கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 4,573 
 
 

(1994ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

பண்ணையார் ‘திண்ணை’ என்றே அவர் வீட்டை நான் அழைப்பது; அந்த வீட்டுக்கு அவர் ‘அறிவுப் பண்ணை’ என்று பெயர் வைத்திருந்தார். அவர் புத்தி சாலித்தனம் கண்டு வியப்பு அடைந்தேன்.

விவசாயப் பண்ணை வைத்தவர் இப்பொழுது வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கிறார். அந்தப் பேச்சு அறிவு தருகிறது என்பது அவர் நம்பிக்கை போலத் தெரிகிறது. அந்த இடத்துக்கு இது தகுதியான பெயர் என்று முடிவு செய்து கொண்டேன்.

அவர் தன்னைப்பற்றிய ஒரு செய்தி சொன்னார். அதைக் கேட்பதற்கு முன் என்னைப்பற்றிச் சொல்வதற்கு முந்திக்கொண்டேன்.

நான் என் தாய்க்கு எட்டாவது மகன்; ஆறாவதாகப் பிறந்தால் அவன் யானை கட்டி வாழ்வான் என்று கூறுவார்கள். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை அதற்கு உயிர்இயல் காட்சிச்சாலையில் உத்தியோகம் கிடைத்திருக்க வேண்டும். எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. எட்டாவது பிறந்து விட்டேன்.

எட்டாவது பிறந்தால் மாமன் சாவு தப்பாது என்று சொல்வார்கள். அது உண்மையா பொய்யா என்பது இன்னும் எனக்குத் தெளிவுபடவில்லை. என்னைப் பொறுத்தவரை அது உண்மை என்று தான் நினைக்கிறேன். நான் என் வீட்டுக்கு எட்டாவது மகன்; அது கள்ளம் கபடம் இல்லாத காலம்; வரையறை பற்றிச் செவியறை செய்யாத காலம். என் முன்பிறந்தவர்கள் எல்லாம் மடிவதில் கியூவில் நின்றார்கள். நான் ஒருவன்தான் தேவகி தேவகி மைந்தனாக நின்றேன். என் தந்தை வசுதேவர் பிறப்பு இறப்புக் கணக்குப் பதிவுகள் செய்வதிலேயே காலம் கழித்தார். அந்த ஆபீசு அவருக்கு அத்துப் படி.

நான் பிறந்த போது என் மாமன் அதாவது தாய் மாமன் என் அம்மாவுடன் பிறந்தவர் அவரைக் கம்சன் என்றே கூறினார்கள். அது அவர் பிறந்த அமிசம்; எங்கள் வமிசம் அப்படி; கல்மிஷம் இல்லாதவர். அந்தக் காலத்தில் மாரடைப்பு என்று இந்தக் கதவு அடைப்பைச் சொல்வது இல்லை; நெஞ்சுவலி என்று சொல்வார்கள், இருந்தார் கிடந்தார் போனார் என்று அவர் பெயர் எடுத்தார். நான் பிறந்தேன்; அதனால்தான் அவர் இறந்தார் என்ற கதை வலுப்பெற்று விட்டது. ரொம்பவும் வருத்தம் தான். என்னால் ஒருவர் இறந்தார் என்று எப்படிக் கேட்டுக் கொண்டு இருக்க முடியும். ஏன் பிறந்தேன் என்று சில சமயம் எண்ணுவது உண்டு. கஷ்டம் வரும்போது எண்ணுவது உண்டு. என் மாமன் சாவின் பேச்சு வரும்போது இப்படி எண்ணுவது உண்டு.

இதை நம்பத் தயார் இல்லை என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். மற்றவர்கள் நான் சொல்வதை நம்பத் தயாராக இல்லை. இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவிரும்பினேன்.

அவரிடம் இதை விவாதிப்பேன். காக்கை ஏறப் பனம் பழம் விழுந்தது என்னும் போக்கை அவருக்கு எடுத்துக் காட்டுவேன். அந்தப் பண்ணையார் நான் சொல்வது எண்ணிப் பார்க்கவும் மறுத்துவிட்டார். தம் சாதகத்திலும் தம் மகன் பாதகம் ஆவான் என்று எழுதி இருப்பதாக எடுத்துச் சொல்வார். அவனுக்கு மணம் ஆனால் மகன் பிறப்பான்; பிறந்தவன் சும்மா இருக்க மாட்டான்; வளர்வான். அவன் வளர்ந்து இரண்டு ஆண்டுகளில் தனக்குத். தீபம் ஏற்றுவான் என்று கணித்து அதைத் துணிந்து கூறுகிறார்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது வழக்கு உரைஞரிடம் செல்லுவது தப்பாது; படம் நூறு நாள் ஓடினால் அதற்கு என்று விழாக் கொண்டாடுகிறார்கள். ஜோசியம். அவர்கள பிழைப்பு ஓடிக் கொண்டே இருக்கிறது; அதற்கு எந்த விழாவும் கொண்டாடுவது இல்லை; எனறாலும் ஆரவாரம் இன்றிச் செல்வந்தர் தம் வீட்டுத் தாழ்வாரங்களில் அவர்களுக்கு இடம் தந்து சாதகப் பலன் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் கணித்துக் கூறுவதைப் பணிந்து ஏற்றுக்கொள்ள ஏற்றுக்கொள்ள வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை. மறுப்புச் சொல்வதற்கு எதிர் காலம் வராது; முன் நின்று எதிர்ப்புச் சொல்லப் போவது இல்லை. இந்தத் தொழிலை என் நண்பர் தொழில் ரீதியாக ஏற்காவிட்டாலும் திக்கெட்டும் பரவிய புகழ் இவருக்கு ஒரு சந்தையை உண்டு பண்ணிவிட்டது. அட்வான்சு புக்கிங் செய்துவிட்டு ஆட்கள் அவரிடம் வந்து கொண்டிருந்தனர்.

நான் சொல்லுவேன் “உமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. யாருமே தம் பதவிகளில் ஒட்டிக் கொண்டி ருப்போம் என்ற நம்பிகைகள் இருப்பது இல்லை. தேர்தல்கள் இருக்கும் வரை உங்களுக்கு நல்ல பிழைப்பு. ஜோசியனைக் கலக்காமல் கட்சி டிக்கட்டுகள் வாங்கமாட்டார்கள். வெற்றி பெற்றதும் ஐந்தாண்டு நீடிக்குமா என்று ஐயப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் அமைச்சர்கள் ஆகிவிட்டாலும் ஆட்டம் கொடுக்காது என்பது நிச்சயம் இல்லை. இவர்கள் எல்லாம் உம்மிடம் வந்துகொண்டே இருப்பார்கள்.

அதைவிட நடிகர்கள் நடிகைகள் அவர்களுக்குத் தம் நடிப்பு மீது நம்பிக்கை இருப்பது இல்லை. அப்படி இருந்தாலும் இந்த மக்களை நம்புவதற்கும் இல்லை; ரசிகர்கள் அவர்களை நம்ப முடியாது. அதனால் தம் நட்சத்திரப் பதவி நிலைக்குமா என்ற அச்சம் ஏற்படுகிறது. இவ்வாறு எந்தத் தொழில் செய்தாலும் அதில் நிலைபேறு இருப்பது இல்லை. தொழிலுக்கு வந்தவர்கள் தங்கள் பதவி உயர்வு எப்போது என்று சதா கனவு கண்டு கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமற்ற நிலையில் உம் தொழில் நிச்சயம் வெற்றி பெறும்; அச்சமின்றித் தொடரலாம்” என்று ஊக்குவிப்பேன்.

அவர் அதை ஏற்றுக்கொண்டது இல்லை. காசு வாங்கினால் பலிக்காது என்பது அவர் நம்பிக்கை. போகட்டும் வட்டிக்கடை வைத்து ஈட்டிக்காரர் ஆகிப் பலர் சேட்டுகள் ஆகி வருவதைச் சுட்டிக் காட்டுவேன். அதை இப்படியாவது பெருக்கலாமே என்று அவருக்கு வழிகள் பேசிக் காலம் கடத்துவோம்.

“திரை வானமும் புது மழை பொழிகிறது. இனிமேல் உணர்ச்சி நடிகர்களுக்கு இடம் இல்லை. செயல் நடிகர் களுக்கே எதிர்காலம்; கராத்தே பயிற்சியாளரும் குத்துச் சண்டை வீரர்களும் இனிமேல் திரைப்படத்தில் தம் சாகசங்களைக் காட்ட முயல்வார்கள். அவர்களும் உம்மைக் கேட்டுக் கொண்டுதான் கால் வைக்கப் போகிறார்கள்” என்று பேசித் தூண்டுவேன்.

எவ்வளவு சொல்லியும் அவர் இதைத் தொழிலாக ஏற்று நடத்த முன் வரவில்லை. அவர் ஏதோ திட்டத்தைத் தீட்டுவது போல் எனக்குக் காணப்பட்டார்.

பேச்சை மாற்ற நினைத்தேன்; அதனால் அவன் மகன் முத்துவைத் தேர்ந்து எடுத்தேன்.

“முத்துக்கு என்ன வயது?”

“முப்பதுக்கு மூன்று குறைவு” என்றார்.

“நாற்பதுக்குப் பதின்மூன்று குறைவு என்று கூறி இருக்கலாமே” என்றேன்.

“இருபதும் ஏழும்” என்றார்.

“இருபத்தேழு என்று சொல்லி இருக்கலாமே?”

“ஜோசிய நூல் படித்துப் பழக்கம். அதில் வீடுகள் இப்படித்தான் சுட்டிக் காட்டுவர்கள்” என்றார்.

தொழில் பழக்கம் என்பது அறிந்தேன்.

‘பெண்ணுக்கு வயது இருபத்து ஒன்று. அதுதான் கலியாண வயது” என்றார்.

“யார் நிச்சயித்தது?’

“அரசாங்கம்”

“சற்றுத் தள்ளிப்போடலாமே’

“முப்பதுக்குப் போகக்கூடாது”

“நீங்கள் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறீர்களே” என்று கேட்டுவிட்டேன்.

“தள்ளிப் போடவில்லை; கொள்ளி போட என் பேரன் பிறப்பான் என்று சாதகம் கூறுகிறது. அவன் பிறந்து இரண்டாம் ஆண்டு நான் என் இரண்டு கண்களையும் மூடி விடுவேன் என்று எழுதி இருக்கிறது. அதைச் சற்றுத் தள்ளிப் போடலாமே என்றுதான் பொறுத்து இருக்கிறேன்” என்றார்.

“நீங்கள் வருமுன் காத்திருக்கலாமே?”

“எதைச் சொல்கிறீர்?”

“மகனைப் பெறாமல் இருந்திருக்கலாமே?”

“அவள் கேட்டால் தானே! அவள் அவசரப்படுத்தி னாள்; நிதானிக்கலாமே என்றேன்; என் ஆண்மையைச் சந்தேகித்தாள். சாதகம் அப்படிக் கூறுவது உண்மை என்றால் அதனால் பாதகம் இல்லை. நான் நிச்சயம் பேரனைக் காண்பேன்” என்று பேசுகிறாள்.

“பையனையும் அவசரமாகப் பெற்றெடுத்தாள்; இப்பொழுதும் அவசரப்படுத்துகிறாள். பையனுக்கு முதலில் கலியாணம் பண்ணிவையுங்கள்; மருமகள் இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கட்டும். அது போதும். இந்த வீடு கிழடு தட்டிவிட்டது. வரவர இது சந்நியாசி மடமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. காவி வேட்டி ஒன்று வாங்கி அதை இரண்டாகக் கிழித்து உங்களுக்கு ஒன்று; உங்க பையனுக்கு ஒன்று என்று மாட்டிக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு வெள்ளைச் சேலையை மஞ்சளில் நனைத்துக் கொடுங்கள். அரே கிருஷ்ணா இயக்கத்துக்கு நான் தலைமை வகிக்கிறேன். இதனைப் பஜனை மடம் ஆக்குகிறேன் என்று கூறுகிறாள்” என்றார்.

அத்தியாயம் – 5

ஜோசியரை நோக்கி ஒரு ஓசி கிராக்கி வந்து சேர்ந்தது. அவர் ஏழை என்றும் பணக்காரன் என்றும் இந்த வகையில் வேறுபாடு காட்டுவது இல்லை. தன்னை மதித்து வருகிறான் என்பதைவிடத் தன் ஜோசியத்தில் அவன் நம்பிக்கை காட்டுகிறானே என்பதால் அவனைப் பெரிதும் வரவேற்றார்.

“ஏன் சார் ஒருத்திகூட நிலைத்து இருக்கமாட்டேன் என்கிறாள்” என்று மனைவியைப் பற்றிய அழுகையைத் தன் தொழுத கையோடு கூறினான்.

“ஏன் ஒரு வேலைக்காரன்கூட நிலைத்து இருக்க மாட்டேன் என்கிறானே” என்று கூறுவது போல் இருந்தது அவன் சொல்வது.

“அவர்கள் என்னோடு தாக்குப் பிடிக்க மாட்டாமல் தூக்குப் போட்டுக்கொண்டார்கள்” என்றான்.

“காரணம்?”

“பெண்கள் தூக்குப் போட்டுக் கொள்வதற்கு இதுவரை யாரும் காரணம் கண்டுபிடித்ததே இல்லை; இனிமேலும் இதில் யாரும் வெற்றி பெற முடியாது” என்றான்.

“நீ அவளைக் கவனிப்பது இல்லையா?”

“குடித்துவிட்டு வந்து நன்றாகக் கவனிப்பேன். நான் அடித்தால் அழவேண்டுமே. அதைச் செய்ய மாட்டாள். அடி’யா இன்னும் போட்டு உதை என்று அடம்பிடிப்பாள். அதை எப்படி நிராகரிப்பது? என்னால் முடிந்தவரை விளாசுவேன். அதற்குப் பிறகு சங்கீதம் செய்வாள்; அவள் பாட்டைக் கேட்க அக்கம் பக்கத்தவர் வந்து கூடி விடுவார்கள்.

“அவன் பெண்டாட்டியை அவன் அடிக்கிறான்; உங்களுக்கு என்ன வேலை?” என்று ஒரு பெரிய மனிதர் மைக் இல்லாமல் பேசுவார்.

“இன்று அடிப்பான்; நாளைக்குக் கொஞ்சுவான்; அது அவன் இஷ்டம். பொண்டாட்டி புருஷன் சண்டை” என்று கூறி அலுத்துக்கொண்டு போய்விடுவார்கள். மண் சிவக்காது. கண்தான் சிவக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

“ஏன்’பா அவளை அடிச்சே?”

“சே! அந்தச் சுகம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் ஒரு நாள் தொட்டுப் பாருங்க. உங்களுக்குச் சுகம் தெரியும்” என்றான்.

நாங்கள் ஏன் நிம்மதியாக இருக்கிறோம் என்று அவன் உபதேசம் செய்தான்.

“அடுத்தவள்?”

“குடியைக் கெடுத்தவள்; ஓடுகாலி” என்றான்.

“இது என்ன நாற்காலி முக்காலிபோல இருக்கிறதே?” என்று கேட்டேன்.

“எனக்குத் தெரியாது” என்றான்.

என் நண்பர் புத்திசாலி; அதனால் இதற்கு விளக்கம் தந்தார்.

“ஓடுகின்ற காலை உடையவள் ஓடுகாலி. கை மாறுவாள்; ஆள் மாறுவான்; அவள் ஒரு இடத்தில் நிலைத்து இருக்கமாட்டாள்” என்று விளக்கம் தந்தார்.

‘Rolling Cup’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அதுபோல் இது இருக்கிறது என்று கூறி விளங்கிக் கொண் டேன்.

மேலே அவன் தொடர்ந்தான்.

“அவள் ஒருவனை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்” என்றான்.

“அவன் அவளை இழுத்தானா? அவள் அவனை இழுத்தாளா?” என்று கேட்டேன்.

“இந்த இழுபறி எல்லாம் எனக்குத் தெரியாது: அவள் என்னிடத்தில் இல்லை” என்றான்.

“நல்லதாகப் போச்சு: அவளும் மற்றவளைப் போலத் தூக்கு மாட்டிக் கொண்டு உனக்குத் துயரத்தை உண்டாக்காமல் போய் விட்டாள், உத்தமி” என்றேன்.

“உத்தமி யார் என்று நான் கேட்கவில்லை. இருந்து கெடுத்தவளா இல்லாமல் கெடுத்தவளா என்று நான் கேட்கவில்லை. அடுத்து மற்றொருத்தியை நான் தாலி கட்டினால் அவளாவது தங்குவாளா?” என்று கேட்டான்.

“சட்டப்படி அவள் உன்மனைவி; அவள் இஷ்டப்படி இன்னொருவனுடன் இருந்து பார்க்கிறாள்; கட்டுப்படி இல்லை என்றால் தட்டுத் தடுமாறி உன்னிடம் வரவேண்டியவள் தானே?” என்று ஆறுதல் கூறினேன்.

“அது எப்படித் திரும்புவாள் என்று எதிர்பார்க்கிறீர்?” என்று கேட்டான்.

“ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்; 91வது நாள் அவள் வந்து சேர்வாள்” என்று ஜோசியர் கூறினார்..

அன்று ஆறுதலாகச் சென்றான்; மறுநாளும் வந்து அறுத்தான்.

“உன்னை விட அவள் வசதி மிக்கவளா?’

“இருக்கலாம்; தெரியாது”

“அப்படியானால் மறந்து விடு” என்று அறிவுரை கூறினேன்.

“உங்களைக் கேட்கவில்லை. ஜோசியரைத்தான் கேட்கிறேன்” என்று திருத்தம் கூறினான்.

பண்ணையார் அவன் கிரகங்களை எண்ணினார். விண்வெளியே பயணம் செய்தார். சுக்கிரன் சனி குரு புதன் இவர்களைத் தேடிக் கண்டுபிடித்தார்; அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று வழிகாட்டி நூல் ஒன்றை வைத்துப் புரட்டிப் பார்த்துக் கண்டுபிடித்துச் சொன்னார்.

“சனி எட்டாம் திசையில் இருப்பதால் அவளும் உனக்கு எட்டாத தூரத்துக்குப் போய்விடுவாள்; உனக்குத் தாலி பாக்கியம் இல்லை; தனபாக்கியம்தான் உண்டு” என்று சொல்லிமுடித்தார்.

“ஐயா! அவள் பெயர் தனபாக்கியம். பேர் ராசி பார்த்து அவள் பெயர்ந்து திரும்புவாளா என்று பார்த்துச் சொல்லுங்கள்” என்று வேண்டிக்கொண்டான்.

“அவள் நல்லவள்தான்; கிரகதோஷம் அவளை ஆட்டிப் படைக்கிறது” என்றார்.

“என்னை ஆட்டிப்படைக்காமல் இருக்க வேண்டும்; அதைப் பார்த்துச் சொல்லுங்கள்” என்றான்.

“தனபாக்கியம் என்ற பெயர் இருப்பதால் அவள் உன்னிடம் வர வாய்ப்பு இருக்கிறது. பிறகு நீ அவளைப் பத்திரமாக வைத்துக் காப்பாற்ற வேண்டும்: அந்தப் பொறுப்பு உன் கையில்தான் இருக்கிறது” என்று கூறினார்.

“உன் பையிலும் இருக்கிறது.” என்று பேசிச் சிரிக்க வைத்தேன்.

மலடி கரு உற்றது போலவும், குருடன் விழி பெற்றது போலவும், செத்தவன் உயிர் பெற்றது போலவும் நிதி நிறுவனங்களில் கட்டிய டெபாசிட்டுகள் ஒழுங்காக கைக்கு வந்தது போலவும் சென்றவள் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

எல்லாம் ஜோசியரின் கருணை என்று அவன் அவர் கணிப்புத் திறனைப் பாராட்டினான்.

“இவளா இவன் மனைவி” என்று ஆச்சரியத்தில் கேட்டு வைத்தேன்.

“ஏன் கேட்டீர்கள்?” என்றார்.

“அழகாக இருக்கிறாளே என்பதால்” என்றேன்.

“அழகாக இருக்கக்கூடாதா?” என்று கேட்டார்.

“இல்லை; அவள் திரும்பி வந்துவிட்டாளே. அதனால் தான் கேட்டேன்” என்றேன்.

பிரிந்தவர் கூடினால் பேசாது இருக்க முடியுமா?

அம்பு மழை தொடுத்தாள்.

“போனவள் திரும்பமாட்டாள் என்று நினைத்து விட்டாயா? புது ஜாதகம் பார்க்க வந்து விட்டாயா?” என்று விசாரணை நடத்தினாள்.

“உனக்குப் பாதகம் விளைவிக்க மாட்டேன். நீ போன இடத்தில் நிலையாக இருப்பாயா என்றுதான் விசாரித்தேன்.” என்றான்.

“உனக்கு ஒரு பாடம் கற்றுத்தரத்தான் போனேன். உன் மூஞ்சிக்கு எவன் சட்டை செய்வான் என்று சொன்னாயே! அதுக்கு ஆள் இருக்குது என்று காட்டத்தான் போனேன்”. என்றாள்.

“அவன் ஏன் உன்னை விட்டு விட்டான்?”

“அவனுக்கும் இதே பிரச்னைதான். அவன் மனைவி அவனைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்டு இருக்கிறாள். “உன் மூஞ்சிக்கு எவள் வருவாள் என்று. அதுக்கு ஆள் இருக்குது என்று காட்டத்தான் என்னை அழைத்துக் கொண்டு போனான். அவள் திருந்திவிட்டாள்; என்னைத் திருப்பிவிட்டான்” என்று விளக்கம் தந்தாள்.

“இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி நீதிபதி போலப் பேசி அவர்கள் இருவரையும் விடுவித்தோம். “நன்றி” என்று சொல்லி அந்த நாயகன் எங்களை விட்டு நீங்கினான். இது சிரிப்பதற்கு ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக இருந்தது.

நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூனியின் முதுகை இராமன் உண்டை வில்லால் அடிப்பான் என்று. சிறுவன் ஒருவன் பந்தடித்து முன்னால் இருந்த ‘பல்பை’ உடைப்பான் என்று.

இராமனைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் நடுநடுங்கிவிட்டான்.

“ஏன் பயப்படுகிறாய்? மறுபடியும் உடைப்பதற்கு ‘பல்பு’ இல்லை என்றா? கவலைப்படாதே. புதிது ஒன்று மாட்டி வைக்கிறேன். நாளை வந்து உடை” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

இது மற்றோர் சுவை மிக்க நிகழ்ச்சியாக இருந்தது.

அத்தியாயம் – 6

பிறைமதி ஒளிவிட வேண்டிய வானம் பண்ணையார் இல்லம் தான் என்று எனக்குப் பட்டது. படித்தவள் வேண்டும் என்று அவர் சொன்னாரே தவிர அவள் பட்டம் பெற்றவளா அதை விட்டவளா என்று திட்டவட்டமாக அவர் தீட்டிக் காட்டவில்லை.

படித்தால் அவள் நாலு காசு கொண்டு வந்து சேர்ப்பாளா அல்லது குணவதியாகக் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டத் தேவையா என்பதை அவர் விளக்கவில்லை.

அவசரப்பட்டு நானும் ஆவேசப்படவில்லை. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க பொறுக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. நாக்கை அதன் போக்கில் விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது நாவலர் வள்ளுவர் நவின்று உரைப்பது நான் அறியாதது அல்ல. அந்தக் குறளே விசித்திரமானது. ‘காக்க’ என்று வரும் கா என்ற சொல்லை மீண்டும் மீண்டும் ஆளுவது அபாய அறிவிப்பாக இருக்கிறது.

“யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

என்பது அந்தக் குறட்பா.

சோ என்றால் சோகம், சோர்வு என்ற பொருள் தருகிறது. இச்சொற்களில் கடைக் குறையோ இது என்று நடைமுறையில் எண்ணத் தோன்றுகிறது. சோ என்ற நடிகர் ஒருவர் எழுத்தாளராகவும் இருந்து சோர்வினைப் போக்கி வருகிறார் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

நகைச்சுவையாகப் பேசுவதில் நயத்தக்க சாதனை படைத்தவர் இந்த ‘சோ. தமிழில் நகைச் சுவை விருந்து நல்கிய நல்லோர்கள் இல்லாமல் இல்லை.

“எட்டே கால் லட்சணமே எமனேறும் பரியே” என்று அவ்வையார் யாரையோ விளித்தாராம்.

அவன் உச்சி குளிர்ந்து விட்டானாம்; எட்டும் காலும் கூடிய அளவு அழகும் பொலிவும் உடையவன் எனவும், எமன் ஏறும் வாகனம் எனவும் தன்னைச் சிறப்பித்ததாகக் கருதிக் கொண்டானாம். பிறகு தெரிந்தது; தான் அவலட்சணம் என்றும் எருமைக்கடா என்றும் இழித்துக் கூறி இருக்கிறார் என்பது.

கழகப் பதிப்பில் தமிழில் எண்கள் எழுதுவார்கள். எட்டு என்பதற்கு ‘அ’ என்றும் கால் என்பதற்கு ‘வ’ என்றும் அச்சிடுகிறார்கள். இது தமிழ் எண்கள் ஆக ‘அவ’ என்றால் எட்டே கால் என்பதை உணர்த்துகிறது. எமனேறும் வாகனம் எருமைக்கடா; நயமாகப் பேசுவதில் நாயகமாகவும் தமிழ்ப் புலவர்கள் விளங்கி இருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

‘நா காக்க’ என்பது இப்பொழுது அவசியம் ஆகி விட்டது. பழங்காலத்திலே போருக்குச் சென்றானாம் ஒரு தலைவன். வீட்டில் தலைவி இருக்கிறாள். அவன் நினைவுகள் இருபக்கம் இழுக்கப்படுகின்றன.

இரண்டுக்கும் நடுவில் அவன் மனம் அல்லல் உறுகிறது. தேய்புரிப் பழங்கயிறு போல’ என் நெஞ்சு அழிந்து விடுமோ என்று அவன் கூறுகிறான். அது போன்ற நிலைமையாக என் நிலைமை ஆகிவிட்டது.

பிறை மதியை அவர் திருமகனுக்குப் பேசி முடிப்பதா என் அருமைமகன் வேலுச் சாமிக்குக் கட்டி வைப்பதா என்று இருபால் படாது என் நெஞ்சு அலைவுற்றது.

– தொடரும்…

– படித்தவள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1993, அணியகம் பதிப்பகம், சென்னை.

ரா.சீனிவாசன் டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்;1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். அவர் எழுத்துப் பல துறைகளில் இயங்கி வருகிறது; மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *