பட்டுச்சேலை
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
(இதற்கு முந்தைய ‘ஆரம்ப விரிசல்கள்‘ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)
கல்யாணமான புதிதில்கூட மரகதத்தை ஊர் இளசுகள் அவளை இளம் பெண்ணாகப் பார்க்காமல், சபரிநாதனின் மனைவியாகத்தான் பார்த்தார்கள். அதேபோல அவரின் மகள்களையும் இளம் பெண்களாகப் பார்க்காமல் அவரின் மகள்களாகவே பார்த்தார்கள்.
இப்போது அதே சின்ன வயதுப் பையன்கள் ராஜலக்ஷ்மியை சபரிநாதனின் மனைவியாகப் பார்க்கவில்லையோ? எல்லா பையன்களுமே அவளை அழகான சின்ன வயசுப் பெண்ணாக மட்டும்தான் பார்க்கிறார்களோ? இந்தக் கேள்வி மண்டைக்குள் உதித்ததும் சபரிநாதன் கொஞ்சம் திகைத்துப்போனார்.
குற்றாலத்தில் இளைஞர்கள் ராஜலக்ஷ்மியை அழகிய இளம் பெண்ணாகப் பார்த்தாலேயே பக்கத்தில் வந்து வந்து அவளைக் கவனித்தார்கள். திம்மராஜபுரம் பையன்கள் அதே காரணத்தால் ராஜலக்ஷ்மியைப் பார்க்கவே வராமல் இருந்துவிட்டாகள்! இதுதான் வித்தியாசமான உண்மை.
ராஜலக்ஷ்மியைப் பார்க்க வராமல் இருந்துவிட்ட காந்திமதியை மறந்துவிட்டு; பார்க்க வராத இளைஞர்களின் மேல் சபரிநாதனின் மனம் திரும்பிவிட்டது. ஊரில் உள்ள ஒவ்வொரு இளைஞனாக நினைவில் கொண்டுவந்தார். தனிப்பட்ட முறையில் இவன்களில் யாருமே கெட்ட பையன்கள் கிடையாது. அதேமாதிரி ரொம்ப அழகான பையன் என்று சொல்கிற மாதிரியும் ஒருத்தனும் கிடையாது!
ஆனாலும் சபரிநாதனின் ஆழமான மனதில் ஊர் பையன்களின் விஷயத்தில் ஒரு கரும்புள்ளி விழுந்துவிட்டது. இளைஞர் சமுதாயத்தின் மேலேயே கொஞ்சம் பயம் கொண்டுவிட்டார்! இந்த பயத்தில் இருந்து அவரால் மீளவும் முடியவில்லை, பயத்துக்கு அணை போடவும் தெரியவில்லை. எனவே அணை போடமுடியாத அவருடைய பயமெல்லாம் ராஜலக்ஷ்மியின் சுதந்திரங்களுக்கு அணை போடுகிற கருவியாகிவிட்டது. இத்தனைக்கும் அவரின் உள்மன பய ஊற்றை ஆரம்பத்தில் அவளிடம் சொற்களால் அவர் காட்டிக் கொள்ளவேயில்லை. அவளிடம் அவர் நடந்துகொண்ட சின்னச் சின்ன தோரணைகளில் சின்ன வியர்வை பெருக்குபோல உள்மன பய ஊற்று கசிந்தோடிக் கொண்டிருந்தது.
நதிமூலம் இப்படித்தான் இருக்கும். சின்னஞ்சிறிய சதுக்கத்தில் தலைக் காவேரி ஸ்படிகமாகச் சுரக்கும். போகப்போக அந்தச் சின்ன ஊற்று நீர் விரிந்து பாயும் காவேரியாக எப்படிப் பிரவகித்து விடுகிறது…? அந்தக் கதைதான் சபரிநாதனின் பய வெள்ளத்திற்கும்…
விரிந்து பரந்த காவேரியின் மையத்தில் ஒரு தீவுத் திடலாகத்தான் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையும் துண்டிக்கப் படப்போகிறது. ராஜலக்ஷ்மிக்குக் கூட அந்த தீவுத் திடலில் இருந்து மீட்சி உண்டு. ஆனால் சபரிநாதனுக்குத்தான் அந்த மீட்சி கிடையாது. காந்திமதியிடம் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் சாபம் அத்தனை பொல்லாதது…
ராஜலக்ஷ்மி, சபரிநாதனுடன் திருமண வாழ்க்கையைத் தொடங்கி இருபது மாதங்கள் பாலைவனத்தில் நகரும் ஒட்டகமாக கடந்து விட்டிருந்தன. நீரில் மூழ்கிக் கிடக்கும் கனமான வாகனம் போல அவளுடைய ஒவ்வொரு தினமும் அவரின் பயப் பிரவாகத்தின் கீழ் அமிழ்ந்து போயிருந்தது. அவளின் கல்லிடைக்குறிச்சி வாழ்க்கையில் கூட ஒரு சன்னமான உயிர்த் துடிப்பு மனசுக்குள் தம்பூராவின் சுருதியாக ரீங்கரித்துக் கொண்டிருந்தது. ஆனால் சபரிநாதனின் மனதில் இருந்து வெள்ளமாகப் பீறிட்ட பய எண்ணம் அந்தத் தம்பூராவின் இழைகளையே சிதிலப்படுத்தி விட்டது. அழகான இசைக்கருவி சிதைத்து போவது எவ்வளவு பெரிய துர்பாக்கியம்? மேலும் மேலும் துர்பாக்கியங்கள் கவிந்து கொண்டே இருந்ததில் அவளின் வாழ்வு வெளி மேலும் மேலும்தான் குறுகியது. அதனால் ராஜலக்ஷ்மிக்கு ஒருவித மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
ஒருநாள், அவள் கல்யாணத்தின்போது சுகுணா வாங்கித் தந்திருந்த ஹார்ஸ் பிரவுன் நிற கார்டன் சேலையைக் கட்டிக்கொண்டு கேசவ பெருமாள் கோயிலுக்கு கிளம்பினாள். சபரிநாதன் அவளுடன் வாசல் வரை வந்து தெருவின் இரண்டு புறமும் இரண்டு தடவை ஒரு பார்வை பார்த்தார். ‘இளைஞன் எவனாவது தெருவில் எங்கேயாவது நின்று ராஜலக்ஷ்மி கோயிலுக்குப் போகிற அழகைப் பார்க்கிறானா’ என்பதுதான் அதற்கு அர்த்தம். அந்த அர்த்தம் அவளுக்கும் புரிந்துதான் இருந்தது.
தினமும் காலை, வேலைகள் முடிந்ததும் ராஜலக்ஷ்மி பெருமாள் கோயிலுக்குப் போயிட்டு கொஞ்சம் நிதானமாக வரலாம். இந்தச் சிறிய சுதந்திரத்தை சபரிநாதன் பெரிய மனசு வைத்துத் தந்திருந்தார். கொஞ்ச நேரத்திற்காகவது சுதந்திரக் காற்றை சுவாசித்துவிட்டு வர ராஜலக்ஷ்மியும் தவறாமல் காலையில் பெருமாள் கோயிலுக்கு கிளம்பி விடுவாள். தவிர, மலையோடு மலையாய் சார்ந்து போயிருந்த கோயிலின் அமானுஷ்ய வனப்பு அவளின் மனசை மிகவும் ஈர்த்திருந்தது. அன்றும் அந்த வனப்பில் நீண்டநேரம் மனதைப் பறி கொடுத்துவிட்டு தெருக்கோடியில் திரும்பியதுமே வீட்டுத் திண்ணையில் தூணைப் பிடித்தவாறு சபரிநாதன் நிற்பதை ராஜலக்ஷ்மி பார்த்தாள். ஆனால் அவளுடைய தலை தெரிந்ததுமே சபரிநாதன் உள்ளே விரைந்து போய் ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு குறைந்த வேகத்தில் ஆட ஆரம்பித்தார். மெட்டி சத்தம் கேட்டது. துளசி மணம் நாசியை வருடியது.
“ராஜி தாயி” கண்களைத் திறக்காமலேயே அழைத்தார். இந்த அலட்டலில் எல்லாம் குறைச்சல் கிடையாது!
“என்னங்க?”
“துளசி இருக்கா?”
“இருக்கு. இந்தாங்க.”
“துளசி வாசனை, துளசி வாசனைதான் இல்லே?”
“நம்ம வீட்டுத் துளசிகூட இவ்வளவு பசுமையா இருக்காது.”
“மரகதம் இருந்தப்ப முந்தி இருந்திச்சி ராஜி… இப்ப நீ கட்டியிருக்கிறது என்ன சேலை?”
“நம்ம சுகுணா வாங்கிட்டு வந்து தந்தது.”
“நல்லாவாயிருக்கு?”
“இப்படிப்பட்ட சேலை எதையும் நான் கட்டினதே கிடையாது. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.”
“இதெல்லாம் பொருத்தமாகவே இல்லை ஒனக்கு. கல்யாணமாகாத சின்ன வயசுப் பிள்ளைங்க கட்ற சேலை இதெல்லாம். இப்ப ஒனக்கு இருக்கிற அந்தஸ்துக்கு பட்டுச் சேலையை மாத்திரம்தான் நீ கட்டணும்.”
“வீட்ல இருக்கும்போது கூடவா?”
“மரகதம் இருந்தாளே, இருபத்திநாலு மணி நேரமும் அவ பட்டுச் சேலையில்தான் இருந்தா. வாய் நெறைய வெத்தலையும் போட்டுக்கிட்டு மஹாலஷ்மி மாதிரி நிப்பா பாரு… என் ஆசை நீயும் அவளை மாதிரியே இருக்கணும். இந்த வெங்காயத் தோல் கணக்கா இருக்கிற சேலைகளைத் தூக்கி வீசி எறி. அலமாரியில் மரகதத்தோட பட்டுச் சேலைங்க அம்பதோ அறுபதோ கெடக்கு. அத எடுத்துக் கட்டு. இன்னும் வேணுமானாலும் சொல்லு; டவுண் போய் போத்தீஸ்ல வாங்கியாரேன். நெதம் ஒண்ணு கட்டு. நம்ம அந்தஸ்துக்கு தக்கபடி பெரிய மனுஷியாட்டம் இரு. எனக்கு அதான் பிடிக்கும்.”
‘எனக்கு அதான் பிடிக்கும்’ என்ற கடைசி வார்த்தைகள் மட்டும் சற்று அழுத்தமாக வந்தன. கட்டுகிற சேலையில் கூட சபரிநாதனின் அதிகாரம் ராஜலக்ஷ்மியை சற்றுத் திகைக்க வைத்தது. இந்த அதிகாரக் கடுமை வெறும் சேலை மட்டும் சம்பந்தமானதாகத் தெரியவில்லை. பிரியப்படும் சேலைகள் கட்டும் சுதந்திரம் ரொம்பத் தந்திரமாக மறுக்கப்படுவதை அவளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. நியாயமே இல்லாமல் தண்டிக்கப்பட்ட குழந்தையின் மன நிலையிலேயே அன்று பூராவும் இருந்தாள் ராஜலக்ஷ்மி.
சபரிநாதன் மாலையில் படித்துறைப் பக்கம் கிளம்பிப் போனார். உடனே ராஜலக்ஷ்மி பல காலமாகத் திறக்காமல் இருந்த மரகதத்தின் அலமாரியைத் திறந்தாள். ஒரு பட்டுச் சேலையை உருவி எடுத்தாள். ஒரே தூசி வாசனை. பட்டுச்சேலை குட்டிச் சாக்கு போல கனத்தது. அதை கட்டிக்கொண்டாள். வெற்றிலைப் பெட்டியை எடுத்து வெற்றிலையும் போட்டுக்கொண்டாள். கண்ணாடியின் முன்னால் போய் நின்று தன்னுடையை உருவத்தை உற்றுப் பார்த்தாள். சட்டென ராஜலக்ஷ்மியின் நினைப்பில் ஒரு மின்னல் வெட்டியது. அந்த பட்டுச் சேலையிலும் வாய் நிறைந்த வெற்றிலையிலும் அவள் பத்து வயசு கூடினவளாகத் தோற்றமளித்தாள்! கணவன் என்ற மனிதனின் கபட மனசு அவளுடைய தோற்றத்தில் தெரிந்தது.
உடனே மறுபடியும் மிருதுவான கார்டன் சேலையை கட்டிக்கொண்டாள். வாயை நன்றாகக் கழுவினாள். கண்ணாடியில் பார்த்தாள். சின்ன வயசுக் கன்னிப்பெண் போல அழகாகத் தெரிந்தாள். ராஜலக்ஷ்மியின் கண்களில் லேசாக கண்ணீர் திரண்டது. மனம் சற்று விம்மியது. சபரிநாதனின் கள்ளத்தனம் முள்போல அவளின் மனசைத் தைத்தது. ஒருவித பயத்தையும் அவளுக்குள் ஏற்படுத்தியது.
இது நடந்து ஒருவாரம் இருக்கும். ஒரு ஜோலியாக சபரிநாதன் திருநெல்வேலி கிளம்பிப் போயிருந்தார். அப்போது புதுப் பெண்ணிடம் அரட்டையடிக்க நான்காவது வீட்டின் நீலாக்கா ஓடிவந்து விட்டாள். பேச்சின் நடுவில், ராஜலக்ஷ்மி நீலாக்காவிடம் இயல்பாக, “மரகதக்கா எப்பவுமே பட்டுச்சேலைதான் கட்டுவாங்களாமே?” என்று கேட்டாள்.
“சொன்னது ஆரு?”
“அவங்கதான்.”
“என்னத்துக்கு அவுக இப்படிப் பொய் சொன்னாகன்னு தெரியலையே.”
ராஜலக்ஷ்மி சற்று அதிர்ந்தாள். “அவங்கதான் சொன்னாங்க. அக்கா இருபத்திநாலு மணிநேரமும் பட்டுச் சேலையில்தான் இருப்பாங்களாம்.”
“இருந்தாலும் சபரி அண்ணாச்சி இப்படி புளுகக்கூடாது. கல்யாணம் காட்சின்னு போகும்போது மட்டும்தான் பட்டுச்சேலை. மிச்ச நேரம் பூராவும் புல்வாயில் சேலைதான் கட்டுவாஹ.”
“நெசமாவா?”
“பொய் சொல்லி எனக்கு என்ன ஆகப்போகுது கண்ணு?”
சிறிது சிறிதாக ராஜலக்ஷ்மிக்குள் அதிர்வின் தாக்கம் அதிகரித்தது. இவ்வளவு பெரிய அற்பப் பொய் எதற்காக? யோசித்துக்கொண்டே இருந்தாள். நன்றாக யோசனை செய்தபின் உண்மை அவளுக்கு உரைத்தது.
யாருடைய கண்ணிலுமே அவள் இளம் பெண்ணாகத் தெரிவதை சபரிநாதன் விரும்பவில்லை. அப்படி அவள் இளம் பெண்ணாகத் தெரிந்ததில் ஏற்பட்ட அனுபவம்தான் குற்றாலமும், வள்ளியூரும். அம்மாதிரி அனுபவங்கள் இனி தவிர்க்கப்பட்டாக வேண்டும். அதற்காக ராஜலக்ஷ்மியை ஒரே நாளில் ஒளவைக் கிழவியாக்கிவிட முடியாது! ஆனால் ஒரு பத்து வயது அதிகமாக்கிக் காட்ட முடியும். பட்டுச் சேலையும் வெற்றிலையும் அதற்குத்தான். அந்தஸ்துக்காக என்று சொல்லிக் கொள்வதெல்லாம் வெறும் பித்தலாட்டம்! இதனால் சபரிநாதனின் அந்தஸ்து ராஜலக்ஷ்மியிடம் தாழ்ந்து போனதுதான் மிச்சம்!