பாட்டி மன்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 5, 2025
பார்வையிட்டோர்: 4,086 
 
 

அடையார் அருகே பன்னிரண்டு பிளாக்குகள் ஒவ்வொன்றிலும் பன்னிரண்டு பிளாட்ஸ் கொண்ட ‘சண்ட மாருதம்’ என்னும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடம்.  அந்த அருமையான பெயர் ‘சண்டை மாருதம்’ என்று திருநாமம் சூட்டப்பட்டு நான்கு ஆண்டுகளாயின.  அங்கு எந்த பிளாட்டில் நடக்கும் விவாதங்களும், தீவிர சண்டைகளும், சில சமயம் கைகலப்புகளும் கூட மற்ற 143 பிளாட்டுகளுக்கும் காட்டுத் தீ போல பரவிவிடும். பரப்புவது யார் என்பது மட்டும் புதிராகவே இருந்தது. இந்தப் புதிர் சிக்கலறுக்கப் படும் நேரம் எதிர்பாராத விதமாக அந்த காலனிக்கு வந்தது.

காலனியில் ஆண்டு விழா.  வழக்கம் போல் சிறுவர் விளையாட்டுகள், நாட்டியப் போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப்  போட்டி, கிரிக்கெட் போட்டி,  கேரம் போட்டி – இதிலெல்லாம் ஆர்வம் மிகக்குறைந்துவிடவே, விழாவில் அங்கு குடியிருப்போர் பலர் கலந்து கொள்வதில்லை.  கலந்து கொள்ளாதவர் பலரும் போட்டி முடியும் நேரத்தில் தவறாமல் வந்து ஆஜர் போட்டுவிட்டு, பஜ்ஜி, போண்டா, சமோசா, தோசை, புளிசாதம், தாயிர் சாதம் வெட்டிவிட்டு, சர்க்கரை வியாதி பிரச்னை இருந்தாலும் ஏன் எந்த இனிப்பும் வைக்கவில்லை என கேட்டுவிட்டு, காபியும் தேநீரும் சூடு இல்லை என்று குறை சொல்லிவிட்டு, கொஞ்ச நேர அரட்டைக்குப்பின் தங்கள் கூட்டுக்குள் அடைந்து விடுவார்கள். 

இந்த ஆண்டு புதிதாக என்ன போட்டி வைக்கலாம் என்று குடியிருப்போர் மூளையை கசக்கிக் கொண்டபோது, “ஒரு பாட்டி போட்டி வையுங்களேன்” என்றது 68 வயதான அலமு பாட்டிதான். அலமு பாட்டியின் துணிச்சலும், சாமர்த்தியமும், வாய் ஜாலமும் காலனி முழுக்க தெரிஞ்ச விஷயம். அதனாலேயே அவள் காலனி பாட்டிகள் சங்கத்தின் தலைவியாக இருக்கிறாள்.

கூடியிருந்த குடியிருப்போர் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தபோது, 76 வயதான மூர்த்தி நாற்காலியிலிருந்து விழுந்தேவிட்டார். அவரைத்தூக்கி மீண்டும் இருக்கையில் உட்கார வைக்கும்போது இன்னொருவரும் கீழே சாய்ந்தார்.  இப்படியே போனால், ‘டாமினோ எஃபக்ட்’ – ஒருவர் இன்னொருவர் மேல் சாய்ந்து கடைசியில் எல்லோரும் பூதேவியை நமஸ்கரிக்க வேண்டிவருமே என்று கவலை ஏற்பட்டது.  பெரும் சிரிப்பினால் சிலருக்கு இருமல் வந்துவிடவே, மற்றவர்கள் இடுப்பிலும் சட்டைப்பையிலும் வைத்திருந்த கோவிட் முகமூடியை டக்கென்று எடுத்து சட்டென்று முகத்தில் மாட்டிக் கொண்டனர்.  சிரிப்பும் இருமலும் அடங்க சில நிமிடங்கள் ஆகின.  

பலத்த சிரிப்புக்கிடையே, குழுத் தலைவர், “அலமு பாட்டி…நீங்கள் பாட்டி போட்டின்னு சொல்றது எந்த மாதிரியான போட்டி?” என்று கேட்டார்.

“சித்த சிரிக்காம இருங்கோ… உங்க பல் செட்டு கோரமா இளிக்கிறது.  இந்த காலனியிலே இருக்க 65 வயசுக்கு மேல ஆனா 69 குள்ளே இருக்க பாட்டிகளை போட்டிக்கு கூப்புடுங்கோ…”  68 வயதே ஆன தன்னையே ‘பாட்டி போட்டி’ க்கு தலைவியாக நியமிப்பார்கள் என்ற கணக்கை சரியாகவே போட்டாள்.

கூட்டத்தில் அலமுவுக்கு ஒத்து ஊதும் சுந்தரி பாட்டி “போட்டி என்னன்னு சொல்லுடி, அலமு” என்று உரக்க ஊதினாள்.

“போட்டியிலே பாட்டிகள் மட்டும் கலந்துண்டா ரொம்ப டல்லா இருக்கும்.  ஏற்கெனவே இங்கே பாட்டிகளுக்கு ‘மவுசு’ கொறைஞ்சிண்டு வர்றது.  அப்பறம் நம்மளை யாரும் சீந்தவே மாட்டா… பாட்டிகள் காலேஜ் பெண்களோட போட்டி போடணும்…அப்பதான் சுவரசியமா இருக்கும்.”

பாட்டிகளிலேயே சுமாராக பாடுவதாக தானாகவே நினைத்துக் கொண்டிருந்த கமலா பாட்டி ஆர்வமுடன் கேட்டது, “ஏண்டி அலமு, பாட்டு போட்டியா?” 

“எந்த பாட்டி பாடினாலும் காலனிலே இனிமே யாரும் பாடறது கிடக்கட்டும், பாட்டு கத்துகிறதை கூட உடனே நிறுத்திடுவா”  கமலாவின் நெடுங்கால எதிரி சாவித்ரி ஒரு போடு போட்டாள்.   இந்த செம அடியிலிருந்து மீண்டு கமலா வீட்டுகுள்ளேயே பாடகூட இன்னும் கொஞ்ச காலம் ஆகும். 

இந்தக்கட்டத்தில் கல்லூரி மாணவி தீபா எழுந்தாள்.  “நாம எல்லாருக்கும் காலனியிலே நல்லா தெரிஞ்ச கலை வம்பு பேசறது…இதை வெச்சே ஒரு போட்டி நடத்தலாமே? பாட்டிகள் குழு ஒரு பக்கம்…இவங்க எப்பவும்போல வாய் பேச்சு மூலமா வம்பு செய்தியை பரப்பணும்,  இன்னொரு பக்கம் காலேஜ் பெண்கள் குழு செல் ஃபோன் மூலம் அதே வம்பு செய்தியை பரப்பணும்.  எந்த குழு ரொம்ப சீக்கிரமா நிறைய பேருக்கு வம்பு பரப்பறதோ அதுதான் வின்னர்…எப்படி?”

கூட்டத்தில் சலசலப்பு.  தீபாவின் சூப்பர் ஐடியா பாட்டிகளுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.  இத்தனை ஆண்டுகளாக பயிற்சி செய்தது வீணாகாமல், இப்போது வம்பளப்பதே ஒரு போட்டியாக நடக்கப் போவது நாட்டில் கோடிக்கணக்கான எத்தனையோ பாட்டிகளுக்கு ஆர்வமூட்டும்.  ‘பாட்டி வம்பு’ ஒரு நுண் கலையாகவே வளர வாய்ப்பு ஏற்படலாம். உடனே அலமுவின் கனவு விரிவடைந்தது.  இந்திய நாட்டில் பாட்டி போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தலாம்,  அகில இந்திய பாட்டிகள் பேரவைக்கு அலமுதான் முதல் தலைவி! 

குழுத்தலைவரின் குரல் கேட்டது:  “அலமு பாட்டிதான் பாட்டி மன்ற தலைவி.  தீபா, நீதான் கல்லூரி பெண்கள் மன்ற தலைவி.  ஒவ்வொரு குழுவிலும் ஐந்து பேர் மட்டும்.  காலனி ஆண்டு விழா அடுத்த சனிக்கிழமை நடக்கும்.  போட்டி ஒரு நாள் மட்டுமே.  மூன்று வம்பு செய்திகள் மட்டுமே. காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு வரை.  போட்டி முடிவு ஞாயிற்றுக்கிழமை. பாட்டிகள் குழுவில் பங்குபெறும் பாட்டிகள் யாராவது செல் ஃபோன் வைத்திருந்தால் நாளைக்கு என்கிட்டே குடுக்கணும்.  போட்டி முடிஞ்சதும் திரும்பி வாங்கிக்கலாம். பாட்டிகளே – நீங்க உற்சாகத்துலே ஓடி ஓடி வம்பு பரப்பும்போது கீழே விழுந்து கை, கால உடைச்சிண்டா காலனி பணம் செலவு பண்ணமுடியாது. ஆம்புலன்ஸ் கூட கூப்பட மாட்டோம். ஜாக்கிரதையா இருங்கோ.”

கூட்டம் கலைந்தவுடன், அலமு பாட்டி தீபாவை கூப்பிட்டு பேசினாள்.  “இங்கே பாரு தீபா, பாட்டிகளோடு போட்டி போடற உன் தைரியத்தை பாராட்டறேன். எங்களோட வாய் பேச்சை அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்டே.  இருந்தாலும் குட் லக்” 

தீபா உடனே, “அலமு பாட்டி…உங்க வாய் பேசினா எங்க கை பேசும்” என்று சவால் விட்டாள்.

அலமுவுடன் கூடவே இருந்த சுந்தரி பாட்டிக்கு கோபம் ஏறி அவளுடைய சிமிழ் மூக்கு குங்குமமாக சிவந்து, “என்னடி தீபா பயமுறுத்தி பாக்கறே…கை பேசும் அப்படின்னா அடி தடியான்னா?  சீனியர் சிட்டிசன் மேல கொடூரம்னு கேஸ் போடுவோம்”

தீபா, “அய்யய்யோ, நான் சொன்னது வேறே, நீங்க புரிஞ்சுண்டது வேறே.  நாங்க வேகமா செல் போன்ல கையால செய்தியை தட்டிவிடுவோம்னு சொல்ல வந்தேன்…அவ்வளோதான்.”

பாட்டி போட்டி நாள் வந்தே விட்டது.

பாட்டி மன்ற குழு எப்பவும்போல காலை நாலரை மணிக்கே எழுந்து வம்பு பரப்ப தயாராக இருந்தது. சீக்கிரம் எழுந்திருக்க விருப்பமில்லை என்றாலும், போட்டிக்காக கல்லூரி பெண்கள் மன்றத்தாரும் ஆறு மணிக்குள் எழுந்து, செல் போன்கள் முழு சார்ஜ் ஆகியிருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொண்டார்கள்.  

காலை எட்டரை மணி வரை காலனியில் எந்த வம்பு செய்தியும் கிடைக்கவில்லை.  அப்போது காலனிக்குள் நுழைந்த புத்தம் புதிய கார் யாருடையது என்பது முதல் செய்தியாகியது. வந்த வாகனம் சி பிளாக்கில் இருக்கும் சிதம்பரநாதனுடையது என்ற செய்தி பரவியது. பாட்டி மன்றம் 83 பிளாட்டுகளுக்கு சேதியை பரப்பியது.  கல்லூரி பெண் குழு வாகனத்தை பல கோணங்களில் படம் எடுத்து, விவரம் எழுதி இன்ஸ்டாகிராம், டிக் டோக், ஃபேஸ்புக், என தட்டிவிடவே, 121 பிளாட்டுகளுக்கு போய் சேர்ந்தது. படத்தைப் பார்த்துவிட்டு சிதம்பரநாதன் கூட ‘நாம வாங்கின புது கார் கறுப்புக்கு பதிலா நீல கலரில் இருந்திருக்கலாமோ’ என சந்தேகப் பட்டார். கொஞ்சம் வருத்தமும் கூட.  முதல் சுற்றில் தோற்ற அலமு தன்னுடைய பாட்டி மன்ற உறுப்பினர்களுக்கு பத்து நிமிட ‘பெப் டாக்’ கொடுத்தாள்.

இரண்டாம் செய்தி சரியாக பகல் ஒரு மணிக்கு கிடைத்து.  ஏ பிளாக்கில் சுலோச்சனா மாமி அமெரிக்காவுக்கு போகப் போறாளம்.  சுலோவுக்கு அவள் பிள்ளையிடமிருந்து வாட்ஸாப்பில் சேதி வந்த பதினெட்டு நிமிஷத்தில் செய்தியை வேகமாக 114 பிளாட்டுகளுக்கு அனுப்பிய பாட்டி மன்றம், 97 பிளாட்டுகளுக்கு மட்டுமே அனுப்பிய கல்லூரி பெண் மன்றத்தை மிஞ்சியது.  அலமுவுக்கு சுலோ மீது கொஞ்சம் பொறாமை வந்தாலும் போட்டி இரண்டாம் சுற்றில் வென்றது திருப்தியளித்தது. அடுத்த சுற்று டை- பிரேக்கர்.

கடைசி வம்பு செய்தி வந்த போது மாலை நாலு மணியிருக்கும்.  கே பிளாக்கில் எட்டாம் நம்பர் பிளாட்டில் பலத்த குரலில் சண்டையாம். இதுதான் இன்றைய மிக சுவாரசியமான வம்பு என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை.  விசேஷம் என்னவென்றால், அந்த பிளாட் காரர்கள் கதவை திறந்து வைத்து கொண்டேதான் சண்டையை துவங்குவார்கள், தொடருவார்கள், தற்காலிகமாக ஸீஸ் ஃபயர் செய்வார்கள்.  மகாபாரத யுத்தம் அளவு இல்லையென்றாலும், எவ்வளவு நேரம் சண்டை நீளும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. 

பாட்டிகளுக்கு ரொம்ப பிடித்த வம்பு, ப்ளாட்டுகளில் அடிக்கடி நடக்கும் குடும்ப சண்டைகள் தான். காலனிக்கு ‘சண்டை மாருதம்’ என்று பெயர் வைத்ததே பாட்டிகள் தான் என்பது போட்டி நாளன்று திட்டவட்டமாக தெரியவந்ததில் நீண்டகால புதிர் தீர்ந்தது.  பாட்டி மன்றம் 137 பிளாட்டுகளுக்கு இந்த சண்டையை டமாரம் அடித்துவிட்டது.  கல்லூரி பெண் மன்றத்தில் இரண்டு பெண்களின் செல் போனில் சார்ஜ் போனதாலும், இன்னொருத்தியின் ஃபோன் சாஃப்ட்வேர் அப்டேட் அவலத்தில் சிக்கிக் கொண்டதாலும், நொண்டி குதிரைகள் போல 68 பிளாட்டுக்கு மட்டுமே அவர்கள் செய்தி போனது.  ‘இது ஏற்கெனவே அலமு பாட்டி குரூப் சொல்லியாச்சு’ என்று பதில் வேறு சிலர் அந்தப் பெண்களுக்கு அனுப்பியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் பட்டது.

பாட்டி மன்றத்து வெற்றி அறிவிக்கப்பட்டது.  அலமுவுக்கு அளவில்லா கொண்டாட்டம். கமலா பாட்டிக்கு பாடவேண்டும் போல் இருந்தாலும், சாவித்ரி பாட்டி தன்னையே கழுகுக் கண்களால் கவனிப்பதைப்பார்த்து, பாடும் எண்ணத்தை புதைத்தாள்.  போட்டியின் பரிசாக பாட்டி மன்றத்தில் ஒவ்வொருவருக்கும் திருப்பதி ரவுண்டு ட்ரிப் டிக்கெட் அளிக்கப்பட்ட சமயத்தில் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற கோஷம் கூட்டத்தில் ஒலித்தது.

அலமு மிகவும் பெருந்தன்மையுடன் தீபாவை அணைத்துக் கொண்டாள். “நீ தோல்வியை மனசுல வச்சிக்காதே தீபா,  மனசுல வச்சிக்க வேண்டியது வேறே ஒண்ணு.  பாட்டி மன்றத்துக்கு எந்த சார்ஜரும் தேவையில்லை.  வேகமா வம்பு பேச எங்களுக்கு இயற்கை சக்தியே நிறைய இருக்கு.  அடுத்த வருஷ பாட்டி போட்டியிலே நாம மீண்டும் சந்திக்கலாம்” என்று முடித்தாள்.

சி பிளாக் சிதம்பரநாதன் அலமு பாட்டி மன்ற உறுப்பினர்களை பாராட்டி, தன்னுடைய புதிய கறுப்பு  நிற வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மரீனா பீச் வரை போகக் கிளம்பினார்.  காரில் ஏறியபின் அலமு பாட்டி மெதுவாக ஆரம்பித்தாள்.  

“இந்த புது காரை நீங்க நீல கலரில் வாங்கியிருந்தா இன்னும் நன்னாயிருந்திருக்கும்” என்று அலமு சொன்னவுடன், அதீத எரிச்சலுற்ற சிதம்பரநாதன் ஐந்து பாட்டிகளையும் சட்டென்று வாகனத்திலிருந்து இறக்கி விட்டுவிட்டு தான் மட்டும் மரீனாவுக்கு போனார். அந்த சமயத்தில்தான் அலமுவுக்கு ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற வாக்கியத்துக்கு முழு அர்த்தமும் விளங்கியது.

கே பிளாக்கில் எட்டாம் நம்பர் பிளாட்டில் நாலு மணிக்கு ஆரம்பித்த சண்டை மணி எட்டரை ஆகியும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. விடியும் வரை காத்திருப்போம். 

Washington Sridhar பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *