நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !




(வரும் + வரவழைக்கப் படும்) நோய்(கள்) அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !
கஞ்சியை டம்ளரில் ஆற்றிக் கொண்டு வந்த கவிதா, ஹாலில் கட்டிலில் படுத்திருந்த தன் தாயிடம் கொடுத்து, குடிக்கச் சொன்னாள். வலது கையில் மாவுக்கட்டு போடப்பட்டு இருந்ததால், இடது கையில் டம்ளரை லாவகமாகப் பற்றியபடி பருகும் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தவள், சமயலறையிலிருந்த வந்த குக்கர் விசில் சத்தம் கேட்டு உள்ளே போனாள்.
அவளின் கரங்கள் காய்களை நறுக்க ஆரம்பிக்க, சிந்தனை முழுவதும் கட்டிலில் படுத்திருக்கும் எண்பது வயது நிரம்பிய அம்மாவைப் பற்றியே இருந்தது. ‘அம்மா எப்படி இந்த வயதிலும் இவ்வளவு திடமாக இருக்கிறாள்? ‘தனக்கு பதினெட்டு வயதில் திருமணம் ஆனதாகவும், அடுத்த வருடமே கவிதா பிறந்து விட்டதாக’ அவள் கூறியதிலிருந்துதான், கவிதா தன்னுடைய அறுபத்திரண்டு வயதைக் கொண்டு, தன் தாயின் வயது எண்பதைத் தாண்டி விட்டது எனக் கணக்கிட்டிருந்தாள்.
கவிதாவின் பன்னிரண்டு வயதில் தங்கை பிரபாவும், பதினெட்டாம் வயதில் தம்பி குமாரும் பிறந்தனர். கவிதா கல்லூரிப் படிப்பை முடித்து, சர்க்கார் உத்தியோகத்தில் அமர்ந்தாள். அவள் திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகியிருந்த நேரம், அவள் தந்தை நோய்வாய்பட்டு இறந்து போனார். அதன் பிறகு, கவிதா அப்பா ஸ்தானத்தில் இருந்து, டீச்சராக வேலை பார்த்துக் கொண்டிருந்த, தங்கை பிரபாவின் திருமணத்தை வெகு சிறப்பாகவே செய்து முடித்ததிருந்தாள். தங்கையின் வாழ்க்கை, இரண்டு பெண் குழந்தைகளுடன் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.
ஆனால் தம்பி குமாரின் விஷயத்தில் எல்லாமே நேர்எதிராக இருந்தது. அவனுக்கு சிறு வயது முதலே படிப்பு ஏறவே இல்லை. கெட்ட நண்பர்களின் சகவாசம் ஏற்பட, கஞ்சா அடிப்பது, மது அருந்துவது மற்றும் உள்ள கூடாத பழக்க வழக்கங்கள் அவனைத் தேடி வந்தன. இத்தனைக்கும் மத்தியில் அவன் ஒரு கார்மென்ட் கம்பெனியில் டெய்லாரகவும் – பெயரளவில் ஒரு வேலையும் பார்த்து வந்தான். ஏனென்றால் செலவிற்கு அவனுக்கு அவ்வப்போது பணம் வேண்டுமே!.
அளவுக்கு அதிகமான போதைப் பழக்கம் அவனது மூளையைப் பாதிக்க ஆரம்பித்ததுடன், இதயம், சிறுநீரகம். கல்லீரல் என உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் செயலிலக்கத் தொடங்கின. நெருங்கிய உறவினர்களின் அலட்சியப் பார்வை, அவமதிப்பு – என்று தான் அவன் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. பல சமயங்களில் அவன் ஒரு வேலையாள் போலவே அவர்களால் நடத்தப்பட்டிருக்கிறான். ஆனால் அவன் அதைப் பற்றியெல்லாம் கவலை பட்டதாகவே தெரியவில்லை. அவனுக்கு ஏற்படும் அவமதிப்புகளைக் காண நேரும்போது, கவிதாவின் நெஞ்சில் ஈட்டியைச் செருகுவது போல இருக்கும்.
குமாருக்கோ – உலகமே அவனது குறிப்பிட்ட இரண்டு,மூன்று நண்பர்கள் என்றாகி விட்டது. ஏனெனில் அவனைப் பொருத்த வரை, ‘பூமியிலேயே சொர்க்கத்தை அவனுக்குக் காட்டியவர்கள் அவர்களே’ என்று திடமாக நம்பினான். மற்ற மனிதர்களோ அல்லது உறவினர்களோ அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. வயதான தாயால் அவனைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது முடியாத விஷயமாக இருந்தது.
காலிங்க் பெல் அடித்ததால் தன் சுய நினைவுக்கு வந்த கவிதா, வாசலில் வந்த காஸ் சிலிண்டரைப் பெற்றுக் கொண்டு, அதற்கான பில்லைக் கொடுத்து விட்டு உள்ளே வந்தாள், கைகள் இயந்திரமாகச் செயல்பட, அவள் மனமோ விட்ட இடத்திலிருந்து சிந்தனையைத் தொடர்ந்தது.
ஒரு முறை கவிதாவைப் பார்க்க அவள் வீட்டிற்கு வந்தான் குமார். வழக்கம் போல் கவிதாவைத் தவிர, அவள் வீட்டில் அவனை யாரும் கண்டு கொள்ள வில்லை.அவனும் அதை லட்சியம் செய்பவன் இல்லையாதலால், அவன் பாட்டிற்கு வீட்டுக்குள் வளைய வந்து கொண்டிருந்தான். கவிதா அவனிடம் பேச்சுவாக்கில், ‘அவனது எதிர்காலத்திட்டம் என்ன?’ என்று கேட்க, ‘தன் உடல் முன்னை மாதிரி வேலை பார்க்க ஒத்துழைக்கவில்லை’ என்றான் குமார். குறிப்பாக அவனது சிறுநீரகத்தில் கல் இருப்பதால் வலி ஏற்படுவதாகக் கூறினான்.
அவன் மீது இரக்கம் கொண்ட, கவிதா அன்றைய தினமே அவனை சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். அந்த மருத்துவமனையானது, பணம் செலவழித்து வைத்தியம் செய்பவர்களுக்குத் தனியாக ஒரு பிரிவும், வசதி குறைவானவர்களுக்கு ஒரு பிரிவும் கொண்டது. இவர்கள் இரண்டாவது பிரிவினுள் சென்றனர். அந்த மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவக் கல்லூரியும் அதே வளாகத்தில் இயங்கிக் கொண்டிருந்ததால், அந்த பகுதியில் ஆண்களும்,பெண்களுமாக, நிறையப் பயிற்சி மருத்துவர்கள் சுறு சுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இரண்டு பேரும் சிறுநீரகப் பிரிவில் நுழைந்தனர். அங்கு ஒரு இளைய மருத்துவர், குமாரின் சிகிச்சைக்கான ஆரம்ப கட்ட பரிசோதனைகளை முடித்தார். பின் கவிதாவிடம் ‘இவருக்கு வலது சிறுநீரகத்தில் உள்ள கல்லின் அளவு பெரியதாக இருப்பதால், முதலில் அதனை நீக்க ஏற்பாடு செய்யலாம். உடனடியாக ‘அட்மிஷன் ‘போட்டுக் கொள்ளுங்கள்’ என்றார். அதன்படியே குமாரும் ‘அட்மிட்’ செய்யப்பட்டான்.
சிறுநீரகப் பிரிவில் படுக்கை காலியாக இல்லாத நிலையில், குமார் பொதுப் பிரிவில் அனுமதிக்கப் பட்டான். அங்கு பல தரப் பட்ட நோயாளிகள் இருந்தனர். அங்கு இருந்த மற்ற நோயாளிகளின் அட்டெண்டர்கள் மூலம் கவிதா ஒருசில தகவல்களை அறிந்து கொண்டாள்.
நோயாளிக்கு படுக்கையும், மூன்று வேளை உணவும் இலவசம். ஆனால் அட்டெண்டர்க்கு உணவு கிடைக்காது’. படுக்கை என்று சொன்னால் . அது இரண்டு நோயாளிகளின் படுக்கைகளுக்கு இடையில் உள்ள தரையைத் தான் உபோயோகித்துக் கொள்ள வேண்டும். ‘சரி அது பரவாயில்லை. நோயாளிக்கு நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்கிறதே’ என்று மனதை ஆறுதல் படுத்திக் கொண்டாள் கவிதா.
அடுத்த வந்த நாட்களில் அவள் பார்த்து அறிந்து கொண்டவை அவளை மிகவும் பாதித்த விஷயங்களாக இருந்தன. தமிழக முதல்வரின் காப்பீட்டுத் தொகையைக் குறி வைத்தே அந்தப் பிரிவு நடத்தப் பட்டது.சில நோய்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் பணம் கிடைக்காத போது, பல நோயாளிகள் சிரமப்பட்டு பெரிய தொகையைக் கட்டும் நிலைக்கு ஆளாகினர். அனுபவமில்லாத டாக்டர்களின் வைத்தியத்தினால், அவர்களில் சிலர் திரும்பத் திரும்ப மருத்துவமனைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. வேறு சிலரோ கையில் உள்ள பணம் தீர்ந்து விட்ட நிலையில் அரசு மருத்துவமனை நோக்கிச் சென்றனர். ‘இப்படியும் கூட ஒரு பகல் கொள்ளை நடக்கும் இடமா? இந்த மருத்துவமனை ! ‘ என்று கவிதா மனதிற்குள் மறுகினாள்.
இது இப்படி இருக்க, மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வரும்பொழுது, ‘தங்களுடைய உடல் நிலை பற்றித் தெளிவாக எடுத்துச் சொல்லி, நல்ல வைத்தியம் பெற வேண்டும்’ என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு நோயாளியும் காத்துக் கொண்டிருப்பர். ஆனால் நடப்பது வேறாக இருக்கும். ஒரு தலைமை மருத்துவர், ஏழெட்டு பயிற்சி மருதுவர் புடை சூழ வருவார். ஒவ்வொரு நோயாளியின் எதிரிலும் ஒரு நிமிட நேரம் நின்று அவர்களுக்குள், நோயாளியின் ‘கேஸ் ஷிட்டை’ வைத்துக் கொண்டு விவாதம் செய்வார்கள். பின்னர் அந்த தலைமை மருத்துவர் பெயரளவில் அந்த நோயாளியைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, ‘எல்லாம் செக் பண்ணியிருக்கோம்; பார்த்துக்கலாம்’ என்ற வார்த்தையை உதிர்த்து விட்டு, அடுத்த நோயாளியை நோக்கி நகரத் தொடங்குவார். அங்கு உள்ள நர்ஸ்களோ, நோயாளிகளிடம் எவ்வளவு அலட்சியம் காட்டமுடியுமோ அத்தனையும் காட்டினர்.
கவிதாவின் சிறு வயதில், அவளுக்கு காய்ச்சல் போன்ற சிறு வியாதிகள் உண்டாகும் போது, அவளுக்குச் சிகிச்சை பெற, அவள் தந்தை அருகில் உள்ள ‘கிளினிக்’கிற்கு அவளை அழைத்துச் செல்வார். அப்போது அவள் மருத்துவரின் ஆசனத்திற்குப் பின்புறம் மாட்டப் பட்டிற்கும் ‘சர்வீஸ் ஈஸ் அவர் மோட்டோ’ என்ற வாசகத்துடன் தொடங்கும் அறிவிப்பு அட்டையைத் தவறாமல் வாசிப்பாள். ‘அந்த மருத்துவரின் கனிவான பேச்சால் பாதி நோயும், அவர் கொடுக்கும் மருந்தால் பாதி நோயும் குணமாகும். மருத்துவம் வாணிகமாகி விட்ட இன்றைய நிலையில், அதெல்லாம் சாத்தியமே இல்லை’, என்று எண்ணிய கவிதா பெருமூச்சு விட்டாள்.
நான்கைந்து நாட்களில், குமார் சிறுநீரகப் பிரிவிற்கு மாற்றப் பட்டான். அவனுக்கான அறுவைச் சிகிச்சைக்கான நாளும் குறிக்கப்பட்டது. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் பணம் பெற, அதற்கான விண்னப்பத்தை எடுத்துக் கொண்டு, கவிதா அதே கட்டிடத்தில் கீழ்த்தளத்தில் உள்ள காப்பீட்டுப் பிரிவிற்குச் சென்றாள். அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இவள் முறை வரும்வரை அங்கு நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
முதல்வரின் காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கு, அதைப் பெற்று தரவும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஒன்று! அதுவரை நோயாளி உயிருடன் இருக்க வேண்டுமே!. ஏற்கெனவே காப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெற்ற ஒரு பெண் அட்டெண்டர், அங்குள்ள உதவியளரிடம், ‘மருந்து வாங்கும் பிரிவில் பணம் போடச் சொல்லுகிறார்கள்’ என்று சொல்ல, அவரும் அந்தப் பெண்ணிடம் இருந்த நோயாளியின் ‘புற நேயாளிகள் பிரிவு அட்டை’யின் எண்ணிற்கு ‘ஆன் லயனில்’ பணம் போட, அந்தப் பெண் மருந்து வாங்கச் சென்றாள். ‘ஓட்டுமொத்தமாகக் காப்பீட்டுத் தொகையை அரசு அளிக்கும் போது, அதில் அறுவை சிகிச்சைக்கான டாக்டர் ஃபீஸ், மருந்துக்கான செலவுத்தொகை மற்றும் இதர மருத்துவ உபகரணங்களுக்கான தொகை எனக் குறிப்பிட்டுத் தான் வழங்குகிறது. பின் எதற்கு இந்த வாரி வழங்கும் வள்ளல் தன்மை?’ என்று யோசித்தாள் கவிதா.
கவிதாவின் முறையும் வந்தது. விண்ணப்பம் பெற்றுக் கொண்ட உதவியாளரின் அறிவுரையின்படி, மணிக்கொரு தரம் அங்கு சென்று விசாரித்தாள். முடிவில் கப்பீட்டுத் தொகையும் கிடைத்தது. அறுவை சிகிச்சை முடிந்தது. இரண்டு நாட்களில் குமாரை வீடு திரும்ப மருத்துவர் அனுமதித்தார். அப்பொழுது தான் வார்டில் உள்ள நர்ஸ்,’ இரண்டு வாரம் கழித்து வந்து லேப்ராஸ்கோப் சிகிச்சைக்காக வைக்கப் பட்ட கம்பியை எடுத்துக் கொள்ளுங்க! அதுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ஆகும். ஆனால் அது கப்பீட்டுத் தொகையில் ‘கவர்’ ஆகாது’ என்றாள்.
காப்பீட்டுத் தொகையில் ஆன செலவுக்குக் கணக்கு கொடுக்கப் பட வில்லை.. தவிரவும் நோயாளிகள் முறையாக நடத்தப் படாமல், அலைக்கழிக்கப் படுவதைக் கண்டாள் கவிதா. ‘அரசாங்கம், அரசு பொதுமருத்துவ மனைகளை நல்ல முறையில் பராமரித்தால், மக்களுக்கு இந்த நிலை ஏற்படுமா?’ என்று ஏண்ணியவாறு, குமாரை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குப் புறப்பட்டாள்.
ஊருக்குத் திரும்பச் சென்ற குமார், ஒரு நாள் சித்த பிரமை முற்றிய நிலையில், அருகில் இருந்த தாயைக் கையில் கிடைத்த தடியால் தாக்கியதில் அவளின் வலது மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. அதன் விளைவுதான் அம்மாவின் கையில் உள்ள இந்த மாவுக் கட்டு. மற்ற நோய்களின் தாக்கமும் அதிகரித்த நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட குமாரும் ஒரு மாதத்தில் தன் உயிரை விட நேர்ந்தது. அவனை அடக்கம் பண்ணி விட்டு, அம்மாவை கவிதா தன் வீட்டிற்குக் கூட்டி வந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது.
ஒரு நீண்ட நெடிய பெருமூச்சுடன் சிந்தனையிலிருந்து விடுபட்ட. கவிதா, அம்மாவிற்கு மதிய உணவு கொடுக்க விரைந்தாள். ‘கடும் இன்னல்களுக்கிடையில் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்து விட்ட, அந்தத் தாயின் கையை முடமாக்கியதுதான், செல்லமாக வளர்த்த மகன் அவளுக்குத் தந்த பரிசோ? ‘