பழகப் பழகப் பாசம்
(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இது ஒரு மனோதத்துவக் கதை.
எனக்கு அந்த எண்ணம் எழுந்திருக்க வேண்டாம். ஆனால் மனத்தில் தோன்றிய அந்த எண்ணத்திற்கு ஆளாகிவிட்ட பிறகு என்னால் அதை நிறைவேற்றாமல் இருக்க முடியவில்லை.
சொன்னால் யாரும் என்னைப் பைத்தியக்காரன் என்று தான் நினைப்பார்கள். என் மனைவியே அப்படித்தான் நினைத்தாள். இன்றும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
விஷயத்தை உடைத்துச் சொல்லி விடுகிறேனே, கேளுங்கள்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கதை ஆரம்பமாகிறது. திருவிழாவிற்குப் போனவன் சுவாமியை வணங்கி விட்டு, வேடிக்கை பார்த்து விட்டுப் பேசாமல் திரும்பியிருக்கலாம். அப்படிப் பேசாமல் திரும்பியிருந்தால் நான் இப்படி மனவேதனைப் பட்டுக் கொண்டு இருக்க வேண்டி வராது. திருவிழாக் கூட்டத்தில் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளைக் காவலர் மூகாமில் (Police Camp) கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். அந்தப் பிள்ளைகளைப் பற்றி ஒலி பெருக்கியின் மூலம் அடிக்கடி தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும், பிள்ளைகள் எல்லோரையும் அவரவர் பெற்றோர் வந்து அடையாளம் சொல்லி அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். ஆனால், ஒரே ஒரு பையனை மட்டும் யாரும் வந்து அழைத்துக் கொண்டு போகவில்லை. மூன்று நாட்களாக யாருமே அந்தப் பிள்ளையைத் தேடிக் கொண்டு வரவில்லை.
இன்ஸ்பெக்டர் ரங்கனாதன் என் நண்பர். கடவுளாகப் பார்த்துச் சேர்த்து வைத்த நட்புத் தான். ஏன் இப்படிச் சொல்லுகிறே னென்றால், கோயில்களிலும் திருவிழாக்களிலும் அடிக்கடி சந்தித்துச் சந்தித்து எங்கள் நட்பு வளர்ந்தது என்பதற்காகத்தான். அவர்தான் எனக்கு இந்த விவரத்தைச் சொன்னார். அந்தப் பிள்ளையையும் காண்பித்தார்.
அந்தப் பையனுக்கு இரண்டு வயதிருக்கும். அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிற அழகு. கண்டவர்களின் மனக் கவலையைத் தீர்க்கக்கூடிய அந்தச் சுடர் விழிகளில் ஏக்கம் அப்பிக் கொண்டிருந்தது. தாய் தந்தையரைக் காணாததால் ஏற்பட்ட தாபம் போலும்!
“பெற்றோரைக் கண்டு பிடிக்க முடியாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று ரங்கநாதனைக் கேட்டேன்.
“என்ன செய்வோம், அநாதை விடுதியில் சேர்த்து விடுவோம்” என்று அவர் எவ்விதமான உணர்ச்சியுமின்றிப் பதிலளித்தார்.
எனக்கு என்னவோ போலிருந்தது.
அந்தப் பையனை அநாதை என்ற பெயரில் வளரவிடக் கூடாது என்று எனக்குத் தோன்றியது. அந்தச் சிறுவனைப் பார்க்கப் பார்க்க, அவன் அநாதையாக வளரப் பிறந்தவனல்ல என்ற எண்ணம் என் மனத்தின் அடித்தளத்தில் வலுப்பட்டுக் கொண்டே வந்தது. என் ஆவலை அடக்க முடியாமல் நான் வாய்விட்டுக் கேட்டு விட்டேன்.
“இன்ஸ்பெக்டர் சார், நான் இந்தப் பையனை வளர்க்க அனுமதிப்பீர்களா? அதாவது அவனுடைய பெற்றோர் அகப்படாவிட்டால், அல்லது அகப்படுகிற வரையில், நான் என் வீட்டில் வைத்து வளர்க்கலாமா?”
இன்ஸ்பெக்டர் ரங்கனாதன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். ‘இது என்ன பைத்தியக்காரத்தனம்?’ என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை.
என்னைப் போன்ற நிலையில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட ஆசைகளைக் கொண்டால் அது பலவிதமான எண்ணங்களை உண்டாக்கச் செய்யும் என்பதில் ஐயமென்ன? யாராவது பிள்ளையில்லாத பெரியவர்கள் இப்படி ஆசைப்பட்டால் அர்த்தமுண்டு.
நான் ஓர் இளைஞன். எனக்கு மணமாகி மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது. ஒன்றரை வயதுக் குழந்தையொன்று வீட்டில் நடை பழகிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து இன்னும் எத்தனையோ பிறக்கப்போகின்றன இப்படிப் பட்ட நிலையில் உள்ள நான் ஓர் அநாதைக் குழந்தையை எடுத்து வளர்க்க ஆசைப்பட்டது குழப்பத்தைத்தானே உண்டாக்கும்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததில் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் எனக்கு அந்தக் குழந்தையின் மேல் உண்டாகிவிட்ட அசைக்க முடியாத ஈடுபாட்டைக் கண்டு என் வேண்டுகோளுக்கு ஒப்புக் கொண்டார்.
சில பாரங்களில் கையெழுத்திட்டுவிட்டு நான் அந்தப் பையனை என் வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு சென்றேன்.
பிள்ளையை இறக்கி விட்டு நான் விஷயத்தைச் சொன்னபோது, “இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என்று தான் என் மனைவி கேட்டாள். “நமக்கென்ன பிள்ளை குட்டி இல்லையா?” என்று அடுத்த கேள்வியையும் அவள் கேட்டாள்.
“பிள்ளை குட்டியில்லாதவர்கள் தான் இன்னொரு பிள்ளையை எடுத்து வளர்க்க வேண்டுமா?” என்று நான் கேட்டபோது அவள் எனக்குப் பைத்தியம் முற்றி விட்டதென்றே நினைத்திருக்கிறாள்.
நாட்டில் உள்ள அநாதைகளின் எண்ணிக்கை பற்றியும், அநாதைகள் அதிகமாகிக் கொண்டு போவதால் நாட்டில் ஏற்படும் தொல்லைகள், சிக்கல்கள் பற்றியும் ஒரு பொருளாதார அரசியல் சொற்பொழிவு செய்து, அநாதைகளை எடுத்து வளர்ப்பவர்களுக்கு, மோட்ச சாம்ராஜ் யத்தில் கிடைக்கும் பலாபலன்களையும், அடுத்த பிறப்பில் உண்டாகும் புண்ணியப் பேறுகளையும் விளக்கி ஓர் இதோபதேசமும் செய்து முடித்த பிறகு, என் மனைவி எனக்கு இட்ட கட்டளை, “உடனே அந்தப் பிள்ளையைத் திருப்பிக்கொண்டு போய் போலீசில் ஒப்படைத்து விட்டு வாருங்கள்!” என்பதுதான்.
இவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் மனம் கரையாதது கண்டு எனக்குக் கோபம் வந்து விட்டது. “நீ வளர்க்காவிட்டால் போ. நானே இந்தப் பிள்ளையை வளர்த்துக் கொள்கிறேன்!” என்று சொல்லி விட்டேன்.
அன்று ஏற்பட்ட சண்டையில் இரவு நானும பட்டினி; அவளும் பட்டினி. அந்தப் பிள்ளை பசித்து அழுதபோது தூக்கிக்கொண்டு ஓட்டலுக்குப் புறப்பட்டேன்.
என்ன நினைத்தாளோ. அவள் ஓடி வந்து வழியை மறித்தாள். பிள்ளையை என்னிடமிருந்து வெடுக்கென்று தூக்கிக்கொண்டு அடுக்களைப் பக்கம் போனாள். அவள் என்ன செய்தாளோ, எதைக் கொடுத்தாளோ, அப் பொழுதே அந்தப் பிள்ளையின் அழுகை நின்றது.
அதன் பிறகு அவள் என்னிடம் “பிள்ளையைத் திருப்பிக் கொண்டு போய் ஒப்படைத்து விடுங்கள்” என்று சொல்லவே யில்லை. யாரும் அந்தப் பிள்ளையைத் தேடிக் கொண்டு போலீசுக்கு வரவுமில்லை. அது எங்கள் வீட்டிலேயே வளர்ந்து வந்தது. என் மனைவியின் பொறுப்பில் தான் என்று நான் சொல்ல வேண்டுமா என்ன?
ஆரம்பத்தில் ஊரில் உள்ளவர்கள், என் நண்பர்கள் சிலர் வந்து, “உனக்கேனடா இந்தத் தொல்லை!” என்று கேட்டு விட்டுப் போனார்கள். பின்னால் காலப் போக்கில் அவர்களுடைய உபதேசத் தொல்லைகள் குறைந்து விட்டன.
என் கட்டாயத்துக்காகத்தான் என் மனைவி அந்தப் பிள்ளையை வளர்த்து வந்தாள். அந்தப் பிள்ளையின் துரதிர்ஷ்டமோ என்னவோ எங்களுக்கு அடுத்தடுத்துப் பிறந்த இரண்டு குழந்தைகளும் ஆண்களாகவே இருந்தன.
மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் மூத்த ஆண் பிள்ளையாக அவன் வளர்ந்து வந்தான். அந்தப் பிள்ளை பெண்ணாக இருந்திருந்தால் ஓரளவு என் மனைவியின் அபிமானத்தைப் பெற்றிருக்குமோ என்னவோ!
அன்பு இல்லாவிட்டாலும், அவள் அந்தப் பிள்ளையை ஒழுங்காகத்தான் வளர்த்து வந்தாள். சிற்சில சமயங்களில் என் காதில் விழும்படியாக குலம் கோத்திரம் தெரியாத அந்தப் பிள்ளையை வளர்க்க நேரிட்டதற்காக வருந்தித் தனக்குள்ளே பேசிக் கொள்வாள், அப்போதெல்லாம் நான் அவளைத் தனியே அழைத்து, “நம் குழந்தையாக அவனை நாம் ஏற்றுக் கொண்ட போதே அவன் நம் குலத்தைச் சேர்ந்தவனாகி விட்டான். அவனை வேறு குலமாக இனி நினைக்கவும் நினைக்காதே. நம்முடைய பிள்ளைகளோடு பிள்ளையாக – ஒரே மாதிரியாக வளர்ப்பதானால் அவன் இங்கே யிருக்கட்டும். இல்லாவிட்டால் அவனை அநாதை விடுதியிலே கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன்!” என்று சொல்வேன்.
பிள்ளையை வீட்டுக்குக் கொண்டு வந்தபோது போலீசில் திருப்பி ஒப்படைக்கச் சொன்ன என் மனைவி பின்னால் சில சமயங்களில் நான் இவ்வாறு சொன்ன போது அவனை அநாதை விடுதியிலே கொண்டு போய் விட இசையவில்லை.
பிள்ளையிடம் அன்பில்லா விட்டாலும், என் மனம் மாறுபடுமே என்று பயப்படுகிறாள் – அதனால் தான் அவனை அக்கரையாக வளர்த்து வருகிறாள் என்று நான் எண்ணிக் கொண்டேன்.
ஆனால், இந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பது இப்போதல்லவா தெரிகிறது!
இப்போது நினைத்துப் பார்த்தால் தான், என் மனைவி அந்தப் பிள்ளையிடம் எவ்வளவு வேற்றுமையாக நடந்து வந்திருக்கிறாள் என்று தெரிகிறது. பல பழைய நிகழ்ச்சிகள் என் மனக்கண் முன்னே தோன்றுகின்றன. அப்போதெல்லாம் அவை பெரிதாகப் படவில்லை. இப்போது அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மா பாதகமாக அவள் எனக்கெதிராகத் திட்டமிட்டுச் செய்த சதியாக வல்லவா தோன்றுகின்றன. நினைத்துப் பார்க்க நினைத்துப் வார்க்க என் நெஞ்சில் ஆத்திரம் கிளர்ந்தெழுந்தது.
கோபுவுக்கு – கோபாலன் – என்று தான் அந்தப் பிள்ளைக்குப் பெயர் இட்டிருந்தேன் – ஐந்து வயதாகும்போது நடந்த அந்த நிகழ்ச்சி இப்போது எனக்கு நினைவு வருகிறது.
திடீரென்று ஒரு தேசத் தலைவர் இறந்து விட்டதன் காரணமாக அன்று காரியாலயத்தை அரை நாள் வேலையோடு மூடி விட்டார்கள். தினம் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வருகிறநான், அன்று பகல் இரண்டு மணிக்கே வந்து விட்டேன். வீட்டில் நான் கண்ட காட்சி அப்போது என் மனத்தை உலுக்கிவிடவில்லை என்றாலும், இன்று நினைத்துப் பார்க்கும் போது எரிச்சல் தருவதாகத் தான் இருக்கிறது.
வெயில் நேரம். என் பிள்ளைகள் மூவரும் மனைவியும் கூடத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
கோபு அங்கே யில்லை. சிறிது நேரம் சென்று நான் கொல்லைப்புறம் சென்ற போது, அங்கே அவன் தன் சிட்டுக் கைகளால் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தான்.
“கோபு. நீ ஏன்டா இந்த வேலையெல்லாம் செய்கிறாய்?” என்று அவன் கைகளைக் கழுவி விட்டு உள்ளே அழைத்துக் கொண்டு வந்தேன். என் மனைவியை எழுப்பி அவனை வேலை வாங்கியதற்காகக் கோபித்துக் கொண்டேன். அவள், தான் அவனைப் பாத்திரம் துலக்கச் சொல்லவில்லையென்றும், அவனாகப் போய்த் துலக்கியிருக்கிறான் என்றும் சொல்லித் தப்பித்துக் கொண்டாள்.
நான் அப்போது இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. என் மனைவியோ, நான் இல்லாத சமயங்களில் அந்தப் பிள்ளையைப் பலவாறு வேலை வாங்கி வந்திருக்கிறாள்.
கடைசிப் பையனைத் தவிர மற்ற இரண்டு பேரையும் கோபுவையும் பள்ளியில் சேர்த்து விட்டிருந்த சமயம், மற்றொரு முறை நான் அவளுடைய பேதச்செயலை காண நேர்ந்தது. ஒரு நாள் ஆபீஸ் வேலையாகத் தெருவில் போய்க் கொண்டிருந்த போது கொதிக்கும் வெயிலில் கோபு இரண்டு டிபன் காரியர்களைத் தூக்கிக்கொண்டு எதிரில் வந்து கொண்டிருந்தான்.
“என்னடா இது?” என்றேன்
“தம்பிகளுக்குச் சாப்பாடு கொண்டு போகிறேன்” என்றான்.
மேலும் அவனைக் கிண்டிக் கிளறி விசாரித்ததில் வாடிக்கையாக அவன் தான் மத்தியானம் சோறு எடுத்துப் போவதென்று தெரிந்தது.
அன்றைக்கே நான் பிள்ளைகளுக்குச் சாப்பாடு எடுக்க ஓர் ஆயாவை ஏற்பாடு செய்து விட்டேன். என் மனைவியையும், அவனை வேற்றுமையாக நடத்தியது குறித்துக் கடுமையாகம் பேசிக் கண்டித்தேன்.
அவள் எதற்கும் அஞ்சவில்லை. என் எதிரில் எதுவும் நடக்காதது போலவேயிருந்தது. ஆனால் என் கண்ணுக்குப் பின்னால் – நான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு – அவள் தன்னிச்சைப் படியே நடந்து கொண்டிருக்கிறாள். கோபுவை ஒரு வேலைக்காரனைப் போலவே – சம்பளமில்லாமல் கிடைத்த ஒரு வேலைக்காரனைப் போலவே – நடத்தியிருக்கிறாள். இத்தனைக்கும் அந்தப் பிள்ளை என்னிடம் ஒரு வார்த்தை வந்து சொன்னதில்லை.
என் திட்டமென்ன, நினைப்பென்ன, இப்போது நடப்பதென்ன என்று அடிக்கடி சிந்தித்தேன். அவன் அனாதையாக வளரவேண்டுமென்றே விதியிருக்கும் போது நம்மால் அதை மாற்ற முடியுமா என்று சில சமயம் என் மனத்தைச் சமாதானப் படுத்திக் கொள்ள முயன்றேன். ஆனால் மனம் கேட்கவில்லை.
ஓய்விலிருக்கும் போதெல்லாம் கோபுவைப் பற்றிய சிந்தனை என் மன வரங்கில் வந்தாடியது. சிந்தனை சுழலச் சுழல என் மனைவியின் மீது எனக்கு வெறுப்பு வளரத் தொடங்கியது. கணவன் மனமறிந்து வாழாத மனைவியுடன் எப்படி வாழ்வது? இவளை விட்டுவிட்டுக் கோபுவை அழைத்துக் கொண்டு வேறோர் ஊருக்குப் போய் விடலாமா என்று கூடத் தோன்றும். ஆனால், மற்ற பிள்ளைகள்?
என் மனைவி என் திட்டத்தையே குலைத்துவிட்டாள். என் பிள்ளைகளும் கோபுவைத் தம்முடன் பிறந்தவனாகவே எண்ணும்படி – சிறிது வேற்றுமை கூட இல்லாமல் வளர்க்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் இப்போது? அவன் அனாதைப் பிள்ளையென்று எல்லோரும் நன்கு உணர்ந்தே அவனுடன் பழகுகிறார்கள். பருவ இயல்புக்கேற்ப அவனுடன் ஒன்றாக உறவாடிப் பழகினாலும், அவன் தங்கள் அண்ணனல்ல என்று தெரிந்தே பழகுகிறார்கள். அவர்கள் மீது குற்றமில்லை.
என் மனைவி மீதுள்ள கோபத்திற்காக அவர்களை விட்டுப் பிரிந்து வாழ்வதும் சரியல்ல.
எப்படியோ என் இலட்சியம் உருக்குலைந்து விட்டது. போது என்ன செய்வது?
கோபாலன் தான் ஓர் அனாதை என்று தெரிந்துகொண்டு விட்டான். அவன் மீது நான் கொண்டுள்ள அன்பையும் தெரிந்து வைத்திருக்கிறான். இப்போது அவன் ஒரு விவரம் அறிந்த பிள்ளை. இனி தான் அனாதையல்ல என்ற உணர்ச்சியை அவன் மனத்தில் உருவாக்க முடியாது. இருந்தாலும் அவனை நல்ல நிலையில் வைக்க வேண்டும்.
ஒரு தாயின் அல்லது பெண்ணின் கண்காணிப்பில் வளர வேண்டிய பருவத்தை அவன் கடந்துவிட்டான். இனி அவன் என் வீட்டில் இருக்க தான் வேண்டும் என்பதில்லை. பேசாமல் ஒரு விடுதியுள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு வந்துவிட வேண்டும். அதுதான் சரியான வழி. இனிமேல் இந்தப் பாதகியின் கொடுமையிலிருந்தாவது அவனுக்கு விடுதலை கிடைக்கட்டும்.
இந்த முடிவுக்கு நான் வந்து வெகு நாட்களாகி விட்டன. ஜூன் மாதம் பிறந்து பள்ளிக் கூடங்கள் திறக்கட்டும் என்று காத்திருந்தேன்.
கோபு எட்டாவது வகுப்பு எழுதிப் பாசாகி விட்டான். ஜூன் பிறக்க இன்னும் ஐந்தாறு நாட்கள் தானிருக்கின்றன. ஜூன் ஐந்து ஆறு தேதிகளில் பள்ளிக் கூடங்கள் திறப்பார்கள். சென்னையில் கொண்டு போய் ஏதாவது பள்ளியில் சேர்த்துவிட வேண்டியது தான்.
முதலில் என் மனைவி சாமானியமாக ஒத்துக்கொள்ளவில்லை. இங்கே நன்றாகத்தானே படிக்கிறான் என்றாள். பிள்ளைகளோடு பிள்ளையாய் இருக்கட்டுமே என்றாள் – நான் அவள் சொல்லுவதற் கெல்லாம் இணங்கக் கூடியவனாக இல்லை என்று தெரிந்த பிறகு தான் ‘எப்படியோ செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சும்மா யிருந்தாள்.
சென்னைப் பட்டணம் -என் கனவுகளுக்கு ஏற்ற இடம். கோபுவை ஏதாவது ஆஸ்டலில் சேர்த்துவிட வேண்டியது அங்கு தங்கிக் கொண்டு அவன் பள்ளியில் படிக்க வேண்டும். நண்பர்களோடு ஜாலியாகப் பழக வேண்டும். கட்டுப்பாடெதுவும் இல்லாதவனாய் அனாதையென்ற உணர்ச்சி சிறிதுமின்றி வாழப் பழக வேண்டும். இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டு சென்றேன்.
ஆனால், சிறந்த பள்ளிக்கூடம் என்று பலர் கூறக்கேட்டு நான் சென்ற பள்ளிக்கூடத்தில் ஆஸ்டல் விதிகளைக் கேட்டபோது எனக்கு கோபுவை அங்குச் சேர்த்துவிட மனமே வரவில்லை. எத்தனைக் கட்டுப்பாடுகள்! பிள்ளைகள் சினிமாவுக்குக் கூடப் போகக்கூடாதாம்!
பள்ளிக்கூடத்தை யடுத்திருந்த ஒரு ஓட்டல் அறையை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தேன்.
நாட்கள் பறந்தன.
இப்போது கோபு பிரியூனியர்சிடி எழுதிவிட்டு விடுமுறைக்கு வந்திருந்தான். அடுத்த ஆண்டு பீ.ஏ. படிக்க வைக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். பீ.ஏ. படித்த பின் ஒரு வேலையில் உட்கார்த்தி வைத்துவிட்டால் போதும் ஓரளவு அவனுக்கு என் கடமையைச் செய்துவிட்ட தாக முடியும். ஒரு தந்தை தன் மகனைத் தானாக வாழக்கூடிய நிலைக்கு வளர்த்து விட்டால் போதாதா என்ன?
கோபு பிரியுனிவர்சிட்டி பாசாகி விட்டான். சென்னையில் போய்க் கல்லூரியில் மேல் வகுப்பில் சேர்ந்து கொள்வதாகப் புறப்பட்டுச் சென்றான்! பீ.ஏ.யில் சேர்ந்து படிக்கும்படி தான் நான் சொல்லியனுப்பினேன். பி ஈ. வகுப்பில் சேர்ந்திருப்பதாகவும், மிகவும் சிரமப் பட்டு இடங் கிடைத்ததாகவும் கோபு எழுதியிருந்தான். எஞ்ஜினீயரிங் படிப்பென்றால் எவ்வளவு செலவாகும்! என்னால் ஈடுகட்ட முடியுமா? இன்னும் படிக்க வேண்டிய பிள்ளைகள் மூன்று பேர் இருக்கிறார்களே! இவன் வீட்டு நிலைமையறியாமல் நடந்து கொள்கிறானே என்று நான் வருந்தினேன்.
என்னுடைய பொருளாதார நிலையை விளக்கி எழுதி எஞ்சினீயரிங் படிக்கவைக்க வீட்டில் வசதியில்லை யாகையால், அதை விட்டுவிட்டு சாதாரண பீ.ஏ. வகுப்பில் சேர்ந்து கொள்ளும்படி எழுதினேன். இடமில்லாமல் காத்துக் கொண்டிருக்கும் வசதியுள்ள பையன் யாருக்காவது அவனுடைய இடம் பயன் படட்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
அன்புள்ள அப்பா,
தங்கள் கடிதம் கிடைத்தது. வசதியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வசதியில்லாதவர்களாகவும் திறமையுள்ளவர்களாகவும் இருக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கும் ஸ்காலர்ஷிப் உதவிப் பணத்திலேயே நான் படிப்புத் தொடங்குகின்றேன். ஸ்காலர்ஷிப் பெறுவதற்காகத் தான் மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்தேன். கிடைத்த விட்டது. முயற்சி பயனளித்தது. நான் படித்து முன்னேற ஆசீர்வதியுங்கள்.
கோபாலன்.
ஸ்காலர்ஷிப் வாங்கிப் படிக்கிறானாம்! அனாதைப் புத்தி போகவில்லை என்று ஒரு நினைப்பு எனக்குள்ளேயே எழுந்தது. அந்த நினைப்பைக் கடிந்து அடக்கிக் கொண்டேன்.
கோபு ஆண்டு தோறும் மேல் வகுப்புக்குப் போய்க் கொண்டிருந்தான். என் பிள்ளைகளும் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
என் மனைவி இடையே ஒரு நாள் திருமணப் பேச்சை எடுத்தாள். கோபு படிப்பு முடிந்து முதலில் அவனுக்குத் திருமணம் நடந்த பிறகுதான் மற்ற பிள்ளைகளைப் பற்றிப் பேச்சு எடுக்கலாம் என்று சொல்லிவிட்டேன். என் கண்டிப்பான பேச்சைக் கேட்ட பிறகு அவள் மீண்டும் அதுபற்றிப் பேசவே பயப்பட்டாள்.
கோபு அத்த வருடம் எஞ்ஜினீயரிங் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தான். அடுத்த வருடம் வேலையில் சேர்ந்து விடுவான்.
இந்த நிலையில் ஒருநாள் என் மனைவிக்கு உடம்புக்கு வந்து விட்டது. படுத்தவள் எழுந்திருக்கவேயில்லை. நாளுக்கு நாள் உடல் இளைத்து வந்தது. மருந்துகளும் ஊசிகளும் எவ்விதமான பயனும் தரவில்லை.
ஒரு நாள் டாக்டருடன் நான் அவள் உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். டாக்டர் புறப்பட்டபோது நானும் அவரைப் பின் தொடர்ந்தேன். “கொஞ்சம் இருங்களேன்” என்று அவள் கூப்பிட்டாள். அவளருகில் போய் நாற்காலியில் அமர்ந்தேன், “கோபுவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது” என்று சொன்னாள்.
“பரீட்சை சமயம், இப்போது வேண்டாம்” என்று நான் கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். அவள் மறுத்துப் பேசவில்லை.
நான்கு நாட்கழித்து மாலையில் நான் ஆபீசிலிருந்து திரும்பி வந்தேன். அன்று காலையில் அவளுடம்பு மிகவும் பலவினமாயிருந்தது. எப்படியிருக்கிறாள் என்று பார்ப்பதற்காக நேரே அவள் அறைக்குச் சென்றேன்.
அங்கே நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது.
கோபு அங்கே யிருந்தான். சும்மா யிருக்கவில்லை. அவள் காலை அமுக்கிக் கொண்டிருந்தான்.
“ஏண்டா கோபு, பரீட்சை சமயத்தில் இங்கே ஏன் வந்தாய்?” என்று கண்டிப்பான குரலில் கேட்டேன்.
“அப்பா, பரீட்சை அடுத்த ஆண்டு எழுதிக் கொள்ளலாம். அம்மா உடம்பைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் திரும்பக் கிடைக்குமா? ஏனப்பா எனக்குக் கடிதமே எழுதவில்லை. கோடி வீட்டுக் குப்பண்ணா என்னை வீதியில் கண்டு சொன்னவுடன் இரயிலேறி வந்து விட்டேன். தம்பிகள் கூட ஒருவரும் எழுதிப் போடவில்லையே!” என்றான் கோபு.
கோபு அவளைத் தன் அம்மா என்று நினைக்கிறானா? அவளிடம் அவ்வளவு பாசம் கொண்டிருக்கிறானா? இது உண்மை தானா? என்னால் நம்பமுடியவில்லை.
கோபு வந்த நான்கைந்து நாட்களில் அவள் உடம்பு தேறி விட்டது. சோறு சாப்பிடத் தொடங்கிவிட்டாள்.
டாக்டர் சொன்னார்:
“நோயாளிகளின் மனப் போக்கு விசித்திரமானது. மனத்திற்குப் பிடித்தவர்கள் அருகில் இருந்தால் நோய் பறந்து விடுகிறது”.
கோபு அவள் மனத்துக்கு பிடித்தவனா? என்னால் நம்ப முடியவில்லை. தனக்குப் பிறந்த பிள்ளைகளை வைத்துவிட்டு, அவனை வேலை வாங்கினாளே தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து அவனை வேலை பார்க்க வைத்தாளே – அவளுக்குக் கோபுவின் மேல் அன்பா?
சிந்தனையோடு வந்து சோபாவில் சாய்ந்தேன். வாரப் பத்திரிகையொன்று அருகில் இருந்த மேசையின் மேல் கிடந்தது. ஏதோ ஒரு பக்கத்தை எடுத்துப் படித்தேன். அதில் யாரோ ஒரு மேனாட்டறிஞரின் பொன்மொழி என்னைக் கவர்ந்தது. “முதல் பார்வையில் வெறுப்புக்காளானவர்களும் பழகப்பழக விருப்புக்குள்ளாவார்கள்”.
உண்மையில் மனப்போக்கு என்பது விசித்திரமானதே!
– இளந்தமிழன், அக்டோபர் 1972.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 183