பால் மீசை






டோம்பிவிலியின் ராஜாஜி சாலை-யிலுள்ள சுப்ரியா அபார்ட்மென்டின் முதல் கட்டடத்தின் மேல் வீட்டில் குடும்பத்தவர்களெல்-லாம் தூங்கிய பிறகு, சமையலறையில் பாத்திரம் கழுவி, கடைசியாகக் கடப்பாக்கல் மேடையைத் துடைத்துக்கொண்டிருக்கும் புண்டனுக்கு இப்போது பன்னிரெண்டு வயது. கடந்த இரண்டு வருடங்களாக அவன் இங்கே வீட்டுவேலை செய்கிறான். புண்டலிகன் என்னும் பெயர் தன் அரைப்பாகத்தை என்றைக்கோ இழந்து பேருக்காகப் புண்டனாயிருந்த அவனுக்குத் தனக்கு எவ்வளவு வயது என யோசிக்கும் சந்தர்ப்பமே வரவில்லை. ஆனாலும் வீட்டுக்காரரின் மகள் பிங்கியின் பிறந்த நாள், கேக், பலூன், பார்ட்டிகளின் சந்தர்ப்பம் வந்தபோதெல்லாம் குவியல் குவியலான தட்டுகளில் விருந்தினர்கள் தின்னாமல் விட்ட ஜவ்வரிசி வத்தலை ‘புண்டூ, இது எச்சிலாகறதே இல்ல’ என்று எஜமானியம்மா வேகவேகமாக எடுத்து ஒரு சின்ன டப்பாவில் போட்டு ‘இது உனக்குத்தான். வேணுங்கறப்ப சாப்புடு’ என்று தன்னை சந்தோஷப்-படுத்த முயலும்போது தன் பிறந்த நாள் எதுவாகவிருக்கலாம் எனக் கணநேர-மாவது யோசிக்கிறான். சாயாகீத், சித்ரமாலா வரும்-போது தவறாமல் சார் எஜமானியம்மாவிடம் ‘புண்டனைக் கூப்புடு’ என்று அழைக்கும் போது மிகவும் பூரித்துச் சந்தோஷப்படுகிறவன், அவர்களுக்கு எதற்குச் சிரமம் என்று விளம்-பரங்கள் ஆரம்பமாகும்போதே வேலையை முடித்துச் சட்டெனத் திரைச்சீலையின் மறைவுக்கு வரும்போது ‘கூப்புடறதுக்கு முன்னாடி ஏன்டா வந்தே?’ எனத் திட்டுவாங்கியிருக்கிறான். சித்ரமாலாவில் கன்னடப்பாட்டு வந்தால் சார், ‘புண்டா, இது எந்தப் படத்துலன்னு சொல்லுடா’ என்று புண்ட-னிடம் பாசம் காட்டுவார். புண்டன், ‘இது ஸ்ரீநாத், இது அம்பரீஷ்.
இந்தப் படம் ஹொன்னாவரத் தியேட்டருக்கு வந்திருந்துச்சு. அண்ணா பட்களத்துலயிருந்து என்னை சைக்கிள்ல டபுள்ஸ் கூட்டிப்போயிருந்-தான்’ என்றெல்லாம் நெஞ்சு நிமிர்த்திச் சொல்லிக்கொண்டு போகும்போது ‘ஷ் ஷ்’ என்று எல்லோரும் அவன் வாயை மூடுவார்கள். துணி துவைப்பது, வீடு துடைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, எஜமானியம்மாவுக்குச் சமையலில் உதவுவது, ஓய்ந்த நேரத்தில் பிங்கியுடன் விளையாடுவது எல்லாம் புண்டனின் வேலைகள். மத்தியானம் எஜமானியம்மா தூங்கும் சமயத்தில் பிங்கி, புண்டனின் சாம்ராஜ்யம் ஆரம்பமாகும். மூன்று வயதுச் சிறுமி பிங்கிக்குப் புண்டனின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் வரம். முதன்முதலில், ‘புண்டா, பிங்கிக்குக் கதை சொல்லுடா’ என்றபோது அவன் தத்தளித்துப்போனான். படிப்படியாக வாய்க்கு வந்தபடி கதை பிணையத் தொடங்கி இப்போது பிங்கிக்குக் கதை சொல்வதில் விற்பன்னனாகிவிட்டிருந்தான்.
கதையிலேயே தூக்கத்துக்கான சூழ்நிலையை வருவித்துப் பிங்கியைப் படுக்கவைத்து சபாஷ் என்று எண்ணிக்கொள்வான். ஒவ்வொருமுறை பிங்கி தூங்கிவிட்டாலும் தன் கற்பனைக் கதையின் வேகத்தை நிறுத்த முடியாமல் சற்று நேரம் தனக்குத்தானே கதை சொல்லிக்கொண்டே உட்கார்ந்திருப்பான். சார்கூட அப்படித்தான். எப்போதும் ரசிகர்கள் கிடைக்காதவர்-போலப் பிங்கியைத் தூங்கவைக்கும் சாக்கில் சினிமாப் பாட்டுகளைப் பாடி அவள் தூங்கிய பிறகும் தம்தனதம்தன என்று தலையாட்டியவாறே ஒன்றிரண்டு பாடல்கள் அதிகமாகவே பாடி எஜமானியம்மா ‘இப்ப போதும்’ என்ற உடனே நிறுத்திவிடுவார். புண்டன் தினத்துக்கொரு புதுப் புதுச் சங்கதியைத் தன் கதையில் சேர்த்துக்கொள்வான். ஒருமுறை அவன் கதையில் மகாபாரதத்தின் பீமனும் எதிர்ப் பெட்டிக்கடைப் பீடாக்காரனும் சேர்ந்து வந்து, என்ன செய்வது எனத் தோன்றாமல் கடைசியில் தன் கதையால் பீடாக்காரனின் கடையைச் சுக்குநூறாக்கிவிட்டு, இருந்த எல்லாப் பீடாக்களையும் கையில் கசக்கி வாயில் போட்டு மென்றுகொண்டே பீமன் ஸ்டேஷன் பக்கம் நடந்துவிட்டான். இப்படிப் புண்டன் தன் கதைகளுக்கு அற்புதமான போக்கைத் தந்துகொண்டிருந்தான். பிங்கிக்குச் சாப்பாடு, சிற்றுண்டி, பால், தூக்கம் என எல்லாவற்றையும் சிட்டிகை போடுவதுபோல நிர்வகித்துக்கொண்டிருந்தான்.
எஜமானியம்மா தன் உறவினர்கள் யாருடைய வீட்டிலிருந்தோ அங்கே புண்டனின் வயதேயான பையன்கள் இருந்திருக்க வேண்டும்; – அவன் அளவுக்கேற்ற பயன்படுத்திய ஒன்றிரண்டு பேன்ட், சர்ட்களைக் கொண்டுவந்து கொடுத்திருந்தார். எங்காவது வெளியே போக வேண்டியிருந்தால் அல்லது வீட்டுக்கு விசேஷமான விருந்தினர்கள் யாராவது வந்தால் புண்டன் அவற்றை அணிய வேண்டியிருந்தது. அதில் டீ சர்ட் ஒன்றின் கழுத்து எலாஸ்டிக் தளர்ந்திருந்தாலும் மார்புப் பகுதியின் மேல் ஒரு தோணியின் வண்ணச் சித்திரம் அழகாக இருந்தது. சற்று நீளமாயிருந்த பேன்ட்டின் காலை எஜமானியம்மா மடித்துத் தைத்துத் தந்திருந்தார். இவன் அந்த உடையைப் போட்டுக்கொண்டால் பிங்கி மிகுந்த சந்தோஷப்படுவாள். ‘புந்தூ . . . புந்தூ . . .’ என்றபடி அவன் பின்னால் ஓடுவாள். அவன் ஸ்டூலின் மேல் கோலைப் பிடித்துக் கழைக்கூத்தாடியைப் போலத் துணிகளை உலர்த்தப் போடும்போது கீழிருந்து பிழிந்த துணிகளைப் பிங்கி எடுத்துக்கொடுப்பாள். துணிகளிலிருந்து உதிரும் துளிகளின் மழை அவளது சிமிட்டும் கண்கள், கன்னங்களின் மேல் விழும்போது அவளுக்கும் புண்டுவுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். அவன் சப்பாத்திக்கு மாவு பிசையும்போது அவளும் உட்காருவாள். அப்போது அவன் சின்ன மாவு உருண்டையை அவளுக்குச் செய்துதர வேண்டும். அவள் அதை உருட்டிச் சின்னச் சப்பாத்தி செய்யவேண்டும். அதோடு மகிழ்ச்சியுடன் அவன் முதுகின் மேல் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு பின்னால் தொங்குவாள். அவன் அப்படியே உருளுவான். ஜமக்காளத்தையும் லுங்கியைப் போர்வையாகவும் கொண்ட, பகலில் எங்கோ அடங்கியிருக்கும் தன் படுக்கையை அவன் சத்தமில்லாமல் வெளியே எடுத்து விரிப்பதை மெச்சுதலோடு பார்த்தவாறு நிற்பாள். தானும் அவனுக்குப் படுக்கை விரிக்க உதவுவாள். பிறகு எஜமானியம்மா எவ்வளவு அதட்டினாலும் அவனுடனேயே உட்கார்ந்து அவன் சொல்லும் கதையைக் கேட்டபடி தூங்குவாள். சாருக்கு இது சரியெனத் தோன்றாவிட்டாலும் பிங்கியைச் சமாளிக்கும் வேறு வழிகள் அவருக்கு வாய்க்காததால் ஒரு மாதிரிப் புண்டன் மேல் முனகியதாகக் காட்டித் தூங்கிப்போன பிங்கியைத் தூக்கிக்கொண்டு படுக்கையறைக்குச் செல்வார். பிறகு புண்டன் தன் வேலையைத் தொடர் வான். தீபாவளியின் போது பிங்கிக்கென்று வாங்கிவந்த எல்லாப் பட்டாசுகளையும் இவனே வெடித்தான். ஏனென்றால் பிங்கி கம்பி மத்தாப்பைப் பிடிப்பதற்கும் அஞ்சும் பயந்தாங் கொள்ளி. கடைசியில் ஒரு குச்சியில் மத்தாப்பைக் கட்டிப் பற்றவைத்து அவள் கையில் தந்து எரித்துத் தைரியம் வரவழைத்துப் படிப்படியாக அவள் கம்பி மத்தாப்பையாவது பிடிக்கத் தைரியம் வரவழைத்தபோது புண்டன் குதித்து ஓடி வீட்டுக்கு வந்து செய்தி சொன்னான்.
ஒவ்வொரு மாதமும் தவறாமல் அவனுக்கு ஊரிலிருந்து கார்டு வந்துகொண்டிருந்தது. பட்களத்துக்கு அருகே ஷிரூரிலிருந்த அவன் வீட்டிலிருந்து அம்மா யார் யாரைக்கொண்டோ எழுதிப் போட்டுக்கொண்டிருந்தாள். இங்கிருந்து இவன் சார்பாக எஜமானியம்மா இவன் நலம் தெரிவித்துக் கார்டு எழுதிக்கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்புவரை படித்திருந்தாலும் கடிதம் எழுதத் தெரியாதா என்று அதட்டி, பிங்கியைப் பார் எவ்வளவு புத்திசாலி என்று பொய்யாக அவளை ஏற்றிவைத்து அவளை வீட்டுப் பாடம் செய்யவைத்துக் கொண்டிருந்தார். பிங்கி காகிதத்தில் குண்டு குண்டாகக் கிறுக்கி ‘இது புந்தூவோட கன்னடம்’ என்று கைகொட்டிச் சிரிப்பாள்.
தொடக்கத்தில் ஊரிலிருந்து கடிதம் வந்த தினம் புண்டன் உற்சாகமற்றவனைப் போல இருந்துவிடுவான். பிங்கி ‘புந்தூ ஏன் விளையாட வரல்ல?’ என்றால் எஜமானியம்மா ‘அவனுக்கு அவங்க அம்மாகிட்டருந்து கடிதம் வந்திருக்குதல்ல. அவனுக்கு வீட்டு ஞாபகம் வந்திருக்கு’ என்று பரிதாபக் குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். படிப்படியாகக் கடிதங்கள் அவனுக்குப் பழக்கமாயின. ஊரிலிருந்து வந்த கார்டுகளையெல்லாம் நடுவில் மடித்து அவற்றைக்கொண்டு ஆடும் ரயில் விளையாட்டைப் பிங்கிக்குச் சொல்லித் தந்தான். நேராக நடுவில் மடித்த கார்டுகளை ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக நீளமாக வைத்துக்கொண்டே போய்க் கடைசிக் கார்டைப் பூ என்று ஊத வேண்டும். அது தனக்கு முன்னாலுள்ள கார்டையும் அந்தக் கார்டு தனக்கு முன்னாலுள்ள கார்டையும் இப்படி ஒன்றின் மேலொன்றாகக் கார்டுகள் படபடவென விழுந்துகொண்டே-போவதைப் பார்த்துப் பிங்கி ஹோ என்று கைதட்டுவாள். பிறகு அந்தக் கார்டுகளை ஒன்றாக அடுக்கி எஜமானியம்மா கொடுத்த ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கி பிங்கியின் விளையாட்டுச் சாமான்களின் பெட்டியில் வைப்பான். இந்த ரயில் எங்கே போகிறது என்றால் பட்களத்துக்கு என்பான். ‘இங்கே நாங்கள் நலம். உன் அண்ணன் ட்ரக்கில் வேலைக்குப் போகிறான். தங்கை துளசி பள்ளிக்கூடத்துக்குப் போகமாட்டேனென்று அடம் பிடித்துக்கொண்டிருக்கிறாள். பூப்பறிப்பதையும்கூடச் செய்வதில்லை. கவலைப்படாதே.’ ஏறக்குறைய இதே வருணனை இந்த ரயிலின் எல்லாப் பெட்டிகளின் மீதும் எழுதப்பட்டிருந்தது. ஒவ்வொரு புதிய கார்டு வந்தபோதும் சார், ‘வாங்கிக்க. உங்க ரயிலுக்கு ஒரு புதுப் பெட்டி’ என்றபடி தந்துகொண்டிருந்தார். சில சமயம் உற்சாகத்தோடு ‘என் தங்கச்சி துளசி ரொம்பப் புத்திசாலி. என்னைவிட ரொம்ப. அவளோட நான் இப்படியே விளையாடிட்டிருந்தேன். விளையாடவைச்சிட்டிருந்தேன்’ எனச் சொல்லிக்கொண்டு போவான்.
யாரோ நாயக்கர் வீட்டுப் புழக்கடைத் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சும் வேலைக்காரக் குடும்பமாயிருந்த புண்டனின் வீட்டில் இப்போது அவனுடைய அம்மா, அண்ணன், தங்கை மட்டுமே இருந்தார்கள். தென்னை ஓலைகளைக் கொண்டு பந்தலிட்ட சின்ன வீடு ஏற்படுத்திக்கொண்டிருந்த அவர்கள் நாயக்கரின் அந்தப் புழக்கடையைப் பார்த்துக்கொள்வது, நீர் பாய்ச்சுவது, தேங்காய்களைப் பறித்து அனுப்புவது, தினமும் காலையில் புழக்கடை முழுவதும் பூக்கும் வெவ்வேறு வகையான பூக்களைப் பறித்து நாயக்கர் வீட்டுப் பூஜைக்கு அனுப்புவது ஆகியவற்றைச் செய்யவேண்டும். இந்தப் பூப்பறிக்கும் வேலை அம்மாவுடையதாயிருந்தது. அவள் ஒவ்வொரு செடியையும் தொட்டுத் தடவிப் பேசியதைப் போலிருந்தது. அப்பா இறந்ததும் அண்ணன் வேலைக்கு அலையத் தொடங்கிய பிறகு இளம் புண்டன் பொறுப்புக்கு இந்த வேலை வந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் புண்டன் பூப்பறிக்கப் போய்க்கொண்டிருந்தான். இடது கையில் பிரம்புக் குடலை, வலது கையில் மூங்கில் குச்சியில் கட்டிய சின்னக் கொக்கி, புழக்கடை முழுக்கப் பூக்கள் அழைக்கும் மரம் செடி கொடிகள். எத்தனை வகையான பூக்கள்! ஜிமிக்கிப் பூ, சங்கு புஷ்பம், விதவிதமான செம்பருத்தி, ஊசிமல்லி, குண்டுமல்லி, சந்திரகாந்தம், கனகாம்பரம், செஞ்செண்பகம், மஞ்சள் அரளி என ஒன்றா இரண்டா! ஒட்டகச்சிவிங்கி போன்ற செம்பருத்தியின் கழுத்துக்குக் கொக்கிபோட்டு மிகக் கவனமாக இழுத்துப் பூவைப் பறிப்பான். மழைக்காலத்தில் துளிகள் சேர்ந்த பூவின் இதழ்கள். மதில்சுவருக்கு அருகிலிருந்த மஞ்சள் அரளிமரத்துக் கிளைகளோ ஆகாயத்திலிருந்து தொங்கவிடப்பட்ட இருக்கைகளைப் போலிருந்தன. ஏறி ஏறி வழுவழுப்பாயிருந்த அதன் நடுப்பகுதியைச் சுற்றி ஏறி டார்ஜானைப் போல புண்டன் அந்தக் கிளை இருக்கைகளில் ஆடியபடியே உட்காருவான். அதோடு அரளிப் பூக்களைப் பறித்துச் சிகரெட்போல் விரல்களுக்கிடையில் சொருகிக்கொண்டு தேனை உறிஞ்சியபடி உட்காரும் அவனிடம் கீழிருந்து துளசி, ‘அண்ணா எனக்கும் கொடு’ என்று கெஞ்சுவாள். அப்போது கடவுள் காட்சிதந்து வரம் அளிப்பதுபோல ஒன்றிரண்டு பூக்களை அவள்மேல் எறிவான். பிறகு வழி முழுக்கப் பூவின் இனிப்புச் சிகரெட்டு பிடித்தபடி அண்ணனும் தங்கையும் நாயக்கர் வீட்டுக்குப் போவார்கள். தங்கள் பெரிய திண்ணைமேல் உட்கார்ந்திருக்கும் நாயக்கர் குடலையிலிருந்து பூக்களைக் கொட்டி ஒவ்வொன்றாகப் பொறுக்கி இலைகிலை எடுத்துவிட்டுப் பக்கத்திலிட்டு, மூன்று பெரிய பங்குகளாகவும் ஒரு சிறிய பங்காகவும் பிரிப்பார். மூன்று பாகங்களாகப் பிரிந்திருந்த அண்ணன் தம்பி மூன்று பேரின் பூஜைக்கு அந்த மூன்று பெரிய பங்குகள். அந்தப் பங்குகளிலும் அழகான பெரிய பூக்கள் கொண்டதை நாயக்கர் தன் வீட்டுப் பூஜைக்கே வைத்துக்கொள்வார். சாதாரண செம்பருத்தி, அரளி, நித்யகல்யாணி பூக்களின் சிறிய பங்கைப் புண்டனுக்குக் கொடுப்பார். அது புண்டன் வீட்டுக் கல்தெய்வத்துக்கு. அப்படியென்று புண்டனே அழைத்துக்கொண்டிருந்தான். ஏனென்றால் விநாயகர் சதுர்த்தியின்போது கணபதி பிரதிஸ்டையைப் பார்க்கப் போயிருந்தபோது, நாயக்கர் வீட்டுத் தெய்வங்கள் தாமிரம், பித்தளை, வெள்ளி, தங்கம் ஆகியவற்றில் பளபளக்கும் தெய்வங்களாயிருந்தன. இவர்களுடையதோ பந்தலின் வெளிக்கூண்டில் சப்பட்டையாயிருக்கும் கல்தெய்வம். அவனுக்கு இந்தச் செம்பருத்தியும் சின்ன நித்யகல்யாணியும் போதும். ஒவ்வொருமுறை கொய்யாமரத்துக்கு அடியில் அபூர்வமாகப் பூக்கும் நீலவண்ண டேலியாப் பூவை அல்லது வெள்ளைச் சந்திரகாந்தப் பூவை எந்தத் தெய்வத்தின் பங்குக்கும் போகவிடாமல் திருடி அமுக்கி வைத்துக்கொள்வார்கள். அவை வாடும்வரைக்கும் அவற்றைப் புழக்கடையில் எங்காவது ரகசியமாக வைத்து அவ்வப்போது பார்த்தும் முகர்ந்தும் மகிழ்ச்சியடைவார்கள். அப்போது நாயக்கர் பூக்களைப் பங்கு பிரிக்கும்போது புண்டனுக்குக் குறும்புச் சிரிப்பு வரும். விடியற்காலையில் அம்மாவுக்கு புண்டனை அடையாளம் காண்பது வெகுசுலபமாக இருந்தது. அவன் போகும் தடத்தில் உறிஞ்சிப்போட்ட மஞ்சள் அரளிப்பூக்கள் விழுந்துகிடக்கும்.
இங்கே வந்த பிறகு வீட்டிலிருந்து வெளியே போனது மிகக் குறைவேயானாலும் எங்காவது திருமணத்துக்கோ பிங்கியைப் பார்ட்டிக்கோ அழைத்துச் செல்லும்போது புண்டனின் கண்கள் பூச்செடிகளைத் தேடித் தோற்றன. பூக்கடைகளென்னவோ ஏராளமாக இருந்தன. தமிழர்களின் கோயிலொன்றுக்கு வெளியே பரதேசியைப் போலக் கோணல்மாணலாக நின்ற பாரிஜாதமரத்தை விட்டால் பூக்களைக் கொண்ட மரம், செடிகளே அவனுக்குத் தென்படவில்லை. இப்படியாக ஊரில் இப்போது பூப்பறிக்கும் வேலையைத் தொடரக்கூடிய துளசியின் பாக்கியத்தை நினைத்துப் பொறாமைப்பட்டான். எஜமானியம்மா வேண்டாமென்றாலும் டால்டா டப்பாவில் பூஜைக்காகக் கடையிலிருந்து வாங்கிவரும் இரண்டரை சாண் மாலையின் காய்ந்த சாமந்திப் பூவின் விதைகளை உதிர்த்துத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான். பால்கனியில் செருப்பு, பழைய பேப்பர், பிங்கியின் சைக்கிள் ஆகியவற்றுக்கு நடுவே டப்பாவுக்குள்ளிருந்து வெளிவந்து சாமந்திகள் மலர்ந்துகொண்டிருந்தன. பிங்கியோ அந்தப் பூக்களைப் புந்தூ பூ புந்தூ பூ என்று சொல்லிக்கொண்டிருந்தாள். ஒருமுறை இந்தப் பூந்தொட்டியின் பின்னால் விழுந்த பிங்கியின் சீருடைக்கு இஸ்திரி போட மறந்த புண்டனை ‘அந்த டப்பாவைப் பூவோட சேர்த்து உன் தலையில தூக்கிப் போடறேன்’ என்று எஜமானியம்மா அதட்டினார். அப்போது ஏனோ பிங்கி, புண்டன் இருவருக்கும் சிரிப்பு வந்தது.
நகரத்திலிருந்த நர்சரிக்குப் பிங்கியைக் கூட்டிச்செல்வதையும் திரும்ப அழைத்துவருவதையும் புண்டன் மிகுந்த உற்சாகத்தோடு செய்துகொண்டிருந்தான். இரண்டுமுறையும் தலைவாரிக்கொண்டான். சாலையின் அக்கம்பக்கத்தை முழுவதுமாகப் பார்த்துப் பிங்கிக்கு எதையெதையோ காட்டி நம்பவைத்தபடி கூட்டிச்செல்வான். ஒரு பக்கம் காரேஜ், இன்னொரு பக்கம் மாவரைக்கும் மில்லின் மேல் சின்ன தொழிற்சாலை. இரண்டுக்கும் நடுவே நர்சரி. சின்ன மரக் கதவைத் திறந்து சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்ததைப் போல குழந்தைகளை வெளியே விட்டுக்கொண்டிருந்தார்கள். ஏலம் போடுகிறவர்களைப் போல குழந்தைகளைத் தூக்கிக் காட்டிக்கொண்டிருந்தார்கள். சம்பந்தப்பட்டவர்கள் முன்னால் வராதிருந்தால் அந்தக் குழந்தையை உள்ளே அனைத்து வேறொன்றைக் காட்டுவார்கள். இப்படியாக அங்கே அழைத்துச் செல்லக் கணநேரம் தாமதமானாலும் குழந்தை உள்ளே அனைத்துக்கொள்ளப்பட்டது. அரை மணிநேரத்துக்குப் பிறகு. புண்டனைக் கண்டதும் பிங்கி கண் மலர்த்தி ‘புந்தூ…’ என்று கையாட்டிக் கூப்பிடுவாள். வெளியே வந்தவுடனே புண்டன் அவள் பையில் எல்லாப் புத்தகங்களும் சரியாக இருக்கின்றனவா, பென்சிலும் ரப்பரும் இருக்கின்றனவா என்று பார்ப்பான். தண்ணீர் குடித்தாயா இல்லையா என்று கேட்டுக் குடித்திருக்காவிட்டால் ‘நான் கதை சொல்லணுன்னா தண்ணி குடி’ என்று போக்குகாட்டிக் குடிக்கவைப்பான். பிறகு சாலையைக் கடக்கும்வரை அவனுடைய வியப்பான செய்திகள்தாம். ‘இன்னக்கி உன்னோட கதையில யாரு வரணும்?’ என்று கேட்பான். அப்போது பிங்கி சாலையில் தெரியும் ஜனங்களில் சிலரைக் காட்டி ‘அவன் … அது …’ என்று சொல்வாள். ‘அந்தப் பச்சைக் காரு இருக்குல்ல, நேத்தைக்குக் கதையில மொதல்ல வந்தது அதுதான்’ என்று அவன் சொன்னால், அவள் பக்கத்தில் போய்ப் பார்ப்பாள். அவர்கள் இருவரையும் அபாரமாக வசீகரிக்கும் நடமாடும் பீடாக்காரன் சாலையிலிருந்தால் அவன் பக்கம் சுற்றிவந்து அவன் கை வேகத்தைப் பயபக்தியோடு இருவரும் பார்ப்பார்கள். கழுத்தில் சின்னப் பெட்டியைக் கட்டி அதில் தாமிரப் பாத்திரங்களை வைத்து அவன் நடந்துகொண்டிருந்தான். சாலையில் போய்வந்து கொண்டிருக்கும் யாரும் வேண்டுமென்றால் அவனை நிறுத்திப் பீடா வாங்கிக்கொள்வார்கள்.
ஊரில் பீடாக்கடையில் குச்சி சொருகிய பீடாவைவிடக் கண்ணெதிரில் தயாராகும் இந்தப் பீடா புண்டனுக்கு ஆச்சரியமாகத் தெரிந்தது. பளபளவென மினுங்கும் பாத்திரங்களிலிருந்து என்னென்னவோ எடுத்துத் தடவி வண்ண வண்ணமான மசாலா நிரப்பி மடித்து வாடிக்கையாளரின் கையில் கொடுப்பான். வாடிக்கையாளர் பணம் கொடுத்து வாயில் திணித்துக்கொள்வதற்குள் முன்னால் நடப்பான். அவன் நடக்கும்போது பாக்குத் தூளும்கூட அசையாது. ஒரு நாள் பிங்கியைத் திரும்ப அழைத்துவந்த போது மிகுந்த தைரியம் வரவழைத்து எட்டணா கொடுத்து ஒரு பீடா வாங்கிக்கொண்டான். புரச இலையில் கட்டிக்கொடுத்த அதைக் காற்சட்டைப் பையின் மூலையில் வைத்து இரவு வருவதற்காகவே காத்திருந்தான்.
இரவில் எல்லோரும் படுத்த பிறகு பால்கனியில் பரப்பியிருந்த துணிகளையெல்லாம் எடுத்து மடித்துவைத்து, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிய பிறகு பதற்றப்படாமல் காற்சட்டைப் பையிலிருந்து பொட்டலத்தை எடுத்தான். மிகக் கவனமாகப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு வகையில் கறுப்பாகப் பழசாகிப்போன பீடாவைப் பூப்போலப் பிரித்தெடுத்து உள்ளேயிருந்த மசாலாவைப் பார்த்து மீண்டும் மடித்து மற்ற கட்டடங்களின் விளக்குகள் அணைவதைப் பார்த்தபடி வாயில் போட்டுக்கொண்டான். ஒரு துளியையும் விழுங்காமல் உமிழாமல் நீலகண்டன்போல் எவ்வளவோ நேரம் கண்மூடிக்கொண்டு மிதந்தான். அதற்குள் உள்ளேயிருந்து எழுந்து வந்த சார் ‘புண்டூ, கொஞ்சம் உப்புத் தண்ணீ காய்ச்சிக் குடுடா. தொண்டை கரகரன்னு இருக்கு’ என்றார். களுக்கென்று முடிந்தளவுக்கு விழுங்கியவன் சமையலறைக்கு ஓடி கியாஸ் அடுப்பைப் பற்றவைத்துப் பின்னால் நின்றிருந்த சாரின் பக்கம் தவறியும் திரும்பிப் பார்க்காமல் கோபத்தில் விழித்தெழுந்த மருமகளைப் போல வாய் திறக்காமல் இறுகிய முகத்தோடு அவர் சொன்னதற்கெல்லாம் வெறுமனே உம் கொட்டியபடி டம்ளரில் ஊற்றிக் கொடுத்துவிட்டுப் பிழைத்தோம் என்று குளியலறைக்கு ஓடினான். உதட்டைத் தேய்த்துத் தேய்த்துக் கழுவுவதற்கு முன்னால் சிவந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்ணாடியில் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். மறுநாள் சாலையில் போனபோது பிங்கிக்குச் சிவந்த நாக்கைக் காட்ட மறக்கவில்லை. ‘எப்பிடி அது செவப்பாச்சு?’ என்று அவள் கேட்டதற்குக் கனவில் நிறைய சிவப்புக் குச்சி ஐஸ் சாப்பிட்டதாகக் கூறினான்.
பிங்கியின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம் இரவு அவள் பிஞ்சுக் கைகளில் எஜமானியம்மா மருதாணி இட்டபோது, புந்தூவுக்கும் இடு என்று பிங்கி அடம்பிடித்தாள். எஜமானியம்மா புண்டூவின் உள்ளங்கையில் அழகான கொடியும் பூவும் வரைந்தார்.
‘இப்பவே பாத்திரம் கழுவப் போகாதே. நாளைக்குக் கழுவு. இல்லன்னா மருதாணி நிறம் பிடிக்காது’ என்றார். பிங்கியும் புண்டுவும் அப்போது கைதிகளைப் போலக்கையைத் தூக்கி உட்கார்ந்துவிட்டார்கள். சற்று நேரம் உட்கார்ந்திருந்த பிங்கி ‘எனக்குச் சலிப்பா இருக்கும்மா’ என்று கைகழுவிக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள். புண்டனுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அறிந்தும் அறியாதவன்போலத் தான் ஒருவனே கையைத் தூக்கி உட்கார்ந்திருக்கிறோமே எனத் தோன்றிக் கையைக் கழுவிக்கொண்டு வேலைக்குக் கிளம்பிவிட்டான். மறுநாள் சிறிதே நிறம் பிடித்திருந்த பிங்கியின் கையைப் பார்த்து எஜமானியம்மா ‘அட’ என்று முத்தமிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவளும் ஓடோடி வந்து குளியலறையில் துணி துவைத்துக்கொண்டிருந்த புண்டனின் கையை இழுத்துச் சோப்பைத் துடைத்து அங்கும் சற்று நிறம் பிடித்திருந்ததைக் கண்டு ‘அட’ என்று முத்தமிட்டு ‘சீ சோப்பு’ என்று வெளியே ஓடினாள். அன்றைய அவர்கள் கதையில் குடிமக்களெல்லாம் முகத்துக்கும் மருதாணி இட்டுக்கொண்டு நடமாடினார்கள். குழந்தைகள் சிலர் சேர்ந்துகொண்டு ஒரு யானை முழுவதற்கும் மருதாணி இட்டிருந்தார்கள். அந்த யானையின் பிறந்தநாளுக்குத் தென்னைமர உயர கேக் இருந்தது.
இப்படியிருந்தபோது ஒரு நாள் அந்த வீட்டுக்குப் புதிய விருந்தினர் ஒருவர் வந்தார். கண்ணாடி அணிந்திருந்தார். எஜமானியம்மாவுடனும் சாருடனும் அவர் நீண்ட நேரம் பேசினார். இடையிடையே தண்ணீர், தேநீர், பழம் எடுத்துக்கொண்டு புண்டன் வந்தபோது புண்டனைப் பார்த்து ‘எப்படி இருக்கறே புண்டலீக்?’ என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டார். புண்டன் வெட்கப்பட்டு உள்ளே ஓடினான். தன் பெயரைத் தெரிந்துவைத்திருக்கும் இவர் யாரப்பா என எண்ணி உள்ளே விளக்கை அணைத்து இருட்டிலேயே திரைக்குப் பின்னால் நின்று அவரைப் பார்த்தான். பேச்சைப் பார்த்தால் அவர்கள் பக்கத்தவரே. ஆனால் பரிச்சயமான முகமல்ல. விருந்தினர் தனக்குச் சாக்லேட் கொண்டுவந்திருக்க வேண்டும். இனியென்ன தருவார் என்று சற்று நேரம் அப்படியே விருந்தினரின் கையில் கன்னம் கின்னம் நிமிண்டிக்கொண்ட பிங்கி நேரம் வீணாயிற்று என எண்ணி ‘புந்தூ’ என்றபடி உள்ளே நடந்தாள். சமையலறையிலேயே பிங்கி விளையாட்டுச் சாமானைப் பரப்பிக்கொண்டு உட்கார்ந்தாள். பிங்கி கோபுரம் கட்டியபோது அவளுக்கு உதவிக்கொண்டே ஒரு பக்கம் பட்டாணியைத் தின்னக் கொடுத்துக் கொண்டிருந்தான். ‘நீயும் சாப்புடு’ என்று பிங்கி அவன் வாய்க்குள் திணிக்க வந்தால் உயிர் போனாலும் வாய் திறக்கவில்லை. அதற்குள் எஜமானியம்மா ‘பிங்கீ, அங்கிள் கிளம்பிட்டார் பாரு’ என்று உள்ளே வந்தார். அவர் பின்னாடி வந்த கண்ணாடி சார் ‘இந்த சன்டே எங்க வீட்டுக்குச் சாப்புட வரணும் பிங்கீ. புண்டலீகனையும் அழைச்சிட்டு வா’ என்று சொன்னார். அவர் போன பிறகு எஜமானியம்மா, ‘புண்டா, நாளன்னைக்கு அந்தேரியிலயிருக்கற அவர் வீட்டுக்குப் போகணும். அது ரொம்ப தூரம். காலையிலேயே கிளம்பணும். அதனால நாளை ராத்திரி இட்டிலிக்கு மாவாட்டாதே. பிரட் சாப்டுட்டுக் கிளம்பிடலாம்’ என்றார். பிறகு சற்று நேரம் கழித்து ‘புண்டூ, உனக்கு ஒரு சந்தோஷச் செய்தி. இப்ப வந்திருந்தாருல்ல ராவ்னு. அவர் வீட்டுல ஆறு மாச சின்னக் குழந்தை இருக்குது. அந்தக் குழந்தையைப் பாத்துக்க உன் தங்கச்சி துளசி இருக்கறா. போன ரெண்டு வாரமா உன்னைப் பாக்கணுன்னு ரொம்ப அடம் பிடிக்கிறாளாம். ரொம்ப நல்ல மனுஷங்க. எப்படி இங்கவரைக்கும் வந்தாரு பாரு. நாளன்னைக்குப் போகலாம். நீயும் அவளைப் பார்த்த மாதிரி ஆச்சி. அவளுக்கும் கொஞ்சம் தைரியம் வரலாம்’ என்றார்.
புண்டனால் நம்பவே முடியவில்லை. துளசி! இங்கே! தன் கதை ஒன்றில் வந்ததைப் போல. நம்பலாமா வேண்டாமா என அவனுக்குத் தெரியவில்லை. தான் வீட்டை விட்டு வந்தபோது எவ்வளவு சின்னவளாக இருந்தாள். கிணற்றுச் சுவருக்குப் பக்கத்தில் சின்னச் செடியிலிருந்த செம்பருத்தி மொக்குக்கும் அவள் கை எட்டவில்லை. அடம்பிடிக்கிற பெண். அம்மாவுக்கு ரொம்பத் தொல்லை கொடுத்தாளோ என்னவோ? புண்டன் மிகுந்த உத்வேகத்தோடு தன் வேலையைத் தொடங்கினான். பிங்கி என்றைக்கும்போலப் பால் குடிக்கமாட்டேனென்று அடம்பிடித்தபோது சார் ‘புண்டா , இவளைப் பால் குடிக்கவை’ என்று பிங்கியை உள்ளே அனுப்பினார். புண்டன் பால்கனியில் அவளை உட்கார்த்தித் தங்கையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். ‘துளசி மத்தியானம் சூடான மணல்மேலயும் சாவதானமா நடப்பா. மத்தவங்கன்னா ஓடணும். காலை அவ்வளவு சுடும¢. துளசி பச்சை வாழைக்காயையும் தின்னுக்காட்டுவா. எவ்வளவு கசப்பான பிஞ்சுக் கொய்யாக் காயையும் மென்னு தின்னுவா. இந்த அண்ணன்னா போதும் கடகடன்னு நடுங்குவா.’ பிங்கி கண்களை மலர்த்திக் கடக்கடக்கெனப் பாலைக் குடித்து முடித்தாள். உடனே ஓடிக் கண்ணாடிக்கு முன்னால் நின்று ‘சே, இன்னக்கி மீசை சரியா வரவே இல்ல’ என்று முணுமுணுத்தாள். பால் மீசை பெரிதாயிருந்தால் அவளுக்கு மகிழ்ச்சி. ‘நாளக்கி இதைவிடப் பெரிய மீசை வரவைக்கலாம்’ என்று புண்டன் படுக்கை விரிக்கப் போனான். படுக்கை விரித்தபோது திரும்பத் திரும்பப் போர்வையில் குண்டுக்கட்டாக விழுந்து பிங்கி உருளத் தொடங்கினாள். ‘போய்ப் பல் தேச்சுக்க. இல்லன்னா கதை இல்லை’ என்று அவளைத் துரத்தினான். பிங்கி தூங்கிய பிறகு எஜமானியம்மா வந்து ‘புண்டூ, உன்னோட அந்த சர்ட் பேன்ட் துவச்சிதானே இருக்குது? இல்லன்னா நாளைக்கே துவைச்சுப் போடு’ என்றார்.
மறுநாள் பிங்கியை நர்சரியில் விட்டு வந்ததுமே புண்டன் தன் சர்ட் பேன்ட்டைத் துவைத்து வெளிக் கம்பியில் காயப்போட்டான். எஜமானியம்மா அங்கேயே சோபாவின் மேலிருந்த பிங்கியின் ஜட்டியைப் பார்த்து ‘அட, ஜட்டி போட்டுக்காமயே போயிருக்கறாளேடா. சீக்கிரம் எடுத்துட்டுப் போ. சே பாவம்’ என்று அவன் கையில் ஜட்டியைக் கொடுத்துத் துரத்தினார். அவசரத்தில் செருப்புகூடப் போட்டுக்கொள்ளாமல் பிங்கியின் ஜட்டியைப் பிடித்துக்கொண்டு புண்டன் ஓடினான்.
நர்சரி வாசலில் ஆசிரியை ஒருவரிடம் பிங்கி வேண்டுமெனச் சொன்னான். அவள் வந்தவுடன் சார் சொல்வதுபோல ‘நங்கூபாயி ஹனகல்’ என்று கிண்டல் செய்தபடி ஓரமாக அழைத்துப் போய் ஜட்டியை அணிவித்தான். ‘வீட்டுக்குப் போயிடலாமா?’ என்றவள் கண்களை மலர்த்தியபோது ‘சே சே, இன்னும் டைமிருக்கு’ என்று உள்ளே அனுப்பினான். மீண்டும் வீட்டுக்கு ஓட்டமாகத் திரும்பினான். வழியில் எதிர்ப்பட்ட நடமாடும் பீடாக்காரனைப் பார்¢த்து- காற்சட்டைப் பையில் எட்டணா இல்லாததால்- சலிப்பாக இருந்தது. ஆனால் துளசிக்காக ஏன் ஒரு பீடா வாங்கிக்கொண்டு போகக் கூடாது எனத் தோன்றியது. பிங்கியைத் திரும்ப அழைத்துவர மீண்டும் வந்தபோது மின்சாரத் துறையினர் செடி வெட்டும் டிரக்கை வைத்துக்கொண்டு கம்பிக்குக் குறுக்கே வரக்கூடிய கிளைகளைக் கத்தரித்துக்-கொண்டிருந்தார்கள். டிரக்கின் பின்னால் தீயணைக்கும் வண்டிக்கு இருப்பதுபோல ஏணி இருந்தது. சீருடை அணிந்து ஜனங்கள் ஏறி இறங்கி வேலைசெய்து கொண்டிருந்தார்கள். வெட்டிய கிளை கம்பிமேல் விழாமல் கயிறு போட்டு இழுத்துக்கொண்டிருந்தார்கள். பிங்கியைத் திரும்ப அழைத்துவரும் வரைக்கும் இந்த வேலை நடந்துகொண்டிருக்கட்டும் கடவுளே என்று பிரார்த்தித்தவாறு புண்டன் நடைபோட்டான். அவள் பையை எடுத்துக்கொண்டவுடனே அவளைத் தண்ணீர் குடிக்கவைத்து ‘உனக்கு ஒரு அதிசயம் காட்டறேன். மரம் வெட்டுற ட்ரக்’ என்று நீண்ட அடியெடுத்துவைத்து அவளை இழுத்துக்கொண்டு வந்தான். இப்போது வெட்டும் வேலை முடிந்திருந்தது. கீழே விழுந்திருந்த கிளை, கொப்புகளை ஓரிடத்தில் சேர்த்துவைத்திருந்தார்கள். அப்போது நேராக இருந்த ஏணி இப்போது சின்னதாகி டிரக்கின் பின்னால் படுத்திருந்தது. பிங்கி பார்க்க முடியாமல் போச்சே என்று புண்டனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ‘இருக்கட்டும், நானே உனக்குச் சொல்றேன்’ என்று விளக்கமாகச் சொல்லியவாறு வீட்டுப் பக்கம் புறப்பட்டான். பிங்கி ‘ஏன் வெட்டறாங்க?’ என்றாள். ‘அது ஒயர்மேல வரக் கூடாதுன்னு’ என்றான். ‘ஏன் வரக் கூடாது?’ என்றாள். ‘மரத்துக்கு அப்ப ஷாக் அடிக்கும்’ என்றான். அப்போது பிங்கி ‘மரத்துக்கு ஷாக் அடிச்சா என்னாகும்?’ என்றாள். ‘ஒன்னுல்ல, மரம் பேச ஆரம்பிக்கும். நடமாட ஆரம்பிக்கும். இந்தக் கடைகள்லயிருந்து பலகாரம் கிலகாரம் திருடித் திங்க ஆரம்பிக்கலாம்’ என்று சொன்னான். ‘ஐயய்யோ’ என்றவாறு பிங்கி வீட்டை அடைந்தாள்.
மத்தியானம் தூங்குவதற்கு முன்பு எஜமானியம்மா ‘புண்டூ, உன்னோட தங்கச்சி அங்கேயே இருக்கறது நல்லதுதானே? உனக்கு வேணுங்கறப்ப பார்க்கலாம். ஆனால் அவளுக்கென்னமோ அங்க இருக்கப் புடிக்கலயாம். ரொம்ப அடம்பிடிக்கிறாளாம். சின்னக் குழந்தை இருக்கற வீடு. அவ உம் பேச்சைக் கேப்பால்ல? நீ அவளுக்கு நிதானமா விளக்கிச் சொல்லு. நீ சொன்னா கண்டிப்பா கேப்பா. என்னன்னாலும் நீ அண்ணா. அவங்க சொன்னபடி கேக்கச் சொல்லு’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். துளசியின் சின்ன முகம் கண்ணெதிரே வந்தாலும் அது சற்று பிங்கியின் முகம்போலவே வடிவம் கொண்டது. ‘சரி சரி’ என்றவாறு பிங்கியின் உடைகளுக்கு இஸ்திரி போட்டான். இஸ்திரி போட்டு முடித்த பிறகு இஸ்திரிப் பெட்டியின் சுவிட்சை அணைத்தான். எஜமானியம்மா ‘இஸ்திரிப் பெட்டி சூடாயிருக்கு. உன் துணிக்கும் போட்டுக்க. நாளக்கி நீ அழகாத் தெரியணும்’ என்றார். உற்சாகத்துடன் ஓடிப்போய் மடித்துவைத்திருந்த தன் சர்ட், பேன்ட் கொண்டுவந்தான். சர்ட்டுக்குப் போட்டு முடிப்பதற்குள் இஸ்திரிப் பெட்டி குளிர்ந்துவிட்டது. ஆனாலும் அதைப் பேன்டின் மேல் ஓட்டி எப்படியும் இரவு படுக்கும்போது தலைக்கடியில் வைத்துக்கொண்டால்போயிற்று என நினைத்துக்கொண்டான். எஜமானியம்மா தூங்கிக் கொண்டிருந்தபோது வீதியில் பீடாக்காரன் கூவியது கேட்டது. எட்டணா எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் இறங்கி ஓடிப்போய்ப் பீடா கட்டிக்கொண்டு வந்து பேன்ட்டின் பையில் வைத்துவிட்டான்.
மறுநாள் விடியற்காலை எட்டு மணிக்கே எல்லோரும் தயாராகி டோம்பிவிலி ஸ்டேஷனிலிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமையாதலால் டிக்கெட்டுக்கு நீண்ட வரிசை. பிங்கியின் கைபிடித்து நின்றிருந்த புண்டன் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வாயடைத்துப் போயிருந்தான். பிங்கியே அவனுக்குத் தைரியம் கொடுப்பவளைப் போலக் காணப்பட்டாள். சார் டிக்கெட் வாங்கி வந்தார். எஜமானியம்மா பிங்கியைப் பிடித்துக்கொண்டார். சார் புண்டனின் கைபிடித்துக் கொண்டார். ரயில் ஒன்று பிளாட்பாரத்துக்கு வந்தவுடனே சார் அதற்குள் சட்டென்று பார்த்து ‘அடுத்த வண்டி பிடிக்கலாம். இது வேண்டாம்’ என்று அறிவித்தார். எல்லோரும் பின்னுக்கு வந்தார்கள். நெருப்பு விழுந்த புற்றின் எறும்புகள்போல உள்ளிருந்த ஜனங்கள் வெளியே பாய்ந்தார்கள். பிறகு வெளியிலிருந்தவர்கள் உள்ளே. கண நேரத்துக்குள் ரயில் புறப்பட்டுப்போனது. ‘பாத்தியா புண்டா. முடிஞ்சளவு சீக்கிரமா ஏறணும்’ என்று சார் சொன்னார். சில நிமிடங்களிலேயே இன்னொரு ரயில் வந்தது. கண்மூடித் திறப்பதற்குள் எல்லோரும் உள்ளே புகுந்துகொண்டார்கள். சாரின் வயிற்றில் புண்டனின் முகம் ஒட்டியிருந்தது. எல்லாப் பக்கத்திலிருந்தும் ஜனங்கள் மிதித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சார் பிங்கியைத் தூக்கிக்கொண்டார். எஜமானியம்மாவைக் காணவில்லை. நடுவிலெங்கோ பிங்கி ‘கடல் கடல்’ என்று கத்தினாள். அப்போது சார், ‘இல்ல பிங்கி, அது சின்ன ஆறு. இப்ப பாலம் வரும் பாரு’ என்றார். புண்டனுக்கு எதுவும் தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் நின்றிருந்தவர்களின் வயிறு, பாக்கெட்டு, பைகளின் இருட்டு மட்டுமே முகத்தில் படிந்திருந்தது. பாலத்தைக் கடந்தபோது ரயிலின் சத்தம் மாறியது. வந்த புதிதில் இதே மாதிரி சார் அவர்களை எங்கோ அழைத்துப் போனார். கடலுக்குப் பக்கத்தில் குன்றின் மேல் ஒரு பூங்கா இருந்தது. பிரம்மாண்டமான சிமெண்ட் பூட்ஸும் இருந்தது. அங்கிருந்து சார் தொலைவில் கடலில் தெரிந்த தீவுப் பகுதி ஒன்றைக் காட்டி ‘பார் புண்டா, அதுதான் உன் பட்களம். எவ்வளவு பக்கத்துல இருக்குது பார். லாஞ்சுல போனா ரண்டே நிமிசத் தூரந்தான்’ என்று சிரித்தார். அது பொய் என்று தெரிந்திருந்தாலும் புண்டன் ஏனோ அந்தப் பூங்காவில் இருந்தவரைக்கும் அந்தப் பகுதியையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். தாதரில் ரயில் மாறிய பிறகு எல்லோருக்கும் உட்கார அங்கும் இங்கும் இடம் கிடைத்தது. சார் இப்போது புண்டனின் காதில் ‘உன் தங்கச்சிக்குச் சொல்லு. அடம்கிடம் பிடிக்காம அவுங்க குழந்தைய நல்லாப் பாத்துட்டா நாங்களும் அவளுக்கு ஒரு பரிசு தர்றோம்னு’ என்றார். பிங்கி புண்டனையே சிமிட்டும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாள். புண்டனின் தாடையைத் தன் பக்கம் இழுத்தவாறு ‘இந்த ரயில் சலிப்பாயிருக்குது புந்தூ. நம்ம பட்கள அட்டை ரயிலே நல்லா இருக்குது. சலிப்பாயிருந்தா நிறுத்திடலாம்’ என்றாள். சார் மீண்டும் புண்டனின் காதைத் தன் பக்கம் இழுத்து ‘துளசிக்கு சரியா எடுத்துச் சொல்லு. வேணுன்னா மாசத்துக்கு ஒரு தடவை நீங்க சந்திக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணலாம். அவங்க சொன்னபடி கேட்டு அவங்களோட எந்தச் சாமானையும் நாசம் பண்ண வேண்டான்னு சொல்லு. அன்னைக்கிக் கோவத்துல ஒரு கப்பை வீசி எறிஞ்சி ஒடச்சிப் போட்டுட்டாளாம். ஏழெட்டு வயசுப் பொண்ணுன்னு அவங்களும் சகிச்சிட்டிருக்காங்க’ என்றார். புண்டனுக்கு மெதுவாகப் பயம் ஆரம்பமாயிற்று. அந்தேரியில் ஆட்டோ ஏறியபோது பிங்கியின் கையைப் பிடித்துக்கொள்ள அவன் மறந்துவிட்டான். எஜமானியம்மா மிக அதிகமாகக் கோபப்பட்டார்.
மணி அடித்த பிறகு ராவ் வீட்டின் கதவு திறக்கச் சில வினாடிகள் ஆயின. அதற்குள்ளாகவே எஜமானியம்மா ‘பலகாரம் கொடுத்தா கை நீட்டிச் சாப்டுறாத. உனக்கு வேற தருவாங்க. சோபாமேல ஒக்காராதே’ என்றெல்லாம் படபடத்தார். கதவின் மேஜிக் ஐ வழியாகப் பார்த்த கண்ணாடி சார் ‘ஓஹோ, வாங்க வாங்க’ என்றவாறே கதவைத் திறந்தார். ‘ஒக்காருங்க ஒக்காருங்க’ என்று எல்லோரையும் உள்ளே வரவழைத்துக்கொண்டார். பிங்கியின் கன்னத்தை நிமிண்டி ‘இங்க பாருடீ, யாரெல்லாம் வந்திருக்காங்கன்னு’ என்று மனைவியை அழைத்தார். ‘புண்டலீக் அழகாத் தெரியறே. ஒக்காரு ஒக்காரு’ என்று அவர் சொன்னபோது அவன் சோபாவின் மேல் உட்கார்ந்துவிடுவானோ எனப் பயந்த எஜமானியம்மா ‘இருக்கட்டும்… இருக்கட்டும், புண்டூ அங்கயே கார்ப்பெட்மேல ஒக்காரு’ என்று டீப்பாய்க்குப் பக்கத்தில் இடம் காட்டினார். புண்டன் பயந்துகொண்டே உட்கார இருந்ததற்குள் கண்ணாடி சார் ‘இருக்கட்டும். இங்க வேண்டாம், அங்க ஒக்காரு’ என்றவாறு சற்றுத் தூரத்திலிருந்த டைனிங் டேபிளின் நாற்காலியைக் காட்டினார். வேண்டாம் என்பதைப் போல எஜமானியம்மா அவனுக்குக் கண்களால் சைகைசெய்தார். அதற்குள் உள்ளேயிருந்து மிஸஸ் ராவ் கை துடைத்துக்கொண்டே வந்து ‘வணக்கம். குழந்தையத் தூங்கப் பண்ணிட்டு வந்தேன். ஊருலயிருந்து வந்திருந்த என்னோட அம்மா முந்தாநேத்துதான் திரும்பிப் போனாங்க’ என்றார். புண்டன் பக்கம் திரும்பி ‘அடே, நீதானா துளசியோட அண்ணா? பையன் ஸ்மார்ட்டா இருக்கான்ல. துளசீ’ என்று கூப்பிட்டார்.
புண்டனின் கண்கள் நடுங்கியபடி வீட்டின் உட்பகுதியையே பார்த்தன. அவன் இதயம் ஏனோ அடித்துக்கொள்ளத் தொடங்கியது. மெலிந்த கைகள் திரைச்சீலையை மெதுவாக விலக்க, சின்ன துளசி வந்து நின்றாள். அவள் கண்கள் புண்டனையே ஏக்கத்தோடு பார்த்தன. வெளுப்பாகத் தடித்து வளர்ந்திருந்த அண்ணனைப் பார்த்து ஒருவிதமான வெட்கத்தோடு சிரித்தாள். மற்றவர்களைப் பார்த்து ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றாள். புண்டனும் அவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான். கண்ணாடி சார் இப்போது ‘அண்ணா ரண்டு வருசத்துல உடம்பு ஊறி அழகா ஆயிருக்கானில்லியா? இங்கிருந்தா நீயும் அப்படியே ஆயிடுவே வா. வெளியே வா. பேசு’ என்று அழைத்தார். அவள் முன்னால் வரவில்லை. அவள் அணிந்திருந்த விசித்திரமான சட்டையில் அவள் கைகால்கள் குச்சிகளைப் போலத் தெரிந்தன. பிங்கி ஓடிப்போய்த் துளசியின் அருகில் நின்று விளையாட்டுப் பொருளைப் பார்ப்பவளைப் போல பார்த்துக்கொண்டு நின்றாள். எஜமானியம்மா ‘பிங்கி இங்க வா. அண்ணன் தங்கச்சி பேசிக்கட்டும் விடு’ என்று பிங்கியை அதட்டிக் கூப்பிட்டார். பிங்கி இப்போது புண்டனின் பக்கம் போய் நின்றாள். ‘ஓ, அவனோட ரொம்ப ஒட்டிக்கிட்டிருக்கா’ என்று மிஸஸ் ராவ் ஆச்சரியப்பட்டார். ‘இங்க பேசறதுக்கு வெட்கமாயிருக்கலாம். உள்ளே போயிடுங்க. பெட் ரூமில சாவதானமா உட்கார்ந்துட்டுப் பேசுங்க. அங்க குழந்தை தூங்குது. கொஞ்சம் மெதுவாப் பேசுங்க’ என்று மிஸஸ் ராவ் துளசியை அனுப்பினார். ‘உம், நீயும் போ’ என்று சொன்ன பிறகு புண்டன் மெதுவாக அங்கே போனான். அவன் பின்னால் கிளம்பிய பிங்கியைத் தடுத்துக் கண்ணாடி சார் ‘நீயும் அப்புறமா போவியாம்’ என்று சொல்லி அவர்கள் இருவரும் உள்ளே போன பிறகு பெட்ரூமின் கதவைச் சற்றுச் சாய்த்துவிட்டு வந்தார்.
புண்டனை ஒரு வகையான செவிட்டுத்தனம் கவியத் தொடங்கியது. ஏறக்குறைய பிங்கியின் உயரமே உள்ள தன் பேதைத் தங்கையிடம் இங்கே இப்போது என்ன பேசுவது, என்ன செய்வது என சற்றும் தோன்றவில்லை. பெரிய இரட்டைப் படுக்கையின் நடுவில் வண்ணப் போர்வையின் மேல் தலையணைகளுக்கு இடையில் குழந்தை பூப்போலத் தூங்கிக்கொண்டிருந்தது. இனிப்புக் கடையில் குலோப்ஜாமூனின் மேல் வைத்ததைப் போலக் குழந்தையின் மேல் ஒரு கொசுவலைபோல சின்னக் குடை இருந்தது. சற்றுத் தூரத்தில் ஜன்னல் பக்கம் இவன் அளவுக்கே பயந்தவளைப் போலிருந்த துளசி நின்றிருந்தாள். புண்டனுக்கு எதுவும் பேச வரவில்லை. துளசி வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போ அங்கே யார் பூப்பறிக்கிறாங்க? இங்கே ஏன் வந்தே? ஏன் அடம்பிடிக்கிறே? ஏன் கப்பை ஒடச்சே? இவை எதுவும் கேட்க வரவில்லை. வந்ததைப் போல உணர்ந்தாலும் விக்கலும் வரவில்லை. மண்ணெண்ணெய் ஸ்டவ்வை அப்போதுதான் அணைத்தது போன்ற அமைதி. அதற்குள் குழந்தை ஈரப்படுத்திக்கொண்டு அசைந்தது. துளசி சரசரவென்று முன்னால் வந்து குடையை எடுத்துவிட்டுக் குழந்தையின் கால்களைத் தூக்கி ஜட்டியைக் கழற்றித் துடைத்தாள். பக்கத்திலிருந்த புது ஜட்டியை மெதுவாகப் போட்டுவிட்டாள். குழந்தையின் நெஞ்சை மெதுவாகத் தட்டிக்கொடுத்தாள். குழந்தை தூங்கியது. மீண்டும் குடை வைத்தாள். சில வினாடிகளுக்குப் பிறகு கதவைத் தள்ளிக்கொண்டு எஜமானியம்மா ‘புண்டூ, பிங்கி இங்கயும் அடம்பிடிக்க ஆரம்பிச்சுட்டா. நீயே குடிக்கவைச்சுடு’ என்று பால் டம்ளரைப் பிடித்துக்கொண்டிருந்த பிங்கியைத் தரதரவென இழுத்துவந்து விட்டுப் போனார். தூங்கிவிட்ட குழந்தையைப் பார்ப்பதில் பிங்கி ஆழ்ந்திருந்தாள். குடையை எடுத்து உள்ளே கை நுழைத்துக் குழந்தையின் விரல்களைத் தொட்டுப் பின்னுக்கு நகர்ந்தாள். துளசி முன்னால் வந்து குடையைச் சரிசெய்தாள். பிங்கி குனிந்து குழந்தையை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோதே புண்டன் டம்ளரைக் கடகடவெனச் சாய்த்து அவளைப் பால் குடிக்கவைத்துவிட்டான். அவனே நம்ப முடியாதளவு பிங்கிக்குப் பெரிய மீசை வளர்ந்திருந்தது. கண்ணாடியில் பார்க்குமாறு சைகைசெய்தான். பெரிய மீசையைப் பார்த்துக் குதித்த பிங்கி எல்லோருக்கும் காட்ட வெளியே ஓடினாள்.
சற்று நேரத்தில் சமையல் தயாராகத் தொடங்கியது. ‘முடிஞ்சுதா உங்க கூட்டம்?’ என்று இருவரையும் வெளியே அழைத்தார்கள். சாப்பாடு பரிமாறுவதில், தட்டுகளை எடுப்பதில், பாத்திரங்களைக் கழுவுவதில் புண்டன் அதிகமாக ஓடியாடினான். ‘அண்ணனைப் பாரு. எவ்வளவு நல்லாத் தயாராயிருக்கறான்’ என்று எல்லோரும் திரும்பத் திரும்ப துளசியிடம் சொன்னார்கள். துளசியோடு உட்கார்ந்து புண்டன் சாப்பிட்டான். ‘எவ்வளவு கச்சிதமா சாப்பிட்டிருக்கான் பாரு’ என்று துளசிக்குக் காட்டினார்கள். பிற்பகல் தேநீர் தயாரித்துக் கப்புகளில் ஊற்றியபோது மிஸஸ் ராவ் கப்புகளை வெளியே எடுத்துப்போகக் காத்து நின்ற புண்டனிடம் ‘தங்கச்சிக்கு எல்லாத்தையும் சரியாச் சொல்லியிருக்கற-தானே? கொஞ்சம் திட்டிச் சொல்லியிருக்கணும்’ என்று முணுமுணுத்தார். நான்கு மணிக்கு எல்லோரும் புறப்பட்டு நின்றார்கள். ‘இனி நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. பிங்கி உனக்கு விளையாடக் குழந்தை வேணுமா?’ முதலான பேச்சுகள் நடந்துகொண்டிருந்தபோது மிஸஸ் ராவ் ‘துளசீ, நீ சரியா வேலைசெய்யலன்னா உன் அண்ணன் மறுபடியும் உன்னைப் பார்க்க வரமாட்டா-னாம். இல்லியாடா?’ என்றார். அப்போது துளசி கீழே கார்ப்பெட்டில் சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தாள். அவள் பிஞ்சுத் தொடைகளின் மேல் சின்னத் துணி மடிப்பைப் போட்டுக் குழந்தையைப் படுக்கவைத்திருந்தார்கள். ‘ரண்டு கையாலயும் குழந்தையைப் பிடி. உன் கால் சின்னதாயிருக்குது. குழந்தை சாஞ்சிடலாம்’ என்று எஜமானியம்மா எச்சரித்தார். ‘டாடா’ ‘பாய் பாய்’ சொல்லியபடி எல்லோரும் வாசலுக்கு வெளியே வந்தார்கள். பையைப் பிடித்துக்கொண்டிருந்த புண்டன் வெளியே வந்தபோது ஒருமுறை திரும்பி துளசியைப் பார்த்தான். தொடைமேல் படுத்திருந்த குழந்தையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த துளசி இளம் தாயைப் போலத் தெரிந்தாள். எதையோ மறந்தவனைப் போலச் சரக்கென்று உள்ளே போய் அவள் முன்னால் குனிந்து பேன்ட் பாக்கெட்டிலிருந்து பீடாப் பொட்டலத்தை எடுத்து அவள் பக்கத்தில் வைத்துவிட்டு வெட்கத்துடன் ஓடிவந்து மற்றவர்களோடு சேர்ந்துகொண்டான்.
குறிப்புகள்
– புண்டரீகம் என்றால் தாமரை. புண்டரீகன் திருமாலின் ஆயிரம் நாமங்களுள் ஒன்று. புண்டலீகன் இப்பெயரின் மற்றொரு வடிவம். எனவே புண்டன் என்னும் சொல்லால் அருவருப்படைய வேண்டியதில்லை.
– வடகன்னட மாவட்டப் பகுதியில் பெரும்பாலும் செல்வந்தர்களான வீட்டில் கொங்கணி பேசும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
– கங்குபாய் ஹனகல் தார்வாடில் பிறந்து ஹூப்ளியில் வாழ்ந்து 2009ஆம் ஆண்டு மறைந்த மிகப் பிரபலமான ஹிந்துஸ்தானிப் பாடகி. இக்கதையில் பிங்கியை அவள் தந்தை வேடிக்கையாக ‘நங்குபாய் ஹனகல்’ என்றழைக்கிறார்.
– மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கொதடி (godhadi) என்னும் வட்டார வழக்குச் சொல்லுக்கு நிகரான தமிழ் வார்த்தை எனக்குத் தெரியவில்லை. கர்ப்பிணிகள் பழைய துணிகளை அடுக்கி மெத்தை போன்று தைப்பதற்குக் கொதடி என்று பெயர். வீட்டிற்குள்ளேயே பயன்படுத்தப்படுவதால் அழகெல்லாம் தேவையில்லை. பெரிய ஊசியைக் கொண்டு கோணல்மாணலாகத் தைத்தாலும் போதும். நிறைய எண்ணிக்கையில் கொதடி தயாரித்து வைத்துக்கொண்டு பிரசவத்திற்குப் பின் குழந்தையைக் கிடத்தப் பயன்படுத்திக்கொள்வார்கள். இது பண்பாட்டுப் பின்புலமுள்ள சொல்.
– மார்ச், 2013, கன்னட மூலம்: ஜெயந்த் காய்கிணி, தமிழில்: நஞ்சுண்டன்.