பாசப்பறவை




கல்யாண மண்டபமே கலவர பூமி ஆகியது., கல்யாணப் பெண் சித்ராவை காணவில்லை?!
காலை 7.30 மணி முதல் 9.00மணிக்குள்ளாக முகூர்த்த நேரம் நிச்சயிக்கப் பட்டிருந்தது.
அதற்கு முன்பாக சில சடங்குகள் செய்யப்பட வேண்டியிருந்ததால், தோழிகளுடன் படுத்திருந்த சித்ராவை எழுப்ப அம்மா அமுதவல்லி சென்றபோதுதான் அவளை காணவில்லை என தெரிய வந்தது.
மண்டபம் முழுவதும் விஷயம் பரவியது. ஆளுக்கு ஆள் அவதூறு பேச ஆரம்பித்தனர். பெண்ணின் அண்ணன் ராஜா ஆவேசமாக நாலாபுறமும் தங்களது ஆட்களை அனுப்பி எப்பிடியாவது சித்ராவை தேடி கண்டுபிடித்து முகூர்த்த நேரம் முடிவதற்குள் கொண்டு வரும்படி கட்டளையிட்டான்.
செய்தி அறிந்து மாப்பிளையின் அப்பாவும், அவர்களது உறவினர்களும் சித்ராவின் அப்பா கனகராஜிடம் கோபமாக கேள்விகள் கேட்டனர்.
உங்க பெண்ணுக்கு ஏற்கனவே காதலன் இருக்கிறான் என்றால் ஏன் மாப்பிளை பார்த்தீர்கள்?
எங்களை அவமானப்படுத்தவா?என கேட்டார் மாப்பிள்ளையின் அப்பா, கோபப்படாதீங்க, சம்பந்தி, என்ன நடந்ததுன்னு தெரியல, பொண்ண தேடி நம்ம ஆட்கள் நாலாபக்கமும் போயிருக்காங்க, எப்பிடியும் கண்டுபிடிச்சி கூட்டி வந்துருவாங்க என்றார் கனகராஜ்.
என்ன கோவப்படாதீங்கன்னு சொல்றீங்க?
கல்யாணத்தன்னி காலையில கல்யாண பெண்ணை காணோம்னா என்ன அர்த்தம்?
இது எவ்வளவு பெரிய அவமானம்?
கல்யாணம் நின்னு போச்சுன்னா, உறவுக்காரங்க மத்தியில எவ்வளவு கேவலம்?
என்னோட பையனோட மனசு எவ்வளவு வருத்தப்படும்?
இனி நம்ம சாதி, சனங்க அசிங்கமா பேச மாட்டாங்களா?என ஆவேசமாக பேசிக்கொண்டே போனார் மாப்பிளையின் தந்தை.
சித்ராவின் அப்பா, அம்மா இருவரும் தலை குனிந்தபடி நின்றனர்.அம்மா அமுதவல்லியின் கண்களில் கண்ணீர் பெருகியது.
கனகராஜ், அமுதவல்லி தம்பதிகளின் குடும்பம் அழகான, அளவான குடும்பம்.மகன் ராஜா சென்ற வருடம்தான் கல்லூரி படிப்பை முடித்தான்.மகள் சித்ரா திண்டுக்கல்
அரசு கல்லுரியில் இரண்டாமாண்டு படித்துகொண்டிருந்தாள். வாடிபட்டியிலிருந்து பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்தாள்.
அவளது அண்ணன் ராஜா படிப்பை முடித்த பிறகும், வேலை ஏதும் தேடாமல் அப்பாவின் தொழிலில் உதவியாக இருந்து வருகிறான்.
கனகராஜ் வாடிப்பட்டி அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்தார்.விவசாயம் மற்றும் சில தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.அவரது ஊரில் மதிக்கப்படும் ஒரு பெரிய மனிதர், அவரது சமூகத்தில் ஒரு முக்கிய புள்ளி. சாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களாலும் மதிக்கப்பட்ட ஒரு நபர் கனகராஜ்.
அவர் தனது மகள் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார்.
திருநெல்வேலி பக்கத்திலிருந்து இவர்களது சமூகத்தை சேர்ந்த இந்த வரன் வந்தது. மாப்பிள்ளை நன்றாக படித்து, சென்னையில் நல்ல வேலையில் இருந்ததாலும், குடும்பம் இவர்களது தகுதிக்கு ஏற்ப,நல்ல குடும்பமாக இருந்ததாலும் திருமண ஏற்பாடுகள் செய்தார்.
சித்ராவுக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை, ஏனென்றால் அவள் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் வினோத் என்ற இளைஞனை காதலித்து வந்தாள்.அவன் வேறு சாதி, காலனி வகுப்பை சார்ந்தவன்.
அப்பா, அம்மா கட்டாயம் இந்த திருமணத்திற்கு ஒப்பு கொள்ளமாட்டார்கள், மேற்கொண்டு விஷயம் தெரிந்தவுடன் வினோத்தை கொலை செய்யக்கூட தயங்க மாட்டார்கள் என பயந்தாள்.
எனவே, படிப்பை காரணம் காட்டி, கொஞ்ச காலம் திருமணத்தை தள்ளி போடலாம் என நினைத்தாள்.
ஆகையால், அப்பாவிடம், தனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்றும், தன்னுடைய கல்லூரி படிப்பு முடிந்தவுடன் பார்த்து கொள்ளலாம் என கூறினாள்.
மாப்பிளை வீட்டார் நீ படிக்க ஆசைப்பட்டால் கல்யாணத்திற்கு பிறகும் உன் படிப்பை தொடரலாம்னு சொல்லியிருக்காங்க,அதுக்கு வசதியா மாப்பிள்ளையை மதுரைக்கு மாறுதல் வாங்க சொல்ரேன்னும் சொன்னாங்க என மகளை சமாதானம் செய்தார் கனகராஜ்.
இருந்தபோதிலும் சித்ராவுக்கு இந்த திருமணத்தை எப்படி நிறுத்துவது என தெரியவில்லை. திருமண தேதி நெருங்க,நெருங்க சித்ராவிடம் ஒருவித பதட்டம் காணப்பட்டது.
அவளின், பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால், இதை கவனிக்க தவறிவிட்டனர்.
சித்ரா அவனது காதலன் வினோத்தின் ஏற்பாட்டின்படி எல்லோரும்நன்கு உறங்கிக்கொண்டு இருந்தபோது, அவனது நண்பர்கள் உதவியுடன், இரவு இரண்டு மணிக்கு மண்டபத்தின் பின்வாசல் வழியாக வெளியேறினாள்.
திருச்சி வரை காரில் சென்று அங்கிருந்து விமானத்தில் மும்பைக்கும் பறந்து விட்டார்கள்.
இது தெரியாமல், இங்கு பெண்ணை திண்டுக்கல்லிலும், மதுரையிலும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
கல்யாண மண்டபம் கொஞ்சம் கொஞ்சமாக களை இழந்து கொண்டிருந்தது, வந்திருந்த உறவினர்கள் அனைவரும் வெளியேற ஆரம்பித்தனர்.
சித்ரா மாற்று சாதியை சேர்ந்த பையனுடன் சென்றுவிட்டாள் என்ற செய்தி கேட்டவுடன் கனகராஜ் அதிர்ச்சி அடைந்து தலையில் கைவைத்தபடி அமர்ந்தார்.
தாய் அமுதவல்லி கதறி அழ ஆரம்பித்தாள்.
கனகராஜ்- ஐ நோக்கி ஆவேசமாக வந்தார் சம்பந்தி, கடைசியா எங்களுக்கு இப்படி ஒரு அவமானத்தை உண்டாக்கிடீங்களே?
நாங்க ஊர்ல போய் என்னத்த சொல்றது?
ஏதோ, தப்பு நடந்து போச்சு, எங்களை மன்னிச்சுடுங்க, என்றார் கைகூப்பியபடி கனகராஜ்.
மன்னிப்பு கேட்டுட்டா பட்ட அவமானம் சரியா போகுமா?
நம்ம ஜாதியில இப்படி ஓரு பெண்ண வளத்து வச்சிருக்கீங்க,
ஒரு பெண்ணை உங்களால ஒழுக்கமா வளக்க முடியல, என மாப்பிள்ளையின் தந்தை ஆவேசமாக பேசிக்கொண்டே போனார்.
அப்போது அங்கு வந்த ராஜா, நாங்களே நொந்து போயிருக்கோம், மேற்கொண்டு எங்களை பேசாதீங்க என்றான்.
நீ பேசாத, இப்படி எங்க பொண்ணு செஞ்சு இருந்தா அவளை தேடி கண்டுபிடிச்சு கொலை பண்ணியிருப்போம், இல்லையினா நாங்க தற்கொலை செஞ்சுகிட்டு செத்துப்போய் இருப்போம்,
இதை கேட்டவுடன் ராஜா அப்பிடி பேசியவரை அடிக்க பாய்ந்தான், அருகில் இருந்த மற்றவர்கள் விலக்கி விட்டனர்.
அவ்வளவு ரோஷமா இருந்தா, நீயும் தற்கொலை பண்ணிக்கோ என இன்னொருவன் கூற மீண்டும் தகராறு ஏற்பட்டது.
மாப்பிளை குடும்பத்தினர் அனைவரும் கோபத்துடன் புறப்பட்டு சென்றனர். போகும்போது மாப்பிள்ளையின் அப்பா, எங்களுக்கு பெரிய அவமானமா போச்சு, நான் உங்க மேல மான நஷ்ட வழக்கு போட போறேன் என்றபடி கிளம்பி போனார்.
வீட்டிற்கு திரும்பிய கனகராஜும் அவர் மனைவி அமுதவல்லியும் மனமுடைந்து சோகத்துடன் இருந்தனர்.
கனகராஜ் அவரது அறையிலேயே முடங்கி கிடந்தார்.ஆசை, ஆசையாக
வளர்த்த மகள் இப்படி செய்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
ராஜா, அப்பாவிடம் சென்று நடந்தது நடந்துபோச்சு, நீங்க மனசு உடைஞ்சுடாதீங்கப்பா, வெளிய வாங்க என்றான்,
எப்படியெல்லாம் வளர்த்தேன், இப்படி தீராத அவமானத்தை உண்டாக்கிட்டாளே என கண்ணீர் விட்டார் கனகராஜ்.
அப்பா, அதையே நினைச்சுகிட்டு இருந்து உங்க உடம்ப கெடுத்துக்கிடாதீங்க,என ராஜா ஆறுதல் கூறினான்.
எவ்வளவோ முயற்சி செய்தும் சித்ராவை பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.
அம்மா அமுதவல்லியும் சித்ராவை நினைத்து அழுதபடியே படுத்து கிடந்தாள்.
மூன்றாம் நாள் இரவில் வயக்காட்டிற்கு சென்று வருகிறேன், என்று சொல்லிவிட்டு புறப்பட்டு போனார் கனகவேல்.
மறுநாள் காலை ஒன்பது மணியான பிறகும் அவர் வரவில்லை என்பதால், கவலை அடைந்த அமுதவல்லி மகன் ராஜாவை கூப்பிட்டு கூறினாள்.
ராஜா உடனே அவசரமாக கிளம்பி வயக்காட்டிற்கு ஓடினான். அங்கு சென்று பார்த்தபோது, மோட்டார் ரூமில் கட்டிலில் சுய நினைவின்றி கிடந்தார்.
ராஜா, “அப்பா “என்று அலறியபடி, அப்பாவை தூக்கினான். உடனடியாக அப்பாவை திண்டுக்கல் கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தான்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் மிகவும் குறைந்துவிட்டதாகவும் கூறி நான்கு நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
மூன்று நாட்களுக்கு பிறகு கனகவேல் கண் திறந்தார்..
அவர் கண் திறந்தவுடன் அமுதவல்லி, ராஜா அனைவரும் சந்தோஷம் அடைந்தனர்.
கனகவல்லி அவரைப்பார்த்து நாங்க எல்லாம் ரொம்ப பயந்து போய்ட்டோமுங்க என்றாள்.
ஆமாம்பா, சித்ரா இப்பிடி பண்ணிகிட்டதால, நீங்க ஏதாவது செஞ்சுக்கிடுவீங்களோனு பயந்துபோயிட்டேன் என்றான் ராஜா.
எல்லோரையும் பார்த்து சிரித்தபடியே
யாரும் பயப்படாதீங்க, நீங்க நினைக்கறபடி நான் அவ்வளவு கோழை இல்லை.
என் மகள் சித்ரா இப்படி செஞ்சது எனக்கு அதிர்ச்சியாவும், அவமானமாவும்தான் இருந்துச்சு.,
என்ன, அவ ஓரு வார்த்தை சொல்லியிருந்தனா, ஊரே எதுத்து இருந்தாலும், நான் அவளுக்கு அவ விருப்பப்படியே திருமணம் செஞ்சுவச்சு இருப்பேன்.ஆனால் அவ தப்பு பண்ணிட்டா,
மாப்பிள்ளை வீட்டார் அப்படி பேசியது அவங்க வேதனையின் வெளிப்பாடே, அவங்க நிலையில் நாம இருந்தாலும்இப்படித்தான் பேசுவோம் என்றார்.
அப்பா, தங்கச்சிய மன்னிச்சிடீங்களா?ராஜா,
ஆமாண்டா, அவ பண்ணினது தப்புனாலும், தெரியாம பண்ணிட்டா,அவ ஓடிப்போனது, கல்யாணம் நின்னுபோனது எல்லாம் வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்.
ஆனா, என்னிக்காவது ஓரு நாள் தான் செஞ்ச தப்பை உணர்வா, அப்போ, இந்த அப்பா, அம்மாவை தேடி ஓடி வருவான்னு நம்புறேன். அதுவரைக்கும் என்னோட அன்பு மகளை எதிர்பார்த்து நான் காத்துகிட்டு இருப்பேன் என்று கூறி முடித்தார் கனகராஜ்.
இதை கேட்டவுடன் அனைவரும் நெகிழ்ந்து போய் கண்களை துடைத்துக்கொண்டனர் அந்த பாசமிகு தந்தையின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறட்டும் !