பிரியாவிடை





(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காரியாலயத்தில் இருந்து தினவரவு இடாப்புக்களை எடுத்துக் கொண்டு புறப்படுகையில் கனகலிங்கத்தின் கண்கள் கலங்கின. வழக்கத்திற்கு மாறாகக் கால்கள் தள்ளாடுவது போன்றிருந்தது. தலையைச் சுற்றியது. மேசையில் கையை அழுத்தமாக ஊன்றிச் சமாளிக்க முயன்றான்.
அவனது நிலைமையைப் புரிந்துகொண்ட காரியாலய இலிகிதர் கருணாகரம்பிள்ளை அவனை அநுதாபத்தோடு நோக்கினார். இன்றைக்கும் நீ வேலை செய்ய வேண் டுமா? பேசாமல் அந்த வாங்கில் போய் இரு. நான் சின்னத்தம்பியை அனுப்புகிறேன்” என்று அவர் அன் பொழுகக் கூறினார்.
சிடுசிடுவென்று எந்நேரமும் எரிந்து புகைந்து கொண்டிருக்கும் கருணாகரம்பிள்ளையின் வழக்கத்திற்கு மாறான இன் சொற்களால் அபிஷேகம் செய்யப்பட்ட குளிர்ச்சியில், அவரின் வேண்டுகோளைப் பணிவோடு மறுத்துக் கனகலிங்கம் இடாப்புகளைச் சுமந்தவனாய் வகுப்பறைகளை நோக்கிச் சென்றான்.
காலைப் பிரார்த்தனை முடிந்தது. வகுப்புக்கள் களை கட்டத் தொடங்கியிருந்தன. கடமைக்கும், மனச்சான் றிற்கும் போக்குக் காட்டிவிட்டு, வகுப்பறையைத் தங் கள் சொந்த வீடாகப் பாவித்துச் சோம்பிக் கிடக்கும் சில ஆசிரியர்களுங்கூட முதற்பாடம் என்பதால் ஏதோ படிப்பிப்பதாகப் பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருந்த நேரம் அது. எனவே, வகுப்பறை களில் ஆசிரியர்களின் குரல்களைத் தவிர அமைதியே குடிகொண்டிருந்தது.
கனகலிங்கம் ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று இடாப்பை வகுப்பு மேசையில் வைத்துவிட்டு வந்தான். அவ்வேளையில் ஆசிரியர், மாணவர்களெல்லாம் அவனை நோக்கி ஓர் அன்புப் புன்னகையைச் செலுத்து வதாக அவனுக்குப் பட்டது. அந்த அன்பு அவனது இதயத்தை இதமாகத் தடவிக்கொடுக்க, அந்த இதமே வேதனையாய் வளர்ந்து அவனைத் துயருறுத்தியது.
கனகலிங்கத்தைப் பொறுத்தவரை பாஸ்கரோதயக் கல்லூரி வெறும் கல்லாலும், சாந்தாலும் ஆன கட்ட டம் அன்று. அது அவன் சகோதரிபோல. சாதாரண கூரைக் கொட்டிலாய்த் தொடங்கப் பெற்ற அது இன்று வான் உயர்ந்த மாடிக் கட்டடங்களைப்பெற்று இலங்கை யின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாய் விளங்குவது வரையுள்ள அதன் படிப்படியான வளர்ச்சிகளையெல் லாம் காணும் பாக்கியம் பெற்றவன் அவன். அதனால் அதனோடு அவனுக்கு ஓர் இரத்தபாசமே ஏற்பட்டிருந்தது.
ஒரு வருடமா? இரு வருடங்களா? சரியாக நாற்பத்திரண்டு ஆண்டுகள்! கல்லூரியின் மூலைமுடுக்கெல்லாம் அவனுக்குக் கரைந்த பாடம், கல்லூரியோடு தொடர்புகொண்ட நாளில் இருந்து அங்கு மாணவ ராய்க் கற்ற மூன்று தலைமுறைகளை அவன் கண்டிருக் கிறான். மீசை கூட அரும்பாத சிறுவயதிலே பியோனாக வந்து, இன்றுவரை எவரும் குறை சொல்லாத வகை யிலே அவன் தன் கடமையைச் செய்திருக்கிறான்.
இலங்கையின் மிகப்பெருங் கல்விமான்கள், பொறி யியலாளர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், நியாய யியலாளர்கள்,டாக்டர்கள், வாதிகள், அரசியல்வாதிகளை எல்லாம் ஈன்றெடுத்த கலைக்கோயிலின் அடியவனாக இடையீடின்றிச் சேவை புரிந்த பெருமையில் அவனது மார்பு நிமிர்ந்தது. ன்று நரைத்த தலையோடும், திரைந்த உடலோடும், முதியோராய்க் காட்சி தரும் பல பெரியார்களை, அரைக் காற்சட்டைச் சிறுவர்களாய்க் கண்டவனல்லவா அவன்? ஏன் ? இன்றைய அதிபர்கூட ஒருநாள் வால் பேத்தைபோலத் தமக்கு அளவில்லாத சட்டைகளைத் தரித்துக்கொண்டும், பேந்தப் பேந்த விழித்துக்கொண் டும் இந்தக் கல்லூரியின் மண்டபங்களிலே ஓடித் திரிந் தவர்தாம்.
கனகலிங்கத்திற்கு வேதனையின் இடையேயும் சிரிப் பாய் இருந்தது. அன்றொருநாள் பென்னம்பெரியதொரு காரிலே தடபுடலாக வந்திறங்கிய கல்விப்பகுதி நிரந் தரக் காரியதரிசி முப்பது வருடங்களுக்கு முன் வேட்டி சால்வையுடன் ஏழாம் வகுப்பிலே படித்தவர்தாமே? மனிதர் நல்லவர், கலகலப்பாகச் சிரித்தபடி, “என்ன கனகலிங்கண்ணை ! இன்னமும் இங்கேதானே இருக்கிறாய்? என்னை ஞாபகம் இருக்கிறதா?” என்று கனகலிங்கத் தின் தோளிலே தட்டி அன்பாக விசாரித்தார்.
அந்த வேளையிலே கனகலிங்கத்திற்கு மிகப் பெருமை யாய் இருந்தது. கல்லூரியின் பண்பு வாய்ந்த ஆசிரி யப் பெருமக்களின் வழிகாட்டலிலே வளர்ந்த ஒரு பரம்பரை, எந்த நிலையிலும் தனது ஆன்மாவை இழக் காமல் இருப்பதை நினைத்து அவன் உண்மையாகவே மகிழ்ச்சியிலே திளைத்தான்.
உம்…… அது ஒரு காலம். அன்று ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்களாய் இருந்தார்கள். நடை, உடை, பாவனை என்ற எல்லாவற்றிலும் ஒரு பரிசுத் தம். ஒரு தெய்வீகம். கல்வியைப் புனிதப் பணியாகக் கருதி, மாணவரைத் தம் பிள்ளைகளாய் எண்ணி ஒரு குடும்ப உணர்வையே வளர்த்து விட்ட அந்தப் பெரி யார்களிடம் படிக்கும் பாக்கியம் தனக்குக் கிட்டாவிட் டாலும், அவர்களைக் கண்டு பழகும் வாய்ப்புக் கிடைத் ததே அவனுக்குப் பெறற்கரிய பேறாய்த் தோற்றியது.
மதிப்பை மதிப்பளித்தே பெறலாம் என்று கருத்து நிலவிய காலம் அது. மனிதனை மனிதனாக நினைத்துப் பழகிய மனிதர்கள் உலாவிய நாள்கள் அவை. கல்வியின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டு, உள்ளத்தையும், ஆன்மாவையும் ஒரு சேர வளர்த்த மகா புருஷர்கள் வாழ்ந்த அந்த நாள்கள் இனித் திரும்புமா?
அக்காலத்திலே ஆசிரியர்கள் தொடக்கம் மாணவர் ஈறாக யாவரும் அவனைக் கனகலிங்கண்ணை” என்று தான் அழைப்பார்கள். எப்போதாவது அதிபரோ, துணை அதிபரோ பெயரைச் சொல்லி அழைத்ததுண்டு.
கனகலிங்கம் அந்த மகிழ்ச்சி நிறைந்த நாள்களை நினைத்துக்கொண்டான். கல்லூரியின் பரிசளிப்பு விழாக் கள், விளையாட்டுப் போட்டிகள், கலை விழாக்கள் என்ற பலவும் அவன் நினைவில் திரை விரித்தன. வருடம் முழு வதும் விழாக்கோலம்பூண்டு மகிழ்ச்சியின் பிறப்பிடமாக அல்லவா கல்லூரி விளங்கியது ?
அந்தக் காலத்தில் சம்பளம் மிக மிகக் குறைவு. ஆரம்பத்தில் அவனுக்கு மாதம் ஐந்து ரூபாதான் கிடைத் தது. ஆனால், அதில் இரண்டு ரூபாவை மாதந்தோறும் தாய்க்கு அனுப்பி விடுவான். விடுதிச்சாலையிலே சாப் பாடு கிடைக்கும். தீபாவளிக்கு ஆசிரியர்கள பணம் சேர்த்துப் புதுத் துணிமணிகள் வாங்கிக் கொடுப்பார் கள். சித்திரை வருடப் பிறப்பன்று கை விசேஷமும் கிடைக்கும். அப்பொழுதைய ஐந்து ரூபாய் இன்றைய நூறு ரூபாவிற்குச் சரியாய் இருக்கும். வாழ்க்கை ஓர் இன்பக் கனவாகவே அன்று இருந்தது.
இரண்டாவது உலக யுத்தம் வந்தாலும் வந்தது. எல்லாம் தலை கீழாக மாறின. அன்றைக்கு ஏறத் தொடங்கிய அத்தியாவசிய பொருள்களின் விலை இன்றுவரை இறங்கவேயில்லை.
அரசாங்கம் கல்லூரியை எடுத்த நாளிலிருந்து அவ னுக்கு நூற்றைம்பது ரூபா சுளையாய்க் கிடைத்தும் என்ன பிரயோசனம்? பெருகிவிட்ட அவனின் குடும்பச் செலவுகளுக்கு இது உறைபோடவும் போதாது. முதுமை, பிணி, வறுமை என்ற பலவற்றிற்கும் ஈடுகொடுத்து ஒரு நரக வாழ்க்கையைத்தான் அவன் நடத்திக்கொண்டு வருகிறான்.
என்றாலும் ஓர் ஆறுதல். தவணைதோறும் கட்டு கின்ற கல்லூரிச் சகாயப்பணமோ, புத்தகச் செலவு களோ இன்றிப் பிள்ளைகளைக் கல்லூரியிலே படிப்பிக்கக் உத்தமை கடவுளின் வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் காலமாற்றத்தில், சமுதாய ஏற்றத் தாழ்வு களின் பேயாட்டத்தில் புதிய சில பிரச்சினைகளுக்கும் அவன் ஈடுகொடுக்க வேண்டித்தான் இருந்தது.
கனகலிங்கம் கல்லூரியின் பியோன். அவன் மகன் அங்கே ஓர் உயர் வகுப்பு மாணவன், இந்த இரண்டு எதிர் நிலைகளையும் அவன் அண்மையில்தான் உணர்ந்து மனம்புழுங்க நேரிட்டது.
ஆங்கிலேய கல்விச் சம்பிரதாயங்களும், அவற்றின் பயனாக ஏற்பட்ட மனப்போக்குகளும் நாட்டின் இருதயத்தையே அரிக்கும் கசக்கிருமிகளாய் மாறின என்று சொல்லக் கேட்டிருக்கிறான். அது அவனுடைய மூளைக்கு அப்பாற்பட்ட விஷயமாயிருப்பினும் அவன் வாழக் கிடைத்த நாற்பதாண்டுச் சூழலின் அநுபவத் தால் அதில் உண்மை இருப்பதாகவே அவனுக்குப் புலப் பட்டது. வகுப்புக்களிலே தமிழ் பேசினால் தண்டனைப் பணம் இறுக்க வேண்டும், என்றிருந்த ஒருகாலப் பிரிவினை கண்டபொழுது தனித் தமிழையே கற்று, அதிபர் தரும் சுற்று நிருபங்களில் ஆசிரியர்களின் பெயர்களைச் சிரமத் துடன் தடவிப்பிடித்த கனகலிங்கத்திற்குக் கசப்பாக இருந்ததில் நியாயம் இருக்கவே செய்தது.
ஆனால், அந்தக் காலம்மாறிச் சுதந்திரம் கிடைத்து, சுயபாஷை கோலோச்சத் தொடங்கிய பின்னர், மாணவ சமுதாயம் ஏதாவது திருந்தியுள்ளதா என்று சிந்திக்கை யில் இல்லை என்ற பதிலே அவனுக்குக் கிடைத்தது.
குடும்ப வறுமையையும் சிந்தியாது டெரிலின் சட்டை யும். பிளானல் லோங்சும் அணியவும், காவாலித் தனங்களை வளர்க்கவும், கண்ட கண்ட படங்களையும், பத்திரிகைகளையும் பார்த்தும் படித்தும் உள்ளங்களோடு உடல்களையும் கெடுக்கவுந்தான் இக்கால மாணவர்கள் அறிந்திருக்கின்றார்கள் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை.
இப்படிப்பட்ட மாணவர்களிடையே அவனது மதிப்பு வரவரக் குறையத் தாடங்கியதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? கனகலிங்கண்ணை, கனகலிங்கமாக மாறி மிகச் சாதாரண நிலைக்கு இறங்கி விட்டான்.
கல்லூரியின் ஒரு தூண் என்று தன்னை நினைத்திருந் தவன் இப்போது, தான் வெறும் “பியோன்” என்றே நினைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டமை காலத் தின் கோலமல்லாமல் வேறு என்ன ?
கல்விப் பொதுத் தராதரப் பத்திர வகுப்பில் கனக லிங்கத்தின் மகன் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய வகுப்பிற்குச் சுற்றுநிருபங்களையோ, இடாப்புக் களையோ கொண்டு போகையில் அவனுக்கு உயிர் போய்த் திரும்பும். ஆசிரியர் இல்லாத வேளையிலோ சொல்லவே வேண்டாம். “ஏ கனகலிங்கம்!”” என்று மாணவர் அழைக்கும்போது, மகன் வேதனையோடு தன்னையே பார்ப் பதுபோலத் தோன்றுகையில் தனது சாதாரணத் தன் மையை நினைத்து அவன் கூனிக் குறுகிப் போய்விடுவான்.
ஒருநாள் கனகலிங்கத்தின் மகனும், அவன் சகபாடி ஒருவனும் அடிபட்டுக் கொண்டார்கள். பார்க்கப் போனால் து ஒரு சாதாரண விஷயம். ஆனால் அந்தச் சகபாடி, நாடாளுமன்ற அங்கத்தவர் ஒருவரின் மகன். எனவே சிக்கல் பெரிதாகி விட்டது. அவனுடைய தந்தை அடுத்தநாள் வந்து கல்லூரியிலே போட்ட கூப்பாட்டில் கனகலிங்கம் அஞ்சி நடுங்கிப்போய்விட்டான்.
“ஏ! கனகலிங்கம், உன் மகனைக் கண்டித்து வை. அவனுக்குக் கண்கடை தெரியவில்லை. ஆர் ஆருக்கு என்ன மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல் லிக்கொடு. கண்ட நிண்டதுகளெல்லாம் என்ரை பிள்ளை யிலை கைவைக்கவும் ஆச்சோ?” என்று மனிதன் குதி யாய்க் குதித்த அந்த வேளையில்…… “
கனகலிங்கம் உள்ளத்தால் செத்து விட்டான். செத்தே போய்விட்டான்.
பழைய புதிய சிந்தனைகளிலே ஈடுபட்டு யந்திர கதியிலே திரும்பிய கனகலிங்கத்திற்குக் காரியாலயத்தில் ஓர் அழைப்பிதழ் காத்திருந்தது. அதை இலிகிதர் கருணாகரம்பிள்ளை அவனிடம் கொடுத்தார்.
திரு. சு. கனகலிங்கம் அவர்கள்.
அன்புடையீர்,
தாங்கள் கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாய் எமது கல்லூரியில் ஆற்றிய தன்னலமற்ற சேவையைப் பாராட்டு முகமாக ஒரு பிரியாவிடை வைபவம் இன்று பிற்பகல் நிகழும். அதற்குத் தாங்கள் தவறாது வருகை புரிந்து கௌரவிக்க வேண்டும் என அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
தங்கள் அன்பும் உண்மையும் உள்ள
அதிபரும், ஆசிரியரும், ஊழியரும், மாணவரும்.
கனகலிங்கத்திற்கு மீண்டும் தலையைச் சுற்றியது. பியோன் கனகலிங்கம் திரு. கனகலிங்கம் அவர்களாக மாறி, பிரியாவிடை நாயகனாக அதிபர், ஆசிரியர்களுக்குச் சமதையாக அமரப் போகின்றானா?
கைநிரம்பிய பரிசுப் பொருள்களோடும், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் அன்புரைகளோடும் அன்று பிற்பகல் வீடு திரும்பிய போது, கனகலிங்கத்தின் கண்களோடு இதயமும் கண்ணீர் வடித்தது.
இந்தக் காலத்திலும் மனிதத்தன்மை, நன்றி யுணர்ச்சி என்பன செத்துவிடவில்லை. இடைக்கிடை மூர்ச்சையாகிக் கிடந்தாலும் சந்தர்ப்பம் வரும்போது அவை விழித்துக் கொள்ளத்தான் செய்கின்றன என் பதை அவன் தன் அநுபவத்திலே அறிந்து கொண்டான்.
“கடந்த நாற்பத்திரண்டாண்டுகளாய் எமது கல் லூரியில் உண்மையோடுழைத்து வந்த திரு. கனகலிங்கம் அவர்கள் எமது நன்றிக்கு உரியவர். இக் கல்லூரியின் மூன்று தலைமுறைகளைக் கண்ட அவரின் அநுபவம் நிறைந்த உழைப்பு. கல்லூரி வரலாற்றில் பொன் எழுத்துக்களிலே பொறிக்கப்படும். அவரின் இடத்தை ன்னொருவரால் ஈடுசெய்யவே முடியாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவரை நினைத்துக் கொண்டே இருப்போம். அவரது ஓய்வு நாள்கள் மகிழ்ச்சி நிறைந்து விளங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.
உணர்ச்சியாலே தளதளத்த குரலில் அதிபர் கூறிய இந்த வார்த்தைகளிலே கனகலிங்கத்தின் தன்னம்பிக்கை துளிர்த்தெழ, அவனைச் சுற்றிப் படர்ந்திருந்த தாழ்வு மனப்பான்மை சிறிது சிறிதாகக் கழன்று கொண்டிருந்தது.
– சிந்தாமணி, 1967-11-24.
– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.
![]() |
ஈழத்து மூத்த எழுத்தாளரில் ஒருவரான சொக்கன் (க.சொக்கலிங்கம்) அவர்கள் 1930ஆம் ஆண்டு யூன் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆவரங்காலில் கந்தசாமிச் செட்டிக்கும் மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார். டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு இறைபதம் எய்தினார். நமது நாட்டின் தமிழ் இலக்கிய உலகிலே மூதறிஞர் என்று போற்றப்படும் "சொக்கன்” 1944ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் “தியாகம்" என்ற வீரகேசரி சிறுகதை மூலம் எழுத்துலகில்…மேலும் படிக்க... |