பர்பி!




வழமைபோலவே அன்றும் விடிந்தது.

ஆனால் ‘மாசிலா இல்ல’ த்தை மட்டும் துயரத்தின் மேகங்கள் கவ்வியிருந்தன.
பால்ஸ் வீதி – மூன்றாவது குறுக்குச் சந்து -வடக்கை நோக்கி இருந்தது மாசிலா இல்லம்.
அந்தப் பகுதியில் அதிகமாக அறியப்பட்ட மாசிலாமணி தாத்தா இன்று அதிகாலை மரித்துப் போயிருந்தார் .
அந்தப் பெரியவரின் வாழ்க்கை இறுதியாக ஃப்ரீசர் பாக்ஸ்க்குள் அடங்கிப் போயிருந்தது சுற்றிலும் உறவுகள் . பூமாலைகள் குவிந்து கிடந்தன அதேபோல் வாசலில் செருப்புகள் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன தேநீர் கேன் அவ்வப்பொழுது நிரம்பிக் கொண்டே இருந்தது.
பாலிமர் சேர் களில் அன்றைய நாளிதழ்கள் சில அக்கு வேறு ஆணிவேராய் பிரிந்து கிடந்தன ஒவ்வொரு இதழிலும் பெரியவர் படத்தை அரைப்பக்கம் போட்டிருந்தார்கள்
அந்த வட்டத்தில் எல்லோரும் அவரை பெரியவர் என்று தான் அழைப்பார்கள் அவ்வளவு மட்டும் மரியாதை ‘பெருசு’ என்று கூட அழைக்க மாட்டார்கள் மகன் வழி பேரப்பிள்ளைகளும் மகள் வழி பிள்ளைகளும் சிட்டாய்ப் பறந்தார்கள் துக்க வீட்டில் ஆற்ற வேண்டிய அலுவல்களை ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு செய்தார்கள்.
நான்கு திசைகளிலும் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் அவர் அந்த ஏரியாவில் செல்வாக்கு மிக்கவர் என்பதை பறைசாற்றி கொண்டிருந்தன பெரியவருக்கு 90 வயசு நெருங்கிக் கொண்டிருந்தது மனுஷனுக்கு சுகர் இல்லை பிபி இல்லை ஆள். ‘மாப்’ மாதிரி நெடு நெடுவென்று உயரமாக இருப்பார் உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை ஒரே ஒரு பழக்கம் பர்பி பிரியர்! அவருக்கு தேங்காய் பர்பி என்றால் உசுரு கடலை பர்பியும் நொறுக்குவார். அவர் சம்சாரத்துக்கு தெரியாமல் தலையணைக்கடியில் ஒளித்து வைத்துக் கொள்வார்.
வாசல் கேட் அருகே வந்து நின்று விட்டால் போதும் பர்பி தீர்ந்துவிட்டது என்று பொருள் கொஞ்ச காலமாக அவர் கடைக்குப் போவதில்லை மூன்றாவது கால் அவருக்கு பிடிப்பதில்லை அதுதான் தடி ! ‘லொட்டு லொட்டு’என்று ஓசை எழுப்புவதை அவர் வெறுக்கவே செய்தார்.
‘அருமை தாத்தா ! பர்பி வேணுமா..’ என்று ஒரு பேரன் ஏமாற்றி விளையாடுவான் கையில் கடலை பர்பியை மறைத்து வைத்தவனாக.
‘ஆமாம்டா எருமை! போய் வாங்கிட்டு வாடா கடைக்காரன் கிட்டே எம் பேரு சொல்லு’.
‘ஓ இதிலே அக்கவுண்ட் வேறையா! ‘
கிண்டலும் கேலியும் கும்மாளமுமாக காலம் ஒரு வழியாக கழிந்தது.
திருச்சபையிலிருந்து நிறைய பேர் வந்து முற்றுகையிட்டார்கள் ‘பிளவுண்ட மலையே ‘ பாமாலை பாடி,வசனம் படித்து பிரார்த்தனை செய்தார்கள். அவர் வீட்டுக்கு அருகே இருந்த ரேஷன் கடையிலிருந்து… லைப்ரரியில் இருந்து… பால் பூத்தில் இருந்து… நெல்லை ஸ்டோர்ஸ் லிருந்து எல்லாம் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்
நேரம் கடந்து கொண்டிருந்தது உறவுகளை விட்டு … 30 வருடமாக வாழ்ந்த வீட்டை விட்டு ….புறப்படும் நேரம் வந்து விட்டது இனி அவர் மீண்டும் இந்த வீட்டுக்கு திரும்பி வரப்போவதில்லை அப்பொழுது ‘ஏரியா சேர்மன்’ என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வெள்ளையும் சொள்ளையுமாய் வந்தார் திருச்சபையில் ‘ஏரியா சேர்மன்’ என்று ஓர் ஆயர் இருப்பாரே அவர் இல்லை இவர் இந்த வட்டாரத்தில் இருக்கிற குடியிருப்போர் நலச் சங்கத்தின் சேர்மன் என்றார்கள்.
அவர் பவ்வியமாக ஆளுயர ரோஜா பூ மாலை ஒன்றை ஃப்ரீசர் நீளத்திற்கு கிடத்தினார். ரத்த சம்பந்தங்களோடு கையை தொட்டுத் தொட்டு துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இரண்டு வீதி தள்ளி இருக்கிற நெல்லை ஸ்டோர்ஸில் எடுபுடி வேலை செய்கிற கோபிக்கு பெரியவர் இறந்து போன செய்தி எட்டியது
ஒரு நிமிடம் ஆடிப் போனான் இனி அவர் இந்த கடைக்கு பர்பி வாங்க வரமாட்டார்!
அப்பொழுது அங்கு இருக்கிற முதலாளி கோபியை அழைத்தார் “தம்பி ! இந்த கடையை பார்த்துக்க நான் மாசிலாமணி ஐயா வீட்டுக்கு போய் துக்கம் விசாரிச்சுட்டு வந்துடறேன். பாவம் அஞ்சு வருஷமா இந்த கடைக்கு வந்துட்டு இருந்தாரு இனிமேல் அவரை பார்க்க முடியாது நீ கடையிலேயே இரு..நான் வந்ததுக்கப்புறம் நீ போகலாம் “என்று சொல்லிவிட்டு கடை முதலாளி கடந்து போனார்.
கோபி விம்மி விம்மி அழுதான் அவன் மனதில் பழைய நாட்கள் ஓடின
‘மாசிலாமணி தாத்தா இல்லைன்னா என்னுடைய அக்காவுக்கு திருமணமே நடந்திருக்காது ஊர்ல அவ்வளவு கஷ்டத்தில் இருந்தபோது அக்காவுக்கு திருமணம் கூடி வந்துச்சு..அப்பா இல்லாத எங்க வீட்ல அம்மாதான் ஏதோ சின்ன சின்ன வீட்டு வேலை செய்து சம்பாதிச்சுட்டு இருந்தாங்க அப்படி இருக்கிற பட்சத்தில் என்னுடைய சோக கதையை கேட்ட மாசிலாமணி தாத்தா என் மேல இரக்கப்பட்டு பண உதவி செஞ்சிருக்காரு அவர் செஞ்ச உதவி என்னுடைய அக்காவுக்கு ஒரு திருமண வாழ்க்கை அமைச்சுக் கொடுத்து..அதை எல்லாம் நினைச்சு பார்க்கிறபோது எவ்வளவு கஷ்டமா இருக்கு ‘
உடனே கடையில் இருக்கிற அலைபேசியை எடுத்து அம்மாவிடத்தில் மாசிலாமணி தாத்தா இறந்து போன செய்தியை கண்ணீரும் கம்பலையுமாய் சொல்லிக் கொண்டிருந்தான்.
அதே நேரத்தில் மாசிலாமணி இல்லத்துக்கு கடை முதலாளி வந்து சேர்ந்தார் அப்பொழுது ப்ரீசர் பாக்ஸ் முற்றத்திலுள்ள பந்தலுக்கு வந்திருந்தது உறவுகள் புடை சூழ சர்ச் பாதர் பைபிளை விரித்தார் சற்று நேரம் துக்க செய்தியை பகிர்ந்து கொண்டார் சிறிது நேரத்தில் ‘உம்மண்டை கர்த்தரே’ பாடலை பாடினார்கள் அந்த இடம் முழுவதும் சோகமயமாக இருந்தது அருகில் நின்றவர்கள் விழிகளில் நீர் பெருகியது சிலர் தொண்டையை செருமினார்கள் . பெயரன் பெயர்த்திகள் கரங்களில் மெழுகுவர்த்தியுடன் தாத்தாவைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள் .
எல்லாமே அமைதியாக நடந்தது அதற்கு அப்புறம் ஃப்ரீசர் பாக்ஸில் இருந்த மாசிலாமணி தாத்தாவின் சடலத்தை சில பேர் தூக்கி ஆம்புலன்ஸில் கிடத்தினார்கள் மலை போல் குவிந்த பூமாலைகளையும் ஆம்புலன்ஸில் ஏற்றி வைத்தார்கள்.
அதற்கப்புறம் சுற்றி இருந்த ஒரு சிலர் விலகிப் போனார்கள் பின்னர் சாவதானமாக கடை முதலாளி கடைக்கு வந்ததும் கோபி கேட்டான்.
“ஐயா நானும் போயிட்டு வந்துரட்டுமா நம்ம கடையில அஞ்சு வருஷமா பர்பி வாங்கிட்டிருந்த தாத்தாவை நானும் கடைசியாப் பார்த்துட்டு வந்தர்றேன்!”
“கோபி ! இப்ப லேட்டாயிடுச்சு..நானும் சீக்கிரம் வந்துடலாம் ன்னுதான் பார்த்தேன் அப்புறம் அங்க பேசிட்டு இருந்ததுலே லேட்டாயிடுச்சு அவங்க இப்போ பாடிய பரியல் கிரவுண்டுக்கு எடுத்துட்டு போயிட்டாங்களே..” என்று சொல்லிவிட்டு கல்லாவில் உட்கார்ந்து விட்டார்.
இவனுக்கு அழுகை சீறிக் கொண்டு வந்தது
இரண்டு நாட்கள் ஆயிற்று மாலையில் அந்த கடைக்கு இரண்டு பெண்கள் வந்திருந்தார்கள் மாசிலாமணி தாத்தாவின் உறவுகள்தான்.அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கோபி கேட்டான் அப்பொழுது கடை முதலாளி அங்கு இல்லை.
“நாளைக்கு காலைல சீக்கிரமா போகணும் …கல்லறையை சுத்தம் பண்ணனும் அப்பாவுக்கு என்னென்ன விருப்பமோ அதையெல்லாம் வாங்கிட்டு போய் வைக்கணும்..கடையில என்னென்ன வேணும்ங்கறத லிஸ்ட் போட்டியா?” என்று ஒருத்தி கேட்க “எல்லாம் ரெடியா இருக்கு ” என்று சொல்லி சில சாமான்களை அவர்கள் வாங்கிச் சென்றதை கோபி உன்னிப்பாக கவனித்தான்.
இறந்த மூன்றாம் நாள் காலையில் மாசிலாமணி தாத்தா வீட்டிலிருந்து சிலர் கல்லறை தோட்டத்திற்குப் போனார்கள் அவர்கள் சில பொருள்களையும் பூக்களையும் தாத்தாவுக்கு பிடித்த சில தின்பண்டங்களையும் எடுத்துக் கொண்டு போனார்கள்.
கல்லறைத் தோட்டத்துக்குச் சென்றதும் அவர்கள் ஆச்சரியத்துடன் அப்படியே சமைந்து நின்றார்கள். தாத்தாவை அடக்கம் பண்ணி இருந்த கல்லறை தூய்மையான தோற்றத்தில் தெரிந்தது சுற்றிலும் பூக்கள் சொருகி வைக்கப்பட்டிருந்தன. அவர் மார்பு பகுதியில் கனமான ஒரு பிளாஸ்டிக் பை இருந்ததைப் பார்த்தார்கள் .
அதனுள் அடுக்கடுக்காய் பர்பி! சற்று தள்ளி நின்றவாறு, கடைக்காரப் பையன் கோபி கேவி கேவி அழுது கொண்டிருந்தான்.
![]() |
சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க... |