பயம் கக்கும் விஷம்




(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘பாம்பு பாம்பு. ஐயோ வீட்டுக்க பாம்பு’ என் மனைவி அலறினாள்.
பின்விறாந்தையில் புத்தகம் ஒன்றை வாசிப்பதில் மூழ்கியிருந்த நான் முன் ஹோலை நோக்கி ஓடிவந்தேன்.

எனது பிள்ளைகள் புடைசூழ தும்புத்தடியும் கையுமாக என் மனைவி ஹோல் கதவுக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள்.
அவளது உடம்பு பயத்தால் நடுங்குவது போல் தெரிந்தது.
பிள்ளைகளோ அதே பீதியால் தாக்குண்டவராய், “அப்பா பாம்பு, பாம்பு” என்று என்னைக் கண்டதும் ஒரேயடியாகக் கத்தினார்.
“பாம்பா, எங்கே?” என்று கேட்டவனாய் நான் முன்னுக்குப் பாய்ந்தேன்.
“ஐயோ உங்களுக்கென்ன விசரா, இஞ்சால வாங்க” என்று என் மனைவி என்னை பின்னுக்கு இழுத்தாள்.
“எங்கயப்பா பாம்பு?’ என்று நான் அவள் கையை உதறிக்கொண்டே கேட்டேன்,
“அங்கதான். அந்தாப் பாருங்க, அந்தா ஹோல் மூலைச்சிவரோட படமெடுத்தெண்டு நிக்குது” என்று என் மனைவி பதைபதைப்போடு கூறினாள்.
நான் சிறிது முன்னே சென்று அவள் காட்டிய திசையில் நோட்டம் விட்டேன்.
அங்கே ஒரு வயிரக் குவியலாய், அக்குவியலுக்கு கோபுரம் அமைத்தாற்போல் படமெடுத்து நின்றது பாம்பு. நான் சற்றுப் பின்வாங்கி அதை மீண்டும் கவனித்தேன். என் பின்வாங்கல் ஏற்படுத்திய ஓர்கண அமானுஷ்ய அமைதி வட்டத்தில் பாம்பின் படம் அதிர்ந்தது.
அதற்குப் பீதியா? அல்லது கோபமா? அல்லது இரண்டுமா? ‘
“கீர்ஷ்'”
பூனையொன்றின் உள்ளடங்கிய சீறல்போல் பாம்பின் சீற்றம்.
“கொண்டுவாப்பா அந்தத் தும்புத் தடியை” என்று கூறிக் கொண்டே நான் என் மனைவியின் கையிலிருந்த தும்புத்தடியை இழுத்தெடுத்தேன்.
“ஐயோ கிட்டப் போகாதேங்க, இது பறநாகம் போல இருக்கு. ஆக்கள்ள பாஞ்சாலும் பாயும்” என் மனைவி என் பின்னால் நின்று என்னை பின்னால் இழுக்காத குறையாகக் கூக்குரல் வைத்தாள்.
அவளுக்கு ஒத்திசை வழங்குவது போல் “அப்பா, அப்பா கிட்டப் போகாதேங்க” என்று என் பிள்ளைகள் ஓலமிட்டனர். என் கடைக்குட்டி மகள் துளசி, இவற்றிலிருந்து விடுபட்டுப் போய் முற்றத்தில் நின்று கொண்டிருந்தாலும், பாம்பின் வாலைப் பிடித்துக் கொண்டு நிற்பவள் போல் பெருங்குரல் எடுத்து அழுது கொண்டிருந்தாள்.
எங்கள் வீட்டு ஜிம்மி எனது வீட்டார் போட்ட கூப்பாட்டில் யாரோ அந்நியர் வீட்டுக்குள் நுழைந்து விட்டனர் என்பதைச் சூக்குமமாக உணர்ந்து கொண்ட அருட்டலில் நாம் நின்ற ஹோல் அறைக்குள் வரமுயற்சிப்பதும் பின்னர் எமக்குப் பயந்து வெளியே போய் உறுமுவதும், அதன் முடிவில் திடீரென எதனாலோ தூண்டப்பட்டது போல் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து குரைத்துவிட்டு நாக்கை வெளியே தொங்கப்போட்டு இரைத்துக் கொள்வதுமாய் நின்றது.
வீட்டுக்குள்ளும் வெளியும் பாம்புப் பின்னலென நெளியும் பீதி. நான் முன்னேறினேன்.
“இஞ்சாருங்கோ. ஐயோ கவனம்…”
என் முன்னேறலுக்கேற்ப என் மனைவியின் சுருதிகூட்டல்.
என் கையிலிருந்த தும்புத்தடி என் தலைக்குமேல் உயர்ந்தது.ஓர் கணம் அவ்விடத்தையே தன்கையில் அள்ளியெடுத்த பேரமைதி.
அக்கணத்தில் பாம்பு தன்படத்தைச் சுருக்கி என் அடியை வாங்கத் தயாரானது போல் தன் தலையைத் தாழ்த்தி, தன் கண் இமைகளை இடுக்கியது போன்ற பிரமை.
நான் தாமதிக்கவில்லை. ஒரே அடி.
படீர்.
வெற்றுச் சீமேந்தின் ஓசை, என் இலக்கு சோரம் போனதைச் சுட்டமுன்னரே,
“அடி படேல்ல, அடி படேல்ல, அந்தாப் போகுது அந்தா போகுது” என்ற கோரஸ் என் பின்னால் ஏக காலத்தில் எழுந்தது.
”கிர்ஷ்” என்ற இரைச்சலுடன், மின்னல் வழுக்கலாய் பாம்பு கணப்பொழுதில் ஹோலின் அடுத்த மூலைக்குத் தாவி தன் முதுகை அதனோடு முட்டுக்கொடுப்பது போல் ஒதுங்கி படமாடும் தலையை மட்டும் உயர்த்தி எனது தாக்குதலை எதிர்கொள்ளத் தயாரானது போல் நின்றது.
அடி பிழைத்த ஆத்திரம் எனக்கு.
தும்புத்தடியின் ஒருபகுதி எனது சோரத்தைப் பறைசாற்றுவது போல் தொங்கிக் கொண்டிருந்த நிலை, எனது அடுத்த தாக்குதலுக்குத் தீவிரம் கொடுத்தது.
“ஐயோ பத்திரம். பத்திரம். ஆகக் கிட்டப் போகாதேங்க.”
கட்டவீழ்ந்துபோன எனது ஆவேசத்தைச் சிறிது கட்டுப்படுத்துவது போல் எனது மனைவி பின்னால் நின்று நாணயக் கயிறெறிந்தாள்.
நான் இரண்டு கைகளாலும் தும்புத்தடியை இறுகப்பற்றி ஓங்கினேன்.
“ஐயோ அடிக்காதேங்க, அடிக்காதேங்க”
நான் எனது ஓங்குதலை ‘அவக்’கென நிறுத்தி, சற்றுப் பின்வாங்கி என் மனைவியைப் பார்த்து “ஏன் அடிக்கவேணாமெண்டு சொல்லிற?’ என்றேன் சீற்றத்தோடு.
“உங்களுக்கென்ன விசரா? நான் ஏன் சொல்லிறன் அடிக்க வேணாமெண்டு” என்று பதிலுக்குச் சீறிய அவள் “ஐயோ பாம்பு போகப் போகுது, கெதியா அடியுங்க, கெதியா அடியுங்க” என்று என்னை மேலும் முடுக்கினாள்.
நான் சோர்ந்து போன தும்புத்தடியை மீண்டும் தூக்கினேன்.
ஒரே அடியில் பாம்பின் தலை சப்பளிய வேண்டும். தவறினால் எதுவும் நேரலாம்.
என் பின்னால் பிள்ளைகள் மனைவி என்று அவர்கள் பாதுகாப்பும் எனது தும்புத்தடியின் ஓங்கலில் அரண் கொண்டது. ஆனால் ஏற்கெனவே தொங்கிக் கொண்டிருந்த தும்புதடியின் ஒருபகுதிச் சிலும்பல், என் ஓங்குதலுக்கு நிதானம் கொடுத்தது. நான் பலமாக ஓங்கினேன்.
“அப்பா அடிக்காதேங்க, அடிக்காதேங்க”
நான் ஓங்கியது ஓங்கியபடியே இருக்க மீண்டும் அவக்கென முற்றத்தில் அழுதுகொண்டு நின்ற என் கடைக்குட்டி துளசியின் பக்கம் நோக்கினேன்.
“ஏன் துளசி அடிக்கவேணாமென்டிற?” – நான் துளசியைப் பார்த்து ஒருவித ஆச்சரியங் கலந்த சினத்தோடு கேட்டேன்.
“நான் சொல்லேல்ல அப்பா. கெதியா அடியுங்க, எனக்கு பயமாய் இருக்கு!” கணீரென அவள் பதில் கொடுத்தாள்.
அப்போ யார் வேண்டாமென்று சொன்னது?
என் மனைவியின் கண்கள் ஜிவுஜிவுவெனச் சிவந்துவர அவளது நீண்ட மூக்கு பாம்புபோல் படமெடுக்க அவள் கத்தினாள்.
”உங்களுக்கென்ன விசரா பிடிச்சிற்று. குழந்தையேன் அடிக்கவேணாமென்டிறாள்? உங்களுக்கு அடிக்கேலாட்டிச் சொல்லுங்க. நாங்களாவது அடிக்கிறம்”
எனக்கு அவளது கூக்குரல் அளவு கடந்த ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாத அந்தரநிலை. பின்னே யார்தான் இந்தநேரத்தில் இப்படி நடந்து கொள்வார்கள்?
நான் என்னைச் சுதாகரித்துக்கொண்டு பாம்பின் பக்கம் முழுக்கவனத்தையும் பாய்ச்சுமுன், ‘ஐயோ, அந்தா அது போகப்போகுது. நீங்க என்ன யோசிச்செண்டு நிக்கிறீங்க?” என்று என் மனைவி தொடர்ந்து கத்தினாள், ஏதோ பேய் தொட்டுக் கொண்டவள் போல்.
அடக்க முடியாத ஆத்திரம் என் கைகளை உலுக்கிற்று.
இந்தா செத்தொழிந்து போ.
இந்த அடியோடு பாம்பு உடல் வேறு தலைவேறாக வேண்டும்.
படீர்.
ஆனால் பாம்பு தப்பிவிட்டது. அதன் வால்பகுதிதான் சிறிது சப்பளிந்தது. ஒரு சின்ன முனகல் எங்கிருந்தோ எழுவதுபோல் எனக்குப்பட்டது.
இப்போ பாம்பு முன்னைய இடத்திலிருந்து சற்றுத்தள்ளி, ஆனால் அதே படமெடுத்த கோலத்துடன் “சர்’ என இரைந்து கொண்டு நின்றது. அதன் ”சர்’ என்ற இரைச்சல் பீதியா சீற்றமா?
சீற்றம் போல் அது எனக்குப் படவில்லை.
அதன் படமெடுத்த கோலம் போருக்குரிய சவாலா?
ஹுக்கும். அதுவும் அப்படித் தெரியவில்லை.
மாறாக யாரோ நிராயுதபாணியான ஒருவன் கையிரண்டையும் தூக்கி அபயம் என இறைஞ்சுவது போல் பட்டது.
ஆனால் கற்பனை பண்ணிக்கொண்டிருக்க நேரமில்லை.
“என்ன யோசிச்செண்டு நிக்கிறீங்க?” பின்னால் இருந்து வந்த எனது மனைவியின் பீதிச் சவுக்கு சொடுக்கியது.
“இல்லையப்பா….” என்று இழுத்த என் குரலில், இந்தப் பீதியின் கௌவுதலில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவற்குரிய வழி நசிந்து தலைகாட்டிற்று.
”இஞ்ச உமா, இந்தத் தும்புத்தடி சரிவராதப்பா. கிணத்தடியில் கிடக்கிற மம்பெட்டிப் பிடியைக் கழட்டிக்கொண்டு ஓடி வா’ என்று பாம்பைப் பார்த்தபடியே பின்னால் பீதியை மடியில் கட்டிக்கொண்டு நின்ற மனைவியை விரட்டினேன்.
அவள் சூப்பிய மாங்கொட்டை கையைவிட்டு வழுக்கிக் கொண்டு போவது போல விசுக்கென விரைவது தெரிந்தது.
இப்போ நெருக்கடி நீங்கினாலும் பீதியும் பொறுப்பும் என்கழுத்தில் தொங்கிக் கொண்டு என்னை முன்னே தள்ளின.
நான் தும்புத்தடியை மீண்டும் ஓங்கினேன். மண்வெட்டிப்பிடி வரமுன்னரே வேலையை முடித்து விட்டால் தொல்லைவிட்டது. கைகள் தும்புத்தடியை இறுக்கிக் கொண்டு மேலெழுந்தன.
“அடிக்காதேங்க. அடிக்காதேங்க. நான் உங்களை கடிக்க வரேல்ல”
ஓங்கிய தும்புத்தடி ஓங்கியவாறே உயர்த்தப்பட்டு நிற்க, என்னுடம்பு ஒருமுறை சில்லிட்டு தலை கீர் என்றது.
யார் அப்படிக் கதைக்கிறது?
நான் அக்கம் பக்கம் விழிகளை ஓடவிட்டேன். என் பிள்கைள் ஹோல் வாசலில் பீதி அறைந்த ஆணியில் அப்படியே நிசப்தித்து நின்றனர். அப்போ கதைத்தது யார்? பாம்புதான்.
“நீ என்ன சொல்லிற?” என்வாய் முணுமுணுக்க என் விழிகள் பாம்பில் குத்திட்டன.
“என்னை அடிக்காதேங்க, உண்மையாச் சொல்லிறன் நான் உங்களைக் கடிக்க வரேல்ல” திரும்பவும் அதன் குரல். பாம்புதான் கதைத்தது.
“மம்பெட்டியைக் காணேல்ல அப்பா” என் மனைவி கிணற்றடியிலிருந்து குரல் கொடுப்பது கேட்டது.
மாலை மங்கிக்கொண்டு வந்தது. மாலையின் மங்கலிலும் பீதியின் உந்தலிலும் மண்வெட்டி முன்னுக்கிருந்தாலும் அவள் கண்டிருக்கமாட்டாள்.
“மம்பெட்டிப்பிடி வேண்டாமெண்டு அம்மாவிட்டச் சொல்லு” வாசலில் நின்ற என் மூத்தவனுக்குக் கட்டளையிட்டேன்.
என் பெரிதான இரைச்சலைக் கேட்ட பாம்பு மீண்டும் சர் என்று சீறிற்று.
என்ன நீ சீறுகிறாயா? அப்போ சற்றுமுன் நீ என்னைப் பார்த்துக் கெஞ்சியது என் கற்பனையா? உங்களை நம்பமுடியாது. பற்களை நறும்பிய என் முணுமுணுப்போடும் பயத்தோடும் பாம்பை நோக்கி என் தும்புத்தடி மீண்டும் உயர்ந்தது.
“என்னை அடிக்காதேங்க. உங்களைக் கெஞ்சிக் கேக்கிறேன். என்னை அடிக்காதேங்க. உங்களை நான் கடிக்க வரேல்ல…” பாம்பு உண்மையாகவே என்னைப் பார்த்து பரிதாபமாகக் கெஞ்சியது.
நான் சற்று நிதானித்தேன்.
இடம், சூழல் எல்லாவற்றையும் மறந்த நிலையில் “அப்ப ஏன் நீ இங்க வந்தாய்?” என்ற என் அதட்டல் எழுந்தது.
“நான் இங்க வரவேணும் எண்டு வரல்ல. தெரியாமல் வந்திற்றன்” பாம்பு தன் நிலையை விளக்கத் தொடங்கிற்று.
“நீங்க கோடிப் பக்கத்தில் கிடந்த குப்பை பத்தையளைக் கொழுத்தினேங்க. அதுக்குள்ள கிடந்த நான் பயந்து போய் தெரியாமல் இங்க வந்திற்றன்…”
நான் ஒருகணம் அதை உற்று நோக்கினேன்.
புதைந்து போன என் நினைவுகள் சில திடீரென மேலெழுந்து நெளிந்தன.
என் தம்பி முறையான சேகர் இந்த மாதிரிப் பாம்பு தீண்டித்தானே செத்தான்.
முன்வீட்டு ஆறுமுகத்தாற்ற பேரன் ரத்தப்புடையன் கடிச்சுத்தானே மூக்காலும் வாயாலும் ரத்தம் கக்கிச் செத்தான். எனக்குப் பிரியமான ரகு கூ எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. தும்புத்தடியை ஓங்கியவாறே கத்தினேன்.
“இப்படித்தானே என்ர தம்பி சேகர் உங்களட்ட கெஞ்சியிருப்பான். ஆறுமுகத்தாற்ற பேரனும் உங்களட்ட இப்படித்தானே அழுது குளறியிருப்பான். அந்த ரகு கூட …. ஐயோ……” அடி வயிற்றிலிருந்து கிளம்பிய என் ஆற்றாமையால் என் முழு உடம்பும் நடுங்கிக் கொள்ள என் தும்புத்தடி உயர்ந்த போது பாம்பும் அதே வேகத்தில் என்னை நோக்கி பரிதாபமாக கத்தியது.
“இவையளை நாங்க கடிக்கேல்ல. இவையளைக் கடிச்சவ விரியன் பாம்புகள்…”
பாம்பு நான் சுமத்திய குற்றத்திலிருந்து தப்பப்பார்த்தது.
“விரியன் பாம்புகளா?” நான் ஏளனமாகச் சிரித்தேன்.
“உங்களுக்கதான் எத்தனை விஷப்பிரிவுகள். உங்களை விட்டு வைக்கக் கூடாது”
“நீங்களும் எங்கட இனந்தானே? நீங்க இப்படிக் கதைக்கலாமா?”
”ஓ நானும் பாம்புதான். அதனாலதான் சொல்லிறன் உங்களை விட்டுவைக்கக் கூடாதெண்டு. பாம்பின் கால் பாம்பறியும் எண்ட பழமொழி உங்களுக்குத் தெரியாதா?”
“நீங்க இப்படிக் கதைக்கலாமா? கொஞ்சம் நீதி நியாயம் எண்டு பார்க்கக்கூடாதா?”
“நீதி நியாயம் பார்க்கிற காலமல்ல இது. பீதிதான் இப்ப எங்களை இயக்குது. விஷமுள்ளவையை விட்டு வைச்சால் எங்களுக்குத்தான் ஆபத்து” என்று கூறிக் கொண்டே தும்புத்தடியை உயர்த்தினேன்.
“ஐயோ என்னட்ட விஷமில்லை. விஷப்பல்லை எப்பவோ கழட்டிப் போட்டாங்க” பாம்பு தன்குரலை பதிலுக்கு உயர்த்திக் கத்தியது.
“என்ன விளையாடிற, விஷப்பல்ல கழட்டிப் போட்டாங்களா? யாரு கழட்டினது?” நான் மீண்டும் ஏளனத்தோடு கேட்டேன்.
“நான் கொஞ்சக் காலத்துக்கு முந்தி தெரியாத்தனமாக இந்தியாக்கார குறவரட்ட அகப்பட்டுப் போனேன். அவங்க தங்கட கூடாரத்துக்க கொண்டு போய் என்ர பல்லைக் கழட்டி என்னைச் சித்திரவதை செய்ததோட என்னை ஒரு பெட்டிக்க வைச்சு அடைச்சு பாம்பாட்டப் பார்த்தாங்க, நான் ஒருநாள் தப்பி வந்திற்றன்..”
“எப்படி தப்பி வந்தே?”
“என்னைக் காவல் காத்துக்கொண்டு நிண்டவனுக்கு என்னட்ட இருந்த பீடி ஒண்டக் குடுத்தன். விட்டிட்டான்.”
“இப்ப நீ என்ன செய்யிற?
“நாணுன்டு என்ர வயித்துப் பிழைப்புண்டு எண்டு ஒதுங்கி இருக்கிறன்…”
“இப்ப அப்படித்தான் சொல்லுவேங்க, பிறகு சந்தர்ப்பம் வாறபோது விஷத்தை கக்குவேங்க…. உங்களுக்கு அப்ப விஷப்பல்லு எப்படியாவது முளைச்சிடும். இப்பகூட நீ சொல்லிறதை எப்படி நான் நம்பிறது..?” நான் இரக்கப்படாமலே எடுத்தெறிந்து கேட்டேன்.
பாம்பு திடீரென மௌனமாயிற்று. அதன் அர்த்தம் விஷப்பல்லிருந்தா நான் எப்பவோ உங்களைக் கடிச்சிருப்பேன் என்பதா அல்லது என்னைக் கொன்று விட்டு என் பல்லைப் பரிசோதித்து பாருங்கள் என்பதா?
“இந்தாருங்கள் மம்பெட்டிப் பிடி”
என் மனைவி மண்வெட்டி வாயிலிருந்த பிடியை பிடுங்கியதன் களைப்பில் மூச்செறிந்தவளாய் பிடியை என்னிடம் நீட்டினாள்.
பிடி என் கைக்கு மாறிற்று. தும்புத்தடி அவள் கைக்குப் போயிற்று.
பிடி என் கைக்கு மாறியபோது படமெடுத்து நின்ற பாம்பு திடீரென படத்தைச் சுருக்கி தலையைத் தரையில் வைத்து பதுங்கிய விதம் என்னுள் பீதியைப் பாய்ச்சிற்று.
என்மேல் அது பாயப் பதுங்குகிறதா?
விஷ ஜந்துக்கள் எப்பவுமே ஆபத்தானவைதான். விட்டுவைக்கக் கூடாது.
புதிதாக வெளியிலிருந்து கிடைத்த ஆயுதப்பிடி, என் கைக்கு உரம் ஏற்றிற்று. அந்த உரம் விஷம்போல் தலைக்கேறிற்று.
பிடியை உயர்த்தி ஒரே போடு.
அவ்வளவுதான், அதன் நடுப்பகுதி தகர்ந்தபோது ”கார்க்’ என்று பாம்பு காறுவது போலக் கேட்டது.
“‘என்ன, என்னைப் பார்த்துக் காறித் துப்புகிறாயா?”
“இல்லை என் தொண்டைக்குள் ரத்தம். அதைத்தான் வெளியே துப்புகிறன்” பாம்பு முனகிக் கொண்டே கூறிற்று.
பாம்பின் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது.
ரத்தத்தைக் கண்டதும் எனக்கு இன்னும் ரத்தவெறி ஏறிற்று. நான் விடவில்லை. தொடர்ந்து போட்டேன். ஆனால் மண்வெட்டிப்பிடி தவறித் தவறி அதன் தலையைச் சப்பளிப்பதற்குப் பதில் அதன் உடலைத் தகர்த்தது.
பாம்பு இரண்டாகியது.
“ஆ, பாம்பு ரெண்டு துண்டாப் போச்சு”
என் மனைவி ஆர்ப்பரித்தாள். அதைத் தொடர்ந்து “அந்தா பாம்பு ரெண்டாப் போச்சு’ என்று அவளின் பின்னால் நின்ற பிள்ளைகள் கைகொட்டி கூக்குரல் இட்டனர்.
இப்போ மனைவி பயம் தெளிந்தவளாய் முன்னே பாய்ந்து தன் கையிலிருந்து தும்புத்தடியால் அதன் தலையில் ஒரு போடு.
பாம்பின் இடது கண் சிதைந்து தொங்கியது.
ஆரவாரம் மேலும் மேலும் ஓங்கி ஒலித்தன.
1983 வெலிக்கடைச் சிறைச்சாலை என் கண்ணில் மின்னி மறைந்தது.
என் வயிற்றுள் ஏதோ குமட்டுவது போலிருந்தது. திடீர் என்று இன்னோர் நினைவின் கிழிப்பு.
கொழும்பிலிருந்து யாழ் வந்து கொண்டிருந்த பயணிகள் பஸ்,
வவுனியா காட்டுப் பிரதேசத்தில் சிங்கள ஆமிக்காரரால் மறிக்கப்பட்டு வேட்டையாடப் பட்டபோது, அதிலிருந்து பின் ஜன்னலால் பாய்ந்து பஸ்ஸின் அடியில் பாம்புபோல் புகுந்து நழுவிய ஓர் தமிழரின் நினைவு திடீரென என் கண்முன் நெளிந்தது.
”என்னப்பா பாம்பு அடிச்சு களைச்சா போனேங்க? காத்துப்பட்டா அது நல்லா உயிர்த்திரும். ஒரே அடியில முடிச்சிருங்க” என் மனைவி பின்னால் நின்று ஆமிக்காரன்மாதிரி முடுக்கினான்.
பிள்ளைகள் நின்று கும்பலாய் ஆர்ப்பரித்தனர். கும்பல் மனோநிலைக்குள் விழுந்த நான் பாம்பைப் பார்த்தேன். அது இன்னும் நெளிந்துகொண்டுதான் இருந்தது. என் மண்வெட்டிப்பிடி அதை நோக்கி உயர்ந்தபோது,இரண்டு பாம்புகள் ஒன்றின் வாலை ஒன்று பிடித்து விழுங்கிக் கொண்டிருக்கும் கம்பிவளையக் காட்சி என்கண்முன் தோன்றி மறைந்தது.
ஆனால் பின்னால் நின்ற கும்பலுக்குத் தலைமை தாங்கிய நான், அதன் உற்சாக வெறியில் கதாநாயகனானேன். அந்தக் கதாநாயகக் கோலத்துக்கு இழுக்கு நேராதவாறு நான் ஓங்கி அதன் தலையை நோக்கி இன்னொரு போடு.
ஆனால் எனது இலக்கு மீண்டும் சிறிது தவறிற்று.
உடனே பாம்பு தன் இயல்புக்கு இழுக்கு நேராதவாறு அந்நிலையிலும் “சர்ர்” எனச் சீறியபடி என் மண்வெட்டிப் பிடியைத் தன் வாயால் கௌவிற்று.
“பாத்தியா, நீ உன்ர குணத்தைக் காட்டியிற்றியே. சீறிக்கொண்டு. கடிக்கவா வாற? நல்லாக்கடி, நல்லாக்கடி” என்று கூறிக்கொண்டே நான் மீண்டும் மண்வெட்டிப்பிடியை உயர்த்தியபோது, “நான் சீறேல்ல. இப்படித்தான் எனக்கு அழத் தெரியும். நான் கடிக்கேல்ல. இப்படித்தான் எனக்கு தடுக்கத் தெரியும்” என்று பாம்பு வேதனையோடு அனுங்கிற்று.
அந்த அதன் அனுங்கல் என் அடிவயிற்றில் எதையோ சுண்டி விடுவதை நான் நிதானிக்குமுன் “அந்தா அது நெளியுதப்பா. பாத்தெண்டு நிக்காம தலையைப் பாத்துப் போடுங்க’ என்று என்பின்னால் நின்ற பீதியின் பரிவாரங்கள் என்னை தாமதிக்கவிடாது ஏவின.
நான் அவற்றின் நெருக்கடியில் என்னை இழந்து செயல்பட்டேன். மீண்டும் மீண்டும் என் மண்வெட்டிப்பிடி மேலெழுந்து பாம்பின் தலையில் விழுந்தது.
“ஐயோ என்னைக் கொல்லாதேங்க. கொல்லாதேங்க. கொல்லாதேங்க….” ”தீனக்குரலில் அது கத்திக்கொண்டே இருந்தது. எல்லாம் அடங்கிவிட்டதாக நினைத்த போது ‘தண்ணி தண்ணி” என்று அதன் குரல் மீண்டும் எழுந்து இழைந்தது.
நான் விடவில்லை. தொடர்ந்து போட்டேன்.
ஈற்றில் அதன் தலை தாறுமாறாய் சப்பளிந்தபோது அதன் கத்தலும் ஓய்ந்தது.
செத்த பாம்பின் அங்கச் சிதறல்களில் ஈ மொய்க்கத் தொடங்கியது. செத்த பாம்பைத் தூக்கிக் கொண்டு போய் என் பீதியின் பரிவாரங்கள் கோடிப்புறத்தில் வைத்து எனது பழைய சைக்கிள் ரயரைப் போட்டுக் கொளுத்தி மீண்டும் ஆரவாரித்தன.
பாம்பின் இறுதிக்கிரிகைகளை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்த என் மனைவி “இதைத் தேடிக்கொண்டு இதின்ர சோடி வந்தாலும் வருமாமப்பா’ என்று சத்தம் போட்டுச் சொன்னாள்.
என்னை மீண்டும் இனந்தெரியாத பீதி கௌவிற்று.
ஓமோம் பழிவாங்க இன்னொண்டு வரலாம்.
அந்த ஒன்றை ஒன்று விழுங்கும் கம்பிவளையப் பாம்புக் காட்சி மீண்டும் என் கண்முன்.
இனிவரப்போகும் அடுத்த தாக்குதலுக்காக மண்வெட்டிப் பிடியைத் தயார் நிலையில் விறாந்தையில் நான் சாற்றிவைத்த போது எரியும் பாம்பின் நெடியும் அங்கு கவியும் இரத்த வெறியும் காற்றில் கனத்தன.
– 1989
– கடலும் கரையும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1996, நண்பர்கள் வட்டம், கொழும்பு.