பட்டாபிராமன் புனர்ஜன்மம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2025
பார்வையிட்டோர்: 646 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று எனக்கு மனசே சரியாக இல்லை. கவலையே அறியாது வளர்ந்துவிட்ட எனக்கு, இந்தத் திடீர் அனுபவம் தாங்க முடியாததாக இருந்தது. 

கார்ப்பரேஷன் தெரு விளக்குகள் புதுமணப் பெண்களைப் போல தலையைக் குனிந்து ஒரு குரல் அழுத வண்ணம் வெளிச்சம் அளித்துக் கொண்டிருந்தது. பஸ் ஹாரன் சப்தமும், டிராமின் கடபுடா ஒலியும், மக்களின் இரைச்சலும் சேர்ந்து அன்று என் வேதனையை இன்னும் அதிகமாக்கின. 

தினமும்தான் இந்தக் கார்ப்பரேஷன் தெரு விளக்குகள் ஒளி கொடுக்கின்றன. டிராமும், பஸ்ஸும் ஓலமிடுகின்றன; ஆனால், அன்று இவையெல்லாம் எனக்குப் புது அனுபவமாகவும் வேதனைவித்தாகவும் இருந்தமைக்குக் காரணமில்லாமல் போகவில்லை. 

சென்ற வாரம் சென்னையில் பிரபல வர்த்தகக் கம்பெனி ஒன்றின் மேல் மாடி இடிந்து விழுந்ததன் காரணமாக நான்கு குமாஸ்தாக்களும், இரண்டு கூலியாட்களும் உருத்தெரியாமல் நசுக்குண்டு போன பரிதாபச் செய்தி உங்களுக்கு நினைவிருக்கிறதா? 

அந்த நால்வரில் என் உயிருக்குயிரான நண்பன் பட்டாபிராமனும் ஒருவனாயிருந்தபோது, என் இதயம் எப்படி வேதனை அடையாமல் இருக்க முடியும்? 

குறிப்பிட்ட நீண்ட விடுமுறைக்குப் பின் சம்பவம் நடந்த தினத்தன்று நான் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்தேன். பட்டாபிராமனை அன்று மாலையில்தான் சந்திக்கலாம் என்றிருந்தேன். அவனைக் கடைசியில் இந்தக் கோலத்தில் காண வேண்டியிருந்ததால் – திடீரென இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதால் – உள்ளத்திலுண்டான அதிர்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? 

பட்டாபிராமன் பி.ஏ., என் பால்ய நண்பன். ‘அ, ஆ’ கற்றுக் கொள்ளப் பள்ளியில் சேர்ந்தது முதல் கடைசியாகக் கல்லூரியில் இருவரும் பிரியும்வரை ஒன்றாகவே படித்து வந்தோம். ‘இரட்டையர்’ என்று எங்களை எல்லாரும் கூறிப் பெருமைப்படுமளவுக்கு நண்பர்களாக இணை பிரியாதிருந்தோம். 

கம்பீரமான தோற்றமும், கவர்ச்சியான நிறமும், வாரிவிட்ட அமெரிக்கன் கிராப்பும், அகன்ற நெற்றியுமுடைய அவனை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் தோன்றும். சதா அவனுடன் சுற்றிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து என் நண்பர்களெல்லாம், ‘டேய், நீ அவனுடன் செல்வது எப்படியிருக்கிறது தெரியுமா? ரோஜாப்பூவைச் சுற்றி வண்டு வட்டமிடுவதுபோல் இருக்கிறது’ என்று கேலியாகக் கூறுவார்கள். எங்கள் நிற வேறுபாட்டிற்காக அவர்கள் அப்படிக் கூறினாலும் உண்மையிலேயே நானும் அவனும் மலரும் வண்டும்போல் பிரிக்க முடியாதவர்களாகவே வாழ்ந்து வந்தோம். 

இப்படி அற்ப ஆயுளில் அவன் மாண்டுவிடப் போகிறானென்று நான் நினைத்தேனா? அல்லது அவன்தான் நினைத்திருப்பானா? புத்திசாலித் தனமும், அழகும், கம்பீரத் தோற்றமும் கவர்ச்சிகரமான பேச்சும் அளித்த ஆண்டவன், வாழ்க்கையில் அவனுக்குக் குடும்ப சுகத்தையோ நிம்மதியையோ அளிக்கவில்லை. 

அவனுடைய சிறு வயதிலேயே அவன் தந்தை இறந்தார். பிரமாத சொத்து ஒன்றும் வைத்துச் செல்லாவிடினும் அவன் தாயார் மிகச் சிக்கனமாகவும், சாமர்த்தியமாகவும் குடித்தனம் நடத்தி அவனை பி.ஏ. வரையில் படிக்க வைத்தாள். 

வேலை தேடுவதற்காகப் பட்டாபிராமன் சென்னைக்கு வந்தான். சுலபத்தில் வியாபாரக் கம்பெனியொன்றில் நல்ல வேலையும் கிடைத்தது. அவனுக்கு முன்பே நான் சென்னையில் வேலையில் சேர்ந்து விட்டேன். என் பிரிய நண்பன் சென்னைக்கே வந்துவிட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 

என்ன காரணத்தினாலோ நாளடைவில் அவனுடைய மன அமைதி குலைந்தது. தன் மன நிம்மதியின்மையையும் – ஆயாசத்தையும் அவன் ஒளிவு மறைவின்றி என்னிடம் கூறுவான். படபடப்பு, வேகமறியா அவனுக்குப் பரபரப்பும் ஆயாசமும் உண்டாயின. களங்கமற்ற அவன் உள்ளத்தில் கவலைகள் வந்து மூண்டன. உலகிலேயே காதலும் போரும் முக்கியமானவையாக இருக்கும் போது, பட்டாபிராமனின் வாழ்க்கையிலும் அந்தக் காதல் வந்து முளைக்காமலிருக்குமா, என்ன? 

கிளியென்பார்களே! மாதுளைத் தளிர் என்பார்களே! தங்கப் நுமையென்பார்களே! இவையெல்லாம் – இந்த உவமைகளெல்லாம் ஜானகி விஷயத்தில் தோற்றுத்தான் போகும். உவமை கூற முடியா அழகி, உவமை கூற முடியாத அழகனான பட்டாபிராமன் மேல் காதல் கொண்டாள். காரியாலயத்துக்கு அவன் போகும்போதும் வரும்போதும் அந்தக் கிளி ஜன்னலருகே காட்சியளித்து, அவனுடைய ஆசைத் தீயை வளர்த்தது. 

ஒருதலைக் காதலாக அவன் காதல் இருந்துவிடப் போகிறதோ என்று எண்ணி, நான் ஒரு நாள் பட்டாபியிடம், “ஜானகி, ஜானகி என்கிறாயே, அவளுக்கு உன் மேல் பிரியமுண்டா?” என்று கேட்டு விட்டேன். 

“ஹூம்… ஜானகிக்கா என் மீது பிரியமில்லை என்கிறாய்? இதோ பார்!’ என்று என் முன்னே ஒரு கத்தைக் கடிதங்களை எடுத்துப் போட்டான். மணி மணியான எழுத்துகளில் ஜானகி காதல் கதை பேசி இருந்தாள். உள்ளத்தையே கொட்டி இருந்தாள். இவ்வளவு துணிவுடன் கடிதம் எழுதுமளவுக்கு அவர்கள் காதல் வளர்ந்தது குறித்து எனக்கும் சந்தோஷம்தான்! 

“அது மட்டுமாடா? அவள் அப்பாவுக்கு ஒரே பெண். பெயிண்ட் நம்பெனி ஒன்றில் அவருக்கு வேலை. ஜானகி என்னைச் சுட்டிக்காட்டி ‘இவரைத்தான் மணப்பேன்’ என்று கூறிவிட்டாள். அவள் தந்தை என்னை அணுகி, ‘என்ன சீர் செய்வதானாலும் தயார். உங்கள் தாயாரின் சம்மதத்தைக் கேட்டு வாருங்கள்!’ என்று சொல்லி விட்டார். 

“பிள்ளையின் மனத்தை அறியாத தாயார் இருந்து என்னடா பயன்? முதலில் ‘சரி, பார்க்கலாம்’ என்றவள் பிறகு, ‘அவர்கள் நம்ம ஜாதி இல்லைடா… சம்பந்தம் பண்ணலாமா?’ என்று மறுத்துவிட்டாள். ‘ஜானகியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம் என்றால் எனக்குக் கல்யாணமே வேண்டாம்’ என்றேன். ‘அப்பா, பட்டாபி! நீ எனக்கு ஒரே பிள்ளை. எவ்வளவோ கஷ்டப்பட்டு உன்னை வளர்ந்தேன். உங்கப்பா வைத்துப் போன கடனை அடைத்து உன்னை பி.ஏ. வரையில் உழைத்துப் படிக்க வைத்தேன். உனக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்வித்து குடியும் குடித்தனமுமாக நீ சௌக்யமாக இருப்பதை நான் பார்க்க வேண்டுமடா! நம்ம ஜாதியை விட்டு வேற ஜாதியில் பெண் எடுக்க மனது இடம் கொடுக்கவில்லை. எனக்கு என்ன… உன்னைத் தவிர இன்னொரு பிள்ளையா இருக்கிறான்? உனக்குப் பிடிவாதமாக அந்த இடத்தில்தான் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று இஷ்டமிருந்தால் என்னை ஒன்றும் கேட்க வேண்டாம். நீயே நிச்சயதார்த்தம் செய்து கொள்; நீயே போய்த் தாலியைக் கட்டி விடு நான் வரவில்லை!’ என்று சொல்லிவிட்டாள். எனக்கு ஆத்திரம் ஒரு பக்கமும் அழுகை ஒரு பக்கமுமாகப் பொங்கி வந்தது. 

‘கடைசியாக ஒன்று சொல்வேனம்மா! என்ன ஜாதிப் பிரிவு நமக்குள்ளேயே வேண்டியிருக்கிறது? அவர்களே சம்மதிக்கையில் நமக்கென்ன? கல்யாணம் செய்து கொள்வதாயிருந்தால் நான் ஜானகியைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்; இல்லாவிடில் பீஷ்மரைப் போல, இளங்கோவடிகளைப் போல, சுபாஷைப் போல பிரம்மச்சாரியாகவே இருந்து காலத்தைக் கழிப்பேன்’ என்று சபதம் செய்து விட்டேன். 

ஒரு சமயம் தாயின் சொல்லுக்கு விரோதமாக, ஜானகியைத் துணிந்து மணந்து விடுவது என்று தோன்றும். கடைசியில் இரண்டாவது எண்ணம்தான் ஜெயித்தது. ஜானகியை நான் பார்ப்பதைக் கூட நிறுத்திக் கொண்டேன். நல்ல காலந்தானோ என்னவோ, அவள் தந்தையைத் கல்கத்தாவுக்கு மாற்றி விட்டார்கள். என் சபதம் அவளுக்கும் தெரியும்: ஆனால், அவளால் என்னைப் போல் உறுதி எடுத்துக் கொள்ள முடியுமா?” என்றான் பட்டாபி ஒருநாள் கடைசியாகச் சந்தித்தபோது; 


நான் அவன் தாயாரிடம் வாதாடிப் பார்த்தேன். பழங்காலத்தும் பெரியவர்களின் எண்ணத்தை – நம்பிக்கையை மாற்ற முடியுமா? முடியவில்லை. அதற்குப் பிறகு நான் சொந்த வேலை நிமித்தமாக வெளியூர் சென்று வந்த அன்றுதான் இந்தக் கோரச் சம்பவம் நடந்தது அந்தச் சம்பவம் நடந்த தினத்தன்று காலையில் நான் அவளைக் காரியாலயத்தில் சந்திக்கச் சென்றேன். அவன் இல்லை. 

இந்த மன வேதனையுடன் அன்றிரவு நான் அறையில் விளக்குக் கூ ஏற்றாமல் உட்கார்ந்திருந்தேன். அறைக் கதவு மெல்லத் திறந்தது. 

மனத்தில் வேதனையடைந்துள்ள ஒருவனுக்குச் சிறு சப்தமும் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும் அல்லவா? எனவே, நான் திடுக்கிட்டு விட்டேன். திடுக்கிட்டதற்கேற்றாற்போல் ஓர் உருவம் வெரு சுவாதீனமாக உள்ளே நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது விளக்கைப் பொருத்தினேன். 

என்னால் நம்பவே முடியவில்லை. உடலெல்லாம் வியர்த்தது குபீரென உடலில் ரத்தம் வேகமாகப் பரவித் தணிந்தது. இதயம் படபடத்தது. “யார்… ர்..? ப… ட்… டாபி… யா?” எனக் குழறினேன் 

“பயப்படாதேடா! நான்தான்; சாக்ஷாத் பட்டாபியேதான். ஆனால் புது குணங்கள் – கொள்கைகள். இப்போது நான் நசுக்குண்டதாக ஊரே பேசிக் கொள்கிறது. நல்லவேளை, நான் ஊரில் இல்லை. திக் பிரமையில் என் தாயும் செத்தவன் நான்தான் என அடையாளம் கூறி யிருக்கிறாள். பாவம், அழுது அழுது அவள் பாதி இறந்திருப்பாள். ஒரே மகன்; கஷ்டப்பட்டு வளர்த்த மகன்; செல்வமாக நல்ல இடம் தேடி மணம் புரிவித்து ஆசையோடு பார்க்க வேண்டிய மகன். ஆம், நண்பா! நான் இறந்ததாகவே இருக்கட்டும்; என் சபதம் நிறைவேறியதாகவே இருக்கட்டும். நாளைக் காலை நான் கல்கத்தாவுக்கு விமானத்தில் போகிறேன். அங்கு போய் ஜானகியைச் சந்திப்பேன். மறுநாளே அவளை மணந்து கொள்வேன். பிறகு வடக்கேயே காலங்கழிப்பேன். புது வாழ்வு வாழ ஆசைப்பட்டேன்; கிடைத்து விட்டது. பயப்படாதேடா! உன்னை மறக்க மாட்டேன். போய் வருகிறேன்!” என்று கூறிவிட்டு, அவ்வுருவம் கிளம்பிச் சென்றது. 

ஒன்றும் தோன்றாமல் பேயடித்தவன்போல் நான் உட்கார்ந்திருந்தேன். மறுகணம திடீரென எழுந்து ஓடித் தெருவெல்லாம் பார்த்தேன். ஆள் நடமாட்டமேயில்லை. 

பட்டாபியாவந்திருப்பான்? கனவா, நனவா என்றுகூடப்புரியவில்லை. இரவெல்லாம் உறக்கமில்லாமல் தவித்தேன். பொழுது விடிந்ததும் பட்டாபியின் தாயிடம் ஓடினேன். சோகத்தில் ஆழ்ந்திருந்த அந்த அம்மாளைப் பார்த்து வேறெதுவும் பேசாமல் மீனம்பாக்கத்துக்குக் கூட சென்றேன். 

கல்கத்தாவுக்குச் செல்லும் விமானம் வந்துவிட்டது. பிரயாணிகள் எல்லாரும்தான் ஏறப் போகிறார்கள். பிரயாணிகளின் பட்டியலில் பட்டாபிராமன் என்ற பெயரையே காணோம். எல்லாப் பிரயாணிகளும் ஏறியாகிவிட்டனர். வெகு வேகமாகச் சுழலும் விசிறிகளுடம் விமானம் கிளம்பியது. ஆனால், பட்டாபி மட்டும் வரவே இல்லை. 

‘ஆனால் நேற்று? பட்டாபிராமன் புனர்ஜன்மம் எடுத்து விட்டான் என்று எண்ணினோமே, அது பொய்யா?’ என்ற நினைப்புடன் வானில் விமானம் மறையும்வரை நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். 

– 1950

– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *