கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2024
பார்வையிட்டோர்: 4,126 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மகாபாரத ஐயர் காபி விஷயத்தில் மகா ரஸிகனாக இருந்தார். இது காரணமாகவே நான் அவரோடு சினேகம் ஆனேன். 

இலக்கியம் போலவே காபியும் ஒரு தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது எனக்கு. தஞ்சாவூரில் பிரகாஷ் என்கிற என் அன்புக்குரிய நண்பரும் காபி விஷயத்தில் ஐயரைப் போலவே மகா ஞானியுமாய் விளங்கியவருமான ஒரு ஜீவனால் இது எனக்குக் கற்பிக்கப்பட்டது. தஞ்சாவூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற சாலிய மங்கலத்துக்குப் போய், கூரை வேய்ந்த ஒரு காபி கிளப்பில் மணிக்கணக்கில் உட்கார்ந்து அரைமணிக்கு ஒரு காபியை விழுங்கி, இலக்கியம் பேசி- இப்படியாக ஒரு காபிமானியாக நான் ஆன கதை. இதில் சுவராஸ்யம் என்ன வென்றால் பிரகாஷ் சுத்தமாகக் காபியை விட்டபோது என்னால் விட முடியாமல் போய்விட்டது. 

நல்ல காபிக்காக நான் அலைந்தேன். சுத்தமான பொன் வறுவலில் அரைக்கப்பட்ட சிக்கரி கலவாத காபி. தொண்டையில் இறங்கும்போதே கசந்து கொண்டு ஒரு விதமான கிறக்கம் ஏற்படுத்துகிற காபி. சர்க்கரையும், பாலும் மட்டாக டபிள் ஸ்டிராங்கான மணம் பரப்பும் காபி. 

எங்கள் ஊரில் கழுநீர், விளக்கெண்ணெய் இத்யாதிகள் எல்லாம் காபி என்கிற பெயரில் ஓட்டலுக்கு வந்தன. நான் போகாத ஓட்டலில்லை. சாப்பிடாத காபி இல்லை. காபி தான் இல்லை. ஒரு விபத்து மாதிரி ஐயர் ஓட்டலைக் கண்டேன். 

அன்றுதான் ஐயர் ‘லட்சுமி விலாசத்தை’த் தொடங்கினார். நான் போகும்போது ஐயர் தேங்காயைச் சுற்றி உடைத்தார். சந்தனம் கொடுத்தார். அடுத்தபடியாகக் காபியும் கொடுத்தார். அதுதான் காபி. கன்னங்கரிய நுரை பொங்கும், நுரை மதர்த்த காபி. என்ன மணம், என்ன காரம், எம்.டி. ராமனாதனின் ‘பேஸ்’ போல சிலிர்க்க வைக்கிற களை. 

என்னை அவரும், அவரை நானும் இனம் கண்டு கொண்டது இப்படித்தான். ஐயரும் தஞ்சாவூர் பக்கத்தவர்தான். ஒண்டிக்கட்டை. இப்படி, காலவெள்ளம் இவரை இங்கு அடித்துக் கொண்டு வந்து போட்டு வைத்திருக்கிறது. ஆள் ஒத்தை நாடிதான். மைதானத்தில் புல் முளைத்தாற் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக மழிக்காத முகம். எந்நேரமும் வெற்றிலை போட்டுச் சிவந்த வாய். இதழ்க் கடையில் வெற்றிலைச் சாறோடு, எல்லாம் கடந்தவனின் தன்னிறை வும் ஒழுகிக்கொண்டு நிற்கும். ஐயர் ஓர் ஓட்டல் வியாபாரி மட்டும் இல்லை. 

லட்சுமி விலாஸம் பரபரப்பான நகரத்தின் கடைத் தெருவை ஒட்டி இருந்தாலும் ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்தைப் போல அமைதியை யும் காத்துக்கொண்டது. எச்சில் பிளேட்டுகள், டபரா செட்டுக்கள் இரைச்சல் இங்கு கிடையாது. சினிமா டப்பா சங்கீதம் இங்குக் கிடையாது. ஊர் வம்பு, பத்திரிகைகள், ஜனக்கூட்டம் இவை போல்வன எதுவும் இங்கு இல்லை. பக்கத்து டெலிபோன் எக்ஸ்சேன்ஞ் ஊழியர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்கள், என்னைப் போன்ற சில உதிரிகள் இப்படியாகத் தெரிந்தெடுத்தாற்போல சில பேரே லட்சுமி விலாஸத்தின் போஷகர்கள். ஐயருக்கு இது போதும், போதும் என்கிற மனம். விலாஸம் எப்பவும் அமைதியாக இருக்கும். மூலையில் தெருவைப் பார்த்து ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து கொள்ளலாம் – கடைத் முதுகை சுவரில் சாய்த்துக் கொண்டால் போச்சு தெரு எப்பவும் சுறுசுறுப்பாக இருக்கும் மனிதர்கள் எப்பவும் எதற்காகவாவது நடந்துகொண்டே இருப்பார்கள்… நடப்பார்கள்… நடப்பார்கள்…அப்படி நடப்பார்கள்! இவர்களுக்கு ஏதேனும் ஒன்று கடைத்தெருவில் வாங்கியாக வேண்டும். 

நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்தில் இருந்து சேட்டுக் கடை தெரியும். நகரத்தின் மிகப்பெரும் ஜவுளிக் கடை அது. அதன் புறத்தே கண்ணாடி அறையில் ஒருத்தி இமையாது, கண் துஞ்சாது 24 மணி நேரமும் நிற்பாள். கடை திறந்ததும் முதல் வேளையாக ஒருவன் அவளுக்கு ரவிக்கையும், புடவையும் அணிவிப்பான், எப்போ குளிப்பாட்டுவான் என்பது தெரியாது. தினம் தினம் ஒரு புதுச் சேலை. இதைக் கட்டி முடிக்க அவனுக்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். இதற்கெனவே பிறந்து வந்தவனாக அவன் எனக்குத் தோன்றுவான். கட்டுவதை எப்போது அவிழ்ப்பான்? எனக்குத் தெரியவில்லை. 

ஐயர் மேசைக்குப் பின் உட்கார்ந்து இருந்தார். மேசை கச்சிதமானது. கைபட்டு, கைபட்டு ஒளி ஏறியது. மேசையில் ஒரு வரவு செலவுப் புஸ்தகம் ரொம்பப் பழசு என்பது அதன் மேனியைப் பார்த்தாலே புரியும். ஒடித்தால் ஒடியும், ஐயருக்கு அது ஆயுட்கால சினேகிதன். துக்கமானாலும். ஸந்தோஷமானாலும் ஐயர் இதற்குள் நுழைவார். இது அவர் எனக்குச் சொன்னது. ஒவ்வொரு பேச்சிலும், பாரதக் கதை வாசனை வீசப் பேசுவார். நாங்கள் அவருக்கு மகாபாரத ஐயர் என்று இதற்காகவே நாமம் வைத்தோம். 

அன்று நான் விலாசத்துக்குள் நுழைகிறபோது ஐயர் மாத்திரம் இருந்தார். எனக்கு என்று, எழுந்து போய், அருமையான காபி போட்டுக்கொண்டு வந்து வைத்தார். நான் தெருவைப் பார்த்தேன். நிலைச் சுவரில் ஒரு கண்ணை மறைத்துக்கொண்டு ஒரு கண்ணால் நீரா என்னைப் பார்த்தாள். ஐயர் ஓட்டல் பரிச்சயப்பட்ட அன்று தான் எனக்கு நீராவும் பரிச்சயமானாள். நீரா மிஞ்சிப் போனால் அஞ்சு வயசுக் குழந்தை. ஐய்யர் ஓட்டல் வாடிக்கையாளர்கள் போடும் சில பைசாக்களை வாங்கி ஜீவனம் பண்ணும் பிச்சைக் குழந்தை அவள். 

குழந்தை மிக அழகி. பஸ்ஸுக்கு ஓடுகிறவனையும் நின்று பார்க்கச் செய்யும் கண்கள் அவளுக்கு. மாநிறத்துக்காரி அவள் வெள்ளைச் சிரிப்பு… மனசுக்கு ரொம்பத் தொந்தரவு அளிக்கும் விஷயம். குழந்தை ஐயர் ஓட்டலிலும், இவள் தாய் என்று சொல்லிக் கொண்டவள் கொஞ்சம் தள்ளி இருக்கும் காபி ஹவுஸ் முன்னாலும். இவளுக்கு நீரா என்று பெயர் வைத்தவர் ஐயர். ‘என்ன சுவாமி காரணம்’ என்று கேட்டேன். ‘நீரில் இருந்து வந்தவள்’ என்றார். விலாசத்துக்கு முன்னால் சாக்கடை ஓடுகிறது. அதைத் தாண்டித் தான் தினமும் நீரா வருகிறாள். அவள் நிற்பதும் உட்கார்வதும், சமயங்களில் தூங்குவதும் சாக்கடையின் ஓரம்தான். ‘எப்படி நம்ம பெயர்’ என்றார் ஐயர். 

நீராவுக்கு ஐயரால் மிகவும் அநுகூலம். ரொம்ப நாள் நீரா நிர்வாணியாகவே இருந்தாள். ஐயர் கவுன், பாவாடை தைத்துக் கொடுத்தார். கடையில் மீந்த பஜ்ஜி, நீராவுக்குத்தான். அதன்றி அவ்வப்போது காபியும் கொடுக்கத் தவறுவதில்லை ஐயர். 

காபியை நான் விழுங்கினேன். மனமும் உடம்பும் லேசாகி எனக்குள் ஆனந்தம் நிறைந்தது. ஐயர் வெற்றிலைக் காம்பைக் கிள்ளியெறிந்து வேஷ்டியில் சுத்தமாக அகப்புறம் துடைத்து சுண்ணாம்பைப் படரத் தடவி சுருட்டிப் போட்டுக் கொண்டார். நான் அவரையே பார்த்தவாறு இருந்தேன். ஐயர் முகம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தது. கண்கள் சொருக வெற்றிலைச் சுகத்தில் அவர் இருந்தார். பிறகு என்னைப் பார்த்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டார். கழுத்தை மேல் தூக்கி, ‘சுவாமி’ என்றார். 

‘சொல்லுங்கோ…’ 

ஐயர் சொல்வதை நான் கேட்கத் தயார் ஆனேன். 

‘மனுஷாள் எவ்ளோ அரக்காளா மாறிப் போயிட்டா பார்த்தேளா? பணம், காசு, பதவின்னா எதையுமே விட்டுடத் தயாரா நிக்கறா பார்த்தேளா?..?’ 

‘சொல்லுங்கோ…’ 

‘அந்தப் பாண்டவாளத்தான் சொல்றேன். மானத்தை விடறவாளை இந்த நாளிலேயே பார்க்கிறோம். குருஷேத்ர சண்டை யில ஜெயிக்க தம் பிள்ளையேன்னா பலிகொடுத்தா? பிள்ளைய பலி கொடுத்தா பதவி; பிள்ளைய பலி கொடுத்தா சொத்து சுகம். என்ன சுவாமி அக்ரமமா இருக்கு? இந்த லட்சணத்துல இவாள்ளாம் தருமம் அறிஞ்சவா. தெய்வாம்சம் பெற்றவா…!’ 

நான் யோசித்தேன். ஐயரின் கேள்வி நியாயமாகத்தான் இருந்தது. நான் சொன்னேன்… 

‘பதவிக்காகப் பிள்ளைகளைப் பலி கொடுக்கிறதாச் சொல்றீங்க… ஸ்வாமி… பிள்ளைக்காக மத்த மனுஷாளப் பலி வாங்கறவாள்ளாம் இப்போ பதவிக்கு வந்திருக்கறதப் பாத்தேளா?’ 

‘ரெண்டும் ஒரே அச்சுதான். பக்கந்தான் வேறே… இவாள்ளாம் மனுஷாள். விட்டுத் தள்ளுங்கோ… தெய்வங்கள் என்ன வாழ்ந்ததுங் கறேன்… பிள்ளைக்கறிக்கு ஆசைப்படறது ஒன்னு… சை…’ 

‘நமக்குப் பொம்பிளைக் கறிமேலே ஆசை; தெய்வத்துக்கு மனுஷன் கறிமேல ஆசை… இது ரெண்டும் ஒரே அச்சுத்தான்…. இல்லியா…’ 

‘ஓய்… ஓய்… என்ன என்ன சொல்லிட்டேள்?…’ 

ஐயர் எழுந்து சென்று சாக்கடையில் சிவப்பாக உமிழ்ந்து வந்தார். 

இரண்டு ஐரோப்பியர் உள்ளே வந்தனர் ஒருவன் ஆண், யுவன். ஒருத்தி பெண், யுவதி. இருவரும் உருவ மேனி வேறுபாடற்ற சகோதர சகோதரிபோல் தோன்றினார்கள். யுவனிடமிருந்து யுவதியை வேறு பிரித்தது கழுத்துக்குங் கீழான இயற்கையே. இருவரும் சங்க காலத் தலைவன் தலைவியர்போல மாலை அணிந்திருந்தனர். அப்போது தான் கடலில் குளித்து வருபவர் போல நனைந்து இருந்தனர். யுவன் நனைந்த வேஷ்டியும் துண்டும், யுவதி பனியனும் கைலியும். 

விலாசத்துக்குள் நுழைந்து என் இடப்பக்கம் வாசலை நோக்கி அமர்ந்தனர். ஐயரிடம், யுவன் பஜ்ஜியை சுட்டினான். ஐயர் இரண்டு வாழை இலைத் துண்டங்களில் சிவந்த நீண்ட பஜ்ஜிகளை வைத்து ஓரத்தில் சட்னியும் வைத்தார். யுவதியும் யுவனும் தமக்குள் சிரித்துச் ஸம்பாஷித்தவாறு சாப்பிடத் தொடங்கினார்கள். 

யுவதி நீராவைப் பார்த்தாள். சிரித்தாள். நீராவும் யுவதியைப் பார்த்து இதழ்களுக்குள் வெள்ளையானாள். யுவதி நீராவைக் குறித்து யுவனிடம் ஏதோ கூறினாள். யுவன் அவளை நோக்கி ஒரு பஜ்ஜியை நீட்டினான். நீரா மறுத்து தலையை ஆட்டினாள். நீரா தலை ஆட்டுவது போலவே யுவதியும் தலையை ஆட்டிப் பார்த்துக் கொண்டாள். கழுத்துத் தாமரை மலர் மாலை ஆடியது. ஒரு பெரிய தாமரையின் புற இதழ்கள் அசைவதுபோல அவள், அவள் உடைமைகள் அசைந்தன. காபியையும் முடித்து அவர்கள் கல்லாவுக்கு வந்தார்கள். யுவன் ஓர் ஐந்து ரூபாய் நோட்டுக் கொடுக்க ஐயர் சில்லறை கொடுத்தார். 

வாசற்படியில் நின்ற நீராவிடம் யுவதி சென்றாள். அவள் தலையைத் தடவிக் கொடுத்தாள். நீரா கழுத்தை நிமிர்த்தி, வெள்ளை விழிகளும், பற்களும் மின்ன யுவதியை அண்ணாந்து பார்த்தவாறு நிற்கிறாள். படத்தில் இயேசுவிடம் குழந்தைகள் இப்படி ஒண்டி நிற்பது என் நினைவுக்கு ஏனோ உடன் வந்தது. யுவதி திரும்பி யுவனிடம் ஏதோ கூற, அவன் ஐயர் அவனுக்குக் கொடுத்த சில்லறை அனைத்தையும் நீராவிடம் நீட்டினான். 

நீரா தலையை இப்படியும் அப்படியுமாக வேகமாக ஆட்டினாள். யுவதி போட்டிருந்த மாலையை தன் சின்ன விரலால் சுட்டினாள். யுவதி பின்னும் அதிகமாகச் சிரித்தவாறு தன் கழுத்துத் தாமரை மாலையை எடுத்து நீராவின் கழுத்தில் போட்டுவிட்டு நகர்ந்தாள். 

குழந்தை ஆண்டாளைப் போல நின்றிருந்தது. 

திடீரென்று எங்கிருந்தோ வந்தாள் அவள். காபி ஹவுஸ் வாசலில் நிற்பவள். 

‘ஏண்டி மவராசன் கொடுத்த காசு வேணாமா உனக்கு…? மாலைதான் வேணுமா. பெரிய மகாராணி…’ என்றவாறு குழந்தையின் முகத்திலும் முதுகிலும் அறைந்தாள். 

நீரா துடித்து அலறியவாறு விழுந்து சாக்கடையில் புரண்டாள். பெரியவள் குழந்தையின் மாலையைப் பிடித்து இழுத்து அறுத்து ரோட்டில் எறிந்தாள். 

எல்லாம் கணத்தில் நடந்து முடிந்தது. ஐயர் விக்கித்து உட்கார்ந்துவிட்டார். நான் காபிக் கணக்கை நோட்டில் எழுதி விட்டு நடந்தேன். 

– 1975

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *