் சின்ன வயசு பிரெண்ட்” தியா “ஐயோ ….சொல்லு மாமா” நான் “ஏண்டி? என்ன வேணும் உனக்கு? அவங்க தினமும்தான் காலையிலேயே பிள்ளையார் கோயிலுக்கு வருவாங்களே”. தியா “சரி சரி… ஏன் முன்னாடியே சொல்லல?” நான் ஒரு மாதிரி திரும்பி பார்க்க, அவள் “இல்ல… நான் இவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேன்ல, அதான் கேட்டேன்” னு எதோ சமாளித்தாள். எனக்கு என்ன ஆச்சர்யம்னா ஒரு நாள்லகூட இவ்வளவு பேசினதே இல்ல, எல்லாம் அந்த பிள்ளையார் மகிமை.

மறுநாளும் அதேபோல் தயாராகி வந்தாள் தியா, அதேபோல் அதே நேரத்தில் அந்த பாட்டியும் அங்கே இருந்தாங்க. தியா சாமி கும்பிட்டு காலில் விழ அந்த பாட்டியும் அவளுக்கு பொட்டு வச்சு விட்டாங்க. அவளும் எதோ பேசினாள், பிறகு அவங்க காலிலும் விழுந்தாள். எனக்கு ஒரே பேரதிர்ச்சி. நான் “என்னடி இது, எல்லாம் புதுசா இருக்கு, வீட்ல பெரியவங்க காலுல விழுறதுக்கு அவ்ளோ யோசிப்ப, ஓவரா பண்ணுவ, இப்ப யாருன்னே தெரியாதவங்க காலுல விழுற, என்கிட்டேயே அளவாதான் பேசுவ, அந்த பாட்டிகிட்ட நீயாவே பேசுற?” தியா “அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா, வண்டிய எடு போலாம்”னு கன்னத்தில் ஒரு தட்டு, தட்டி ஒரு மாதிரி க்யூட்டா பன்னாள். நான் மயங்கி “ அது சரி, நீ ஒரு மார்க்கமாதான் இருக்க ரெண்டு நாளா” னுட்டு கிளம்பினோம்.

எப்பவும் அந்த பிள்ளையாரை பற்றி ஓரிரு வார்த்தை பேசுவாள் ஆனால் இப்போ “மாமா அந்த பாட்டியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஏன்னே தெரில” நான் நக்கலாக “ஆமாம்டி போன ஜென்மத்துல உன் பிரெண்டா இருந்திருப்பாங்க” தியா “ஓவரா பண்ணாத மாமா, பாட்டியா வேண்ணா இருந்திருப்பாங்க” நான் “அடி பாவி நானா ஓவரா பண்றேன், வீட்ல மூணு பெருசுங்க இருக்காங்க, அம்மா அம்மாச்சி அப்பான்னு அவங்க யாரையும் உனக்கு பிடிக்கல..” தியா “லூசு மாறி பேசாத மாமா, பெருசுங்களா இருந்தா எல்லாரையும் பிடிக்கனுமா?” நான் “அப்டி இல்ல டி? ஆனா” னு இழுத்தேன். அவளே முதற்முறையாக இடைமறித்து “மாமா அவங்கள பாத்தாலே ஒரு மாதிரி பாசிடிவா இருக்கு, அதான் நானே நலம் விசாரிச்சேன் ”. நான் மனதுக்குள் அப்ப நம்ம வீட்டுல இருக்குறவங்கள பாத்த பிடிக்கவும் இல்ல, பாசிடிவ் எனர்ஜியும் வரல னு அவளே சொல்லாம சொல்றா, ஆனா இத நேரடியா பேசுன மனஸ்தாபம் வரும்னு நெனச்சி வருத்தப்பட்டேன்.

ஒன்னும் புரியாததுபோல் நான் “அது சரி, பிள்ளையாறால பாட்டிய பிடிச்சதா இல்ல..”. அவள் குறுக்கிட்டு “அதெல்லாம் ஒண்ணுமில்ல விடு மாமா, ஆனா நாம அவங்களுக்கு எதாவது நல்லது செய்யனும்”. நான் மனதுக்குள் “என் பொண்டாட்டிக்குள் இப்படி ஒரு குணாதிசயமா? அவளுக்கு கூட ஒன்னும் பெருசா இதுவரைக்கும் கேட்டதில்ல”. ஆனால் ஒரு இனம்புரியாத புரிதல் ஒன்று மனதுக்கு இதமாய் இருந்தது. பிறகென்ன தினமும் பிள்ளையார்பாட்டி புராணம்தான். எனக்கே சலித்து போயிட்டு. ஆனால் அந்த பாட்டி மீதான பாசம் வீட்டில் அது பிரதிபலிக்கவே இல்லை. அது எனக்கு சிறு வருத்தத்தை தொடர்ந்து அளித்து வந்தது. ஆனாலும் காலபோக்கில் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையில் ஓடினேன்.

திருமணமாகி ஒரு மாதத்தில் தியா அதிகம் பேசி இருப்பது தனது அப்பா அம்மாவை பற்றிகூட இல்ல, தம்பி தங்கையை பற்றிகூட இல்ல. ஆனால் தொடர்ந்து அந்த பிள்ளையார் பாட்டியை பற்றி பேசாமல் இருந்ததில்லை. எனக்கு வர வர சற்று பயமாக கூட இருந்தது, இது என்ன மனநிலை என்று புரியாமல் விசித்திரமாக இருந்தது. அதை பற்றிய சிந்தனையில் எனக்கு உளவியல் ரீதியா மனநிலை தடுமாறியது உண்மைதான். சில நேரங்களில் இதை சாதாரணமாக நான் கடந்தாலும், பல நேரங்களில் சந்தேகித்தேன். தியா மனநிலை சற்று பாதிக்கபட்டவளாக இருக்குமோ என்ற எண்ணம் வந்து போனது.

மேலும் ஒரு சின்ன விசியத்த, நான் இவ்வளவு பெரிதாய் யோசிப்பதால் எனக்கு ஏதும் மனபிறழ்வான்னு கூட சிந்தித்ததுண்டு. இது எந்த மாதிரியான காழ்ப்புணர்ச்சி அல்லது விட்டு கொடுக்க முடியாதன்மை என்று தெரியவில்லை. குறிப்பாக அந்த பாட்டியை நான் வெறுக்க ஆரம்பித்தேன். பெரிய சைக்கலாஜிக்கல் போர் நடந்தது என்னுள். இது ஒரு விசியமான்னு தோணுதுல்ல, ஆனால் அதுதான் என்னை பாடாய்படுத்தியது.

ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாதபோது நான் “ஹே உனக்கு என்னதான்டி பிரச்சனை ? அம்மாகிட்ட ஒழுங்கா பேச மாற்ற? அம்மாச்சிகிட்ட ஒழுங்கா பேச மாற்ற? எப்போ பாத்தாலும் அந்த கிழவியை பத்தியே பேசிட்டு இருக்கே உனக்கு என்ன பைத்தியமா? தியா நிதானமாக சிரித்தபடி “அதுக்கு ஏன் மாமா இவ்ளோ கோவ படர? சரி இனிமே பேசல… ஓகேவா ” ன்னு சாதரணமாக கடந்து விட்டாள். எனக்கு ஒரு மாதிரி அசிங்கமா போயிட்டு. திரும்ப பழைய மாதிரி மூடி டைப் ஆகிட்டாள் தியா.

அன்றே வேலைக்கு போகும்போது அந்த பாட்டியை அங்கு காணவில்லை. தியா போய் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு வந்தாள். சிறிது நேரம் மௌனம். பிறகு நானே “எங்கடி அந்த பாட்டி” னு ஆரம்பித்தேன். அவள் வெடுகென்று “என்ன கேட்டா எனக்கு எப்டி தெரியும், நீ என்ன பண்ணியோ”. நான் அதிர்ந்து தடுமாறி பைக்கை நிறுத்தி “ஹே என்னடி சொல்ற?” தியா முகத்தை திருப்பி கொண்டாள். நான் தொடர்ந்து “அடி பாவி அந்த கிழவியை நான் என்னடி பண்றது? இவ்ளோ கேவலமா யோசிக்கிற? தியா டென்சாகி “மாமா திரும்ப திரும்ப கிழவி ன்னு சொல்லாத…, அப்புறம் கேவலமா யோசிக்கிறது நான் ஒன்னும் இல்ல ” நான் ஒரு மாறி கோபப்பட்டு, பின் நிதானித்து “அட பிள்ளையாரே, புருஷன் பொண்டாட்டிகுள்ள சண்ட, அப்பா அம்மாவால வரும், இல்ல மாமியார் மாமனார் மூலம் வரும், இல்ல உறவுகாரங்கலால வரும், இல்ல பாஸ்ட் லைப்னால வரும், லவ் பிரன்ட்ஸ் மூலம் வரும், இல்ல வேல பாக்குற இடத்துனால வரும்? இது என்னடி புதுசா? அட ச்சே சொல்லவே அசிங்கமாக இருக்கு”னு புலம்பிக்கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.

தியா இரவு வரை எதுமே என்கிட்டே பேசல. நைட்டு தூங்க போகும்போது நானே திரும்ப “தியா இப்போ என்ன நெனச்சிட்டு இருக்க, காலைல இருந்து ஒண்ணுமே பேசல, எனக்கு ஒரு மாறி இருக்கு சொல்லுடி” தியா எதோ முனகியபடி “ஒண்ணுமில்ல” நான் “ஹே…. ஹே இப்போ என்ன சொன்ன? சொல்லு… சொல்லு…” தியா “ஒண்ணுமில்ல” ன்னுட்டு தூங்க தயாரானாள். எனக்கு அவள் முணுமுணுத்தது, ஒரு மாறி இருந்தது. சொல்லாம இருந்ததாலும் பரவால்ல சொன்னாலும் பரவால்ல, இந்த மாதிரி பண்றது என்னை எரிச்சலூட்டியது. ஒரு மாதிரி மன உளைச்சல் ஆனது, தூக்கமே வரல.

மறுநாள் காலையில் சாப்பிடகூட இல்லாமல், நான் மிகுந்த ஆவலுடன் பிள்ளையார் கோயில் நோக்கி விரைந்தேன். அன்றும் அந்த பாட்டியை காணவில்லை. எனக்கு மிகுந்த ஏமாற்றம்தான். ஆனால் அதை கண்டுகொள்ளாததுபோல் தியா பிள்ளையாரை வழிபட்டுவிட்டு வந்து வண்டியில் ஏறினாள் அமைதியாக. அவள் எதுமே பேசாமல் இருப்பது காலையிலேயே கடுப்பானது. நான் என்ன பேசுறதுன்னு தெரியாம லூசு மாதிரி “ஏய்.. நான் ஒன்னும் பண்ணல டி, சொன்னா நம்பு” னு கெஞ்சும் தொனியில் பேசினேன். ஆனால் அவள் the best silent killer in world ஆச்சே. அதை திரும்ப திரும்ப நிருபித்தாள். நான் செய்வதறியாமல் பைக்கை தாறுமாறாக ஓட்டினேன். உலகத்துலேயே என்னை மாதிரி ஒரு சிறந்த பைத்தியக்காரன் இருக்க மாட்டான். இந்த பிரச்சனையை வெளில சொல்லவே வெக்கமா இருக்கு.

அன்று மதியம் ஹோட்டல் போகலாம்னு கூப்பிட்டேன். தியா “வேணாம்” நான் “ஹே லஞ்ச் எடுத்திட்டு வரலடி அதுனால வா போலாம்” தியா “பார்சல் வாங்கிட்டு வாங்க” னு வேலையை ரொம்ப சின்சியரா பாத்தாங்க. எல்லாம் ஒரு வரி பதில் அல்லது ஒரு வார்த்தை பதில் அதையெல்லாம் ஏற்றுகொள்ள கடுப்பானது. ஏற்கனவே எனக்கு பக்தி அதிகம், இப்போ பிள்ளையார்மேலேயே கோவம் மீண்டும் மீண்டும் வந்தது. ஒரு மாதிரி யோசித்து இன்னைக்கு நைட்டு எப்டியாவது கோவப்படாம பொண்டாட்டியை கரக்ட் பண்ணிடனும்னு முடிவெடுத்தேன். நைட் ஷோவுக்கு ரெண்டு டிக்கெட் புக் பண்ணேன். வேல முடிச்சதும் நான் “தியா… ஒரு முக்கியமான விசியம்.. தல தளபதி நடிச்ச புது படத்துக்கு நைட் ஷோக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன்” தியா “போயிட்டு வாங்க” நான் “ஹே கிண்டல் பண்றியா? ரெண்டு பேரும்தான்.” தியா “நான் வரல”. எனக்கு கையில் இருந்த போனை உடைக்கலாம் போல இருந்தது.

நைட்டு தூங்க போகும் முன் நான் “ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க தியா? நீ என்ன நினச்சிட்டு இருக்க சொல்லி தொலையேன்” னு கத்தினேன். தியா “எதுக்கு இப்போ கத்துறீங்க?” நான் “அப்ப என்ன பிரச்னைன்னு சொல்லு” தியா “அதெல்லாம் ஒண்ணுமில்ல, உங்க வேலைய பாத்துட்டு தூங்குங்க”னு அவள் தூங்கிட்டாள். எனக்கு தூக்கமா வரும். வெளிய வந்து உலவிகிட்டு இருந்தேன். அம்மா வந்து விசாரித்து, நான் கத்தி எங்களுக்குள் நடந்த விவாதங்கள் எல்லாம் அது ஒரு தனி காதை. அத பத்தி இப்ப பேச முடியாது.

எப்போதும் போல் மறுநாள் எந்த எதிர்பார்ப்பில்லாமல் வேலைக்கு கிளம்பினோம். ஆனால் உள்ளுணர்வு இன்று அந்த பாட்டி அங்க இருப்பாங்க ன்னு தோணிச்சு. வெளில காட்டிக்காம அமைதியா வந்தேன். அன்று பிள்ளையார் கோயிலில் ஒரே கூட்டம், எதோ விசேசம் போல. பைக்கை விட்டு இறங்கியவள், கோயில் இடத்துக்கு போகவே இல்ல, அப்டியே நின்று தேடி கொண்டிருந்தாள். நான் கூடத்துக்குள் போய் விசாரித்து திரும்பினேன். ஓடி வந்து நான் “தியா .. அந்த பாட்டி… அந்த பாட்டி வந்து…” அவள் “என்னாச்சு மாமா? அந்த பாட்டிக்கு என்னாச்சு? சொல்லு மாமா ? சொல்லு?” அவள் பதறியது எனக்கு பிடித்திருந்தது. நான் “வா போலாம்” னு அவள கைய பிடிச்சு இழுத்தவாறு அருகே இருந்த தோப்புக்குள் ஓடினேன்.

அந்த தோப்புக்கு நடுவே ஒரு பெரிய பழைய ஒட்டு வீடு. வீட்டு வாசலில் பெரிய பந்தல் போட்டு இருந்தது. நான் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம்னு, அந்த பிள்ளையார் பாட்டி வீட்டு அட்ரஸ் மட்டும் கேட்டுட்டு வந்தேன், இங்க எனக்கே பேரதிர்ச்சியா இருந்தது. ஐயோ நான் வேற சந்தோசமா தியாவை அழசிட்டு வந்தேன். இவ இதுக்கும் என்னதான் சந்தேகம் படுவாள். பலவித குழப்பத்தோடு வீட்டை நெருங்கினோம். தியா கையை உதறி கோவமா “என்ன ஆச்சு அந்த பாட்டி செத்திடுச்சா? இல்ல கொன்னுடீங்களா? அதுல. சந்தோசமா உங்களுக்கு? .. ” குறுக்கிட்டு நான் “ஹே லூசு… இருடி… இருடி அவசரபடாத, நான் அவங்க வீடு மட்டும்தான் கேட்டேன், பாக்கி விவரம் தெரியலடி, இரு கேப்போம்” னு நானும் பதறினேன்.

அந்த வீட்டின் வாசலில் வீட்டின் அகலத்திற்கு ஏற்ப இரண்டு பக்கமும் மாட்டு கொட்டகை. அங்கே வேலைக்காரன் ஒருவன் சாணி அள்ளி கொண்டிருந்தான். நான் “ஹலோ சார்”னு கூப்பிட்டேன். திரும்பல, அப்புறம் தியா முறைக்க நான் “அண்ணா……யோவ்..”னு கத்தினேன். அவன் திரும்பி நெருங்கி வந்தான். நான் “அண்ணா.. இந்த .. பாட்டி..இருக்காங்கல்ல அது வந்து…இந்த ..அந்த பிள்ளையார் பாட்டி”னு இழுத்து கொண்டிருந்தேன். அதுதான் தாமதம் அந்த சாணி பய “சப்பு” னு அறைந்தான் பாருங்க, கீழே தடுமாறி விழுந்து எழுந்து திரும்பி பார்த்தால், தியா கேட் வாசல் போய் நிக்கிறாள்.

அவன் “ஏண்டா பரதேசி பயலே.. வயசானவங்களுக்கு கடைசி காலத்துலகூட ஒரு துணையா இல்லாம இப்டி அந்த பாட்டியை பிச்சைகாரி மாறி தெருத்தெருவா அழைய விட்டு இருக்கீங்களே? நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா,? அவங்க மாறி ஒரு அம்மா இல்லாம நாங்க எல்லாம் எவ்ளோ கஷ்ட பட்டிருப்போம் தெரியுமா டா ஈன பயலே”னு இன்னும் சில கெட்ட வார்த்தைகளால் என்னை வசை பாடிக்கொண்டு, மீண்டும் நெருங்கி வந்து கழுத்தை பிடிக்க, எனக்கு ஒண்ணுமே புரியல,திரும்பி பார்த்தேன் , தியா ஓடி வந்து “ஒரு நிமிஷம் ப்பா… அவர் அந்த பாட்டியோட சொந்தகாரன் இல்ல, ஒரு நிமிஷம் சொல்றத கேளுங்க ப்பா” னு விளக்கினாள். எனக்கு ஒண்ணுமே புரியல என்ன நடக்குது இங்கன்னு அடிச்ச அடில கிரு கிறுன்னு வந்தது சாணி வாசம் முகம் எங்கும் பரப்பிருந்த்து அவ்ளோ தான் அப்போதைக்கு தெரிந்தது.

அவர் பதறி “ஐயோ… அய்யயோ …. என்ன மன்னிச்சிருங்க தம்பி”னு என் கையை பிடித்தார். எனக்கு கோவம் தலைக்கு ஏறியது கையை உதறிவிட்டு நின்றேன். தியா தொடர்ந்தாள் “என்னாச்சுங்க எதுக்கு அவர அடிச்சீங்க? ஏன் இவ்ளோ கோவம்? னு எனக்காக தியா பேச மனது அமைதியானது. தியா “அப்டி என்னாச்சு அந்த பாட்டிக்கு, அவங்க உங்க அம்மா இல்லையா? தொடர்ந்து கேள்வியாக கேட்டாள். அவர் அந்த வீட்டு ஓனர் என்றே அப்போதான் எனக்கு தெரிந்தது. ஒரு மாதிரி குழப்பமாக கடுப்பாக இருந்தது. யோசித்து பிறகு அவர் சிரித்துகொண்டே தண்ணி கொண்டு வந்து கொடுத்தார். அவர் “தம்பி மன்னிச்சுடுங்க, தப்பு பண்ணிட்டேன் சாரி” னு கெஞ்சினார். நான் அமைதியாக மட்டுமே இருந்தேன்.

தியா “அந்த பாட்டிக்கு என்னாச்சு சொல்லுங்கப்பா”. அவர் ஒரு மாதிரி ஆழமாக எங்களை பார்த்து விட்டு திண்ணையில் உக்கார போய் “முதல்ல நீங்க யாரு?” தியா “இவர் என் புருஷன்,” கிட்ட வந்தாள். தொடர்ந்து எல்லாத்தையும் சொல்லி முடித்தாள். தியா “அந்த பாட்டியினால் எங்களுக்குள் கூட அவ்வவ்போது சண்ட வரும். அதனால அவங்கள பத்தி முழுசா தெரிஞ்சிக்கலாம்னு எனக்காகதான் என் புருஷன் இங்க வந்தார். ஆனா இப்டி நடக்கும் நாங்க எதிர்பாக்கவே இல்ல, சொல்லப்போனால் அவருக்கு இதெல்லாம் தேவையே இல்ல.” னு என்னைய ஒரு மாதிரி பார்த்தாள்.

அப்போது அவங்க நடுவீட்டில் நாற்காலியில் உக்காந்து மூணு பேரும் பேசிட்டு இருந்தோம். எனக்கு தியாவின் மாற்றங்கள் பிடித்திருந்தது. அப்போதும் அந்த பெரியவர் “தம்பி என்ன பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க, உங்கள தப்பா நெனச்சி கை வச்சிட்டேன்.” உண்மையில் உருகினார். அவர் மனதார மன்னிப்பு கேட்டது என் கோவத்தையும் வருத்தத்தையும் மாற்றியது உண்மைதான். பிறகுதான் புரிந்தது அவர் கூறிக்கொண்டே இருந்தது. அந்த பிள்ளையார் பாட்டி சற்று மனம் பாதிக்கபட்டவங்க என்றும், மேலும் அவங்க இந்த ஊரே இல்லையென்றும், புரிந்தது. தியாவுக்கு முன்னமே புரிந்ததுபோல் இருந்தாள். நான் வாங்கிய அடியில் இதை எல்லாம் உள்வாங்க நேரம் ஆச்சுபோல எனக்கு.

அவர் தொடர்ந்தார் “ஒருநா விடிய காலைல நாங்க எழும்புறதுக்கு முன்னாடியே அந்த அம்மா, எங்க வீட்டு வாசல்ல இருந்த எல்லா மாட்டையும் இடம் மாத்தி கட்டி, சாணியெல்லாம் அள்ளி சுத்தம் பண்ணி வச்சிருந்தாங்க, நாங்களும் எத்தனையோவாட்டி எவ்வளவோ கேட்டு பாத்தோம், அவங்க எல்லாத்தையும் ஒரே மாதிரி புன்னகையால் கடந்து போய்டுவாங்க. தொடர்ந்து குளிச்சிட்டு அதே சாணி கலர் புடவை ரெண்டு மூணு இருக்கும், அதுல ஒன்ன மாத்திகிட்டு குறிப்பிட்ட நேரத்துல அந்த பிள்ளையார் கோயிலுக்கு போவாங்க, வருவாங்க, நாங்களாவது மனுசங்க, இங்க இருக்குற ஒரு மாடு ஆடு கூட அவங்கள வித்தியாசமா உணரல, அதுங்களோட அவங்க வாழ்க்கையை தொடந்தாங்க. அந்த மாதிரி ஒரு அம்மா எனக்கில்லை, அந்த அம்மாவை சரியா பாத்துக்காம தவறவிட்ட அந்த குடும்பத்துல ஒருத்தனா நெனச்சிதான் உங்க மேல உணர்ச்சி வச பட்டுட்டேன் மன்னிச்சுடுங்க தம்பி, நீங்க எவ்ளோ நல்லவங்களா இருந்தா, தினமும் பாத்த முகத்த, பாக்களையேன்னு தேடிட்டு வந்திருப்பீங்க”னு முடிச்சார். தியா கண் கலங்கி கொண்டிருந்தாள்.

நான் “இப்போ அந்த பாட்டி…” அவர் “வழக்கம்போல காணாம போய்ட்டாங்க, நாங்களும் தேடிட்டுதான் இருக்கோம்” னு வருத்தபட்டார். அப்புறம் சாப்பிட சொன்னார் வீட்டுல எதோ விசேஷம்னு சொன்னார். தியா “அவங்கள பாத்த மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி தெரியலையே” அவர் “எனக்கும் அப்டி தோனல, ஆனா வேற எப்டி சொல்றதுன்னு தெரியலையே, ஒரு வார்த்தைகூட பேசல, ஒருவேளை ஊமையோ? அந்த இறைவனுக்குதான் தெரியும்.” சட்டென்று நான் “அப்புறம் அன்ணைக்கு தியாகிட்ட எதோ பேசுனாங்க”ன்னேன் சந்தேகமாக. அவர் “அப்டியா… ஆகா அடடா ..என்னம்மா சொன்னாங்க உங்கிட்ட” தியா முழித்தவாறு “எதோ சொன்னாங்க, ஆனா ஏதும் ஞாபகம் இல்ல”. நான் “தியா அப்போ நீயும் எதோ பேசுவியே… அது அவங்களுக்கு புரியுமா?. தியா “தெரிலையே.. அப்பா சொன்ன மாதிரி அவங்க ஒரு தெய்வீக புன்னகைல எல்லாத்தையும் கடந்து போய்டுவாங்க, ஆனா அவங்க கிட்ட பேசணும்னு ஆசையா இருக்கும்” னு எங்கயோ பார்த்தாள். சுவற்றில் மாடுகளோடு அவங்க நின்ன போட்டோ மாட்டி இருந்தது.

ஏற்கனவே பெர்மிசன் லீவ் சொல்லியும் மனேஜர் கால் பண்ணிட்டே இருந்தார். அதனால் அந்த மாட்டுகார வீட்டுக்காரர் போன் நம்பர் வாங்கிட்டு விடை பெற்றோம் நானும் தியாவும். எதோ யோசித்தவாறு தியா வந்து கொண்டிருந்தவள் என் தோளில் சாய்ந்தாள். பக்கவாட்டில் கட்டியவாறு இருவரும் அந்த தோப்பை கடந்தோம். எனக்கும் தோணிச்சு அவளும் கேட்டாள் “அந்த பாட்டியை தேடுவோமா?” தியா முகமலர்ந்து, விழி விரிந்து எனை கட்டிகொண்டாள். பிறகென்ன ஆபிஸ் லீவ் சொல்லிட்டு தேட முயன்றோம்.

நான் “இப்போ பஸ்டு நாம எங்க போறது? போலிஸ் ஸ்டேஷன் போலாமா? தியா பதறி “ஐயோ வேணாம் மாமா? அங்கயும் போய் அடி வாங்குறதுக்கா? அதெல்லாம் வேணாம், நாமலே தனியா தேடுவோம்”. நான் “அதெப்டி டி எங்கன்னு போய் தேடறது?” தியா எதோ போலிஸ் மாதிரி தோரணையில் “அதாவது மாமா, அந்த பாட்டி இங்க எப்டி வந்தாங்கனு அவர் சொன்னதில் இருந்து பாத்தா, ஒன்னு புரியுது,” நான் “அது என்ன ?” தியா “அந்த பாட்டிக்கு ரெண்டு விசியம்தான் க்ளூ, ஒன்னு நமக்கு தெரிஞ்ச மாதிரி பிள்ளையார், ரெண்டாவது ஆடு மாடு தொழுவம்”. எனக்கே ஆச்சர்யமா இருந்தது, என் பொண்டாட்டியா இதுன்னு. இவளோட புத்திசாலித்தனம் வீட்ல ஏன் பிரதிபலிக்க மாட்டுதுனு யோசனை ஒரு பக்கம் போனது.

தொடர்ந்தாள் தியா “அதுனால இங்க பக்கத்துல பிள்ளையார் கோயிலும் மாட்டுதொழுவமும் எங்க இருக்கோ அங்கதான் நாம போவனும் இப்போ” னு முடித்தாள். நான் சந்தேகமா “ஆனா இது சரியா வருமா தியா? தியா “வேற வழி இல்ல மாமா, முதல்ல முயற்சி பண்ணி பாப்போம்..” நான் “அவங்களுக்கு என்ன பிரச்சனையா இருக்கும் ஏன் இப்டி ஆயிருப்பாங்க, வயசாகிட்டா இப்டிலாம் மூளை பாதிக்குமா?” ன்னு எங்கெங்கோ போனிச்சு சிந்தனை. திசை திருப்பி தியா “ அத விடு மாமா அது மாதிரி யோசிக்காதே, டென்சன் ஏறிடும், இப்போ பக்கத்துல நாம சொல்ற மாறி இடம் எங்க இருக்குன்னு நல்லா யோசிச்சு சொல்லு மாமா? நீதான் லோக்கல் உனக்குதான் எல்லா இடமும் தெரியும்” அவ சொல்லும்போதே எனக்கு நாலஞ்சு இடம் மைண்ட்ல வந்து போச்சு.

நான் யோசித்த எல்லா இடத்துக்கும் ரெண்டு பேரும் சேந்து போய் விசாரித்தோம். ஆனா எந்த வித முன்னேற்றமும் இல்ல. எந்த க்ளூவும் கிடைக்கல. எங்க ஏரியாவுல இருக்குற எல்லா பிள்ளையார் கோயிலுக்கும் போயிட்டு வந்துட்டோம். பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போதே தியா “மாமா, நாம எதோ பிள்ளையாருக்கு தப்பு பண்ணிட்டோம் போல” நான் “ஏன் அப்டி சொல்ற” தியா “இல்ல… சாமியே இல்லம்பே ஆனா இன்னைக்கு என்னோட கோயில் கோயிலா அலையுற அதான் சொன்னேன்” நான் “பிள்ளயாருக்காக நான் ஒன்னும் அலையல” தியா “ தெரியும் அந்த பாட்டிக்காக அலயுற அப்டிதானே ?” நான் “ ரெண்டும் இல்ல, என் பொண்டாட்டிக்காக அலையுறேன்”. தியா ஏதும் பேசாமல் உள்ளுக்குள் நிம்மதி அடைந்து கொண்டாள்.

எங்கங்கோ அலைஞ்சுட்டு இருந்தோம். திடீர்னு தியா “ ஏன் மாமா இவ்ளோ தூரம் அலையுறமே நம்ம ஊர் பிள்ளையார் கோயில் அப்புறம் அந்த ப்ரெசிடென்ட் வீடு மாட்டு தொழுவம் பக்கத்துலயே குளம், அப்புறம் வயல்வெளி, அந்த இடம்தான் அந்த பாட்டிக்கு ஏத்த இடமா இருந்திருக்கும்”னு சொல்லி கொண்டிருக்கும்போதே எனக்கும் அது சரி என்பதுபோல் தோன்றியது. உடனே தியாவின் புத்தி கூர்மையை நினைத்து மெய்சிலிர்த்து வெளியில் காட்டி கொள்ளாமல் வண்டியை வேகமாக திருப்பினேன்.

எங்க ஊரோட எனக்கு மிகவும் பிடித்த பகுதியான அந்த அரசமர குளக்கரை பேருந்து நிலையம். அத சுத்தி மூணு கோயில் அத சுத்தி வயல் வெளி நடுநடுவே வீடுகள். அந்த இடத்துக்கு வந்தடைந்தோம். தியா சொன்ன மாதிரியே அந்த பாட்டி, குளத்துல குளிச்சிட்டு எழுந்து வந்து கோயிலுக்கு போக தயாரானங்க. ஆவலா வந்த தியா அவங்கள பாத்து அருகே ஓடி போனாள். அந்த பாட்டியும் வழக்கமா சிரிப்பதுபோலவே அவளை கடந்து கோயிலுக்கு போனாங்க. தியாவும் அவங்க பின்னாலையே போய் வழக்கமாக பிள்ளையாருக்கு செய்ய வேண்டிய எல்லா செய்வினையும் செஞ்சாங்க. வெளியே நின்ன வேடிக்கை பாத்த எனக்கு அதப்படி இவங்களுக்குள் இவ்ளோ புரிதல்னு ஆச்சர்யமா இருந்துச்சு. இதே மாதிரி என் அம்மாவும் என் பொண்டாட்டியும் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு கற்பனை பண்ணி பாத்து சந்தோஷபட்டு கொண்டேன்.

இவங்க இனிமே நம்ம ஊர்லதானே இருப்பாங்கன்னு நிம்மதியா இருந்தேன். தியாவும் அதே மாதிரி நெனைப்பானு நெனச்சேன். ஆனா தியா மேலும் யோசித்து, “மாமா நம்ம ஊரு ப்ரெசிடென்ட் எப்டி?னு கேட்டாள். நான் பிறகுதான் அதைபற்றி சிந்தித்தேன். ப்ரெசிடென்ட் வீட்டில் அதே மாதிரி நூறுக்கு மேற்பட்ட ஆடு மாடுகள் மற்றும் வேலைகாரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடையே அந்த பாட்டி மாட்டினால் அவ்ளோதான் ரொம்ப அவஸ்தை படுவாங்க னு புரிஞ்சது. நான் “கரக்ட் தியா, சரியா வராது, அவிங்க வேல வாங்கியே கொன்னுடுவாங்க” தியா “அப்ப என்ன செய்யலாம் மாமா?” நான் “ஒரே வழிதான் நம்ம வீட்டுக்கே அழச்சிட்டு போக வேண்டியதுதான்”ன்னேன். உடனே ஷாக் ஆகி தியா “இல்ல மாமா வேணாம், அது சரியா வராது” சொல்லிட்டாள்.

நான் “ஏன் சரியா வராது? ஒரு மாதிரி முகம் மாறி தியா “பிடிக்கிறதுக்காக வீட்ல கொண்ட வச்சிக்க முடியுமா? ஏற்கனவே அங்க ரெண்டு பேரு ….” இழுத்தாள். கோவத்துடன் நான் “என்னடி சொல்ல வர்ற நீ ?…. ச்சே அத விடு….. ரோட்ல பாக்குறப்ப ஒருத்தற இவ்ளோ பிடிச்சிருக்கு ஆனா வீட்ல வச்சி பாக்குறதுக்கு பிடிக்கல? என்ன மாதிரியான மைன்ட் செட் இது? கோவமா பேசினேன். தியா வழக்கம்போல் அமைதியாக மாறி கொண்டாள். மீண்டும் மனதில் எல்லாவற்றையும் ஓட்டி பார்த்து டென்சாகி நான் “நெனச்சேன்டி நான் இப்டி பேச ஆரம்பிச்சா, நீ பழைய மாதிரி மௌனம் சாதிப்பேன் நெனச்சேன், ”. சட்டென தியா முறைத்தாள். நான் “ என்னடி முறைக்கிற ? சும்மா பிச்சைக்காரனுக்கு பத்து ரூபா கொடுக்குரதேல்லாம் பெரிய சமூக சேவை இல்ல, அப்டி ஒரு பிச்சைக்காரன் நம்ம வீட்ல உருவாகிடாம நம்ம உறவுகள அனுசரிக்கணும், புரியுதா? அதுபோலதான் இந்த பாட்டியும், இன்னும் சில அனாதைகளும் இருக்காங்க. எல்லாரையும் நாம காப்பாத்த முடியாது, ஆனா ஒன்னு செய்யலாம், நம்ம குடும்பத்த நல்லா நேசிக்கலாம், பாதுகாக்கலாம், இதுக்கு அப்புறம் நாம அனுதாப படர மாறி ரோட்ல யாரையும் பாக்காம இருக்க வீட்ல உள்ளவங்களே நேசிச்சாலே போதும், எல்லாம் படிபடியா மாறிடும்”.னு நான் பேச பேச தியா அழுற மாறி போய்ட்டாள்.

பிறகு நான் சமாளித்து “அதுனால இந்த பாட்டியையும் நம்ம வீட்லயே வச்சிப்போம் ஓகேவா?” அதுவும் தியாவை சமாதனபடுத்தல. தியா ரோட்ல நின்னு அழ ஆரம்பிச்சிட்டா, எனக்கு ஒரு மாறி ஆயிடுச்சி, நான் “சரி… சரி… அழாதே… சரி . சொல்லு நீயே கண்டிப்பா பெட்ரா ஒன்னு யோசிசுருப்பே அதையும் நீயே சொல்லிடு, செஞ்சர்லாம்” ன்னேன். அழுதுகொண்டே தியா எதும் கூறாமல் வீட்டுக்கே நடந்து போய் கொண்டிருந்தாள்.

நானும் எதும் பேசாமல் ஒரு பக்கம் அந்த பாட்டி இன்னொரு பக்கம் தியா போவதை மாத்தி மாத்தி பார்த்து கொண்டிருந்தேன். என்ன செய்வதென்று தெரியாமல் அந்த பாட்டியை நோக்கி நடந்தேன். பாட்டியிடம் ஓடி சென்று “ஹலோ பாட்டி நல்லா இருக்கீங்களா? என்ன சாப்டீங்க இன்னைக்கு? எதுக்கும் பதில் சொல்லாமல் சிரிச்சிட்டே போய் கிட்டு இருந்தாங்க. நான் “பாட்டி நீங்க எந்த ஊரு? என்ன பண்றீங்க இங்க? எதாவது பேசுங்க ப்ளிஸ்” ஆனா அவங்க எதுமே பேசல. எல்லாரும் சொன்னதுபோல் அந்த தெய்வீக புன்னகையை மட்டும் சிந்திவிட்டு எதோ சொல்லிட்டு போனாங்க, எனக்கு ஒன்னும் விளங்கல. அந்த பாட்டி போகும் திசையை பார்த்தபடி நின்றேன். ஆனால் எங்கோ பார்த்து நன்கு பழகிய முகம்தான். யோசித்தபடி வீடு திரும்பினேன்.

வீட்டு வாசலில் அம்மா “வாங்க தர்மமகா ராசா, யாரோ ஒரு பைத்தியகார கிழவியை வீட்டுக்கு அழச்சிட்டு வர போறியாமே? யாருடா அது?”. நான் தியாவை முறைக்க ரூமுக்குள் ஓடிவிட்டாள். நான் “ம்மா.., பாவமா இருந்துச்சுமா, எனக்கு அம்மாச்சி ஞாபகம் வந்துடுச்சு அதான் சும்மா சொல்லிக்கிட்டு இருந்தேன்”னு இழுத்தேன். சென்டிமென்ட் போட்டு தாக்கிட்டு அம்மாவை, அம்மா அப்டியே ஆப் ஆயிடாங்க, அப்டியே அம்மாச்சியும் அந்த பிள்ளையார் பாட்டியை பத்தி விசாரிச்சாங்க. எல்லா கதையும் அவங்களுக்கு எத்த மாதிரி சொன்னேன். அவங்க முதுமையும் பக்குவமும் வீட்டுக்கு அழச்சிட்டு வர சொன்னிச்சு. தியாவும் கதவை திறந்து வெளியே வந்தாள்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து தியாவும் நானும் , அந்த பிள்ளையார் பாட்டியை அழைச்சிட்டு, அந்த பாட்டி வாழும் சூழ்நிலையுடன் குறிப்பாக பிள்ளையார் கோயிலுடன் அமைந்துள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்க சென்றோம். அங்க இருக்குறவங்க எல்லாம் எங்களை மிக கேவலமாக பாத்தாங்க. தியா கண்ணாலேயே மன்னிப்பு கேட்டாள். அங்க அந்த சாணியோட கன்னத்தில் அடி வாங்குனதைவிட இது வெகுவாக வலித்தது. முன் பின் தெரியாதவரை முதியோர் இல்லத்தில் சேக்க முடியாததால் எங்கள் பாட்டி தேவி என பெயரிட்டு, அதற்கு தேவையான சட்ட சிக்கல்களை ஏற்று காடியன் கையொப்பமிட்டு சேர்த்தோம். அந்த பாட்டி வழக்கம்போல் பிள்ளையாருக்கு சேவை செய்ய போய்டாங்க.

அதற்கு பிறகு தியாவின் பார்வை வீட்டில் உள்ள பெரியோர்கள்மீது சற்று நல்லவிதமாக கரிசனையாக மாறியது, எனக்கு ஆறுதல் அளித்தது. நாட்கள் கடந்தது. அவ்வப்போது அந்த பாட்டியின் ஞாபகம் வரும்போது தியாவை வியந்து பார்ப்பேன். அன்று ஒருநாள் தியாவின் உறவினர் வீட்டுக்கு எங்களை புதுமணதம்பதிகள் என்பதால் விருந்துக்கு கூப்பிட்டு இருந்தாங்க. தியாவும் அவங்கள பத்தி சொல்லிருக்கா, ரொம்ப நெருங்கிய சொந்தம் ஆனா அதிக தொடர்பு இல்ல, இப்போதான் கல்யாணத்துக்கு அப்புறம் கூப்பிடுறாங்கனு சொன்னாள். ஒரு வழியா கலவையான எண்ணத்துடன் விருந்துக்கு போய்ட்டோம். ஹாலில் வரிசையாய் அமர்ந்து சாப்பிட்டுகொண்டு இருந்தோம். தண்ணி குடிக்க எதேச்சையாக அண்ணாந்து பார்த்தேன். அதிர்ந்தேன். நெஞ்சு வலி வந்ததுபோல் இருந்தது. சட்டென திரும்பி தியாவை பார்க்க அவளும் அந்த சுவரில் இடம்பெற்றிருந்த குடும்ப குருப் போட்டாவை கூனி குறுகி பார்த்து கொண்டிருந்தாள். அந்த போட்டாவின் மையத்தில் நம்ம பிள்ளையார் பாட்டியான சந்தியாதேவி கம்பீரமாக அமர்ந்திருந்தாங்க. நான் தியாவை பார்த்தபடி மலைச்சு போனேன்.

“பெற்றதாலோ, பிறந்ததாலோ நிச்சயமாக அனாதையாக முடியாது ”

“அன்பு நிச்சயமாக அனாதை அல்ல”

“உறவுகள் முடிவதில்லை உறவினர்களின் அன்பு உண்மையெனில்”

“உறவை நீ உணர்ந்தாலே உலகம் உன்னில் உருகும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *