பகைமையின் எல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 62 
 
 

ஹாஸ்டலுக்கு எதிரே இருந்த பூங்காவில் நடுநாயமாக விளங்கியது அந்த மகிழ மரம் தழைத்துப் படர்ந்து பசுமை கவிந்த அதன் கீழ் அன்று சுபத்ராவும் மாலதியும் தனியாகப் பிரிந்து வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். ஊசி ஊசியாக மெல்லிய பூஞ்சாரல் விழுந்து கொண்டிருந்தது. அதில் நனைந்து கொண்டே புல்வெளியில் கும்பல் கும்பலாகக் கூடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் மற்ற மாணவிகள். மகிழ மரத்தடியில் சுபத்ராவும் மாலதியும் மட்டும் அமர்ந்து தங்களுக்குள் ஏதோ சம்பாஷித்துக் கொண்டிருந்தனர்.

பேச்சுக்கு நடுவே எப்படியோ, சுபத்ரா, நாராயணனைப் பற்றி ஏதோ சொல்ல வேண்டியதாகப் போயிற்று. அவ்வளவுதான், அவள் சரியாக மாலதியிடம் மாட்டிக் கொண்டு விட்டாள்.

“ஏண்டி சுபத்ரா! உனக்கு அந்த ‘தரித்திர’ நாராயணனைப் பற்றிப் பேசா விட்டால் பொழுது போகாதோ? நல்ல நாராயணன் வந்தானடி! ஆமாம்! அவனுக்குக் குளிப்பதற்கு, சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு ஏதாவது நேரம் மீதி இருக்கிறதோ, என்னவோ? ஐயோ பாவம்! உன் நாராயணன் காலேஜ் படிப்பை முடித்து விட்டு வெளியேறும்போது அதிகப் படிப்பினால் மூளைக் கோளாறாக முடிந்து கீழ்ப்பாக்கத்திற்குப் போகாமல் இருக்க வேண்டும்!” – மாலதி தன் வெண்கலச் சிரிப்பிற்கிடையே சுபத்ராவைக் கிண்டல் செய்தாள்.

சுபத்ரா, அர்த்த புஷ்டியோடு கூடிய புன்னகை ஒன்றை இதழ்களில் ஓடவிட்டுக் கொண்டே மாலதிக்கு விடை கூறினாள்: “உனக்கு என்ன குரோதமோ தெரியவில்லையேடி! அந்த நாராயணனைப் பற்றிப் பேசத் தொடங்கினாலே கரித்துக் கொட்டுகிறாயே? ஏ அப்பா! தான் உண்டு, தன் காரியம் உண்டு என்று இருக்கிற மனிதனை உலகம் எவ்வளவு குரோதம் பாராட்டுகிறது? நீ மட்டும் இல்லையடி மாலு! இந்தக் காலேஜில் படிக்கும் அத்தனை அரட்டைக் கல்லிகளும் நாராயணன் என்றால் கரிக்கிற கரிப்பு… அதைச் சொல்லி முடியாது. ‘புத்தகப் புழு, புத்தகப் புழு’ என்று வாய்க்கு வாய் திட்டி ஆளைக் கோட்டாப் பண்ணி விட்டால் உங்களுக்கு என்னதான் பிரயோஜனம் கிட்டுகிறதோ? படிப்பில் ஒரு மண்ணையும் காணோம்! கேலிக்கு மட்டும் குறைச்சலில்லை. நாராயணன் கால் தூசி பெற மாட்டீர்கள்!” – சுபத்ராவின் பேச்சு விளையாட்டாகப் பேசப்பட்டதுபோல இருந்தாலும் மாலதிக்கு அதைக் கேட்டதும் கோபம் வந்து விட்டது.

அவள் சுபத்ராவை உறுத்துப் பார்த்த பார்வையில் அந்தக் கோபம் பளிங்கிலே பிரதிபலிக்கும் சிவப்பு நூல் போல வெளிப்படையாகத் தெரிந்தது.சுபத்ரா, சட்டென்று அதைப் புரிந்துகொண்டவள் போலப் பேச்சை அதோடு நிறுத்தினாள். மாலதியின் முன்கோப இயல்பும் படபடப்பும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அதற்கு மேல் மாலதியிடம் வாயைக் கொடுத்தால் அவள் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லித் தாறுமாறாக நடந்துகொள்வாள் என்பதை சுபத்ரா பழக்கத்தில் அறிந்திருந்தாள். அன்று அதற்குப்பின்பு ஹாஸ்டல் மணி அடிக்கின்றவரை இருவரும் எதைப் பற்றியும் பேசிக் கொள்ளவில்லை. மெளனமாக அமர்ந்திருந்துவிட்டு மணி அடித்ததும் எழுந்து சென்றனர்.

ஹாஸ்டலில் அவர்கள் இருவரும் ஒரே ரூமில் வசிப்பவர்கள். ஒன்றாகப் பழகுகின்றவர்கள். அந்தரங்க சிநேகிதிகள். தங்களுக்குள் எதையும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளும் அளவிற்கு நெருங்கிய நட்பு இருந்தது. ஆனால், குணங்களில் மட்டும் அளவு படுத்த முடியாத ஏற்றத் தாழ்வு இருந்தது. சுபத்ராவுக்குப் பிடித்தது மாலதிக்குப் பிடிக்காது. மாலதியின் வழி தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் சுபத்ரா அதை வெறுத்ததில்லை. குணங்களின் ஏற்றத்தாழ்வு ஒருபுறம் இருந்தாலும், அதை ஒரு வியாஜமாக வைத்துக்கொண்டு அடிக்கடி சண்டை சச்சரவுகளுக்கு இடங்கொடுத்ததில்லை அவர்கள்.

தான் எவற்றையெல்லாம் நவநாகரிகமாகக் கருதுகின்றாளோ, அவற்றின்படி தன் நடையுடைபாவனைகளை அமைத்துக் கொண்டிருந்தாள் மாலதி, ஆடம்பரத்திலும், பிறரைக் கவர்கின்ற விதத்தில் தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் அவளுக்கு அதிகமான பிரியம் உண்டு. ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி; தன்னைப்போல ஆடம்பரத்தை விரும்பாதவர்களை அவள் அலட்சியத்தோடு தான் நோக்குவாள். அந்த இயல்பு நீக்க முடியாதபடி அவளோடு அவளாகப் படிந்திருந்தது. வேண்டுமென்றே அவள் இப்படி நடந்து கொள்வதாகச் சொல்லி விடுவதற்கும் இல்லை. அது ஒரு போக்கு அலாதியான தன்மையுடையது.

சுபத்ராவின் இயல்பு இவைகளுக்கு நேர்மாறானது. அவள் எளிமையையே விரும்புகின்றவள். “நாகரிகம் என்பது உடல் அளவில் அமையவேண்டியது இல்லை. உள்ளத்தோடும் குணங்களோடும் அமையவேண்டிய பண்பாடு அது” என்று அழுத்தமாக நம்புகின்றவள். நடையுடை பாவனைகள், பிறரிடம் பழகுவது எல்லாவற்றிலும் எளிமையைக் கடைப்பிடித்தாள் அவள்:

இதன் விளைவாக ஏற்பட்ட வம்பு என்னவென்றால் அந்தக் காலேஜில் மாணவர்கள், மாணவிகள் ஆகிய இரு சாராரும் மொத்தமாக ஒன்றுசேர்நது சுபத்ராவையும் நாராயணனையும் ஒருவிதமாக ஒதுக்கிப் பேசிக் கிண்டல் செய்வது வழக்கமாகி விட்டது. அதுவும் மாலதி ஒருத்தியே அதைத் தனிப்பட்ட சிரத்தையோடு செய்துவரத் தவறுவதில்லை. சுபத்ராவையாவது அவள் சில சமயங்களில் விட்டு வைப்பாள்.நாராயணனைத்தான் என்ன காரணத்தாலோ, அவள் தன் முழு வைரியாக எண்ணி வந்தாள். அவனைப் பற்றிப் பேசுவதற்கு எங்கே, எப்போது வாய்ப்பு நேர்ந்தாலும் சரி, அவள் அவன் மீது தனது முழுக் குரோதத்தையும் கொட்டிப் பேசத் தவறமாட்டாள். அது அவளுக்கு ஒரு பொழுதுபோக்கு ஒரு வேடிக்கை இவ்வளவிலும் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் என்னவென்றால், அவள் தன்னைப் பற்றி அப்படிக் கண்டபடி பேசுகிறாள் என்பதை நன்கு அறிந்திருந்தும், நாராயணன் அதைப் பற்றிக் கண்டித்து அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாததுதான். “நீங்கள் என்னைப்பற்றிப் பல சந்தர்ப்பங்களில் அநாவசியமாக ஏதேதோ பேசி வருகிறீர்களாம். இது அவ்வளவு தூரம் நல்லது இல்லை” என்று தன்னிடம் நாராயணன் கூறுவதற்கு வருவான் – ஏன், கூறவேண்டும் என்று ஆவலாக அவள் எதிர்பார்த்தது வீணாயிற்று. அவன்தன்னை லட்சியம் செய்யாமல் நடந்து கொள்கிறான்’ என்பதை எண்ணும்போது கொதி பொறுக்காத நொய்யரிசி போலப் பொங்கி அசூயையால் குமுறும் அவள் மனம் ஆவலில் விளைந்த அந்த அசூயையை நாளடைவில் பகையாக மாற்றிக்கொண்டுவிட்டது அவள் உள்ளம். இந்த மானஸீகப் பகைமை மாலதியின் உள்ளத்தில் வேரூன்றி வளரத் தொடங்கிய நாளிலிருந்து சுபத்ராவை அவள் கேலி செய்வது நின்றுவிட்டது. நாராயணன் ஒருவனே அதற்குப் பரிபூரணமாகப் பாத்திரன் ஆனான். அவனுடைய அடக்க ஒடுக்கமான தோற்றம் அவள் நவநாகரிகக் கண்களுக்குப் ‘பழைய பத்தாம்பசலி’ ஆகத் தெரியும். ஆனால், இப்படித் தெரிவது மாலதியின் கண்களுக்கு மட்டும்தான். அவள் உள்ளம் குரோதத்தால் புகையும் அந்த நிலையிலும், மனத்தின் அந்தரங்கத்திற்கும் அந்தரங்கமாகி ஆத்தரிகமாக விளங்கும் அவள் உள் மனமோ என்றால் நாராயணனது அந்தத் தோற்றத்தில் ஏதோ ஒருவகைக் காம்பீர்யம் இருப்பதாக ரஸிக்கும். இது அவளது உள்ளத்திற்கு மட்டும் தெரிந்த உண்மை; அவளுக்கும் அவள் சரீரத்துக்கும், அந்த சரீரத்தின் மனோபாவங்களை மதிப்பிடுவதற்கு முயலும் உலகத்திற்கும்கூடத் தெரியாத உண்மை – மறைந்த உண்மை.

நாராயணன் ஐந்தே முக்கால் அடி உயரம் வளர்ந்திருப்பான். வாரி முடிந்த கட்டுக்குடுமி. கருகருவென்று சுருண்டு வளர்ந்திருக்கும் அந்தக் குடுமி, அவனுடைய தோற்றத்திற்குப் பிரதானமான செளர்ந்தர்ய முத்திரை. காதுகளில் புஷ்பராகக்கல் பதித்த இரண்டு வெள்ளைக் கடுக்கன்கள். பரந்த நெற்றியில் சிறு சந்தனப் பொட்டு. நீண்ட நாசி, பார்வையிலேயே நகைபொதிந்த பிரகாசமான நயனங்கள். எப்போதும் வாய்விட்டுச் சிரிக்கும் பழக்கமேஇன்றி அசைவிலேயே புன்னகை செய்யும் மென்மையான உதடுகள்.முக்கோண வடிவாக நீண்டிருந்த அவன்முகத்தால் குடுமியும், குடுமியால் முகமும் பரஸ்பரம் கவர்ச்சி பெற்றன. முழுக்கைக் கதர் ஜிப்பாவும், நாலு முழம் வேஷ்டியும்தவிர, ஆடை விஷயத்தில் எந்தவிதமான ஆடம்பரமும் அவனை அண்டியதே இல்லை. இத்தகைய தோற்றத்தோடு அவன் நடந்துவரும்போது பார்த்தால் கொடியுடனே கூடிய வெண்தாமரைப் பூ ஒன்று காற்றிலே வேகமாகப் பறந்து வருவதுபோல் தோன்றும்.

சிதம்பரத்திலே மிகப் பெரிய செல்வந்தராகிய, வைதிக கனபாடிகள் ஒருவரின் ஏக புத்திரன் அவன். இயற்கையாகவே சாந்த குணமும் அடங்கிய சுபாவமும் அவனிடம் அமைந்திருந்ததனால், தகப்பனால் கண்டிக்கும்படியான நடையுடை பாவனைகள் தன்னை நெருங்காமல் அவனாகவே கவனத்தோடு நடந்து கொண்டான். அதுதான், ‘பத்தாம் பசலி, கட்டுப்பெட்டி, உம்மணாமூஞ்சி’ என்ற பெயர்களை மாலதி போன்ற பெண்களிடமிருந்தும் சக மாணவர்களிடமிருந்தும் அவன் அடையக் காரணமாக இருந்தது.

ஆனால், பிறர் தன்னைப்பற்றி என்ன எண்ணுகிறார்கள், என்ன பேசுகிறார்கள், தன்னிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்பனவற்றில் அதிக கவனத்தைச் செல்லவிடாமல், தான் தனக்காகக் காலேஜ் வாழ்வை எப்படி நடத்திக் கொள்ளவேண்டும் என்பதில் மட்டும் கவனத்தைப் பயன்படுத்தி இலட்சியங்களை ஏற்படுத்திக்கொள்ளும் பண்பு நாராயணனிடமிருந்தது.

இந்தப் பண்புதான் காலேஜ் வாழ்க்கையில் அவனுக்கு ஒரு நல்ல தற்காப்புக் கவசத்தைப்போல உபயோகப்பட்டு வந்தது.மற்ற மாணவர்கள், மாணவிகள் தன்னிடம் அசட்டுத்தனமாக நடந்து கொள்ளும் சில சந்தர்ப்பங்களில் அவன் மனத்திலும் ஆக்ரோஷம் தலைகாட்டும். ஆனால், “இரண்டு கைகளையும் தட்டினால் தானே சப்தம்?” நாம்தான் பொறுத்துக்கொள்வதால் என்ன குடிமுழுகிப் போய்விடும்?” என்று அப்போது தன் மனத்தை அடக்கிக் கொள்ள அவன் பழகியிருந்தான்.

‘லேபரேடரி’யில் பரிசோதனைகள் நடக்கும்போது, மாணவர்களையும் மாணவிகளையும் தனித்தனியே பிரிக்காமல் எல்லோரையும் சேர்த்து மொத்தத்தில் நான்கைந்து ‘க்ரூப்’களாக இணைத்து விட்டுவிடுவார் அந்தப் பேராசிரியர்.

அதனால் சில வகுப்புக்களில் மாலதி, நாராயணன் ‘குரூப்பில்’ இருந்து அவன் கீழ் அன்றைய ‘எக்ஸ்பெரிமெண்டு’களை நடத்தவேண்டியதாக நேர்ந்துவிடும். அப்போதெல்லாம் தன் தோழிகளிடம் சொல்வதுபோல நாராயணன் காதில் நன்றாக விழும்படி, “அடி வனஜா! இன்றைக்கு என்னை அந்தத் ‘தரித்திர’ நாராயணன் ‘குரூப்’பிலே மாட்டி விட்டுவிட்டாரடி இந்தப் புரொபஸர். பாரேன் வேடிக்கையை! பரிசோதனையைச் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஒடும்படி படாதபாடுபடுத்திவிடுகிறேன்” என்று உரத்த குரலில் சிரித்துக்கொண்டே கூறுவாள்.

அதைக் கேட்டு மாணவர்கள் உள்பட யாவரும் நகைப்பார்கள். சுபத்ரா ஒருத்திதான் மனமார நாராயணனிடம் அனுதாபம் காட்டுவாள். ஆனால், இதைக் கேட்டவுடன், மாலதியின் கண்களில் நன்கு படும்படி மிகவும் சர்வசாதாரணமான அலட்சியப் புன்னகை ஒன்றை உதடுகளில் நெளிய விட்டுக்கொண்டே பரிசோதனை வேலையில் ஆழ்ந்துவிடுவான் நாராயணன்.

அவனது அந்த அசாத்திய மெளனமும் அலட்சியப் புன்னகையும்தான் மாலதியின் உள் மனத்தை அணு அணுவாகச் சுட்டுக்கொண்டிருந்தது. ஆனால், வெளிக்குத் தெரியாமல் குரோதப் புகையில் அந்தச் சுடுநெருப்பு மறைந்திருந்தது. வேறுவிதமாகச் சொன்னால் அவள் உள்ளத்தை வற்புறுத்தி மறைக்க முயன்றாள் என்றுதான் சொல்லவேண்டும்.

கந்தக அமிலத்தில் இரண்டொரு துளிகளைத் தற்செயலாகக் கொட்டி விடுவது போல நாராயணன் வேஷ்டியிலே தெறிக்கச் செய்வாள். அமிலம் தெரித்த இடங்களிலே வேஷ்டி எரிந்து வட்ட வட்டமாகக் கருகிப்போகும். நாராயணன் தலைநிமிர்ந்து தன் வேட்டியையும் அவளையும் இமை கொட்டாமல் மாறிமாறிப் பார்ப்பான். கம்பீரமான அந்தப் பார்வை அவளை அம்பாகத் துளைக்கும். “தவறிப் பட்டுவிட்டது, மிஸ்டர்! மன்னித்துவிடுங்கள்” என்று உதட்டிலிருந்து பிறந்த அனுதாபமற்ற போலிச் சொற்களால் பூசி மெழுகி மன்னிப்புக் கேட்பதுபோல நடிப்பாள் அவள். அப்படி அவள் மன்னிப்புக் கேட்பது போன்ற பாவனையிற் பேசிய பின்பாவது, ‘பரவாயில்லை’ என்ற ஒரே ஒரு வார்த்தையாவது நாராயணன் வாயிலிருந்து வெளி வரவேண்டுமே! அதுதான் இல்லை! வெளிப்படையாக நாராயணனின் பரம வைரிபோல் நடந்து கொண்ட மாலதி, உள்ளுர அந்த ஒரே ஒரு வார்த்தைக்காகத் தவித்தாள் – ஏங்கினாள் என்றே சொல்ல வேண்டும்.

“காலேஜில் தமிழ் வகுப்பு நடந்து கொண்டிருக்கும். நாராயணன் தமிழ்ப் புரொபஸர் கூறுவதில் ஆழ்ந்த ஈடுபாட்டுடனே கவனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பான். சுற்றி மடித்த காகிதச் சுருள் ஒன்று பெண்கள் பகுதியிலிருந்து அவன் டெஸ்கின்மேல்வந்து விழும்.அதை வீசி எறிந்து விட்டு ஒன்றும் தெரியாதவள் போலப் பாடத்தில் கவனங்கொண்டு விடுவாள் மாலதி, புரொபஸர் கண்கள் கண்டு கொள்ளாமல் நடக்கும் இந்தக் கடிதத் தாக்குதல்.ஆனால், பாடத்தை முடித்துவிட்டுப் புரொபஸர் அங்கிருந்து வெளியேறும்வரை நாராயணன் அந்தக் காகிதச் சுருளைக் கையால் தொடக்கூட மாட்டான். புரொபஸர் இருக்கும்போது அதைப் பிரித்து அவரிடம் காட்டிவிட அவனுக்குத் தெரியாது என்பதில்லை. அவன் அப்படிச் செய்தால் மாலதிக்கு ஒரு ‘ரிமார்க்’கும் ‘ஃபைனு’ம் நிச்சயமாகப் பழுத்துவிடும். அதோடு போகாமல் நாராயணன்மேல் அதிகமான அன்பும் அனுதாபமும் கொண்ட அந்தப் புரொபஸர் வகுப்பில் அத்தனை பேருக்கும் நடுவில் மாலதியைத் தலைகுனியச் செய்துவிடுவார். நல்லவேளையாக நாராயணன் அதற்கெல்லாம் இடமளிக்கவில்லை. கடிதத்தைப் பிரித்துப் பார்த்தால் நாராயணனைப் பற்றி ஏதாவது இகழ்ந்து எழுதியிருப்பாள். சில சமயங்களில் அது ஒரு கவிதை போலக்கூட அமைந்திருக்கும்.

“கொட்டை வட்டக் கடுக்கன்
கொப்பரைக் காய்க் குடுமி
நெட்டை வற்றல் உருவம்
நீண்ட மூக்குச் சாமி?”

என்று ஏதோ அவளுக்குத் தோன்றியதைக் கைபோனபோக்கில் எழுதியிருப்பாள். நாராயணனை இகழ்வதாக எண்ணிக்கொண்டு அவள் இதை எழுதியிருந்தாலும் நாராயணன் இதைப் படித்துவிட்டு அலட்சியமாகத் தனக்குள் சிரித்துக்கொள்வான். சிரித்துக் கொண்டே அதே காகிதத்தில் அந்தப்பாட்டின் கீழேயே,
“உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
உருள்பெருந் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து”

என்ற திருக்குறளை எழுதுவான். பின் அந்தக் காகிதச் சுருளைக் கையில் எடுத்துக் கொண்டு சென்று அவள் அமர்ந்திருக்கும் பெஞ்சியின் டெஸ்க்கில் அவள் கண்கான வைத்து விட்டு வகுப்பிலிருந்து வெளியேறுவான். இதையெல்லாம் விடப் பெரிய வேடிக்கை என்னவென்றால் அவன் அந்தக் காகிதச் சுருளை டெஸ்க்கில் வைக்கும்போது, மாலதி பெஞ்சில் அமர்ந்துகொண்டிருந்தும் அவள் பக்கம் கண்களைத் திருப்பாமல் பாராமுகமாகச் சென்றுவிடுவான்.

அவன் தன் பெஞ்சை நோக்கி வரும்போது அவள் நெஞ்சு ‘படபட’ என்று அடித்துக்கொள்ளும், உதடு துடிக்கும். என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றி அவள் தன் இடத்தில் எழுந்து நின்றுகொள்வாள். அப்படியும் அவன் காகிதத்தை வைத்துவிட்டுக் கவனிக்காதவன் போலச் சென்றுவிடுவான்.

காலேஜ் வருடாந்திர விழா வந்தது. அதுகூட ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்று சொல்வது தவறு. காலேஜ் பிரின்ஸிபாலிலிருந்து ஜூனியர் இண்டரில் வந்து சேர்ந்திருக்கும் நேற்றைய புது மாணவன் வரை எல்லோரும் மூக்கிலே விரலை வைத்து ஆச்சரியமடையும் படியான சம்பவம் வேறு ஒன்று நடந்தது. சகுந்தலை – துஷ்யந்தன் நாடகத்திற்கு ஏற்பாடு செய்த ஸம்ஸ்கிருத புரொபஸர் மாலதியை சகுந்தலை வேடத்திற்குத் தேர்ந்தெடுத்தார்.துஷ்யந்தனாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த நிலையில் மாலதியே அவரிடம் சொல்லிய யோசனை அவரை ஒரு கணம் திகைத்துத் திக்குமுக்காடி வியக்குமாறு செய்து விட்டது.

நாராயணனைத் துஷ்யந்தனாக நடிக்கச் சொல்லி ஏற்பாடு செய்யும்படி மாலதி ஸம்ஸ்கிருத புரொபஸரிடம் கூறினாள். ‘நாராயணனின் முதல்தர விரோதியான அவள் வாயிலிருந்தா அந்த யோசனை பிறந்தது?’ என்று எண்ணி வியப்படைந்தார் ஸம்ஸ்கிருத புரொபஸர். ஆனால், நாராயணனைத் தனியே அழைத்து, ‘நாடகத்தில் துஷ்யந்தனாக நடிக்கச் சம்மதமா?’ என்று கேட்டபோது அவனும் அவரிடம் மறுக்கவில்லை. தன்னோடு சகுந்தலையாக நடிக்க இருப்பவள் கடந்த மூன்றரை வருடங்களாகத் தன்னுடனே பகைமை பாராட்டிவரும் அந்தக் குறும்புக்காரப் பெண் மாலதிதான் என்பதைப் புரொபஸர் வாயிலாகக் கேள்விப்பட்ட பின்பும் அவன் தயங்கவில்லை – ஒதுங்கித் தளரவில்லை – சம்மதத்திற்கு அறிகுறியாக மெளனத்தோடு ஒப்புக்கொண்டுவிட்டான்.அப்படி ஒப்புக்கொண்டபோது, ஒர் அழகான யுவதியுடன் நடிக்கும் சான்ஸ் கிடைத்ததற்காக மற்ற மாணவர்கள் இயற்கையாக அடையும் மகிழ்ச்சியும் ஆர்வமும் கூட அவனுக்கு ஏற்பட்டன என்று சொல்லி விடுவதற்கில்லை. தன் சம்மதத்தை மிக அமைதியும் மென்மையும் கூடிய முறையில் அவன் புரொபஸரிடம் வெளியிட்டான். ‘அவன் எந்த உணர்ச்சியோடு, எத்தகைய எண்ணங்களின் தூண்டுதலால் சம்மதித்திருக்க முடியும்?’ என்பது புரொபஸருடைய அனுமானத்திற்குக்கூட எட்டவில்லை.

சுபத்ரா, மாலதியைக் கிண்டல் செய்தாள். அவள் கையில் காலேஜ் வருடாந்திர விழாவின் புரோகிராம் இருந்தது. “ஏதேது? எதிரியோடு ‘ஹீரோயினாக’ நடிக்கத் துணிந்துவிட்டாற்போல் இருக்கிறதே! இதன் அந்தரங்கம் என்னடி அம்மா? எனக்குத்தான் கொஞ்சம் சொல்லேன்! ‘பகையாளி குடியை உறவாடிக் கெடுக்கவேண்டும்’ என்ற சித்தாந்தமாக இருக்குமோடி?”

சக மாணவர்கள் நாராயணனைக் கண்டபோது எல்லாம் அவன் காதில் விழும் படியாக, “யோகம் என்றாலும் இப்படிப்பட்ட யோகம் அடிக்கக் கொடுத்துவைக்க வேண்டுமடா! நேற்றுவரை இந்தப் பயலைக் கரித்துக் கொண்டிருந்தாள் அவள் நாள் தவறாமல் வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தாள்! இன்றைக்கு என்னடா என்றால், ‘நான்தான் சகுந்தலை, நீதான் துஷ்யந்தன்’ என்கிறாள்! இந்தக் காலத்திலே பெண்கள் மனசுகூட பிளாஸ்டிக் ரப்பராகப் போய்விட்டது அப்பா! எதையுமே நம்பி ஒரு தீர்மானத்திற்கு வரமுடிவதில்லை” – என்று பாதி வேடிக்கையாகவும், பாதி வினையாகவும் பேசிக் கொண்டனர். நாராயணன் எப்போதும் போல அவர்களது இந்தப் பேச்சையும் லட்சியம் செய்யவில்லை. அவன் தன் போக்கில் இருந்துவந்தான்.

கோடை விடுமுறைக்குப் பின் காலேஜ் திறந்தபோது, நாராயணனும் மாலதியும் ஜோடியாக பிரின்ஸிபாலின் அறைக்குள் நுழைந்தனர். சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் ஒன்றாக வந்த காட்சியைக் கண்டவர்போல மலைத்தார் பிரின்ஸிபால்!

மாலதி புன்னகை செய்துகொண்டே மரியாதையாக அவரிடம் ஒரு கவரை நீட்டினாள். அதே சமயத்தில் நாராயணனும் ஒரு கவரை நீட்டினான். பிரின்ஸிபால் இரண்டையும் ஏககாலத்தில் வாங்கிக்கொண்டார். கவர்களை ஆவலோடு பிரித்தார்.

இரண்டு கவர்களிலும் ஒரேவிதமான மஞ்சள் நிறக் கலியானப் பத்திரிகைகள் இருந்தன. இருவரும் அவருக்கு மாணவ முறை உடையவர்கள். ஆகையால் தனித்தனியே உரிமை பாராட்டிப் பத்திரிகை கொடுத்திருந்தனர்.

பிரின்ஸிபால் ஆச்சரியக் கடலில் ஆழ்ந்தார். நமட்டுச் சிரிப்பு அவர் இதழ்களில் தவழ்ந்தது. “நாடகத்தில்தான் ஏதோ பகையை மறந்து நடித்தீர்கள் என்று எண்ணி யிருந்தேன். வாழ்க்கையில் சகுந்தலையும் துஷ்யந்தனுமாக நடிப்பதற்காகத்தான் இங்கே காலேஜ் ‘அனிவர்ஸ்ரி’யில் ஒத்திகை நடத்தினர்கள் போல இருக்கிறது! மிஸ் மாலதி! உங்களுக்குத் தனியாக ஒரு வார்த்தை-காலேஜில்தான் மிஸ்டர் நாராயணனைப் படாத பாடுபடுத்தி ஆட்டி வைத்தீர்கள். நாள் தவறினாலும் உங்கள் ‘கம்ப்ளெயிண்ட்’ இங்கே எனக்கு வரத் தவறாது! போகிறது. நிஜ வாழ்க்கையிலாவது ஒற்றுமையாக இருங்கள்! இரண்டு பகைவர்கள் வாழ்க்கையில் தம்பதிகளாக வருவது குறித்து எனக்குப் பரம சந்தோஷம்!”- பிரின்ஸிபால் சிரிப்புக்கிடையில் இப்படிக் கூறிப் பேச்சை நிறுத்தினார்.

“ஸார்! கல்யாணம் இங்கே சிதம்பரத்தில்தான் நடக்கிறது! உங்கள் வரவை அவசியம் எதிர்பார்ப்போம். வந்து ஆசீர்வாதம் செய்யவேண்டும்.” நாராயணன் கூறினான்.

மாலதி தலையைக் குனிந்துகொண்டாள்.கால் கட்டைவிரல்தரையைத் தேய்த்தது. முகத்திலே கன்னங்கள் கன்றிச் சிவந்தன. இருவரும் பிரின்ஸிபாலிடம் விடைபெற்றுத் கொண்டு வெளியேறினர்.

காலேஜில் புதிதாக அட்மிஷனுக்கு வந்து காத்துக் கொண்டிருந்த மாணவர்களும், ஏற்கனவே அவர்களுக்கு அறிமுகமான பழைய மாணவர்களும், நாராயணன் – மாலதி இருவரும் ஜோடியாகச் செல்வதைக் குறும்புத்தனம் ஒளிரும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தனர்.

முகூர்த்தம் முடிந்ததும், தன் பெயருக்கு வந்திருந்த சுபத்ராவின் அன்பளிப்புப் பார்சலையும் கடிதத்தையும் பிரித்தாள் மாலதி, ‘அன்புத் தோழி மாலதி நாராயணனுக்கு, நீ நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, உங்களின் இந்த ஐக்கியம் நான் அன்றே எதிர்பார்த்ததுதான். எல்லா மாறுபட்ட உணர்ச்சிகளும் தத்தம் எல்லைகளை மிக மிக நெருக்கமாகவே அமைத்துக்கொண்டிருக்கின்றன. மண்ணின் எல்லை கடல். கடலின் எல்லை மண். வானத்தின் எல்லை பூமி, பூமியின் எல்லை வானம். பகையின் மறுகோடியில் எல்லையாக இருப்பது அன்பும் நட்புமே. அசூயையின் எல்லை விருப்பம்தான்.உலகமே உருண்டை வடிவாகத்தான் இருக்கிறது. எங்கே புறப்பட்டாலும், எல்லை சுற்றி வளைத்து நெருக்கமாகவே வந்து சேருகிறது. உங்கள் தாம்பத்தியம் நலமுற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உன் தோழி சுபத்ரா”

உள்ளே நுழைந்த நாராயணனிடம் சிரித்துக்கொண்டே அந்தக் கடிதத்தை நீட்டினாள் மாலதி.

(1978-க்கு முன்)

– நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.

NaPa2 'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *